“I will be a hummingbird" - Wangari Maathai
பெரும் கானகத்து சிட்டுக்குருவியாகவே இருக்க விரும்புகிறேன். - வங்காரி மத்தாய்
http://www.youtube.com/watch?v=-btl654R_pY
காட்டுத் தீயால் விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெரும் கானகத்து சிட்டுக்குருவி கதையில் வரும் சிட்டுக் குருவியாகவே இருக்க விரும்புகிறேன். காட்டு தீயால் திகுதிகுவென எறிந்து கொண்டிருக்க யானை, சிங்கம் உள்ளிட்ட பெரிய விலங்குகள் எல்லாம் காட்டை விட்டு வெளியேறி ஒடையோரம் பதைபதைப்புடன் காடு எரிவதுப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. எதிர் பாராமல் நடந்து கொண்டிருக்கும் பாதிப்பால் நிலைகுலைந்து, சக்தியற்றவர்களாக பார்த்துக் கொண்டிருந்தன, ஒரு சிட்டுக் குருவி தவிர. இந்தக் காட்டுத் தீயை அணைக்க நான் ஏதேனும் செய்ய வேண்டும் என்றுக்கூறி அருகில் இருந்த ஒடைக்குப் பறந்து சென்று சின்ன அலகால் தண்ணீரை அள்ளி வந்து தீ மேல் ஊற்றியது. ஒடைக்கும் காட்டுத் தீ பரப்பிற்குமாக வேக வேகமாக- அதனால் எவ்வளவு வேகமாகப் பறக்க முடியுமோ அவ்வளவு வேகமாகப் பறந்து தண்ணீரை அள்ளி வந்து தெளித்தது.
நீரை அதிகம் அள்ளிக் கொண்டு வரக் கூடிய கண்ட யானை போன்ற விலங்குகள் திகைப்புற்று நின்றபடியே அந்தச் சிட்டுக் குருவியைப் பார்த்துச் சொல்லின, நீ ‘என்ன செய்துவிட முடியும் என நினைக்கிறாய்,காட்டுத் தீயோ பெரியது. நீயோ சின்னஞ்சிறிய குருவி. உன் சிறகுகளோ சிறியன, உன் அலகுகளும் சிறியன. உன்னால் சில துளி தண்ணீரையே கொண்டு வர முடியும். இவற்றை வைத்துக் கொண்டு நீயென்ன செய்துவிட முடியும்?’, என்று தொடர்ந்து நம்பிக்கையிழக்கும் வகையில் பேசின.
சிட்டுக்குருவி நேரத்தை வீணாக்க விரும்பாது பறந்து கொண்டே சொன்னது,’என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் சிறப்பாக செய்ய முயல்கிறேன். என்னைப் பொறுத்தவரை நாம் அத்தணை பேரும் இதைத் தான் செய்யவேண்டும்,என்றது. நாம் இந்தச் சிட்டுக்குருவி போல இருக்க வேண்டும். நான் என்னை சின்னஞ்சிறியவளாக அற்பமானவளாக நினைத்துக்கொள்ளலாம். ஆனால் நிச்சயமாக அந்த விலங்குகள் போல இந்தப் பூமி அழிந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கவிரும்பவில்லை. நான் ஒரு சிட்டுக் குருவியாக இருப்பேன், என்னால் என்ன சிறப்பாக செய்ய முடியுமோ அதைச் சிறப்பாகச் செய்வேன்.
இப்படிக் கூறிய அந்தச் சிட்டுக்குருவி தான் அண்மையில் தன் சிறகுகளை நைரோபி மருத்தவமணையில் அடிப்பதை நிறுத்திக் கொண்டது. தனது சிறகுகளை மடக்கிக் கொள்ளும் முன் அந்தச் சிட்டுக் குருவி எறிந்து கொண்டிருக்கும் பூமிப் பந்தின் தீயை அணைக்க 14 கோடிக்கும் மேலாக மரக்கன்றுகளை நட்டு பசுமரக் குடைகளை உருவாக்கிவிட்டது. தன்னைப் போல் பல்லாயிர சிட்டுக் குருவிகளுக்கு சிறப்பாக தங்களது சிறகுகளை அடிக்கப் பழக்கி விட்டுதான் தன் சிறகுகளை மடக்கிக் கொண்டது. காட்டுத்தீயின் பெருங்கங்குகள் கண்டு அஞ்சிக் கலங்காது அதை அணைக்க தன்னாலான சிறுநீர்த் திவளைகளை சிறப்பாக அள்ளி வந்த அந்தச் சிட்டுக் குருவியின் பெயர் வங்காரி மத்தாய். கென்ய நாட்டுச் சிட்டுக்குருவி.. கென்ய நாட்டுத் தலைவர்களில் மிகச் சிறந்த மக்கள் தலைவர்.உலக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற ஆப்பிரிக்கப் பெண்மணி..
Wangari Maathai with her Nobel Medal and Diploma at the Nobel Peace Prize Award Ceremony, Oslo City Hall ,Norway
இந்தச் சிட்டுக்குருவி கதை தான் என்ன செய்கிறேன் என்பதை விளக்க அடிக்கடி சொல்லும் கதையாகும்.
வங்காரி மத்தாய் 1940 ஏப்ரல் 1ம் தேதி இகிதி என்ற கிராமத்தில் பிறந்தார். ஆங்கிலேயர்க்கு வேண்டுமானால் ஏப்.1 முட்டாள்கள் தினமாக இருக்கலாம் ஆனால் கென்யர்களுகல்ல நிச்சயமாக. அவர் பிறந்த காலத்தில் பெரும்பாலான பெண்கள் படித்திருக்கவில்லை. மத்தாய் தன் அண்ணனின் தூண்டுதலால் படித்தார். 1959 ல் பள்ளிப்படிப்பை முடித்ததும் அன்றைய அமெரிக்க அதிபரான கென்னடியின் அரசு வழங்கிய உதவித் திட்டத்தின்படி அமெரிக்காவில் கன்காஸ் மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் உயிரியலில் பட்டம் பெற்றார். பின் பிட்ஸ்பர்க் பல்கலையில் பட்டமேற்படிப்பை முடித்ததும் அப்போதுதான் விடுதலை பெற்றிருந்த சுதந்திர கென்யாவிற்குத் திரும்பினார். நைரோபி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கால்நடை மருத்துவத்தில் பட்டம் பெற்றார்
கல்லூரிப் பருவ நண்பர்களுக்கு அவர் மேரி ஜோ.
வங்காரி மத்தாய் 1971 ல் கால்நடை மருத்துவத்தில் முனைவர் பட்டத்திற்காக சேர்ந்தபோது அத்துறையிலிருந்த பலரின் எதிர்ப்பையும், கிண்டல்களையும் எதிர்க்கொண்டார். தனது அறிவுத் திறமையாலும், கடும் உழைப்பால் அவர் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு முனைவர் பட்டமும் பெற்றார். அன்றைய நிலையில் வங்காரி மத்தாய் தான் கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணியாவார். பின்னாளில் நைரோபி பல்கலையில் ஒரு துறையின் தலைவரும் ஆனார். இப்படி ஒரு துறையின் தலைவரான முதல் கிழக்கு மற்றும மத்திய ஆப்பிரிக்க நாட்டு முதல் பெண்மணியும் அவரே ஆவார்.
வங்காரி மத்தாய் பேராசிரியராக இருக்கும் காலத்திலேயே கென்ய தேசிய பெண்கள் நிலை உயர்த்த வேலை செய்தார். தேசிய பெண்கள் கமிசனில் 1976 முதல் 1987 வரை தீவிரமாக இயங்கினார். 1981 முதல் 1987 வரை இதன் தலைவராக இருந்தார். கிராமப்புறப் பெண்களிடம் உரையாடும்போது அவர், அரசு விவசாயிகளை உணவுப் பயிர் பயிரிடுவதைக் கைவிட்டு ஏற்றுமதிக்கான தேயிலை, காபி போன்றவற்றைப் பயிரிடத் தூண்டியதையும், அதன் விளைவாக பெரும் கானகப் பரப்பு அழிக்கப்பட்டு தேயிலை, காப்பித் தோட்டங்கள் ஆனது. இந்த மாற்றம் கிராம மக்களின் வாழ்வில், குறிப்பாக பெண்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உணவுப் பயிர் இருந்த இடத்தைப் பணப்பயிர் பிடித்துக் கொண்டது. மண் வளமிழந்தது. குழந்தைகளை அரை வயிறு கால் வயிறு உணவுடன் வளர்க்க வேண்டியிருக்கிறது. மேலும் கிராமப்புற பெண்களின் எரிபொருளான விறகு இப்போது அரிதான ஒன்றாகிவிட்டது. கால்நடைகள் மேய்வதற்கான மேய்ச்சல் நிலங்கள் இல்லாமல் போனதால் கால்நடைகளும் குறைந்து விட்டன. ஓடைகள் வறண்டு விட்டன அல்லது மண் அரிப்பால் மாசுபட்டது. எனவே குடிநீரும் அரிதாகிவிட்டது.
இப்பணியில் இருந்த காலத்தில் அவர் கென்யாவின் கிராமப்புறப் பெண்களின் பிரச்சனைகளை அறிந்து கொள்ள கிராமங்களில் பயணித்த போதுதான் சீரழிந்த சுற்றுச்சூழலும், மோசமான சமூகச் சூழலும், வறுமையும் பெண்களின் வாழ்வை கடும் சிரமத்தில்உள்ளாக்கியுள்ளதைக் கண்டார். அவர்களுடைய அன்றாட வாழ்விற்குத் தேவையானதை அடைவதற்குக் கூட கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அவர் சந்தித்த ஒவ்வொரு கிராமத்தின் பெண்களும் சுத்தமானத் தண்ணீரில்லை, சத்தான உணவில்லை, எரிக்கவும், குளிரிலிருந்து காத்துக் கொள்ள விறகுமில்லை என்று ஒருமனதாகக் கூறினர். ஏழைகளின் தேவை எங்கும் எப்போதும் மிகக் குறைவானதே. ஆனால் அத்தேவையும் எளிதில் பூர்த்தியாவதில்லை.
அவர் நோபல் பரிசு ஏற்பு விழாவின் போது தன் இளமைக்காலத்தை நினைவு கூறியது நம்மை அன்றைய கென்யா எப்படி இருந்தது என்பதைச் சொல்லும்.
நோபல் பரிசு உரையில், ‘என் பெற்றோர் மண்ணையும், அது அள்ளி வழங்கும் விளை பொருட்களையும் மதிக்கக் கற்றுக் கொடுத்தனர். நான் பெரும்பாலும் என் தாயுடன் நேரத்தைக் கழித்தேன். விளை நிலத்தில் இயற்கையை ரசிக்க, உற்று நோக்கக் கற்றுக்கொண்டேன்”.
’வீட்டிற்கு அருகில் உள்ள ஓடைக்குச் சென்று அம்மாவிற்காகத் தண்ணீர் எடுத்து வந்த என் இளம் பிராயத்து நினைவுகளை நினைத்துப் பார்க்கிறேன். ஒடையில் ஓடும் தண்ணீரை நேரடியாக அள்ளிக் குடிப்பேன். அரோ ரூட் கிழங்கின் இலைகளுடன் விளையாடிக் கொண்டு இழைக்கப்பட்டிருக்கும் தவளையின் முட்டைகளை அள்ள முயன்று தோற்றுள்ளேன். இழைகளுடன் ஒட்ட வைக்கப்பட்டிருக்கும் அந்த முட்டைகளை பாசி மணிகள் என்று நம்பினேன். என்னுடைய சின்ன விரல்கள் கொண்டு அவைகளுககு அடியில் வைக்கும் போது அவை சிதைந்து சிதறம். பிறகு நான் பூமியின் பழுப்பு நிறப் பின்னணியில் தெளிந்த நீரில் ஆயிரக்கணக்கான தலைப்பிரட்டைகள் கரிய நிறத்தில் உற்சாகத்துடன் வாலாட்டிக்கொண்டு இங்குமங்கும் நீந்துவதைக் கண்டிருக்கிறேன். என் பெற்றோர;களிடமிருந்து இத்தகைய உலகை நான் சுவீகரித்துள்ளேன்.
அன்று எங்கும் தண்ணீர் இருந்தது. எங்கெங்கும் மரக் கூட்டம். ஆகையால் விறகுக்குப் பஞ்சம் இருந்ததில்லை. இப்போது எங்களிடம் இவை அதிகமில்லை. இன்று 50 ஆண்டுகளில் ஓடைகள் காய்ந்து விட்டன. பெண்கள் நீண்ட தூரம் நடந்து தண்ணீர; கொண்டு வருகின்றனர்.அதுவும் தூய்மையாக இல்லை. குழந்தைகளுக்கு தாங்கள் எதையெல்லாம் இழந்துள்ளோம் என்பது எதுவும் தெரியாது. தலைப்பிரட்டைகளின் இல்லத்தை சரி செய்து உலகின் அழகையும், விந்தைகளையும் குழந்தைகளுக்குத் திருப்பித் தருவதே நமக்குள்ள சவாலாகும்.
‘ஆயினும் ஏழைகள் என்று உணர்ந்ததில்லை. நாம் மரக் கன்றுகள் நடுவதிலிருந்து தொடங்க வேண்டும் என்று கூறினோம். மரக்கன்றுகள் நடுவது பெண்களைத் தூண்டிவிட்டது.உற்சாகப்படுத்தியது. அவர்களுக்கு தங்களது உணவு, விறகு, தண்ணீர் தேவைகள் பற்றியும் மரங்கள் இருக்க வேண்டியது பற்றியும் தெரிந்திருந்தது.
பெண்கள் அனுபவிக்கும் பிரச்சினையின் வீரியத்தையும், அதன் மூலத்தையும் உணர்ந்த வங்காரி மத்தாய் இப்பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு மரங்கள் தான் என முடிவு செய்தார். உடனடியாக மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதே என்ற எளிமையான தீர்வுக்கு வந்தார். சமைக்க விறகும், கால்நடைகளுக்கு தீவனமும், வேலிக்கு வேண்டியவைகளையும் மரங்கள் தரும். கூடவே மண்ணரிப்பைத் தடுக்கும், மண்ணில் மழை நீரைப் பிடித்து வைக்கும் அதன் மூலம் உணவுக்கான விவசாயத்தைக் காணலாம் என ஒரு கல்லில் பல மாங்காய்களைக் குறி பார்த்தார். அவர் ‘பெண்கள் தெரிவித்த பிரச்சினைகளில் சில நிலத்தோடு அவர்கள் வைத்திருந்த உறவு. அந்த உறவை மீட்டெடுக்க மரக்கன்றுகள் நட வைத்தோம். நீங்கள் மரக்கன்றுளை வளர்த்தால் அவை எரிக்க விறகைத் தருகின்றன. அவை உணவைத் தருகின்றன. அவை தண்ணீரைத் தருகின்றன” என்று கூறி பெண்களிடம் ஆர்வத்தைத் தூண்டினார்.
பசுமைப் பட்டை இயக்கத்தைத் (Green Belt Movement) 1977ல் தொடங்கினார்.
வளர்ச்சி என்ற பெயரில் காடுகள் அழிக்கப் பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்யும் நோக்கில் வங்காரி நாடெங்கும் மரம் வளர்க்க 1977ல் புவி தினத்தன்று கென்ய பெண் சுற்றுச் சூழல் முன்னோடிகளை கௌரவிக்கும் வகையில் ஏழு மரக்கன்றுகள் நட்டு தனது திட்டத்தைத் தொடங்கினார்.
ஒரு சின்னஞ்சிறிய கட்டிடத்தில் தொடங்கப்பட்ட பசுமை பட்டை இயக்கம் (Green Belt Movement) மாபெரும் பெண்கள் இயக்கமானது. சூழல் அழிக்கப்படும் போது முதலில் பாதிக்கப்படுவது பெண்களாக இருப்பதை அவர் ஏற்கனவே உணர்த்தியிருந்தார். குறுகிய காலத்திலேயே பெண்கள் பெருமளவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தேசிய பெண்கள் கமிசனின் துணையுடன் தொடங்கப்பட்ட பசுமைப் பட்டை இயக்கத்திற்காக வங்காரி மத்தாய் கல்லூரித் துறைத் தலைவர் பணியைத் துறந்தார். இளம் சூழலாளராகத் துளிர் விடத் தொடங்கினார். பசுமைப் பட்டை இயக்கம் கிராமத்தவர்கள் சிலருடன் விதை சேகரிப்பிலும், பதிவிலுமாக மிகச் சிறிய அளவில் பிறப்பெடுத்தது.
ஆரம்பத்தில் அரசு அதிகாரிகள் எள்ளி நகையாடினர். வனத்துறை அதிகாரிகளுக்குத் தான் மரங்கள் வளர்க்கத் தெரியும். பட்டிக்காட்டான்களுக்கு என்ன தெரியும் என்றனர். ஆனால் இந்தச் சின்னக் குழு மற்ற கிராமத்தவர்களுக்கு பயிற்சி அளித்தது. புதிதாய் பயிற்சியும் அனுபவமும் பெற்றவர்கள் மற்ற கிராமத்தவர்களுக்கு பயிற்சி கொடுத்தனர். இப்படியாக அடுத்த 35 ஆண்டுகளுக்குள் நட்டு வளர்த்து பராமரித்த மரங்கள் பல கோடி. 6000க்கும் மேலான மரக்கன்று நாற்றங்கால்கள் இப்பெண்களால் உருவாக்கப்பட்டன. பல ஆயிரம் பேருக்கு வேலையும் கொடுத்தது. தனது எதிர்காலம் தங்கள் கையில் என்கிற பெரும் அதிகார மாற்றம் சத்தமின்றி நடந்தது.
Wangari Maathai planting a tree at the Outspan Hotel, Nyeri, Kenya, to mark the launch of her autobiography
‘சுற்றுச்சூழல் காப்பில் 3R மட்டுமே பேசப்படுகிறது. இன்னும்மொரு R உள்ளன. அது கெடுக்கப்பட்ட சூழலை சீர்செய்வதாகும்.ஆக 4R உள்ளன. Reduce-Reduce-Recycle-Repair. எனது பணி முக்கியமாக நான்காவதாக உள்ள R ஆகும்,’ என்றார் ஒரு முறை.
பேராசிரியர் வங்காரி மத்தாய் சூழல் சீரழிவு மற்றும் வறுமைக்குப் பின்னால் உரிமைகள் இன்மை, அதிகாரங்கள் இல்லாமை, மோசமான அரசு நிர்வாகம், நிலத்தை, வாழ்க்கைக்குத் தேவையான இயற்கை வள ஆதாரங்கள் மீது சமூகம் தனது பண்பாட்டின் சிறப்பான அம்சமாகக் கொண்டிருந்த மதிப்புகள் இழந்தது எனப் பல உள்ளதை உணரந்தார். மரக்கன்றுகள் நடலும், வளர்ப்பதும் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் பணிகளுக்கான தொடக்கப் புள்ளியாக இருந்தது.
கென்யா அப்போது தானியல் ஆராப் மோய் என்ற சர்வாதிகாரியின் அடக்குமுறை ஆட்சிக்குள் இருந்து வந்தது.
‘எந்தப் பிரச்சினைகளுக்காக நான் வேலை செய்தேனோ அதற்கும் அதனுடைய மூலக்காரணங்களுக்கும் இடையே உள்ள தொடர்புகளை நான் பார்க்கத் தொடங்கினேன். சுற்றுச் சூழலை அழிக்கும் முக்கியக் கயவன் அரசாங்கமே என்பதைத் தெரிந்து கொண்டேன்”, என்ற வங்காரி மத்தாய் அரசின் சுற்றுச் சூழல் கொள்கைகளில் மாற்றம் தேவை என்று வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தார். படித்த மக்களிடம் இது குறித்து கருத்தரங்குகள் நடத்தத் தொடங்கினார். நேரடியாகவே அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கத் தொடங்கினார்.
‘வெளிப்படையான நிர்வாகம், மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமையை நம் தலைவர்களிடம் வலியுறுத்தத் தவறிவிட்டோம் நாம். அவர்கள் நம் இனத்தவர்கள் என்ற காரணத்தால்.அவர்கள் நம்மை உய்விக்க வந்த தேவர்கள் என்று நம்பி அவர்களை நெருக்கமாக்கக் கண்கானிக்கத் தவறிவிட்டோம். அவர்கள் ஊழல்வாதியாக, வெறுக்கத் தக்கவராக, முற்றிலும் ஒழுக்கங்கெட்டவராக இருப்பினும் தேர்தல் அடுத்து தேர்தலுக்கு அவர்களையே தேர்வு செய்தோம் அவர்கள்
நம் இனத்தவர் என்பதால் மட்டுமே.அவர் நாம் பேசும் மொழியைப் பேசுபவராக இருந்துவிட்டால் போதும் என்று கருதி அவரின் தகுதி,தொலைநோக்கு பற்றியெல்லாம் கவலைப்படாமல் தலைவராக்கி அவர் அடுத்த இனக்குழுக்கள் நம்மை அழிக்க வருகிறார்கள் என்று கூறியதும் ஆயுதங்கள் தூக்கி நம்மை அழித்துக் கொள்கிறோம்.
ஒரு நிலையான சமூகத்தை ஒரு முக்காலியுடன் ஒப்பிடுகிறார் மத்தாய். அவர் இயற்கையை வளங்குன்றாத வகையில் பயன்படுத்துதல், மக்களாட்சி, அமைதிப் பண்பாடு ஆகிய மூன்றையும் அந்த முக்காலியின் மூன்று கால்கள் என்கிறார். எந்தவொரு காலை இழந்தாலும் அந்த சமூகத்தில் அமைதி நிலைத்திருக்காது எவ்வளவு வெளிநாட்டுக்கடன்களை வளர்ச்சிக்காக என்று கூறி வாங்கினாலும்’, எனகிறார்.
‘மக்களிடம் அதிகாரம் வழங்காத வரை இந்த இயற்கை வளங்கள் தங்களுடையது என்பதை அவர்களுக்குச் சொல்லி, உணர உதவி, தாங்கள் தான் தங்களுடைய இயற்கை வளங்கள் காக்க வேண்டும் என்ற உணர்வை ஊட்டாமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியாது’, என்பது அவர்களின் முழக்கமாக இருந்தது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமெனில் ஜனநாயகம் அவசியம் என்பதை உணர உணர, பசுமைப்பட்டை இயக்கம் விரிவாக விரிவாக கென்ய அரசுடன் உரசல்களும் அதிகமானது.
1980 மற்றும் 90 களில் பசுமைப் பட்டை இயக்கம் கென்ய நாட்டு ஜனநாயகத்திற்கான அமைப்புகளுடன் கைகோர்த்து கென்யாவின் சர்வாதிகாரியாக இருந்த தானியல் அராப் மோய்-யின் சர்வதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் போராட்டங்களில் பங்கேற்றது.
இச்சமயத்தில்தான் ஆளும் சர்வாதிகாரியான மோய்-ன் கட்சி அலவலகத்திற்காக 62 மாடிக் கட்டிடம் கட்டும் திட்டம் வந்தது. அழிக்கப்பட்ட சூழலை சீர்படுத்தும் வேலையைச் செய்துகொண்டிருந்தவருக்கு இப்போது அழிவைத் தடுத்து நிறுத்தும் போராட்டம் அவரை யார் என்று உலகிற்குக் காட்டியது.
நைரோபி நகரெங்கும் இருக்கும் நெடிதுயர்ந்த கட்டிடங்களுக்கு மத்தியில் பசுஞ்சோலை ஒன்று உள்ளது. நைரோபி நகரின் வடக்கில் இருந்த காரூரா கானகத்தின் பகுதியான உகுரு பூங்கா அதன் பெயர். உகுரு என்றால் சுதந்திரம் என்று பொருள். வங்காரி என்ற பெண் 1980களில் நூற்றுக்கணக்கானவர்களைத் திரட்டி பெரும் போராட்டத்தை நடத்தியிருக்காவிட்டால் இன்று அந்தப் பூங்காவும் கட்டிடக்காடாகியிருக்கும். அப்போதைய கென்ய அதிபர் தானியல் அராப் மோய் அங்கு வெளிநாட்டுக்கம்பெனிகளின் உதவியுடன் 62 மாடிக்கட்டிடம் ஒன்றை தமது கட்சியின் தலைமை நிலையமாகக் கட்டத் திட்டமிட்டார். சூழல்வாதியான வங்காரி இயற்கை எழில் மிக்க இடத்தை அழிவிலிருந்து காக்க அங்கு போராட்டத்தை நடத்தினார். கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டது. குண்டாந்தடிகளால் பெண்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டனர். மத்தாயும் கடுமையாகத் தாக்கப்ட்டார். அவரையும் மற்றவர்களையும் கைது செய்து மோய்-ன் கொலைகளமாகக் கருதப்பட்ட பாதள சிறையில் அடைக்கப்பட்டனர். முதலீடு செய்யவிருந்த கம்பெனிகள் போராட்டத்தைக் கண்டு விலகிக் கொண்டதால் திட்டத்தைக் கைவிட்டார் மோய்.
பசுமை பட்டை இயக்கத்தவர்களும், வங்காரி மத்தாயும் மோய்-னின் அரசால் தொடர்ந்து தாக்கப்பட்டனர், கைது செய்யப்பட்டனர். அரசியல் கைதிகளின் தாய்மார்கள் கொண்ட அமைப்பை உருவாக்கி கைது செய்யப்பட்டவர்களின் நிலையைத் தொடர்ந்து கண்காணித்துப் போராடினர். இதன் விளைவாக அரசியல் போராட்டங்களுக்காக கைது செய்யப்பட்ட 51 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
வங்காரி மத்தாய் வெளிக்காட்டிய தைரியமும், விடாமுயற்சியும் அவரை மிகவும் மதிக்கத்தக்க கென்ய பெண்மணியாக்கியது. சர்வ தேச அரங்கில் மக்களின் உரிமைக்காகவும், சூழல் காப்பதற்குமான போராளியாக அடையாளம் காட்டியது.
அரசுடனான போராட்டங்கள் அதிகமாயின. அடிக்கடி கைது செய்யப்பட்டார். 1991-ல் மத்தாய் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்ட போது அம்னெஸ்டி இன்டர்நேசனல் என்ற அமைப்பு உலகு தழுவிய கையெழுத்து இயக்கம் நடத்தி விடுவிக்கச் செய்தது.
சுற்றுச் சூழல் காப்பு, மரம் வளர்ப்பு என ஒரு அரசியலுக்கு அப்பால் உள்ள ஒர் மென்மையான செயல்பாடுகள் கொண்டிருந்த வங்காரி மத்தாய் அரசியலில் ஆர்வம் எப்படி வந்தது?
அவர் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த போது அங்கு வியட்நாம் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. ஆந்த ஆர்ப்பாட்டங்களைக் கவனித்த வங்காரி மத்தாய் அமெரிக்க மக்கள் தாங்கள் நம்புவதை, தங்களது எண்ணத்தை வெளிப்படையாகக் கூறும் உரிமையைப் பெற்றிருப்பதை உணர்ந்து கொண்டார். இதுவே அவரை கென்ய மக்களை அழிக்கும் சூழல் அழிவிற்கு எதிராகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடவும் மக்களைத் திரட்டவும், அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்தவும் உதவவும் செய்தது.
‘அமைதிக்கான முக்கியமானதில் சுற்றுச் சூழலுக்கு முக்கிய பங்கு உள்ளது. நாம் நமது இயற்கை வளங்களை அழிக்கும்போது அவை அரியதானவைகளாகி விடுகிறது. பின் அதற்காக சண்டை போட்டுக் கொள்கிறோம்,’ என்கிற வங்காரி மத்தாய்,’சுற்றுச் சூழல் அழிவிற்கு ஏழைகளே காரணம் என்று பழியை அவர்கள் மீது சுமத்தி விடுகிறோம். உண்மையில் பெரும் சக்தி மிக்கவர்களும், அரசாங்கங்களுமே இதற்கு காரணமாக இருக்கின்றது. நமக்குத் தேவை இயற்கை வளத்தை, சுற்றுச் சூழலை அழிக்காத வளர்ச்சியே, என்று தனது விசாலமான பார்வையை முன்வைக்கிறார்..
1989- ன் ஐ.நா.ஆய்வு ஒன்று ஆப்பிரிக்காவில் வெட்டப்படும் ஒவ்வொரு 100 மரங்களுக்கும் 9 மரங்கள் மட்டுமே நடப்பட்டு வளர்க்கப் படுகிறது என்கிறது. இந்தளவு மரங்கள் வெட்டப்படுவது தொழில் சார்ந்த வேலைகளுக்காகவே ஒழிய ஏழை மக்களால் அல்ல. உண்மையில் காடுகள் அழிவதில்லை அழிக்கப்படுகிறது அது அரசாங்கத்தால் என்கிற போது அதனைக் காக்கும் முயற்சியும் அரசியல் சார்ந்து தானே இருக்க முடியும் என்கிறார் அவர்.
அவர், ‘சுற்றுச் சூழல், மரங்கள், காடுகள் ஆகியவற்றின் சீரழிவை தனித்தனியே பார்க்க முடியவில்லை. இப்பிரச்சினைகளுடன் மேம்படுத்தப்பட்ட, ஒளிவு மறைவற்ற நிர்வாகம், மனித உரிமைகள், பெண் விடுதலை, ஜனநாயகம் ஆகியன எல்லாமே பின்னிப்பிணைந்துள்ளது,’ என்கிறார். ‘உலக வணிக முறைகள் ஆப்பிரிக்காவின் தொண்டைக்குள் ஆப்பிரிக்க மக்கள் விரும்பாததை திணிக்கின்றன. அவை ஆப்பிரிக்க மக்களின் நீண்ட கலாச்சார, பண்பாட்டுப் பின்னணியைச் சிதைத்து விட்டன. ஆப்பிரிக்கா மேலெழுந்து வரவேண்டுமானால் தனது பாரம்பரியமிக்க கலாச்சாரத்தின் அஸ்திவாரத்திலிருந்தே எழமுடியும்,’ என்று நம்பினார்.
‘இந்த பூமியின் இயற்கைச் சூழல் மீது நமக்கு மிகவும் தனிப்பட்ட அக்கறையும் பொறுப்பும் உள்ளது. மற்ற உயிரினங்கள் இந்த பூமியியல் வாழ்வதை உறுதி செய்வதன் மூலம் நாம் நமது உயிர் வாழ்தலை உறுதி செய்து கொள்கிறோம். பூமியில் அமைதி என்பது நாம் எப்படி நமது உயிர்ச் சூழலைப் பாதுகாக்கிறோம்,’ என்பதைப் பொறுத்தே உள்ளது என்று கூறிய வங்காரி மத்தாய் கென்யாவிலும், ஆப்பிரிக்காவிலும் உயிர்ச் சூழல் வழியில் சாத்தியமாகும் சமூக, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிக்காக பாடுபட்டார். இது அரசியலின்றி இது சாத்தியமாகாது என்பதை அவர் உணர்ந்து கொண்ட பின் அவரது அரசியல் நடவடிக்கைகள் விசாலமாகியது. ஒரு முழுமை பெற்ற பார்வையில் வளங்குன்றாத வளர்ச்சியையும், ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும், பெண்கள் உரிமைகளையும் பார்த்ததோடு அதற்காகவே உழைக்கவும் செய்தார்.
அவர்,’மனித உரிமைகள் என்பது மேஜைமேல் வைக்கப்பட்டு எடுத்து அனுபவிக்கக் கூடிய பொருட்கள் போன்றதல்ல. அவை போராடிப் பெற வேண்டிய ஒன்று. பெற்றபின் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றும் கூட,’ என்பதை அனைவரிடமும் உணர்த்தினார்.
உண்மையான ஜனநாயம் இல்லாமல் இயற்கையை, சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியாது என்பதால் ஜனநாயகமற்று இருக்கும் கென்யாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டங்களில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார்.
மோய்-ன் அரசிற்கு எதிராகப் பேசியதற்காக அவரது தேர்தலில் போட்டியிடும் முயற்சிகள் பலமுறை தோற்கடிக்கப்பட்டாலும் வங்காரி மத்தாய் மனங்குலையாமல் தொடர்ந்து முயற்சித்தார். 1992- ல் மோய் அரசாங்கம் நடத்திய போலித் தேர்தலில் அதிபர் பதவிக்குப் போட்டியிட பலரும் வற்புறுத்தினர். ஆனால் காலம் கனியவில்லை என்பதால் மறுத்துவிட்டார். ஆனால் 1997-ல் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கும், கென்ய லிபரல் கட்சியின் அதிபர் வேட்பாளராகவும் போட்டியிட சம்மதித்தார். இவைகள் கென்ய நாட்டின் அன்றைய நிலையில் அரசியல் கட்சிகளுக்கு வங்காரி மத்தாய் தான் விடிவெள்ளியாகத் தென்பட்டார். இருந்தாலும் லிபரல் கட்சி வங்காரி மத்தாய் சுற்றுச் சூழல் பிரச்சினைகளையே பிரதானப்படுத்தி செயல்படுவார் என்று கருதி தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கையில் மத்தாய்க்குத் தெரியாமலேயே அவரைப் போட்டியிலிருந்து அவரது கட்சி விலக்கிக் கொண்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான போட்டியில் மூன்றாவது இடத்தையே பெற முடிந்தது.
கென்ய நாடு சுதந்திரமடைந்த 25 ஆண்டுகளில் முதன் முறையாக 2002-ல் சுதந்திரமான தேர்தல் வந்தது. கென்ய மக்கள் புதிய அரசிற்காக மவாய் கிபாகிக்கு வாக்களித்தனர். இதே தேர்தலில் வங்காரி மத்தாய் நாடாளுமன்ற உறுப்பினருக்காகப் போட்டியிட்டிருந்தார். கடந்த முறை 3-ம் இடத்திற்குத் தள்ளிய அதே மக்களில் 98 சதவிகிதம் பேர் மத்தாய்-க்கு வாக்களித்தனர். பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் 98 சதம் வங்காரிக்கு என்ற செய்தியைக் கேட்ட பெண்கள் நைரோபியின் சாலைகளில் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வங்காரி மத்தாயின் வெற்றியைக் கொண்டாடினர். புதிய ஆட்சி அமைந்த ஒரு வார காலத்தில் கிபாகி வங்காரி மத்தாய்-ஐ சுற்றுச் சூழல், இயற்கை வளங்கள், கானுயிர்களுக்கான துணை அமைச்சராக நியமித்தார்.
தனது பசுமைப்பட்டை இயக்கத்தில் கடைப்பிடித்த அடிமட்ட மக்களுக்கு அதிகாரம் வழங்கல், மக்கள் பங்கேற்புடன் கூடிய முடிவெடுத்தல், ஒளிவு மறைவற்ற நிர்வாகம் ஆகியவற்றை சுற்றுச் சூழல் அமைச்சகப் பணிகளிலும் கொண்டு வந்தார்.
இத்தேர்தலுக்குப் பிறகு கென்யாவின் அரசியல் சூழ்நிலை வெகுவாக மாறியது. பெண்களின் பிரச்சினைகள் காது கொடுத்துக் கேட்கப்பட்டது. முடிவுகள் எடுப்பதில் பெண்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வங்காரி மத்தாய்.
இந்தப் புதிய சூழலில்; வங்காரியின் பசுமைப் பட்டை இயக்கம் ‘மாற்றத்துக்கான பெண்கள்’ என்ற திட்டத்தைத் தொடங்கியது. இதன் இலக்கு பெண்களுக்கு குறிப்பாக இளம் பிள்ளைகளுக்கு, இளம் பெண்களுக்கு கல்வி மூலம் தன்னம்பிக்கையையும், தங்களுக்கும் முடிவுகள் எடுப்பதில் பங்குண்டு என்ற உணர்வையும் ஊட்டுவதாக இருந்தது.
கென்யாவின் ஜனாதிபதி 2003-ல் எய்ட்ஸ்-க்கு எதிரான போரை அறிவித்த போது ‘மாற்றத்துக்கான பெண்கள் அமைப்பு’ பெண்கள் மத்தியில் இனப்பெருக்க உடல் நலம், இளம் வயதில் கர்ப்பத்தைத் தடுப்பது, எய்ட்ஸ்-இல் இருந்து காப்பாற்றிக் கொள்வது எப்படி என்ற விழிப்புணர்வு கல்வியைப் பரப்பியது. மேலும் இந்த அமைப்பு மூலம் படிப்பில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு உதவித்தொகை, கல்விக்கட்டணம் போன்றவற்றை வழங்கியது. மேலும் கிராமப்புற பெண்களுக்கு வருவாயைப் பெருக்க தொழில் திறமைகள் வளர்ப்பையும் செய்தது.
மாற்றத்துக்கான பெண்கள் அமைப்பின் வேலைகளின் விளைவாக இன்று கென்ய அரசியல் அரங்கில் பெண்கள் பங்கேற்பது அதிகமாகியுள்ளது. நீண்ட காலமாக இருந்து வந்த பண்பாட்டு ரீதியான பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக, குழந்தைகளுக்கான மையத்தையும் வங்காரி மத்தாய் இவ்வமைப்பு மூலம் தொடங்கி உணவு, உறைவிடம், கல்வியை வழங்கினார்.
இப்படிப் பண்பாட்டு ரீதியில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பொருளாதார முறையிலும், உணர்வு ரீதியிலும் ஆதரவளித்ததுடன் அவர்களின் குழந்தைகளின் மேம்பாட்டிற்கும் உழைத்தார்.
கென்ய பண்பாட்டில்-இங்கு ஒரு காலத்தில் பரவலாக இருந்தது போலவே ,பெண்கள் கணவர்களின் உடைமை. ஆகவே பல கொடுமைகள் பெண்களுக்கு இழைக்கபட்டது. பலர் தனித்து விடப்பட்டனர். ஒதுக்கி வைக்கப்பட்டனர். அவர்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் எதுவுமில்லை.
2005- ல் கென்யா அரசு உருவாக்கிய புதிய உரிமைகள் சட்டத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றினார். உலகம் முழுதும் உள்ள பெண்கள் உரிமையைப் பெற்றுத்தர உருவான ஐ.நா.அமைப்பின் பெண்கள் நிலை குறித்த சர்வதேச கமிசனில் கென்யா சார்பில் பங்கு பெற்றார்.
கென்ய கிராமங்களைப் பார்த்து வந்த புகழ் பெற்ற எழுத்தாளர்களான ஆனி மற்றும் பிரான்சஸ் லேப்பி, ‘அடக்கியாளும் கணவர்களுக்கும், ஊர்த்தலைவர்களுக்கும் தாங்கள் அடங்கியிருக்க வேண்டியதில்லை என்பதையும், தங்களது சக்தியையும அப்பெண்கள் உணர்ந்து கொண்டனர்,” என்று புகழ்ச்சியாக எழுதினர்.
எப்படி பெரியார் தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் கல்வி, பெண்ணுரிமை, தாய்மொழிக் கல்வி, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், தமிழர் நலன் எனப் பல தளங்களில் வேலை செய்தாலும் மூடநம்பிக்கை,கடவுள் மறுப்பு மட்டுமே பரவலாகத் தெரிந்ததோ அது போல வங்காரி மத்தாய்-க்கும். சுற்றுச் சூழல் கலப்புமணம், செயல்பாட்டாளராகவே அறியப்பட்டு வந்தாலும் அவரது வேலைகள் பெண்ணுரிமை, பெண் குழந்தைகள் கல்வி நலன்களையும் மையமாகக் கொண்டே இருந்தது.தேசிய பெண்கள் கமிசனின் ஆதரவுடன் குடும்பக் கட்டுப்பாடு, சத்துள்ள உணவு, ஆளுமைப் பண்பு வளர்த்தெடுப்பது போன்றவைகளின் கல்வியை கென்ய பெண்களுக்கு வழங்கினார். பசுமைப்பட்டை இயக்கம் சத்துள்ள உணவுத் திட்டமாக முன்பு அவரவர் கிராமத்தில் வளர்க்கப்பட்ட பாரம்பரிய பயிர்களை வளர்க்கத் தூண்டினார். குடும்பத்தின் தேவைக்காக வீட்டுக் காய்கறித் தோட்டத்தை உருவாக்க வைத்தார்.
வங்காரி மத்தாய் பற்றி மிகச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமாயின் பாரதியின் நேர் கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்னெஞ்சும் கொண்ட பெண்மணி. சுற்றுச் சூழல் பிரச்சினைகளில் புதைந்திருக்கும் அரசியல், ஜனநாயக உரிமைகள், பெண்கள் உரிமைகள்,பெண் கல்வி என அனைத்து இணைப்புகளையும் புரிந்து கொண்ட பெண்மணி. ஆதிகார அரசியல் அவரை இழுத்தது. ஆனாலும் வங்காரி மத்தாய் போன்ற மக்களுக்கான தலைவர்கள் நேர்மை, அடிமட்ட வளர்ச்சி பற்றிப் பேசிச் செயல்படுபவர்களை அதிகார அரசியல் தாங்கிக் கொள்ள முடியாது என்பதை அவரது அரசியல் பயணம் மீண்டும் தெளிவு படுத்தியது. அடுத்த தேர்தலில் அவருக்கு இடமில்லை. சூரியன் போல் மத்தாய். மரங்கள், கிராமப்புற பெண்கள் மேம்பாடு எனத் தொடர்ந்து இயங்கி வந்தார் புற்றுநோயால் மரணமடையும் வரை.
வங்காரி மத்தாய் நைரோபி மருத்துவமனையில் புற்றுநோயால் மரணமடைந்த போது டிவிட்டர்களிலும், பேஸ்புக்குகளிலும் இவரது மரணம் பற்றிய செய்திகள் அதிகமாக இருந்ததாம்.
‘உங்களைப் போல் சுற்றுச் சூழல் காக்கும் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன்”.
‘நீங்கள் என்னுடைய ஆதர்ச மாதிரி”
‘உங்களிடமிருந்து தான் சுற்றுச் சூழலை, குறிப்பாக தண்ணீர் ஆதாரங்களைக் காப்பது பற்றி அறிந்து கொண்டேன”;.
‘நீங்கள் விதைத்த ஒரு விதை இன்று மாபெரும் மரமாகி உள்ளது”.
இப்படிப் பலநூறு மடல்கள். அதில் பெரும்பாலானவை வளர்ந்த நாடுகளில் இருந்து.
கென்ய தேசத்தின் அடையாளமாக உலக மக்களால் கருதப்பட்ட ஒரு குடியானவனின் மகளான போர் குணமும் தொலைநோக்கும் உள்ள இவரின் இடத்தை நிரப்ப சர்வ தேச அளவிலேயே வெற்றிடம் தான் உள்ளது.
Wangari Maathai-Union Square West-New York City
ஆப்பிரிக்கா செய்ய வேண்டியவைகள் பற்றி
ஆப்பிரிக்காவின் சவால்களை பல்வேறு மாவட்டங்களில் சரிசெய்து வருகிறோம். சில வெற்றிகள் வந்து சேர்ந்துள்ளன. ஆனால் போதுமான வேகத்தில் அல்ல. வளம் குன்றாத வளர்ச்சி மாடல்கள் மற்றும் மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி ஆகியன எங்களுக்கு அன்னியமானவைகள் அல்ல. எங்கள் குழந்தைகளும், எதிர்கால தலைமுறைகளும் இந்த உலகின் மீது உரிமையுள்ளவைகள் என்பதை நாங்கள் அறிவோம். அவர்களுக்கு சக்தி தேவை. அது சூழலில் மாசுபடுத்தாததாக இருக்க வேண்டும். அவர்களது உலகம் உயிரின வளம் நிறைந்ததாக இருக்க வேண்டும். எல்லா உயிரினங்களும் நிலைத்து வாழக்கூடிய சூழ்நிலையுள்ளதாக இருக்க வேண்டும் என்று மத்தாய் ஒரு கருத்தரங்கில் கூறினார். உண்மையில் அவர் கூறிய அனைத்தும் உலகின் எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.
இதற்கான தொடக்கத்தை தொடங்க குடிமக்கள் சின்னதொரு வேலையைச் செய்ய வேண்டும். அது தேவைப்படும் மாற்றத்தை உருவாக்கும். அந்தச் சின்ன வேலை மரங்கள் வளர்ப்பதுதான். தற்போது கென்ய நாட்டில் மரங்களை வெட்டுவது மட்டுமே பழக்கமாக உள்ளது. எல்லோரும் மரங்களை வெட்டுகிறார்கள். யாருமே நடுவதில்லை. இது எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகிறது.
Ø 2007-ல் நடந்த பொதுத் தேர்தலின் போது பெருமளவு வன்முறை வெடித்தபோது வங்காரி மத்தாய் அமைதி, நீதி மற்றும் நேர்மைக்கான குரலாக மட்டுமின்றி சமாதானம் ஏற்படுத்துபவராகவும் செயல்பட்டார்.
Ø 2006 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 5 பெண்களை இணைத்து நோபல் பெண்களின் அமைப்பை உருவாக்கி உலகளவிலான அமைதி, நீதி, சமத்துவத்திற்காகக் குரல் கொடுத்தார்.
Ø 2006-ல் வங்காரி மத்தாய் ஐ.நா.சுற்றுச் சூழல் திட்டத்துடன் இணைந்து 1 கோடி மரங்கள் நடும் வேலையில் கை கோர்த்தார். இந்த இலக்கை ஒரு ஆண்டிற்குள்ளாகவே எட்டப்பட்டது. தற்போது இது 14 கோடி எண்ணிக்கையையும் தாண்டிவிட்டது.
Ø 2009-ல் ஐ.நா.பொதுச்செயலாளர் பான்-கி-மூன் வங்காரி மத்தாய்-ஐ ஐக்கிய நாடுகளின் அமைதிக்கான தூதராக நியமித்தார்.
Ø 2010-ல் நைரோபி பல்கலையுடன் இணைந்து வங்காரி மத்தாய் அமைதி மற்றும் சுற்றுச் சூழல் நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் மூலம் நிலவளப் பயன்பாடு, காடுகள், விவாசயம், இயற்கை வளங்களுக்கான மோதல்கள் அமைதி உள்ளிட்ட பிரச்சினைகளை ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
Ø தனது 1 கோடி மரங்கள் திட்டத்திற்கு வங்காரி மத்தாய்-ஐ தூதராக அறிவித்தது 2006-ல். இந்த இலக்கு ஒரே ஆண்டிற்குள் அடையப்பட்டு விட்டது, இப்போது இந்த இலக்கு 14 கோடியாகிவிட்டது. 5 ஆண்டுகளுக்குள் 14 மடங்கிற்கு இலக்கு உயர;த்தப்பட்டதெனில் அதற்குக் காரணம் வங்காரி மத்தாய்-ன் உழைப்பும், திட்டமிடலுமே காரணம்.
கென்ய அளவிலும், உலக அரங்குகளிலும் பெண்ணுரிமைக்காகப் பல வேலைகளைச் செய்தாலும் அவருடைய இயற்கைச் சூழல் காப்பு வேலையை நிறுத்தவேயில்லை. உலக அரங்கு அவரை உலகின் மிக முக்கிய சுற்றுச் சூழல் காப்பாளராகவே அடையாளப்படுத்தியது. 2005-ம் ஆண்டிற்குப் பின் ‘ப்பேன் ஆப்பிரிக்கன் கரீன் பெல்ட் நெட் ஒர்க்’ (Pan African Green Belt Network) என்ற பெயரில் 15 க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகள் கொண்ட பசுமைப் பட்டை வலை அமைப்பு உருவானது. வங்காரி மத்தாய்க்கு நோபல் பரிசு கிடைத்த பிறகு பசுமைப்பட்டை இயக்கம் ஆப்பிரிக்கக் கண்டத்தையும் தாண்டிப் பரவியது. அமெரிக்கா, வடஅமெரிக்கா என்று கண்டம் விட்டு கண்டம் சென்றது ஒரு சின்ன அறையில் துவங்கிய பசுமைப் பட்டை இயக்கம்.
ஏன் இவ்வளவு (பூமி பற்றி) அக்கறைப்பட்டுக்கொள்கிறேன்
‘இந்த பூமியில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் குறைந்தபட்சம் இந்த பூமியின் தலைவிதி குறித்து, இந்த உலகின் தலைவிதி குறித்து அக்கறைப்படும் ஒவ்வொருவரிடமும் இந்த குரல் ஒலிக்கிறது என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.
நான் ஏன் இவ்வளவு (பூமி பற்றி) அக்கறைப்பட்டுக்கொள்கிறேன் என்று எனக்கு உண்மையில் தெரியவில்லை. எனக்குள் உள்ள ஒன்று அங்கு ஏதோவொரு பிரச்சினை என்று சொல்கிறது. நான் அது குறித்து ஏதேனும் செய்தாக வேண்டும். இதைத்தான் நான் எனக்குள் இருக்கும் கடவுள் என்று கூறுகிறேன் என நினைக்கிறேன்.
நாம் எல்லோரும் நமக்குள் கடவுளைக் கொண்டிருக்கிறோம். அந்தக் கடவுளின் சக்தி எல்லா உயிர்களை ஒருங்கிணைத்துள்ளது, இந்த பூமியில் உள்ள எல்லாவற்றையும் இணைத்துள்ளது. ஏதேனும் செய் என்று இந்தக் குரல்தான் சொல்லியிருக்க வேண்டும்.
நல்லதைத் தேடும்போது நான் தடுக்கி விழுந்து எழுந்து, தடுக்கி விழுந்து எழுந்து கொண்டேயிருக்கிறேன். ஏன்? என்று எனக்குள் கேட்டுக்கொண்டேன். நான் இப்போது சரியான பாதையில் செல்வதாக, குறிப்பாக பசுமைப்பட்டை இயக்கத்துடன், நம்புகிறேன். ஆனால் நான் வேலையைக் கைக்கொள்ளக்கூடாது என்றும், எனது குரலை உயர்த்தக்கூடாது என்றும், பெண்கள் ஒரு எஜமானனைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் மற்றவர்கள் கூறுகிறார்கள். இறுதியில் நான் அறிந்து கொண்டேன், ‘நான் ஏதேனும் பங்களிப்பைச் செய்ய வேண்டுமாயின் எவர் என்ன சொல்லினும் நான் அதைச் செய்ய வேண்டும். நான் செல்லும் வழியில் நான் சரியாக உள்ளேன்.அதுதான் பலனளிக்கிறது’.
1970 களில் கல்லூரிப் பேராசிரியையாக இருந்த போது அரசியல்வாதியான மவாங்கி மத்தாயை மணந்தார். மூன்று பிள்ளைகளுக்குத் தாயானார். மிகவும் கட்டுப் பெட்டித்தனமும், ஆண் ஆதிக்கமும் மிகுந்த சமூகத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட மவாங்கி மத்தாயால் வங்காரியின் ஆளுமையுடன் ஒத்துப் போக முடியவில்லை. 1980 களின் மத்தியில் மவாங்கி வங்காரியை விவாகரத்து செய்தார். விவாகரத்து செய்ய அவர் தெரிவித்த காரணம் ‘வங்காரி மிகவும் படித்தவராக உள்ளார். அவரைக் கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது”, என்பதே.
இத்தணைக்கும் மத்தாய்-வங்காரியின் கணவர் அரசியல் பிரமுகர். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர், அதிகம் படித்தவர்.
நான் என் மணவாழ்வு உடைவதை விரும்பவில்லை. நிலைகுலைந்தேன். என் குழந்தைகளைத் தனியாக வளர்க்க விரும்பவில்லை. சம்பவங்கள் எதிர்மறையாகி நிற்கும் போது நீ மூலையில் முடங்கி உட்கார்ந்து வாழ்க்கை முழுதும் புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது. ’எழு, நட, தொடர்ந்து நட. எதிர் வரும் பாதை மோசமானதாக இருக்காது என்ற நம்பிக்கையுடன் நட’. என்ற பாடத்தை என் மண வாழ்வின் முறிவு எனக்கு வழங்கியது.
காதல் கண்மூடித்தனமானது. நாம் அதில் ஆழ்ந்திருக்கும் போது குற்றங்குறைகளைக் காண்பதில்லை. சமயங்களில் தவறு செய்துவிடுகிறோம். உன் நண்பர்கள் கூறுவதைக் கூர்ந்து கேள். அவர்கள் நம்மைவிடத் தெளிவாகக் காண்பார்கள்.
விமர்சனத்திற்கு ஆளான நோபல் பரிசு
நோபல் பரிசு வழங்கப்பட்ட போது ஒரு சுற்றுச் சூழல்வாதி உலக அமைதிக்கு என்ன செய்யமுடியும் என்று விமர;சிக்கப்பட்டார். அப்போது அவர; ‘நான் நேரிடையாக உலக அமைதிக்காக வேலை செய்யவில்லைதான். ஆனால் உலகம் அமைதியை நோக்கிச் செல்வதற்கான பணியைச் செய்து வருகிறேன். இதைத்தான் நோபல் பரிசுக் கமிட்டி உணர்ந்து கொண்டது. நாம் இந்த சந்தர்ப்பத்தில் சற்று நிதானமாக நின்று உலக அமைதி மற்றும் பாதுகாப்பை விரிவான பார்வையில் பார்க்க வேண்டும்”, என்றார;.
நோபல் பரிசுக்குப் பிறகு மத்தாய் உலகின் பல பகுதிகளுக்கும் அழைக்கப்பட்டார். அவரும் மக்களைச் சந்திப்பதில் சலிப்படையாது நாடு நாடாகப் பயணித்தார். அத்தகையது அவரது மன ஆளுமை. மக்கள் அடிக்கடி கேட்கிறார்கள், ‘எது என்னை தூண்டிவிட்டுக் கொண்டேயிருக்கிறது”, என்று. மத்தாய் சிரித்துக்கொண்டே. உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும்? என்றார். அவ்வளவு உள் ஆற்றல்.
நமக்குப் பின்னால் வரும் தலைமுறைகளின், தங்களுக்காகப் பேச முடியாத எல்லா உயிரினங்களின் உரிமைகளைக் காக்கும் பொறுப்பு நமக்குள்ளது என்று பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலை உலக மக்களிடம் சளைக்காமல் உணர்த்தி வந்தார்.
வங்காரி மத்தாய்க்கு நோபல் பரிசு அறிவித்ததும் போர்களும், தீவிரவாதமும், அணு ஆயுதப் பரவலும் அதிகரித்துள்ள ஒரு காலக்கட்டத்தில் சுற்றுச் சூழல் வேலை செய்யும் ஒருவருக்கு எதற்கு நோபல் பரிசு வழங்கப்படவேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. நோபல் பரிசுக் குழுவின் தலைவர்; தான்போல்ட் அவர்கள் இந்த ஆண்டு நோபல் பரிசுக்குழு அமைதி என்பதற்காக விளக்கத்தை போர்- சமாதானம் என்பதோடு நிறுத்தாமல் விரிவாக்கியுள்ளது. சுற்றுச் சூழல் காப்பும அமைதியை நோக்கிச் செல்லும் பாதை தான் என்று விளக்கமளித்தார். நோபல் பரிசைப் பெற்ற போது நிகழ்த்திய ஏற்புரையில் வங்காரி மத்தாய், ‘ஒரு ஆப்பிரிக்க பெண்ணிற்கு முதல் முறையாக நோபல் பரிசு வழங்கியதற்கு நன்றி”, தெரிவித்த கையோடு, ‘இது கென்ய மற்றும் ஆப்பிரிக்க, ஏன் உலக மக்களின் சார்பில் பரிசைப் பெற்றுக் கொள்கிறேன் என்று தன்னை உலக மக்களுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
பெற்ற விருதுகள்:
1984 - Right Livelihood விருது
1991 - கோல்டுமேன் விருது
2008 - Elder of Bcerning spear
2004 - Elder of Golden Heart
2004 - சோஃபி பரிசு
2004 - நோபல் பரிசு
2006 - கென்ய தேசிய மனித உரிமைகளுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது
2007 - உடல் நலன் மற்றும் மனித உரிமைகளுக்கான நெலசன் மண்டேலா விருது
போன்றவைகள் குறிப்பிடத் தகுந்தவை.
வங்காரி மாத்தாய் “பசுமைப் பட்டை இயக்கம்- அணுகுமுறை மற்றும் அனுபவங்கள் பகிர்வு” என்ற தனது முதல் நூலை வெளியிட்டார்.
2006-ல் “தலைவணங்காமல்” என்ற தனது சுயசரிதையை எழுதினார்
2008- ஆப்பிரிக்காவிற்கான சவால்கள் என்ற நூலையும், 2010-ல் “பூமிக்கு வளமூட்டுதல், உலகையும், நம்மையும் நாமே குணப்படுத்தும் ஆன்மிக மதிப்பீடுகள்” என்ற நூலையும் வெளியிட்டார்.
ஒரு குழிதோண்டி அதில் மரக்கன்று ஒன்றை நட்டு தண்ணீர் ஊற்றி வளர்க்கச் செய்யாவிட்டால் நீங்கள் எதையுமே செய்யவில்லை என்றே பொருள். நீங்கள் வாய்ச் சொல் வீரர் தான்.
‘நீங்கள் உங்கள் குரலை உரக்க ஒலிக்காவிட்டால் உங்களது சுற்றுச் சூழல் ஆர்வத்தால் எந்தப் பயனும் கிடையாது. அது வெறும் சந்தர்ப்பவாதமாகவோ ஒப்புக்கு ஒட்டிக் கொண்டதாகவோத்தான் இருக்கும்”, என்று தன் மக்களைத் தட்டி எழுப்பினார்.