வெள்ளி, 13 ஏப்ரல், 2018

தந்தையையும் தாத்தாவையும் திருமணம் செய்த எகிப்து ராணி கல்லறை கண்டுபிடிப்பு

தந்தையையும் தாத்தாவையும் திருமணம் செய்த எகிப்து ராணி கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது.

எகிப்து மம்மிகள் பற்றிய தகவல்கள் எப்போதும் ஆச்சரியம் தருபவை. பண்டைய எகிப்தியர்கள், தங்கள் மன்னர்களைக் கடவுளர்களாவே கருதினார்கள். அவர்களின் கடவுள் இறந்துவிட்டால், அவரது உடலைப் பதப்படுத்தி, பிரம்மாண்டமான கல்லறையில் வைத்துப் புதைத்துவிடுவார்கள். அந்தக் கல்லறைகளுக்குள் இறந்தவர்கள்  மன்னரின் ‘மறுவாழ்வு’க்காக! அவர்கள் பயன்படுத்திய  விலையுயர்ந்த பொருட்கள், தங்க நகைகள் என்று பல பொருட்களை வைத்துவிடுவார்கள். 

1923. இதே நாள். எகிப்தின் நைல் நதி அருகில் இருக்கும் தீப்ஸ் பகுதியில் 3000 ஆண்டுகளாக, உலகின் கண்களில் இருந்து மறைந்து கிடந்த துட்டன்காமனின் கல்லறையை, பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹாவர்டு கார்ட்டர், அவரது நண்பரும் அவரது ஆராய்ச்சிக்கு நிதியுதவி செய்த கோடீஸ்வரர் லார்டு கார்னர்வோன் ஆகியோர் திறந்தனர். கல்லறைக்குள்ளே தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்கள் அங்கிருந்தவர்களின் கண்களை மின்னச் செய்தன!

கி.மு. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பண்டைய எகிப்து மன்னர் துட்டன்காமனின் கல்லறை திறக்கப்படாமல் இருக்கிறது என்று ஹாவர்டு கார்ட்டர் நம்பினார். பண்டைய எகிப்தின் 18-வது வம்ச மன்னர். ‘கிங் டட்’ என்ற பெயரால் அழைக்கப்படும் இவரது கல்லறை இருக்கும் இடத்தைத் தேடும் பணியில் தீவிரமாக இறங்கினார் கார்ட்டர். பல ஆண்டுகள் தொடர்ந்த இவரது பணிக்கு, நிதியுதவி செய்த லார்டு கார்னர்வோன் ஒரு கட்டத்தில் நம்பிக்கை இழந்தார். “இந்த முயற்சியைக் கைவிட்டுவிடுவோம்” என்று கார்ட் டரிடம் சொன்னார். ஆனால், இன்னும் ஒரே ஒரு வருடம் காத்திருக்கலாம் என்று அவரைச் சமாதானப்படுத்தினார் கார்ட்டர்.

கடைசியில், 1922 நவம்பரில் மற்றொரு கல்லறையின் சிதைந்த பாகங்களுக்கு அருகில், படிக்கட்டுகள் இருப்பதை கார்ட்டரின் குழு கண்டுபிடித்தது. அதன் வழியாகச் சென்றபோது, துட்டன்காமனின் கல்லறை இருக்கும் இடம் தெரியவந்தது. அதன்பின்னர்தான், 1923-ல் அந்தக் கல்லறையின் நான்காவது மற்றும் கடைசி அறை, பல அதிகாரிகளின் முன்னிலையில் திறக்கப்பட்டது. ஒன்றுக்குள் ஒன்றாக வைக்கப் பட்டிருந்த மூன்று சவப்பெட்டிகளின், கடைசிப் பெட்டியில், மன்னர் துட்டன்காமன் மீளாத் துயிலில் ஆழ்ந்திருந்தார். 18-வது வயதில் மர்மமான முறையில் இறந்த மன்னர் அவர். அவரது இறப்புக்கான காரணம் பற்றி இன்றுவரை ஆய்வுகள் தொடர் கின்றன. 

ஒரே நாளில் இந்தச் செய்தி உலகப் பிரசித்தி பெற்றுவிட்டது. இந்தச் சம்பவத்தை வைத்து புனையப்பட்ட கதைகள் ஏராளம்.இன்று துட்டன்காமனின் கல்லறையில் இருந்து எடுக்கப்பட்ட விலைமதிப்பற்ற பொருட்கள், கெய்ரோ நகரின் அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருக்கின்றன.

தற்போது துட்டன்காமன்  என்னும் எகிப்திய மன்னனின் இளம் மனைவியாகிய அங்கேஷ்னமுன் (Ankhesenamun)  புதைக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தனது அப்பாவையும் தாத்தாவையும் மணந்ததாகக் கூறப்படும் எகிப்திய ராணியாகிய அங்கேஷ்னமுன் புதைக்கப்பட்ட இடத்தை புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக தேடிவந்த நிலையில் அவர் புதைக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று இந்த அகழ்வாராய்ச்சிக்கு பொருளுதவி செய்து வருவதால் அதன் வெளியீட்டு உரிமைகளையும் அந்த தொலைக்காட்சியே வாங்கியுள்ளது. ஜனவரி மாதம் 100 எகிப்தியப் பணியாளர்கள் எகிப்தின் ராஜாக்களின் பள்ளத்தாக்கு எனப்படும் பகுதியின் இதுவரை ஆராயப்படாத மேற்குப்பகுதியில் அங்கேஷ்னமுன்னின்  கல்லறையைத் தேடும் பணியில் இறங்கினார்கள்.

ராஜ கல்லறை என்று ரேடார்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இடத்தை புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டுவதைக் காட்டும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.இந்த ஆராய்ச்சிக்கு பொருளுதவி செய்யும் அந்த பிரபல தொலைக்காட்சி தங்களது கண்டுபிடிப்புகளை இந்த ஆண்டின் கடைசியில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளதைப் பார்க்கும்போது பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

யார் இந்த அங்கேஷ்னமுன்? எகிப்திய மன்னரான பார்வோன் அங்கேஷ்னமுன் அங்கேனேட்டனுக்கும் அவரது மனைவி நெப்ரிட்டிக்கும்  பிறந்தவர் அங்கேஷ்னமுன். அவர்களது கலாச்சாரப்படி சகோதரர்களுக்குள் திருமணம் செய்வது சகஜம் என்பதால், அங்கேனேட்டன் தனது தங்கையாகிய நெப்ரிட்டியை மணந்து கொண்டார்.

கி.மு.1332 முதல் 1327 வரை எகிப்தை ஆண்ட துட்டன்காமன்  மனைவிதான் இந்த அங்கேஷ்னமுன் . கணவர் திடீரென்று இறந்துபோக அய் என்பவரை மணந்துகொண்டார் அங்கேஷ்னமுன். சில ஆவணங்கள் அவர் தனது கணவர் இறந்ததும் தனது தாத்தாவை மணந்துகொண்டார் என்றும் வேறுசிலர் அவர் தனது தந்தையையே மணந்து கொண்டார் என்றும் கூறுகின்றன.