ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

மகிழ்ச்சியில் பின்லாந்து முன்னிற்பது எப்படி?

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடத்தில் இருக்கிறது என்ற சமீபத்திய செய்தியைப் படித்திருப்பீர்கள். இது யாரோ போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போன செய்தியல்ல, ஐ.நா. சபையின் அதிகாரப்பூர்வ அறிக்கை.
பின்லாந்து பூர்வீக குடிமக்கள் மட்டுமின்றி, அங்கே குடியேறியவர்களும் மகிழ்ச்சியாக இருக் கிறார்களாம்.

அப்படி என்ன மகிழ்ச்சி ரகசியம் பின்லாந்தில் இருக்கிறது?

தரமான இலவசக் கல்வியும், சுகாதார வசதியும்தான் மகிழ்ச்சியின் பிரதான காரணங்கள் என்று கூறப்படுகின்றன.

இதுகுறித்து பின்லாந்து பிரஜையான ஆன்டி காப்பினன் கூறும்போது, “என் நாடு குறித்து நான் பெருமைப்படுகிறேன். ஐ.நா. சபையின் மகிழ்ச்சி குறியீடு அறிக்கையில் எங்கள் பின்லாந்து முதலிடத்தைப் பிடித்ததால் நான் இதைக் கூறவில்லை. எப்போதுமே நான் பின்லாந்தை நினைத்து பெருமையே படுகிறேன்” என் கிறார்.

அது ஏன் என்று கேட்டால், “பின்லாந்தில் எல்லோருக்கும் எல்லாவிதமான வாய்ப்புகளும் இருக்கின்றன. அதுவே இங்கு அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு முக்கியக் காரணம். அதுமட்டுமின்றி, இரண்டாவது உலகப் போருக்குப் பின் இங்கு எந்த அரசியல் நெருக்கடியும் ஏற்படவில்லை. பின்லாந்து ஒரு நடுநிலையான நாடு. உலகில் யாருடனும் எங்களுக்கு விரோதம் இல்லை” என்கிறார்.

“பின்லாந்து மக்களாகிய நாங்கள் 24 மணிநேரமும் வேலை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டோம். ஓய்வு நேரங்களை எங்களுக்குப் பிடித்தமான விஷயத்தில் செல விடுவோம். இசை, குடும்பம், விளையாட்டு என எங்களுக்கு விருப் பமான விஷயங்களில் மூழ்குவோம். இவையெல்லாம்தான் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் என்று கருதுகிறேன்” என்கிறார், மகிழ்ச்சிக் குரல் மாறாமலே.

அதேபோன்ற கருத்தைப் பிரதிபலிக்கிறார், தொடர்பியல் துறை மாணவரான யெனா வுரெலா. “பின்லாந்து ஒரு பாதுகாப்பான நாடு. இங்கு யாருக்குள்ளும் எந்த வேற்றுமையும் இல்லை. இங்கு முழுமையான பாலின சமத்துவமும், பொருளாதார சமத்துவமும் நிலவுகின்றன. எல்லோருக்கும் எங்கள் நாடு வாய்ப்பு வழங்குகிறது. இவையெல்லாம் எங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கின்றன” என்கிறார்.

பின்லாந்தில் குடியேறிய வெளிநாட்டவர்களும் மகிழ்ச்சியாக இருப்பது குறித்து யெனா, “எங்கள் நாட்டில் குடியேறியவர்களிடம் நாங்கள் எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை. ஒரு பின்லாந்து நாட்டவருக்கு என்னென்ன வாய்ப்பு, வசதிகள் கிடைக்குமோ அவை அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து இங்கு குடியேறியவர்களுக்கும் கிடைக்கும். அதனால் அவர்களும் சந்தோஷமாக இருக்கிறார்கள்” என்று விளக்கமாகச் சொல்கிறார்.

கடந்த ஆண்டு இந்த மகிழ்ச்சிப் பட்டியலில் பின்லாந்து ஐந்தாவது இடத்தில் இருந்தது, நார்வே முதலிடத்தில் இருந்தது. இந்த ஆண்டில் நார்வே இரண்டாமிடத்துக்கு இறங்க, பின்லாந்து முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

மகிழ்ச்சி விஷயத்தில் ‘பின்’லாந்து ‘முன்’னே நிற்கிறது!