வெள்ளி, 16 ஜூன், 2017

பாம்பு: அதிர்ச்சியூட்டும் சில தகவல்கள்! - கடிவாங்கியவனின் தேடல்

மலையேறிட்டு வந்து புல்லு தடுக்கி விழுந்து செத்தவன்ட கதை கேள்விபட்டிருப்பீங்க.. அதான் இப்போ நம்ம வாழ்க்க.. காடு மலையெல்லாம் போய் பாம்பு கூட செல்பி எடுத்து பாம்புக்கே படம் எடுத்திட்டு இப்போ.. பாம்பாட்டிட பல்லு புடுங்காத கருநாகத்திட்ட கடிவாங்கினத எப்படி மறக்க முடியும். கடிச்சதும் சத்தி எடுத்தவன பாத்து இருப்பீங்க. சிரிச்சவன பாத்து இருக்கீங்கள.. அதான்யா நம்ம பாடு. சூட்டிங்கில நடந்த சோகம் கமெடி கலந்த மரண சமாச்சாரம். எதையும் பொசிட்டிவா எடுக்கனும் என்டு என்ர அப்பா சொல்லி இருக்காரு.. சோ.....!! பாம்பு கடிச்ச வலியும் 5 நாள் அவசர சிகிச்சை பிரிவுல படுத்ததையும் மறந்திட்டு அரவத்த பத்தி கொஞ்சம் படிக்கலாம் வாங்க.

பாம்புன்னு எடுத்துக்கிட்டோமுன்னா, நம்மள்ல நெறைய பேருக்கு நல்லா தெரிஞ்ச, பிரபலமான(?) ஒரு பாம்புன்னா அது நல்ல பாம்பு/ராஜ நாகம் அப்படீன்னு சொல்லலாம். நல்ல பாம்பு நான் சில முறை பார்த்தப்போ, அது என்னவோ நம்மள நல்லா உத்து பார்க்குது போலிருக்கு அப்படீன்னுதான் எனக்குத் தோனும்!

ஆக, பாம்புக்கு கண்கள் இருக்கு. அது நல்லாவும் பார்க்கிற மாதிரி நமக்குத் தோனுது(?). பாம்பைப்பத்தின இன்னொரு சந்தேகம், பாம்புக்கு காது இருக்கா? எனக்குத் தெரிஞ்சவரைக்கும் “பாம்பின்கால் பாம்பறியும்” அப்படீன்னு ஒரு பழமொழிதான் இருக்கேத் தவிர கண்ணுக்குத் தெரியுற மாதிரி பாம்புக்கு காது/கால் இதெல்லாம் இல்லைன்னுதான் நெனைக்கிறேன்!

அடுத்த சந்தேகம், பாம்புக்கு மூக்கு இருக்குதா? யாராவது பார்த்து/கேள்விப்பட்டு இருக்கீங்களா?
கண்டிப்பா எனக்குத் தெரியாதுப்பா! சரி, நம்மளுக்குத் தெரியாதுங்கிறதுக்காக பாம்புக்கு காது/மூக்கு இருக்கு/இல்லைன்னு அர்த்தமில்ல. இல்லீங்களா? அப்படீன்னா, உண்மைதான் என்ன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்னதான் பதில்?

பாம்பின் மூக்கு

கேள்வி: பாம்புகளுக்கு கண்கள் உண்டா?
பதில்: உண்டு. ஆனால் சில பாம்புகளை (நல்ல பாம்பு போன்றவை) தவிர மற்றவைக்கு நன்கு பார்க்கும் திறன் இல்லை!

கேள்வி: பாம்புகளுக்கு காதுகள் இருக்கின்றனவா?
பதில்: உண்டு. ஆனால், அவை தலையினுள் இருப்பதால் வெளியில் தெரிவதில்லை!
கேள்வி: பாம்புகளுக்கு மூக்கு இருக்கிறதா?
பதில்: உண்டு. ஆனால், பாம்புகளின் மூக்கு நமக்கு இருப்பவை போல கண்களுக்கு இடையில் அல்ல. பாம்புகளின் மூக்கு என்பது ஆங்கிலத்தில் ஜேக்கப்சன்ஸ் ஆர்கன் (Jacobson’s organ) என்றழைக்கப்படுகிறது. இந்தப் பகுதி வாயின் மேற்புறத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது!


விளக்கம்: பகல் நேரத்தில் இரையை வேட்டையாடும் பழக்கமுள்ள சில பாம்புகளைத்தவிர மற்ற எல்லாப் பாம்பினங்களுக்கும், தெளிவான பார்வைத் திறன் இல்லை.அவை வடிவங்களைப் பார்க்க முடியுமே தவிர விவரங்களை அல்ல! இதன் காரணம், பாம்புகளின் பரிணாம நிலையான பொந்துகளில், இருட்டில் வாழும் தன்மையே. ஏனென்றால் இருட்டில் பார்வைக்கான அவசியம் மிகக் குறைவு என்பதால்!

Pit vipers  எனும் வகையைச் சேர்ந்த பாம்புகள், இரவினில் நன்கு பார்ப்பதற்கான ஒரு பிரத்தியேகத் திறனைக் கொண்டவை!  அதாவது, இவ்வகைப் பாம்புகளின் தலையின் இருபுறமும் இருக்கும் குழிகள் (Pits) வெப்பத்தை (இன்ஃப்ரா ரெட், Infra red) உணரும் சக்தி படைத்தவை. இந்தக் குழிகள் (கண்களல்ல) இவ்வகைப்பாம்புகளின் மூளைக்கு இரையின்(விலங்கின்) வடிவங்களை அனுப்பும் சக்தி கொண்டவை என்கிறார்கள் ஆய்வாளர்கள். யப்பா….!!
அந்த அதிசயத்த, கீழே இருக்குற அற்புதமான இந்தக் காணொளியில நீங்களே பாருங்க……

நல்ல பாம்பினைப் பற்றிய ஒரு சுவாரசியமான(?) தகவல் என்னன்னா, அதோட கண்கள் எதிரியின் கண்களை குறி பார்த்து தன் விஷத்தைக் கக்கும்(செலுத்தும்) திறன் கொண்டவை என்பதுதான்! அதுமட்டுமில்லாம, தன்னோட விஷம் எதிரி யோட (மனுசனும்) கண்களைக் குருடாக்கிவிடும் என்பது நல்லாத் தெரியுமாம் நல்ல பாம்பிற்கு! அதுசரி,  நல்ல பாம்புங்க நம்ம வடிவேல் மாதிரி “எதையுமே ப்ளான் பண்ணிதான் பண்ணனுமுன்னு” கெளம்பி இருக்குங்க போலிருக்கு!? எதுக்கும் நாம ஜாக்கிறதையா இருந்துக்குவோம் சாமீ…!

ராஜ நாகத்தைப் பத்தின ஒரு அட்டகாசமான காணொளிய கீழே பாருங்க……

பாம்புகளுக்கு வெளிப்படையான, பெரிய காதுகள் இல்லைன்னாலும் தலைக்கு உள்ளே கேட்கும் திறனுள்ள காதுகள்(?) இருக்கு. அதனால, காற்றில் எழும் பல அதிர்வுகளை  துள்ளியமாக உணரும் திறன் படைத்தவையாம் பாம்புகள்! இன்னொரு சுவாரசியமான விஷயம், பாம்புகள் ஏற்படுத்தும் மிகப் பிரபலமான(?) “உஸ்ஸ்ஸ்ஸ்…..” அப்படீங்கிற சத்தம். இந்த சத்தத்தை பாம்புகள் ஏற்படுவதற்கான காரணம், பிற விலங்கு/எதிரிகளை எச்சரிக்கை செய்வதற்க்காகவே!
ஒரு பாம்பு எந்த அளவுக்கு “உஸ்ஸ்ஸுங்கும்னு” நீங்களே பாருங்க…..

பாம்புகளுக்கு சிறந்த பார்க்கும்/கேட்கும் திறன் இல்லாததை சரிப்படுத்தும் விதமாக இயற்கை (இறைவன்?) பாம்புகளுக்கு, மிகச்சிறந்த நுகரும் திறனை அளித்திருக்கிறது. ஆக, தங்களின் ஜேக்கப்சன்ஸ் ஆர்கனினால் பாம்புகள் மிகத்துள்ளியமாக நாற்றங்களை உணர்ந்து தங்களின் இரையை தேர்ந்தெடுக்கின்றன/காத்துக்கொள்கின்றன!

“பிளவுபட்ட நாக்கு”

பாம்புகளைப் பற்றிய இத்தகவல்கள் எல்லாத்தையும் விட மிக சுவாரசியமான, பாம்புகள்னாலே நமக்கெல்லாம் நியாபகத்துக்க்கு வர்ற ஒரு விஷயம் இருக்கு. அது என்னன்னு தெரியுமா உங்களுக்கு? கண்டிப்பா உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்னு நம்பறேன். அதுக்கும், பாம்புகளோட நுகரும் தன்மைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கு!  அது  வேற ஒன்னுமில்லீங்க, பொதுவா பாம்புகள் தங்களோட நாக்கினை வெளியில் நீட்டி பின் சட்டென்று உள்ளிழுத்துக்கொள்வதை நாம் எல்லாரும் பார்த்திருப்போம். அது எதுக்குன்னு தெரியுமா உங்களுக்கு?

பாம்புகளின் நாக்கு பிளவுபட்டது போன்றிருக்கும். அந்த நாக்கினை வெளியில் சுழற்றும்போது பாம்புகள், காற்றில் உள்ள நாற்றத் துகள்களை உள்ளிழுத்துக்கொள்கின்றன. பிளவுபட்டது போன்ற நாக்கின் இரு புறங்களும் ஜேக்கப்சன்ஸ் ஆர்கனின் இரு துவாரங்களில் மாட்டிக்கொண்டு விடுகின்றனவாம். பின் நாற்றத்தின் தன்மையை உணர்ந்துகொள்ளுமான் பாம்பு! அடேங்கப்பா….!
படிச்சிட்டாப் புரிஞ்சிடுமா என்ன? அதனால இந்தக் காணொளியில பாருங்க…..

பாம்புகள் தங்கள் இரையை எப்படி தாக்கி, பின் அவற்றைத்க் தங்களின் உணவாக்கிக் கொள்கின்றன என்பதை மிகத்துள்ளியமாகக் காட்டும் இந்த அற்புதமான காணொளியையும் பாருங்க…… நம்பவே முடியலைங்க என்னால!!

என்னங்க, அசந்துபோய் உக்காந்துட்டீங்க? இதுக்கே இப்படின்னா, இன்னும் வரப்போற பாம்புகள் பத்தின காணொளிப்பதிவுகளப் பார்த்துட்டு என்ன செய்வீங்கன்னு தெரியலையே? சரி, பொறுத்திருந்து பார்ப்போம்!

சாகாவரம் தரும் செயற்கை நுண்ணறிவு! - (IARP)

மனிதர்களின் உயிர்காக்கும் நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு செயற்கை உடல் உறுப்புகள் உற்பத்தி, மனிதர்களுக்கு நிகரான ரோபாட் வடிவமைப்பு என விஞ்ஞானம் அசத்திக்கொண்டு இருக்கிறது. இருந்தாலும், ‘மனிதர்கள் நூறு வருடம் வரை வாழ முடியுமா?’ என்ற சந்தேகம் நிலவத்தான் செய்கிறது. ஏனென்றால், மனிதனின் ஆயுட்காலத்தை வெகுவாக குறைத்துவிடும் பல்வேறு வகையான நோய்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் மாசுபாடு என பல்வேறு காரணங்களால் உள்ளன. இதனால் மனிதனின் நீண்டகால வாழ்க்கை என்பது ஒரு கனவாகத்தான் இருக்கிறது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக, முதுமை என்பது உயிரினங்களுக்கு ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வு என்றாலும் கூட, அது ஒரு குணப்படுத்தக் கூடிய நோய் போன்றதுதான் என்றே பெரும்பாலான விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

அதன் காரணமாக, முதுமையைக் கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் இதுவரை பல ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். உதாரணமாக, சிலர் முதுமையைக் குறைக்கவும், பலர் முதுமையை முற்றிலும் தடுக்கவும் முயன்று வருகின்றனர்.

முதுமையை முற்றிலும் தடுத்து, மனித ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு எண்ணற்ற வழிகள் இருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். அத்தகைய வழிகளுள் ஒன்றுதான், உயிர் ஆதாரமான ஸ்டெம் செல்களில் மரபணு மற்றும் உயிரணு அளவிலான மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் முதுமையைத் தடுக்கும் தொழில்நுட்பம். இதன்மூலம், ரத்தத்தில் உள்ள சில புரதங்களின் இளமையை நீட்டிக்கும் திறன்கள் சமீப காலமாக பரிசோதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், வேறு சில விஞ்ஞானிகள் குறிப்பிட்ட வகை பாக்டீரியாக்களைப் பயன்படுத்தி முதுமையை தடுக்க முடியும் என்கின்றனர்.
இவர்களை எல்லாம் மிஞ்சுவது போல் உள்ளது புதிய ஆய்வு ஒன்று.

சர்வதேச மூப்பு ஆய்வுப் பிரிவு மற்றும் உயிர் முதுமையியல் ஆய்வு நிறுவனம் (Aging Research Portfolio (IARP) and Biogerontology Research Foundation) ஆகியவற்றின் இயக்குனராகவும், உயிர் தகவலியல் நிறுவனமான (மிஸீவீறீவீநீஷீ Medicine) இன்சிலிகோ மெடிசினின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் இயங்கிவரும் அலெக்ஸ் சாவோரோங்கோ இந்த யோசனையை தெரிவித்துள்ளார்.
அதாவது, ‘செயற்கை நுண்ணறிவைக் கொண்டு முதுமையை வெல்ல முடியும்’ என்கிறார் விஞ்ஞானி சாவோரோங்கோ. வாழ்க்கை நீட்டிப்பு வழக்குரை நிறுவனத்திற்கு (லிவீயீமீ Extension Advocacy Foundation (LEAF) சமீபத்தில் அளித்துள்ள நேர்காணலில், முதுமை மற்றும் அது தொடர்பான நோய்கள் மீதான இன்சிலிகோவின் சமீபத்திய ஆய்வுகளைப் பற்றிய விளக்கியுள்ளார். அதில், உடல் வளர்ச்சி, முதுமை மற்றும் புற்றுநோய் வளர்ச்சி ஆகியவற்றுடன் தொடர்புடைய மூலக்கூறு சமிஞ்ஞைத் தடங்களை ஆய்வு செய்யக்கூடிய ஆன்கோ பைண்டர் எனும் செயற்கை நுண்ணறிவு மற்றும் கணக்கியல் வழிமுறைகள் (அல்காரிதம்) போன்றவற்றின் உதவியுடன் மனித செயல்பாடுகளை தொடர்ந்து மேம்படுத்தவும், முதுமை தொடர்பான நோய்களை குணப்படுத்துவதுமே தங்களுடைய நீண்டகால குறிக்கோள் என்கிறார் சாவோரோங்கோ.

முக்கியமாக, மனித உடலின் ஆரோக்கிய நிலையை ஒரு ஆய்வு மாதிரியாக உருவாக்கி அதனை தொடர்ந்து கண்காணித்து, அதில் ஏற்படக்கூடிய கோளாறுகளை வாழ்க்கை முறை அல்லது மருத்துவச் சிகிச்சைகள் மூலம் சரி செய்யக்கூடிய ஒரு முழுமையான மருத்துவக் கருவி அல்லது அமைப்பை இன்சிலிகோ மூலம் இன்னும் ஐந்தே வருடங்களில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகிறார் சாவோரோங்கோ.
மேலும், ஒரு மனிதனின் வயதை கணித்துச் சொல்லக்கூடிய மற்றும் பல அதிசயங்களை நிகழ்த்தக்கூடிய ஆழமான நரம்பியல் வலையமைப்பு ( deep neural networks ) தொழில்நுட்பத்தையும் இந்த ஆய்வில் பயன்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், முதுமை மற்றும் அது தொடர்பான நோய்களைக் குணப்படுத்தும், முதுமையால் உடலில் ஏற்படும் சிதைவுகளை சரிசெய்யும் அல்லது முதுமையே வராமல் முன்கூட்டியே தடுத்துவிடும் பல்வேறு வகையான மருந்துகளை உற்பத்தி செய்யும் திறன் செயற்கை நுண்ணறிவுக்கு உண்டு என்கிறார்.

ஒட்டுமொத்தமாக, மனிதர்களை மரணத்திலிருந்து காக்கும் அசாத்திய திறன் செயற்கை நுண்ணறிவுக்கு நிச்சயமாக உண்டு என்று அடித்துச் சொல்கிறார் அலெக்ஸ் சாவோரோங்கோ.

மர்மம் நிறைந்த குள்ளர்கள் - நெல்லிஸ் குயா

இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள புளோரஸ் தீவு மலைகளும், காடுகளும், எரிமலைகளும், மர்மங்களும் நிறைந்த அதிசய தீவு. புளோரஸ் தீவில் அழகுடன், அறிவியல் அதிசயங்களும் மறைந்துள்ளன. இங்குள்ள பழங்குடியின சந்ததியினர் 'நெல்லிஸ் குயா' என்று அழைக்கப்படுகின்றனர். மிகவும் பழமை வாய்ந்த பழங்குடியினர்களின் பட்டியலில் புளோரஸ் தீவின் 'நெல்லிஸ் குயா' மக்களும் இடம் பிடித்துள்ளனர்.

பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்த ஆராய்ச்சிகளுக்காக, உலக ஆராய்ச்சி யாளர்கள் புளோரஸ் தீவில் முகாமிடுவது வழக்கம். அப்படி செல்லும் ஆராய்ச்சியாளர்களுக்கு அங்குள்ள பழங்குடியின மக்கள், விசித்திர குள்ள மனிதர்களின் கதைகளையும் கூறுகின்றனர்.

'புளோரஸ் மலைகளுக்குப் பின்னால் விசித்திர குள்ளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கண்கள் பெரிதாகவும், உடல் முழுவதும் ரோமம் மூடியும் காணப்படும். 

மற்றவர்களுக்கு புரியாத மொழியும் பேசுவார்கள். குள்ளர்கள் பழங்குடியின கிராமங்களுக்குள் அடிக்கடி புகுந்து, பயிர்கள், உணவுப் பொருட்கள், பழங்களை திருடிக்கொண்டு ஓடிவிடுவார்கள். எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். இந்தக் குள்ளர்களை 'எபுகோகோ' என்று மூதாதையர்கள் அழைப்பார்கள்' என்று விசித்திர குள்ளர்களின் கதை நீள்கிறது.

இதுபோன்ற கதை புளோரஸ் தீவில் மட்டுமல்லாமல், இந்தோனேஷியாவின் ஏராளமான கிராமங்களிலும் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் 'பழங்குடியின மக்களின் கற்பனை' என்று புறந்தள்ளப்பட்ட இந்த குள்ளர்களின் கதை, தற்போது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

2003-ம் ஆண்டு புளோரஸ் தீவில் நெல்லிஸ் குயா பழங்குடியின மக்கள் வசித்து வரும் கிராமத்தில் இருந்து சுமார் 75 மைல் தொலைவில் ஒரு குகையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியாவை சேர்ந்த தொல் பொருள் ஆய்வுக் குழுவினர், டாக்டர்.ரிச்சர்ட் ராபர்ட் என்பவர் தலைமையில் அந்தக் குகையை ஆராய்ந்தனர். அப்போது 19 அடி ஆழத்தில் சிறிய உருவத்திலான எலும்பு கூடுகளுடன், பல மிருகங்களின் எலும்புகளையும் கண்டுபிடித்தனர்.

ஆரம்பத்தில் இந்த எலும்புக் கூடு ஒரு சிறிய குழந்தையின் எலும்பாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதினர். ஏனெனில் இதன் மொத்த உயரமே மூன்று அடிதான். குழந்தையின் எலும்புக்கூடு என்ற கோணத்திலே ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்களுக்கு, பேரதிர்ச்சி காத்திருந்தது.

பழங்குடியின மக்கள் கூறிய கதைகளை ஒப்பிட்டு பார்த்த ஆராய்ச்சியாளர்கள், சிறிய அளவிலான எலும்புகூட்டை முழுவதுமாக ஆராய்ந்தனர். அதில் இதுவரை யாரும் அறியாத புதிய மானிட இனத்தின் எலும்பு கூடுகள் அவை என்பதை உணர்ந்தனர். கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு சுமார் 30 வயது பெண்ணுடையது.

விரிவான ஆராய்ச்சியில், இவர்களின் மொத்த உயரமே சராசரி 3 அடிதான். அதாவது 3 வயது குழந்தையின் உயரம்தான். இவர்களின் மொத்த உடல் எடை 25 கிலோ மட்டுமே. மூளை அமைப்பு மிகச்சிறியதாகவும், சிக்கல் நிரம்பியதாகவும் இருந்திருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் மனித பரிணாம வளர்ச்சி கொள்கை தலைகீழாக புரண்டு விட்டது. பெரிய மூளையுடைய மனிதர்களை போன்றே குள்ளர்களும் வேட்டையாடுதல், வேட்டை கருவிகளை கூர்மையாக உருவாக்கும் நுட்பம், ஒளிந்திருந்து தாக்குதல், பதுங்குதல் போன்றவற்றையும் சிக்கலான சிறிய அளவு மூளைகளை கொண்டே நிகழ்த்தி உள்ளனர். கண்டெடுக்கப்பட்ட 3 அடி உயர பெண் எலும்புக்கூடு சுமார் 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இது பற்றி டாக்டர்.ரிச்சர்ட் ராபர்ட் கூறும் பொழுது, 'மனித வரலாற்றில் 18 ஆயிரம் ஆண்டுகள் என்பது நெருக்கமான ஒன்று தான். இந்த குள்ள மனிதர்கள் இன்றும் கூட, அடர்த்தியான காடுகளில் வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இன்னும் விரிவாக ஆய்வு நடத்தினால் இந்தப் புதிய இனத்தைப் பற்றி மேலும் அறியலாம். புளோரஸ் தீவு நாலாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியில் அமைந்திருக்கிறது. முக்கியமாக இதன் அருகில் உள்ள பாலி தீவில் இருந்து லம்போக் தீவு, முப்பது கீலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. மேலும் இந்த இரண்டு தீவுகளுக்கும் இடையே “சேப்” என்று அழைக்கப்படும் ஆபத்தான கடல் நீரோட்டமும் ஓடுகிறது. எனவே பாய்மரக் கப்பல் அல்லது இயந்திரப் படகு மூலமாகவே இக்கடல் பகுதியைக் கடக்க முடியும். எனவே கற்கால மனிதர்கள் எப்படி இந்த ஆபத்தான கடல் பகுதியைக் கடந்து புளோரஸ், திமோர் ஆகிய தீவுகளுக்கும், ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் சென்றிருக்க முடியும் என்பது என்னை போன்ற ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் குழப்பமாகவே உள்ளது. இதற்கு இந்தியா-இலங்கை நாடுகளை உதாரணமாக கொள்ளலாம்.

மண்டை ஓடை மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்ட பெண்ணின் உருவம்


இந்தியா-இலங்கை நாடுகளிலும் கற்கால மனிதர்களின் எலும்புகளும், கற்கால கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த இரு நாடுகளுக்கும் இடையே அறுநூறு அடி ஆழமுள்ள கடல் உள்ளது. ஆனால் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்சென்று பார்த்தால், கடல் நீர் மட்டத்தின் அளவுகள் ஆட்டம் காண்கின்றன. ஏற்றமும் இறக்கமுமாக இருக்கின்றன. நீர்மட்டத்தின் வீழ்ச்சியையும், அவர்களின் கண்டுபிடிப்புகளையும் கொண்டு கண்டங்களை தாண்டி இருக்கலாம். அதன் பிறகு பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் உயர்ந்ததால், இடம்பெயர்ந்த கற்கால மனிதர்கள் அந்தந்த தீவுகளை தங்களுக்கான இருப்பிடமாக கொண்டு வாழ்ந்துள்ளனர். இதுவே குள்ளர்களின் வாழ்க்கையில் நடந்திருக்க வேண்டும். கடல் நீர் மட்டம் குறைந்த போது, இந்தோனேஷியாவை சுற்றியிருந்த குட்டி தீவுகளுக்கு சென்றிருக்கலாம். வேட்டையாட தெரிந்தவர் களுக்கு கடல் தாண்ட தெரியாதா?.

மேலும் சுனாமி பேரலைகளால் தீவில் ஒதுங்கிய பெரிய மரங்களை கொண்டு படகு மாதிரியிலான ஒன்றையும் உருவாக்கி இருக்கலாம். இதன் மூலமாக கூட கடல் தாண்டிஇருக்கலாம். அப்படி தான் புளோரஸ், திமோர், பாலி ஆகிய தீவு பகுதிகளுக்கு சென்றிருப்பார்கள். ஏன் இன்று நம்மால் காண இயலாத சிறு தீவுகளிலும் கூட குள்ள மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கலாம். கைவிடப்பட்ட தீவில் சராசரி மனிதர்கள் நின்றாலே நமக்கு தெரியாத பட்சத்தில், குள்ளர்கள் மட்டும் எப்படி தெரிய வாய்ப்பிருக்கிறது' என்று ஆதாரங்களை திட்டவட்டமாக அறிவித்தார்.

இவரின் கூற்றுகளை ஏற்றுக்கொண்டிருக்கும் உலக ஆராய்ச்சியாளர்கள், குள்ள மனிதர்களை தேடும் ஆய்வில் இறங்கியுள்ளனர். குள்ள மனிதர்களின் வரலாற்றை நன்கறிந்த ஆராய்ச்சியாளர்கள், இந்தோனேஷியாவின் வரலாற்றை திருப்பி பார்த்து, அதன் நில அமைப்புகளை ஆராய்ந்து வருகின்றனர். கடல் மட்டத்தின் ஏற்ற இறக்கத்தில் ஆசிய கண்டத்தில் இருந்து பிரிந்த கண்டங்களை வகைப் படுத்தி, அதன் மூலம் குள்ள இனத்தவரை கண்டுபிடிக்க முடிவு செய்துள்ளனர்.

'ஆசியக் கண்டத்திற்கும், ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் இடையில் நிலத் தொடர்பு இருந்திருக்கும். அதன் வழியாகவே கற்கால மனிதர்கள் ஆசியக் கண்டத்திலிருந்து, ஆஸ்திரேலியக் கண்டத்திற்கு நடந்தே தான் சென்றிருப்பார்கள். அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்திருக்கும்.

அதே நேரத்தில் நிலப் பகுதியும் ஆங்காங்கே உயர்ந்ததால், தொடர்ச்சியாக இருந்த நிலப் பகுதி பல துண்டுகளாக உடைந்ததுடன், கடல் மட்டமும் உயர்ந்ததால் பல தீவுகளாக உருவானது. அதனால் கற்கால மனிதர்களால் தீவை விட்டு வெளியேற இயலாமல் தீவுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இறந்து போயிருப்பார்கள்' என்று குள்ள மனிதர்கள் குறித்து யூகமாக ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தக் கதைக்கான முழுவடிவம் இன்னும் ஆராய்ச்சிக்குள்தான் இருக்கிறது. குள்ள மனிதர்களுக்கான விடை கிடைக்குமா? என்ற கேள்வியுடன் கண்டங்களையும், தீவுகளையும் உலக ஆராய்ச்சியாளர்கள் புரட்டிப் போட்டு வருகின்றனர்.