திங்கள், 22 ஜூலை, 2013

துபாய் என்ற கனவுலகம் கானல்நீராகின்றது

துபாய், ஒரு காலத்தில் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், விண்ணைத் தொடும் கட்டிடங்களும், கடலுக்குள் செயற்கைத்தீவுகளும் கட்டிக் கொண்டிருந்தது. அந்த நாட்டின் வளர்ச்சிக்கு வானமே எல்லை, என்று உலகம் பார்த்து வியந்து கொண்டிருந்தது. கடந்த வருடம் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடி, துபாயின் பொருளாதாரத்தை வளரவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டது. வானத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருந்த அடுக்குமாடிக் கட்டடங்களின் கட்டுமானப்பணிகள் யாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஆடம்பர வீடுகளை தாங்கவிருந்த செயற்கைதீவுகள் பல கடலுக்குள் கிடக்கும் கட்டுமானக் குப்பைகளாகிப் போயின. பூமியில் கட்டப்பட்ட ஒரு கனவுலகம் ஒன்றைத் தான், இதுவரை துபாய்வாசிகள் கண்டுவந்தனர். இப்போது மாயை அகன்று வருகின்றது.

பாலைவன முகாம்களுக்குள் வாழும் தொழிலாளர்கள், நகரத்தில் அடுக்குமாடிக் கட்டடங்களில் தமது குடும்பங்களுடன் வசிக்கும் மத்தியதரவர்க்கத்தினர், கோடிகளை முதலீடு செய்த வர்த்தகர்கள்; இப்படிப் பலதரப்பட்டவர்களை கொண்ட வெளிநாட்டவர்களின் சமூகம், துபாயின் மொத்த சனத்தொகையில் 90 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. தொழிற்தேர்ச்சி பெற்ற அதிக சம்பளம் வாங்கும் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களின் வாழ்க்கை வளமானதாகவே இருந்தது. இவர்களில் பலர் துபாயில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஆடம்பர வீடுகளை வங்கியில் கடன் எடுத்தாவது வாங்கிட முண்டியடித்தனர். துபாயில் வீடு வாங்குபவர்களுக்கு, நிரந்தர வதிவிட அனுமதிப்பத்திரம் கிடைக்கும் என்று அரசு ஆசை காட்டியது. இந்தக் காரணத்திற்காகவே வீடு வாங்கியவர்கள் நிறையப்பேர். அயல்நாடான ஈரானைச் சேர்ந்த வர்த்தகர்கள் பலருக்கு இது கிடைத்தற்கரிய வாய்ப்பாகப் பட்டது. சர்வதேச பொருளாதார தடைக்குள் மாட்டிக் கொண்டிருக்கும் ஈரானை விட, துபாயில் இருந்து கொண்டு வணிகம் செய்வது பாதுகாப்பானது எனக் கருதினர்.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வீட்டு மனைக்கான கேள்வி அதிகரிக்கவே, கட்டுமானக் கம்பெனிகளும் "பேரீச்சை மர வடிவில்", "உலக வரைபட வடிவில்" என்று செயற்கைத் தீவுகளை நிர்மாணித்து, அதிலே ஆடம்பர வீடுகளை கட்டிக்கொடுக்கும் திட்டங்களை அறிவித்தனர். இவையெல்லாம் கட்டப்படுவதற்கு முன்னரே, வீடுகளை விற்கும் திட்டம் ஆரம்பமாகி விட்டது. முன்கூட்டியே பணத்தை செலுத்த வேண்டும், ஆனால் குடியேறுவதற்கு வருடக் கணக்கேனும் காத்திருக்க வேண்டி வரலாம். "துபாய் முதலாளித்துவத்திற்கு ஆயுசு நூறு" என்று நம்பிய பலர், (Real Estate) புத்தகத்தில் மட்டுமே பார்க்கக்கூடிய கற்பனை வீடுகளை வாங்கிக் கொண்டிருந்தனர். கையில் பணமில்லாதவர்கள் வங்கிகளிடம் கடன் வாங்கிக் கட்டினர். "வீட்டின் விலை எப்போதும் கூடிக் கொண்டு தான் இருக்கும், ஒருபோதும் குறையாது" என்று பங்குச்சந்தை சித்தர் சொன்ன அருள்வாக்கு பொதுக்கருத்தாக இருந்த காலமது. அந்தக் காலத்தில் வாங்கிய வீட்டை சில நாட்களின் பின்னர் விற்று லாபம் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். வாங்கி ஒரு மணித்தியாலங் கழித்துக் கூட, சந்தையில் வீட்டின் விலை அதிகரித்திருக்கும் என்று சொல்லப்படுகின்றது.

நிதிநெருக்கடி கட்டுமான கம்பெனிகளையும் விட்டுவைக்கவில்லை. பல நூறு அடுக்குமாடிக் கட்டடங்கள், செயற்கைத்தீவுகள் கட்டிமுடிக்கப்படாமல் அரைகுறையாக இருக்கின்றன. இவையெல்லாம் தொடர்ந்து கட்டப்படுமா? எப்போது முடியும்? என்ற கேள்விகளுக்கு எவரிடமும் பதில் இல்லை. வீடுகள் கட்டப்படவில்லை என்பதற்காக, கடன் கொடுத்த வங்கிகள் சும்மா விடவில்லை. லட்சக்கணக்கான டாலர் கடனை மாதாந்த தவணையில் தொடர்ந்து கட்டி வர வேண்டும் என்று நச்சரிக்கின்றன. இதனால் இப்போது பலர் இல்லாத ஒரு வீட்டிற்காக பணம் கட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. அதுவும் அதிர்ஷ்டவசமாக தொடர்ந்து வேலை செய்பவர்கள், வீட்டுக்கடனை அடைத்து வரலாம். திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்கள்?

துபாய் அரசாங்கம் தினசரி 1500 தொழில் விசாக்களை இரத்து செய்வதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தெரிவித்தது. தொழில் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் அந்த செய்தியை மறுக்கவில்லை, அதேநேரம் ஆமோதிக்கவுமில்லை. அந்த தொகை பத்திரிகை தெரிவித்ததை விட அதிகமாகவே இருக்கும் என்று பரவலாக நம்பப்படுகின்றது. இதைவிட கம்பெனிகள் இதுவரை எத்தனை பேரை பணி நீக்கம் செய்துள்ளன என்ற சரியான விபரம் இல்லை. எப்படியும் ஆயிரக்கணக்கான, அல்லது லட்சக்கணக்கான பணியாளர்களுக்கு வேலை பறிபோயுள்ளது. இவர்களில் பலர் பணி நிரந்தரம் என்ற நம்பிக்கையில், வீடு அல்லது கார் வாங்குவதற்கு எடுத்த கடன் இப்போது தலைக்கு மேலே நிற்கிறது. இதுவரை வருமானம் இருந்ததால், மாதாமாதம் திருப்பிச் செலுத்திக் கொண்டிருந்தனர். இனிமேல் அது சாத்தியமா? துபாய் சட்டப்படி, வேலை இழந்தவர்களின் தொழில் விசா இரத்து செய்யப்படும். அதற்குப்பின் ஒரு மாதம் மட்டுமே தங்கி இருக்கலாம். அதற்குள் இன்னொரு வேலை தேடிக்கொண்டால் பரவாயில்லை. ஆனால் இதுவரை அதிக சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்த, எஞ்சினியர்களின் சம்பளத்தைக் கூட அரைவாசியாக குறைக்கும் அளவிற்கு வேலையில்லாப்பிரச்சினை அதிகரித்துள்ளது.

வேலை இழந்ததால், வீட்டுக்கடனை கட்டமுடியாத இக்கட்டிற்குள் மாட்டிக் கொண்டவர்களின் நிலை பரிதாபகரமானது. துபாயில் கடனை அடைக்க முடியாதவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுகின்றனர். அப்படியே சிறைத்தண்டனை கிடைத்தாலும், வாழ்நாள் முழுவதும் அடிமையாக வேலை செய்து கடனை கட்டி முடிக்க வேண்டி வரும். இதனால் கடனை கட்டமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட பலர் நாட்டை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் போகும் போது கிரெடிட் கார்ட்டில் எஞ்சியிருக்கும் பணத்தையும் எடுத்துக் கொண்டு, தமது விலை உயர்ந்த கார்களை (எவருக்கும் விற்கமுடியாததால்) அங்கேயே போட்டு விட்டு ஓடுகின்றனர். துபாய் விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தில் இவ்வாறு ஆயிரக்கணக்கான வண்டிகள் கைவிடப்பட்டுள்ளன. வேலையிழப்புகள் அதிகரித்து வருவதால், வீடுகள் காலியாகின்றன, வீட்டுமனை விலை சரிகின்றது, தெருக்களில் வாகன நெரிசல் குறைகின்றது. மொத்தத்தில் துபாய் மாநகரின் சில பகுதிகள் யாருமே வசிக்காத இடங்களாக உருமாறுகின்றன.

நிலைமையை இன்னும் மோசமாக்கும் விதமாக, அரசாங்கம் புதிய ஊடக சட்டத்திருத்தம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. அதன் படி துபாயில் பொருளாதார பிரச்சினை இருப்பதாக, எந்த ஒரு ஊடகமும் மக்களுக்கு தெரிவிக்க முடியாது. அது குறித்த செய்திகளை பிரசுரிப்பவர்கள் அதிக பட்சம் ஒரு மில்லியன் டிர்ஹம் ($ 272000) குற்றப்பணம் கட்டவேண்டும். இதனால் ஊடகங்களும், செய்தியாளர்களும் "தேசப் பொருளாதாரம் என்றும் போல சிறப்பாக இருப்பதாக" பாசாங்கு செய்கின்றனர். இந்த சட்டம் காரணமாக பல வதந்திகள் பரவுகின்றன. இது பொருளாதாரத்தை மேலும் பாதிக்கின்றது.

துபாய், "ஐக்கிய அரபு அமீரகம்" என்ற சமஷ்டிக் கூட்டமைப்பிற்குள் உள்ள மாநிலம். அதன் அயலில் உள்ள அபுதாபி மட்டுமே, அனைத்து மாநிலங்களிலும் பணக்கார எமிரேட். அதன் அளவுக்கதிகமான எண்ணை வளம் காரணமாக பெருமளவு தொகை பணத்தை கையிருப்பில் வைத்துள்ளது. எனினும் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட துபாய்க்கு உதவ மறுத்து வருகின்றது. இது ஏன் என்ற கேள்வி பலருக்கு புரியாத புதிராக உள்ளது. பொருளாதார வீழ்ச்சி காரணமாக துபாய் திவாலாவதை அபுதாபி எதிர்பார்த்துக் காத்திருக்கலாம். அப்படி நடக்கும் பட்சத்தில், மேலைத்தேய நாடுகளில் உள்ளதைப்போல சுதந்திர கலாச்சாரம் கொண்ட துபாயில், கடும்போக்கு இஸ்லாமிய நெறிமுறைகளை கொண்டு வரும் நோக்கம் இருக்கலாம். அதே நேரம் அமீரகம் முழுவதையும் ஒரே நாடாக, அபுதாபியின் இரும்புக்கர ஆட்சியின் கீழ் கொண்டுவரும் திட்டமும் இருக்கலாம். அப்படி நடக்கும் பட்சத்தில், அங்கே வேலை செய்யும் வெளிநாட்டவர்களின் எதிர்காலம் இருண்டதாகவே இருக்கும்.