திங்கள், 22 ஜூலை, 2013

ஐரோப்பாவின் ஒரேயொரு பௌத்த நாடு




ஒரு காலத்தில் சீனா முதல் ஐரோப்பா வரை, உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள் மொங்கோலியர்கள். இந்த வரலாற்று உண்மையை நிரூபிக்கின்றது ஐரோப்பிய கண்டத்தின் கிழக்கெல்லையில்(வோல்கா நதிக்கும், கஸ்பியன் கடலுக்கும் அருகில்) அமைந்துள்ள "கல்மிகியா" சமஷ்டிக் குடியரசு. ரஷ்யாவின் காகேசிய பகுதி சமஷ்டி மாநிலங்களில் ஒன்று. கல்மிகிய மொழி துருக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தது. அம் மக்கள், ஒரு காலத்தில் திபெத்தில் இருந்து மொங்கோலியா வரை பரவியிருந்த லாமாயிச பௌத்த மதத்தை தம்முடன் கொண்டு சென்று, அதனை இப்போதும் பின்பற்றி வருகின்றனர்.

கல்மிகிய மக்களின் மூதாதையர் மொங்கோலிய நாடோடிக்குடிகளாக மத்திய ஆசியாவில் இருந்து, செங்கிஸ்கானின் படையினராக ஐரோப்பா நோக்கி வந்து குடியேறியவர்கள். மொங்கோலியா மக்களும், துருக்கி மக்களும், கசகஸ்தான், துர்க்மெனிஸ்தான் போன்ற மத்திய ஆசியாவை சேர்ந்தவர்களும், பொதுவான துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகளை இப்போதும் பேசி வருகின்றனர். இருப்பினும் மொங்கோலியர்கள் (திபெத்திய) பௌத்தர்களாகவும், பிறர் இஸ்லாமியராகவும் உள்ளனர். ரஷ்ய பகுதியான கல்மிகியாவில் வாழும் மக்கள், அனேகமாக தனிமைப்பட்ட அமைவிடம் காரணமாக, இன்றும் (திபெத்திய வழிபாட்டு முறையை பின்பற்றும்) பௌத்தர்களாக காணப்படுகின்றனர். தற்போதைய குடியரசு (மாநிலத்) தலைவரும், கோடீஸ்வரருமான இலியும்சிநோவ் காலத்தில் பௌத்த மத மீளுயிர்ப்பு அதன் உச்சத்தை தொட்டது. தொன்னூறுகளில் தலைநகர் எலிஸ்தாவில் கட்டப்பட்ட பௌத்த கோயில் ஐரோப்பாவிலேயே மிகப்பெரியது.

கல்மிகிய மக்கள் 20 ம் நூற்றாண்டு வரையில், தமது நிலப்பிரபுக்களுக்கும், மதகுருக்களுக்கும் விசுவாசமாக இருந்து வந்துள்ளனர். வேறுவிதமாக சொன்னால் பழமைவாதத்தில் ஊறியவர்கள். சார் சக்கரவர்த்தியின் சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காலத்தில், ரஷ்யாவிற்குள் அவர்களது தேசம் வந்து விட்டிருந்தது. பின்னர் ஏற்பட்ட போல்ஷெவிக் (கம்யூனிச) புரட்சிக் காலத்தில், எதிர்ப்புரட்சி வெள்ளை இராணுவத்தில் சேர்ந்து போரிட்டனர். இருப்பினும் போல்ஷெவிக் செம்படை உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்றதால், கல்மிகியா சோவியத் யூனியனின் தனாட்சி அதிகாரம் கொண்ட மாநிலமானது. பின்னர் இது குடியரசு ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்டது.

இரண்டாம் உலக யுத்தத்தில் நாசிப்படைகள் (கல்மிகியா உட்பட) காகேசிய பிரதேசம் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தன. எதிர்ப்புரட்சி பாரம்பரியம் கொண்ட(அல்லது பழமைவாதத்தில் ஊறிய) கல்மிகிய மக்களில் ஒரு பகுதியினர் நாசிப்படைகளை தமது நட்பு சக்தியாக பார்த்து, அவர்களுடன் சேர்ந்து போரிட்டனர். அந்தப் பகுதியில் நாசிச ஆக்கிரமிப்புக்கு எதிராக இயங்கிய கெரில்லாக் குழுக்களை சேர்ந்த போராளிகள் பிடிபடவும், கொல்லப்படவும் கல்மிகிய துணைப்படையின் திறமையே காரணம். இருப்பினும் பல கல்மிகிய வீரர்கள் செம்படையிலும் சேர்ந்திருந்தனர். சில வருடங்களின் பின்னர் நாசிப்படைகளை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டு முன்னேறிய செம்படை, கல்மிகியாவை மீண்டும் சோவியத் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அதைத்தொடர்ந்து நாசிகளுக்கு உதவி செய்த காரணத்திற்காக பல கல்மிகிய குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு ஆயிரம் மைல்களுக்கப்பால் சைபீரியாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர் தான் இவர்கள் நாடு திரும்ப முடிந்தது. உலகப்போர் காலத்தில் இரத்து செய்யப்பட்டு, மீண்டும் வழங்கப்பட்ட கல்மிகிய சமஷ்டி மாநிலம் தற்போது கணிசமான ரஷ்யர்களை கொண்டிருந்தது. இன்றைய கணக்கெடுப்பின் படி அம்மாநிலத்தில் 53% மட்டுமே கல்மிகிய மொழி பேசும் மக்கள்.

சோவியத் காலத்திற்குப் பின்னரும் "கல்மிகிய குடியரசு" தன்னாட்சி அதிகாரத்துடன் நிலைத்து நிற்கின்றது. "குடியரசுத் தலைவர்" மொஸ்கோ ஆட்சியாளர்களால் நிர்ணயிக்கப்படுவார். குடியரசின் பாராளுமன்றம்(அல்லது மாநில சட்டசபை) அந்தப் பிரதிநிதியை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்று வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிப்பர். தற்போதைய தலைவர் கிர்சன் இல்யூம்சிநோவ் ஒரு செஸ் விளையாடுப் பிரியர். குடியரசுத் தலைநகர் எலிஸ்தாவில் பல சர்வதேச செஸ் போட்டிகள் நடைபெற்றுள்ளன. உலக செஸ் சம்மேளனத்(FIDE) தலைவராக இருக்கும் அவர் குடியரசின் வருமானத்தில் பெரும்பகுதியை செஸ் விளையாட்டுகளுக்கான திட்டங்களில் முதலீடு செய்வதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இதைப்பற்றி ஆராய்ந்த பத்திரிகையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

கல்மிகியா பெட்ரோல், எரிவாயு போன்ற இயற்கை வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளதால், தற்போது ரஷ்ய மத்திய அரசின் கவனமும், அதைத் தொடர்ந்து உலகின் கவனமும் அந்த "ஐரோப்பாவின் ஒரேயொரு பௌத்த நாட்டின்" பக்கம் திரும்பியுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு :Documentary:The Remarkable Republic of Kalmykia - Russia
REPUBLIC OF KALMYKIYA