திங்கள், 22 ஜூலை, 2013

குர்திஸ்தான், துருக்கியின் துயரம்


துருக்கியின் மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த நகரமான இஸ்தான்புல், பொஸ்போருஸ் கடலால் இரண்டாக பிரிக்கப் படுகின்றது. மேற்கு பகுதி, ஐரோப்பிய நிலமாகவும், கிழக்கு பகுதி ஆசிய நிலமாகவும், புவியியல் ரீதியாக அல்ல, அரசியல் ரீதியாக கருதப்படுகின்றது. இரண்டு பகுதிகளையும் இணைக்கும் பிரமாண்டமான பாலம், மனிதனால் கட்டப்பட்ட அதிசயங்களில் ஒன்று. இது இன்னொரு பக்கம், துருக்கியின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது எனலாம். மேலைத்தேய கலாச்சாரமும், கிழகத்தயகலாச்சாரமும், லிபரல் சித்தாந்தமும், இஸ்லாமிய மதமும், என்று நாடு முழுக்க இரு வேறு பட்ட உலகங்களை காணலாம். அரசாங்கம் என்னதான் துருக்கியை ஒரே மொழி பேசும், ஓரின மக்கள் வாழும் நாடாக காட்ட விரும்பினாலும், சிறுபான்மை மொழி பேசும் இனங்கள் அடக்கப்பட்ட நீண்ட வரலாறு அதற்குண்டு. அதன் எதிர்வினையாக, இரண்டாவது சிறுபான்மை இனமான குர்து மொழி பேசும் மக்களின் தாயகத்திற்கான ஆயுதப் போராட்டம் இன்று சர்வதேச பிரச்சினையாக மாறி பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. அந்த மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்குவதற்காக ஏவி விடப்பட்ட துருக்கி இராணுவம் பல மனித உரிமை மீறல்களை புரிந்து, பலரை காணாமல் போக வைத்து இருந்த காலகட்டத்தில், "காணாமல் போவதற்குசர்வதேச கமிட்டி" என்ற மனித உரிமைகள் நிறுவனம் ஒழுங்கு படுத்திய மகாநாட்டில் கலந்து கொண்ட போது, நான் பார்த்த விடயங்களை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
முதலாம் உலக யுத்தத்தில் தோல்வியை தழுவிய, அன்றைய ஒட்டோமான் சாம்ராஜ்யத்தை ஆண்ட சக்கரவர்த்தி பதவியில் இருந்து நீக்கபட்டு , அரசியல் உள்நோக்கம் கொண்ட கமல் அட்டடுர்க் (Mustafa Kemal Atatürk) என்ற இராணுவ அதிகாரி துருக்கியின் ஆட்சியை கைப்பற்றிய பிறகு அது நவீனமடைய தொடங்கியது. மேற்கு ஐரோப்பிய பாணியில் கல்வி, ஒரு கலாச்சார புரட்சியை உருவாக்கியது. பழமைவாதத்தை ஆதரித்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மதச்சார்பற்ற கொள்கை வலியுறுத்தப் பட்டது.இவ்வாறு அட்டடுர்க் அரசாங்கம் ஒருபக்கம் முற்போக்கானதாக இருந்தாலும், மறு பக்கம் பாசிச மயமாகி, சிறுபான்மை இனங்களை அடக்கி, துருக்கி மொழியை பலவந்தமாக திணித்தது. ஆர்மேனிய மொழி பேசும் மக்கள் இந்த பேரினவாதத்திற்கு அதிக விலை கொடுத்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர்.வீடுகளை இழந்து அகதிகளாக வெளியேறினார்கள்.
அந்த இனப்படுகொலைக்கு பிறகு எஞ்சியிருந்தோறும், பிற இனத்தவர்களும், துருக்கி மொழி மட்டுமே பேச வேண்டுமென கட்டாய படுத்தப் பட்டனர். அவ்வாறே தென் கிழக்கு மலைப் பிரதேசங்களில் வாழும் குர்து மொழி பேசும் மக்களின் இன அடையாளமும் புறக்கணிக்கப்பட்டு, அவர்கள் "மலைநாட்டு துருக்கியர்" என்று அழைக்கப்பட்டனர். இஸ்லாம் என்ற மதம் மட்டுமே இவ்விரு இன மக்களுக்கும் பொதுவானது. மத்திய ஆசியாவில் இருந்து வந்து குடியேறிய துருக்கி மொழி பேசுவோரும், இந்தோ-ஈரானிய மொழி பேசும் பூர்வ குடிகளான குர்த்தியரும், கலாச்சார ரீதியாக வேறுபட்டவர்கள். இத்தகைய கலாச்சார பாரம்பரியம் கொண்ட மக்கள்,தமக்கென பாடசாலை இன்றி துருக்கி மொழியில் கல்வி கற்க வேண்டிய நிலை. எந்த பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு குர்து மொழிப் பெயர் இட்டால் சிறை செல்ல வேண்டும். குர்து மொழியை வீதியில் பேசுவது கூட தடை செய்ய பட்டது. அந்த இன மக்களுக்கே உரிய "நெவ்ரோஸ்" எனப்படும் புத்தாண்டு கொண்டாடுவது கூட அண்மைக்காலமாக தடை செய்யப் பட்டிருந்தது.
துருக்கி-குர்து கலப்பின பெற்றோருக்கு பிறந்த அப்துல்லா ஒச்சலான், குர்திய தொழிலாளர் கட்சி (PKK) என்ற ஆயுதபோராட்ட வழியில் நம்பிக்கை கொண்ட அமைப்பை நிறுவிய பிறகு, அந்த பிராந்தியத்தில் வன்முறை கலாச்சாரம் பரவியது. துருக்கியின் போலிஸ், இராணுவத்தை குறிவைத்து கெரில்லாக்கள் தாக்கத் தொடங்க, பதிலடியாக இராணுவம் அப்பாவி பொதுமக்களை கொன்று, அவர்களின் குடியிருப்புக்களை அழித்து, பெண்களை பாலியல் துன்புருதலுக்குள்ளாக்கி, சொத்துகளை நாசமாக்கி, அடக்குமுறையை ஏவி விட்டது. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராளிகளாக மாற, தனது போராட்டம் முன்னேறி, அது ஒரு மக்கள் புரட்சியாக மாறும் என்று ஒச்சலான் கணக்கு போட, கள நிலவரம் எதிர்பாராத அளவு மோசமடைந்தது.



துருக்கி இராணுவம் பெருமளவு குர்து மக்களை, அவர்களது கிராமங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றி, ஆயிரம் மைல்களுக்கு அப்பால், துருக்கியின் மேற்கு பகுதியில் குடி அமர்த்தியது. இவ்வாறு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்கள், மீண்டும் தமது தாயகப் பூமிக்கு திரும்ப முடியாமல் வாழ்கின்றனர். நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருந்ததால், அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து இராணுவ ஆலோசனைகள், ஆயுத தளபாடங்கள் ஆகியனவற்றை பெற்றுக் கொண்டது.இதனால் பி.கே.கே.யின் தாக்குதிறன் கணிசமாக குறைக்கப்பட்டு, போராளிகள் மலைகளில் மட்டும் முடங்கி கொள்ள நேர்ந்தது. அண்டை நாடான சிரியாவை, பி.கே.கே. நீண்ட காலமாக தனது பின்தளமாக பயன்படுத்தியது. இயக்கத்தின் தலைவர் ஒச்சலான்அங்கே தங்கியிருந்தது மட்டுமல்ல, பல பயிற்சி முகாம்களும் இருந்தன. பின்னர் துருக்கி அரசாங்கம் சிரியா மீதும் படையெடுப்போம் என்று மிரட்டியதால், அங்கிருந்து வெளியேறிய ஒச்சலனை கென்யாவில் வைத்து, துருக்கிய கொமாண்டோக்கள் சிறை பிடித்து கூட்டி வந்தனர். இந்த பின்னடைவு,பி.கே.கே. இயக்கத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்கி, இரண்டாக உடைந்து பலவீனப்பட்டது. தற்போது பி.கே.கே.யின் முக்கிய முகாம்கள் துருக்கி எல்லையோரமாக இருக்கும் ஈராக்கின் மலைப் பகுதிகளில் உள்ளன. துருக்கி இராணுவம் அவ்வப்போது இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு ஈராக்கினுள் நுழைந்து திரும்பி வரும். இது தான் இன்றுள்ள நிலைமை.


2006 ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இஸ்தான்புல் நகர மத்தியில் இருந்த "கலதசரை"(Galatasaray)விளையாட்டு மைதானத்திற்கு அருகில் குழுமிய, காணமல் போன இளைஞர்களின் அன்னையருடன், பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த சர்வதேசபிரதிநிதிகளும் இணைந்து கொண்ட ஊர்வலம், தானுண்டு தன் வீடுண்டு என்று வாழும் நகர மக்களையும் மட்டுமல்ல, பெருமளவு பொலிசரையும் கவர்ந்தது. தொடர்ந்து ஒரு உணவு விடுதியின் மண்டபத்தில் நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டிற்கு , அனைத்துபத்திரிகைகளுக்கும் அழைப்பு விடுக்க பட்டிருந்தாலும், வந்ததென்னவோ ஒரு சில இடதுசாரி சார்பு பத்திரிகையாளர்கள் தான். இந்தப் போக்கு பின்னர் குர்திஸ்தான் நகரமான டியார்பகிரில் (Diyarbakir) நடந்த மகாநாட்டிலும் காணப்பட்டது. பாதுகாப்பு படைகளால் பிடித்து செல்லப் பட்டு காணாமல் போனவர்கள், ஒன்றில் சிறுபான்மை குர்த்தியராக இருப்பார்கள், அல்லது இடதுசாரி கட்சி உறுப்பினராக இருப்பார்கள். இந்த காரணத்தால் துருக்கி அரசாங்கத்தை ஆதரிக்கும் பெரும்பான்மை பத்திரிகையாளர்கள் புறக்கணித்தனர்.

துருக்கியின் தென் கிழக்கு மூலையில் இருக்கும் டியார்பகிர் நகரத்திற்கு சர்வதேச பிரதிநிதிகளுடன் வந்திறங்கிய போது வித்தியாசங்கள் தெரிய ஆரம்பித்தன. குர்திய தேசியவாத கட்சி ஆளும் நகரசபை, மகாநாட்டிற்கு என மண்டபத்தை ஒதுக்கி தந்தது. அயல் கிராமங்களில் இருந்தும் சாதாரண குர்து மக்கள் மகாநாட்டிற்கு கலந்து கொள்ள வந்திருந்தனர். நான்கு நாட்கள் நடந்த மகாநாட்டில் தமது கண்ணீர் கதைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். வீட்டிற்கு வந்து தமது பிள்ளைகளை கூட்டி சென்ற இராணுவத்தினர், சில நாட்களின் பின்னரும் விடுதலை செயாதலால், தேடிப்போகும் பெற்றோருக்கு தமக்கு தெரியாது என கை விரித்த சம்பவங்கள். அப்படி "காணாமல் போனவர்கள்" சில மாதங்களின் பின்னர் ஆள் அரவமற்ற பகுதிகளிலோ, அல்லது புதை குழிகளிலோ உயிரற்ற சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட சம்பவங்கள், போன்றவற்றை, மனதை உருக்கும் விதத்தில் கூறிய போது, மகாநாட்டு மண்டபத்தில் பலர் அழுததை காணக் கூடியதாகவிருந்தது. காணமல் போனோர் சங்கத்தை உருவாக்கியவர் ஒரு துருக்கி தாய். அவர் பேச எழுந்த போது, பல இளைஞர்கள் ஒன்று சேர்ந்து விண்ணதிர முழக்கமிட்டனர். இதனை அங்கிருந்த சிவில் உடையில் இருந்த போலிஸ் அதிகாரிகள் எரிச்சலுடன் கவனித்தனர். அந்த பெண்மணியின் மகன் 'ஹசன்', ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர். நன்றாக படித்து நல்ல வேலைக்கு போகக் கூடிய மத்திய தர வர்க்க குடும்பத்தை சேர்ந்தவர். ஆனால் பட்டம், பதவியை உதறி தள்ளி விட்டு, டியர்பகிர் நகரத்திற்கு வெளியே இருந்த, குர்திய சேரி மக்களுக்கு சேவை செய்து வந்தார். இவ்வாறு அடித்தட்டு மக்கள் மத்தியில் வேலை செய்வது கூட, துருக்கி அரசாங்கத்தின் பார்வையில் குற்றமாக தெரிந்தது. திடீரென ஒரு நாள் காணமல் போன அந்த வாலிபனின் உடல் பின்னர் ஒரு மயானத்தில் கண்டெடுக்கப் பட்டது. இந்த சம்பவத்தால் ஹசனின் குடும்பம் துவண்டு விடவில்லை. வயதான தாயும், ஒரேயொரு சகோதரியும் காணாமல் போவதற்கு எதிரான சங்கத்தை ஆரம்பித்து நீதிக்காக போராடுகின்றனர். இன்று அந்த சங்கத்தின் கிளைகள் ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல, பிலிப்பைன்ஸ்போன்ற ஆசிய நாடுகளிலும், கொலம்பியா தென் அமெரிக்கா நாடுகளிளுமாக, சர்வதேச நிறுவனமாக மாறியுள்ளது.

மாநாட்டிற்கு வந்திருந்த சிவில் போலிஸ் தலையிட்டு குழப்பிய சம்பவம் ஒன்றும் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஒரு வயதான குர்திய பெண்ணும், ஒரு துருக்கி இளம் பெண்ணும் "வாழ்க குர்திஸ்தான்" என்று கோஷம் எழுப்பிய காரணத்திற்காக, போலிஸ் அலுவலகம் கூட்டிசென்று விசாரிக்கப் பட்டனர். துருக்கியில் இப்போதும் குர்து மக்களின் தாயகத்தை குறிக்கும் "குர்திஸ்தான்" என்ற சொல்லை பயன்படுத்த தடை உள்ளது. மேலும் போலிஸ் உளவாளி ஒருவர், மண்டபத்தின் பின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, மகாநாட்டில் நடப்பனவற்றை வீடியோ வில் பதிவு செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாநாடு கூட்டங்கள் ஓய்ந்த நேரம், இருபது வயதே மதிக்கத்தக்க இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, புரட்சி பாடல்களை பாடி ஆடினர். இறுதி நாளன்று பலஸ்தீன இசைக் குழுவொன்றின் இன்னிசை கச்சேரி களை கட்டியது . தொடர்ந்து கலந்து கொண்ட சர்வதேச பிரதிநிதிகளுக்கு குர்திய சால்வை வழங்கி கௌரவித்து, "சர்வதேச கீதம்" பாடி மாநாடு இனிதே முடிந்தது. அடுத்த நாள் டியர்பகிர் நகரில் இருந்து சில நூறு கி.மி. தூரத்தில் இருக்கும் "ஹசன்கேய்ப்" (Hasenkeyf) என்ற பண்டைய நாகரீகத்தின் சிதிலங்களை பார்வையிட சென்றோம். வழி நெடுக பச்சை புல்வெளிகள், மலைகள், பள்ளத்தாக்குகள் என்று அழகிய இயற்கை காட்சி. இடையிடையே இது ஒரு யுத்த பூமி என்பதை நினைப்பூட்டும் துருக்கி இராணுவ வாகன தொடரணிகள். குர்து மக்களின் கலாச்சார சொத்து என வர்ணிக்கப்படும் பண்டைய நாகரீகம், மலையுச்சியில் சிறு சிறு குகைகள் போன்று தோற்றம் தரும்
இடிந்த வீடுகளை கொண்டுள்ளது. சிறுவர்களின் கற்பனை கதைகளில் வாசித்ததை நேரே பார்ப்பது போலிருந்தது. ஆயிரம் வருடங்களை கடந்தும் அழியாது நிலத்து நிற்கும் அந்த பண்டைய நாகரீக சின்னங்களை இனிமேல் பார்க்க முடியுமா என்பது கேள்விகுறி. ஏனெனில் அந்த இடத்தில் ஒரு பிரமாண்டமான அணைக்கட்டை கட்டி, அனைத்தையும் தண்ணீருக்குள் மூழ்கடிக்க துருக்கி அரசு திட்டம் போட்டுள்ளது.

குர்திய மக்களுக்கு மலைகள் மட்டுமே சொந்தம் என்று ஒரு மேலைத்தேச எழுத்தாளர் நூல் வெளியிட்டார். அவர்களில் பெரும்பான்மையானோர் ஏதுமற்ற ஏழைகள். அதனாலேயே போரினால் இரட்டிப்பு பாதிப்புக்குள்ளாகும் போது, ஆயுதமேந்தும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். பி.கே.கே. கொண்டு வந்த குர்து தேசியவாதம், பல பிரதேச வேறுபாடுகளை கொண்ட குர்து மக்களை ஓரணியில் சேர்த்து. ஐரோப்பிய நகரங்களில் பெற்றோருடன் வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த சில வாலிபர்கள், இளம் பெண்கள் கூட, தமது சொகுசான வாழ்க்கையை உதறித்தள்ளி விட்டு, விடுதலை வேட்கையுடன் ஆயுதம் தரித்த போராளிகளாக, பனி படர்ந்த மலைகளில் துருக்கி இராணுவத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அழிவுகள், துயரங்கள், எல்லாமே இப்போதும் தொடர்கதையாக இருப்பினும் யுத்தம் ஒரு இனத்தின் இருப்பை நிச்சயப் படுத்தியிருக்கிறது.

குர்து - மலையோரம் வீசும் இரத்த வாடை...!





துருக்கி, இஸ்தான்புல் நகரம். குர்து சிறுபான்மையின மக்கள் வாழும் புறநகர் பகுதி அன்று வழக்கத்திற்கு மாறாக பதற்றம் காணப்படுகின்றது. முக்கியமான சந்தியில் வேள்வித்தீ போல பெரு நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. நெருப்புக்கு அந்தப்பக்கம் விண்வெளிக்கு செல்பவர்களைப் போல கவச உடையணிந்த பொலிஸ்காரர்கள், தடுப்புச் சுவர் போல வீதியை மறித்துக் கொண்டு நிற்கின்றனர். நெருப்பிற்கு இந்தப் பக்கம், பதின்ம வயதிலான சாதாரண இளைஞர்கள். பொலிசாரை நோக்கி கற்களை வீசியெறிந்து விட்டு ஓடுகிறார்கள். பதிலுக்கு பொலிஸ் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசுகின்றது. சாதாரண கடைத் தெரு அன்று யுத்தகளம் போல காணப்படுகின்றது. வியாபாரிகள் கடைகளை இழுத்து மூடிவிட்டு உள்ளுக்குள்ளே பதுங்கிக் கொள்கின்றனர். பொது மக்கள் பாதுகாப்புத் தேடி நாலாபுறமும் ஓடுகின்றனர்.

அங்கே என்ன நடக்கிறது? ஏதாவது அரசியல் ஆர்ப்பாட்டமா? இல்லை. அது ஒரு புதுவருடக் கொண்டாட்டம்! உலகிலேயே துருக்கியில் மட்டும் தான், புதுவருடப் பிறப்பு கலவரத்தை தூண்டும் அரசியல் தினமாக "கொண்டாடப்படுகின்றது". அந்த நாட்டில் மட்டும்தான், சிறுபான்மை குர்து இன மக்களின் "நெவ்ரோஸ்" என்ற தனித்துவமான புத்தாண்டு தினம் தடைசெய்யப்பட்டுள்ளது. மார்ச் 21 ம் திகதியளவில், குர்தியரைப் போல ஒருமித்த புராதன கலாச்சாரத்தை கொண்ட ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நெவ்ரோஸ் கொண்டாடப்படுகின்றது. (வட இந்தியாவில் அதையே "ஹோலி பண்டிகை" என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.) இருப்பினும் துருக்கி பேரினவாதமானது, சிறுபான்மை இனங்களின் எந்தவொரு கலாச்சார அடையாளத்தையும் சகித்துக் கொள்வதில்லை.

துருக்கி நாட்டில், துருக்கி மொழி பேசும் பெரும்பான்மை இனத்தை தவிர, ஆர்மேனியர்கள், குர்தியர், அரேபியர் ஆகிய சிறுபான்மை இனங்கள் (குறிப்பாக கிழக்கு பிரதேசங்களில்) காலங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். முதலாம் உலகப்போரின் முடிவில், பெருமளவு ஆர்மேனியர்கள் திட்டமிட்ட இனப்படுகொலை மூலம் விரட்டியடிக்கப்பட்டனர். தற்போது துருக்கியில் வாழும், எஞ்சிய சில லட்சம் ஆர்மேனியர்கள் கடந்தகால இனப்படுகொலை பற்றி பேசுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் உயிர்வாழ்தலின் அவசியத்திற்காக, பெரும்பான்மை சமூகத்துக்குள் அடங்கி வாழ வேண்டிய நிர்ப்பந்தம். அரேபிய சிறுபான்மையினர் வாழும் பிரதேசம், முன்பு சிரியாவின் ஒரு பகுதியாக இருந்தது. பிரெஞ்சு காலனிய அரசால் துருக்கிக்கு தாரை வார்க்கப்பட்டது.

குர்து மக்களின் வாழ்விடம் ஒரு மலைப்பிரதேசமாகும். பொருளாதார ஆதாயமற்ற மலைகள் மீது, எந்தவொரு ஆட்சியாளருக்கும் அதிக அக்கறை இருக்கவில்லை. இதனால் ஓட்டோமான் இஸ்லாமிய அரசு காலத்திலும், குர்து நிலப்பிரபுக்களினால் ஓரளவு சுயாதீனமாக நிர்வகிக்கப்பட்டு வந்தது. முதலாம் உலகப்போர் முடிவில், ஈராக்கை கைப்பற்றிய பிரிட்டிஷார், குர்து இன மக்களின் பிரதேசம் வரை தமது காலனிய ஆட்சிக்கு உட்படுத்தினர். மத்திய கிழக்கில் தேசிய அரசுகளை உருவாக்குவதில் ஈடுபட்ட பிரிட்டிஷ் காலனியவாதிகள், குர்து இனத்தவருக்கு தனியான தேசத்தை தருவதாக உறுதிமொழி கொடுத்தனர். இருப்பினும் கண்ணியமற்ற பிரிட்டிஷ் அதிகாரிகள், உறுதிமொழிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டனர். குர்து மக்களின் தாயகத்தை ஈராக்கிற்கும், துருக்கிக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டு, லண்டன் சென்று ஓய்வெடுத்தனர்.

கமால் அட்டாதுர்க் தலைமையிலான துருக்கி அரசாங்கம், துருக்கி முழுவதும் பாசிச ஆளுமைக்கு உட்படுத்தியது. சிறுபான்மை இனங்கள் கடுமையாக அடக்கப்பட்டன. உத்தியோகபூர்வ மொழியான துருக்கி மொழி மட்டுமே பாடசாலைகளில் போதிக்கப்பட்டது. குர்து மொழியை வீட்டில், வீதியில் பேசுவது கூட தடை செய்யப்பட்டது. குர்தியருக்கே தனித்துவமான பெயர்களை பிள்ளைகளுக்கு சூட்டமுடியாது. குர்து மொழிக்கே உரிய பிரத்தியேக உச்சரிப்புகளைக் கொண்ட பெயர்களை யாரும் வைத்திருக்க முடியாது. அவை துருக்கிமயப்படுத்த வேண்டும். இந்த அடக்குமுறையின் விளைவாக, தற்போது மறுமலர்ச்சி கண்டுள்ள குர்து மொழி, துருக்கி உச்சரிப்புக்கேற்ப எழுதப்படுகின்றது.

தமிழகத்திலோ, அல்லது இலங்கையிலோ நடந்ததைப் போல, குர்து மொழி உரிமைப் போராட்டம் அப்போது வெடிக்காததற்கு காரணங்கள் உள்ளன. குர்தியர்களில் ஒரு நடுத்தர வர்க்கம் உருவாக நீண்டகாலம் எடுத்தது. பெரும்பாலான குர்து இன மக்கள் உழைக்கும் வர்க்கமாக, ஊரில் உள்ள நிலப்பிரபுவிற்கு கட்டுப்பட்ட பண்ணையடிமைகளாக இருந்தனர். தற்போதும் அந்த நிலைமையில் சிறிதளவே மாற்றம் ஏற்பட்டுள்ளது. குர்து நிலப்பிரபுத்துவ சக்திகள், இன்றுவரை தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளிக்க மறுத்து வருகின்றன. நிலப்பிரபுக்கள் தமது வர்க்க குணாம்சம் காரணமாக, இஸ்லாமிய (பெரும்பான்மை குர்தியர்கள் இஸ்லாமியர்கள்) அடிப்படைவாத அரசியலுக்கு ஆதரவளிப்பவர்கள். துருக்கி அரசு இந்த முரண்பாட்டை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றது.

எழுபதுகளின் இறுதியில், துருக்கியின் தலைநகர் அங்காராவில், சில படித்த குர்து இளைஞர்கள் இரகசியமாக ஒன்றுகூடினார்கள். வசீகரத் தோற்றம் கொண்ட "அப்துல்லா ஒச்சலான்" என்ற இளைஞர் அந்தக் குழுவிற்கு தலைமை தாங்கினார். குர்து மக்களின் எல்லாவித ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில், ஆயுதப்போராட்டமே ஒரே தீர்வு என முடிவு செய்தனர். பனிப்போர் நிலவிய காலத்தில், மத்திய கிழக்கின் கம்யூனிஸ்ட் சக்திகளுடனான தந்திரோபாயக் கூட்டு, தமது தேசிய விடுதலையை பெற்றுத் தரும் என நம்பினர். தமது இரகசிய தலைமறைவு இயக்கத்திற்கு "குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி" (Partiya Karkerên Kurdistan) சுருக்கமாக "பி.கே.கே" என்ற பெயரிட்டனர். குர்த்தியரின் பிராந்திய தலைநகரான டியார்பாகிரில் 1978 ம் ஆண்டளவில், இயக்கம் ஸ்தாபிக்கப் பட்டது. மத்திய குழு ஒன்றைக் கூட்டி, மார்க்சிச லெனினிச சிந்தாந்தப்படி கட்சியைக் கட்டுவது என முடிவெடுத்தனர். பி.கே.கே. எடுத்த எடுப்பில் கம்யூனிசம் பேசியதற்கு, சமூக ஆதிக்க சக்திகளான நிலப்பிரபுக்களை எதிர்த்துப் போராட வேண்டி இருந்தும் ஒரு காரணம்.

1984 ம் ஆண்டளவில், சர்வதேச சூழ்நிலையும் குர்து ஆயுதப்போராட்டத்திற்கு சாதகமாகவே அமைந்திருந்தது. பனிப்போர், சோவியத் யூனியன் எல்லாம் நிலைத்திருந்த காலம் அது. துருக்கியின் அயல்நாடான சிரியா, மத்திய கிழக்கில் சோவியத் யூனியனின் மனங்கவர்ந்த நண்பனாக இருந்த காலமது. இன்று "பயங்கரவாதிகள் பட்டியலில்" உள்ள அரைவாசி இயக்கங்களுடன், சிரிய அரசுக்கு அன்று தொடர்பு இருந்தது. தேசிய விடுதலை இயக்கங்களை ஆதரிப்பது, ஏகாதிபத்திய எதிர்ப்பு போரின் தந்திரோபாயம், என்ற கொள்கையை பின்பற்றிய சோவியத் யூனியன், சிரியா ஊடாக இயக்கங்களுக்கு ஆயுத விநியோகம் இடம்பெற்றது. ஒரு வல்லரசின் பக்க பலம் காரணமாக இஸ்ரேல் உட்பட எந்த ஒரு நாடும், சிரியா மீது இராணுவ நடவடிக்கை எடுக்க அஞ்சியது.

அத்தகைய சர்வதேச பின்புலத்தை பி.கே.கே. கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டது. சிரியாவின் ஒத்துழைப்புடன் துருக்கி எல்லையோரமாக போராளிகளின் பயிற்சி முகாம்களை நிறுவியது. ஒச்சலான் போன்ற தலைவர்கள், தலைநகர் டமாஸ்கஸ்ஸில் தங்கி, பாலஸ்தீன விடுதலை அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். அதன் மூலம் இராணுவ பயிற்சிகள், ஆயுதங்கள் என்பனவற்றை பெறக்கூடியதாகவிருந்தது. (பிற்காலத்தில், பி.கே.கே. புலம்பெயர்ந்த குர்து மக்களின் உதவியுடன் நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, தனக்கென ஆயுதக் கடத்தலுக்கான வலைப்பின்னல் ஒன்றையும் உருவாக்கிக் கொண்டது.) சிரியாவை பின்தளமாக பயன்படுத்திய பி.கே.கே., தனது போராளிகளை துருக்கியினுள் அனுப்பி கெரில்லா நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியது.

ஆரம்பத்தில் துருக்கிப்படைகள் கெரில்லாக்களின் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் நிலைகுலைந்தது. மலைப்பிரதேசம், மறைந்து கொள்வதற்கேற்ற குகைகள், கரடுமுரடான தரையமைப்பு, போன்றன கெரில்லாப் போருக்கு அனுகூலமாக இருந்தது. ஒரு கட்டத்தில், முன்னேறிக் கொண்டிருந்த பி.கே.கே. கெரில்லாப் படையணிகள், சில மலைப்பிரதேச கிராமங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். கெரில்லாப் போராட்டம் உத்வேகத்துடன் முன்னெடுக்கப் படுகையில், குர்து மக்கள் துருக்கி அடக்குமுறையாளருக்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள். அதன் பிறகு சுதந்திர குர்திஸ்தான் மலரும் என்று கணக்குப் போட்டனர். ஆனால் அது ஒரு தப்புக்கணக்கு என்று விரைவில் தெரியவந்தது.

துருக்கி அரச படைகள், குர்து நிலப்பிரபுக்களின் உதவியுடன் ஊர்காவல் படைகளை அமைத்தனர். ஊர்காவல் படையில் குர்து சமூகத்தில் இருந்து பலவந்தமாக சேர்க்கப்பட்ட இளைஞர்களும் இருந்தனர். பி.கே.கே. அரசபடைகள் மட்டுமல்லாது, ஊர்காவல்படையும் தனது எதிரி எனப் பிரகடனப்படுத்தியதுடன், குறி வைத்து தாக்கியும் வந்தது. இதனால் கொல்லப்பட்ட ஊர்காவல்படைவீரரின் குடும்பத்தினரையும் பி.கே.கே. பகைத்துக்கொண்டது. குர்து இனத்தில் ஒரு பிரிவினரை போராளிகளுக்கு எதிராக திசை திருப்பி விடும் தந்திரத்தில் துருக்கிய அரசு ஓரளவு வெற்றி பெற்றது. மேலும் துருக்கியில் கட்டாய இராணுவ சேவை அமுலில் உள்ளது. தேசியக் கடமையான இராணுவப் பயிற்சிக்கு செல்லும் 18 வயதிற்கு மேற்பட்ட குர்து இளைஞர்கள், பின்னர் போர் நடக்கும் இடங்களில் கொண்டு போய் விடப்பட்டனர். சில நேரம் சொந்த சகோதரர்களில் ஒருவர் துருக்கி இராணுவவீரனாகவும், மற்றொருவர் பி.கே.கே. போராளியாகவும், எதிரெதிரே நின்று சண்டையிடும் காட்சியை ஒரு கணம் கண் முன்னே கொண்டு வாருங்கள். அப்படிப்பட்ட அவலம் குர்து மக்களின் தவிர்க்கவியலாத தலைவிதி. இரக்கமற்ற போரில் அதிகமாக பலியானது, குர்து இனத்தவர்கள் தாம். "மலைகளுக்கு மட்டுமே தெரியும் எங்கள் கவலை" என்று குர்து மக்கள் மனங்குமுறுவது வெளியுலகிற்கு கேட்கப் போவதில்லை.

துருக்கி அரச படைகளின் பேரினவாத வெறி, குர்து மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு வழி திறந்து விட்டது. ஆயிரக்கணக்கான குர்து வாலிபர்கள் சந்தேகத்தின் பேரில் பிடித்துச் செல்லப்பட்டு காணாமல்போனார்கள். காணாமல் போன மகனை தேடும் பெற்றோர் இராணுவ முகாம் அதிகாரியை தொடர்பு கொள்வார்கள். அப்போது அந்த அதிகாரி: "உங்கள் மகன் எம்மிடம் இல்லை. ஒரு வேளை உங்கள் மகன் பி.கே.கே. யுடன் சேர்ந்திருப்பான்." என்று கூசாமல் பொய் சொல்வார். இதற்கிடையே கைது செய்யப்பட்ட இளைஞன், சித்திரவதை செய்யப்பட்டு, எங்காவது ஒரு புதைகுழியில் கொன்று புதைக்கப்பட்டிருப்பான். குர்திஸ்தான் முழுவதும் இது போன்று ஏராளமான புதைகுழிகளுக்குள் ஆயிரக்கணக்கான காணாமல்போன இளைஞர்களின் சடலங்கள் கிடக்கின்றன. துருக்கி பேரினவாதத்தின் இரத்த சாட்சியங்களான அவற்றை தோண்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க, இதுவரை எந்தவொரு சர்வதேச சமூகமும் முன்வரவில்லை.

துருக்கியின் இடதுசாரி மனித உரிமைகள் நிறுவனம் ஒன்று டியார்பாகிர் நகரில் காணாமல் போனவர்களின் வேதனைகளைப் பகிர்ந்து ஆவணப்படுத்தும் மகாநாடு ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது. அந்த மகாநாட்டிற்கு சென்ற சர்வதேச பிரதிநிதிகளில் நானும் ஒருவன். இஸ்தான்புல்லில் இருந்து நாம் சென்ற பேரூந்து வண்டி, குர்திஸ்தான் எல்லையை அடைந்தவுடன், நாம் ஒரு யுத்த பிரதேசத்திற்குள் பிரவேசிக்கிறோம் என புரிந்து கொண்டோம். வீதித்தடை காவலரணில் கடமையில் இருந்த துருக்கிய படையினர் வண்டியை சோதனையிட்டனர். பயணிகளின் அடையாள அட்டையை வாங்கிப் பார்த்து விட்டு தான் மேற்கொண்டு செல்ல அனுமதித்தனர். டியார்பாகிர் நகரை அடையும் வரையில் இது போன்ற வீதித் தடை சோதனைகள் தொடர்ந்தன. நாம் செல்லும் வழியெங்கும் இராணுவ வீரர்களின் பிரசன்னம் இருந்தது. தாங்கிகள், கவச வாகனங்களைக் கொண்ட படையணிகள் ஊர்ந்து கொண்டிருந்தன. தப்பித்தவறி இராணுவ தொடரணியை படமெடுக்க வேண்டாம் என்று, எம்மோடு வண்டியில் இருந்த துருக்கி நண்பர்கள் எச்சரித்தனர்.

துருக்கியின் பிற பகுதிகளில் இருந்து, குர்திஸ்தான் முற்றிலும் மாறுபாடான தோற்றத்தைக் கொண்டிருந்தது. துருக்கியின் சன நெருக்கடி மிக்க சிறு நகரங்கள், கிராமங்கள், தொழிற்சாலைகள் போன்றன சில மைல் தூர இடைவெளியில் காணப்பட்டன. குர்திஸ்தானில் அதற்குப் பதிலாக எங்கு பார்த்தாலும் மலைகளை மட்டுமே காணக்கூடியதாக இருந்தது. மனிதர்களே வசிக்காத சூனியப் பிரதேசத்திற்குள் வந்து விட்டதைப் போல தோன்றியது. பஸ் வண்டியில் இருந்த அனைவர் முகத்திலும் இனந்தெரியாத அச்சம் காணப்பட்டது. அவர்களது அச்சம் நியாயமானதே. பயங்கரவாத அழிப்பு என்ற போர்வையில், துருக்கிய படைகள் பல குர்து கிராமங்களை நிர்மூலமாக்கி விட்டிருந்தன. வரைபடத்தில் குறிக்கப்பட்டிருக்கும் கிராமங்கள் பல சுடுகாடாக காணப்படுகின்றன. அங்கே வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு என்ன நடந்தது? ஆரம்ப கட்ட இராணுவ நடவடிக்கைகளில் ஏராளமானோர் கொல்லப்பட்டு விட்டனர். மிகுதிப்பேர் பலவந்தமாக தமது வாழ்விடங்களை விட்டு இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டனர். இடம்பெயர்ந்த குர்து மக்கள், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் துருக்கியின் மேற்குக் கரையில் குடியேற்றப்பட்டனர்.

துருக்கி பேரினவாத அரசு, குர்து மக்களின் கட்டாய இடப்பெயர்வை இரண்டு நோக்கங்களுக்காக நெறிப்படுத்தியது. ஒன்று, மக்கள் என்ற தண்ணீரை பிரித்தெடுத்து, கெரில்லாக்கள் என்ற மீன்களை இறக்க விடுதல். இரண்டு, குர்து மக்களின் தாயகக் கோட்பாட்டை நடைமுறைச் சாத்தியமற்றதாக்குதல். முதலாவது நோக்கம் பெருமளவு நிறைவேறவில்லை. முப்பது வருடங்களாக இடையூறின்றி தொடரும் கெரில்லாப்போர் அதற்கு சாட்சி. இருப்பினும் குர்து மக்களின் தாயகக் கோட்பாட்டை சிதைப்பதில் துருக்கி ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. மேற்குக்கரை நகரங்களில் பகைமை கொண்ட துருக்கிய சமூகத்தின் மத்தியில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட குர்து மக்கள், ஆயிரம் மைல் கடந்து தாயக பூமியை அடைவதென்பது இயலாத காரியம். அடிமட்ட உழைப்பாளர் வர்க்கமான இவர்களிடம், ஊருக்கு ஒரு முறை சென்று வருவதற்கு கூட பணம் இருக்காது. இந்தப் பிரிவினரில் இரண்டாவது தலைமுறை, குர்திஸ்தான் எப்படி இருக்கும் என்பது கூட தெரியாமல் வளர்ந்து வருகின்றது.

குர்திஸ்தான் எல்லைப் பகுதிகளில் துருக்கி மக்களை குடியேற்றுவதும் நடைபெற்று வருகின்றது. பி.கே.கே. தனது தாயகமான குர்திஸ்தான் என்று உரிமை கோரும் பகுதிகள் சில இன்று துருக்கிமயப்பட்டு விட்டன. "குர்திஸ்தான் தலைநகரம்" என அழைக்கப்படும் டியார்பாகிர் நகரவாசிகளில் அரைவாசிப்பேர் துருக்கியர்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் துருக்கி இராணுவத்தில் பணி புரிபவர்களும், அவர்களது குடும்பத்தினருமாகும். மற்றவர்கள் வியாபாரிகள். குர்திஸ்தான் பகுதியில் டியார்பாகிர் மட்டுமே ஒரு நகரத்திற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. அதற்கு அப்பால் அபிவிருத்தியடைந்த பகுதி ஒன்றை காண்பது அரிது. துருக்கி பேரினவாத அரசு, குர்து சிறுபான்மையினர் பிரதேசத்தை வேண்டுமென்றே புறக்கணித்து வந்துள்ளது. தற்போது, ஐரோப்பிய யூனியனின் நெருக்குவாரத்தால் அபிவிருத்திப் பணியை மேற்கொண்டு பயங்கரவாதத்தை ஒழிக்க முயற்சிக்கின்றது.

துருக்கி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்தில் அமைந்திருப்பதால், வட அட்லான்டிக் இராணுவ கூட்டமைப்பில் (நேட்டோ) அங்கத்துவம் பெற்றுள்ளது. நேட்டோ உறுப்பு நாடுகளான அமெரிக்காவும், ஜெர்மனியும் துருக்கிக்கு இராணுவ உதவி வழங்கி வருகின்றன. துருக்கி இராணுவ அதிகாரிகள் பலர் ஜெர்மனியில் பயிற்சி பெற்றவர்கள். டியார்பாகிர் நகரில் நான் கலந்து கொண்ட மகாநாட்டு மண்டபத்தில், சிவில் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் இனங்காணப்பட்டார். அதைத் தொடர்ந்து அந்த அதிகாரிக்கும், மகாநாட்டில் கலந்து கொண்ட ஜெர்மன் வழக்கறிஞர் ஒருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சரளமாக ஜெர்மன் மொழியிலேயே பேசிய அந்த பொலிஸ் அதிகாரி, "தான் ஜெர்மனியில் ஒரு வருட பயிற்சி பெற்றதாகவும், தனக்கு சட்டம் பற்றி பாடம் எடுக்க வேண்டாமென்றும், ஜெர்மன் பொலிஸ் கூட இப்படித்தான் நடந்து கொள்வார்கள்" என்றும் பதிலளித்தார். மனித உரிமைகள் பற்றி உபதேசம் செய்த ஜெர்மன் வழக்கறிஞரை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று வைத்திருந்து தான் விட்டார்கள். மீண்டும் துருக்கிக்கு திரும்பி வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நடவடிக்கை குறித்து ஜெர்மன் அரசு ஆட்சேபிக்காது என்பதும் அவர்களுக்கு தெரியும். ஜெர்மன் அரசு, தனது பிரஜை என்றாலும் "பயங்கரவாத அனுதாபிகள்" விஷயத்தில் அக்கறைப்படுவதில்லை.

துருக்கியில் ஒரு பாராளுமன்றமும், அதில் ஜனநாயகத் தேர்தல்கல்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கின்றனர். தடைசெய்யப்பட்ட பி.கே.கே. யின் ஆதரவைப் பெற்ற, அல்லது அவர்களாலே தோற்றுவிக்கப்பட்ட, குர்து தேசியவாத அரசியல் கட்சி ஒன்று உள்ளது. பெரும்பான்மை குர்து மக்களின் வாக்குகளைப் பெற்று, குர்திஸ்தான் பிராந்தியக் கட்சியாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றது. கவனிக்கவும், துருக்கியில் எந்தவொரு கட்சியும் குறிப்பிட்ட இனத்தின் பெயரைக் கொண்டிருக்க முடியாது. அதனால் "ஜனநாயகக்கட்சி" என்று தான் தேர்தலில் போட்டியிட்டார்கள். ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குர்து மொழியில் சத்தியப்பிரமாணம் எடுத்ததற்காக சிறையிலடைக்கப்பட்டார். துருக்கி அரசு பி.கே.கே. மீதான இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நேரங்களில், அந்த அரசியல் கட்சியும் நீதிமன்றத்தால் (பிரிவினைவாத குற்றச் சாட்டில்) தடை செய்யப்படும். பின்னர் அந்தக் கட்சியினர் வேறொரு புதிய பெயரில் நிறுவனமயப்படுவார்கள். எந்தப் பெயரில் தோன்றினாலும், அந்தக் கட்சி பி.கே.கே. ஆதரவாளர்களினுடையது என்று துருக்கி அரசுக்கு நன்றாகவே தெரியும். இதனால் சில சமயம் குர்து கட்சி தலைவர்கள், பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக பகிரங்கமாக அறிவிக்கவேண்டிய நெருக்கடி ஏற்படுகின்றது. குர்து தேசியவாதக் கட்சியில் மட்டுமல்லாது, வேறு பல இடதுசாரிக் கட்சிகளிலும் குர்து இனத்தவர் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. குர்திய மக்கள் அனைவரும் குர்து தேசியவாதிகள் இல்லை.

துருக்கியில் போரை நடத்தும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு கிடையாது. அங்கே இராணுவம் மாபெரும் பாசிச நிறுவனமாக வளர்ந்துள்ளது. அட்டதுர்க் ஸ்தாபித்த துருக்கி தேசியத்தை பாதுகாப்பதை லட்சியமாகக் கொண்டுள்ள இராணுவம், மாற்று அரசியல் சக்திகள் அதிகாரம் செலுத்த நினைத்தால், சதிப்புரட்சிக்கும் தயங்காது. இதனால் துருக்கியின் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக இருந்த போதிலும், அங்கே இஸ்லாமிய மத அடிப்படைவாதத்திற்கும் இடமில்லை. அத்தகைய நிலையில், குர்திஸ்தான் போர்கள் யாவும் பாராளுமன்ற ஒப்புதல் இன்றி இராணுவ தலைமைப் பீடமே முன்னெடுத்து வருகின்றது. அந் நாட்டில் பேரினவாதிகளின் செல்வாக்கின் கீழ் உள்ள வலதுசாரி வெகுஜன ஊடகங்களும் இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வருகின்றன.

துருக்கி/குர்து பிரச்சினை தற்போது புலம்பெயர் நாடுகளிலும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக ஜெர்மனி, நெதர்லாந்து,சுவிட்சர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் லட்சக்கணக்கான துருக்கியரும், கணிசமான அளவு குர்த்தியரும் வசிக்கின்றனர். துருக்கியர்கள் அனேகமாக ஒப்பந்தக் கூலிகளாக வந்து குடியேறியவர்கள். அதற்குமாறாக குர்தியர்கள் போர் தொடங்கிய பின் பெருமளவில் அகதிகளாக வந்தவர்கள். துருக்கிய சமூகத்தில் பெரும்பான்மையான மக்கள் பேரினவாத ஆதரவாளர்கள். அதற்கு மாறாக குர்திய அகதிகள் மத்தியில் பி.கே.கேயின் செல்வாக்கு அதிகம். புலம்பெயர்ந்த நாடுகளில் பி.கே.கே. பிரமுகர்கள், கட்டாய நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாக ஆங்காங்கே குற்றச் சாட்டுகள் எழுகின்றன. புகலிடத்தில் முரண்பட்ட இரண்டு சமூகங்களும் ஒன்றுடன் ஒன்று சேர்வதில்லை. சில சமூக நிகழ்வுகளில் கைகலப்பு ஏற்படுவதுண்டு.

ஒரு முறை எமது தொழிற்கல்வி நிலையத்தில் புதிதாக சேர்ந்த ஒரு மாணவன் தன்னை துருக்கி- குர்து இனத்தை சேர்ந்தவராக அறிமுகப்படுத்தினார். உடனே அங்கிருந்த துருக்கி மாணவனுக்கு கோபம் வந்து விட்டது. "துருக்கியில் குர்து இனம் என்று ஒன்று இல்லை. மலை வாழ் துருக்கியர் மட்டுமே உள்ளனர்" என்று சத்தம் போட்டார். அந்த மாணவர் மட்டுமல்ல, பெரும்பாலான துருக்கியின மக்கள் அரச பரப்புரைகளால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். முற்றிலும் மாறுபட்ட குர்து மொழி பேசும் மக்களை, "மலை வாழ் துருக்கியர்" என்ற அரசு சொல்லிக் கொடுத்த பாலபாடம் துருக்கியர் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துள்ளது. அதை விட, துருக்கி மக்கள் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள், என்ற சுய பச்சாதாப கலாச்சாரமும் வேரூன்றியுள்ளது. குர்து மக்களின் துயரங்களை ஒரு பொருட்டாகவே மதிக்காத அளவிற்கு, இனவாதம் மேலோங்கியுள்ளது. பி.கே.கே. தலைவர் ஒச்சலான் கைது செய்யப்பட்ட போது, "இரத்த வெறி பிடித்த கொலைகாரனை தூக்கிலிடுமாறு" ஆயிரக்கணக்கான துருக்கி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். போரில் கொல்லப்பட்ட இராணுவவீரர்களின் படங்களை ஏந்திய தாய்மார் கண்ணீர் வடிக்கும் காட்சியை, தொலைக்காட்சிகள் மனதை உருக்கும் வண்ணம் ஒளிபரப்பின.

பி.கே.கே. தலைவர் ஒச்சலான் கைது செய்யப்பட்ட பின்னர், எஞ்சிய போராளிகள் வட ஈராக்கில் தளமமைத்துக் கொண்டனர். ஈராக் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத சுயாட்சிப் பிரதேசமான, குர்த்தியரின் வட ஈராக் பகுதி, பி.கே.கே. பாதுகாப்பாக பதுங்கியிருக்க ஏதுவான பின் தளமாகும். நீண்ட கால போர் நிறுத்த இடைவேளையின் பின்னர், பி.கே.கே. போராளிகளின் திடீர் தாக்குதலால், இருபதுக்கும் குறையாத இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். துருக்கி மக்கள் மத்தியில் அந்த தாக்குதல் சம்பவம் மீண்டும் தேசிய வெறியை தூண்டிவிட்டது. கொல்லப்பட்டவர்கள் கடமையிலீடுபட்ட இராணுவத்தினரே ஆனாலும், அப்பாவி மக்கள் பலியானது போல ஆவேசப்பட்டார்கள். "துருக்கி இராணுவம் பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்" என்று கோஷமிட்டவாறு வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். துருக்கியின் நகரங்களில் மட்டுமல்ல, மேலைத்தேய நகரங்களிலும் "துருக்கி அரசை தற்காப்பு இராணுவ நடவடிக்கை" எடுக்கக் கோரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இவற்றை துருக்கி அரசு ஒழுங்கு செய்திருக்கலாம் என்பதில் ஐயமில்லை.

ஈராக் இறைமையுள்ள இன்னொரு நாடு என்ற விஷயம் எல்லாம் துருக்கி இராணுவத்திற்கு ஒரு பொருட்டே அல்ல. பி.கே.கே. மறைவிடங்கள் மீது விமானப்படை குண்டு மழை பொழிய, தரைப்படை முன்னேறியது. ஈராக் நிலப்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, பி.கே.கே. முகாம்களை அழித்தொழிக்க எண்ணியது. தனது நாட்டின் இறைமை குறித்து கவலைப்பட்ட ஈராக் அரசு, அமெரிக்க நண்பனிடம் முறையிட்டது. அமெரிக்க அரசு துருக்கி மீது எந்த அழுத்தத்தையும் பிரயோகிக்காது, இராணுவ நடவடிக்கைக்கு பச்சைக் கொடி காட்டியது. ஏனெனில் அமெரிக்க அரசு ஏற்கனவே பி.கே.கே. யை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்த்திருந்தது. அவர்களைப் பொறுத்தவரை இதுவும் பயங்கரவாதத்திற்கு எதிரான பதிலிப் போர் தான்.

மெக்சிகோ: உன்னத நாகரீகங்களின் தாயகம்


மெக்சிகோ: உன்னத நாகரீகங்களின் தாயகம்


(மெக்சிகோ, பகுதி : ஒன்று)
மெக்சிகோ நகரின் பிரபல ஆடம்பர உணவுவிடுதி. மாலை நேர உணவை சுவைத்துக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள், எதிர்பாராத அறிவிப்பொன்றால் அதிர்ச்சி அடைகின்றனர். "இன்னும் இருபது நிமிடங்களில் இங்கே ஒரு முக்கிய நபர் விஜயம் செய்ய இருக்கின்றார். அவர் விருந்துண்டு விட்டு செல்லும் வரையில் யாரும் இருப்பிடத்தை விட்டு அகலக் கூடாது. உங்கள் அனைவரதும் செல்லிடத் தொலைபேசிகள் இப்போது முதல் பறிமுதல் செய்யப்படும்.வி.ஐ.பி. விடுதியை விட்டு சென்ற பின்னரே திருப்பித் தரப்படும்." சுமார் ஒரு மணித்தியாலமாக உணவுவிடுதியின் வாடிக்கையாளர்கள் மலசல கூடத்திற்கும் செல்ல விடாமல் தடுத்து வைத்த வி.ஐ.பி., ஒரு போதைவஸ்து கடத்தல் குழுவின் தலைவன். மெக்சிகோவில் மாபியா கும்பல்களின் அதிகாரம், அங்கே ஒரு நிழல் அரசாங்கத்தையே நடத்துமளவு வளர்ந்துள்ளது. இந்த வருடம் (2010) கோலாகலமாக நடந்த மெக்சிகோ புரட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களில் கிரிமினல்களின் நிழல் படர்ந்திருந்தது. சில வாரங்களுக்கு முன்னர் தான் ஒரு கைவிடப்பட்ட பண்ணை வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 70 இளைஞர்களின் சடலங்கள் உலகச் செய்தியானது. அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் போது, போதைவஸ்து கடத்த சம்மதிக்காத அப்பாவி வெளிநாட்டு இளைஞர்கள் அவர்கள். மாபியாக்களின் உத்தரவுக்கு அடிபணியாத போலிஸ்காரர்களையே சர்வசாதாரணமாக கொன்று வீசுகிறார்கள். விசா இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் உயிர் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. இதைவிட மாபியா கும்பல்கள் தமக்குள்ளே கணக்குத் தீர்க்கும் விதம் குரூரமானது. எங்கேயாவது தலை வேறு, முண்டம் வேறாக சடலம் கண்டெடுக்கப் பட்டால், அது போட்டிக் குழுக்களின் பழிவாங்கல் நடவடிக்கையாக இருக்கும்.

மெக்சிகோ அரசின் சகல துறைகளிலும் மாபியாக்களின் செல்வாக்கு பரவி இருப்பதால், அவர்களை ஒடுக்குவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. மேலும் கொலம்பியாவில் நடந்ததைப் போன்று, ஏழை மக்கள் மத்தியில் இருந்தே அடியாட்களையும், ஆதரவாளர்களையும் திரட்டும் மாபியாக்கள், அந்த மக்களின் நலனுக்காகவும் பணத்தை வாரி இறைக்கின்றனர். மெக்சிகோவில் (மாபியா) வள்ளல்களை போற்றும் இசைநிகழ்ச்சிகள் கூட நடக்கின்றன. மெக்சிகோ பெட்ரோலியமும், கனிம வளங்களும் நிறைந்த செல்வம் கொழிக்கும் பூமி. ஆனால் அவற்றை சந்தையில் விற்பதால் கிடைக்கும் பணத்தின் பெரும்பகுதி, சிறுபான்மை மேட்டுக்குடியினரினால் மட்டுமே அனுபவிக்கப்படுகின்றது. பெரும்பான்மை மக்கள், தாராளமாக கிடைக்கும் சோளத்தைக் கூட வாங்க முடியாத ஏழைகளாக அல்லல் படுகின்றனர். உணவுக்காக பயன்படும் சோளத்தில் அமெரிக்க நிறுவனங்கள் எதனோல் எரிபொருள் தயாரிப்பதும், அந்த அத்தியாவசிய உணவுப்பொருளின் விலையேற்றத்திற்கு காரணம். மெக்சிக்கோ தேசிய உணவான தொர்த்தியா (Tortilla ) சோளத்தில் இருந்தே தயாரிக்கப்படுகின்றது. அது பூர்வீக குடிகளின் பாரம்பரிய உணவு. அந்த மண்ணில், 8000 (எண்ணாயிரம்) வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் உணவாக சோளம் இருந்துள்ளமை, அண்மைய அகழ்வாராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. மெக்சிகோ அரசு, உள்நாட்டில் விளையும் சோளத்தை எரிபொருள் தயாரிக்க அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கின்றது. அதே நேரம் உணவுத் தட்டுப்பாட்டை ஈடுகட்ட, அமெரிக்காவில் இருந்து சோளம் இறக்குமதி செய்கின்றது. (இதைத் தானா உலகமயமாக்கல் என்று கூறுவார்கள்?)

"கடவுள் மெக்சிகோவை அனைத்து வளங்களும் நிறைந்த செல்வந்த பூமியாக படைத்திருந்தாராம். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த நாட்டில் வாழும் மக்கள் அயல் நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்களா? என்று யாரோ கேட்டார்களாம். கவலைப்படாதே, அதனை ஈடுகட்ட தான் நான் அந்த வளமான நாட்டை மெக்சிக்கர்களை கொண்டு நிரப்பினேன், என்று பதிலளித்தாராம் கடவுள்." மெக்சிக்கர்களின் நையாண்டி கதைக்குப் பின்னே ஒரு நிரந்தர சோகம் இழையோடுகின்றது. தீராத வறுமைக்கு பல காரணங்கள் உண்டு. 16 ம் நூற்றாண்டில், உலகம் காணாத இனவழிப்பு செய்து செல்வத்தை கொள்ளையடித்த ஸ்பானிய காலனியாதிக்கவாதிகள். 19 ம் நூற்றாண்டில், மெக்சிகோவின் அரைவாசி நிலப்பகுதியை ஆக்கிரமித்த அமெரிக்க ஏகாதிபத்தியம். 20 நூற்றாண்டு சமூகப் புரட்சியை, பூர்ஷுவா ஆதிக்க அரசியலாக மாற்றிய PRI என்ற ஒரு கட்சி சர்வாதிகாரம். இதைவிட கடந்த 300 வருடங்களாக நாட்டாண்மை செய்யும் பிரிட்டன், பிரான்ஸ்,அமெரிக்கா போன்ற கந்து வட்டிக் கடன்காரர்கள். உலகில் வேறெந்த நாட்டிற்கும் ஏற்படாத விசித்திர அனுபவம் எல்லாம் மெக்சிகோவிற்கு ஏற்பட்டுள்ளது.

நமது அன்றாட உணவுப் பொருட்கள் பலவற்றின் தாயகம் மெக்சிகோ. சோளம், அவரைக்காய், தக்காளி, மிளகாய் போன்ற காய்கறி வகைகளை மெக்சிகோவை ஆக்கிரமிக்கும் நாள் வரையில் ஐரோப்பியர்கள் கண்டு, கேட்டிருக்கவில்லை. இன்று புகை பிடிப்பது ஒரு பாஷனாகி விட்டது. அமெரிக்க மால்பரோ புகைப்பவர்களுக்கு, புகையிலையின் தாயகம் மெக்சிகோ என்பது தெரியாது. இன்று சுவிஸ் சாக்லேட் வாங்குவதும், பரிசளிப்பதும் மேட்டுக்குடி கலாச்சாரமாகி விட்டது. ஆனால் சாக்லேட்டை சுவிட்சர்லாந்துக்கு அறிமுகப்படுத்தியவர்கள் மெக்சிகர்கள். சாக்லேட்டை அவர்கள் சுவை மிகுந்த சக்தி தரும் பானமாக குடித்து வந்தார்கள். ஐரோப்பியர்கள் முதன்முறையாக அஸ்டெக் சக்கரவர்த்தியின் அரண்மனையில் தான் சுவைத்தார்கள். பண்டைய மெக்சிக்கர்களின் மொழியில் அதன் பெயர் Xocoatl. ("சோகோ" என்றால் சூடு, "ஆடில்" என்றால் நீர். ஐரோப்பியரின் வாயில் அது சாக்லேடாக மருவியது.) அவர்கள் அதனை தேவர்கள் அருந்தும் சோமபானமாக கருதினார்கள். சக்தி தரும் பானம் என்பதால், ஆட்சியாளர்களும், படையினரும் விரும்பி அருந்தினார்கள். மேற்குறிப்பிட்ட உணவுப் பொருட்களை எல்லாம் ஐரோப்பியர்கள் பின்னர் முழு உலகுக்கும் அறிமுகப் படுத்தினார்கள். அது மட்டுமல்ல மெக்சிக்கர்களின் புகையிலைக்கும், சாக்லேட்டுக்கும் இன்று ஐரோப்பியர்கள் காப்புரிமை வைத்திருக்கிறார்கள். கூடிய விரைவில் மிளகாய்க்கும், தக்காளிக்கும் உரிமை கொண்டாடப் போகிறார்கள்.


ஐரோப்பியர்களின் காலடி படுவதற்கு முன்னரே, மெக்சிகோ மூவாயிரம் ஆண்டு கால நாகரீங்களை (ஒன்றல்ல, பல நாகரீகங்கள்) கண்டுள்ளது. ஒரு வகையில் மெக்சிகோவை பண்டைய இந்தியாவோடு ஒப்பிடலாம். பல நூறு மொழிகளைப் பேசும் பல்லினத்தவர்களின் தேசங்களைக் கொண்ட உப கண்டமாக விளங்கியது. அவ்வப்போது பல உன்னத நாகரீகங்கள் வேறு வேறு இடங்களில் தோன்றி மறைந்துள்ளன. சாம்ராஜ்ய விஸ்தரிப்புவாதிகளும், சுயாட்சி நகரங்களின் அதிபதிகளும் இடையறாத போரில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் மெக்சிகோ ஆட்சியாளர்களுக்கு பொதுவான குணாம்சம் ஒன்றிருந்தது. மதகுருக்களே மன்னர்களாக சிம்மாசனத்தில் வீற்றிருந்தார்கள். மதவழிபாட்டு ஸ்தலமும், அரசியல் அதிகார மையமும் ஒன்றாக இருந்தது. அவர்களின் கீழே போரிடுவதை தொழிலாக கொண்ட போர்வீரர்கள். இவர்கள் எல்லோருக்கும் உணவளித்துக் கொண்டிருந்த அடித்தட்டு விவசாயக் குடிமக்கள். சரித்திரம் எப்போதும் மன்னர்களின் கதைகளையே குறித்து வைக்கின்றது. புராதன மெக்சிகோவிலும் புகழ் பூத்த ஆட்சியாளர்கள் ஆண்டார்கள், மாண்டார்கள். ஆனால் அடித்தட்டு மக்கள் என்றென்றும் அடக்கமாக கிராமங்களில் உழுதுண்டு, பயிரிட்டு வாழ்ந்து வருகின்றனர். உழைக்கும் மக்களின் வம்சாவளி, 21 ம் நூற்றாண்டு மெக்சிகோவிலும் அப்படித் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

Olmeken என்ற இனத்தவர்களே ஆதி கால மெக்சிகோ நாகரீகங்களின் முன்னோடிகள். (கி.மு. 1200 - 500) இன்றைய வெராகுரூஸ், டபாஸ்கோ மாநிலங்களில் அவர்களது ராஜ்ஜியம் பரவியிருந்தது. காடழித்து விவசாயம் செய்யும் சேனைப் பயிர்ச் செய்கையில் சிறந்து விளங்கினார்கள். வானசாஸ்திரம் கற்ற அறிஞர்கள், தானியங்களை விதைக்க ஏற்ற காலம் எதுவென்று சரியாகக் கணித்துச் சொன்னார்கள். ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் உண்டு என்று கூட கணித்து வைத்திருந்தனர். அவர்களது மொழிக்கு எழுத்து வடிவம் இருந்தது. இயற்கை அழிவாலோ, அல்லது வேற்றினத்தவர்களின் படையெடுப்பு காரணமாகவோ ஒல்மேகன் நாகரீகம் வரலாற்றில் காணாமல் போனது. பிற்காலத்தில் பாராண்ட மாயா, அஸ்டெக் இனத்தவர்களும் அவர்களது அறிவுச் சொத்துகளை சுவீகரித்துக் கொண்டார்கள். மத்திய மெக்சிகோவில் தேயோட்டிஹுவகன் (Teotihuacanen ) என்ற இனத்தவர்களின் வளர்ச்சியடைந்த நாகரீகம் இருந்தது. அவர்களின் பூர்வீகமும், அழிவுக்கான காரணமும் இன்று வரை மர்மமாக உள்ளது. கி.பி. 200 - 600 வரையிலான காலப்பகுதியில் இரண்டு லட்சம் பேர் வசித்த பிரமாண்டமான கட்டிடங்களைக் கொண்ட பாழடைந்த நகரம், இன்றும் அவர்களின் நாகரிக மேன்மைக்கு சாட்சியமாக நிலைத்து நிற்கின்றது. மெக்சிகோவில் இன்றைக்கும் கண்டுபிடிக்கப் படாத பல புராதன நகரங்கள் அடர்ந்த காடுகளுக்குள் மறைந்திருக்கின்றன.

மெக்சிகோவில் ஸ்பானிய காலனியப் படைகள் வந்திறங்கிய பொழுது, அஸ்தேக் சாம்ராஜ்யம் சீரும் சிறப்பும் பெற்று விளங்கியது. வட அமெரிக்க கண்டம் முழுவதிலும் அதி உயர் நாகரீகமடைந்த நாடாக திகழ்ந்தது. இன்றைய தலைநகரம், மெக்சிகோ நகரில் தான் Tenochtitlan என்ற அஸ்தேக் தலைநகரம் இருந்தது. அந்த தேச மக்கள் "மெக்சிகர்கள்" என அழைக்கப்பட்டனர். மெக்சிகர்கள் தொலை தூரத்தில் வடக்குத் திசையில் இருந்த பூர்வீக தேசமான, Aztlan னிலிருந்து இருந்து இடம்பெயர்ந்து வந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஒன்றுண்டு. அவர்களது கடவுளான ஹுயிட்சிலோபோச்லி தெற்கில் ஒரு தேசத்தை தருவதாக வாக்களித்து இருந்தார். கற்றாழை செடி ஒன்றின் மீது பாம்பை பிடித்து வைத்திருக்கும் கருடனைக் காணும் இடத்தில் அந்த புதிய தேசத்தை நிர்மாணிக்குமாறு பணித்திருந்தார். மெக்சிக்கர்கள் நாடோடிகளாக அலைந்த நீண்ட பயணத்தின் இறுதியில் ஒரு நாள், அதாவது சரியாக 13-03-1325 அன்று அந்தக் காட்சியைக் கண்டார்கள். (பாழடைந்த அஸ்தேக் நகர இடிபாடுகளில் காணப்பட்ட குறிப்பு. தினக்காட்டி நமது காலத்திற்கேற்ப கணிக்கப்பட்டுள்ளது.) இன்றைக்கும் மெக்சிகோ குடியரசின் சின்னமாக கற்றாழை மீது பாம்பைக் கொத்தும் கருடன் படம் நிலைத்து நிற்கின்றது.

கொலம்பஸ் பஹாமாஸ் தீவில் வந்திறங்கிய போதிலும், மெக்சிகோ மீதான படையெடுப்பு இன்னொரு ஸ்பானிய தளபதியான கொர்தேஸ் (Cortes) தலைமையில் இடம்பெற்றது. 12 -04 -1519 , சுமார் ஐநூறு ஸ்பானியப் படையினர் பீரங்கிகள், துப்பாக்கிகள் சகிதம் வெராகுரூஸ் கடற்கரையில் வந்திறங்கினார்கள். மிகவும் தந்திரசாலியான கொர்தேசுக்கு விலைமதிப்பற்ற பரிசு ஒன்று கிடைத்தது. ஸ்பானியர்களுடன் ராஜதந்திர உறவை விரும்பிய குறுநில மன்னன் ஒருவன் வழங்கிய மலிஞ்சே என்ற இளவரசி கொர்தேசின் வைப்பாட்டியானாள். விரைவில் இரண்டு மொழிகளிலும் புலமை பெற்ற இளவரசி மலிஞ்சே உதவியுடன் அயலில் இருந்த அரசுகளின் அணியை சேர்க்க முடிந்தது. அஸ்தேக் சாம்ராஜ்யம் பிற இனத்தவர்களின் நாடுகளை வென்று ஆக்கிரமித்து வந்தார்கள். அதனால் வெறுப்புற்றிருந்த குறுநில மன்னர்கள், சக்கரவர்த்தியை வீழ்த்த ஸ்பானிய படைகளுக்கு உதவினார்கள். ஸ்பானியர்கள் எதிர்காலத்தில் தம்மையும் அடக்கி ஆளப் போகிறார்கள் என்பதை, அன்று அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. சாம்ராஜ்யத் தலைநகரை நோக்கி அணிவகுத்துச் சென்ற ஸ்பானியப் படைகள் அஸ்தேக் சக்கரவர்த்தி மேக்டசூமா (Mectezuma ) வை மட்டும் கொலை செய்யவில்லை. அஸ்தேக் தலைநகரத்தை இருந்த இடம் தெரியாமல் அழித்தார்கள். அழகிய அஸ்தேக் கட்டிடக் கலைக்கு சிறப்பு சேர்த்த பிரமாண்டமான ஆலயங்களும், மாளிகைகளும் உடைக்கபட்டு, கற்கள் பெயர்த்துச் செல்லப்பட்டன. இன்று மெக்சிகோ நகரில் பழமையான கத்தோலிக்க தேவாலயங்கள் யாவும், அஸ்டெக் இடிபாடுகளின் மீதே கட்டி எழுப்பப்பட்டன. ஸ்பானிய ஆக்கிரமிப்புப் போர் நடந்த காலத்தில் அஸ்தேக் தலைநகரில் மட்டும் நான்கு லட்சம் குடிமக்கள் வாழ்ந்தார்கள். அன்றைய உலகம் முழுவதிலும் அந்தளவு சனநெருக்கம் உள்ள நகரங்கள் அரிதாகவே இருந்தன. புராதன தலைநகரத்தில் வாழ்ந்த லட்சக்கணக்கான குடிமக்களுக்கு என்ன நடந்தது?

Bartolome de las Casas என்ற பாதிரியார் ஸ்பானிய காலனியப் படைகளின் ஆக்கிரமிப்புப் போரின் போது மெக்சிகோவில் இருந்துள்ளார். அவருடைய காலத்தில் வாழ்ந்த பிற பாதிரிகளைப் போலவே, "பாவாத்மாக்களான" பழங்குடி செவ்விந்தியர்களை கிறிஸ்தவர்களாக மாற்றும் நோக்கத்தில் தான் அங்கே சென்றார். ஆனால் மெக்சிகோ சென்ற பின்னர் தான், தம்மை கிறிஸ்தவர்களாக அழைத்துக் கொள்ளும் ஸ்பானியர்கள் கொடூரமான பாவங்களை செய்வதை நேரில் கண்டார். ஸ்பானிய படையினர் கொன்று குவித்த பூர்வீக மக்களின் எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. ஸ்பானியர்கள் உலகம் அதுவரை காணாத இனவழிப்பில் ஈடுபட்டதாக பார்தொலோமே குறிப்பெழுதி வைத்துள்ளார். கத்தோலிக்க பாதிரிகள், கிறிஸ்தவர்கள் அல்லாதோரை அடிமை வேலை வாங்குவதை அங்கீகரித்த காலமது. ஆனால் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய செவ்விந்திய மக்களையும் அடிமைகளாக வேலை வாங்கப் படுவதை ஏற்க முடியாது, என்று பர்தொலோமே பாதிரியார் வாதாடினார். இவரது கோரிக்கை ஸ்பெயின் அரசனால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இன்றைக்கும் மெக்சிகோவில் அவர் காவிய நாயகனாக போற்றப் படுகின்றார். ஒரு மாநிலத்தின் தலைநகருக்கு (San Cristobal de las Casas) அவரது பெயர் சூட்டப்பட்டது. ஆனால் அவரது தாயகமான ஸ்பெயினில் காலனியாதிக்கவாதிகள், பார்த்தலோமே ஒரு துரோகி என்று தூற்றினார்கள். அதற்கு காரணம் மெக்சிகோவில் நடந்த இனப்படுகொலைகளை, கொள்ளைகளை எல்லாம் அவர் பதிவு செய்து வைத்தது தான். "அழிக்கப்பட்ட மேற்கிந்திய நாடுகளின் வரலாறு" என்ற நூல் அன்றைய ஸ்பெயினின் எதிரிகளான ஆங்கிலேயராலும், ஒல்லாந்துக்காரராலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. (இந்த நூலின் பிரதிகள் இன்று அரிதாகவே கிடைக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் தேடித் படிக்கவும்.)

இன்றைய மெக்சிகோவின் மொழியும், கலாச்சாரமும் ஸ்பெயினிடம் இருந்து கிடைத்த சொத்துக்களாகும். நூறு மில்லியன் மக்கட்தொகையைக் கொண்ட மெக்சிகோ, உலகிலேயே அதிகமான ஸ்பானிய மொழி பேசும் மக்கள் வாழும் நாடாகும். மொத்த சனத்தொகையில் என்பது வீதமானோர் ஐரோப்பியர்களுக்கும், பூர்வீக செவ்விந்தியருக்கும் இடையில் பிறந்த கலப்பினத்தவர்கள். இதனால் மெக்சிக்கர்களின் சிந்தனைப் போக்கு, அரசியல், கலாச்சாரம் போன்றவற்றில் ஐரோப்பியத் தன்மை சற்று அதிகமாகவே காணப்படுவது வழக்கம். 1910 ல் வெடித்த சமூக-கலாச்சாரப் புரட்சி அதற்கு முடிவு கட்டியது. பெருநில உடமையாளர்களுக்கு எதிராக உழைக்கும் வர்க்கமும், ஐரோப்பியர் ஆதிக்கத்திற்கு எதிராக பூர்வகுடி மக்களும் எழுச்சி பெற்றனர். அதே கால கட்டத்தில் தான் ரஷ்யாவில் போல்ஷெவிக்குகள் புரட்சிக்கு தயார் செய்து கொண்டிருந்தனர். சோவியத் புரட்சியை நேரில் கண்டு, "உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்" நூலை எழுதிய அமெரிக்க ஊடகவியலாளர் ஜான் ரீட், மெக்சிகோ புரட்சியையும் பதிவு செய்துள்ளார். மெக்சிகோ கூலி விவசாயிகளை ஆயுதமேந்த வைத்த காவிய நாயகன், பாஞ்சோ விய்யா(Pancho Villa) வையும் சந்தித்துள்ளார்.

மெக்சிகோ புரட்சி, உழைக்கும் மக்களை சுரண்டிக் கொழுத்த மத நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை. அடுத்து வந்த பல தசாப்தங்களுக்கு மதகுருக்கள் வீதியில் செல்லவே அஞ்சினார்கள். டபாஸ்கோ மாநிலத்தில் பணியாற்றும் அதிகாரிகள் "காலை வணக்கம், கடவுள் இல்லை!" என்று முகமன் கூற வேண்டுமென்று ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். பெரும்பான்மை புரட்சியாளர்கள் கலப்பினத்தவர்களாக இருந்த போதிலும், பூர்வகுடி செவ்விந்தியரின் வம்சாவளியினராக "ஞானஸ்நானம்" பெற்றனர். ஸ்பானியர்களை அந்நிய காலனிய ஆக்கிரமிப்பாளர்களாக பார்த்தனர். மெக்சிகோவை காலனிய அடிமைப் படுத்திய ஸ்பானிய தளபதி கொர்தேசின் சாம்பல், மெக்சிகோ நகர மருத்துவமனையில் ஒரு ஜாடியில் பாதுகாத்து வைக்கப் பட்டிருந்தது. புரட்சியாளர்கள் அந்த ஜாடியை அபகரித்து சாம்பலைக் கொட்டினார்கள். காலனியவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியான அஸ்தேக் சக்கரவர்த்தியின் கொலைக்கு பழி தீர்த்துக் கொள்வதற்காக அப்படி செய்தார்கள். இன்றும் கூட மெக்சிகோவில் எந்த இடத்திலும் கொர்தேசுக்கு ஒரு சிலை கூட இல்லை. (லத்தீன்) அமெரிக்கக் கண்டத்தில் இனவழிப்பு மூலம் ஐரோப்பிய காலனியாதிக்கத்தை நிறுவியவர்களை வரலாறு மன்னிக்கப் போவதில்லை. அவர்களின் வாரிசுகளே மக்கள் புரட்சி மூலம் தம் மீது விழுந்த களங்கத்தை துடைப்பார்கள். மெக்சிகோவின் கலாச்சாரப் புரட்சி இருபதாம் நூற்றாண்டில் லத்தீன் அமெரிக்க நாடுகள் எங்கும் எதிரொலித்தது.

(தொடரும்)

ஐரோப்பாவின் ஒரேயொரு பௌத்த நாடு




ஒரு காலத்தில் சீனா முதல் ஐரோப்பா வரை, உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள் மொங்கோலியர்கள். இந்த வரலாற்று உண்மையை நிரூபிக்கின்றது ஐரோப்பிய கண்டத்தின் கிழக்கெல்லையில்(வோல்கா நதிக்கும், கஸ்பியன் கடலுக்கும் அருகில்) அமைந்துள்ள "கல்மிகியா" சமஷ்டிக் குடியரசு. ரஷ்யாவின் காகேசிய பகுதி சமஷ்டி மாநிலங்களில் ஒன்று. கல்மிகிய மொழி துருக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தது. அம் மக்கள், ஒரு காலத்தில் திபெத்தில் இருந்து மொங்கோலியா வரை பரவியிருந்த லாமாயிச பௌத்த மதத்தை தம்முடன் கொண்டு சென்று, அதனை இப்போதும் பின்பற்றி வருகின்றனர்.

கல்மிகிய மக்களின் மூதாதையர் மொங்கோலிய நாடோடிக்குடிகளாக மத்திய ஆசியாவில் இருந்து, செங்கிஸ்கானின் படையினராக ஐரோப்பா நோக்கி வந்து குடியேறியவர்கள். மொங்கோலியா மக்களும், துருக்கி மக்களும், கசகஸ்தான், துர்க்மெனிஸ்தான் போன்ற மத்திய ஆசியாவை சேர்ந்தவர்களும், பொதுவான துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகளை இப்போதும் பேசி வருகின்றனர். இருப்பினும் மொங்கோலியர்கள் (திபெத்திய) பௌத்தர்களாகவும், பிறர் இஸ்லாமியராகவும் உள்ளனர். ரஷ்ய பகுதியான கல்மிகியாவில் வாழும் மக்கள், அனேகமாக தனிமைப்பட்ட அமைவிடம் காரணமாக, இன்றும் (திபெத்திய வழிபாட்டு முறையை பின்பற்றும்) பௌத்தர்களாக காணப்படுகின்றனர். தற்போதைய குடியரசு (மாநிலத்) தலைவரும், கோடீஸ்வரருமான இலியும்சிநோவ் காலத்தில் பௌத்த மத மீளுயிர்ப்பு அதன் உச்சத்தை தொட்டது. தொன்னூறுகளில் தலைநகர் எலிஸ்தாவில் கட்டப்பட்ட பௌத்த கோயில் ஐரோப்பாவிலேயே மிகப்பெரியது.

கல்மிகிய மக்கள் 20 ம் நூற்றாண்டு வரையில், தமது நிலப்பிரபுக்களுக்கும், மதகுருக்களுக்கும் விசுவாசமாக இருந்து வந்துள்ளனர். வேறுவிதமாக சொன்னால் பழமைவாதத்தில் ஊறியவர்கள். சார் சக்கரவர்த்தியின் சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காலத்தில், ரஷ்யாவிற்குள் அவர்களது தேசம் வந்து விட்டிருந்தது. பின்னர் ஏற்பட்ட போல்ஷெவிக் (கம்யூனிச) புரட்சிக் காலத்தில், எதிர்ப்புரட்சி வெள்ளை இராணுவத்தில் சேர்ந்து போரிட்டனர். இருப்பினும் போல்ஷெவிக் செம்படை உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்றதால், கல்மிகியா சோவியத் யூனியனின் தனாட்சி அதிகாரம் கொண்ட மாநிலமானது. பின்னர் இது குடியரசு ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்டது.

இரண்டாம் உலக யுத்தத்தில் நாசிப்படைகள் (கல்மிகியா உட்பட) காகேசிய பிரதேசம் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தன. எதிர்ப்புரட்சி பாரம்பரியம் கொண்ட(அல்லது பழமைவாதத்தில் ஊறிய) கல்மிகிய மக்களில் ஒரு பகுதியினர் நாசிப்படைகளை தமது நட்பு சக்தியாக பார்த்து, அவர்களுடன் சேர்ந்து போரிட்டனர். அந்தப் பகுதியில் நாசிச ஆக்கிரமிப்புக்கு எதிராக இயங்கிய கெரில்லாக் குழுக்களை சேர்ந்த போராளிகள் பிடிபடவும், கொல்லப்படவும் கல்மிகிய துணைப்படையின் திறமையே காரணம். இருப்பினும் பல கல்மிகிய வீரர்கள் செம்படையிலும் சேர்ந்திருந்தனர். சில வருடங்களின் பின்னர் நாசிப்படைகளை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டு முன்னேறிய செம்படை, கல்மிகியாவை மீண்டும் சோவியத் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அதைத்தொடர்ந்து நாசிகளுக்கு உதவி செய்த காரணத்திற்காக பல கல்மிகிய குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு ஆயிரம் மைல்களுக்கப்பால் சைபீரியாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர் தான் இவர்கள் நாடு திரும்ப முடிந்தது. உலகப்போர் காலத்தில் இரத்து செய்யப்பட்டு, மீண்டும் வழங்கப்பட்ட கல்மிகிய சமஷ்டி மாநிலம் தற்போது கணிசமான ரஷ்யர்களை கொண்டிருந்தது. இன்றைய கணக்கெடுப்பின் படி அம்மாநிலத்தில் 53% மட்டுமே கல்மிகிய மொழி பேசும் மக்கள்.

சோவியத் காலத்திற்குப் பின்னரும் "கல்மிகிய குடியரசு" தன்னாட்சி அதிகாரத்துடன் நிலைத்து நிற்கின்றது. "குடியரசுத் தலைவர்" மொஸ்கோ ஆட்சியாளர்களால் நிர்ணயிக்கப்படுவார். குடியரசின் பாராளுமன்றம்(அல்லது மாநில சட்டசபை) அந்தப் பிரதிநிதியை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்று வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிப்பர். தற்போதைய தலைவர் கிர்சன் இல்யூம்சிநோவ் ஒரு செஸ் விளையாடுப் பிரியர். குடியரசுத் தலைநகர் எலிஸ்தாவில் பல சர்வதேச செஸ் போட்டிகள் நடைபெற்றுள்ளன. உலக செஸ் சம்மேளனத்(FIDE) தலைவராக இருக்கும் அவர் குடியரசின் வருமானத்தில் பெரும்பகுதியை செஸ் விளையாட்டுகளுக்கான திட்டங்களில் முதலீடு செய்வதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இதைப்பற்றி ஆராய்ந்த பத்திரிகையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

கல்மிகியா பெட்ரோல், எரிவாயு போன்ற இயற்கை வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளதால், தற்போது ரஷ்ய மத்திய அரசின் கவனமும், அதைத் தொடர்ந்து உலகின் கவனமும் அந்த "ஐரோப்பாவின் ஒரேயொரு பௌத்த நாட்டின்" பக்கம் திரும்பியுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு :Documentary:The Remarkable Republic of Kalmykia - Russia
REPUBLIC OF KALMYKIYA

பொருளாதார நெருக்கடியும், பொருளீட்டும் பொறுக்கிகளும்



"அமெரிக்கா ஒரு கனவு". அதிக விலை கொடுக்கும் முதலாளிக்கு தனது உழைப்பை/சேவையை விற்க தயாராகும் பல்லாயிரக்கணக்கான படித்த நடுத்தர வர்க்கத்தினருக்கும், தொழில்நுட்ப அறிவற்ற சாதாரண உழைப்பாளிக்கும் உள்ள கனவு. போதுமென்ற மனதை கொண்டிருக்க சொல்லும் பழமொழியை தற்போது யாரும் நம்புவதில்லை. பேராசை, பேரவா, சுயநலம், இவ்வாறு எவையெல்லாம் தப்பென்று நீதி நூல்கள் சொல்கின்றனவோ, அவையெல்லாம் அமெரிக்க கனவின் அடிப்படை தகுதிகள்.

"அமெரிக்க சுதந்திரம்"சாமானியர்களும் தினசரி உச்சரிக்கும் மந்திரம். ஆனால் அவர்களது சுதந்திரம் கடனுக்குள் கட்டுப்பட்டுக் கிடக்கிறது என்பதை அமெரிக்க மக்கள் அண்மையில் தான் அறிந்து கொண்டார்கள். சுதந்திரம் இருந்தது! முதலாளிகளும், பெரிய நிறுவனங்களும், நிர்வாகிகளும், எல்லையற்ற சுதந்திரம் அனுபவித்தனர். அதிகம் சம்பாதித்தால், வரி குறையும். தாராளமாக செலவு பண்ண சுதந்திரம். லாபம் என்ற பெயரில் பெருகும் பணத்திற்கு எல்லை வகுக்கப்படவில்லை. அந்தப்பணத்தையும் எப்படியும் சேர்க்கலாம். சட்டப்படி திருடுவதற்கு கணக்காளர் வழிசொல்வார். பங்குச் சந்தையில் சூதாட முகவர்கள் இருக்கிறார்கள். பொய், புரட்டு, மோசடி, இவையில்லாமல் வியாபாரம் நடக்காது. இதையெல்லாம் யாரும் தட்டிக்கேட்க முடியாது. அரசாங்கம் தலையிட முடியாது. ஏனெனில் அது சந்தையின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும். அமெரிக்கர்கள் "சுதந்திரம்" என்ற சொல்லை சரியான அர்த்தத்துடன் தான் பயன்படுத்துகின்றனர். ஆந்நியர்கள் தான் அது எதோ தனிமனித சுதந்திரம் சார்ந்த விடயம் என்று நம்பி ஏமாந்து விட்டார்கள்.

பொருளாதாரம் சாமானிய மக்களுக்கு எளிதில் புரியாத ஒன்று. இருப்பினும் அனைவரும் இன்று சந்தைப் பொருளாதார விதிகளுக்கு அமைய பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். சந்தை என்பது இயற்கைப் பொருளாதாரத்தில் ஒரு பகுதி மட்டும் தான். ஆனால் லிபரலிச, (இன்னும் தீவிரமான) நியோ லிபரலிச சித்தாந்தங்கள் தான் சந்தையை பொருளாதார சக்கரத்தின் அச்சாணி ஆக்கின. பங்குச் சந்தை தேசிய பொருளாதாரத்தை தலைமை தாங்கும் வண்ணம், அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டன. அன்று பூரண தனியார்மயமாக்கலை ஆதரித்தவர்கள், இன்று நெருக்கடி காலத்தில் அரசு பொறுப்பெடுக்க வேண்டும் என்கின்றனர்.

இப்போது தான் அரசு என்ற ஸ்தாபனத்தின் சுயரூபம் வெளித்தெரிகின்றது. அதன் அடிப்படை நோக்கம், அதாவது பலமான முதலாளிகளிடமிருந்து, பலவீனமான மக்களை பாதுகாப்பது என்ற வாக்குறுதி, இன்று காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் மருத்துவவசதியின்றி பிணியால் வாடிக்கொண்டிருக்கையில், 30 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்ந்து கொண்டிருக்கையில், அவர்களுக்காக ஒரு சதமும் செலவழிக்காத அரசு, வங்கிகள் திவாலாகாமல் பாதுகாக்க பில்லியன் டாலர்களை தயங்காமல் அள்ளிக்கொடுத்தது. ஐரோப்பிய அரசுகளும் மக்களின் வரிப்பணத்தை அள்ளிக்கொடுத்து சந்தைப் பொருளாதாரம் அழிய விடாமல் காப்பாற்றின. தமது உதாரணத்தை பிற நாட்டு அரசாங்கங்களும் பின்பற்ற வேண்டும் என்றனர்.

அனைவரது கவலையும் வெகுவாக குறைந்துள்ள பங்குகளின் பெறுமதியை உயர்த்தவேண்டும் என்பதே. ஒரு நிறுவனத்தின் ஐந்து சதவீதத்திற்கு அதிகமான பங்குகளை அரசாங்கம் வாங்க கூடாது என்றும், அப்படி ஒரு நிலை வந்தால் பாராளுமன்ற அனுமதி வேண்டும் என்று சில நாடுகளில் சட்டம் இருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் காத்திராமல், ஒரே இரவுக்குள் முடிவுகள் எடுக்கப்பட்டன. தற்போது அரசாங்கம் பங்குகளை வாங்கி, மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்குவதன் மூலம், நிறுவனத்தை நன்றாக இயங்க வைத்து விட்டு, பிறகு பழைய நிலைக்கு கொண்டுவருவோம் என்று பகிரங்கமாகவே சொல்கின்றனர். சுருக்கமாக சொன்னால், முதலாளிகள், அவர்களது மூலதனம் காப்பாற்றப்பட வேண்டும்.

நிதி நெருக்கடியை இடதுசாரிகள் முதலாளித்துவத்தின் வீழ்ச்சியாக பார்த்தனர். அது தவறு. முதலாளித்துவம்(அதிலும் குறிப்பாக வங்கித்துறை, சந்தை என்பன) அடி வாங்கியுள்ளது. அரசுகள் தலையிட்டு காப்பாற்றி விட்டன. அதே நேரம், இது தற்காலிக பின்னடைவு மட்டுமே, மீண்டும் எல்லாம் பழையபடி வந்து விடும் என்று வலதுசாரிகள் கூறுகின்றனர். அதுவும் தவறு. முதலாளித்துவ பொருளாதாரம் குறிப்பிட்ட காலம் வளருவதும், பின்னர் அளவுகடந்த உற்பத்தி காரணமாக நெருக்கடிக்குள் மாட்டிக் கொள்வதும், பின்னர் அதிலிருந்து மீள்வதும் அடிக்கடி நடப்பது தான். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியானது, பொது மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் கடன் வழங்கி, இமாலய பலத்துடன் இருந்த வங்கிகளை பாதித்திருப்பதால், அதன் விளைவு பல இடங்களிலும் எதிரொலிக்கும்.

இந்த நெருக்கடியால் அமெரிக்கா வல்லரசு தகரும் என்ற எண்ணமும் தவறானது. ஜெர்மனியின் அதிகம் விற்பனையாகும் வலதுசாரி சஞ்சிகையான "டெர் ஸ்பீகல்" கூட அப்படி ஒரு கருத்தை முன்வைத்தது. உலகப் பொருளாதரத்தில் அமெரிக்காவின் ஆலோசனைகளை, மாதிரிகளை, கொள்கைகளை இனிமேல் யாரும் பின்பற்றபோவதில்லை என்பது உண்மைதான். ஆனால் அமெரிக்கா தான் தற்போதும் உலகில் மிகப்பெரிய இராணுவ வல்லரசு என்ற நிலையில் மாற்றமெதுவும் ஏற்படவில்லை. எதிர்காலத்தில், அதுவும் பல வருடங்களுக்குப் பிறகு, ரஷ்யா அல்லது சீனா அமெரிக்காவை விட இராணுவ வளர்ச்சி கண்டால் ஒரு வேளை நிலைமை மாறலாம். அமெரிக்கா தனது பாதுகாப்பு படைகளுக்கு, அதிக பட்ஜெட் ஒதுக்கி வருகின்றது. பல நிறுவனங்கள் இராணுவத்துக்கு தேவையான ஆயுத தளபாடங்களையும், பிற கருவிகளையும் உற்பத்தி செய்து வருகின்றன. அவற்றில் பெரும்பகுதியை அமெரிக்க அரசாங்கம் வாங்குவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றது. மேலும் சினிமா, இசை, போன்ற கலாச்சார ஏற்றுமதியிலும் அமெரிக்கா முன்னணி வகிக்கின்றது. சமீபத்திய நிதி நெருக்கடியானது, இத்தகைய நிறுவனங்களில் இதுவரை முதலிட்ட வங்கிகளை ஓரங்கட்டி விட்டு, அரசே எடுத்து நடத்தும் நிலையை உருவாக்கலாம். அப்படியானால் அது ஒரு பாசிச சர்வாதிகார ஆட்சியை கூட உருவாக்கலாம்.

முதலாளித்தை ஆதரிப்பவர்களுக்கு நிரந்தர கொள்கை எதுவும் இல்லை. லிபரலிசம், நியோ லிபரிலிசம், Laissez Faire முதலாளித்துவம், சமூக ஜனநாயகம், அல்லது பாசிசம் இவ்வாறு எதை அடிப்படையாக வைத்தாவது முதலாளித்துவத்தை, அல்லது அதனால் பலனடையும் தமது இருப்பை காப்பாற்றவே விரும்புவர். 1930 ம ஆண்டு ஏற்பட்ட மோசமான நிதி நெருக்கடியில் இருந்து அமெரிக்கா மீண்டு விட்டது தானே, என்று முதலாளித்துவத்திற்காக வாதாடுபவர்கள் அடிக்கடி சொல்லக் கேட்கலாம். ஆனால் நிதி நெருக்கடி காரணமாக, அமெரிக்கா, ஜெர்மனிக்கு வழங்கிய கோடிக்கணக்கான கடனை உடனே திருப்பி செலுத்துமாறு கோரியதும், அதனால் ஜெர்மனியின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, நாசிசத்தின் எழுச்சிக்கும், ஹிட்லர் அதிகாரத்திற்கு வர வழிவகுத்ததும், அதற்குப் பின்னர் ஏற்பட்ட வல்லரசுப் போரில்(2 வது உலகயுத்தம்) அமெரிக்காவும் குதித்து ஆயுதங்கள் விற்று தனது பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டதும் வரலாறு. சரித்திரம் மீண்டும் திரும்பாது என்பது நிச்சயமில்லை.

நிதி நெருக்கடியின் விளைவுகள் அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் "பொருளாதார தேக்கம்" என்ற பின்னடைவை ஏற்படுத்தப் போவது மட்டும் உறுதி. அதன்படி இயற்கையான பொருளாதாரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் செலவைக் குறைத்தல் என்ற பெயரில் நிறுவனங்கள் அதிகமான தொழிலாளரை வேலையை விட்டு நீக்குதல், ஒரு பக்கத்தில் உதவிப் பணத்தில் அல்லது வறுமையில் வாழும் மக்களை உருவாக்கும். மக்கள் தமது பணத்தை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தி, வீட்டிலே சேமிக்க தொடங்குவர். நமது நாட்டு மக்களுக்கு (அமெரிக்க-ஐரோப்பிய) "சீரழிவு கலாச்சாரம்" பற்றிய புரிதல் மிகக் குறைவு. உண்மையில் இந்த "சீரழிவு கலாச்சாரம்" தான் இந்த நாடுகளை பணக்கார நாடுகளாக தொடர்ந்து வைத்திருந்த ஊக்கியாகும். அதாவது மக்கள் பணத்தை தாராளமாக செலவழிக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளோடு நிறுத்திக் கொள்ளாது ஆடம்பர தேவைகளுக்கும் செலவழிக்க வேண்டும். அப்போது தான் புதிய புதிய (ஆடம்பர பண்டங்கள் உற்பத்தி செய்யும்) நிறுவனங்கள் உருவாவதுடன், அதனால் தேசிய பொருளாதாரமும் வளர்ச்சியடையும். சாமானியருக்கும் புரியும்படி சொன்னால், "குடி" மக்கள் அதிகளவில் மதுபான சாலைகளை நாடினால், அந்த துறை வளர்ச்சியடைவதுடன், அரசாங்கத்திற்கும் நிறைய வரி கிடைக்கும். "பணம் ஓடித்திரிய வேண்டும்" என்பது சந்தையின் பொன்மொழி. இதற்கு மாறாக இலங்கையிலும், இந்தியாவிலும் வாழும் ஓரளவேனும் வசதிபடைத்த மக்கள், பணத்தை தங்க நகைகளாக வீட்டுக்குள்ளேயே முடக்கி வைப்பதால், ஏற்கனவே அங்கே பொருளாதார தேக்கம் நிலவுகின்றது.

உலகமயமாக்கல் அமெரிக்க பாணி கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பரப்பும் பொருளாதார திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அதற்கு இந்தியா போன்ற "பழமை, பாரம்பரியம்" மிக்க நாடு கூட தப்பவில்லை. காரணம், தனி இனம் போல காட்சியளிக்கும்,அந்நாட்டின் ஆளும் வர்க்கம். அன்று தமது பிள்ளைகளை டாக்டர்களாக, எஞ்சினியர்களாக இங்கிலாந்திற்கும், அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி செய்து பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டினார்கள். அண்மைக்காலத்தில் கணிப்பொறி வல்லுனர்களை அனுப்பி அந்த தேவையை நிறைவேற்றிக் கொண்டனர். இவ்வாறு ஒருபக்கம் "தங்கப்பசி" கொண்ட இந்தியர்கள் உலகிலேயே அதிகளவு தங்கத்தை நுகர்வோராக இருப்பதாலும், மறுபக்கம் NRI என்றழைக்கப்படும் வெளிநாட்டு இந்தியர்கள் அனுப்பும் டாலர்கள் அரச கஜானாவை நிறைப்பதாலும், உலக பொருளாதாரம் இந்தியாவை நெருக்கமாக கட்டிப் போட்டுள்ளது. இந்த நிலைமை, 90 களுக்கு பின்னர் ஏற்பட்ட சந்தைப் பொருளாதார சீர்திருத்தால் ஏற்படவில்லை. சுதந்திரமடைந்து நேருவின் சோஷலிசம் இருந்த காலத்தில் கூட எதோ ஒருவகையில் நிதி நெருக்கடிக்குள் சிக்கி இருக்கும். விரிவாக சொன்னால், தங்கமும், டாலரும் உலக வர்த்தகத்திற்கு இன்றியமையாதவை. இவ்விரண்டும் கையிருப்பில் குறைந்தால், அல்லது உலக சந்தையில் பெறுமதி குறைந்தால் அந்த நாடு பெரும் நெருக்கடியை எதிர்நோக்கும்.

உலகின் அரைவாசி நாடுகளை தனது காலனிகளாக வைத்திருந்த இங்கிலாந்து தான் தங்கத்தை உலக வர்த்தகத்திற்கான பொது நாணயமாக கொண்டு வந்தது. (இங்கிலாந்து நாணயமான பவுன் என்ற பெயர் அதன் காரணமாக வந்தது தான்) அதன் காரணமாக எல்லா நாட்டு நாணயமும் தங்கத்துடன் ஒப்பிட்டு பெறுமதி பார்க்கப்பட்டது. 2 ம் உலகயுத்தத்தின் பிறகு அமெரிக்கா உலக ஏகபோக வல்லரசாகியதால், டாலரை சர்வதேச வர்த்தகத்திற்கான பொது நாணயமாக்கியத்துடன், டாலரின் பெறுமதியை தங்கத்துடன் ஒப்பிடுவதில் இருந்து கழற்றி விட்டது. இதனால் அனைத்து உலக நாடுகளும், (சீனா உட்பட) தமது திறைசேரியில் டாலர்களை நிரப்பி வைத்துள்ளன. அனேகமாக அமெரிக்கா தேசத்தில் பாவனையில் உள்ள டாலர் அளவேனும், வெளிநாடுகளில் புழக்கத்தில் உள்ளதால், அதேயளவு டாலர் தாள்களை அச்சடித்து உள்நாட்டில் புழக்கத்திற்கு விட்டுள்ளது.

தற்போது எழுந்துள்ள நிதி நெருக்கடி காரணமாக உலக நாடுகள் தமது டாலர்களை விற்க வேண்டிய நிலை வரலாம். ஆனால் அதனது கேள்வி குறைந்து, பெருமளவு டாலர்கள் அமெரிக்காவுக்கே திரும்புமாயின், அமெரிக்காவில் இன்னொரு நிதி நெருக்கடியும், பொருளாதார வீழ்ச்சியும் உருவாகும்.ஏற்கனவே எண்ணை ஏற்றுமதி செய்யும் ஒபெக் நாடுகள் மத்தியில் ஈரானும், வெனிசுவேலாவும் சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு பதிலாக யூரோவை கொண்டு வரவிருந்த முயற்சி தோல்வியடைந்தது. அமெரிக்காவின் இராணுவ மேலாதிக்கம் தான் அப்படி ஒரு முயற்சியை தடுத்த சக்தி. அமெரிக்காவின் செல்வத்தில் பெரும்பகுதி வெளிநாடுகளில் இருந்து வரும் முதலீடுகளாலேயே உருவாக்கப்பட்டுள்ளது. 2 ம் உலகயுத்ததிற்கு பின்னர், அழிவில் இருந்து ஐரோப்பாவை மீட்டு பணக்கார நாடுகளாக மாற்றிய அமெரிக்கா, அதற்கு பிரதிபலனாக அமெரிக்காவில் முதலீடு செய்ய தூண்டியது. அதே போன்றே எண்ணை ஏற்றுமதியால் பெரும்பணம் ஈட்டிய வளைகுடா ஷேக்குகளும், தமது லாபத்தில் பெரும்பகுதியை அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்தனர். இதனாலேயே அந்த நாடுகளும் அமெரிக்க நிதி நெருக்கடிக்குள் சிக்கி பாதிக்கப்பட்டன.

இன்றைய நெருக்கடியில் இருந்து தப்பிக்க, அண்மைக்காலமாக பொருளாதார வளர்ச்சி கண்ட சீனா, இந்தியா போன்ற நாடுகளை வந்து முதலீடு செய்யுமாறு அமெரிக்கா கேட்டு வருகின்றது. இந்தியா அதனை செய்யும் சாத்தியம் உண்டு. அணுசக்தி உடன்படிக்கை மூலம் அமெரிக்கா, இந்தியாவை தன்பக்கம் இழுத்து வைத்துக் கொண்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் சீனா தயக்கம் காட்டுகின்றது. அது தனது பொருளாதார பழுதுகளை திருத்திக் கொள்வதிலும், உள்நாட்டில் முதலீடு செய்வதிலுமே அதிக கவனம் செலுத்துகிறது. அப்படியே அமெரிக்காவில் முதலீடு செய்ய முன்வந்தாலும், நிலைமையை பயன்படுத்தி, அமெரிக்க நிறுவனங்களை வாங்க விரும்பலாம். அதனை (நாட்டை விற்பதற்கு சமம் என்பதால்) அமெரிக்கா விரும்பப் போவதில்லை. மேலும் இனிமேல் (சீனாவின் ஒரு பகுதியான) ஹோங்ஹோங் தான் இனிமேல் (நியூ யார்க் போல) சர்வதேச வர்த்தக மையமாக வரப்போவதாக வதந்திகள் அடிபடுகின்றன.

இன்று காணும் மாற்றங்கள் யாவும் சீனா உலக வல்லரசாக மேலாண்மை பெரும் சாத்தியக்கூறுகள் உள்ளதை கோடிட்டுக்காட்டுகின்றன. அமெரிக்க-இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் சீனாவுக்கு எதிரான எதிர்கால அச்சுறுத்தலுமாகும். இந்த ஒப்பந்தமானது, இந்தியா முற்றுமுழுதாக அமெரிக்க முகாமுக்குள் போய்விட்டதை காட்டுகின்றது. அதே நேரம், சீனா இலங்கையில் காலூன்றி வருகின்றது. இவ்வளவு காலமும், இலங்கைக்கு அதிக நிதியுதவி வழங்கி வந்த ஜப்பானை பின்னுக்கு தள்ளி விட்டது சீனா. இலங்கையின் தென்பகுதியில், எதிர்காலத்தில் வரப்போகும்(அல்லது அப்படி ஊகிக்கப்படும்) சீன கடற்படை முகாமானது, இந்து சமுத்திர ஆதிக்கத்திற்கான ஏற்பாடு ஆகும். இலங்கை சீனாவின் ஆதிக்கத்திற்கும் முழுவதுமாக போக முன்னர், இந்தியா தனது முதலீடுகளை பெருக்குவதன் மூலம் தடுக்கப்பார்க்கின்றது. அமெரிக்கா இராணுவ உதவி செய்வதன் மூலம், ஈரானின் தலையீட்டை தடுக்கப்பார்க்கின்றது. இன்றைய நிதி நெருக்கடி இந்த வல்லரசுப் போட்டியை தீவிரமாக்கலாம், அல்லது விரைவு படுத்தலாம்.

இலங்கையின் பொருளாதாரத்தில் அமெரிக்க அல்லது ஐரோப்பிய முதலீடுகள் மிகக் குறைவு. ஐரோப்பாவில் இருந்து வரும் நிதியில் பெருமளவு பகுதி, "NGO பொருளாதாரத்திற்கே" செலவிடப்படுகின்றது. வறுமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் போன்ற திட்டங்களை ஐரோப்பிய பணத்தில் நடைமுறைப்படுத்தும் அரசு சாரா நிறுவனங்கள் இனிமேல் இயங்க முடியாத நிலை வரலாம். அதற்கு காரணம், நிதி நெருக்கடிக்குள் சிக்கியுள்ள தமது வங்கிகளை காப்பாற்ற பெரும்பணம் செலவிடும் ஐரோப்பிய அரசுகள், அபிவிருந்தியடையும் நாடுகளுக்கு இதுவரை வழங்கி வந்த நிதியை குறைக்கவிருக்கின்றன. இது ஒருபுறமிருக்க, சர்வதேச சந்தையில் ஏறிய உணவுப்பொருட்களின் விலை இறங்கவில்லை. உள்நாட்டில் கூட உணவுப்பொருட்களை வாங்குவதும் விற்பதும் (லாபத்தை மட்டுமே முக்கியமாக கருதும் வியாபாரிகளின்) கையில் இருப்பதால், மக்கள் பட்டினியால் செத்தாலும் விலை குறையப் போவதில்லை. இது போன்ற காரணங்களால் இலங்கையிலும், இந்தியாவிலும் லட்சக்கணக்கான மக்கள், வறுமைக்குள்ளும், இன்னும் மோசமாக பட்டினிச் சாவுக்கும் தள்ளப்படுவர். இவற்றைப் பற்றி உலக அக்கறை மிக மிக குறைவாக இருக்கும். இந்த நெருக்கடியான காலத்தில், பணமிருப்பவர்கள் தமது நலன்களை மட்டுமே பார்க்கப்போகின்றனர். இதைப்பற்றி கேட்கபோனால், "தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும்" என்று தத்துவ முத்துகள் உதிரப்போகின்றன. உலக உணவுத்திட்டமும், ஐக்கிய நாடுகள் சபையும் இது குறித்து ஏற்கனவே எச்சரித்து விட்டன.

பயங்கரவாத ஏற்றுமதியில் அமெரிக்கா முன்னணியில்...

உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்காவே முன்னணி வகிக்கின்றது. விக்கிலீக் அண்மையில் வெளியிட்ட சி.ஐ.ஏ. ரகசிய ஆவணங்களில் இருந்தே இந்த உண்மைகள் அம்பலத்திற்கு வந்துள்ளன. (விக்கிலீக் தளத்தில் அந்த ஆவணங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.) வெளிநாடுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு, அந்தந்த நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க பிரஜைகளே அனுப்பப்படுகின்றனர். இது இஸ்லாமிய நாடுகளுக்கு மட்டும் பொதுவான அம்சம் அல்ல, ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல, ஐரோப்பாவில் கூட அமெரிக்கா அனுப்பி வைத்த பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். உதாரணத்திற்கு சில:

- ஐந்து அமெரிக்க முஸ்லிம்கள், தாலிபானில் சேருவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பின்னர் அவர்கள் சி.ஐ.ஏ. உளவாளிகள் என தெரிய வந்தது.
- 1994 ம் ஆண்டு, நியூ யோர்க்கை சேர்ந்த அமெரிக்க யூத டாக்டர் இஸ்ரேலுக்கு Baruch Goldstein சென்று காஹ் அமைப்பில் இணைந்தார். அங்கே தொழுகையில் ஈடுபட்ட 29 பாலஸ்தீனர்களை சுட்டுக் கொன்றார்.
- ஐரிஷ் அமெரிக்கர்கள் IRA க்கு நிதியுதவி வழங்கியதுடன், பிரிட்டனில் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
- சுவாரஸ்யமாக, இந்தியாவில் மும்பையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலிலும் சி.ஐ.ஏ. பங்கெடுத்துள்ளது. David Headley என்ற அமெரிக்க பாகிஸ்தானி நபர் தாக்குதலுக்கு உதவியதை ஒப்புக் கொண்டுள்ளார். அந்த நபர் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டு பின்னர், அமெரிக்க போதைவஸ்து தடுப்பு பணியகத்தில் வேலை செய்தவர். பாகிஸ்தானிலும், அமெரிக்காவிலும் இரட்டை உளவாளியாக செயற்படுகிறார். இது போன்ற தகவல்கள் ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. (பார்க்க:
Mumbai terror suspect David Headley was ‘rogue US secret agent’)

அமெரிக்கா பயங்கரவாதிகளை உருவாக்குவதும், ஏற்றுமதி செய்வதும் புதினமல்ல. அது அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளில் ஒன்று. ஐம்பதுகளில் ஐரோப்பிய நாடுகளில் Gladio என்ற ரகசிய பயங்கரவாத இயக்கங்கள் அமைக்கப்பட்டன. ஒரு வேளை சோவியத் யூனியன் படையெடுத்தால், விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடுவது அந்த ரகசியக் குழுக்களின் வேலை. ஆனால் எதிர்பார்த்த சோவியத் படையெடுப்பு ஒரு நாளும் வரவில்லை. மாறாக ரகசிய பயங்கரவாத குழுக்கள் தமது நாடுகளிலேயே மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். உதாரணத்திற்கு சில:
- 1960 ம் ஆண்டு, துருக்கியில் ஏற்பட்ட சதிப்புரட்சியில் பங்கெடுத்தது மட்டுமல்லாது, பிரதமரை கொலை செய்துள்ளனர்.
- 1967 ல், கிரீசில் சதிப்புரட்சி செய்து இராணுவ அரசை நிறுவியது.
- 1971 ல், மீண்டும் ஒரு முறை துருக்கியில் சதிப்புரட்சியில் பங்கெடுப்பு. தொடர்ந்த சர்வாதிகார ஆட்சியில் Gladio பயங்கரவாதிகள், நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை கொலை செய்தனர்.
- 1977 ல் இடம்பெற்ற மாட்ரிட் படுகொலை, 1985 ல், பெல்ஜியத்தில் இடம்பெற்ற சூப்பர் மார்க்கட் படுகொலை... இவ்வாறு தமது சொந்த மக்கள் மீதே பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டது.
- 1990 ம் ஆண்டு, சுவிட்சர்லாந்தை சேர்ந்த முன்னாள் Gladio தலைவர் அனைத்து இரகசியங்களையும் வெளியிடப் போவதாக தெரிவித்தார். மறு நாள் அவர் வீட்டில் வைத்து மர்மமான முறையில் கொலை செய்யப் பட்டார்.

மேலதிக விபரங்களுக்கு...

Gladio Terrorism
European Parliament resolution on Gladio

காஷ்மீர்: சவக்குழியின் சாட்சியங்கள்


காஷ்மீர்:
இந்திய அரசின் படுகொலைகளும் சவக்குழியின் சாட்சியங்களும்


சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை!

முன்னுரை

காஷ்மீர் : இந்திய அரசின் படுகொலைகளும் சவக்குழியின் சாட்சியங்களும் என்ற இவ்வெளியீட்டில் காஷ்மீரில் 1989 -2009ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்திய ராணுவ மற்றும்
துணை ராணுவப் படையினரால் படுகொலை செய்யப்பட்டு அடையாளம் காணப்படாமல் புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டி எடுத்து, ஆய்வு செய்து காஷ்மீர் மீதான சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தினரால் வெளிக்கொணரப்பட்ட “புதைக்கப்பட்ட சாட்சியங்கள்” என்ற ஆய்வு அறிக்கையின் தமிழாக்கத்தை குடியுரிமை பாதுகாப்பு நடுவம் வெளியிட முன்வந்துள்ளது.
காஷ்மீர் பிரச்னை என்பதே இந்திய அரசுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையிலான பிரச்னை என்றும், காஷ்மீரிகளின் அடையாளம் மற்றும் சுதந்திர வேட்கைக்கான போராட்டம்
என்றும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான யுத்தம் என்பது போன்றும், இந்திய இராணுவப் படையினர் போராளிகளிடம் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்றிவிடவே
நடத்தப்படும் யுத்தம் என்றும், இந்திய ராணுவத்தினரிடம் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்றவே போராளிகள் நடத்தும் யுத்தம் என்பதாகவும் பல முகங்களாக வெளிப்படுகிறது.
ஒட்டுமொத்தத்தில் இந்திய அரசு, பாகிஸ்தான், போராளிக்குழுக்கள் இவற்றின் இடையே சமாதான பேச்சுவார்த்தை என்பது முன்வைக்கப்படும் அதே வேளையில், காஷ்மீர்
பகுதியில், 6 லட்சத்திற்கும் மேலான ராணுவ, துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்பதும், ராணுவப் படையினருக்கும் போராளிக் குழுக்களின் இடையிலான மோதல் என்ற பெயரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 70,000
என்பதாகவும், மோதலில் கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,000க்கும் மேலாகவும் காணப்படுவது இந்திய அரசின் மனித உரிமை மீறல்களின் அப்பட்டமான
வெளிப்பாடாகும்.

மோதல்களில் கொலை செய்யப்பட்ட அப்பாவிகள் கூட தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டனர் என்பதற்கு 2004ம் ஆண்டு இந்திய ராணுவத்தினர் நடத்திய பத்ரபால் படுகொலை ஒரு
சான்றாகும்.

சில நேரங்களில், இந்திய ராணுவத்தினர் நடத்திய படுகொலைகளை மறைக்க, போராளிக் குழுக்கள் படுகொலையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். சட்டீஸ்சிங் புறா என்ற பகுதியில் 35 சீக்கியர்கள் எல்லைப்புற காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், அதற்கு பொறுப்பாளியாக போராளிக் குழுக்கள் மீது குற்றம் சாட்டப்பட்டன.
இந்திய ராணுவத்தினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலை போக்கில் இருந்து மனித உரிமையாளர்களும் கூட தப்பவில்லை. 1996ம் ஆண்டு, மனித உரிமையாளர் அன்டிராபி
அவர்களின் படுகொலை இதற்கு சான்றாகும். அன்டிராபியின் படுகொலையை நிகழ்த்திய ராணுவப் படை தலைவர் மேஜர் அவ்தார் சிங் மீது 13 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

தற்போது 2008ம் ஆண்டு அமர்நாத் யாத்திரை அறக்கட்டளைக்கு அரசு நிலங்களை தாரை வார்த்து மதவெறி மோதலுக்கு (இந்துத்துவ அரசியலுக்கு ஆதரவாக) வழிவகை
செய்து அரசு செயல்பட்டதும், 2009ம் ஆண்டு நடந்த ஷோபியன் கூட்டு பாலியல் வன்முறையில் காவல் துறையின் அட்டூழியத்தை மறைக்க மத்திய, மாநில அரசுகள் செயல்பட்ட விதமும்,தற்போது 3 இளஞ்சிறுவர்கள் துணை ராணுவப் படையினரால்
சுட்டுக் கொல்லப்பட்ட பின்பு எழுந்த மனக் கொந்தளிப்பை ஆற்றும் வகையில் செயல்படாமல், துணை ராணுவப் படையினரை ஆதரித்து நிற்கும் மத்திய, மாநில அரசின் நிலையும் காஷ்மீர் மக்களை, மேலும் அன்னியப்படுத்துவதாகவே அமைகிறது.

இவற்றிற்கிடையில் ராணுவத்திற்கான தனிச்சிறப்பு அதிகாரச் சட்டம் 1990களில் ஜக்மோகன் கவர்னராக பணியாற்றியபோது பிறப்பிக்கப்பட்டது. மாறிமாறி வரும் மத்திய, மாநில அரசுகள்
இச்சட்டத்தை வாபஸ் பெறுவதாக வாக்குறுதி அளித்தபோதும்,எவரும் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் இது குறித்த நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.

ராணுவத்திற்கான சிறப்பு அதிகாரச் சட்டம் வடகிழக்கு மாநிலங்களில் எத்தகைய ராணுவ அட்டூழியங்களுக்கு துணை நின்றது என்பதை மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும்
அறிவர்.

இப்பதட்டமான நிலையில் மேலும் ராணுவமயமாக்கல் என்பது நிலைமையை மோசமடையவே செய்யும். ராணுவத்தை திரும்பப் பெறுவதன் மூலமே, ராணுவமயமாக்கலை
கைவிடுவதன் மூலமே, ராணுவப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறுவதன் மூலமே பதட்ட நிலையை சீரடைய செளிணிய இயலும்.

இந்திய ராணுவத்தினரின் படுகொலையையும், படுகொலைகளில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகளையும் பாதுகாத்து நிற்கின்ற இந்திய அரசின் நடவடிக்கையை, போராடும் காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான விருப்பார்வங்களை ஒடுக்கும்,
கொடுமையான மனித உரிமை மீறல்களாகவே கருத இயலும். இந்த மனித உரிமை மீறலுக்கு எதிரான இணைந்த குரலை எழுப்ப முன்வருவது அனைத்து ஜனநாயக, மனித உரிமை அமைப்புகளின் உடனடி கடமையாகும்.

இச்சூழலில் காஷ்மீர் மீதான சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை இந்தியாவின் அனைத்து மக்கள் தரப்பினரையும் சென்றடைவது மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு
எதிரான ஒரு வலுவான குரலை எழுப்பச் சாதகமான நிலையை உருவாக்கும். இந்த முயற்சியின் சிறு அங்கமாக தீர்ப்பாயத்தின் அறிக்கையை குடியுரிமை பாதுகாப்பு நடுவம் தமிழில் வெளிக்கொணருகிறது.
-------------------------------------------------------------------------------

புதைக்கப்பட்ட சாட்சியங்கள்:

இந்திய நிர்வாகத்தின் கீழ் அடங்கிய காஷ்மீரில் நிலவும் மனித உரிமைகளும், நீதி நிலைமைகளும் குறித்த சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை!


நவம்பர் 2006க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட நேரடி ஆய்வில் காஷ்மீரத்தின் பண்டிபோரா, பாராமுல்லா மற்றும் குப்வாரா மாவட்டங்களைச் சேர்ந்த 52
கிராமங்களில் உள்ள 2,700 விவரம் அறியப்படாத, அடையாளம் காணப்படாத 2,943க்கும் மேலான சடலங்களைக் கொண்ட புதைகுழிகள் குறித்து இங்கு ஆவணப்படுத்தப்படுகிறது.
இவ் ஆவணம், கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டகரல் ஸ்டெடியில் தொல்லியல் பிரிவு பேராசிரியரான முனைவர் அங்கனா சட்டர்ஜி, காஷ்மீர் பிரச்னை மீதான சர்வதேச
மக்கள் தீர்ப்பாயத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆன வழக்கறிஞர் பர்வேசு இம்ரோசு, இ.பி.டபிள்யூ, என்ற பத்திரிகையில் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த கௌதம் நவ்லாகா, காஷ்மீர் சிவில் சமூகத்தின் கூட்டணி என்ற அமைப்பின் துணைத்தலைவரான சாஹிர்
உத்தின், மும்பை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தலைசிறந்த வழக்கறிஞர் மிஹிர் தேசாய், ஜம்மு காஷ்மீர் சிவில் சமூகத்தின் கூட்டணியின் திட்ட ஒருங்கிணைப்பாளரான குர்றம்பர்வேசு ஆகியோர் அடங்கிய குழுவினரால் தயாரிக்கப்பட்டது.

ஆய்வின் முடிவுகள்

1999-2009ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் மோதல்களிலும், போலி மோதல்களிலும் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சடலங்களைக் கொண்ட
புதைக்குழிகளைக் குறித்து காஷ்மீர் மீதான சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் ஆய்வு செய்தது. நீதிக்கு புறம்பாகவும், ஒருதலைப் பட்சமாகவும், முகாந்திரம் ஏதும் இன்றியும் படுகொலை
செய்யப்பட்டவர்களின் - இந்திய ராணுவத்தினராலும், துணை ராணுவத்தினராலும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் இப்புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருந்தன.
இவற்றில் 2,373 புதைகுழிகளில் (87.9 விழுக்காடு) பெயர் ஏதும் குறிப்பிடப்படவில்லை. 154 புதைகுழிகளில் இரண்டுக்கு மேற்பட்ட சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தன. 23 புதைகுழிகளில்
இரண்டுக்கும் மேற்பட்ட, மூன்றில் இருந்து 17 வரையிலான சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தன.

பல சடலங்கள் அடங்கிய புதைகுழி என்பதை வழக்கமாக,ஒன்றுக்கும் மேற்பட்ட, அடையாளம் அறியப்படாத, மனித சடலங்கள் அடங்கிய புதைகுழி என அடையாளப்படுத்தலாம்.
மானுடத்திற்கு எதிரான போர்க் குற்றங்களும், இனப்படுகொலைகளும் நடத்தப்படும்போது தான் பல சடலங்கள் அடங்கிய புதைகுழிகள் காணப்படுகின்றன என்று கல்வியறிவாளர்கள்
குறிப்பிடுகின்றனர். திரளாக சடலங்கள் அடங்கிய புதைகுழி என்பதே தண்டனை ஏதும் இன்றி கொலைகளை செய்வதை நோக்கமாக கொண்டிருந்தது என்பதோடு, ஒன்றுக்கு மேற்பட்ட
வர்களை கொலை செய்வதையும், கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை மறைத்து மோசடி செய்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. அப்படியெனில், இந்திய
ராணுவமும், துணை ராணுவப் படையினரும் இணைந்து “ஒட்டுமொத்தமாக புதைப்பதற்கான” பரந்த வெளிகளை உருவாக்க, கூட்டாக புதைப்பது என்பதன் ஒரு பகுதியே
பண்டிபோரா, பாராமுல்லா, குப்வாரா ஆகிய இடங்களில் காணப்படும் புதைகுழிகள் ஆகும்.

மரணத்திற்கு பின்னர், பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் தொடர்ந்து (routine) ராணுவத்தாலும், உள்ளூர் காவல்துறையினரை உள்ளடக்கி, துணை ராண்வப் படையினராலும் கையாளப்பட்டது. குறிப்பாக ஜம்மு - காஷ்மீர் காவல் துறையினரால் அவ்வுடல்கள் “ரகசிய புதைகுழிகளுக்கு” கொண்டு வரப்பட்டன. இப்புதைகுழிகள், உள்ளூரில் சவக்குழியை தோண்டுபவர்களோடு, அவற்றை பாதுகாப்பவர்களாலும் தோண்டப்பட்டு, அவற்றில் சாத்தியப்படும் போதெல்லாம், இஸ்லாமிய மத உணர்வுகளை கருத்தில் கொண்டு, சடலங்கள் தனியாகவும், குறிப்பாக ஒட்டுமொத்தமாக அல்லாமல் புதைக்கப்பட்டன.

இப்புதைகுழிகளில், சில விதிவிலக்குகளைத் தவிர,பெரும்பாலும் ஆண்களின் சடலங்கள் காணப்பட்டன. சாதாரண குடிமகனுக்கு எதிரான வன்முறை என்பது விரிவடைந்து
பெண்கள் மீதும் வன்முறை ஏவிவிடப்படுகின்றன. இவ்வாறு காணாமல் போவது, மரணங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, சிதறிப்போன குடும்பங்களை கவனிக்கும் கடமையை
மேற்கொள்ளும்படியும், நீதியை பெறுவதற்கான பணிகளில் ஈடுபடும்படியும் பெண்கள் உந்தப்படுகின்றனர். இப்புதை குழிகள், வயல்வெளிகள், பள்ளிகள், வீடுகள், பொதுவான சமூக
நிலங்களில் அமைந்துள்ளன என்பதால், உள்ளூர் சமூகத்தினர் மீது இதன் தாக்கம் பயங்கரமானதாகக் காணப்படுகிறது. இந்திய ராணுவமும், கூட்டு காஷ்மீர் காவல் துறையினரும் புதைகுழியில், சவக்குழியில் புதைக்கப்பட்ட முகம் தெரியாத
அடையாளம் காணப்படாத சடலங்கள் யாவும் அயல் நாட்டு தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகளின் சடலங்கள் என்று வழக்கமாக கூறி வருகின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் எல்லைப் பகுதிகளின் வழியாக காஷ்மீரத்திற்குள் ஊடடுருவும்
போது அல்லது காஷ்மீரில் இருந்து ஆயுதப் பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தானிற்குள் புக முயன்றபோது, சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். அதிகாரப்பூர்வ அரசு சொல்லாடல்களில், தற்போதைய உள்ளூர் காஷ்மீர் குழுக்களின்
வன்முறையற்ற அரசியல் மற்றும் பிரதேச சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை, உள்ளூர் எதிர்ப்பு நடவடிக்கை போராட்டங்களை, பயங்கரவாத நடவடிக்கைகள் என்று
சித்தரித்து எல்லை தாண்டிய தீவிரவாதத்துடன் இணைத்து ஊதிப் பெருக்கி குறிப்பிடுகின்றனர்.

கணிசமான நிகழ்வுகளில், சடலங்களை தோண்டி எடுத்து அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வுகளில்
காஷ்மீர் நெடுகிலும் நடந்த “மோதல் கொலைகள்” யாவும் “போலி மோதல் கொலைகளே” என்று உண்மையில் உறுதி படுத்தப்பட்டுள்ளது. சில நிகழ்வுகளில் சடலங்கள் புதைக்கப்
பட்டதற்கு பின்னர், அவற்றை அடையாளம் காண்பதற்கு இரு வழிமுறைகள் கையாளப்பட்டன. அவை (1) சடலங்களை தோண்டி எடுத்து அடையாளம் காண்பது (2) புகைப்படங்களை பயன்படுத்தி அடையாளம் காண்பது என்பன.

காஷ்மீரத்தின் எண்ணற்ற மாவட்டங்களில், இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய 50க்கும் மேற்பட்டதான மோதல் படுகொலைகள் என்று குறிப்பிட்டவை குறித்தும், இவ்வறிக்கை
ஆளிணிவு செளிணிதது. இவ்வாறு கொலை செளிணியப்பட்டவர்களில் 39பேர் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த எதிர்ப்பாளர்கள். 4 பேர் இந்து மதத்தை சேர்ந்த எதிர்ப்பாளர்கள். 7 பேர் எத்தகையினர் என தீர்மானிக்கப்பட இயலவில்லை. இந்த நிகழ்வுகளில் 49 பேர்கள்
பாதுகாப்பு படையினரால் “அயல்நாட்டு தீவிரவாத கலகக்காரர்கள்” என்று முத்திரை குத்தப்பட்டவர்கள். ஒரு சடலம் நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டது. தொடர்ந்த
ஆளிணிவுகளின் அடிப்படையில் இவர்களுள் 47 பேர் போலி மோதல் படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் என்றும் ஒருவர் உள்ளூர் தீவிரவாதி எனவும் அடையாளம் காணப்பட்டது.

சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் காஷ்மீரில் உள்ள 10 மாவட்டங்களில், மூன்று மாவட்டங்களில் மட்டுமே, பகுதியளவில் மட்டுமே ஆய்வுகளை மேற்கொள்ள முடிந்தது. எங்களது
ஆய்வுகளும், துவக்கநிலை சாட்சியங்களும் அங்கு நிலவும் கடுமையான நிலைமையை சுட்டிக்காட்டுகின்றன. அனைத்து 10 மாவட்டங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமாயின் 1989ம் ஆண்டில் இருந்து காணாமல் போக நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் 8000க்கும் மேற்பட்டவர்களாக இருக்கக்கூடும் என மதிப்பிடுவது நியாயமானதாகவே இருக்கும். இது முகம் தெரியாத, அடையாளம் காணப்படாத திரளாக சடலங்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகளில் காணப்படும் சடலங்களின் எண்ணிக்கையுடன் இணையாக உள்ளது.

குற்றச்சாட்டுகள் 

தற்போது நடைபெற்றுவரும் மோதல்கள் என்ற பின்னணியில் இந்தியாவினால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரத்தில் கொலைகளையும், வன்முறைகளையும் நிகழ்த்த கையாண்ட வழிமுறைகளும், திட்டங்களும் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகும்.
இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரத்தில், இந்திய ஆட்சி முறையானது மரணத்தையும், கட்டுப்பாட்டையும், சமூக கட்டுப்பாட்டிற்கான தந்திரங்களாக கையாண்டு வருகிறது.
கட்டுப்பாடானது கண்காணிப்பினாலும், தண்டனையாலும்,அச்சத்தாலும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. “சட்டத்திற்கு புறம்பான” வழிகளிலும், சட்டத்தின் அங்கீகாரம் அளிக்கப்பட்டவர்களாலும் மரணங்கள் பரவலாக்கப்பட்டு வருகின்றன.
ஆள்வதற்கான இந்த தந்திரங்கள் கொல்வதற்கும், சாவைப் பற்றிய அச்சத்தை மட்டுமல்லாது கொலை பற்றிய அச்சத்தை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பரந்த அளவிலும் தீவிரமான முறையிலும் நடத்தப்படும் சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள், ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு எதிராக, இந்திய அரசின் ராணுவத்தாலும், துணை
ராணுவப் படையினராலும் தொடர்ச்சியாகவும் விரிந்த அளவிலும் நடத்தப்படும் தாக்குதலின் ஒரு பகுதியே ஆகும். சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் இந்த அறிக்கையில் முன்வைத்துள்ள
சாட்சியங்களை பரிசீலிக்கவும், ஒப்பீட்டு பார்க்கவும், பொருத்தமானதா என பரிசீலனை செய்யவும், நம்பத்தகுந்த சுயேச்சையான சர்வதேச அமைப்புகளை கேட்டுக்கொள்கிறது. இது
மட்டுமன்றி, இவ்வமைப்புகள் இந்திய அரசை இதுபோன்ற ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ளும்படி கோர வேண்டும் என முன்வைக்கிறது.

ஜம்மு-காஷ்மீரத்தில் இந்திய நிர்வாகம் மானுடத்திற்கு எதிராக கொடுமைகள் இழைத்துள்ளது என்ற கருத்தை சர்வதேச அமைப்புகளும் நிறுவனங்களும் பரிசீலிக்கவில்லை. ஐக்கிய
நாடுகள் அவையும் அதன் உறுப்பு நாடுகளும் இந்திய அரசால் காஷ்மீரம் ராணுவமயப்படுத்தப்படுவதன் மோசமான விளைவுகளை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ ஆற்றலற்ற வகையில் உள்ன என நாங்கஷீமீ குறிப்பிட விரும்புகிறோம். இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள முகம் தெரியாத, அடையாளம் காணப்படாத திரளாக சடலங்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும்
சாட்சியங்கள் குற்றவாளிகளை தண்டித்து பிற நீதித்துறை சமூகபோக்கின் ஊடே நீதியை பெறவும் பயன்படுத்தப்பட வேண்டும்.

1989க்கும், 2009க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரம் ராணுவமயமாக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட வன்முறையில் 70,000க்கும்
மேற்பட்ட சாவுகள் நிகழ்ந்துள்ளன. இப்படுகொலைகள்,சட்டத்திற்கு புறம்பான அல்லது போலி மோதல் படுகொலைகள்,சிறைக் கொடுமைகள், பிற வழிகளிலான கொடுமைகள் மூலமாக
நிகழ்த்தப்பட்டு உள்ளன. நிகழ்ந்து வரும் சச்சரவுகளில் (conflict) எந்தவித தண்டனையும் இன்றி, 6,67,000 ராணுவ, துணை ராணுவப் படையினர் தொடர்ந்து செயல்படுவதுடன் தொடர்ந்து காஷ்மீரத்தில் சட்டம் ஒழுங்கை முறைப்படுத்தி வருகின்றனர்.
இந்திய அரசே கூட சட்டம், அரசியல் மற்றும் ராணுவ நடவடிக்கைகளின் மூலம் இந்தியாவின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து மோதல்கள் நீடித்து கொண்டிருப்பதையே வெளிப்படுத்தி வருகிறது.

xxxxxxxx

இந்திய அரசே!

* ராணுவ மயமாக்கலை உடனே கைவிடு

* காஷ்மீரத்தில் உள்ள 6,67,000 ராணுவ, துணை ராணுவப் படையினரை வாபஸ் வாங்கு!

* ராணுவப் படையினருக்கான தனிச்சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் வாங்கு!

* அப்பாவி மக்களை மோதல் படுகொலை செய்த ராணுவ அதிகாரிகள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வகை செய்!

* காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையில் போராடும் மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்து!
///////////////////////////////////////////////////////////////////////////////
வெளியீடு:
குடியுரிமை பாதுகாப்பு நடுவம்
17, பாலாஜி மேன்சன், முள்ளுவாடி கேட் அருகில், சேலம் - 1