திங்கள், 27 ஜனவரி, 2020

பாம்புக் கறியில் இருந்து கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற தகவலால் சைவத்துக்கு மாறும் சீனர்கள்!

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ள நிலையில், ஊஹான் உள்ளிட்ட 13 நகரங்களில் வசிக்கும் மூன்றரை கோடி மக்கள் வெளியேற சீன அரசு தடைவிதித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய ஊஹான் நகர மருத்துவமனைகளில் நீண்ட வரிசை காணப்படுகிறது. கூட்டம் அலைமோதுவதால் பலரும் சிகிச்சை பெற முடியாமல் வீடு திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக மருத்துவமனையை 6 நாளில் கட்டி முடிக்க சீன அரசு பணிகளை துவங்கியுள்ளது.

பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீனா தடை செய்த நிலையில் பலி எண்ணிக்கை 82 ஆக அதிகரித்து அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கையும் 1000 ஆக அதிகரித்துள்ளது.

இதனால் பதறிப்போன சீன அரசு, ஊஹான், ஹூவாங்காங், இசோ உட்பட 13 நகரங்களில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நகரங்களை விட்டு மக்கள் வெளியேறவும் தடை விதித்துள்ளது.

இரண்டரை கோடி பேர் வசிக்கும் ஹூவாங்ஷி நகரில் படகுப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 3.5 கோடி பேரின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பாம்பு கறியிலிருந்து நோய் பரவியிருக்கலாம் என்று சீன விஞ்ஞானிகள் கூறியிருப்பதால், மக்கள் ஊர்வன பறப்பன போன்றவற்றை விடுத்து காய்கறி மார்க்கெட்டுகளை நாடத் தொடங்கியுள்ளனர். எனினும், இதற்கான ஆய்வு முடிவுகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

ஹாங்காங்கிலும் கொரோனா வைரஸ் சோதனைக்காக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தற்போது சிங்கப்பூர் மற்றும் வியட்நாமிலும் பரவியுள்ளது. சீனாவில் இருந்து திரும்பிய 2 ஆயிரம் பேரை தீவிரமாக கண்காணிக்கும் இங்கிலாந்து அரசு யாராவது பாதிக்கப்பட்டவர்களை வீட்டிலேயே அடைத்து வைக்க திட்டமிட்டுள்ளது. இதனிடையே ஊஹான் நகரில் இருந்து இத்தாலிக்கு வந்த பயணிகள் கடுமையான சோதனைக்கு பின்னரே நாட்டிற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் கொரோனா தொற்றை பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்காதது சந்தேகங்களை கிளப்பியுள்ளது.