சனி, 21 செப்டம்பர், 2019

போலி செய்திகளை பரப்பி வந்த ஆயிரக்கணக்கான அக்கவுண்டை முடக்கியது டுவிட்டர்

வாஷிங்டன்:

நவீன உலகில் செய்தி ஊடகங்களை காட்டிலும் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் செய்திகள் வேகமாக பரவி வருகின்றன. அதிலும் குறிப்பாக சமீப காலமாக சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரவுவது அதிகரித்து வருகிறது. இந்த போலி செய்திகள் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதனால் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் சில டுவிட்டர் கணக்குகளில் இருந்து இந்திய ராணுவத்தினர் காஷ்மீர் மக்கள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக போலியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். குறிப்பாக 'கேம் ஆப் திரோன்ஸ்’ திரை தொடரில் வரும் நடிகையின் புகைப்படத்தை வெளியிட்டு இந்த பெண்ணின் கண் பார்வை இழப்புக்கு காரணம் இந்திய ராணுவத்தினர் என போலியான செய்திகள் பரப்பினர்.

மேலும், அசாம், ஜார்க்கண்ட் உள்பட பல மாநிலங்களில் குழந்தை கடத்தல் சம்பவங்களில் பலர் ஈடுபடுவதாக சமூக வலைதளங்களில் போலியாக பரவிய செய்திகளால் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இதுபோன்ற போலி செய்திகள் இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு விவகாரங்கள் தொடர்பாக போலி கணக்குகள் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்த சமூக வலைதள நிறுவனங்கள் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் போலி டுவிட்டர் கணக்குகள் மூலம் போலி செய்திகளை வெளியிட்டு வந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் இன்று முடக்கியுள்ளது.

அமெரிக்கா, சீனா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து செயல்பட்டு வந்த போலி டுவிட்டர் கணக்குகளை நீக்கியுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.