வியாழன், 11 ஜூலை, 2019

2027ம் ஆண்டுக்குள் மக்கள் தொகையில் இந்தியா சீனாவை மிஞ்சிவிடும்: ஐநா

2027ம் ஆண்டுக்குள் மக்கள் தொகையில் இந்தியா சீனாவை மிஞ்சிவிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 

2019ம் ஆண்டிற்கான உலக மக்கள் தொகை ஆய்வறிக்கையை ஐ.நா. அளித்திருந்தது. அதில் இந்திய மக்கள் தொகை தற்போது 137 கோடியாகவும், சீன மக்கள் தொகை 143 கோடியாகவும் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் 2027ம் ஆண்டிற்குள் சீன மக்கள் தொகையை இந்தியா முந்தி இந்த நூற்றாண்டில் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறிவிடும் என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2050ம் ஆண்டிற்குள் இந்தியாவின் மக்கள் தொகை மேலும் 27 கோடி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சீனாவின் மக்கள் தொகை 3 கோடி குறையும் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது 770 கோடியாக உள்ள உலக மக்கள் தொகை அடுத்த 30 ஆண்டுகளில் 970 கோடியாக அதிகரிக்கும் என ஐ.நா. தெரிவித்துள்ளது. மேலும் இந்த நூற்றாண்டு இறுதியில் உலக மக்கள் தொகை 1,100 கோடியை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.