தோழர்களே, நண்பர்களே
நாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல!
The country is run by the people; Not by a man!
ஆனால் தற்போதைய உலக ஒழுங்குமுறையின் நலன்சார் அரசியலும், மாற்றங்களையும் கொஞ்சம் உய்த்தறிய வேண்டும். பத்து வருடங்களாக என் வலைதளத்தில் பதியப்பட்ட கட்டுரைகளும், பகிர்வுகளும் மாற்றுச்சிந்தனைகான பார்வைகளையும், பாதைகளையுமே வலியுறுத்துகின்றது!
தொடர்ச்சி.... மறுகாலனியாக்கத்தின் விளைவாக அரசுக் கட்டமைப்பு, அரசாங்கம், அவற்றின் அதிகாரங்கள், நீதிமன்றம், தேர்தல், அரசியல் ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்தும், அரசியலிலிருந்து மக்கள் மென்மேலும் விலக்கி வைக்கப்பட்டு அரசியலற்றவர்கள் ஆக்கப்படுவது குறித்தும் அதிகமாக சிந்திப்பீர்கள். ஓரளவு அரசியல் தெரிந்தவர்கள், அக்கறை உள்ளவர்கள் பகுத்தறிவார்கள் என்று நம்புகிறேன். இந்த ஜனநாயகம் போலி ஜனநாயகமாக மட்டுமல்ல, ஒரு பாசிச அரசாகவும் மாறிவருகிறது என்பதை இனிவரப்போகும் கட்டுரை தரவுகளோடும், ஆய்வுகளோடும் நிறுவுகிறது.
இங்கே நிறங்களுக்காக கட்சி மோதல்களில் ஈடுபடும் தலைமைகள் சிறிதேனும் மக்களை சிந்திப்பதே இல்லை. சிறுபான்மை மக்கள் தக்க வைக்கும் அரசியல் கதிரைகளுக்கான கறிவேப்பிலைகள். இங்கே அக்கறைகளும், அன்புகளும் அதிகம் இருப்பின் இன்னும் அரசியல் கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருக்க மாட்டார்கள். பேரம் பேசுவதற்கும் பேரினவாத முன்மொழிவுகளுக்கும் தனிநிரல் கொள்கைகள் உண்டு.
முதலாளிகளே அரசியல்வாதிகளாகவும், அரசியல்வாதிகளே முதலாளிகளாகவும் மாறும் நிலையில், கார்ப்பரேட் கொள்ளையர்களே அரசு, அரசாங்கம் இரண்டையும் தீர்மானிக்கும் நிலையிலும், இலங்கையின் விதி ஏகாதிபத்தியங்களால் எழுதப்படும் நிலையில் ஒட்டுமொத்தமாக இன்று நாடு இருக்கும் நிலையில் அதை மாற்றும் கடமையும் நமக்கிருக்கிறது. இதன் பொருட்டு அரசியல் ரீதியில் நாம் செயல்படவேண்டிய கடமையையும் இந்த கட்டுரை வேண்டுகிறது. வாருங்கள், இணைந்து செயல்படுவோம்!
சாராம்சமாக சொன்னால், தனது ஆதிக்கத்திற்கும் பெருக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் தடையாகவுள்ள ‘தேசிய’ அரசு, தேசங்களின் ‘இறையாண்மை’, அவற்றின் சட்டங்கள் ஆகியவற்றைத் தகர்ப்பதுடன், இத்தகைய தேசிய அரசுகளுடன் சேர்த்து கட்டியெழுப்பப்பட்ட முதலாளித்துவ ஜனநாயகத்தையும் தகர்த்து நொறுக்கி வருகின்றது சர்வதேசியமயமாகிவிட்ட ஏகாதிபத்திய நிதிமூலதனம். மேல்நிலை வல்லரசுகளின் வெளிப்படையான தலையீடுகள் ஆக்கிரமிப்புகள் ஆகியவை ஒருபுறமிருக்க, உலகப் பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கான சர்வதேச நிறுவனங்கள் என்றழைக்கப்படும் உலக வர்த்தகக் கழகம், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளின் ஆணைகளுக்கு ஆடும் அரசாகவே, இலங்கை அரசும் அதன் சட்டமன்றங்கள் நாடாளுமன்றங்களும் மாற்றப்பட்டுள்ளன.
மேல்நிலை வல்லரசுகள் மற்றும் ஏகாதிபத்தியங்களின் அதிகார வர்க்கங்களாலும் தேசங்கடந்த மற்றும் பன்னாட்டு தொழிற்கழங்களின் நிர்வாகிகளிலும் சர்வதேச நிதிமூலதன கும்பல்களாலும் முதலாளித்துவ வல்லுனர்களாலும் நிரப்பப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள்தான் (எந்த மக்களாலும் இவை தேர்ந்தெடுக்கப்படுவதில்லை) உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பெரிதும் பீற்றிக் கொள்ளப்படும் இந்திய ஜனநாயகத்தை, அதன் அரசை, கட்டுப்படுத்துகின்றன, ஆட்டுவிக்கின்றன.
மறுகாலனிய சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும் ஆட்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் பொருளாதாரம் எப்படி பன்னாட்டு தொழிற்கழகங்கள் மற்றும் சர்வதேச நிதிமூலதனத்தின் நலனுக்கேற்ப தனியார்மயம் தாராளமயம், உலகமயத்துக்கு உட்படுத்தப் பட்டுள்ளதோ, அதேபோல்தான் நம் நாட்டிலும். இவைகளின் நலன்களுக்காகவும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் உலக மேலாதிக்கத்திற்காகவும் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகள் அரசுக் கட்டமைப்புக்குள்ளும் புகுத்தப்படுகின்றன. அதன் கட்டுமானம், சட்டங்கள், விதிமுறைகள், பணிகள், செயல்பாடுகள் எல்லாம் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு ‘ஜனநாயக’ அரசமைப்பின் கட்டுமானங்களிலும் அதன் நடைமுறைகளிலும் முதலாளித்துவ சந்தையின் விதிகள் புகுத்தப்பட்டு அவை மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இதனால் முதலாளித்துவ சந்தையின் விதிகளே ஜனநாயகத்தின் விதிகளாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.
அரைகுறை இறையாண்மையையும் இழந்து வருகின்ற இலங்கையில் நிலவுகின்ற அல்லது மாற்றி உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிற போலி ஜனநாயகம் கூட அதன் உள்ளடக்கத்தை முற்றிலுமாக இழந்து வருகின்றது. ஏற்கெனவே குறிப்பிட்டபடி, மக்களைப் பொருத்தவரை ஜனநாயகம் என்பது ஓட்டளிப்பதாக மட்டும் வெட்டி குறுக்கப்பட்டு விட்டது. அதுவும் கூட, ‘தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கங்கள் நாட்டு நலன், மக்கள் நலன் கருதி, விருப்பப்பட்டு, எந்தவித நெருக்குதலுமின்றி சுதந்திரமாக சுயேச்சையாக தனியார்மய தாராளமய கொள்கைகளை மேற்கொண்டு வருகின்றன’ என்று காட்டி மறுகாலனியாதிக்கத்திற்கு நியாய உரிமை பெறுவது என்ற காரணத்திற்குத்தான் மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.
பிராந்திய தேச வரலாற்றை பின்னோக்கினால் இந்தியா ஆங்கிலேயர்களின் நேரடி காலனியாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த காலகட்டத்தில், விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கும், எதிர்ப்புகளை நிறுவனமயமாக்குவதற்கும் பதவிகளில் ஒட்டிக் கொண்டு சலுகைகளை அனுபவிக்கவும் பொறுக்கித் தின்பதற்கும் விழைந்த நாட்டுப்பற்று அற்ற பிழைப்புவாத கும்பல்களை ஊக்குவிக்கவும் மேலிருந்து திணிக்கப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகம். காலனியாதிக்கத்தை கட்டிக் காக்க ஆங்கில ஏகாதிபத்தியவாதிகளின் கிரிமினல் மூளையில் உதித்த இந்த சாணக்கிய திட்டம் வெற்றிகரமாகவே நிறைவேறிற்று என்று சொல்ல வேண்டும். காலனிய காலம் தொடங்கி 1950களின் தொடக்கத்தில் திணிக்கப்பட்ட நவீன காலனிய ஆதிக்க காலகட்டத்தில் செழித்து வளர்ந்த அரசியல் பிழைப்புவாதமும் சீரழிவும் 1980, 1990களில் அதன் உச்சத்தை எட்டியது. தனிக்கட்சி ஆட்சி போய் கூட்டணி ஆட்சிகள், கட்சித் தாவல்கள், கூட்டணிகள் உடைவது, அரசாங்கங்கள் கவிழ்வது, புதுக்கூட்டணி, புது அரசு, சில மாதங்கள் வருடங்களுக்குள் மீண்டும் கட்சி தாவல்கள், அரசுகள் கவிழ்வது என்று நாடாளுமன்ற அராஜகம் தலைவிரித்தாடியது.
மேல்நிலை வல்லரசுகளின் தோற்றம், நிதிமூலதனம் சர்வதேசியமயமானது, தேசங்கடந்த மற்றும் பன்னாட்டு தொழில் கழகங்கள், அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி, ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடி ஆகியவைகளின் விளைவாக நவீன காலனியாதிக்கம் அகற்றப்பட்டு மறுகாலனியாதிக்கம் இந்த காலகட்டத்தில்தான் புகுத்தப்பட்டது. சர்வதேச வலைப்பின்னல்களால், ஒரே சங்கிலியால் கட்டப்படிருந்த நிதி மூலதனத்தின் செயல்பாடுகளுக்கும் தேசங்கடந்த தொழில்கழகங்களுக்கும் நாடாளுமன்ற அராஜகமும் நிலையற்ற ஆட்சிகளும் எதிரானவை; எதிர்பாராத வகையில் திடீர் திடீரென தடைபோடுபவை; எனவே, அவற்றை ஒழிக்க வேண்டியது அவர்களுக்கு அவசியமும் கட்டாயமும் ஆகியது. இதற்கேற்பவே மறுகாலனியாதிக்க நலன்களுக்காகவே நிலையான ஆட்சி, சிறந்த அரசாளுமை என்ற முழக்கங்களை முன்வைத்துள்ளனர். நிதிமூலதனம், பன்னாட்டு முதலாளிகளின் தனியார்மய சுரண்டலும் ஆதிக்கமும் தங்கு தடையின்றி நடப்பதற்கு ஏற்ற நிலையான ஆட்சி, சிறந்த ஆளுமை, வலுவான ஆட்சி (failed state ஆக இல்லாமல்) ஆகியவையே தேர்தல் மற்றும் ஜனநாயகத்தின் ஒரே இலக்காக மாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் தேர்தல் என்பது, ஏகாதிபத்தியத்தின் பிள்ளைப்பருவத்தில் அதாவது 20-ம் நூற்றாண்டின் துவக்க பத்தாண்டுகளில், நேரடி காலனியாட்சி பிரதான வடிவமாக இருந்த காலகட்டத்தில், கம்யூனிச, தேசிய இயக்கங்கள் ஏற்றம் பெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், நேரடிக் காலனிய ஆட்சியைப் பாதுகாக்க ஏகாதிபத்தியவாதிகளால் புகுத்தப்பட்டது. அன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்டங்களை நீர்த்துப் போக செய்வதற்கும் எதிர்ப்புகளை நிறுவனமயமாக்குவதற்கும், பதவிகளில் ஒட்டிக் கொண்டு அரசு சன்மானங்களை பொறுக்கித் தின்னவும் சலுகைகள் கௌரவங்களை அனுபவிக்கவும் நாட்டுப்பற்று அற்றுப் போகும்படியான பிழைப்புவாத கும்பல்களை உருவாக்கவும் ‘ஜனநாயக தேர்தல் அரசியலைப்’ புகுத்துவது ஏகாதிபத்தியங்களின் நலனுக்கு உகந்ததாக இருந்தது. இன்று ஏகாதிபத்தியத்தின் ஏற்றத்தாழ்வான அரசியல், பொருளாதார வளர்ச்சிப் போக்கின் விளைவாக மேல்நிலை வல்லரசுகள் அவற்றின் மேலாதிக்கம், ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடி, பின்னடைவு மற்றும் சீரழிவு காரணமாக கம்யூனிச தேசிய இயக்கங்கள் தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள உலக நிலைமை ஆகியவற்றின் காரணமாக, மறுகாலனியாதிக்க முறையிலான காலனிய ஆட்சி வடிவத்தை மேலாதிக்க வல்லரசுகள் பிரதானமாக கையாண்டு வரும் நிலைமையில் ஜனநாயகமும் தேர்தலும் வெட்டி சுருக்கப்பட்டு பரந்துபட்ட மக்கள் அரசியலில் இருந்தே விலக்கி வைக்கப்பட்டு வருகின்றனர்.
‘தேர்தல் அரசியல்’ சீரழிவின் விளைவாக பல்கிப் பெருகி பேயாட்டம் போடுகின்ற பிழைப்புவாதக் கும்பல்கள் நாடாளுமன்ற அராகஜம் ஆகியவற்றினால் பாதிக்கப்படாமல், சட்டமன்றங்கள் நாடாளுமன்றங்களுக்கு இதுவரையிலிருந்த வரம்புக்குட்பட்ட சட்டமியற்றும் அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்களையும் பறித்துக் கொண்டு அவற்றை வெறும் ‘நீயா, நானா’ விவாத மன்றங்களாக்கி விட்டு, அந்த மன்றங்களுக்கு வெளியே எல்லா அதிகாரங்களையும், கார்ப்பரேட் முதலாளிகள், அவர்களின் கூலி வல்லுனர்கள், அதிகார வர்க்கத்தினர் நம்பகமான அரசியல் அடிவருடிகள் ஆகியோரைக் கொண்ட குழுக்களிடம் ஒப்படைக்கும் வகையில் அரசின் கட்டமைப்பும் அதன் செயல்பாடுகளும் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.
இதன் இன்னொரு பக்கமாகத்தான், எப்படியும் பணம் சம்பாதித்து உல்லாசமாக வாழவேண்டும் என்கின்ற நெறியின்மையிலும், நுகர்வு வெறியிலும், போதையிலும் சீரழிவிலும் மக்களை ஆழ்த்துவதும், கிரிக்கெட் திரைப்படம்செல்போன் போன்ற மோகங்களால் மட்டுமே ஆட்டுவிக்கப்படுகின்ற, தேசப்பற்றோ, கொள்கை இலட்சியங்களோ அற்ற நடமாடும் பிண்டங்களாக மக்களை மாற்றுவதும் திட்டமிட்டு செய்யப்பட்டு வருகின்றது. காலனிய கட்டத்தில் தேர்தல் அரசியலைப் பகுத்தி மக்களைச் சீரழித்த ஏகாதிபத்தியம், மறுகாலனிய கட்டத்தில் மக்களை அரசியல் அற்றவர்களாகவும், அரசியலின்மீதே அருவெறுப்பு கொண்டவர்களாகவும் மாற்றி வருகின்றது. அரசியல் பச்சோந்தித்தனம், பச்சையான அம்மணமான, வெட்கம் மானம் ஏதுமற்ற பிழைப்புவாத அரசியல் தகிடுதத்தங்களால் வெறுப்பின் எல்லைக்கே சென்று, யாராவது நல்லவன் வந்து ஏதாவது நல்லது செய்ய மாட்டானா என எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து, மக்களது மனம் இறுகி விட்டது. ஓட்டை ஒரு சரக்காக கருதும் மனநிலைக்கு கருத்து ரீதியாகவே அவர்கள் வந்து விட்டார்கள். அல்லது யார் அதிக பொருட்களும் இலவசங்களும் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டை விற்கத் தயாராக இருக்கிறார்கள். “நீ எனக்கு பதவி தா; நான் உனக்கு மிக்சி, கிரைண்டர், மடிக்கணினி தருகிறேன்” என்று பகிரங்கமாக ஓட்டை விலைபேசுவதாக தேர்தலே மாறியிருக்கிறது.
“நல்லவன் ஆட்சிக்கு வந்தால் நல்லது நடக்கும்; ஆனால் அது எங்கே நடக்கப் போகிறது?” என்று நொந்து கொள்வது மட்டுமல்ல, வாய்ப்பு கிடைத்தால் நாமும் பணக்காரனாகி விட வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியிருக்கிறது. நாடாளுமன்றத்தின் மீதான மாயையும் இல்லை; ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. அது அரசியல் ரீதியில் காலாவதியாகிவிட்டதா என்ற கேள்விக்கும் இடமில்லை. ஏனென்றால், அந்த வேலையை மறுகாலனியாதிக்கவாதிகள் செய்து விட்டனர்.
நிறைவேற்றப் போகும் புதிய ஜனநாயகப் புரட்சி மட்டும்தான் இந்த சின்னஞ்சிறு தேச மக்களின் எதிர்காலம். அந்த எதிர்காலத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்!