புதன், 5 ஏப்ரல், 2017

உயிரியல் வளத்தை பாதுகாத்து சூழல் சமநிலையைப் பேணுவோம்.

வெறுமனே இனம்சார், மதசார், மொழிசார் அரசியலுக்குள் மூழ்கிக்கிடந்து தங்களது உரிமைகளை பாதுகாக்க தெரிந்த சமூகத்துக்கு விலங்குகளின் உரிமைகளையும் அவற்றின் வாழ்விட எல்லைகளையும் பாதுகாக்க தெரியவில்லை..!
இலங்கையின் அனைத்து சரணாலயங்கள், காடுகளின் எல்லைகள், இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வேட்டையாடுபவர்கள் போன்றோரின் மீது பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு ஒப்பான சட்டம் இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்யத்தவறினால் ஆசியாவின் அறிய உயிரினச்செழுமையும் இயற்கை வளமும் கொண்ட இலங்கையின் தனித்துவம் இழக்கப்படும்.
முடிந்தால் மாகாண சபைகள் இந்தியாவின் அநேக மாநிலங்களில் விதிக்கப்பட்ட#பசுவதை_தடுப்புச்சட்டம்.
காடுகள் மற்றும் இயற்கை சூழல்கள் பாதுகாப்புச்சட்டம்
#பிராணிகள்_வதைத்_தடுப்புச்சட்டம் பல்லுயிர் பெருக்க ஒப்பந்தம். காடுகள் மற்றும் இயற்கை சூழல்கள் பாதுகாப்புச்சட்டம், இது போன்ற சட்டங்களை இயற்றினால் காட்டிலேயாவது விலங்குகள் நிம்மதியாவது உறக்கம் கொள்ளும். பௌத்த விழுமிய நாடாக காட்டிக்கொள்பவர்கள் முதலில் இதை செய்யட்டும்.
மனித குடியேற்றம் என்ற பெயரில் காடுகளை அழித்து விலங்குகளின் இடப்பெயர்வுக்கும் இனஅழிப்புக்கும் நீங்கள் வழிசெய்யாதீர்கள் என்பதே என் தாழ்மையான கருத்து.
இந்த பதிவை பகிர்வதற்கு காரணம்..!
(
மான், மரை இறைச்சி இருக்கண்ணே வேணுமா? வன்னி தேக்கு முதிரை மரக்குத்திகள் இருக்கு வேணுமா? இன்னும் வனவிலங்குகள் பறவைகள் இறைச்சிகளும் விற்பனைக்கு இருக்கு வேணுமா? கட்டக்காலி மாட்டு இறைச்சி வேணுமா? சிறுத்தைத்தோல்,யானைத்தந்தம் வேணுமா?? கடத்தல் ஆட்டிறைச்சி வேணுமா? ஆமை இறைச்சி வேணுமா? வேணுமா? வேணுமா????
சரணாலயங்களின் எல்லை ஒட்டி நடந்து கொண்டிருந்த இந்த சட்ட விரோத செய்திகள் நகர் புறம் வரை எட்டியதால் தான்...)
இந்த பூமியும் வாழ்க்கையும் வெறும் மனிதர்களுக்குதான் என நினைத்து இயற்கையை சிதைத்து மிருங்களை கொன்று புசித்தால் மாத்திரம் உங்கள் வாழ்க்கையும் மத நம்பிக்கைகளும் நிறைவு பெறுவதில்லை. படைப்பில் கடைசியாக படைக்கப்பட்ட மனிதனாக மத நூலில் குறிப்பிட்டிருந்தால் படைப்பை நீ பாதுகாத்து கொள் என்ற வார்த்தைகளையும் கடவுள் உரைத்துள்ளான் என்பதையும் நான் அறிந்துள்ளேன். அழிவின் இறுதியில் உள்ளவற்றை பாதுகாக்க அவைக்கென்ற ஒரு அரசியல்கட்சிகள் வரப்போவதில்லை. பாகுபாடு அற்று அனைவரும் குரல் கொடுப்போம்.

ஆசியாவின் அரிய உயிரியல் பொக்கிஷம் இலங்கை .
இலங்கையின் உயிரியல் வளங்களை பாதுகாப்போம் .
உயிரியல் வளத்தை பாதுகாத்து சூழல் சமநிலையைப் பேணுவோம் .
உயிரியல் வளங்களுக்கு நன்மை செய்யாவிடினும் தீமை செய்ய வேண்டாம் .
சகல உயிரிகளும் மண்ணில் வாழும் உரிமை பெற்றவை .

உலகிலேயே அதிகூடிய இனச்செளுமை கொண்ட நாடு இலங்கையாகும். இது தென்னிந்தியாவில் காணப்படும் தாவர,விலங்கினங்களுடன் தொடர்புபட்ட பற்பல வன சூழல்பிராந்தியங்களுக்கு தாயகமாகும். ஈரத்தன்மை பொருந்தியபருவப்பெயற்சிக்காற்றுகளால் வருடப்படும் இலங்கையின் தென் - மேற்கு பகுதியில் இலங்கை தாழ்நிலப் மழைக்காடுகள்அமைந்துள்ளன. நாட்டின் மத்திய மலைப்பகுதியை நோக்கிச்செல்லும் போது அவை இலங்கை மலைசார்ந்த மழைக்காடுகளாகமாற்றம் பெருகின்றன. இவ்விரு அயணமண்டல ஈரலிப்பு காட்டுப்பிராந்தியங்களும் இந்தியாவின் மேற்கு மலைத்தொடருடன்நெருங்கிய தொடர்புள்ளவையாக காணப்படுகின்றன.

இலங்கையின் வனப்பகுதிகள் விவசாயம், மரதொழில், கால்நடை போசனம் போன்றவற்றுகாக பெறுமளவில் அழிக்கப்பட்டுள்ளது. பல காப்பரன்கள் எஞ்சியுள்ள வனப்பிராந்தியங்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் முன்றுஉயிரிணமண்டல ஒதுக்கங்கள் உள்ளன.

இலங்கையில் ஆயிரக்கணக்கான விலங்கினங்கள் வாழ்வதுடன், அவற்றில் பல இலங்கை உட்பிரதேசத்துக்குரியவை.
இலங்கையானது பறவை உட்பிரதேச உரிமையின் மையமாக காணப்படுகின்றது. 

இலங்கை தீவின் பரப்பளவுடன் ஒப்பிடுகையில் இங்கு பறவையினங்கள் மிக அதியளவில் காணப்படுகின்றன. 443 பறவையினங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இங்கேயே தங்கி வாழும் பறவைகள் தவிர குறிப்பிடத்தக்க அளவு எண்ணிக்கையிலான இடம்பெயர் பறவையினங்கள், தங்கள் வடகோளத்து வாழ்விடங்களின் குளிர் காலத்தைத் தவிர்ப்பதற்காக இலங்கைக்கு வருபவை.

பறவையினங்களில் 233 இலங்கையிலேயே வசிப்பவை, இவற்றுள் 26 உட்பிரதேசத்துக்குரியவை. ஏனையவை இந்திய தலைநிலத்தில் வாழ்பவை, எனினும் அவற்றில் 80க்கு யல்புகளைப் பொறுத்தவரை தொடர்புடைய இந்திய இனங்களிலிருந்து மிகுந்த வேறுபாடுள்ளவையாக உள்ளன.

காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள்
மண் அரிப்பு  - தற்பொழுது காடுகளின் அழிவின் காரணமாக மண்அரிப்பு தவிர்க்க இயலாத பிரச்சினையாக மாறிவருகிறது. மண் அரிப்பு ஏற்படுவதால் விவசாயம் பெரிதும் பாதிப்பு அடையும். வருடந்தோறும் சுமார் பல ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் மண்அரிமானத்தின் காரணமாக எதுவும் விளையாத வறட்டு நிலமாக மாறிவருகிறது.
பாலைவனங்கள் உருவாதல் - காடுகளின் அழிப்பினால் நிலத்தில் எந்;த உயிரினமும், நுண்ணுயிர்களும் வாழ முடிவதில்லை. மண்ணின் உயிரியல் வளம் அழிவதால் அந்த நிலம் எதற்கும் பயன்படாமலும், எதுவும் விளையாமலும் பாலைவனமாக மாறுகிறது.
மழைபொழிவு பாதிப்பு - மரங்களின் அழிவால் காற்று மண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடின் அளவு  அதிகமாகிவிடுகிறது இதனால் மழை குறைந்து வறட்சி ஏற்படுகிறது.
குறைந்து வரும் மரத்தின் அளவு - தொழில்களுக்குத் தேவைப்படும் மரத்தின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் வீட்டு உபயோகப் பொருட்களான நாற்காலி, மேசை, கட்டில், பீரோ போன்றவை செய்யும் தொழில்கள் நலிந்து விட்டன.
வறட்சி -  மழை பொழியும் பகுதிகளில் உள்ள காடுகள் அழிக்கப்படுவதால் ஓடைகள் வறண்டு விடுகின்றன. ஆறுகளில் வறட்சிக் காலங்களில் மிகக்குறைந்த அளவே தண்ணீர் இருக்கிறது. இந்தக் காரணங்களினால் வறட்சிக்கு வழி ஏற்பட்டு விடுகிறது.
வண்டல் - மலைகளில் இருந்து அரித்துக்கொண்டு வரப்படும் மண் நீர்த்தேக்கங்களிலும், ஆற்றுப்படுககைகளிலும் குவிக்கப்படுகிறது. மலையில் இருந்து வரும் மழைநீரைத் தடுப்பதற்கு காடுகள் இல்லாத காரணத்தினால் இந்த அவலநிலை ஏற்படுகிறது. ஆகவே வண்டல் மண் தேவையில்லா இடங்களில் சேமிக்கப்பட்டு வீணாகிறது. அதுமட்டும் இல்லாமல்  மின்சக்தியின் தயாரிப்பும் குறைகிறது.
மண்ணின் தன்மையை அழிக்கிறது - காடுகள் மண்ணின் தன்மை கெடாமல் பாதுகாத்து வருகின்றன. காடுகளும் மரங்களும் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள மண்ணின் தன்மையை மண்அரிமானம் ஏற்படாமல் காப்பதன் மூலமாக பாதுகாத்து வருகின்றன. காடுகளை அழிப்பதால் மண்அரிமானம் ஏற்படுகிறது இதனால் மண் அதன் தன்மையை இழந்தும் விடுகிறது.
பல்லுயிரின மாறுபாட்டின் இழப்பு- ஒரு தாவரம் அழிக்கப்பட்டால் அதை நம்பி வாழும், அண்டி வாழும் நாலுவகை உயிரினங்களின் அழிவுக்கு காரணமாக அமைந்து விடும். சீனக் காடுகளில் மூங்கில் குருத்துக்களை மட்டுமே சாப்பிட்டு வாழும் பாண்டா கரடிகள் தற்போது அரிதாகிவிட்டன  இதன் காரணம் என்ன ? மூங்கில் காடுகள் அழிக்கப்பட்டு விட்டது தான்.
வேலையில்லாத் திண்டாட்டம் - காடுகளின் அழிப்பினால் காடுகளை நம்பிவாழும் மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. இதனால் இவர்களும் வேலைதேடி நகரத்திற்கு வருகின்றனர். இது வேலையில்லாத் திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கிறது.
இந்த உயிர்க்கோளமான பூமிக்குத் தேவையான பிராணவாயுவை உற்பத்தி செய்வது உலகின் 13 நடுகளில் உள்ள காடுகள் தான். அவற்றில் இந்தியாவும் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத்தொடர்ச்சிமலை, மற்றும் இமயமலைக்காடுகள் ஆகியவை உலகின் உயிர்க்காற்றை உற்பத்தி செய்வதல் பெரும்;பங்கு வகிக்கின்றன. இந்தக் காடுகளை காப்பாற்றுவதன் மூலமாகத்தான் நாம் வெப்பத்தைக் குறைத்து, வெப்ப உயர்வினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து உயிர்களையும், பயிர்களையும் காப்பாற்ற முடியும்.

தொடரும்.........!

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

வரலாற்றின் மர்மங்கள் - 1

பொதுவாக மர்மங்கள் என்றாலே வெளிநாட்டு விசயங்கள்தான் நம் நாட்டில் வெளியிடப்படும் நூல்களிலும் பக்கங்களை நிரப்புகின்றன. இவற்றில் சில படு-சில்லறைத்தனமானது
என்றாலும் கூட நம் 'ப்ரெஞ்சு பியர்ட்' கிறுக்கல் ஆசாமிகள் அதனை வைத்து ஜல்லியடிக்க தயங்குவதில்லை. ஆனால் நம் பழம் இலக்கியங்கள் கூறும் சில விசயங்களை நாம்
ஆராய்ந்து பார்த்தால் அவை தரும் தரவுகளின் அடிப்படையில் ஆராய்ச்சிகளையும் நடத்தினால் எத்தனையோ மர்மங்கள் நம் ஊர்ப்புறங்களில் நமக்காக காத்திருப்பது தெரியும். உலக அளவில் புகழ் பெற்ற மர்மங்களுடன் அவற்றைப்போல (ஒருவேளை அவற்றினை விட முக்கியத்துவம் வாய்ந்த) நம்மூர் மர்மங்களும் கீழே.

அட்லாண்டிஸ்:

கிரேக்க தத்துவ அறிஞரான பிளேட்டோ (கி.மு 428/427-348/347) தமது 'திமேயஸ்' மற்றும் 'கிரேட்டஸ்' எனும் உரையாடல்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த 'லிபியாவும் ஆசியா மைனரும் இணைந்த நிலப்பரப்பைக் காட்டிலும் அதிகமான நிலப்பரப்பினைக் கொண்ட தீவாக' அட்லாண்டிஸைக் குறிப்பிடுகிறார். அத்தீவில் நாகரிகத்தில் முதிர்ச்சியடைந்த ஒரு சமுதாயம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பல தேசங்களைத் தம் ஆளுகையில் வைத்திருந்ததாகவும், பின்னர் அதீத செல்வச்செழிப்பாலும் அதிகாரத்தாலும் அச்சமுதாயம் சீரழிந்ததாகவும், அதனைத்தொடர்ந்து பெரும் நிலநடுக்கங்களாலும் எரிமலைச் சீற்றத்தாலும் அத்தீவு அழிந்ததாகவும் பிளேட்டோ கூறுகிறார். அட்லாண்டிஸ் குறித்த இத்தகவல்களை கிரேக்கச் சட்டங்களை உருவாக்கிய ஸோலான் என்பவரிடம் எகிப்திய ஞானிகள் கூறுவதாக பிளேட்டோ கூறுகிறார். இக்குறிப்புகள் பிளேட்டோவின் காலத்தில் வாழ்ந்த அரிஸ்டாட்டிலால்
(கி.மு.384-322) கற்பனையானவை எனக்கூறப்பட்டாலும், பிளேட்டோவிற்கு பின்னர் இன்று வரையிலும் அட்லாண்டிஸைத் தேடுவோர் உள்ளனர்.



அட்லாண்டிஸ் தீவு : நம்பப்பட்ட ஒரு கற்பனை ஊகம்

பிளேட்டோ வின் 'திமேயஸ்' பல மறைஞானக் குழுக்களுக்கு முக்கிய நூல். எனவே அக்குழுக்கள் தம் கோட்பாடுகளை அட்லாண்டிஸில் உருவானவை எனக் கூறுவதுண்டு. எட்கார் கைஸி எனும் அமெரிக்க 'தீர்க்கதரிசி' தம் 'ஞானதிருஷ்டியில்' அட்லாண்டிஸ் அமெரிக்க கடற்கரைகளில் அமிழ்ந்துள்ளதாகக் கூறினார். ஜான்.எம்.ஆலன் எனும் ஆய்வாளர்
தென்-அமெரிக்க ஏரியில் மறைந்த ஒரு தீவும் நாகரிகமும் உள்ளதாகவும் அதுவே அட்லாண்டிஸ் எனவும் கூறுகிறார்.


அட்லாண்டிஸ் தென்னமெரிக்காவில்? : ஒரு நூல்

பொதுவாக வரலாற்று ஆய்வாளர்கள் அட்லாண்டிஸை பிளேட்டோ வின் கற்பனையில் உருவான உருவகக்கதை என்றே கருதுகின்றனர். ஏனெனில் பிளேட்டோ இத்தகைய உருவகக் கதைகள் மூலம் தத்துவக் கோட்பாடுகளை விளக்குவது வழக்கம். ஆனால் அட்லாண்டிஸுக்கு வரலாற்றடிப்படையில் வித்திட்ட நிகழ்ச்சியாக ஆய்வாளர்கள் கி.மு.1620களில் திரா எனும் சிறு தீவு -நிச்சயமாக கண்டம் கிடையாது- எரிமலைச் சீற்றத்தால் அழிந்ததைக் குறிப்பிடுகின்றனர்.


திரா தீவில் கிரேக்க நாகரிகம் செழித்திருந்தது. அங்குள்ள ஓர் வீட்டுச்சுவரில் தீட்டப்பட்ட
ஒவியம்

திரா தீவின் படம்: தீவுக்கூட்டத்திலேயே பெரியதீவுதான்
திரா

இந்த எரிமலைச்சீற்றத்தின் விளைவான சாம்பல் துகள்கள் எகிப்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விளக்கமும் கூட அனைத்து
ஆராய்ச்சியாளர்களாலும் ஏற்கப்படவில்லை. அட்லாண்டிஸ் உண்மையா? கற்பனையா? உண்மையெனில் அது எங்கு உள்ளது? என்பவை இன்னமும் மர்மமாகவே உள்ளன.


குமரிக்கண்டம்:


குமரி நிலநீட்சி குறித்த முதல் அறிவியல்பூர்வ விளக்க நூல்

பழந்தமிழ் காவியமான சிலப்பதிகாரம் 'குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள' எனக் கூறுகிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் குமரிமலை குறித்தும், அதிலிருந்து தோன்றிய பஃறுளியாறு குறித்தும், குமரி ஆறு குறித்தும் செய்திகள் உள்ளன. இச்செய்திகள் எத்தனை உண்மையானவை? பல தமிழ் அறிஞர்கள் 'குமரிக்கண்டம்' என்று ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்ததாகவும் அங்கு தமிழ் நாகரிகம் ஒரு உயர்ந்த நிலையை அடைந்திருந்ததாகவும் கூறுகின்றனர். பிரம்மஞான சபையினர் 'லெமூரியா' எனகடலில் ஆழ்ந்து போன ஒரு நிலப்பரப்பு குறித்த நம்பிக்கை கொண்டிருந்தனர். இவர்கள் மூலம், இந்தியாவில் பரவிய லெமூரியாக் கோட்பாடும் குமரிக்கண்டமும் இணைந்த ஒரு சித்தாந்தமாகிற்று. புலவர் குழந்தை, அப்பாதுரை, இரா.மதிவாணன் போன்றவர்கள் குமரிக்கண்ட வரைபடங்களை உருவாக்கினர். மார்க்சிசத்தையும் அதீத கற்பனைகளையும் போலி அறிவியல் தரவுகளையும் இணைத்து குமரிகண்டத்தை ஒரு அரசியல் சித்தாந்தத்தின் பகுதியாக மாற்றிக் கொண்டிருப்பவர் குமரிமைந்தன் என்கிற 'ஆராய்ச்சியாளர்'. ஜெயமோகனின் கற்பனை நாவலான 'கொற்றவை' இந்த குமரிகண்டத்தின் அடிப்படையில் அமைந்தது. குமரி கண்ட இயக்கத்தினர் இந்த கற்பனை புனைவை ஏறத்தாழ மதரீதியிலான இறுக்கத்துடனும் நம்பிக்கையுடனும் வரலாற்று ஆவணமாகவே எடுத்துக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. புகழ்பெற்ற நிலவியல் ஆய்வாளரான சு.கி.ஜெயகரன் அண்மையில் வெளியான தமது 'குமரி நிலநீட்சி' எனும் நூலில் இத்தகைய
கற்பனைகள் 'கவித்துவ சுதந்திரத்துடன்' அதீத தமிழ் பற்றினால் உருவாக்கப்பட்டவையென்பதுடன் இவற்றிற்கு அறிவியல் அடிப்படை எதுவும் இல்லையெனக் காட்டுகிறார். எனில் கடல் கொண்ட குமரிக் கோடு என்பது வெறும் கற்பனைதானா? நிலவியல், ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி, இலக்கிய ஆதாரங்கள் மற்றும் தொல்மானுடவியல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு யதார்த்த நிலைப்பாட்டினைத் தன் முடிவாக தருகிறார் ஜெயகரன். வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில் தமிழகம்-இலங்கை கடற்கரைகளை ஒட்டியிருந்து பின்னர் கடலில் மூழ்கிய நிலப்பரப்புகளே குமரி எனும் நிலநீட்சி குறித்த மரபின் வித்தாகும் எனக்கருதும் ஜெயகரன் அவ்வாறு கடல் நீர்மட்ட உயர்வில் உயிர்தப்பியவர்களிடமிருந்து குமரி நிலநீட்சி குறித்த நினைவு இன்றும் நம்மிடம் நிலவுவதாகக் கூறுகிறார். குமரி மாவட்டத்தில் கடற்கரையோர கிராமங்களான முட்டம் போன்ற இடங்களில் அண்மைக்கால நினைவுகளில் கூட கடல் கொண்ட நிலப்பரப்பு குறித்த விவரணைகள் நிலவுகின்றன. நிச்சயமாக எனில் தொல்பழம் மானுடக்குடியேற்ற எச்சங்கள் இன்றும் தென்னக ஆழ்கடலில் - நாம் கண்டடையக் காத்தபடி - துயில் கொண்டிருக்கக் கூடுமா? இனிவரும் நாட்களில் தென்னகக் கடல்களில் ஆழ்கடல் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டால் அது இம்மர்மங்களுக்கு விடை பகரக் கூடும்.

துவாரகை:
அகழ்வாய்வின் வரலாற்றில் ஹோமரின் எலியட் காவியத்தில் கூறப்பட்ட டிராய் நகரினை ஜெர்மானிய அகழ்வாய்வாளர் ஹென்ரிச் ஷிலைமான் கண்டுபிடித்தது மிக முக்கிய
மைல்கல்லாகக் கூறப்படுகிறது.


துவாரகை இப்படி இருந்திருக்குமா? இதிகாச விவரணங்கள் அடிப்படையில் ஒரு கற்பனை

ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியாளர் எஸ்.ஆர்.ராவ்
ஆனால் அதனையொத்த மற்றொரு கண்டுபிடிப்பு டாக்டர்.எஸ்.ஆர் ராவ் எனும் இந்திய அகழ்வாராய்ச்சியாளர் ஆழ்கடலில் துயில் கொண்ட ஒரு நகரத்தைக் கண்டுபிடித்ததாகும். 3700 ஆண்டுகள் இன்றைக்கு முந்திய (இ.மு) காலத்தினைச் சார்ந்த இந்த ஆழ்கடல் நகரத்தை டாக்டர்.எஸ்.ஆர்.ராவ் கண்டுபிடித்தது பழம் காவியமான மகாபாரதத்தில் கூறப்பட்ட விவரணங்களின் அடிப்படையில் என்பதுதான் அதிசயமான விஷயம். இதனையொட்டி பல கேள்விகள் எழுந்துள்ளன.சில வரலாற்றறிஞர்கள் இதுதான் மகாபாரதம் கூறும் துவாரகை என்பதை மறுக்கின்றனர். ஆனால் ராவ் தாம் கண்டெடுத்த முத்திரைகள் மற்றும் சுவர்கள் ஆகியவை மகாபாரத விவரணத்தை பெருமளவு ஒத்திருப்பதைக் காட்டுகிறார்.

துவாரகையில் மூழ்கி நிற்கும் பழம் சுவர்
இந்திய வரலாற்றுப் பாடநூல்களில் இந்திய இதிகாசங்களுக்கு வரலாற்று அடிப்படையில்லையெனக் கற்றுத்தரப்படுகிறது. இந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றாசிரியர்களின் நிலைப்பாட்டினைத் 'துவாரகை' கண்டுபிடிப்பு சங்கடத்துக்குள்ளாக்கியுள்ளது. ராவ் தம் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் மகாபாரத நிகழ்ச்சிகளை இ.மு. 3500க்கு கொண்டு செல்கிறார்.

ஆழ்கடலில் அகழ்வாராய்ச்சி : துவாரகை
இது துவாபார யுகத்தில் மகாபாரதம் நடந்ததாகக் கூறும் மரபாளர்களைச் சங்கடப்படுத்துகிறது. இந்த ஆழ்கடலுக்குள் இருக்கும் பழமையான நகரம்தான் துவாரகையா?
இல்லையெனில் இந்த நகரம் எவ்வாறு மகாபாரத துவாரகை விவரணத்தை வெகுவாக ஒத்திருக்கிறது? ஆமெனில் துவாரகாதிபதி ஸ்ரீ கிருஷ்ணன் ஒரு வரலாற்று நாயகனா?
(அகழ்வாராய்ச்சி மூலம் பல்லாயிரமாண்டுகள் முன் வாழ்ந்ததாகக் கூறப்படும் தனிமனிதர்களுக்கானச் சான்றுகளை கண்டெடுப்பது இயலாத விஷயம்.) இம்மர்மங்களுக்கான விடைகளைத் தன்னுள் கொண்டு ஆர்ப்பரிக்கும் அலைகளுடன், ஆராய்ச்சியாளர்களை அழைக்கிறது இந்தியாவின் வடமேற்கு கடற்கரை.


பூம்புகார்/காவிரிப்பூம்பட்டினம்:


காவிரிப்பூம்பட்டினத்தில் அகழ்வாராய்ச்சியில் காணப்பட்ட அமைப்புகளை ஓவியர் கற்பனையில் முழுமையாக வரைந்துள்ளார்

தமிழ் காவியமான மணிமேகலை காவிரிபூம்பட்டினத்தின் அழிவினைக் குறித்து பேசுகிறது. மகனை இழந்த சோகத்தில் சோழமன்னன் இந்திர விழா நடத்த மறந்தமையால் ஏற்பட்ட கடல் சீற்ற அழிவாக அது கூறப்படுகிறது. பட்டினப்பாலை போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் இந்நகரம் பெரும் துறைமுக நகரமாக பேசப்படுகிறது. சுங்க அலுவலகம், மரக்கலங்கள் கொணரும் கொண்டு செல்லும் பொருட்களில் புலி முத்திரை பதித்தல் ஆகிய செயல்கள் அந்நகரில் நடைபெற்றமையையும், பல்வேறு தேசத்திலிருந்தும் நல்ல பண்பாடு கொண்ட மக்கள் அங்கு ஒருவரோடொருவர் பழகியதையும், கள் சாலைகள் முதல் கருத்துகளை விவாதிக்கும் மண்டபங்கள் வரை மனிதரின் அத்தனை தேவைகளும் பூர்த்தி செய்யும் அமைப்புகளைக் கொண்ட பெரும்நகராக அது விளங்கியதையும் அறிகிறோம்.

பூம்புகார்: பழமையான செங்கல் அமைப்பு : நன்றி NIOT
1960களிலும் 1980களிலும் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆய்வுகள் இந்த பெரும் துறைமுக நகரினைக் கடல் அழித்தது உண்மையாக இருக்கும் என்பதனைக் காட்டியுள்ளன. தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சி மையம் (NIOT) நடத்திய அகழ்வாய்வுகள் சங்க காலம் சார்ந்த பல அமைப்புகளை, (செங்கல் அமைப்புகள், சுற்றுசுவர் போன்றவற்றினை) வெளிக்கொணர்ந்துள்ளன. எஸ்.ஆர்.ராவ் போன்ற அகில இந்திய முன்னணி ஆராய்ச்சியாளர்கள் இங்கு அகழ்வாராய்ச்சியின் மூலம் இப்பழமையான நகரம் இருந்ததையும் அது அழிந்ததையும் கூறியுள்ளனர். 1960களிலும் 1980களிலும் நடத்தப்பட்ட முயற்சிகளுக்கு பிறகு 2006 இல் தேசிய பெருங்கடல் ஆராய்ச்சி மையம் (NIOT) ஸோனார் ஸ்கேனை நடத்தியுள்ளது. இந்த தொடக்க கட்ட ஆய்வு இன்றைய கரைக்கு இரண்டு கிமீ தூரத்தில் 14-20 மீட்டர் ஆழத்தில் சில அமைப்புகளை காட்டியுள்ளது. ஒரு இயற்கை பேரிடர் நிகழ்ச்சி மணிமேகலையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது திண்ணம். இன்று அதன் எச்சங்களை நாம் அகழ்வாராய்ச்சியின் மூலம் அறிகிறோம். இனிவரும் காலங்களில் மணிமேகலை, சிலப்பதிகார நிகழ்வுகளின் காலத்தையும் அது தொடர்பான இதர வரலாற்று உண்மைகளையும் பாரத அகழ்வாராய்ச்சி வல்லுனர்கள் நமக்கு மீட்டுத்தருவர் என நம்பலாம்.


ஆழ்கடல் அகழ்வாராய்ச்ச்஢யில் கண்ட வட்டவடிவ அமைப்புகள்: பூம்புகார் அகழ்வாராய்ச்சி நன்றி: NIOT



சிந்து சமவெளி நாகரிகம்:


1920களில் இந்திய அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு சர் ஜான் மார்ஷலால் பிரபலப்படுத்தப்பட்ட இந்நாகரிகம் இன்றைக்கும் தன் மர்மங்களை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. ஒவ்வொரு அகழ்வாய்வுக் கண்டுபிடிப்பும் நம் அறிதலை ஆழமாக்கியுள்ளது என்ற போதிலும். இ.மு. 5000 வருடங்களையும் விடப் பழமையான இந்நாகரிகக்தை உருவாக்கியவர்கள் யார்? இந்நாகரிகத்தவர்கள் எங்கு சென்றார்கள்? இந்த நாகரிகம் எவ்வாறு அழிந்தது? உண்மையில் அழிந்ததா அல்லது இன்னமும் வாழ்கிறதா? எனும் கேள்விகள் இன்றைக்கும் உயிர் வாழ்கின்றன. இது ஆரியர் வருகைக்கு முந்தைய இப்பூர்விக நாகரிகம், ஆரியப் படையெடுப்பால் அழிந்ததாக, அகழ்வாய்வாளரான மார்ட்டிமோர் வீலர் கூறினார். பின்னாட்களில் டேல்ஸ், ஜிம் ஷாஃபர், ஜோனதன் கென்னோயர் போன்ற புகழ்பெற்ற அகழ்வாய்வாளர்கள் ஆரியப் படையெடுப்புச் சித்தாந்ததை மறுத்துவிட்டனர். மாறாக இயற்கை அழிவுகளை இந்த நாகரிகத்தின் நகரங்கள் அழிவதற்குக் காரணமாகக் கூறுகின்றனர்.

படையெடுப்பு படுகொலை பொய் என நிரூபித்த டேல்ஸ்

செயற்கைக்கோள்கள் பாலைவனத்தில் புதைந்த ஒரு பழம் நதியைக் காட்டியுள்ளன. அறிவியலாளர் யஷ்பால் இது இந்திய வேதங்களில் கூறப்படும் சரஸ்வதியாக இருக்கலாம் எனக்கருதுகிறார். பல சிந்து சமவெளி நாகரிக மையங்கள் இந்நதியருகே உருவாகியுள்ளன. எனவே இந்நதி வறண்டது காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இம்மக்களின் பண்பாடு வேதங்களில் கூறப்பட்ட பண்பாட்டினை ஒத்திருப்பதை அகழ்வாராய்ச்சியாளர் பிஷ்ட் சுட்டிக்காட்டுகிறார்.

தோலவிரா அகழ்வாராய்ச்சியை ஏற்று நடத்திய பிஷ்ட்
தோலவிரா எனும் ஹரப்பா பண்பாட்டு நகரினை அகழ்வாராய்ச்சி செய்த பிஷ்ட் நகர அமைப்புகள் 'ரிக்வேத பண்பாட்டின் virtual reality' ஆக அவை அமைந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார். இந்த மையத்தின் நீர் சேகரிப்பு அமைப்புகள் சிறப்பானவை என்பதுடன் இங்கே மிகப்பெரிய ஹரப்பா சின்னங்களுடனான 'பெயர் பலகை' ஒன்றும் கிடைத்துள்ளது. சரஸ்வதி நதி குறித்து வரலாற்றாசிரியர்கள் அனைவரும் இதை ஏற்பதில்லை. வானவியலாளர் ராஜேஷ் கோச்சர் வறண்ட நதியினை சரஸ்வதியுடன் ஒப்பிடுவதை மறுக்கிறார்.

இந்நாகரிகத்தின் சித்திர எழுத்துகள் இன்னமும் விடுவிக்கப்படாத புதிராகவே உள்ளன. இதில் இருபது வருடங்களுக்கும் மேலாக ஆழ்ந்து ஆராய்ந்துள்ள ஐராவதம் மகாதேவன் இவை தொல்-திராவிட பொதுமொழிக்கூறுகள் கொண்டவை என்கிறார். எஸ்.ர்.ராவோ இவை தொல்-இந்தோ-ஐரோப்பிய குடும்பத்தைச் சார்ந்தவையாக இருக்கலாம் என கருதுகிறார். சிந்து-சமவெளிச் சமுதாயம் வேத-நாகரிகமும் திராவிடத்தன்மை வாய்ந்த மொழியும் கொண்டதாக இருந்திருக்கலாம் எனக் கருதும் மகாதேவன் புகழ் பெற்ற ஒற்றைக்காளை முத்திரையை ரிக்வேதத்தில் கூறப்படும் சோம பானச் சடங்குடன் தொடர்புபடுத்துகிறார். எதுவானாலும் சிந்துசமவெளி நாகரிகத்தின் மர்மங்களை முடிச்சவிழ்க்க மிக அடிப்படையான தேவை இன்னமும் மர்மமாகவே இருக்கும் சிந்து சமவெளி முத்திரைகளில் காணப்படும் சித்திர எழுத்துக்களின் பொருளை அறிவதுதான். மைக்கேல் விட்ஸல் என்கிற இந்தியவியலாளரும், ஸ்டீவ் ஃபார்மர் என்கிற அமெச்சூர் மொழியியலாளரும் அண்மையில் இவை எழுத்துக்களே இல்லை என கூறினர். இதனை சிந்து சமவெளி நாகரிக ஆராய்ச்சியிலேயே தோய்ந்த அகழ்வாராய்ச்சி நிபுணர்களும் மொழியியலாளர்களும் கடுமையாக மறுக்கின்றனர். பேராசிரியர் சுபாஷ் காக் ஹரப்பா பண்பாட்டு சித்திர எழுத்துக்களின் சில முக்கியக் குறியீடுகளை அவற்றினை ஒத்த வடிவங்கள் கொண்ட பிராமி எழுத்துக்களுடன் அவற்றின் அடுக்கு-நிகழ்வினை (frequency) ஆராய்ந்து அவை ஒத்துப்போவதை சுட்டிக்காட்டியுள்ளார். ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட மர்மங்களை தன்னுள் அடக்கியபடி அகழ்வாராய்ச்சிகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறது சிந்து சமவெளி நாகரிகம்.


தோலவிரா: அகழ்வாராய்ச்சியாளர் பிஷ்ட் மேற்பார்வையில் செய்யப்பட்ட கணினி மீள் உருவாக்கம்



தோலவிரா 'பெயர் பலகை' இப்படித்தான் இருந்திருக்குமா சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்?


நாஸ்கா கோடுகள்: 


நாஸ்கா கோடுகள் : நன்றி: நேசனல் ஜியாகிராபிக்

தென்-அமெரிக்காவின் பெரு நாட்டு பாலை பிரதேசங்களில் வரையப்பட்டிருக்கும் பெரும் வரி வடிவங்களே நாஸ்கா கோடுகள் என அழைக்கப்படுகின்றன. 2000 வருடங்களுக்கு நாஸ்கா கலாச்சாரத்தினரால் உருவாக்கப்பட்ட 70 வரிச்சித்திரங்கள் இவை. 360 அடி (110 மீட்டர்கள்) நீளமுடைய குரங்கு வடிவம், திமிங்கிலம் (65 மீட்டர்கள்), காண்டார் பறவை (135 மீட்டர்கள்), ஹம்மிங் பறவை (50 metres), பெலிக்கன் (285 மீட்டர்கள்), சிலந்தி (46 மீட்டர்கள்) ஆகியவை உலகப் பிரசித்தி பெற்றவை. 1920 களில் இவை கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இவை பாலைப்பகுதிகளில் இத்தனை சிரமமெடுத்து இவ்வடிவங்கள் வரையப்பட்டிருப்பதன் காரணங்கள் விவாதிக்கபடுகின்றன. எரிக் வான் டானிக்கன் போன்ற போலி-ஆராய்ச்சியாளர்கள் இவை வெளிக்கிரகவாசிகளின் விண்கலங்கள் இறங்க உருவாக்கப்பட்டவை என கருதுகின்றனர். பரபரப்பூட்டும் இத்தகைய விவரணங்கள் அளிக்கும் வர்த்தக வெற்றியால் இந்த அடிமுட்டாள்தனமான 'விளக்கங்கள்' புத்தகங்களாக வெளிவருகின்றன. இத்தகைய அதீத கற்பனைக் காரணங்களை பொதுவாக கறாரான அறிவியல் பார்வை கொண்ட ஆராய்ச்சியாளர்கள் மறுக்கின்றனர். விமானங்களிலிருந்தே முழு வடிவமும் புலப்படும் படியாக உருவாக்கப்பட்ட இந்த வடிவங்கள் ஏன் உருவாக்கப்பட்டன? மாரியா ரெய்ச்சே (Maria Reiche) பல்லாண்டுகள் இத்தரை வரைவுச் சித்திரங்களை ஆராய்ந்த ஜெர்மானிய ஆய்வாளர்.


நாஸ்கா நில வரைபடங்களை ஆராய வாழ்வினை செலவிட்டமாரியா ரெய்ச்சே

ஒருவேளை வானியல் நிகழ்வுகளான விண்மீன்கள் மற்றும் கிரகங்களின் இயக்கப்பாதைகளைப் பல்லாண்டுகளாக கண்காணித்து அதனடிப்படையில் ஒரு பெரும் வானியல் நாள்காட்டியாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என அவர் கருதுகிறார். 1967, இல் இவ்வடிப்படையில் ஆய்வினை மேற்கொண்ட ஜெரால்ட் ஹாவ்கின்ஸ் எனும் வானியல் ஆய்வாளர் இதற்கு எந்த சான்றுகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஜிம் வுட்மேன் எனும் அமெரிக்கர் இன்னமும் விசித்திரமான ஒரு கருத்தை தெரிவித்தார். ஒருவேளை நாஸ்கா புதிரை உருவாக்கிய பழம் அமெரிக்க நாகரிகம் பறப்பதைக் கண்டுபிடித்திருக்கலாம் எனக் கருதும் இவர் பூர்விக நாஸ்காவாசிகளுக்கு கிடைத்திருந்த பருத்தியால் உருவாக்கிய பலூனில் புகையை அடைத்து 300 அடிகளுக்கும் மேல் பறந்து தம் கருத்து சாத்தியமானது என்றும் காட்டினார். இவருடன் இணைந்து இதனை நிகழ்த்திக்காட்டியவர் பலூன்களில் பறப்பதில் பல சாதனைகளைப் படைத்த ஜூலியன் நாட் என்பவர். ஆனால் நடக்கமுடிந்தவை எல்லாம் நடந்திருக்க வேண்டியதில்லை. குறிப்பாக இத்தகைய பலூன்களைக் குறித்து வேறு புறச்சான்றுகள் ஏதுமில்லை. என்ற போதிலும் ஒரு கருதுகோளின் சாத்தியதையை ஆராய வெகு துணிச்சலான முயற்சிதான் இது.

இந்த ஓடம் மிதக்குறதே கஷ்டம் பறக்குமாக்கும்?

இது பறக்குமான்னா கேக்கிறே? பறந்துடுச்சே!

நன்றி: www.nott.com

மசசூட்ஸ் மனிதவியல் பேராசிரியர் டொனால்ட். ப்ரோலக்ஸ் (Donald Proulx) டேவிட் ஜான்ஸன் எனும் பள்ளி ஆசிரியருடன் இணைந்து இதற்கு வேறு ஒரு விளக்கம் கொடுக்கிறார். இத்தரைவரைப்படங்கள் நிலத்தடி நீருடன் தொடர்புடையதாக இருக்கலாம் என அவர் கருதுகிறார். நேஷனல் ஜியாக்ராபிக் உதவியுடன் ஜான்சனால் உருவாக்கப்பட்ட இந்த கருதுகோள் நிலவியலாளர்கள், அகழ்வாராய்ச்சியாளர்கள் என பல்துறை நிபுணர் குழுவால் 1998 இல் ஆராயப்பட்டது. சில நாஸ்கா வரைப்படங்களாவது நிலத்தடி நீரோட்டங்களின் பாதைகளை ஒட்டி அமைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. நாஸ்கா வரிகள் - வானில் மிதக்கும் ஆற்றலை அடைந்த ஒரு பூர்விக நாகரிகம் உருவாக்கியவையா? கற்பனையாற்றல் கொண்ட ஒரு தரைவாழ் சமுதாயத்தின் விசித்திரச் சடங்கின் விளைவா? நிலத்தடி நீரோட்ட பாதையை அறிந்து அதை திறம்பட பயன்படுத்த ஏற்படுத்தப்பட்ட கருவியா? இரவு வானை தரையில் பிரதிபலிக்கும் விசித்திர நாட்காட்டியா? நாஸ்கா கோடுகளின் மர்மங்கள் இன்னமும் தெளிவுபடாத வரலாற்றுப்புதிராகவே உள்ளது.

படங்களும் ஆதாரங்களும் தொடரும்...

இயேசுவின் இரண்டாம் வருகை (Second Advent), இரகசிய வருகை (Secret advent)

வரலாறுகளும் நடந்து கொண்டிருப்பவைகளும்...

[1] இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகை:
இது ஏற்கனவே நிறைவேறிவிட்டது. இயேசு முதன் முதலாக பூமியில் சுமார் 2009 ஆண்டுகளுக்கு முன்பு மனிதசாயலாக வந்து, சிலுவையில் நம்முடைய பாவங்களுக்காக மரித்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து 40 நாள் பூமியில் இருந்து பின்பு பரலோகத்துக்கு சென்றுவிட்டார். இதுவே முதலாம் வருகை.

அவர் உயிர்த்தெழுந்தபோது "மத்தேயு 27:52 கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது" என்று வாசிக்கிறோம். எல்லாரும் அல்ல, அநேக (பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள்) என்னும் வார்த்தைகளை கவனியுங்கள். இது ஒரு உயிர்த்தெழுதலாயிருக்க சாத்தியம்தான். இங்கே அநேகர் உயிர்த்து எழுந்து போயிருக்கலாம்!

[2] இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை:
சுருக்கமாகச் சொன்னால், நாம் தற்போது கிருபையின் காலத்தில் (Period of grace) வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இது இயேசுவின் இரகசிய வருகையுடன் முடிவடையும். அதன் பின்பு உபத்திரவகாலம் இருக்கும். அதற்குப்பின்பு ஆயிரவருட இயேசுவின் ஆளுகை அல்லது அரசாட்சி இந்தப் பூமியில் நடைபெறும். இயேசு சொன்னார்: "பரலோகத்தில் அநேக வாசஸ்தலங்கள் (mansions) உண்டு. அப்படி இல்லாதிருந்தால் நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்"; மேலும்:யோவான் 14:3
நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை (a place) ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
எபிரெயர் 9:28 தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
இயேசுவின் இரண்டாம் வருகையை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.
இவை எல்லாமே இரண்டாம் வருகைதான்.
. எப்படியெனில் இரகசிய வருகையில் செல்பவர்களுக்கு அது கிறிஸ்துவின் இரண்டாம் வருகை. அவருடைய வருகையில் போகாதவர்கள் இன்னும் அவரை சந்திக்கவில்லை.
. உபத்திரவகாலத்தில் மரிப்பவர்களுக்கும் அது இரண்டாம் வருகை ஏனெனில் அப்போதுதான் அவர்களுக்கு அது கிறிஸ்துவை இரண்டாம் வருகை.
. எஞ்சி இருப்பவர்களுக்கு வெளிப்படையான வருகைதான் இரண்டாம் வருகை.
[2-A] இரகசிய வருகை: (Secret Advent) 
திருடன் வருகிற விதமாக யாரும் எதிர்பார்க்காத ஒரு நேரமாகஇருக்கும்.
திருடன் வந்து விட்டு போனபின்பு எப்படி எல்லாரும் திருட்டை அறிந்துகொள்கிறார்களோ அப்படியே இரசியவருகை நடந்து முடிந்தபின் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை முடிந்துவிட்டது என்று அறிந்துகொள்ளுவார்கள். இந்த வருகையில் முதலாவதாக கிறிஸ்துவுக்குள் மரித்த பரிசுத்தவான்கள் உயிரடைவார்கள், இரண்டாவதாக உயிரோடிருக்கும் நாமும் அவருடனேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளபப்படுவோம். இந்த இரண்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் (twinkling of an eye) நடைபெறும். எனவே இரகசிய வருகையையும், வெளிப்படையான வருகையையும் குழப்பிக்கொள்ளாதீர்கள். வெளிப்படையான வருகையை எல்லாரும் காண்பார்கள். இரகசிய வருகை ஒரு கண்ணிமைக்கும் நேரம் மட்டும் இருப்பதால் எல்லாருக்கும் தெரியாது.

I தெசலோனிக்கேயர் 4:14-18
இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார். கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.I தெசலோனிக்கேயர் 5:2
இரவிலே திருடன்வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.
1கொரிந்தியர் 15:50-54
சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை. இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது [1] மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; [2] நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
[2-B] உபத்திரவ காலத்தின் வருகை (Tribulation Martyr's Harvest)
கர்த்தருடைய வருகைக்குப்பின் உபத்திரவகாலம் இருக்கும். இது சுமார் ஏழு வருடங்கள் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.[3.5 years+3.5 years]. உபத்திரவம் ஏழு வருடங்கள் என்று வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை.

[ வருடங்களும், ஸ்திரீ, ஆண்பிள்ளையின் அர்த்தமும்:
ஸ்திரீ பெற்ற ஆண்பிள்ளை சிங்காசனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.வெளி 12:6 ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்; அங்கே ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் அவளைப் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது. (1260 days/360 = 3.5 years)வெளி 11:3 என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன். (1260 days/360 = 3.5 years)
(Jewish calendar: see http://www.webexhibits.org/calendars/calendar-jewish.html)
ஸ்திரீயானவள் - கைவிடப்பட்ட கூட்டத்தார் (பிள்ளை எடுத்துக்கொள்ளப்பட்டபின்) என்றும்,
ஆண்பிள்ளை - இரகசிய வருகையில் சென்ற கூட்டத்தார் என்றும் ஞானார்த்தமாக எடுத்துக்கொள்ளலாம். ஸ்திரீக்கும் ஆண்பிள்ளைக்கும் உள்ள எடையின் விகிதம் 1:20 என்று வைத்துக்கொண்டால்கூட உலகில் உள்ள சபையாரில் 20 ல் ஒரு பங்கு மட்டும் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்று சிலர் சொல்கின்றனர். நிச்சயமாக இது இயேசுவும் மரியாளும் அல்ல, ஏனெனில் யோவான் பத்மு தீவில் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளை ஆவிக்குள்ளாகி காண்கிறார். இதற்கு முன்பே இயேசு மரித்து உயிர்த்தெழுந்தாயிற்று.]
இந்த உபத்திரவகாலத்தில் அந்திக்கிறிஸ்து பூமியில் வலுசர்ப்பமாகிய பிசாசின் சக்தியுடன் ஆளுவான். இந்த உபத்திரவகாலத்தில் கைவிடப்பட்ட கூட்டத்தாரை அந்திக்கிறிஸ்து உபத்திரவப்படுத்துவான் (வெளி 12:17). இங்கு அநேகர் இரத்தசாட்சியாக மரிப்பார்கள். இவர்களை அழைத்துக்கொண்டு போகும்படி இயேசு மீண்டும் தம்முடைய தூதர்களை அனுப்புவார். பின்பு யூதர்களுடன் ஒப்பந்தம் செய்து தேவாலயம் கட்ட உதவியாயிருப்பான். [இப்போது அங்கே தேவாலயம் இல்லை, ஏனெனில் தேவாலயம் கி.பி. 70ம் வருடம் ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராதபடிக்கு இயேசு சொன்னது போல் இடிக்கப்பட்டது. அங்கே தற்போது ஒரு மசூதி இருக்கின்றது. see paragraph 3 on http://en.wikipedia.org/wiki/Temple_in_Jerusalem] அதன்பின் தன்னை வணங்கவேண்டும் என்று சொல்லுவான் II தெசலோனிக்கேயர் 2:4 அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். அப்பொழுது யூதர்கள் அவனுடன் செய்த உடன்படிக்கையை முறித்துபோட்டுவிடுவார்கள். அவன் யூதர்களை துன்புறுத்துவான். இந்த யூதர்களில் 144000 பேர் முத்திரையாக பாதுகாக்கப்படுவார்கள் (வெளி 7).

வெளி 7:9-14. இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.
அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
வெளி 14: 14-20 அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச்சொன்னான். அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைவு அறுப்புண்டது.

[2-C] வெளிப்படையான வருகை (Public Advent)
உபத்திரவ காலம் முடிந்த பின்பு, இயேசு ஒலிவமலையில் வந்து இறங்குவார். அவரை இதுவரை விசுவாசிக்காத யூதர்கள் தங்கள் ஒரே பேறான குமாரனுக்காக அழுது புலம்புவது போல் அழுவார்கள். அவரைக் குத்தினவர்களின் (யூதர்கள்) கண்கள் அவரைக்காணும். இயேசுவே மேசியா என்று அப்பொழுது அறிந்துகொள்ளுவார்கள். சகரியா 12:10 நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். அந்திக்கிறிஸ்து மற்றும் அவன் சேனைகளை அவர் தமது வாயிலிருந்து புறப்படும் பட்டயத்தால் ஜெயிப்பார் (வெளி 19:13-21)

மத்தேயு 24:29,30. அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.சகரியா 14:3-5
கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார். அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.

[3] ஆயிரவருட ஆளுகை, நியாயத்தீர்ப்பு, நித்தியம்:
அந்திக்கிறிஸ்துவின் சேனையை வென்றபின்பு பழைய பாம்பாகிய பிசாசென்னும் வலுசர்ப்பம் பிடிக்கப்பட்டு பாதாளத்தில் ஆயிரவருடம் அடைக்கப்படுவான்.

வெளி 20:2 பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.

1000 வருட ஆளுகை இந்த பூமியில் இதன்பின்பு துவங்கும். அப்பொழுது ஏதேனில் இருந்த நிலமையை மீண்டும் பூமியில் இயேசு கொண்டுவருவார். ஏசாயா 11:6-9 6. அப்பொழுது ஓநாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான். பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும். பால் குடிக்குங்குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும், என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

ஆயிரவருட ஆளுகைக்குப்பின்பு பிசாசானவன் பாதாளத்திலிருந்து திறந்துவிடப்படுவான். இவன் தன் சேனைகளோடு (கோகு, மாகோகு) கர்த்தருக்கு விரோதமாக யுத்தம்பண்ணவருவான். (அர்மகெதோன் யுத்தம். Battle of Armageddon வெளி 16:16 ). இதற்குப் பின்பு பிசாசும் அவன் சேனையும் ஆதிமுதலாக அவர்களுக்கென்று உண்டாக்கிவைக்கபட்டிருந்த அக்கினிக்கடலில் தள்ளப்படுவார்கள். இதன் பின்பு "வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு" இருக்கும். பூமி மரித்தோரை ஒப்புவிக்கும். தாங்கள் செய்த கிரியைக்கான பலனை அடையும்படி பரலோகத்துக்கும் நரகத்தும் ஜனங்கள் வேறுபிரிக்கப்படுவார்கள். அநேகர் நித்திய நித்தியமாய் தேவனோடிருப்பார்கள். அநேகர் நித்திய நித்தியமாய் நரகம் என்னும் அக்கினிக்கடலில் வாதிக்கப்பட்டு இருப்பார்கள்.

இன்று நீ இறந்துபோனால்(மரித்தால்) எங்கே போகுவாய்? என்ற கேள்விக்கு நீங்கள் உங்கள் இருதயத்தை ஆராய்ந்து பாருங்கள். பரலோகம் போகமுடியும் என்று உறுதியாய் உங்களால் சொல்லமுடியாவிட்டால், இயேசுவிடம் முழங்கால் படியிட்டு நீங்கள் செய்த பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்டு மனந்திரும்புங்கள். தேவன் அன்பாகவே இருக்கிறார். யோவான் 3:18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.

இப்போது நீங்கள் இருக்கும் இடத்திலேயே முழங்கால்படியிட்டு கண்ணீரோடு அவரிடம், "இயேசுவே, நீர் மெய்யான குமாரனாகிய தேவன் என்றும், நீர் சிலுவையிலே என்னுடைய பாவங்களுக்காக இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்தெழுந்தீர் என்றும் விசுவாசிக்கிறேன். நான் பாவியாகிய மனுஷன், என் பாவங்களை மன்னியும். இந்த பாவம் என்ற பாரச்சுமையை என்னிலிருந்து நீக்கும். உம்முடைய இரத்தத்தினாலே என்னைக் கழுவும். என் இருதயத்தில் வாரும். நான் இனி உம்முடைய பிள்ளையாக பாவம் செய்யாமல் ஜீவிப்பேன். இனி இந்த உலகத்தார் போல ஜீவிக்கமாட்டேன். என்னை உம்முடைய மகனாக/மகளாக ஏற்றுக்கொள்ளும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் ஜீவனுள்ள பிதாவே. ஆமென்". என்று ஜெபியுங்கள், அவர் ஜெபத்தைக் கேட்கிற தேவன்.

மேலே கூறப்பட்டவை ஒரு சுருக்கமாகும்.

நிகழ்தகவாய் நடப்பவை இருப்பின் நிகழ்வுகள் நடந்தே தீரும்.