திங்கள், 16 அக்டோபர், 2017

இன்று... உலக உணவு தினம்


தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்...! உணவு உற்பத்தியில் வேண்டும் மாற்றம்.
ஐ.நா.,வின், உணவு மற்றும் விவசாய அமைப்பு, அக்., 16ம் தேதியை, உலக உணவு நாள் என அறிவித்துள்ளது. 

இத்தினத்தின், நடப்பாண்டு மையக்கருத்து, 'காலநிலை மாறுகிறது; உணவு மற்றும் விவசாயத்திலும் கட்டாயம் மாற்றம் வர வேண்டும்' என்பது தான்.ஐ.நா., சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ள சில விஷயங்கள்:காலநிலை மாற்றத்தால், உணவு பாதுகாப்பு என்பது, மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. 

மக்கள் தொகை, 2050ல், 960 கோடியாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உணவுத் தேவையை பூர்த்தி செய்ய, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப, விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

திட்டமிடல் அவசியம்

இயற்கை வளங்களை வைத்து, விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். உணவு பதார்த்தங்களை வீணடிக்காமல், சிக்கனத்தை கையாள வேண்டும். விவசாயப் பொருட்களை அறுவடை செய்வது, அவற்றை சேமிப்பது, 'பேக்கிங்' செய்வது, வாகனம் மூலம் கொண்டு செல்வது, உட்கட்டமைப்பு மற்றும் சந்தை வசதி போன்றவற்றில் சரியான திட்டமிடலை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டமைப்பின் அமைப்பாளர் கூறுகையில், ''சிறு, குறு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச தொழில் பாதுகாப்பு இருந்தாலே, அவர்கள், விவசாயத்தை விட்டு விலக மாட்டார்கள். பழமை மாறாமல் உள்ள விவசாயிகளை, அறிவியல் அறிவு நிறைந்த விவசாயிகளாக மாற்றவும், அதன் மூலம், விவசாயத்தில் இயந்திரமயமாக்கலை புகுத்தவும் முயற்சி எடுக்க வேண்டும்,'' என்றார்.

2030ல் பசி தீருமா?

வரும், 2030க்குள் பசியில்லா நிலையை (ஜீரோ ஹங்கர்) உருவாக்க, இந்தியா, பிரான்ஸ், சீனா, அமெரிக்கா, அர்ஜென்டினா உட்பட, 193 நாடுகள் உறுதி பூண்டுள்ளன. இந்நிலையை எட்ட, விவசாய முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். 

இந்நிலையில், காலநிலை மாற்றம் குறித்து, உலக நாடுகள் பங்கேற்கும் கருத்தரங்கு, மொராக்கோவில், நவ., 7 முதல் 18 வரை நடக்கிறது. இதில், காலநிலை மாற்றம், பசியில்லா நிலையை எய்துவது தொடர்பாக, முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 11 அக்டோபர், 2017

உலகமயமாக்கலின் உண்மை முகம்.

உலகமயமாக்கல் என்றால் என்ன? உலகமயமாக்கலின் உண்மை முகம்.


"ஊருக்கு போறேன்! 32 இன்ஞ் சோனி LED டிவி வாங்கலாம் என்று இருக்கிறேன்" என்று நண்பர் சொன்னபோது அருகிலிருந்த இன்னொரு நண்பர்  "அட ஒலகமயமாக்கல் வந்ததிலிருந்து இப்ப எல்லாமே ஊர்லேயே கெடைக்கிது. இங்கே இருந்து எதுக்கு சுமந்துக்கிட்டு போற?? ஊருலேயே வாங்கிவிடலாம். ஒலகமயம் வந்தது எவ்வளவு வசதியாக இருக்கு?" என்றார்.


நண்பரை பொறுத்தவரை உலகமயமாக்கல் என்பது பயணச்சுமையை குறைத்து ஊரிலேயே அனைத்து பன்னாட்டு கம்பெனிகளின் தரமான(!?) பொருட்களை வாரி வாரி வழங்கக்கூடிய அமிர்த சுரபி. நண்பர் சொல்வது போல உலகமயமாக்கல் என்பது அவ்வளவு நல்ல விடயமா?


உலகமயமாக்கல் என்றால் என்ன?


தகவல் தொழில்நுட்ப புரட்சியும் இணைய புரட்சியும் போட்டி போடும் யுகம் இது. அமெரிக்க அதிபர் தேர்தலை ஆண்டிப்பட்டியில் அமர்ந்து கொண்டு அலச  முடிகின்ற அசாத்திய யுகம். உலகில் எந்தவோரு மூலையில் நடக்கின்ற எந்தவோரு முக்கிய நிகழ்வும் விரல் சொடுக்கில் காட்டுத்தீயாக உலகமெங்கும் பரவிவிடுவதை அன்றாடம் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.


உலகமயமாக்கலின் இந்தப் பரிமாணம், தகவல் தொழில்நுட்பப் புரட்சியோடு தொடர்புடையதாகும். ஆனால் அரசியலையும், சர்வதேச விவகாரங்களையும் உலகமயமாக்குவதென்பது முற்றிலும் மாறுபட்ட பொருளையும் பரிமாணத்தையும் கொண்டதாகும்.


அதென்ன அரசியலையும் சர்வதேச விவகாரங்களையும் உலகமயமாக்குவது?



பொருளதாரம், வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டு உறவுகள், தேசப் பாதுகாப்பு ஆகிய நான்கு துறைகளை உலகமயமாக்குவது தான் உலகமயமாக்கலின் உண்மையான இலக்காகும். இந்த நான்கும் மக்கள் நல அரசின் ஆளுகைக்குக் கீழ் வருகின்ற மிக மிக முக்கியமான துறைகளாகும்.

உலகமயமாக்கல் என்கிற போர்வையில் மேற்கத்திய, அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகள் இந்த நான்கு முக்கியமான துறைகளை மூன்றாம் நாடுகளின் அரசாங்களிடமிருந்து பிடுங்கி, அவற்றைத் தம்முடைய ஆளுகையின் கீழ் கொண்டு வரத் திட்டமிட்டு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றன.

1. பொருளாதாரம்


முதலாவதாக, பொருளாதாரத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு நாட்டின் பொருளாதாரத்தைத் தங்களின் கிடுக்குப் பிடியில் கொண்டு வருவதற்காக இவர்கள் என்ன செய்கின்றார்கள்? எந்தெந்த விதங்களில் வேடந் தரித்து வருகின்றார்கள்/ இந்தச் செப்பிடு வித்தையை இவர்கள் செய்வதெப்படி? இதற்காக இவர்கள் போடுகின்ற ஆட்டங்கள் என்னென்ன?

முதலில் உதவித் தொகைகளைத் தருகின்றோம் என்று தொடங்குவார்கள். பாலங்கள் கட்டுவோம், அணைக்கட்டு கட்டித் தருகின்றோம், விமானத்தளம் அமைத்துத் தருகின்றோம் என பல வடிவங்களில் ஆசை காட்டுவார்கள். குறைந்த வட்டியில் கடன் தருகின்றோம் அல்லது சேவைக் கட்டணத்தை மட்டும் கொடுத்தால் போதும் என்று தாமாக முன் வந்து கடன் கொடுத்து கடன் பொறியில் மூன்றாம் உலக நாடுகளைச் சிக்க வைப்பார்கள். பிறகு அதிக வட்டியில் குறுகிய காலக் கடன் என வலையை இறுக்கிக் கட்டுவார்கள்.

இவையெலலாமே கமுக்கமாக நடந்தேறும்.வெளிப்படையான நிர்வாகம், ஜனநாயகம், விடுதலை, சுதந்திரம் என்று மூச்சுக்கு முப்பது தடவை சொல்பவர்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தோடும் எதிர்கால வளத்தோடும் தொடர்புடைய இந்த விவகாரங்களை குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதம் நடத்துவதை விரும்ப மாட்டார்கள்.

ஏற்றுமதி- இறக்குமதி வல்லுநர்கள், வெளிநாட்டு ஆலோசகர்கள், உள்நாட்டு அரசு அதிகாரிகள் என எல்லாரும் சேர்ந்து கைகோர்த்துக் கொண்டுச் செயல்படுவார்கள். நாட்டின் இறையாண்மை, மக்கள் நலன், எதிர்காலம் குறித்தெல்லாம் கிஞ்சிற்றும் கவலையின்றி இவர்கள் எல்லாரும் புகுந்து விளையாடுவார்கள்.

அரசு அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் என்கிற வடிவில் அற்பமான உலக லாபங்களுக்காக நாட்டு நலன்களையும் எதிர்காலத்தையும் வெளிநாட்டு பண முதலைகளுக்கு அடகு வைக்கத் துணிந்து விடுகின்ற, மனச்சாட்சியற்ற கைக்கூலிகள் இவர்களுக்கு எல்லா நாடுகளிலும் கிடைத்து விடுவது தான் வேதனையான முரண்பாடு ஆகும்.

இவ்வறாக, நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு சிறுக சிறுக மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளின் பிடியில், குறிப்பாக அமெரிக்காவின் கிடுக்குப் பிடியில் முழுமையாகச் சிக்கிவிடும். உடைத்தெறிய முடியாத சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட அடிமைகளின் நிலைக்கு நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு ஆளாகிவிடும்.

அடுத்த கட்டமாக அந்த ஏழை நாட்டின் கரன்ஸி நாணயம் மீது கை வைக்கப்படும்.



நாணயத்தின் மதிப்பைக் குறைத்துவிடு; இல்லையேனில் புதிய கடன் பொருளாதார ஒப்பந்தங்கள் கிடையாது என எச்சரிக்கை விடப்படும். நாணயத்தின் மதிப்பைத் திரும்பத் திரும்பக் குறைக்கும் போது உலக அரங்கில் அந்த நாணயத்துக்கு மதிப்பில்லாமல் போகும். அதற்கு நேர்மாறாக, அதனோடு ஒப்பிடும்போது அமெரிக்க டாலர், பவுண்டு, ஸ்டெர்லிங், ஃபிராங், யென் போன்றவற்றின் மதிப்பு எகிறிக் கொண்டே போகும்.

உலக வங்கி,ஐ.எம்.எஃப் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்கள் ஆடிய ஆட்டத்தால் இன்று உலக அரங்கில் அமெரிக்க டாலர் கொடி கட்டிப் பறக்கின்றது. அதனோடு எந்தவொரு மூன்றாம் உலக நாட்டின் நாணயத்தையும் ஒப்பிட முடியாத அளவுக்கு அதன் ஆதிக்கம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச அரங்கில் எந்தவொரு நாட்டின் கரன்ஸியின் மதிப்பைப் பொறுத்தே அந்த நாட்டின் செல்வாக்கும் கணிக்கப்படும். கரன்ஸி வீழ்ந்தால் அந்த நாட்டின் செல்வாக்கும் சரிந்து விடும்.


2.வெளிநாட்டு வணிகம்

இரண்டாவதாக வெளிநாட்டு வணிகத்தை எடுத்துக் கொள்ளுவோம்.எந்த நாட்டுடன் எப்படிப்பட்ட வணிகத்தை வளர்த்துக் கொள்வது? உள்நாட்டு வணிக நலன்கள் பாதிப்படையாத வகையில் ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்துக்கான கொள்கையை வகுப்பதெப்படி? போன்றவற்றைக் குறித்தெல்லாம் சுயமாக நிர்மணம் செய்கின்ற உரிமை ஒரு நாட்டுக்கு உண்டு.

ஒரு நாட்டுக்கு இருக்கின்ற இந்த சுய நிர்ணய உரிமையைப் பறிக்கின்ற நோக்கத்துடன் மேற்கத்திய, அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளால் அமைக்கப்பட்ட நிறுவனம் தான் உலக வர்த்தக அமைப்பு (WTO)


வெளிநாட்டு வணிகத்தில் ஒரு நாட்டுக்கு இருக்கின்ற சுதந்திரத்தையும் உரிமையையும் முற்றாகப் பறிக்கின்ற வலுவான ஆயுதமாக இது இருக்கின்றது. இதனோடு சுதந்திர சந்தை, சந்தை பொருளதாரம் போன்ற சர்வதேச ஒப்பந்தங்கள் மூலகமாகவும் வெளிநாட்டு வணிகத்தில் மூன்றாம் உலக நாடுகளுக்கு இருக்கின்ற சுதந்திரமும் உரிமையும் திட்டமிட்ட முறையில் பறிக்கப்படுகின்றது. இதன் சமீபத்திய எடுத்துக்காட்டாக ஈரான் -இந்திய எண்ணெய்க்குழாய் அமைக்கின்ற திட்டம் முடக்கப்பட்டதைச் சொல்லலாம். இவற்றுக்குப் பின்னால் அமெரிக்க, யூத சூழ்ச்சிகளும் சதித் திட்டங்களும் இயங்குகின்றன என்பது வெளிப்படை.

சுதந்திர சந்தை, சந்தை பொருளாதாரம்,ஏற்றுமதி-இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட வணிகவசதி, சில குறிபிட்ட நாடுகளை மட்டும் அதிகமாக சலுகை காட்டப்பட வேண்டிய நேசநாடுகளை(Most Favoured Countries) அறிவிக்குமாறு அமெரிக்கா செய்கின்ற நிர்பந்தம்- இவையெல்லாமே எதற்காக என நினைத்தீர்கள்?

யாருக்குத் துணை நிற்கின்ற ஏற்பாடுகள் இவை என நினைத்தீர்கள்?

இவற்றால் மூன்றாம் உலக நாடுகளுக்கு எந்தவிதமான பயனும் இல்லை. அதற்கு மாறாக மூன்றாம் உலக நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்களும் அமெரிக்க நிறுவனங்களும் காலூன்றுவதற்குத் தான் இவையனைத்தும் துணை நிற்கின்றன.இதுதான் மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மை.

இன்னும் வெளிநாட்டு உறவுகள்,பாதுகாப்பு இவை பற்றியும் உலகமயமாக்கல் தொடர்பில் எழுத வேண்டியிருப்பதால். தொடரும்....!!!

உலகமயமாக்கலில் பிறக்கும் மகத்தான வருங்காலக்குழந்தை... நீ வருக நீ வருக...! நாம் கொடுப்பதை அனைத்தையும் பெறுக நாம் வறுக......!



செவ்வாய், 26 செப்டம்பர், 2017

குர்திஸ்தான் : தனி நாட்டுக்காக விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

ஈராக்கில் வசிக்கும் குர்து இனமக்களின் தனி நாடு கோரிக்கையை அடுத்து இன்று ஈராக்கின் எதிர்ப்பையும் மீறி பொது வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது.

பாக்தாத்:

ஈராக்கின் வடபகுதியில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். குர்திஸ்தான் என்றழைக்கப்படும் இந்தப் பகுதி ஈராக் ஆட்சியின் கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுகிறது. ஈராக்கின் எண்ணெய் வளம் மிக்க குர்துகள் வசிக்கும் இந்த பகுதியை தனிநாடாக அறிவிக்க அம்மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

இக்குழுக்கள்ளில் பிகேகே எனப்படும் குர்துக்கள் தொழிலாளர் கட்சியினர் ஆயுதமேந்திய போராட்டம் நடத்திவருகின்றனர். ஆனால், குர்து இன மக்களின் இந்த கோரிக்கையை ஈராக் ஏற்க மறுத்து விட்டது. ஈராக் துண்டாக பிரிவதை அனுமதிக்க மாட்டேன் என ஈராக் பிரதமர் ஹைதர் அல்-பாக்தாதி தெரிவித்திருந்தார்.

தனி நாடு கோரி பொதுவாக்கெடுப்பு நடத்த குர்து மக்கள் முடிவெடுத்துள்ள நிலையில், அவர்களின் கோரிக்கையை ஆதரிப்பதாக இஸ்ரேல் கூறியது. இதற்கான தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், தனி நாடு கோரிக்கைக்கான ஆதரவு பெருகி வருகிறது.

பரபரப்பான சூழ்நிலையில் இன்று பொதுவாக்கெடுப்பு நடைபெற உள்ளது. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஈராக் குர்துக்களின் முடிவுக்கு துருக்கியில் வசித்துவரும் சிறுபான்மை குர்துக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அந்நாட்டில் வசிக்கும் குர்துக்கள் குர்திஸ்தான் தனிநாடு கேட்டு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்திவருகின்றனர். 

ஈராக் குர்துக்களின் தனிநாடு கோரிக்கை நிறைவேறினால் அது சிரியா மற்றும் துருக்கி நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என துருக்கி அச்சம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஈராக் பிரதமர் ஹைதர் அல்-பாக்தாதி கூறியபோது, குர்து இன மக்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அவர்கள் தீயோடு விளையாடுகிறார்கள். ஏதாவது பிரச்சினை எழுந்தால் ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈராக் துணை அதிபர் நவுரி அல்-மாலிக் கூறியபோது, குர்து இன மக்களின் தனி நாடு கோரிக்கையை ஒருபோதும் ஏற்க முடியாது. இரண்டாவதாக இஸ்ரேல் நாடு உருவாவதை நாங்கள் அனுமதிக்கவில்லை. பொது வாக்கெடுப்பு திட்டத்தை குர்து இன தலைவர்கள் கைவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

மரண சாசனம்...!

மரணம் என்றெனும் தெரியா நிலையே
     மனிதரின் நிலையா வாழ்வினை உரைக்கும்;
மரணம் என்னும் மாறா இறுதியை
     மனதொடு உணர்ந்தால் மானுடம் சிறக்கும்;
தெரியும் தேடலில் கருணையும் நிறையும்;
     தெளிந்த உளத்திடை தெய்வமும் உறையும்;
புரிதலின் விளைவால் வெறுப்புகள் ஒழியும்;
     புத்தியில் பேதங்கள் தயக்கங்கள் அழியும்;
1

பற்றுகள் மறையும்; பக்குவம் விளையும்;
     பதவிச் சுகத்தின் பாசம் அழியும்;
சுற்றம் சொந்தம் பந்தம் விலகும்;
     சோகம் மோகம் யாவும் அகலும்;
அற்ற குளத்து ஆம்பலைப் போலும்
     அன்புடை வாழ்வே நெஞ்சிடை நிலவும்;
உற்ற தெய்வத்து உள்ளொளி நாடி
     உடலும் உளமும் நலத்தொடு உலவும்;
2

பக்தியும் மலரும்; பண்புகள் புலரும்;
     பருவ நாடக மயக்கம் தெளியும்;
சக்தியும் தெரியும்; சகலமும் புரியும்;
     சாந்த நிலைதனில் சலனமும் விலகும்;
அச்சம் மரணம் துச்சம் ஆகும்;
     அழுகை, துயரம் யாவும் தொலையும்;
முக்தி என்னும் முதன்மை இலக்கில்
     முனையும் வாழ்வில் மேன்மையே நல்கும்;
3

பிறந்ததும் அழுதோம்; பேதை நெஞ்சில்;
     இறப்போம் என்பதை எண்ணி நினைந்தா?
பிறப்பின் நோக்கம் இறப்போ என்று
     பிள்ளை மனத்தால் அறிந்தா? உணர்ந்தா?
பிறப்பின் முடிவே இறப்பே என்றால்
     பெற்றயிவ் வாழ்வும் எதற்கே என்றா?
இறப்பினை நோக்கி வளர்வதா என்றா?
     இருப்பின் கணங்கள் குறையுதே என்றா?
4

பிறந்ததும் அழுதால் பெற்றவர் இன்பம்;
     இறந்ததும் அழுதால் இருப்பவர் துன்பம்;
பிறந்ததும் அழுதோம்; பசிக்கா? ருசிக்கா?
     இருந்தும் அழுதோம்; குறையா? பிழையா?
இறந்ததும் அழுதோம் இழப்பா? பிழைப்பா?
     இரக்கம் கருணை எதற்கும் அழுதோம்.;
துறந்ததும் அழுதோம்; தொலைந்ததில் அழுதோம்;
     துரோகம் ரோகம் அனைத்திலும் அழுதோம்;
5

வரவுகள் இழந்து வருந்தும் துயரில்
     வாழ்வில் நழுவும் வளமையில்; வலியில்
உறவுகள் மறைவில் உணர்ச்சிப் பிரிவில்
     உயர்வில் தாழ்வில் ஊமை நட்பில்
குறைகள் அறிந்து குமையும் பொழுதில்
     குன்றிய பெருமையில்; குறையும் அருமையில்
மறைவில் மனதுள் மயங்கியே அழுதோம்;
     மனித வாழ்வில் வேறென்ன கண்டோம்?
6

கண்டவை எல்லாம் மறையும் இன்பம்;
     கருத்திடைக் கனன்ற மாயப் பிம்பம்;
உண்டவை உடுத்தவை உடலொடு முயன்றவை
     வென்றவை சென்றவை விரிந்தவை புரிந்தவை
மண்டல மண்ணிடை மலர்ந்தவை நிகழ்ந்தவை
     மானில மேதினில் வளர்த்தவை சிலிர்த்தவை
அண்டிக் களித்தவை அனைத்தும் அகத்தே
     ஐயம் திரிபிலாச் சிற்றின்பச் சருக்கம்!
7

சலனச் சிறையில் சருக்கும் நினைவில்
     சருகாய் அருகும் அகவை முதிர்வில்
நலத்து நலிவில் நடையின் தளர்வில்
      நல்லவை அல்லவை அறியும் நிலையில்
உலகியல் நடப்பினை ஒதுக்கும் பொழுதில்
     உளத்தே இறப்பை உணரும் நொடியில்
மலங்களைத் துறந்து மயங்கும் தருணம்
     மரணம் வருகையில் வருந்துதல் முறையோ?
8

மறையும் போழ்தும் அழியாத் துடிப்பா?
     மரணப் பிடியிலும் மறையாப் பிடிப்பா?
இறைவன் அழைப்பை மறுக்கும் நடிப்பா?
     இருப்பைப் பெருக்க மறுகும் படிப்பா?
பிறந்தன இறக்கும்; தோன்றின மறையும்;
     பிழையாச் சுழற்சியில் எதுதான் நிலைக்கும்?
அறிந்தன அனைத்தும் அழிதலே உண்மை;
     அழுதால் மட்டும் வாழ்வா பிழைக்கும்?
9

ஆடிய ஆட்டம் போதும் என்றே
     ஆண்டவன் அழைக்கும் வேளை அன்றோ?
தேடலில் உயிரும் தேர்ந்த நிலையில்
     திரும்பா இறுதிப் பயணம் அன்றோ?
படைத்தோன் வகுத்த விதிப்படி முடியும்
     பயிலா நாடக இறுதித் தருணம்;
கடவுளின் மடியில் மீளாத் துயிலாம்;
     கரும்பாய் இனிக்கும் மரணம் அஃதே;
10

உடலும் உயிரும் உறவறு நேரம்
     உதறாப் பற்றால் பயன் என்ன?
விடுதலை உற்று ஏகும் போதும்
     வேதனை கொள்வதில் நலம் என்ன?
நடப்பவை யாவும் நலமென நினைந்தால்
     நாளும் மனதிடைச் சுகம் தானே!
கடப்பவை எல்லாம் கடமையே என்றால்
     கருத்திலும் வருத்தம் இலை தானே!
11

உடலை உயிரும் களையும் நொடியில்
     உணர்வு மறைதல் என்ன நிபந்தனையா?
உலகை விட்டுப் பிரிவது என்பது
     உயிருக்கு வருகிற உயர் தண்டனையா?
மறையும் இறுதித் துளியினில் கூட
     இறையைத் தொழுதால் பலன் தானே;
பிறப்பும் இறப்பும் இல்லா முக்தி
     பெறுவோம் என்றால் சுகம் தானே?
12

ஒருமுறை தானே வருகிற மரணம்
     உளத்தால் நொந்து மடிவதும் ஏன்?
ஒவ்வொரு நாளும் மரண பயத்தால்
     உள்ளே வருந்தித் துடிப்பதும் ஏன்?
இறக்கும் நொடியும் இன்பம் என்றே
     இருந்து விட்டாலே குறை என்ன?
இரணமே இல்லா மரணம் அல்லால்
     இறுதியில் பேரின்பம் வேறு என்ன?
13

தரணியில் இயற்கை மரணம் என்பது
     தானாய் வருகிற இறுதி ஒன்றே;
தருமம் கருமம் என்பது எல்லாம்
     தவமாய் வாழ்ந்து முடிந்த பின்னே;
மறுமைச் சுழற்சி வெல்லும் முக்தி
     மண்ணில் முழுதும் வாழ்ந்த பின்னே;
மரணம் என்பதும் இன்பம் தானே
     மனதுள் தெரியும் உறுதி முன்னே!!!
14

கூட்டினைக் குருவி துறந்திடுங் காலை
     கூறிடும் வாய்பை இழப்ப தினாலே
நாட்டிடை கிடந்து நாறா மெய்யை
     பாடையில் இட்டுப் பயணம் சுமக்கும்
கூட்டினும் பெருக்கினும் வருகிற நாலை
     கூடிக் களித்த கூட்டம் முதலாய்
காட்டிடை எரிக்கும் மானுடம் வரைக்கும்
     கழல்வோம் இன்றே கடைசி நன்றி!!!
15

திங்கள், 18 செப்டம்பர், 2017

ஏலியன்ஸ் இருக்கா? இல்லையா? என்ன சொல்கிறது நாசா

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஏலியன்ஸ் குறித்த தகவலை நாசா கெப்ளர் தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டது.


அதில் 10 புதிய கோள்கள் உயிர் வாழத் தகுதியுடையதாக உள்ளது என தெரிவித்தது. கெப்ளர் தொலைநோக்கி மூலம் கடந்த நான்கு வருடங்களாக நடத்திய ஆராய்ச்சியில் இதுவரை ஏராளமான கோள்கள் கண்டறியப்பட்ட்டுள்ளது. அதில் 2335 கிரகங்கள் வெளிக்கோள்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. பூமியை போன்று உயிர் வாழ தகுதியுடைய 30 கோள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பிரபஞ்சத்தில் நாம் வாழும் பூமியில் மட்டும் தான் உயிரினம் உள்ளதா? இல்லை நம்மை போன்று வேறு கிரகத்தில் உயிரினம் இருக்குறாதா? என்பதுதான் கேள்வி. இந்த கேள்விக்கு அன்று முதல் இன்று வரை முடிவுரை எழுதப்படாமல் தொடர்ந்து வருகிறது. இதுகுறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

ஏலியன்ஸ் குறித்து நாசா தற்போதைய சூழலில் எதையும் உறுதியாக சொல்ல முடியாது என தெரிவித்துள்ளது. மேலும் உயிர்கள் வாழ்வதற்கான தகுதியுடைய கோள்கள் கண்டறியப்பட்டுள்ளதால், வேற்று கிரகவாசிகள் இருக்கலாம் என்ற கூற்று மிகவும் வலுவடைந்து வருகிறது.       

நோய்க்கு மருந்தா மருந்துக்கு நோயா?


புதுப்புது ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால், மிகப் பழைய அமைதியோ தொலைந்து விட்டது. அதுபோலவே, புதுப்புது நோய்கள் பூவுலகிற்கு அடிக்கடி அறிமுகமாகின்றன. ஆனால், மருத்துவத் துறையின் விழுமியங்களோ மரணக் கட்டிலில் கிடக்கின்றன. மருந்து நிறுவனங்களும், மருத்துவர்களும் அமைக்கின்ற கூட்டணி, நோயாளிக்குக் குணத்தை கொடுக்கும் போர்வையில், பணத்தைப் பறிக்கும் கொடுமையை முதன்மையாகக் கொண்டிருக்கிறது.மகத்துவ மிக்க மருத்துவத் துறையில் மனிதநேயத்தையும், சேவையுணர்வையும் தனது முகவரியாய்க் கொண்ட முன்மாதிரி மருத்துவர்கள் பலரும் உண்டு. ஆனால், விழுமியங்களைத் தொலைத்தவர்களின் விளைச்சல் மிக வேகமாக அதிகரித்து வருவதையும் மறுக்க முடியாது.

கல்வியும், மருத்துவமும் வணிகமயமாகிவிட்டால் மிகப் பெரிய பண்பாட்டு வீழ்ச்சி ஏற்படும். மிருக உணர்வுகளும் வளர்ந்து விடும். எனவேதான், அறஞ் சார்ந்த அரசுகள் கல்வியையும், மருத்துவத்தையும் குடிமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்ற கொள்கையை ஏற்றிருந்தன.இன்று அரசாங்க மருத்துவமனை, ஏதுமற்ற ஏழைகள் மட்டும் உயிருக்குத் துணிந்து போகும் இடமாக்கப்பட்டுள்ளது (சில விதிவிலக்குகள் உண்டு).ஆனால், தனியார் மருத்துவமனைகளோ, வீதிகள் தோறும் புற்றீசல்போலப் பெருகியுள்ளன.ஊடகங்களில், பெரு நிறுவனங்கள் தயாரிக்கும் நுகர்வுப் பொருள்களின் விளம்பரங்களோடு, மருத்துவமனை விளம்பரங்களும் போட்டி போடுகின்றன. மருத்துவமனைகள் ஆடித் தள்ளுபடி அறிவிக்காததுதான் பாக்கி.ஒரு நோயாளியிடம் பிரபல மருத்துவர், குறிப்பிட்ட இடத்தில் ஸ்கேன் எடுத்து வருமாறு கூறுகிறார். அந்த நோயாளி, கட்டணம் குறைவான இடத்தில் ஸ்கேன் எடுத்துக் கொண்டு, அதை மருத்துவரிடம் காட்டுகிறார்.மருத்துவர் முகத்தில் எரிமலை வெடிக்கிறது. "நான் சொன்ன இடத்தை விட்டுவிட்டு எங்கோ போய் எடுத்துள்ளீர்கள். இது உயிர் விஷயம், இதிலா கணக்குப் பார்ப்பது? பாருங்கள் தெளிவாக இல்லை. நான் சொன்ன இடத்தில் போய் எடுத்து வாருங்கள்’ என்று விரட்டுகிறார்.நோயாளியோ, தான் ஸ்கேன் எடுத்த இடத்திற்குக் கோபமாகச் சென்றபோது, அவர் வரவை ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்த அங்கிருந்த பொறுப்பாளி, "டாக்டர் ஸ்கேன் தெளிவாக இல்லை எனத் திட்டியிருப்பாரே’ என்று கேட்க, ஆச்சர்யமான அந்த நோயாளி "ஆமாம்’ என்கிறார்."அதே ஸ்கேனை இதோ இந்த கவரில் போட்டுத் தருகிறேன். எடுத்துப் போங்கள்’ என்று கூறி மருத்துவர் பரிந்துரைத்த நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட உறையில் அதை இட்டுத் தருகிறார்.மீண்டும் மருத்துவரிடம் போன நோயாளியிடம் மருத்துவர் சொல்கிறார்:"பார்த்தீர்களா. இது எவ்வளவு தெளிவா இருக்குன்னு. முன்னாடியே இங்கே போயிருந்தா உங்களுக்கு வீண் செலவு ஏற்பட்டிருக்காதல்லவா?’எல்லா மருத்துவர்களுமே இப்படியா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால், கணிசமான தொகையினர், இப்படித்தான் இயங்குகிறார்கள் என்பது உண்மை.


மருந்து நிறுவனங்கள், மருத்துவர்கள் நடத்தும் மருத்துவமனைக்குத் தேவையான உபகரணங்களை, மேசை, நாற்காலி, படுக்கை உள்பட வாங்கித் தருகின்றன.கருத்தரங்குகளுக்கோ, பணியை முன்னிட்டோ, அல்லது இன்பச் சுற்றுலாவாகவோ, மருத்துவர் வெளியூர்கள் அல்லது வெளிநாடுகள் செல்லும்போது, விமானப் பயணம், நட்சத்திர விடுதிகளில் தங்குதல் உள்ளிட்ட ஏற்பாடுகளை மருந்து நிறுவனங்கள் மனமுவந்து செய்து தருகின்றன.நூற்றுக்கு நூறு தொடங்கி நூற்றுக்கு ஐநூறு தாண்டி, சலுகை மருந்துகளைத் தருகின்றன. மருத்துவர் தனது மருத்துவமனையிலேயே மருந்தகமும் வைத்திருந்தால் நோயாளிகள் சுரண்டப்படும் விதம் சொல்லி மாளாது.மருந்து நிறுவனங்கள் சில மாத(ா)ந்திர கையூட்டுகளை மருத்துவர்களுக்கு அளிக்கின்றன. இப்படி ஏராளமான சலுகைகளும், லஞ்சங்களும், தாராளமாகத் தரப்படுகின்றன. இதற்கு மருத்துவர்கள் செய்ய வேண்டிய ஒரே கைம்மாறு அந்நிறுவனத்தின் மருந்துகளை, அதிகமாக எழுதி, நோயாளிகளை வாங்கச் செய்ய வேண்டும்.சில மருத்துவர்கள் சிறிய நோய்க்கும் பெரிய பட்டியலே எழுதுவார்கள். காரணம், அவர் பல நிறுவனங்களுக்கும் கடமைப்பட்டவர். அதிக மருந்துகள் உட்கொள்வதால், குடலில் அமிலப் பாதிப்பு வருமல்லவா அதற்கும் சேர்த்து ஒரு மருந்தை எழுதி விடுவார்.மருத்துவர் தந்த அதீத மருந்துகளின் பக்க விளைவு மெதுவாகத் தெரியும்.


ஒரே வகையான மருந்துகள், தயாரிப்பு நிறுவனங்களுக்கேற்ப, பெரும் விலை வேறுபாட்டுடன் சந்தையில் உள்ளன.நான்காம் தலைமுறை எதிர் உயிரி மருந்துகளில் 4th Generation Anti-biotic) Cefxime என்ற மருந்தை ஒரு நிறுவனம் 11 ரூபாய்க்கும் (Cipla-omnix) இன்னொரு நிறுவனம் 6 ரூபாய்க்கும் (Mankind-Mancet) விற்பனை செய்கிறது.மருந்துகளின் விலையைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் சில வகையான மருந்துகளுக்கு அரசு அனுமதியளித்துள்ளது. "ஜெனரிக் மெடிசன்ஸ்’ (மூலப்பொருள் பெயரிலான மருந்துகள்) அதிகம் பிரபலமாகாத நிறுவனங்களால் தயாரிக்கப்படுபவை. ஆனால், முறையான அனுமதியே பெறாமல் இந்தியா முழுவதும் ஏராளமான மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருவதாக ஒரு மருத்துவர் நம்மிடம் தெரிவித்ததோடு, மேலும் பல அதிர்ச்சியூட்டும் செய்திகளையும் கூறினார்.உலக நாடுகள் பலவற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள Analgin, Cisapride, Properido, Furazolidone, Nimesulid, Nitrofurazone, Phenol Phthalein உள்ளிட்ட பல மருந்துகள் நாட்டில் தங்கு தடையின்றி சந்தையில் விற்கப்படுவதைக் கவலையோடு பகிர்ந்து கொண்டார்.இந்த மருந்துகள் பிற நாடுகளில் தடை செய்யப்படுவதற்கு எலும்புகளை பலவீனப்படுத்துதல், மன அழுத்தம் ஏற்படுத்தல், நாடித் துடிப்பை சீர்குலைத்தல், புற்றுநோய் உருவாக்குதல், கல்லீரலைப் பாதித்தல் உள்ளிட்ட மிக மோசமான காரணங்கள் கூறப்பட்டுள்ளன. உலகில் அதிக மனித வளம் கொண்ட நம் தாய்த்திருநாட்டுக்கு குடிமக்களின் உடல்நலம் குறித்த அரசின் அக்கறையை மேற்கண்ட மருந்துகளின் அமோக விற்பனை காட்டுகின்றது.காலாவதியான மருந்துகளையும் காசாக்கும் தகவல்கள் நம்மைப் பதற வைக்கின்றன. காலாவதியான மருந்துகள் நோய் தீர்க்காது என்பதைவிட, சில நேரம், எதிர்விளைவுகளை ஏற்படுத்தி உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயமும் உள்ளது.

மருந்துக் கடைகளில், காலாவதியாகித் தேங்கிவிட்ட மருந்துகளை ஒரு கொடுங் கும்பல் சேகரித்துச் சென்று காலாவதி தேதியை மாற்றி, புது லேபிள் ஒட்டி, மறுசுழற்சி செய்கின்றனவாம். மருந்தை வாங்கியதும், காலாவதி தேதியை முதலில் பார்ப்போம். தேதியே போலியான தென்றால்?நோயாளி நுகர்வோர் என்னதான் செய்வது? எந்த மருந்து வாங்கினாலும், அதற்கு பில் வாங்க வேண்டும். மருந்து குறித்து சந்தேகம் இருந்தால், மருந்தின் மேற்புறம் அச்சிடப்பட்டுள்ள Batch எண்ணை, மருந்து நிறுவனத்தின் இணையதளத்திற்குள் சென்று பதிவு செய்தால், உண்மையான காலாவதி தேதி
தெரிந்துவிடும். ஒருசமயம், Batch எண்ணே போலியாக இருந்தால், எந்தத் தகவலும் வராது. அந்த விவரங்களை நகல் எடுத்து, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.எல்லா நோயாளிகளுக்கும் இயல்கிற செயலா இது?நோயாளிகள் பெற வேண்டிய விழிப்புணர்வு குறித்து சமூக அக்கறையுள்ள ஒரு மருத்துவர் கூறியதாவது:மருத்துவர்கள் எழுதும் மருந்துகள், அவற்றின் பயன்கள் குறித்து மருத்துவரிடம் நோயாளிகள் கேட்க வேண்டும்.மருத்துவர் தரும் மருந்துச் சீட்டில் (Prescribtion) நோயின் தன்மை (அ) பெயர் எழுதப்பட்டுள்ளதா என கவனிக்க வேண்டும். இவ்வாறு நோய் குறித்த விவரங்களைக் குறிப்பிடுவது கட்டாயம்.வெளியூரில் அந்த மருந்து கிடைக்குமா என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். சில மருந்து நிறுவனங்கள் மருத்துவர் குறிப்பிடும் பெயர்களிலேயே மருந்து தயாரித்துத் தருகின்றனவாம். அவர் மருந்து சீட்டில் உள்ள கடை தவிர பிற கடைகளில் அந்த மருந்து கிடைக்காது. மருத்துவர்களின் சேவை மகத்தானது. அர்ப்பணிப்புணர்வும், தொழில் அறமும், சேவை உள்ளமும் கொண்ட ஏராளமான மருத்துவர்கள், மக்களின் மனங்களை ஆள்கிறார்கள் என்பது உண்மை.குணமாக்கும் மருத்துவத்தைப் பணமாக்க மட்டுமே பயன்படுத்துவது, பஞ்சமா பாதகத்தினும் கொடிய பாதகம்.

மருந்து நிறுவனங்களின் நடவடிக்கைகளை அரசு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். தனியார் பள்ளி கல்விக் கட்டணங்களை அரசே நிர்ணயித்தது போல, மருந்துகளுக்கும் அதற்குரிய நியாயமான விலையை அரசே மக்கள் நலச் சிந்தை கொண்ட நிபுணர் குழுவை நியமித்துத் தீர்மானிக்க வேண்டும்.நோய் வந்தால் மருந்துகள் எடுக்கலாம்; மருந்துகளுக்கே நோய் என்றால்.

வெள்ளி, 8 செப்டம்பர், 2017

கௌரி லங்கேஷ் - உடைந்த 'பேனா முனை'

வாள்முனையைவிட பேனாமுனை வலிமை கொண்டது என்னும் வரி பலசந்தர்ப்பங்களில் சொல்லப்படுகிறது. உண்மை, ஆனால் அது கல்வியறிவும் அரசியல்பிரக்ஞையும் கொண்ட சமூகங்களில். உலகமெங்கும் நிகழ்வதென்னவென்றால் ஒருங்கிணைந்த மதப்பழைமைவாத அமைப்புக்களால் மிக எளிதாக ஓரிரு கொலைகள், வன்முறைகள் வழியாக மாற்றுத்தரப்புகளை மையத்திலிருந்து விலக்கி அமைதியாக்கிவிடமுடியும் என்பதே.

அதிதீவிர ஒற்றைநிலைபாடு. அதற்கு தர்க்கஒருமையும் வரலாற்றுணர்வும் கொண்ட பார்வை ஏதுமில்லை. உணர்ச்சிகரமான பற்று மட்டுமே இருக்கும். அத்தகைய இதழாளர்கள் பலர் இன்றுள்ளனர். அவர்களின் நிலைபாடுகள் மிகமிக எளிமைப்படுத்தப்பட்டவை, ஆகவே தெருச்சண்டை அரசியல்கொண்டவை. அதேசமயம் அவர்கள் இன்றைய இந்தியாவின் மனசாட்சியின் குரல்களாக, பன்மைத்துவத்தின் சமரசமற்ற போராளிகளாக, நவீன உலகு தேங்கியழுகிய பழைமைவாதத்திற்கு அளிக்கும் எதிர்வினைகளாக இருக்கிறார்கள். கௌரி லங்கேஷ் அத்தகையவர்

மாற்றுக்கருத்துக்கள் என்றுமிருக்கும் என்பது உண்மை, ஆனால் அது வலுவான தரப்பாக ஒலிக்காது. அந்தச் சமநிலையின்மையே வன்முறையாளரின் குரல் ஓங்கி ஒலிக்கச்செய்துவிடும். சாமானியர் ஆற்றலை வழிபடுபவர்கள் என்பதனால் ஓங்கி ஒலிக்கும் குரலை நோக்கியே ஈர்க்கப்படுவார்கள். காலப்போக்கில் அந்த பழைமைவாதமும் அடிப்படைவாதமும்  கருத்தியல்சூழலை, அரசியலதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ளநேரும். இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் கைப்பற்றப்பட்ட நாடுகளில் நிகழ்ந்த அதே அரசியல்பரிணாமம் இங்கும் இந்து அடிப்படைவாதத்தால் தொடங்கப்பட்டுள்ளது என்பதையே இக்கொலைகள் காட்டுகின்றன.

கௌரி லங்கேஷின் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படவேண்டும், முன்னுதாரணமாகத் தண்டிக்கப்படவேண்டும். அதையொட்டி மக்களின் எதிர்ப்பு திரளவும் அடிப்படைவாதிகள் அதன்பொருட்டு மன்னிப்புகோரும்ம்கட்டாயம் உருவாகவும் வேண்டும். அதுவே இன்று தேவையானது, எதிர்காலத்திற்காக...!

வியாழன், 31 ஆகஸ்ட், 2017

ரோஹிங்கியா முஸ்லிம்கள் - நடப்பது என்ன? மனிதவுரிமையாளரான மாங் சார்ன் குறிப்பு




நீண்ட காலமாக மியான்மர் நாட்டில் நிலவி வரும் பௌத்த மதத்தைச் சாராத பர்மியர்களுக்கு எதிரான இனப் பாகுபாடு சமீப காலத்தில் அதிர்ச்சி தரத்தக்க அளவில் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் என்று அழைக்கப்படும் இஸ்லாமிய சமூகம் ஒன்றுக்கு எதிராக மியான்மரின் ராணுவ ஆட்சியாளர்களும் மைய நீரோட்ட பர்மிய கட்சிகளும் பௌத்த துறவிகளும் புதிதாகக் கிளம்பியிருக்கும் மதவெறி அமைப்புகளும் ஊடகங்களும் சமீப காலமாக மாபெரும் இனவாத ஒடுக்குமுறையில் இறங்கியிருக்கிறார்கள்.

கடந்த ஓராண்டில் (இது 2013 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது) மட்டும் ராணுவமும் காவல்துறையும் பார்த்துக் கொண்டிருக்க, நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உயிரோடு எரிக்கப்பட்டிருக்கிறார்கள். சுமார் ஒன்றரை லட்சம் முஸ்லிம்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். வீடுகளை விட்டு விரட்டியடிக்கப்பட்டு முகாம்களில் கும்பல் கும்பலாகத் தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு எந்தவித வசதிகளும் கிடையாது. சமீபத்தில் இந்த நிலைமை உச்சத்தைத் தொட, வெளியுலகமும் சற்றே வளைந்துகொடுக்க ஆரம்பித்திருக்கிறது.

இலங்கை நினைவுக்கு வருகிறதா? இலங்கையில் தமிழர்களுக்கும் இப்போது முஸ்லிம்களுக்கும் ஏற்பட்டு வரும் அதே மாதிரியான இனவாத ஒடுக்குமுறைதான் மியான்மரிலும் இப்போது சிறுபான்மையர்களான முஸ்லிம்களுக்கும் கச்சின் பகுதியிலுள்ள கிறிஸ்தவர்களுக்கும் எதிராக நடக்கிறது. இரண்டு நாடுகளிலும் பௌத்த மதவாதம் ஒரு மதவாத பாசிச கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது.

சீனாவின் உதவியுடன் சர்வாதிகார ஆட்சியாளர்கள் சிறுபான்மையர்களுக்கு எதிரான இன ஒழிப்பில் வெளிப்படையாக இறங்கியிருக்கிறார்கள். பொது சமூகமும் ஊடகமும் ஜனநாயகவாதிகள் என்று கூறிக் கொள்வோரும் பௌத்த இனவெறி துறவிகளின் கைப்பாவையாக மாறியுள்ளனர். பர்மாவின் தேசத்தந்தை ஆங் சானின் மகளும் ராணுவ சர்வாதிகாரத்துக்கு எதிராக போராடி ஜனநாயக தேவதையாகப் பெயர் பெற்றவருமான ஆங் சான் சூ க்யி, இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க போலவே, வெளியே ஜனநாயகவாதியாகவும் உள்ளே பெரும்பான்மை இனவாத அரசியல்வாதியாகவுமே இருக்கிறார் என்பது அம்பலமாகியுள்ளது.

மியான்மரில் உள்ள முஸ்லிம்கள் ஓர் இனப்படுகொலைக்கு உள்ளாகி வருகிறார்கள் என நேரடியாக குற்றம்சாட்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கிறார் பர்மாவில் பிறந்து ஒரு கலகக்காரராக இன்று புலம்பெயர்ந்து வசித்து வருபவரும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயின்சஸில் சிவில் சமூகம் மற்றும் மனிதப் பாதுகாப்பு ஆராய்ச்சி குறித்த பிரிவில் வருகைதரு பேராசிரியராக இருப்பவருமான மாங் ஃஸார்னி.

மியான்மர் நிலவரத்தைப் பற்றியும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை பற்றியும் பௌத்த மதம் ஒரு மோசமான மதவாத அரசியலுக்கு மையமாக மாறியிருப்பது குறித்தும் மாங் ஃஸார்னியுடன் தொடர்பு கொண்டு உரையாடினார் தமிழ் ஆழி எடிட்டர் செந்தில்நாதன். தனது முன்னோர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த செட்டியார் என்று கூறிய ஃஸார்னி தமிழ் ஆழியுடன் பல விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். அவருடனான நேர்காணலிலிருந்து:

1 . மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் பௌத்த மதத்தினரின் தாக்குதல்களை வரலாற்று ரீதியில் எப்படிப் பார்க்கிறீர்கள்? இந்த இனவாதத்தின் பின்னணி என்ன?

ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஒரு குழுவாக வாழமுடியாத அளவுக்கு அவர்களது வாழ்க்கையை நாசமாக்கும் வேலையில்தான் பர்மாவிலுள்ள அரசியல் சக்திகளும் மதவாத சக்திகளும் இறங்கியுள்ளன. முஸ்லிம்கள் மட்டுமல்ல, இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து பர்மாவுக்கு வந்த அனைவர் மீதும் காலங்காலமாகத் தொடர்ந்து வரும் இந்திய எதிர்ப்பு இனவாத அரசியல் வரலாறு இதற்கு பின்புலமாக இருக்கிறது. பிரிட்டிஷ் காலத்தில் நாட்டின் உயர் மட்டத்தில் பிரிட்டிஷ்காரர்கள் இருந்தார்கள். அரசியலும் பொருளாதாரமும் அவர்கள் கையில் இருந்தது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பர்மா கிட்டத்தட்ட இந்தியாவின் ஒரு மாகாணமாகவே இருந்தது. எண்ணெய் வளம், தொழில்துறை, விவசாயம் உள்ட பல துறைகளின் வளர்ச்சிக்காக இந்தியர்கள் பலர் பிரிட்டிஷாரால் பர்மாவுக்குள் கொண்டுவரப்பட்டனர். இவர்கள் நாட்டின் இடைநிலை அதிகார மட்டத்தில் இருந்தார்கள். குறிப்பாக வர்த்தகம் இந்தியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. உள்ளூர் பர்மியர்கள் பெரும்பாலும் கீழ்த்தட்டில் இருந்தார்கள். இந்தப் பின்னமியில்தான் பர்மிய இனவாதம் இந்தியர்களுக்கு எதிரான ஒன்றாக உருவெடுத்தது. இரண்டாம் உலகப் போரின்போது ராகைன் மாநிலத்திலுள்ள பர்மியர்கள் ஜப்பானோடு சேர்ந்துகொண்டார்கள். ஆனால் இந்தியர்கள் பிரிட்டிஷாரின் பக்கம் இருந்தார்கள். இதில் இந்திய முஸ்லிம்கள், இந்துக்கள் இரு தரப்பினரும் உண்டு. மேற்கு பர்மியர்களும் பிரிட்டிஷ் பக்கம் இருந்தார்கள். எனவே ராகைன் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக 1942 ஆம் ஆண்டிலேயே  கலவரம் வெடித்தது.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறித்து மத ரீதியிலான அச்சங்களும் பர்மியர்களுக்கு இருந்து வருகிறது. இஸ்லாம்மயமாக்கம் என்பது அதில் முக்கியமானது. பர்மாவின் பெருவழக்கம் என்னவென்றால் ஒரு முஸ்லிம் ஆண் முஸ்லிமல்லாத பர்மியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால், அந்தப் பர்மியப் பெண் முஸ்லிமாக மதம் மாற வேண்டும். இல்லையென்றால் அவருக்கு சொத்து, வாரிசுரிமை எதுவும் கிடைக்காது. இது போன்ற விவகாரங்கள் இரு தரப்பினரிடையே மோதலை உருவாக்கின.

மலாய், இந்தோனேஷிய சமூகங்கள் ஒரு காலத்தில் பௌத்த, இந்து சமூகங்களாக இருந்தன. பிறகு முஸ்லிம் வணிகர்கள் மற்றும் பிற சக்திகள் மூலம் அவை முஸ்லிம் நாடுகளாயின. இதே மாதிரி தங்கள் நாட்டுக்கு ஆகிவிடுமோ என்கிற அச்சமும் பர்மியர்களுக்கு உண்டு.

2 . மியான்மரில் நடப்பது ஒரு இனப்படுகொலை என்று கூறுகிறீர்கள். மியான்மரில் ராணுவ சர்வாதிகாரம் மட்டுமே பிரச்சனை என்று நினைத்துக் கொண்டிருந்தோம். உலக நாடுகளும் மியான்மரில் நடப்பது இனப்படுகொலை என்று கருதுவதாகத் தெரியவில்லையே?

நாஜி ஜெர்மனியின் ராணுவம் நேரடியாக இனப்படுகொலையை நடத்தியது. ஆனால் மியான்மர் ராணுவம் வேறு வழிகளைக் கையாள்கிறது. அது கிட்டத்தட்ட இனப்படுகொலையை மற்றவர்களை வைத்துச் செய்துகொள்கிறது. மதக்கலவரங்கள் உருவாவதற்கான சூழலை உருவாக்கி தாக்குதல்கள் அதிகரிக்கும்படி அது பார்த்துக் கொள்கிறது. கடந்த நாற்பதாண்டுகளாக முஸ்லிம்கள் விஷயத்தில் பர்மிய அரசு என்னவல்லாம் செய்துவருகிறது எனப் பார்க்க வேண்டும். அது முஸ்லம்களின் பிறப்பு வீதத்தைக் கட்டுப்படுத்த முயன்றது. மக்கள்தொகைக் கொள்கைகள் மூலம் ஒரு சமூகப் பிரிவைக் கட்டுப்படுத்துவதும் அவர்களது சமூக இயக்கத்தை மட்டுப்படுத்துவதும் இனப்படுகொலையின் ஒரு பகுதிதான்.

தாங்களாகவே உயிர் பிழைத்து ஓடுவதற்குரிய சூழலில் ஒரு சமூகத்தைத் தள்ளுவதும் அப்படி கடலில் படகேறி தப்பிக்கும்போதும் எல்லைகளைத் தாண்டிச் செல்ல முயலும்போதும் அவர்களது உயிருக்கு உலை வைப்பதும் என இவை அனைத்துமே இனப்படுகொலை நடவடிக்கைகள்தான். இனப்படுகொலை என்றால் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்கிற எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து மட்டுமே பேச முடியாது.

ராகைன் பௌத்தர்களுக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையில் நடப்பதை வகுப்புக் கலவரம் என மீடியா கூறுவது முற்றிலும் பிழையானது. இதில் வகுப்புவாதத்தின் பங்கும் இருக்கிறது. ஆனால் அது ஒரே ஒரு பகுதி மட்டுமே. பல்வேறு வியூகங்கள் அமைத்து ஒரு மக்கள் பிரிவையே ஒழித்துக்கட்டுவது என்கிற ராணுவ ஆட்சியாளர்களின் திட்டமே இந்த இனப்படுகொலையின் மையமாகும்.

மத்திய பர்மாவில் மெய்க்திலாவில் நடந்த தாக்குதல்களில் பட்டப்பகலில் ராணுவ, போலீஸ் கண்பார்வையில் பேரளவில் முஸ்லிம்களின் வியாபாரத் தலங்கள் சூறையாடப்பட்டன. முஸ்லிம்களின் வீடுகளும் தாக்கப்பட்டன. தாக்குதல் நடத்தியோரில் பெரும்பாலானோர் பொதுமக்கள். ஆனால் பர்மாவில் முஸ்லிம்கள் வியாபாரத் துறையை ஆதிக்கம் செலுத்தவில்லை. அது இப்போது சீனர்களின் கையில்தான் இருக்கிறது.

ஆனால் எந்த அரசும் சர்வதேச சமூகமும் இதை இனப்படுகொலை என்று கூற விரும்பவில்லை. காரணம் அப்படிக் கூறிவிட்டால் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஐ.நாவின் தலையீடு தவிர்க்க முடியாமல் போகும். பர்மிய ராணுவ ஆட்சியாளர்களையெல்லாம் தண்டிக்கும் ஆர்வம் இப்போது மேற்கத்திய நாடுகளிடம் இல்லை. பர்மாவைத் தங்கள் சந்தைக்கான இடமாகப் பார்க்கும் எண்ணம் முதன்மை பெற்றுவிட்டது. மனித உரிமைகள் பின்சென்றுவிட்டன. ஆசியாவில் நாடுகளுக்கிடையிலான உறவை மறுசமன்பாட்டுக்குட்படுத்தும் மேற்குலகின் புதிய உத்தி இது. ஆசிய மைய அச்சு என்கிற ஒபாமாவின் புதிய கொள்கை இதைத்தான் குறிக்கிறது.

3 . டிரைசைக்கிள் இதழுக்கு நீங்கள் அளித்த ஒரு நேர்காணலிலும் அதில் எழுதிய ஒரு கட்டுரையிலும் இனப்படுகொலைவாத பௌத்தம் என்று வர்ணிக்கும் அளவுக்குச் சென்றிருக்கிறீர்கள். இது அதிர்ச்சி அலைகளை எழுப்புவதாக இருக்கிறது. ஆனால் இதே போன்ற சூழலை இன்றும் இலங்கையில் தமிழர்களும் இப்போது முஸ்லிம்களும் அனுபவித்து வருகிறார்கள். பௌத்தமும் ஒரு மதவெறி கருத்தியலாக மாறிவிட்டதா?

பௌத்தம் என்றால் ஒரு கவர்ச்சி மேற்குலகில் இருக்கிறது. ஆனால் பௌத்த தலைவர்களும் சமூகங்களும் எப்படி நடந்துகொள்ளக்கூடும் என்பதை நமது சமீப கால யுத்தங்களிலேயே மிகவும் மோசமான இனப்படுகொலை யுத்தம் நடந்த இலங்கை நிரூபிக்கிறது. இலங்கை அடிப்படையில் மிகவும் ஆழமான பௌத்த சமூகம். பௌத்தரல்லாத தமிழர்கள் சரணடைந்த பிறகும் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட்டார்கள். தாய்லாந்தின் தெற்கில் உள்ள இஸ்லாமிய சமூகத்தவர்களை தாய்லாந்து நாட்டின் பௌத்த சமூகமும் ராணுவமும் எப்படி நடத்துகின்றன என்பதைப் பாருங்கள். உலகின் மிகவும் வன்முறைத்தனம் மிக்க சமூகங்களாக பௌத்த சமூகங்கள் இருக்கும் நிலையில், மேற்குலகம் இன்னமும் அதை ஏன் ஈர்ப்புள்ள, “மன ரீதியாக ஸ்மரணை உள்ள” சமூகங்களாகப் பார்க்கின்றன என்பதுதான் தெரியவில்லை. சொல்லுக்கும் செயலுக்கும் பௌத்த சமயங்களில் இப்போது தொடர்பில்லாமல் போய்விட்டது. பௌத்தர்களாகிய நாங்கள் இப்போது பிழையான, பேராசை கொண்ட, பொறாமை கொண்ட, மற்றவர்களைப் போலவே வன்முறை மிக்க சமூகங்களாக ஆகிவிட்டோம்.

அரசின் நவபாசிச, நவநாஜி தன்மையும் இந்தியர்கள், குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக மிக ஆழமாக பர்மியர்கள் மனத்தில் புதைந்திருக்கும் தவறான அபிப்பிராயங்களும் பொருளாதார ரீதியிலான கஷ்ட காலத்தில் தாங்கள் பலிகாடாவாக ஆகியிருக்கிறோம் என்கிற எண்ணமும் இரண்டாம் உலகப் போருக்கு முன்பிருந்த இனவாத தூய்மை குறித்த கருத்தாக்கங்களும் ஒன்று சேர்ந்து பர்மாவில் பௌத்தம் ஓர் இனவாத கருத்தியலாகவே உருவாகியிருக்கிறது.

4. புதிய மதத் தீவிரவாத அமைப்புகளும் பர்மாவில் தோன்றியிருக்கின்றன. குறிப்பாக 969 என்கிற அமைப்பு. இவற்றுடன் அரசும் ராணுவமும் சேர்ந்தே முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதலைத் தொடுக்கின்றன எனக் கூறியிருக்கிறீர்கள். இதை விரிவாக எடுத்துச் சொல்லுங்கள்.

சமீப காலத் தேர்தல்களில் ராணுவ ஆட்சியாளர்களின் பினாமிக் கட்சியாக இருந்தவர்களுக்கு தேர்தல்களில் வெற்றி கிடைக்கவில்லை. இந்தச் சூழலில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி இனவாத நெருப்பை ஊதிப் பெருக்கி ஆதாயம் அடைய நினைக்கின்றன அரசு சார்பு சக்திகள்.

திடீரென பல மதவாத அமைப்புகள் முளைத்திருக்கின்றன. இப்போது உருவாகியுள்ள புதிய அமைப்புகளில் மிக முக்கியமானது 969 என்கிற அமைப்பு. இது நியோ நாஜி தன்மையுள்ள பௌத்த அமைப்பு. மஞ்சளாடை அணிந்த போலித் துறவியான விராத்து என்பவர்தான் இதன் தலைவர். க்யாக்சே என்ற இடத்தில் முஸ்லிம்களைக் கொன்றதற்காக 2003 ஆம் ஆண்டிலேயே  இவர் சிறையில் அடைக்கப்பட்டவர். பௌத்த மதத்தையும் பர்மாவையும் முஸ்லிம்களிடமிருந்து பாதுகாப்பது என்கிற பெயரில்தான் இந்த அமைப்பே உருவானது. இந்தப் பெயரில் உள்ள 9, 6, 9 ஆகிய எழுத்துக்கள் பௌத்த நெறிகளை பிரதிபலிக்கின்றன. இந்த அமைப்புக்கு பர்மிய ராணுவம், ஊடகம் ஆகியவற்றின் ஆதரவும் ராணுவத் துறையின் மக்கள் தொடர்பு மற்றும் உளவியல் யுத்தப் பிரிவின் ஆதரவும் உண்டு. துவேஷ பிரச்சாரம் இந்த அமைப்பின் மிகப் பெரிய ஆயுதம். கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் துவேஷ பிரச்சாரத்தை ஒரு நாடு ஏற்க முடியாது என்றால் இவர்களது பிரச்சாரம் தடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை. முஸ்லிம் வியாபார நிறுவனங்களைப் புறக்கணிப்பது, அவர்களை சமூகத்திலிருந்து விலக்கி வைப்பது என அவர்களது முஸ்லிம், இந்திய எதிர்ப்புப் பிரச்சாரம் வெகு தீவிரமாக பர்மிய மக்கள் மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆங் சான் சூ க்யி உள்பட பல முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பழி போடவும் 969ஐ ராணுவம் பயன்படுத்திக் கொள்கிறது. சூ க்யியை பணக்கார முஸ்லிம்களின் கையாள் என்று கூட 969 வர்ணிக்கிறது. ஆனால் சூ க்யி முஸ்லிம்களின் துன்பங்களுக்கு பாராமுகம் காட்டுகிறவராகவே இருக்கிறார் என்பது தான் உண்மை. இன்றைய அரசு திட்டமிட்டு இவர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் மேலும் ஒரு முழு வீச்சிலான இனப்படுகொலை நடந்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் அரசும் ராணுவமும் எப்போதும் இனவாதச் செயலை ஊக்குவிக்கின்றன. த டிஸ்ஆர்டர் இன் ஆர்டர்: த ஆர்மிஸ்டேட் இன் பர்மா சின்ஸ் 1962 என்கிற நூலை எழுதிய பேராசிரியர் டோனால்டு ஸீகின் நியூயார்க் டைம்ஸில் எழுதிய தலைஎதிர் கட்டுரையொன்றில் சில விஷயங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். நே வின் ஆட்சிக் காலத்திலும் சமீபத்தில் எஸ்எல்ஓஆர்சி மற்றும் எஸ்பிடிசி ஆட்சிக் காலத்திலும் (1962 - 2010) ராணுவம் மேற்கொள்ளும் ஓர் உத்தியை அவர் அம்பலப்படுத்தியிருந்தார். ஒரு பௌத்த பெண்ணை ஒரு முஸ்லிம் ரேப் செய்துவிட்டார் என்றோ பௌத்தர்களை இஸ்லாமியர்களாக்க சதி செய்கிறார்கள் என்றோ ராணுவம் திட்டமிட்டு ஒரு வதந்தியைக் கிளப்பும். அதை ஒட்டி தானாகவே கலவரங்களை மூட்டும். இவ்வாறான பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் அது தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும். ராணுவத்திலுள்ள மோசமான தளபதிகள் விராத்து போன்ற மதவெறியர்கள் மூலம் தங்கள் பினாமி ராஜ்ஜியத்தை நடத்துகிறார்கள் என்பதே தெளிவான விஷயம்.

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய ராணுவத்தால் உருவாக்கப்பட்டதுதான் பர்மிய ராணுவம். அது ஹிட்லரின் ஆசீர்வாதம் பெற்ற ஒன்று. ஓய்வு பெற்ற ராணுவ உயரதிகாரி ஒருவர் கடந்த ஆண்டு என்னிடம் நேருக்கு நேராக ஒன்றைச் சொன்னார்: எனக்கும் என் சகாக்களுக்கும் இந்த “மு”க்களைக் கண்டாலே பிடிக்காது என்றார் அவர். மு என்றால் முஸ்லிம்கள். “அவர்கள் அனைவரையுமே கொன்றுவிட முடியாதே” என்பதுதான் தங்களுக்கு சங்கடமாக இருக்கிறது என்றார் அவர். அவர் குறிப்பிட்டது மேற்கு பர்மாவிலுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களைத்தான்.

இத்தகைய வகுப்புவாதக் கலவரங்களைத் தூண்டிவிட்டால் ராணுவத்தின் தேவை அதிகமாக உணரப்படும் என்பதும் ஜனநாயகமயமாதலின் வேகம் தடைபடும் என்பதும்கூட ராணுவத்தின் வியூகம். பர்மிய மக்களை அச்சத்தில் இருக்க வைத்து, சமூகத்தில் ராணுவத்தின் கையை ஓங்கச் செய்வதற்காக இத்தகைய வகுப்புவாத, மதக்கலவரங்கள் மூட்டப்படுகின்றன எனப் புலம்பெயர் பர்மிய அறிவுஜீவியான மூ தீ கன் சமீபத்தில் கூறியிருந்தார்.

சில தசாப்தங்களுக்கு முன்பு பர்மாவில் நிலவிய இந்திய எதிர்ப்பு மனநிலை போன்றதா இன்றைய முஸ்லிம்கள் எதிர்ப்புப் போக்கு? முன்பு தமிழர்கள் ஆயிரக்கணக்கில் பர்மாவிலிருந்து தப்பிவந்த ஒரு காலமும் உண்டு.

அன்று தமிழர்களும் பிற இந்தியர்களும் எதிர்கொண்ட எந்தவொரு அனுபவத்தையும்விட இன்று பர்மாவின் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறை மிக மிக தீவிரமானது. இன்றைய அரசு ஓர் இனப்படுகொலை அரசு. இன ரீதியிலும் மத ரீதியிலும் மாற்றாரைத் துடைத்தெறிவது என்கிற கண்ணோட்டமும் இரக்கமற்ற முறையில் அதை நடைமுறைப்படுத்துவதும் முந்தைய சூழலைவிட வித்தியாசமானது.

வரலாறு எப்படிப்பட்ட சுமைகளை நம் மீது சுமத்தியுள்ளபோதும் மியான்மரில் ஜனநாயக மீட்சி என்பது அங்கே ஒரு பன்மொழி, பல்சமய, பல்லின அரசு அமைக்கப்படுவதன் மூலமாகவே சாத்தியமாகும்.

5.  பர்மாவிலுள்ள ஜனநாயகவாதிகள் இதைப் புரிந்துகொண்டிருக்கிறார்களா? ஆங் சான் சூ க்யியை ஒரு ஜனநாயக அடையாளமாக தலைவராக நாங்கள் பார்த்தோம். இந்த விவகாரத்தில் அவரது பங்கு சிக்கலானதாக இருப்பதாகவே தெரிகிறது. அவர் யார் பக்கம் நிற்கிறார்?

ஆங் சான் சூ க்யி ஆக்ஸ்போர்டில் படித்தவர். மேற்கத்திய லிபரல்களோடு இரண்டு தசாப்தங்கள் வாழ்ந்தவர். ஆனாலும் உள்ளுக்குள் அவர் ஒரு பர்மா பௌத்தவாத கலாச்சார வெறியர் தான். அவர் கமுக்கமான இனவெறியர்.

மதசார்பின்மையில் உறுதியான, பல் இன, பல் கலாச்சார தேசியத்தையே அவரது தந்தை உருவாக்க விரும்பினார். ஆனால் அவரது தந்தையைவிட முற்றிலும் மாறுபட்டவர் சூ க்யி. ரோஹிங்கியா முஸ்லிம்கள், கச்சின் கிறிஸ்தவர்கள் உட்பட பர்மாவின், இன, மத சிறுபான்மையர் விவகாரத்தில் அவர் நெடுங்காலமாகவே மௌனம் காத்து வந்திருக்கிறார். அதைப் போலவே அடித்தட்டிலுள்ள பர்மிய பௌத்த விவசாய வர்க்கத்தினருடனும் அவர் தன்னை இனம்கண்டதில்லை.
இன்று பர்மாவில் நிறைய பேர் அவர் மீது நம்பிக்கை இழந்து வருகிறார்கள். நீதிக்கும் சுதந்திரத்துக்குமான அடையாளமாக அவர் இருந்த காலம் மாறிக் கொண்டிருக்கிறது. ராணுவத் தளபதிகள் அவ்வளவாகத் தீங்கற்றவர்கள் என அவர் நினைப்பதாகத் தெரிகிறது. தான் அதிபராக ஆகவேண்டும் என்பதற்காக உண்மையான கொள்கைகளைப் பேசாமல் கல்நெஞ்சம் படைத்தவராக மாறிய ஹிலாரி கிளிண்டனைப் போன்றவர்தான் சூ க்யியும் என்றே தோன்றுகிறது.

6. பர்மாவிலிருந்து தப்பித்துவராமல் அங்கேயே தங்கிவிட்ட தமிழர்களின் நிலைமை பற்றி சொல்வீர்களா? அவர்கள் என்ன ஆனார்கள்? அவர்கள் சம உரிமையுடன் வாழ்கிறார்களா? தமிழர்களுக்கும் பிற இனச் சிறுபான்மையருக்கும் அங்கே என்ன அரசியல் எதிர்காலம் இருக்கிறது?

தமிழர்கள் பற்றியோ அவர்களின் வம்சாவளியினர் பற்றியோ எனக்கு உண்மையிலேயே எதுவும் தெரியவில்லை. உண்மையில் எனது தாய் வழிப் பாட்டன்களில் ஒருவர் தமிழர். அவர் எப்போதோ இறந்துவிட்டார். இங்கே பர்மியர்கள் பார்வையில் தமிழர்களுக்கும் இந்தியர்களுக்குமென தனியே வித்தியாசங்கள் கிடையாது. பர்மியர்கள் இந்திய வம்சாவளியினர் அனைவரையுமே காலர்கள் (கலர்டு பீப்பிள் என்கிற பிரிட்டிஷ் நிறவாத சொல்லாட்சியிலிருந்து வந்தது) என்று கீழ்மைப்படுத்திக் கூப்பிடுவார்கள்.

7.இன்றைய பர்மிய விவகாரங்களில் இந்தியாவின் பங்கு எப்படி இருக்கிறது?

புத்தனும் காந்தியும் தாகூரும் இன்ன பிறரும் பிறந்த இந்தியா இப்போது கல்நெஞ்சம் கொண்ட தனக்கு லாபமா நட்டமா என கணக்குப் போட்டுப் பார்க்கும் நாடாக இருக்கிறது. இந்தியாவின் “கிழக்கு நோக்கிப் பார்ப்போம்” வெளியுறவுக் கொள்கையில் மனிதாபிமானமும் கருணையும் இல்லை. பர்மாவில் நடக்கும் இனவெறித் தாக்குதல்களில் இந்தியாவுக்கு நேரடி பங்கு இல்லை. ஆனால் பர்மிய ராணுவத்துக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் அது இந்திய மண்ணில் வைத்து பயிற்சி அளக்கிறது. பர்மாவின் ராணுவத்துக்கும் அரை சிவிலியன் ஆட்சி நடத்தும் தெயன் சியெனின் அரசுக்கும் இந்தியா உறுதுணை புரிந்து வந்தது. இவ்வகையில் குற்றம் இந்தியாவின் மீதும் இருக்கவே செய்கிறது. கொஞ்சம் எண்ணெயும் எரிவாயும் கிடைத்த காரணத்தால், பர்மிய ராணுவத்துக்கு நற்சான்றிதழ் அளித்திருக்கிறது இந்தியா.

8. இலங்கையில் 2009 யுத்தத்தில் சர்வதேச சமூகம் தமிழர்களுக்கு துரோகமிழைத்தது. பர்மிய முஸ்லிம் விஷயத்திலும் இப்போது இதுவே நடக்குமா? ஒரு சமூகத்துக்கு புவிசார் அரசியல் மதிப்பு இல்லை என்றால் அல்லது அதிகார ஆடுகளத்தில் அதற்கு பயன்பாட்டு மதிப்பு இருக்காது என்றால் மேற்குலகம் அதைப் பொருட்படுத்துவதில்லை. இந்த வஷயத்தில் உலக வல்லரசுகளின் பங்கை எப்படிப் பார்க்கிறீர்கள்? சீனாவின் பங்கு என்ன?

சர்வதேச சமூகம் என்றழைக்கப்படுவதே முரண்பாடுகளுள்ள சுயநலன் மிக்க சித்தாந்தங்களின் சந்தர்ப்பவாத கூட்டுதான். அது ஒருபோதும் மனிதாபிமான லட்சியங்களுக்கு விசுவாசமாக இருந்ததில்லை. இலங்கையில் தமிழர்களின் விஷயத்திலும் சரி பர்மாவில் எல்லா இன, மத சிறுபான்மையர் விஷயத்திலும் சரி, கதாபாத்திரங்கள் மாறலாம், கதை ஒன்றுதான்.

உலகின் பார்வையில் பர்மா ஒரு அசிங்கமாக இருந்தாலும் சரி சொல்கிறேன்: அது இயற்கை வளங்களின் விபச்சார விடுதி. அது கடைசியில் உருவாகியிருக்கும் “புதிய சந்தை” அல்லது “கன்னி பொருளாதாரம்”. யோசித்துப் பாருங்கள். ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இனத் துடைத்தழிப்பு நடக்கிறது என்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் அங்கே நடந்துகொண்டிருக்கின்றன என்றும் தியென் சியென் அரசாங்கத்தைக் குற்றம்சாட்டி ஹியூமன் ரைட்ஸ் வாச் அமைப்பு அறிக்கை வெளியிட்ட அதே நாளில், அதிபரும் முன்னாள் தளபதியுமான தியென் செயினை “அமைதியின் வழி செல்பவர்” எனக் கூறி விருது அளித்து மகிழ்கிறது இன்டர்நேஷனல் கிரைசிஸ் குரூப். பர்மா மீதான எல்லா பொருளாதாரத் தடைகளையும் நீக்க ஐரோப்பிய யூனியன் முன்வந்திருக்கிறது. பர்மாவில் நடப்பது “முன்னுதாரணமாகத் திகழக்கூடிய ஜனநாயத்துக்கான மாறுதல் காலகட்டம்” என்று அழைக்கிறார் அமெரிக்க குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா. ஆசியான் ஐஎம்எஃப், வேர்ல்ட் பேங்க், ஜப்பானின் சென்ட்ரல் பேங்க் அனைத்துமே அங்கே கடைவிரித்துவிட்டன. பர்மாவின் 7 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை ஜப்பானும் பிற கடன் வழங்கு நாடுகளும் ரத்து செய்துவிட்டன. ஆக பர்மாவில் ஓர் இனப்படுகொலை அரசு தன் இனப்படுகொலையை செவ்வனே செய்து முடிக்க அனைத்து உதவிகளையும் சர்வதேச சமூகம் செய்துகொண்டிருக்கிறது என்றே கூறமுடியும்.

இலங்கையில் தமிழர்களுக்கு மாபெரும் அழிவை கொழும்பு நடத்தி முடிப்பதற்கு வியூக முக்கியத்துவம் வாய்ந்த அதிமுக்கிய உதவியை சீனா அளித்தது. அந்த சீனா இன்று பர்மாவின் மீதும் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறது. அதற்குத் தேவை பர்மாவின் இயற்கை வளங்கள், பர்மாவின் மேற்கு மற்றும் தெற்கு கடலோரங்களில் கால் பதிப்பதற்கான அனுமதி ஆகியவைதான். அப்படி நடந்துவிட்டால் இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகிய இரு மாகடல்களிலும் தன் கடற்படைக்கு நேரடித் தொடர்பை சீனா பெற்றுவிடும்.

இன்று மியான்மரில் நடக்கும் இனப்படுகொலை. அதன் பின்னணி என்ன ? என்பதை நாம் அறிந்துக்கொள்ள ஓர் அறிமுகமாக  2013 ஆம் ஆண்டு மே மாதம் தமிழ் ஆழி இதழில் வெளியான மியான்மர் மனிதவுரிமையாளரான மாங் சார்னியிடம் எடுத்த நேர்காணல் தான் இந்த நேர்காணல்.

மனிதவுரிமையாளரான மாங் சார்ன் குறிப்பு :

ரோஹிங்கியா முஸ்லீம்களின் மீதான தாக்குதல் என்பது இனப்படுகொலைதான் என்று கூறும் மாங் சார்னி தற்போது மியான்மரைவிட்டு வெளியே வசிக்கிறார்.

ஈழ இனப்படுகொலைக்கும் இதற்கும் உள்ள ஒப்புமை, பர்மாவில் ஒரு காலத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டது. இந்தியாவின் பங்கு, சீனாவின் எண்ணம், அமைதிப்புறா என்று நாம் கருதும் ஆங் சான் ச்சுகியின் உண்மை முகம், இனவாத பெளத்தம் என பலவற்றைப் பற்றியும் பேசினார் மாங் சார்னி.

ஈழத்தமிழர்களுக்கு சர்வதேச அளவில் பேசிவருபவர்களில் ஒருவரான மாங் சார்னியின் முன்னோர்களில்
(ரோஹிங்கியா முஸ்லீம்களின் மீதான மியான்மர் அரசின் இனவழிப்பு நடவடிக்கைகள் குறித்து மனித உரிமை செயல்பாட்டாளர் மாங் சார்னியுடனான ஆழி செந்தில் நாதனின் விரிவான நேர்காணல் - (indosri)