வெள்ளி, 8 செப்டம்பர், 2017

கௌரி லங்கேஷ் - உடைந்த 'பேனா முனை'

வாள்முனையைவிட பேனாமுனை வலிமை கொண்டது என்னும் வரி பலசந்தர்ப்பங்களில் சொல்லப்படுகிறது. உண்மை, ஆனால் அது கல்வியறிவும் அரசியல்பிரக்ஞையும் கொண்ட சமூகங்களில். உலகமெங்கும் நிகழ்வதென்னவென்றால் ஒருங்கிணைந்த மதப்பழைமைவாத அமைப்புக்களால் மிக எளிதாக ஓரிரு கொலைகள், வன்முறைகள் வழியாக மாற்றுத்தரப்புகளை மையத்திலிருந்து விலக்கி அமைதியாக்கிவிடமுடியும் என்பதே.

அதிதீவிர ஒற்றைநிலைபாடு. அதற்கு தர்க்கஒருமையும் வரலாற்றுணர்வும் கொண்ட பார்வை ஏதுமில்லை. உணர்ச்சிகரமான பற்று மட்டுமே இருக்கும். அத்தகைய இதழாளர்கள் பலர் இன்றுள்ளனர். அவர்களின் நிலைபாடுகள் மிகமிக எளிமைப்படுத்தப்பட்டவை, ஆகவே தெருச்சண்டை அரசியல்கொண்டவை. அதேசமயம் அவர்கள் இன்றைய இந்தியாவின் மனசாட்சியின் குரல்களாக, பன்மைத்துவத்தின் சமரசமற்ற போராளிகளாக, நவீன உலகு தேங்கியழுகிய பழைமைவாதத்திற்கு அளிக்கும் எதிர்வினைகளாக இருக்கிறார்கள். கௌரி லங்கேஷ் அத்தகையவர்

மாற்றுக்கருத்துக்கள் என்றுமிருக்கும் என்பது உண்மை, ஆனால் அது வலுவான தரப்பாக ஒலிக்காது. அந்தச் சமநிலையின்மையே வன்முறையாளரின் குரல் ஓங்கி ஒலிக்கச்செய்துவிடும். சாமானியர் ஆற்றலை வழிபடுபவர்கள் என்பதனால் ஓங்கி ஒலிக்கும் குரலை நோக்கியே ஈர்க்கப்படுவார்கள். காலப்போக்கில் அந்த பழைமைவாதமும் அடிப்படைவாதமும்  கருத்தியல்சூழலை, அரசியலதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ளநேரும். இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் கைப்பற்றப்பட்ட நாடுகளில் நிகழ்ந்த அதே அரசியல்பரிணாமம் இங்கும் இந்து அடிப்படைவாதத்தால் தொடங்கப்பட்டுள்ளது என்பதையே இக்கொலைகள் காட்டுகின்றன.

கௌரி லங்கேஷின் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படவேண்டும், முன்னுதாரணமாகத் தண்டிக்கப்படவேண்டும். அதையொட்டி மக்களின் எதிர்ப்பு திரளவும் அடிப்படைவாதிகள் அதன்பொருட்டு மன்னிப்புகோரும்ம்கட்டாயம் உருவாகவும் வேண்டும். அதுவே இன்று தேவையானது, எதிர்காலத்திற்காக...!