ஞாயிறு, 26 டிசம்பர், 2010

இனிய நத்தார் வாழ்த்துக்கள்



ஆதரவு அற்றோருக்கு அடைக்கலமாய் அகிலம் முழுவதுக்கும் அன்புத் தெய்வமாய் பாரம் சுமப்போருக்கு சுமைதாங்கியாய் வந்துதித்த பாலன் யேசு பிறந்த இனிய நத்தார் வாழ்த்துக்களை எமது உறவுகள் அனைவருக்கும் தெரியப்படுத்தி சாந்தியும் சமாதானமும் மிக்க தேசமொன்றில் வளமும் நிறைவும் கொண்ட நல்வாழ்விற்காய் இறையாசி வேண்டி பிரார்த்திக்கும் நண்பன்

அமைதியின் இரவில்
அமலன் பிறந்தார்
அன்னை மரியின்
மடியினில் தவழ்ந்தார்

வாருங்கள் அனைவரும்
வணங்கிடுவோமே
வள்ளல் யேசுவை
தொழுதிடுவோமே

உலகுக்கு ஒளியானவர்
உயிருக்கு வழியானவர்
உனக்கும் எனக்கும் பலியானவர்
உண்மை வடிவானவர்

வாழ்வில் ஜீவன் ஆனவர்
வள்ளல் யேசு வடிவானவர்
வழியாய் என்றும் இருப்பவர்
வருத்தம் நீக்கி காப்பவர்

ஏழை எழிய மக்களையே
என்றும் அவரே அழைக்கிறார்
எங்கே நீயும் என்று தான்
ஏங்கி கொண்டே இருக்கிறார்

திங்கள், 22 நவம்பர், 2010

செயற்கை பூகம்பம் - வல்லரசுகளின் விபரீத விளையாட்டு

செயற்கை பூகம்பம் - வல்லரசுகளின் விபரீத விளையாட்டு

லட்சக்கணக்கான உயிர்கள் பலியான ஹெய்ட்டி பூகம்பம், அமெரிக்க கடற்படையின் நவீன ஆயுதம் ஒன்றை பரீட்சித்ததால் விளைந்த பேரழிவு!" ரஷ்யாவின் வட-துருவ கடற்படையின் உறுதிப்படுத்தாத அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ரஷ்ய அரசு உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளாத அறிக்கையை மேற்கோள் காட்டி, வெனிசுவேலா தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

மார்ச், 2002 ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் பதிவான 7.2 magnitude நிலநடுக்கத்திற்கு அமெரிக்க ஆயுதமே காரணம் என ரஷ்யா குற்றம் சுமத்தியிருந்தது. செயற்கையாக பூகம்பத்தை தோற்றுவிக்கும் ஆயுதம் அமெரிக்காவிடம் மட்டுமல்லாது, ரஷ்யாவிடமும் இருக்கின்றது. 2002 ம் ஆண்டு, ஜோர்ஜியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு ரஷ்ய நாசகார ஆயுதமே காரணம் என, ஜோர்ஜிய பசுமைக் கட்சி குற்றஞ்சாட்டி இருந்தது.

வெனிசுவேலா ViVe தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் சாவேஸ், "அமெரிக்கா பரிசோதனை செய்த நவீன நிலநடுக்க ஆயுதம் ஹெய்ட்டியில் பயங்கரமான விளைவை ஏற்படுத்தியது. இந்த ஆயுதத்தை ஈரானில் பிரயோகித்து செயற்கையாக நிலநடுக்கம் ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான ஒத்திகையாகவே பரிசோதனை அமைந்திருந்ததாக" குற்றஞ்சாட்டினார். (இது குறித்து ரஷ்ய டுடே ஒளிபரப்பிய செய்தியறிக்கை.)

ரஷ்ய அறிக்கையை மேற்கோள் காட்டிய ViVe தொலைக்காட்சி: "அமெரிக்கா இதற்கு முன்னரும் கலிபோர்னியா அருகில் பசுபிக் சமுத்திரத்தில் ஆயுதப் பரிசோதனை நடத்தியதாகவும்,6.5 magnitude நிலநடுக்கம் பதிவாகியதாகவும்..." தெரிவித்தது. கலிபோர்னிய நிலா நடுக்கத்தில் உயிரிழப்புகள் ஏற்படா விட்டாலும், சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. வெனிசுவேலா செய்தியறிக்கையின் பிரகாரம் "ஹெய்ட்டி நிலநடுக்கத்தால் வரப்போகும் விளைவுகளை அமெரிக்க அரசு முன்கூட்டியே எதிர்பார்த்திருக்கும். அமெரிக்க தென் பகுதி கட்டளைத் தளபதி ஜெனரல் கீன் ஏற்கனவே (நிவாரண வேலைகளை பொறுப்பேற்க) ஹெய்ட்டி அனுப்பபட்டிருந்தார்."



இயற்கை அனர்த்தங்களான நிலநடுக்கம், வெள்ளம், போன்றவற்றை செயற்கையாக உருவாக்க கூடிய ஆராய்ச்சி மையம், High Frequency Active Auroral Research Program (HAARP) ஏற்கனவே அமெரிக்காவில் இயங்கி வருகின்றது. இந்த ஆராய்ச்சி மையம் செயற்கையாக காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதாக ஊர்ஜிதப்படுத்தப் படாத குற்றச்சாட்டு உள்ளது. 1997 ம் ஆண்டு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் வில்லியம் கோகன் தெரிவித்த கூற்று ஒன்றும் இங்கே நினைவு கூறத் தக்கது. "தொலைதூர மின்காந்த அலைகளை ஏவி செயற்கையாக பருவநிலை மாற்றம், நிலநடுக்கம் போன்றவற்றை தோற்றுவிக்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள்" குறித்து கவலை அடைவதாக தெரிவித்திருந்தார்.

திங்கள், 1 நவம்பர், 2010

தீபாவளி வாழ்த்துக்கள்.


தீபங்களின் ஒளியில்
இருள் ஒழியும்;
தீபாவளித் திருநாள்
தீமை வெல்லப்பட்டதின்
ஒரு அடையாளம்;
ஒருவருக்கு ஒருவர்
வாழ்த்துக்கள் சொல்லி,
இன்பங்களை பகிர்ந்து,
நன்மையின் வெற்றியை
கொண்டாடி மகிழ்வோம்;
பட்டாடை உடுத்தி,
பட்டாசுகள் கொளுத்தாமல்
அப்பணத்தை துன்புற்றவர்களுக்கு
கொடுத்து பலகாரங்கள் உண்டு,
எங்கும் மகிழ்ச்சியாய்
நன்மையை வரவேற்போம்.
எல்லோரும் எல்லா
வளமும் பெற்று
ஏழைகளின் இல்லங்களில்
ஏற்றம் மிகுந்து,
என்றும் இனிமை மிகுந்து
எங்கும் ஒளிமயமாய் வாழ,
தீபாவளி நன்னாள்
வழி காணட்டும்;
கதிரவன் உதயத்தில்
வெளிச்சம் பெருகுவது போல்
தீபாவளித் திருநாளில்
நன்மைகளும் சந்தோசங்களும்
வெள்ளமென பெருகி
எங்கும் பரவட்டும்.

திங்கள், 25 அக்டோபர், 2010

ஒரு வல்லரசின் பழிவாங்கல்

மேலைத்தேய நாசகார நாகரீகம்
"அவர்கள் எம்மை எதற்காக வெறுக்கிறார்கள்? நாம் உலகிலேயே மிகச் சிறந்த நாகரீகத்தை கொண்டிருக்கிறோம். எமது ஜனநாயக பாரம்பரியம், தனி மனித சுதந்திரம் இவற்றை அவர்கள் வெறுக்கிறார்கள்." -"நாகரிக மேற்குலகின் மீது பயங்கரவாத காட்டுமிராண்டிகளின் தாக்குதல்." -"தீமைக்கெதிரான நன்மையின் போராட்டம்."

மேற்குறிப்பிட்ட கூற்றுகள் யாவும், கடந்த எட்டு வருடங்களாக பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டிருக்கும், அமெரிக்காவும், அதன் மேற்குலக கூட்டாளிகளும், கூறிவரும் நியாயங்கள். "நாகரீக உலகம்", "காட்டுமிராண்டிகளின் உலகம்" இந்த சொற்பதங்களுக்குப் பின்னால் பொதிந்திருக்கும் அர்த்தங்கள் ஆயிரம். அமெரிக்காவின் தீமைக்கெதிரான, அல்லது பயங்கரவாதத்திற்கெதிரான போர் ஆப்கானிஸ்தான் படையெடுப்போடு மட்டும் நின்றிருந்தால், "ஒரு வல்லரசின் பழிவாங்கல்" என்பதோடு பிரச்சினை முடிந்திருக்கும். ஈராக், வட-கொரியா என்று ஒன்றோடொன்று சம்பந்தப்படாத நாடுகள் மீதும் "நாகரிக உலகம்" போர் தொடுத்தது, அல்லது திட்டமிடுகிறது. மேற்குலக மக்கள் ஆதரவு "நாலாயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த கொள்கை" அடிப்படையில் ஒன்று திரட்டப்படுகிறது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக புஷ் பதவி வகித்த எட்டு வருடங்களில் உலகம் அடியோடு மாறி விட்டது. "புஷ் ஆட்சிகாலம் மறைந்தாலும், அதன் தாக்கம் இன்னும் பத்தாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும்." என்று புஷ்சின் சுயசரிதையை திரைப்படமாக்கிய ஒலிவர் ஸ்டோன். அமெரிக்கா மட்டும் தனது சிறந்த கலாச்சாரப் பாரம்பரியத்தை மீளக் கண்டுபிடிக்கவில்லை. ஐரோப்பாவிலும் "கிறிஸ்தவ கலாச்சாரப் பெருமை" பேசும் வலதுசாரி சக்திகள் தலையெடுத்தன. சில நேரம் ஆட்சியில் இருப்பவர்களே, "பண்பாடு" "வாழும் நெறி" பற்றி தமது பிரசைகளுக்கும், குடியேறிய வெளிநாட்டவர்களுக்கும் வகுப்பெடுத்தனர். வந்தேறுகுடிகள் ஐரோப்பிய கலாச்சாரத்தை மதித்து நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். நம் நாட்டு மக்களில் பலர் தமது (இந்தியக்) கலாச்சாரமே உயர்ந்தது என்றும், ஐரோப்பியர்கள் தம்மை விடக் கீழான சீரழிவுக் கலாச்சாரம் கொண்டவர்கள் என்றும் ஒரு தலைப்பட்சமாக கருதுகின்றனர். மறு பக்கத்தில் ஐரோப்பியர்கள் தமது கலாச்சாரமே உலகில் சிறந்தது, மற்றவை எல்லாம் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் என்று கருதுகின்றனர்.

மேற்கத்திய பல்கலைக் கழகங்களில் இப்போதும் "கலாச்சார மோதல்" பற்றி கற்பிக்கப்படுகின்றது. அதாவது நாகரீகமடைந்த மேற்கத்திய கலாச்சாரம், உலகின் பிற காட்டுமிராண்டிக் கலாச்சாரங்களுடன் மோதிக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தில் இறுதியில் மேற்கத்திய கலாச்சாரம் வெற்றி பெறும். ஏனெனில் இது தீமைக்கெதிரான நன்மையின் போராட்டம். கறுப்பர்கள், அரேபியர்கள், இந்தியர்கள், சீனர்கள், இவர்களுடன் ரஷ்யர்கள் கூட "பல குறைபாடுகளைக் கொண்ட சமூகங்களாக" சித்தரிக்கப்படுகின்றனர். அரசுகள், பல்கலைக் கழகங்கள், ஊடகங்கள், இப்படி மக்களை வழிநடத்தும் கருவிகள் யாவும் "காட்டுமிராண்டிகளை நாகரீகப்படுத்தும் தேவையை" சொல்லிக் கொண்டிருக்கின்றன. இவை பல்வேறு வடிவங்களில் வெளிப்படும். மனித உரிமை மீறல்கள், ஊடக சுதந்திரமின்மை, ஊழல், போர்க் காலக் குற்றங்கள், சித்திரவதை, சர்வாதிகாரம், பயங்கரவாதம்.... இப்படி நீண்டு செல்லும் பட்டியலில் குறிப்பிடப்படும் எதிர்மறையான விடயங்கள் யாவும், காட்டுமிராண்டி நாடுகளின் விசேட குணங்கள். இந்த நாடுகளைச் சேர்ந்த நாம் அப்படி நினைக்காமல் விடலாம். ஆனால் மேற்கத்திய நாடுகளில் ஊடகங்களால் மூளைச்சலவை செய்யப்படும் அப்பாவி மக்கள், அப்படித்தான் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

மேற்கு ஐரோப்பிய நாட்டு மாணவர்களுக்கு வரலாறு ஒரு கட்டாய பாடம். அந்தப் பாடத்தில் சித்தி அடையாமல், பல்கலைக்கழகம் செல்ல முடியாது. வரலாற்றுப் பாடத்தில், ஐரோப்பிய சரித்திரம் முக்கிய இடம் பிடிக்கிறது. ஐரோப்பாவின் சரித்திரம் கிரேக்கத்தில் இருந்து தொடங்குவதாக அனைத்து நூல்களும் போதிக்கின்றன. நோர்வே முதல் இத்தாலி வரை பல்வேறு மொழிகளில் கற்பிக்கப்பட்டாலும், ஐரோப்பிய சரித்திரம் ஒரே மாதிரித் தான் எழுதப்பட்டுள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிசம் மறைந்த பிறகு, அங்கே எப்படி "நடுநிலை வரலாற்றுப் பாடம்" எழுத வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தனர். சந்தேகத்திற்கிடமின்றி மேற்குலக கண்ணோட்டத்தில் சரித்திரம் திருத்தி எழுதப்பட்டிருக்கும். ஐரோப்பிய நாடுகள், அறுபது வருடங்களுக்கு முன்னர் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தன. தற்போது தாம் முன்பு ஒரே வரலாற்றைக் கொண்டிருந்ததாக சொல்வதை நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாக உள்ளது. அமெரிக்காவில் சென்று குடியேறிய ஐரோப்பிய வம்சாவழியினரே, அங்கே அரசியல் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனால் அமெரிக்க நாகரீகமும் கிரேக்கத்தில் இருந்தே ஆரம்பமாவது தவிர்க்க முடியாதது.

அடிக்கடி "கிரேக்கதைப் பாருங்கள்" என்று சுட்டிக் காட்டுகிறார்களே, அங்கே அப்படி என்ன இருந்தது? "ஜனநாயகம்", "தனி மனித சுதந்திரம்" இந்த வார்த்தைகள் இற்றைக்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் பயன்படுத்தினர். கிரேக்க மொழியில் னுநஅழள என்றால் மக்கள் என்று அர்த்தம். ஆகவே "Democracy" என்ற மக்கள் ஆட்சி அங்கே நிலவியது. குறிப்பாக ஏதென்ஸ் என்ற நகர-தேசம் மன்னர் ஆட்சியற்ற குடியரசாக இருந்தது. அங்கே மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கைகளில் ஆட்சியதிகாரம் இருந்தது. தனி மனித சுதந்திரம் சட்டத்தினால் உறுதி செய்யப்பட்டது. சுருக்கமாக சொன்னால், இன்றுள்ள மேற்கத்திய நாடுகளைப் போல பண்டைய கிரேக்கம் காட்சியளித்தது. இவையெல்லாம் சரித்திர பாடப் புத்தகங்களில் எழுதப் பட்டிருப்பதின் சாராம்சம். மேல்நிலைப் பள்ளியில் போதிக்கப்படும் "ஜனநாயக சித்தாந்தம்", பெரியவர்கள் மனதிலும் ஆழப் பதிந்துள்ளது. இந்நாடுகளில் ஆசிரியர்கள் இப்படித்தான் கற்பிக்க வேண்டுமென்று, கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப் படுகின்றனர்.

2001 ம் ஆண்டு, நியூ யார்க் தாக்குதலின் பின்னர், அன்றைய ஜனாதிபதி புஷ் ஆற்றிய உரை, பல உலக நாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் அமெரிக்க-ஐரோப்பிய மக்கள் மட்டும் தமது "ஜனநாயகப் பாரம்பரியம்" தாக்கப் பட்டதாகவும், தமது பழம் பெருமையை மீட்க வேண்டும் என்றும் சபதமெடுத்தனர். புஷ்ஷின் உரை, பண்டைய கிரேக்கத்தின் அறைகூவலை மீண்டுமொரு முறை எதிரொலித்தது. 2500 வருடங்களுக்கு முன்னர், கிரேக்கம் மீது ஈரானில் இருந்த பாரசீகப் பேரரசு படையெடுக்க எத்தனித்தது. கிழக்கே இருந்த பாரசீக நாட்டை சேர்ந்தவர்களை காட்டுமிராண்டிகளாக சித்தரித்து தான், கிரேக்கம் தனது மக்களை அணி திரட்டியது. "அவர்கள் ஏன் எம்மை தாக்குகிறார்கள்? எமது சிறந்த நாகரீகமான ஜனநாயகம், தனி மனித சுதந்திரம் ஆகியவற்றைக் கண்டு பொறாமை கொண்டுள்ளனர்." போருக்காக ஏதென்ஸ் அரசு கூறிய காரணங்கள் அவை. ஆமாம், பண்டைய கிரேக்கர்களும், நம் காலத்து அமெரிக்கர்களைப் போல, தமது ஜனநாயகம், சுதந்திரம் குறித்து பெருமை கொண்டிருந்தனர்.

பண்டைய கிரேக்கத்தில் ஜனநாயகம் நிலவியது உண்மை தான். ஆனால் அந்த ஜனநாயகம் நமக்கெல்லாம் தெரிந்த "பல கட்சி அரசியல் முறை" அல்ல. கட்சி என்றால் என்னவென்று அறிந்திராத காலம் அது. ஏதென்ஸ் பிரசைகளுக்கு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து வாக்களிக்கும் உரிமை இருந்தது. ஆனால் அந்த "சர்வசன வாக்குரிமை" ஆண்களுக்கு மட்டுமே இருந்த சுதந்திரம். பெண்களுக்கும், அடிமைகளுக்கும் வாக்குரிமை இருக்கவில்லை. தனி மனித சுதந்திரம் பெண்களுக்கு மட்டுப்படுத்தப் பட்டே இருந்தது. பண்டைய கிரேக்க சரித்திர ஆசிரியர் ஹெரோடுதுஸ் (கி.மு. 484-420) எகிப்தில் தான் கண்டவற்றை பற்றி எழுதிய குறிப்புகளில் இருந்து: "எகிப்தியப் பெண்களுக்கு சந்தைக்கு சென்று வரவும், கடைகளை நடத்தவும் சுதந்திரம் இருந்தது. அதற்கு மாறாக கிரேக்கப் பெண்கள், கணவனில் தங்கியிருந்து வீட்டு வேலைகளை மட்டுமே செய்து வந்தனர்." பண்டைய கிரேக்கத்தில் அடிமைகள், எஜமானின் சொத்தாக பார்க்கப்பட்டனர். ஒரு சில இடங்களில், பணம் சேர்க்க முடிந்த அடிமைகள் சுதந்திரம் வாங்கிக் கொண்டனர். அப்போது கூட உள்ளூர் பிரசைகள் செய்ய விரும்பாத (உதாரணம்: துறைமுகத்தில் மூட்டை சுமத்தல்) வேலைகளை மட்டுமே செய்தனர். இவர்களுக்கும், வேலைக்காக புலம்பெயர்ந்து வந்து குடியேறிய மக்களுக்கும், ஏதென்ஸ் நாட்டு பிரசாவுரிமை கொடுக்கப்படவில்லை. அந்த மக்களைப் பொறுத்தவரை, ஜனநாயகம், தனி மனித சுதந்திரம் என்பன அர்த்தமற்ற வார்த்தைகள்.

சில வருடங்களுக்கு முன்னர் ஹாலிவுட் எடுத்த "300" என்ற தலைப்பிலான படம் வசூலை அள்ளிக் குவித்தது. ஒரு சரித்திரக் கதையை மையமாக வைத்து வரையப்பட்ட சித்திரக்கதையை தழுவி அந்தப் படம் எடுக்கப் பட்டிருந்தது. "300" திரைப்படம் ஈரானியர்களை வில்லன்களாக சித்தரிப்பதாக விமர்சனங்கள் வந்தன. அது ஒரு அரசியல் பிரச்சாரப் படம் என்றது ஈரான். அப்படி என்ன அந்தப் படத்தில் இருக்கிறது? பண்டைய கிரேக்கத்தில் ஏதென்ஸ் நாட்டிற்கு தெற்கே இருந்த ஸ்பார்ட்டா என்ற தேசத்தின் வீரதீரக் கதை தான் "300". பாரசீக ஆக்கிரமிப்பாளரை எதிர்த்து, 300 ஸ்பார்ட்டா வீரர்கள் தீரத்துடன் போரிட்டு மடிவது தான் கதை. பாரசீக நாட்டு வீரர்கள், கறுப்பர்கள் போல, அல்லது அரேபியர் போல தோன்றுகின்றனர். அவர்களின் செயல்கள் காட்டுமிராண்டித் தனமானவை. சுருங்கக் கூறின், மேற்கத்திய நாகரீகத்திற்கும், கிழக்கத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கும் இடையிலான போர். இன்றைய இளம் தலைமுறைக்கு இன மேலாதிக்க அரசியல் பிரச்சாரம் செய்ய, ஹாலிவுட் கண்டு பிடித்த சரித்திரக் கதை அது.

ஸ்பார்ட்டா மக்கள் எந்த அளவு நாகரீகமடைந்திருந்தனர்? ஏதென்ஸ் இற்கும், ஸ்பார்ட்டாவிற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருந்தன. முரண்பாடுகள் முற்றி இவ்விரு அரசுகளுக்கும் இடையில் சில நேரம் யுத்தம் மூண்டது. "கிரேக்கர்களின் உள்நாட்டு யுத்தம்" என்று அப்போது அது அழைக்கப்பட்டது. ஏதென்ஸ் நகரமயமாக்கப்பட்ட சமூகமாக இருந்தது. அதற்கு மாறாக ஸ்பார்ட்டா கிராமங்களின் தேசம். ஆனால் அதி தீவிர இராணுவமயப்பட்ட பாஸிச சமூகத்தைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு குடும்பமும் தமது ஆண் குழந்தைக்கு பத்து வயதானவுடன் அரசாங்கத்தின் பொறுப்பில் ஒப்படைத்து விட வேண்டும். அன்றில் இருந்து இராணுவ முகாம்களில் வாழ நிர்ப்பந்திக்கப்படும் இளைஞர்களுக்கு, கடுமையான இராணுவ பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் தமது பதின்ம வயதில் சித்தி அடையும் போது, தயக்கத்தைப் போக்குவதற்காக, கண்ணில் படும் அடிமையை கொலை செய்யுமாறு பணிக்கப்படுவர்.

ஸ்பார்ட்டாவில் அடிமைகளின் உரிமை பற்றி யாருக்கும் அக்கறை இருக்கவில்லை. இராணுவ பயிற்சிக்காக கொல்லப்பட்டும் பலியாடுகள் அவர்கள். இந்த அடிமைகள் முந்தின போர்களில் வெற்றி கொல்லப்பட்ட இடங்களில் வாழ்ந்த மக்கள். அதாவது போர்க் கைதிகள். எண்ணிக்கையில் அதிகமாக இருந்த அடிமைகள் தமக்கெதிராக கிளர்ந்தெழக் கூடாது என்பதற்காக, இராணுவ பயிற்சியின் போது வேட்டையாடப் பட்டனர். ஒரு முறை ஸ்பார்ட்டாவில் ஏற்பட்ட கடுமையான பூமி அதிர்ச்சி, அடிமைகளை விடுதலை செய்தது. அடிமைகள் ஒன்று திரண்டு, ஸ்பார்ட்டா அரசுக்கெதிராக கிளர்ச்சி செய்தனர். ஐந்து வருடங்களாக அந்தக் கிளர்ச்சியை அடக்க முடியவில்லை. இறுதியில் ஏதென்ஸின் மத்தியஸ்தத்தின் பின்னர், கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்பாக வெளியேறிய பின்பே, அமைதி திரும்பியது. அந்த கிளர்ச்சிக்குப் பின்னர், ஸ்பார்ட்டா அதிகாரிகள், அடிமைகளை ஓரளவு மனிதத்தன்மையுடன் நடத்தலாயினர்.
இன்றைய மேற்குலக அரசுகளும், அன்றைய கிரேக்க அரசுகளும் பிரச்சாரம் செய்தது போல, கிழக்கில் இருந்த பாரசீக நாட்டில், காட்டுமிராண்டிக் கலாச்சாரம் நிலவவில்லை. பாரசீகப் பொருளாதாரம் அடிமைகளை நம்பி இருக்கவில்லை. சமுதாயத்தில் மிக மிகக் குறைவான அடிமைகளே இருந்தனர். மேலும் சீருஸ் சக்கரவர்த்தி போட்ட சட்டம், அடிமை முறையை தடை செய்திருந்தது. கி.மு. 6 ம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட சீருஸ் சக்கரவர்த்தியின் சட்டம், "உலகின் முதலாவது மனித உரிமைகள் சாசனம்" என்று புகழப் படுகின்றது. ஐ.நா.மன்றம் அதனை பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. "பிற மதங்கள் மீதான சகிப்புத் தன்மை, அடிமை முறை ஒழிப்பு, விரும்பிய தொழிலை செய்யும் உரிமை...." போன்ற தனி மனித சுதந்திரங்கள் அந்த சாசனத்தில் உறுதிப்படுத்தப் பட்டிருந்தன. ஒரு காலத்தில் மத்திய கிழக்கின் இன்னொரு பேரரசின் தலைநகராக இருந்த பாபிலோன் சீருஸ் சக்கரவர்த்தியின் படைகளால் கைப்பற்றப்பட்டது. அப்போது கூட, பாபிலோன் மக்களுக்கு தாம் ஆக்கிரகிக்கப் பட்டிருக்கிறோம் என்ற எண்ணம் எழாதபடி ஆளப்பட்டனர். சக்கரவர்த்தியின் உத்தரவின் பிரகாரம், பாபிலோனியர்கள் தமது சொந்த மதத்தை வழிபட சுதந்திரம் வழங்கப்பட்டது. அத்தோடு எந்தவொரு பாபிலோனியனும் அடிமையாக்கப் படவில்லை.

மேற்குலகம் போதனை செய்வதைப் போல, அவர்கள் ஜனநாயகப் பாரம்பரியத்தில் வந்தவர்களுமல்ல, மத்திய ஆசியாவை சேர்ந்தவர்கள் காட்டுமிராண்டிகளும் அல்ல. வரலாற்றில் தமக்குப் பிடித்த பகுதிகளை மட்டும் தெரிவு செய்து கற்பதால் தான் இந்த குளறுபடி ஏற்படுகிறது. இன்று ஊடகங்களில் சித்தரிக்கப்படும் "காட்டுமிராண்டிக் குணாம்சங்கள்" எல்லாம் ஐரோப்பிய வரலாறு கண்டு வந்தவை தான். உதாரணத்திற்கு, தற்கொலைத் தாக்குதல்கள். இன்று நீங்கள் சாதாரண ஐரோப்பியனை (அல்லது அமெரிக்கனை) கேட்டால், "பைத்திக்காரத் தனம்" என்று ஒரு வார்த்தையில் பதிலளிப்பார்கள். 1831 ம் ஆண்டு, நெதர்லாந்தில் இருந்து பெல்ஜியம் பிரிவினைக்காக யுத்தம் செய்த காலத்தில், நடந்த சம்பவமொன்று தற்கொலைப் பயங்கரவாதத்தை நினைவுபடுத்தும். யன் வான் ஸ்பைக் என்ற ஒல்லாந்து வணிகன், எதிரிப்படைகளிடம் தனது கப்பல் அகப்படும் தருணத்தில், தனது கப்பலை வெடிக்க வைத்து தானும் மாண்டான். அதிகம் பேசுவானேன், முன்னர் குறிப்பிட்ட 300 ஸ்பார்ட்டா வீரர்கள் மரணத்தை எதிர்நோக்கிச் சென்ற தற்கொலைக் கொலையாளிகள் தான்.
இன்றைய அமெரிக்கா தன்னை பண்டைய கிரேக்கத்துடன் ஒப்பிடும் ஒவ்வொரு தடவையும், யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காத, தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்து வருவதாக அப்பாவி வேஷம் போடுகின்றது. அதாவது தனக்கு ஏகாதிபத்திய ஆதிக்க வெறி ஒரு போதும் இருக்கவில்லை என்பது போல. இந்த விடயத்தில் கூட நம் காலத்து ஏகாதிபத்தியம், பண்டைய கிரேக்க ஏகாதிபத்தியத்துடன் ஒத்த தன்மைகளைக் கொண்டுள்ளது. அனேகமாக "கிரேக்க ஏகாதிபத்தியம்" குறித்து சரித்திர நூல்கள் குறிப்பிடுவதில்லை. "அலெக்சாண்டர் என்ற தனி மனிதனின் உலகை ஆளும் ஆசை" பற்றி மட்டும் எடுத்துக் கூறுகின்றன. வட கிரேக்க, மசிடோனியா நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர், பாரசீக நாட்டை அடக்குவதாக கூறித் தான் அனைத்து கிரேக்கர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டான். போரில் பாரசீக பேரரசை தோற்கடித்த பின்னர், இளம் வயதில் அலெக்சாண்டர் மாண்டது உண்மை தான். ஆனால் அத்துடன் சரித்திரம் முற்றுப் பெறவில்லை. அலெக்சாண்டரின் பின்னர் அந்தப் பேரரசை நிர்வகித்தவர்கள் அனைவரும் கிரேக்கர்கள். இன்றைய ஈரான் முதல் எகிப்து வரை கிரேக்க நகரங்கள் தோன்றியிருந்தன. அங்கெல்லாம் கிரேக்கர்கள் சென்று குடியேறினர். உள்ளூர் மக்கள் தொழிலுக்காக கிரேக்க மொழி கற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. கிரேக்க காலனிகளின் மக்கள், உள்ளூர் மக்களுடன் ஒன்று கலக்காது, உயர்ந்த அந்தஸ்தைப் பேணி வந்தனர்.

கிரேக்க காலனிய காலகட்டத்தில் இருந்து, அதாவது 2500 வருடங்களாக, ஆசிய நாடுகளை சேர்ந்த மக்கள், மேலைத்தேய நாகரீகத்தை வியப்புடன் நோக்கினர். வேறுவிதமாக கூறினால், மேற்கத்திய மேலாண்மைக்கு அடிபணிந்தனர். தமது சொந்த கலாச்சாரம் பிற்போக்கானது என்றும், மேலைத்தேய கலாச்சாரம் முற்போக்கானது என்று நம்பினார். நமது நாட்டில், தமக்குள் ஆங்கிலத்தில் உரையாடும், ஆங்கிலப் பெயர் சூட்டிக் கொள்வதை பெருமையாகக் கருதும், நடுத்தர வர்க்கத்தை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். அப்படியானவர்கள் எல்லா ஆசிய நாடுகளிலும், எல்லாக் காலத்திலும் இருந்து வந்துள்ளனர். அதாவது மேலைத்தேய நாகரீகம், தானே உலகில் உயர்ந்தது, மற்றதெல்லாம் காட்டுமிராண்டிகளின் நாகரீகம், என்பதை நிலை நாட்ட பாடுபடுகின்றது. அந்தக் கருத்துக்கு ஆதரவளிக்கும் உள்ளூர் மக்களும் இருந்தனர்ஃஇருக்கின்றனர். ஆனால் தற்போது இந்த சிந்தனை மாறி வருகின்றது.


குறிப்பாக சீனா, ரஷ்யா போன்ற நாடுகள், மேற்குலகிடம் இருந்து தமக்கு கற்றுக் கொள்ள எதுவும் இல்லை என்று கூறி விட்டன. அவர்கள் மேற்குலக நாகரீகத்தை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற மறுக்கிறார்கள். சிறந்ததை மட்டும் பின்பற்றுவோம், மற்றவற்றை விட்டு விடுவோம் என்று நடந்து கொள்கின்றனர். (அதற்கு மாறாக, மேற்குலக குப்பைகளை எல்லாம் அள்ளிக் கொண்டு வரும் நாடுகளும் இருக்கின்றன.) ரஷ்யாவிலும், சீனாவிலும், ஒரு காலத்தில் தமது பிரசைகள், மேற்குலக செல்வாக்கிற்கு உட்பட்டு விடுவார்களோ என்ற அச்சம் நிலவியது. அதற்காக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது அந்த அச்சம் மறைந்து வருகின்றது. ரஷ்ய, சீன அரசுகள் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளன. ரஷ்யா ஜோர்ஜியா மீது போர் தொடுத்த காலத்தில், சீனா திபெத் கிளர்ச்சியை அடக்கிய நேரமும், மேற்குலக கண்டனங்களுக்கு உள்ளாகின. ஆனால் அப்போதெல்லாம் பெரும்பான்மை மக்கள் தமது அரசின் பக்கமே நின்றனர். அந்த நேரம் மேற்குலக கண்டனங்கள் அவர்களுக்கு எரிச்சலையே ஊட்டின. அதற்குக் காரணம், மேற்குலகின் "இரட்டை அளவுகோல் கொள்கை." "மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்," என்ற பழமொழிக்கேற்ப மேற்குலக நாடுகளின் நடத்தைகள் அமைந்துள்ளன. உலக மக்கள் அனைவரும் இந்த இரட்டை வேஷம் குறித்து நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றனர். அதனால் "மேற்குலகின் உயர்ந்த நாகரீகம்" தற்போது, சந்தையில் விலைப்படாமல் தேங்கிக் கிடக்கின்றது.

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

நவராத்திரி மகிமை


நவராத்திரி மகிமை
நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம். உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம். தேவியானவள் அனைத்து உருவத்திலும் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறாள் என்பதைக் குறிக்கும் விதமாகவே அனைத்து உருவ பொம்மைகளையும் கொலுவாக வைத்து வணங்கும் கலாச்சாரம் காணப்படுகிறது.

நவராத்திரி நாளான ஒன்பது இரவுகள் தனி சக்தியாக விளங்கும் ஜகன்மாதா, பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி `சிவசக்தியாக' ஐக்கிய ரூபிணியாக - அர்த்தநாரீசுவரராக மாறுகிறாள் என்பதே இந்த பண்டிகையின் புராண வரலாறு.

இந்த 9 நாட்களிலும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவியரை ஒன்பது அவதாரங்களாக அலங்கரித்து, போற்றி பூஜித்து வழிபடுதல் வேண்டும்.

மகேஸ்வரி, கௌமாரீ, வராஹி என துர்கா தேவியாகவும், அடுத்த மூன்று நாட்களில் மஹாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி என லட்சுமி தேவியாகவும், நிறைவுறும் மூன்று தினங்களில் சரஸ்வதி, நரசிம்மீ, சாமுண்டி என சரஸ்வதி தேவியாகவும் சித்தரித்து வணங்குகிறோம்.

இந்த நாட்களில் நைவேத்யங்களைப் படைத்து கலைக்கு ஆதாரமாகத் திகழும் கலைமகளை பாடி, ஆடி பரவசமுடன் வணங்குவோருக்கு கேட்டவரத்தை சக்தியானவள் கைமேல் நல்குவாள் என்பது ஐதீகம்.

சக்தி டீவியின் 12ஆவது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம்...

சக்தி டீவியின் 12ஆவது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம்.


இலங்கையில் தமிழ்த்தொலைக்காட்சியில் முதல்தர ஊடகமான சக்தி டீவீ தனது 12வது பிறந்த தினத்தை வரும் 20ம் திகதி தனது மக்களுடன் கொண்டாடுகிறது.உள்நாட்டில் பல நிகழ்ச்சிகளை படைத்ததும் மட்டுமல்லாமல் பல கலைஞர்களையும் சக்தி டீவி உருவாக்கியது. எதிர்காலத்தில் இலங்கை மட்டுமல்லாமல் நவீன தொடர்பாடல் பரிணாமத்தின் மூலம் முழு உலகிலும் தன் சக்தியை வியாபிக்க இருக்கின்றது. இந்நாளில் என் சக நிர்வாகஊழியர்களுக்கும் சக்தியின் சக்தியான ரசிகர்களுக்கும் இணைய ரசிகர்கள் உங்களுக்கும் என் சார்பான 12வது பிறந்ததின வாழ்த்துக்கள்...

வியாழன், 30 செப்டம்பர், 2010

ஸ்ராலின் கிராட் யுத்தம்

ஸ்ராலின் கிராட் யுத்தம்

இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜேர்மனிய படைகளுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் இன்று வோல்கோ கிராட் என்று அழைக்கப்படும் ஸ்ராலின் கிராட்டில் நடைபெற்ற யுத்தம்.உலக வரலாற்றில் பல யுத்தங்கள் நடைபெற்ற போதிலும் இன்றுவரை பேசப்படுகிற அல்லது விமர்சிக்கப்படுகிற யுத்தங்கள் மிக குறைவானவை ஆனால் இன்று வரை ஸ்ராலின் கிராட் யுத்தம் பற்றி பேசப்படுகிறது அல்லது எழுதப்படுகிறது,தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படுகிறது,அதனால் விம்பமும் ஸ்ராலின் கிராட் யுத்தத்தினை நினைவு கொள்கிறது.



இரண்டாம் உலக யுத்தத்தின் ஐரோப்பிய அரங்கின் திருப்பு முனையாக கருதப்படும் இந்த சமர் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் நீடித்தது,நீண்ட காலம் நடைபெற்ற ஒரு மரபு வழி சமராக இராணுவ ஆய்வாவாளர்களால் வர்ணிக்கப்படுகிறது.17 ஜூலை 1942 இற்கும் பெப்ரவரி2 1943 இற்கும் இடையில் நடைபெற்ற இந்த சமரில் மொத்தமாக 1.5 மில்லியன் பேர் பலியானார்கள்.இரண்டு நாள் இரண்டு வாரம்,இரண்டு மாதம் என ஹிட்லரால் எண்ணப்பட்ட நாட்களின் கனவு தவிடுபொடியானது.22 ஆம் திகதி ஜூன் மாதம் 1941 ஆம் ஆண்டி ஹிட்லரின் நாசி படை சோவியத் மீது பார்பரோசா என்ற பெயரில் படை நடவடிக்கையினை ஆரம்பித்தது.ஜேர்மன் படைகளும் அதன் கூட்டுப் படைகளும் விரைவாக சோவியத் பகுதிக்குள் ஆழ கால்பதித்தார்கள்.ஸ்ராலின் கிராட் மீது ஹிட்லர் படை எடுப்பதற்கு பிரதானமான இரண்டு காரணங்கள் இருந்தன.அவற்றுள் ஒன்று வால்கா நதிக்கரையில் அமைந்திருந்த இந்த நகரம் கஸ்பியன் கடலையும் வடக்கு ரஸ்ஸியாவையும் இணைக்கும் பிரதான போக்குவரத்து பாதையாக இருந்தது.மற்றய காரணம் எண்ணை வள பகுதியான க்கஸஸ் பகுதியை நோக்கி முன்னேறிய படைகளுக்கு பாதுகப்பாக இருக்கும் என்பதும் ஆகும்.இதனை விட உளவியல் ரீதியாக ஸ்ராலின் பெயரில் நகரம் இருந்ததும் ஸ்ராலின் கிராட் நகரை கைப்பற்ற ஹிட்லறை தூண்டியது.

ஜேர்மனிய 6 வது இராணுவத்துக்கு தலைமை தாங்கிய ஜெனரல் போலசின் பணி காகஸஸ் பகுதியில் உள்ள எண்ணை வழங்களை கைப்பற்றுவதாக இருந்தபோதிலும்,அதற்காக ஸ்ராலின் கிராட்டை கைப்பற்றுமாறு ஹிட்லரால் உத்தரவிடப்பட்டது.செய் அல்லது செத்து மடி என்பது போல தாக்குதலை மேற்கொள்ளுமாறு ஸ்ராலினால் உத்தரவிடப்பட்டது,தமது தலைவனின் பெயராலான நகரை காப்பதற்குபொது மக்களும் ஆயுதம் ஏந்தினார்கள்.இருவருக்கு ஒரு துவக்கு என்ற வகையில் ஆயுதம் வழங்கப்பட்டது.ஒரு அடி கூட பின்னகர வேண்டாம் என உத்தரவு பிறந்தது.பல இடங்களை ஜேர்மனியர்கள் கைப்பற்றியபோதும் அவற்றை நிலையாக தக்க வைக்க முடியவில்லை.பகலில் ஜேர்மனியர்கள் கைப்பற்றிய பகுதிகளை இரவில் ரஸ்ஸியர்கள் மீளவும் மீட்கப்பட்டது.அகல கால் பதித்த ஜேர்மனியர்கள் மீதான முறியடிப்பு சமரினை மேற்கொள்ள நவம்பர் 19 அளவில் ரஸ்ஸியா முழுமையான தயார் நிலையினை அடைந்தது.ஒரு மில்லியன் படைபலம் கொண்ட 6 படைப்பிரிவுகள் மார்ஷல் சுகோவ் தலைமையில் நகரை சுற்றிவளைக்க தயாராகினர்.வடக்கு பகுதியில் இருந்து ரமானன்கோ தலைமையிலான 5 ஆவது தாங்கி படையணி தாக்குதலை ஆரம்பிக்க 21,65,24.64,57,52 ஆவது படையணிகள் தெற்கு பகுதியில் இருந்து தாக்குத‌லை ஆர‌ம்பித்த‌ன‌.இரு முனை தாக்குத‌ல் அணிக‌ளும் ந‌வ‌ம்ப‌ர் 23 ஆம் திக‌தி காலாச் ப‌குதியில் இனைந்து கொண்டன.250 000 முதல்300 000 வரையிலான ஜேர்மன் படையினர் சுற்றி வளைக்கப்பட்டு பொறிக்குள்அகப்பட்டு கொண்டார்கள்.எவரும் சரணடைய கூடாது என்றும் இறுதி தோட்டா உள்ளவரை யுத்தம் செய்ய வேண்டும் எனவும் கட்டளை இட்ட ஹிட்லர் போலஸை ஊக்குவிப்பதற்காக பதவி உயர்வையும் வழங்கினார்.எவையும் வேலைக்கு ஆகவில்லை,கால நிலை மோசமானது,வெப்பநிலை பூச்சியத்துக்கு கீழ் சென்றது.ஆயுதங்களுக்கும்,உணவுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது,எதுவுமே செய்ய முடியாத நிலையில் ஜனவரி1943 இல் தென் பகுதி ப‌டையின‌ர் ச‌ர‌ண‌டைய‌ வ‌ட‌ ப‌குதி ப‌டைய‌ணி 2 ஆம் திக‌தி பிப்ருவ‌ரி ச‌ர‌ண் அடைந்த‌து.பெரும்பாலான‌ ப‌டையின‌ர் இற‌க்க‌ 91000 இற்கும் அதிக‌மானோர் சிறைப்பிடிக‌ப்ப‌ட்டார்க‌ள்.ஸ்ராலின் கிராட்டின் தோல்வியும்,படையணிகளின் இழப்பும் ஜேர்மனியால் ஈடு செய்ய முடியாது போனதை ஜேர்மனி மீது ரஸ்ஸியா படை எடுத்த தருணங்கள் உணர்தி நிற்கிறது.





ஹிட்லரின் தளபதிகள் ; போலுஸ்,மன்சுடெயின்,ரிச்தோபுன்,கொசுடாவ் ,கரிபால்டி,துமிதிரிஸ்கு,கொண்ஸ்டான்டினெஸ்.

ஸ்ராலினின் தளபதிகள் ;
ஸ்யிகொவ், யெமெரென்கோ,வஸ்யேவ்சுகி,கிரகொரி ,செம்யோன்,மலினொவ்சுகி .

படை பலம்
ஜேர்மன்;ஆட்பலம் 1 011 500 ஆட்லறி10,290 தாங்கிகள் 675 விமானங்கள் ;1,216.

ரஸ்ஸியா; ஆட்பலம் 1,000,500 ஆட்லறி 13,541 தாங்கிகள் 894 விமானங்கள் 1,115.

சரித்திரப் பதிவுகள் - 5 : நார்மண்டி தாக்குதல் (D Day Landing)



நார்மண்டி தாக்குதல் (D Day Landing)
'பல மாதங்களாகக் காத்திருந்த நீங்கள் தலைசிறந்த புனிதப் போரினை மேற்கொள்ளப் போகின்றீர்கள்...உங்கள் பணி எளிதானதல்ல. எதிரிகள் தக்க பயிற்சியுடனும், தேவையான தளவாடங்களுடனும், போர்களினால் விளைந்த திண்மையுடனும் எதிர்கொள்வார்கள். மிகுந்த மூர்க்கத்தனத்துடன் போரிடுவார்கள்... '

--- ட்வைட்.டி.ஐஸ்சனோவர் (06 ஜீன் 1944, நேசப்படைகளின் தலைமைத் தளபதி)

பிரான்சை ஜெர்மனியின் நாஜிப்படை ஆக்ரமித்திருந்த காலம். உலகத்திலேயே மிகப்பெரிய ஆக்ரமிப்பு படை 'ஓவர்லார்டு நடவடிக்கை (Operation Overlord) ' மூலம் ஜெர்மனியைத் துரத்த தயாரானபோது, நேசப்படைகளின் தலைமைத் தளபதி ஐஸ்சனோவர் வீரர்களிடம், உரை நிகழ்த்தினார். மேற்கோளிடப்பட்ட அவரது பேச்சிலிருந்தே இம்முயற்சி எத்தகைய அபாயகரமானதென்று உங்களுக்கு விளங்கியிருக்கும்.

'ரேங்க் பேதமின்றி, அலையலையாக, 20 மைல்கள் பரந்து, ஐந்தாயிரம் போர்க்கப்பல்கள் புடைசூழ அவர்கள் (நேசப்படையினர்) வந்தார்கள். புதிய வேகம் பெற்ற வாகனாதிகள், துருப்பிடித்த சரக்குக் கப்பல்கள், நீராவிக் கப்பல்கள், மருத்துவக் கப்பல்கள், எரிபொருள் ஏந்திய டாங்கர்கள், கப்பலை இழுக்கும் சிறிய படகுகள் அவற்றுள் அடங்கும். 350 அடி நீளம் கொண்ட துருப்புகள்/தளவாடங்களை கரை சேர்க்கும் கலங்கள்... இவையனைதிற்கும் முன்னே கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள், கரையோரப் பாதுகாப்புக் கப்பல்கள், திசை காட்டும் கருவிகள் விதைக்கும் கலங்கள் சென்று கொண்டிருந்தன. பல்லாயிரக்கணக்கான போர்விமானங்கள் மேகத்திற்கு தாழப் பறந்தன. ' (Cornelius Ryan in his book 'The Longest Day).

மேற்கூறிய பத்தி சுருக்கமாக யுத்ததிற்கு சென்ற நேசப் படைகளின் பரிமாணத்தை விளக்கும்.

கிழக்கு மற்றும் மேற்கே நாஜிப்படைகள்

1939-41 'ல் செய்த போர்களினால் மேற்கு ஐரோப்பாவும், 1942 சண்டையில் கிடைத்த ரஷ்யாவின் பெரும்பகுதிகளும் ஹிட்லரின் பிடியிலேயே தொடர்ந்தன. நடுநிலை நாடுகளான ஸ்வீடன், போர்ச்சுகல், ஸ்விட்ஜர்லாந்து மற்றும் ஸ்பெயின் தவிர ஏனைய ஐரோப்பா முழுதையும் நாஜிப்படைகள் ஆக்ரமித்திருந்தன. வட ஆப்பிரிக்காவும் அவர்கள் பிடியிலிருந்து தப்பவில்லை. கிழக்கே ரஷ்யாவின் ஸ்டாலின்கிராடு, குர்ஸ்க் போன்ற பகுதிகளில் நடந்த எதிர்ப்பு சண்டைகளால் சிறிதே ஜெர்மனி பின்வாங்கியது. இருப்பினும் மேற்கிலிருந்து அமெரிக்காவும் இணைந்து இரண்டாவது முனைத் தாக்குதல் தொடுத்தாலொழிய ஜெர்மனியைத் தோற்கடிக்க முடியாதென்று நேச நாடுகளுக்குப் புரிய ஆரம்பித்தது.

இரண்டாவது முனை

ரஷ்யாவின் ஜோசப் ஸ்டாலின், தனது சகாக்களான வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ப்ராங்க்ளின் ரூசோவெல்ட் இருவரிடமும் மேற்கிலிருந்து இரண்டாவது முனைத் தாக்குதலை ஆரம்பிக்கச் சொல்லி வலியுறுத்த ஆரம்பித்தார். ஹிட்லரும் 11 டிசம்பர் 1941 'ல் அமெரிக்கா மீது போர் பிகடனம் செய்தார். அமெரிக்க ஜனாதிபதியான ரூசோவெல்ட் தனது நம்பகமான தளபதியான ஐஸ்சனோவரை அழைத்து, நேசப் படைகளின் வெற்றிக்கான வழிமுறையைக் காண கட்டளை பிறப்பித்தார்.

1943 'ல் ஐஸ்சனோவர் இரு நடவடிக்கைகளை பிரஸ்தாபித்தார். அவையாவன: Operation Roundup மற்றும் Operation Sledgehammer. இவற்றுள் முதல் நடவடிக்கையை இங்கிலாந்து ஆதரித்தது. இருப்பினும் Operation Torch என்று வடஆப்பிரிக்காவிலுள்ள நாஜிப்படைகளை முதலில் அழித்தொழிக்க வேண்டுமென்று புதிய யோசனையையும் முன் வைத்தது. இக்குழப்பத்திலேயே காலம் கடப்பதைக் கண்டு பதறிய ரூசோவெல்ட்டும், ஸ்டாலினும் டெஹ்ரானில் நடந்த சந்திப்பில் மே 1944 'ல் ஜெர்மனிக்கெதிரான மேற்குமுனைத் தாக்குதல் தொடங்க வேண்டுமென்று கறாராக சர்ச்சிலிடம் தெரிவித்தனர். பதிலாக ஸ்டாலின் கிழக்கு முனைப் போரை மும்முரமாக செயல்படுத்துவதாகவும், ஜெர்மனியை வென்ற பிறகு ஜப்பானுக்கெதிரான போரில் நேசப்படைகளோடு பங்கு பெறுவதாகவும் வாக்குறுதியளித்தார்.

ஓவர்லார்டு நடவடிக்கை (Operation Overlord)

முதலில் லெப்டினென்ட் ஜெனரல் பிரட்டெரிக் மோர்கன் நேசப்படைகளின் தலைமைத் தளபதியாக அறிவிக்கப்பட்டார். அவர்தான் ஓவர்லார்டு நடவடிக்கையின் சூத்திரதாரி. ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரான்ஸின் நார்மண்டி பகுதியில் தாக்குதல் தொடுக்க வேண்டுமென்று தனது கருத்திற்கு செயல் வடிவமும் கொடுத்தார். பின்னர் ஐஸ்சனோவர் ஜனவரி 1944 'ல் நேசப்படைகளின் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தன்னைத் தோற்கடிக்க நேசப்படைகள் இருமுனைத்தாக்குதல் தொடுக்கலாமென்று ஹிட்லரும் கணித்திருந்தார். அதனால் பிரான்ஸில் நாஜிப்படைகளின் தற்காப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு தனது தளபதியான எர்வின் ரொம்மலை ஏவினார். நேசப்படைகளும் ரொம்மலை எதிர்த்து ஆப்பிரிக்க பாலைவனங்களில் போரிட்ட பெர்னார்டு லா மாண்ட்கோமரியை, ஐஸ்சனோவர்க்கு உதவியாக நியமித்தது. மேலும் வால்டர் ஸ்மித் என்னும் அமெரிக்கர் பிரதானத் தளபதியாகவும், இங்கிலாந்து தரப்பில் ஏர் சீப் மார்ஷல் ஆர்தர் டெட்டர், அட்மிரல் பெர்ட்ராம் ராம்சே, ஏர் சீப் மார்ஷல் டிராப்போர்டு லே-மலோரி ஆகியோரும் ஐசனோவர்க்கு துணையாக உதவி புரிய அனுப்பப்பட்டார்கள்.

நார்மண்டி பகுதி மொத்தம் 5 கடற்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. உடா, ஓமகா, கோல்டு, ஜுனோ மற்றும் ஸ்வார்டு போன்ற கடற்கரைகளில், மொத்தம் ஐந்து தரைப்படை ஸ்குவார்டன்கள் (2 அமெரிக்கா, 2 இங்கிலாந்து மற்றும் 1 கனடா) மூலம் தாக்குதல் நடத்த தீர்மானிக்கப்பட்டது. D Day (தாக்குதலின் முதல் நாள்) நார்மண்டியின் மேற்கு முனையில் 2 அமெரிக்க விமானப்படைப் பிரிவுகளும், இங்கிலாந்தின் ஒரு விமானப்படைப் பிரிவு அதன் கிழக்கு முனையிலும் தாக்குதல் தொடுக்கமாறு முடிவாகியது. எதிரிக்கு வியப்பைத் தரும் வண்ணம் 'நீந்தும் டாங்குகள் ' பயன்படுத்தவும் முடிவானது. இந்நடவடிக்கைக்கு முதல் மூன்று வாரத் தேவையாக 2,00,000 ஊர்திகளும், 6,00,000 டன் சரக்குகளும் மொத்தம் 6,500 கப்பல்கள் மூலம் எடுத்துச் செல்ல பெரிய திட்டம் தீட்டப்பட்டது.

வான்வெளித் தாக்குதல்

தாக்குதலின் முதல் கட்டமாக 13,000 போர்விமானங்கள் ஜெர்மனிப்படை மீது குண்டு பொழியத் தயாராக இருந்தன. நாஜிப்படையோ பதில் தாக்குதலுக்கு வெறும் 400 போர்விமானங்களே தயாரான நிலையில் கொண்டிருந்தது. நேசப் படை விமானங்களின் குண்டு மழையில் பிரான்ஸின் புகைவண்டி நிலையங்கள், சாலைகள், நாஜிப் படைகள் பயன்படுத்தும் விமான நிலையங்கள், ரேடார் கண்காணிப்பு நிலையங்கள், கரையோர பீரங்கிகள் மற்றும் பாலங்கள் அனைத்தும் கடுமையாக சேதமுற்றன. இவ்வான்வெளி தாக்குதலே நேசப்படைகளின் வெற்றிக்கு அடிகோலியதெனலாம்.

மேலும் இத்தாக்குதல் நார்மண்டி பகுதியை குறிவைத்து நடக்காமல் ஏனைய இடங்களில் பரவியிருந்தமையால், நேசப்படைகளின் கடல்வழி தாக்குதல் இடம் பற்றி ஜெர்மனி குழம்பியது. இது போதாதென்று கடல் தாக்குதல் நார்மண்டியிலில்லை என்று வேண்டுமென்றே ஜெர்மன் உளவு ஸ்தாபனத்திற்கு நேசப்ப்படை தவறான துப்பு கொடுத்தும் குழப்பியது. ஜெர்மனியின் சங்கேத செய்திகளை துல்லியமாக இனங்கண்டதால், நாஜிக்களின் எதிர்தாக்குதல் பற்றிய அனைத்து தகவல்களும் முன்கூட்டியே நேசப்படைக்கு தெரிந்தும் விட்டிருந்தது.

ஹிட்லருக்கு மட்டும் ஏனோ நார்மண்டிப் பகுதி தாக்கப்படலாமென்று கடைசி நிமிடத்தில் தோன்றியது. ஆனால் அதற்குள் காலம் கடந்து விட்டிருந்தது. ரொம்மலோ தேவையில்லாத கடற்கரைப் பகுதிகளிளெல்லாம் 40 லட்சம் கண்ணி வெடிகளைப் புதைத்து, நேசப்படைகளை எதிர்காண ஆவலாயிருந்தார். இதற்கு நடுவே ரொம்மலுக்கும் அவரது மூத்த அதிகாரியான Rundstedt 'க்கும் டாங்க்குள் நிறுத்துமிடங்களில் கருத்துப் பேதமேற்பட, ஹிட்லரே தலையிட்டு பிரச்ச்சினையை சீர் செய்ய வேண்டியதாயிற்று. நேசப்படைகளின் தாக்குதல் ஆரம்பித்த போது ரொம்மல் விடுப்பில் இருந்ததுதான் பெரிய வேடிக்கை.

ஹோபார்ட்டின் பீரங்கிகள்

பாதுகாப்பு அரண் கொண்ட கடற்கரையில் மொத்தம் இரு வழிகளில் துருப்புகளை இறக்கலாம். கடற்கரையில் தொடர் குண்டுமழை பொழிந்து, அதே நேரத்தில் தாக்குதல் படையினை கரைக்கு அருகே எவ்வளவு தூரம் உள்ளே வர முடியுமோ அவ்வளவு தூரம் வந்து துருப்புகளை இறங்கச் செய்யலாம். இச்செய்கையினால் உயிர்ச் சேதம் மட்டுப்படும். இம்முறையினைத்தான் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க கடற் கமாண்டோக்கள் அடிக்கடி பயன்படுத்துவார்கள்.

கடல் வற்றுதலின் போது (low tide) துருப்புகளை கடற்கரையில் துருப்புகளை இறக்குவது இரண்டாவது முறையாகும். கரையில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளை பாதுகாப்பாக அகற்றுவதற்கு இம்முறை உகந்ததென்றாலும், உயிர்ச் சேதம் அதிகமாக வாய்ப்புண்டு. கரையினருகே வரவேண்டிய தேவையில்லாததால் கலங்களுக்கு அதிக ஆபத்தில்லை.

ஜெர்மனியின் பாதுகாப்பு அரண் மிகப் பலமாக இருந்த காரணத்தால் நேசப் படைகள் இரண்டாவது முறையினையே தேர்ந்தெடுத்தது. முதல் முறைப்படி கடல் ஏற்றத்தின் (high tide) போது தாக்குதல் தொடுத்திருந்தால் அரணிலிருந்த நாஜிக்கள் குருவியைச் சுடுவது போல் நேசப்படையினரையும், கலங்களையும் அழித்திருப்பார்கள். கரையிறங்கும் காலாட்படையோடு (infantry) அதிக டாங்குகளையும் அனுப்பினால் ஜெர்மனியின் பாதுகாப்பு அரணைத் தகர்க்கமுடியுமென்று திண்ணமாக நேசப் படை நம்பியது.

இத்தாக்குதலுக்கு முன்னர் இங்கிலாந்தின் தரைப்படைக்கு நவீன குண்டுதுளைக்கா கவச டாங்க்குகள் பிரிவினை உண்டாக்கும் பணியில் மேஜர் ஜெனரல் பெர்சி ஹோபார்ட் ஈடுபட்டிருந்தார். இவரது கொள்கைகளை 'கொமாளித்தனமென்று ' சிலரும், 'மிகப்புதுமையானதென்று ' சிலரும் தீவிர கருத்து பேதங்களோடு விவாதித்த காலத்தில், இனம்புரியாத காரணங்களுக்காக ஹோபார்ட்டுக்கு படையிலிருந்து கல்தா கொடுக்கப்பட்டது. ஆனால் ஹோபார்ட்டின் திறமை குறித்து சர்ச்சிலுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. D Day நடவடிக்கைக்காக மீண்டும் ஹோபார்ட் அழைக்கப்பட்டார். 79 'தாவது கவசவண்டிகள் பிரிவின் தலைவராய் ஹோபார்ட் ஆற்றிய பணி அளவிடமுடியாதது. இவர் உருவாக்கிய கவச டாங்குகள் பல நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. இவரது கண்டுபிடிப்புகளில் 'ஆர்க்ஸ் ' எனப்படும் பாலமைக்கும் டாங்குகள், 'ஷெர்மன் DD [Duplex Drive] ' எனப்படும் நீந்தும் டாங்குகள், 'கிராப் ' எனப்படும் கண்ணிவெடியகற்றும் டாங்குகள், 'பாப்பின்ஸ் ' எனப்படும் பாதையமைக்கும் டாங்குகள், சர்ச்சில் எனப்படும் தீ உமிழும் டாங்குகள், 'பேசைன்ஸ் ' எனப்படும் மதகமைக்கும் டாங்குகள் போன்றவை அடங்கும்.

ஓவர்லார்டு நடவடிக்கையில் நீந்தும் டாங்குகளின் பணி மகத்தானது. ஷெர்மன் வகை டாங்குகளுக்கு தண்ணீர் புகா கேன்வாஸ் அரண் கொடுத்து, இரு முன் தள்ளிகளும் (propellars) பொருத்தப்பட்டன. கரையிறக்கும் கலங்கள் (Landing craft) மூலம் இவ்வகை டாங்குகள் கரைக்கருகே எடுத்துச் செல்லப்பட்டன. 4-5 கீமீ தூரமிருக்கையில் டாங்குகள் கலத்திலிருந்து கடலில் இறக்கப்பட, அவை நீந்தி கரையினை அடைந்தன. பின்னர் கான்வாஸ் உறையின் காற்று நீக்கப்பட்டு போர்முனையில் சீறிப்பாய்ந்தன. கடற்கரையில் துருப்புகளை மட்டுமே எதிர்பார்த்த ஜென்மானியர்க்கு DD டாங்குகள் 'அதிர்ச்சி வைத்தியம் ' அளித்தன.

ஓமகா கடற்கரை

D Day 'ல் இங்குதான் உக்கிரமான போர் நிகழ்ந்தது. மற்ற நான்கு கடற்கரைகளைவிட ஓமகா பெரியது. மேலும் கடற்கரையில் சிறிய மலைக்குன்றுகள் அமெரிக்கப் படைகளின் தாக்குதலை கடினமாக்கியது. ரொம்மலும் தன் பங்கிற்கு 'டிராகன் பற்கள் ' என்று பெயரிட்டு பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்தியிருந்தர். மலைக்குன்றுகளில் 'எதிர்ப்புக் கூடுகளை ' ஏற்படுத்தியதோடு, படைகளின் இலகுவான நடமாட்டத்திற்காக பதுங்கு குழிகளையும் வெட்டி வைக்க ஆணைகள் பிறப்பித்தார். அமெரிக்கப் படைகளை எதிர்நோக்கி ஜெர்மனியின் பீரங்கிகள் ஓமகா கடற்கரையில் வெறியுடன் காத்திருந்தன.

ஓமர் பிராட்லி தலைமையில் அமெரிக்காவின் முதலாம் தரைப்படை ஓமகா கடற்கரையை வந்தடைந்தது. துரதிருஷ்டவசமாக ஏவப்பட்ட 32 DD டாங்குகளில் 29 மூழ்கிப்போனது (27 தான் மூழ்கியதென்று சொல்வோருமுண்டு). எதிர்பாராமல் வீசிய ஆறடி உயர அலைகள், துருப்புகளோடு டாங்குகளை மூழ்கடிக்கச் செய்துவிட்டன. மேலும் கவச டாங்குகளின் துணையில்லாமல் கரையேறிய அமெரிக்க வீரர்களின் நிலை இன்னும் மோசமானது. இது பற்றாதென்று பலமாக வீசிய காற்று கரையிரக்கும் கலங்களை அலைக்கழித்தது. இதனால் குறித்த இடத்தில் துருப்புகள் வந்தடைய முடியவில்லை. கரையை எட்டிய பின்னர் எப்பிரிவு எங்கே செல்ல வேண்டுமென்ற குழப்பம் அதிகரித்தது. ஜெர்மனியின் தானியங்கி துப்பாக்கி ரவைகள் சந்தோஷமாக அமெரிக்கர்களை துளைத்தெடுத்தன. கடற்கரையினருகே ஏற்பட்டிருந்த மணற்மேடுகள் அமெரிக்கர்களுக்கு சிறிதே பாதுகாப்பளித்தாலும், கடலிலிருந்து அவற்றை சென்றடையுமுன் பலர் குண்டுகளுக்கு மரித்துப் போனார்கள். அமெரிக்க வீரர்கள் உயிரை பணயம் வைத்து மலைகுன்றுகளில் ஏறி வீரமாகப் போரிட்டனர். மேலும் சிறிய கப்பல்களை கரைக்கு மிக அருகே வர வைத்து ஜெர்மனியின் பீரங்கிகளை பதம் பார்த்தார்கள். ஒரே நாளில் இங்கே பலியான அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை சுமார் 2,400. காலை 6:30 மணிக்கு ஆரம்பித்த யுத்தத்தில் நண்பகல் தாண்டியவுடன் அமெரிக்கர்களின் கை ஓங்க ஆரம்பித்தது. இருள் சூழும் நேரத்தில் கிட்டத்தட்ட ஓமகாவை அமெரிக்கா பிடித்து விட்டது.

உடா கடற்கரையில் ஏவப்பட்ட 32 DD டாங்குகளில் 28 கரை சேர்ந்தது. மற்ற கடற்கரைகளிலும் DD டாங்குகளின் பங்களிப்பு மகத்தானது.

கோப்ரா நடவடிக்கை (Operation Cobra)


25 ஜூலை அன்று அனைத்து கவச டாங்க்குகளையும் மேற்குப் பகுதியில் இங்கிலாந்தின் தரைப்படையை சமாளிக்க ஜெர்மனி அனுப்பியது. இது போதாதா ? நேசநாடுகளின் துரிதப்படை (Expeditionary Force) கோப்ரா நடவடிக்கை என்னும் வான்வெளித்தாக்குதலைத் தொடுத்தது. இத்தாக்குதலால் இங்கிலாந்தை சமாளிக்கச் சென்ற நாஜிப்படை பிளவுபட்டது. சந்து முனையில் சிந்து பாட அமெரிக்காவின் தரைப்படை கிடைத்த இடைவெளியில் புகுந்து கொண்டது. இப்போது நார்மண்டியில் எஞ்சியிருந்த நாஜிக்களை இப்படைபின்னாலிலிருந்து தாக்கி சின்னாபின்னமாக்கியது. ஹிட்லரின் ஆணைகள் சுத்தமாக மொழி பெயர்க்கப்பட்டதால் ஜெர்மனியின் பதில் தாக்குதலும் விலைவுகள் ஏதுமின்றி பிசுபிசுத்துப் போனது.


நாஜிப்படை தலைமையின் கதி

ஜெர்மனியின் ஏழாவது தரைப்படையின் கமாண்டர் டால்மேன் 28 ஜூன் அன்று இறந்துபோனார். மாரடைப்பென்று காரணம் சொன்னாலும் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாமென்று ஊகம் நிலவியது. யுத்தத்தில் ஜெர்மனி தோற்றுவிடுமாகையால் நேசப்படைகளுடன் அமைதிப் பேச்சு நடத்துங்கள் என்று ஹிட்லருக்கு அறிவுரை கூறியமையால் Rundstedt 'தற்கொலை ' செய்து கொள்ள நேரிட்டது. இதற்கு நடுவே நாஜிப்படை அதிகாரிகள் சிலர் 20 ஜூலையன்று கிழக்கு பெர்ஷ்யியன் தலைமையகத்தில் ஹிட்லரைக் கொல்ல செய்த சதி தோல்வியில் முடிந்தது. Rundstedt இடத்தில் வந்த Gunther Von Kluge என்பவரும் இதே கருத்தைக் கூற 18 ஆகஸ்ட் அன்று தற்கொலை செய்து கொள்ள நேரிட்டது. இங்கிலாந்து வீரரின் தாக்குதலில் சிக்கி காயமுற்ற ரொம்மல் அக்டோபரில் தற்கொலை செய்துகொண்டார்.

இன்றைய நார்மண்டி

ஏறத்தாழ இரண்டு லட்சம் கட்டிடங்கள் சண்டையில் சிதிலமாகின. கேன் பகுதி ஒரு கற்குவியலாகவே காட்சியளித்தது. மொத்தம் 15,000 வீடுகளில் 9,000 வீடுகள் குண்டுவீச்சினில் தரைமட்டமானது. போருக்குப் பின்னர் வந்த அரசுகள் 'வெற்று அரசியலிலேயே ' காலம் கழிக்க, பிரான்ஸின் அதிகார வர்க்கம் விழித்துக் கொண்டது. அமெரிக்க நிதியுதவியோடு உள்ளூர் மக்களின் உழப்பினையும் ஒருங்கிணைத்து, 1951 'ல் கிட்டத்தட்ட நார்மண்டியை பழைய நிலைமைக்கு கொண்டுவந்தனர். 1954 'ல் கேன் நகரமும் புனரமைக்கப்பட்டது.

நினைவுச் சின்னங்கள்

'தனது பழமையினை மறந்த எந்த தேசத்திற்கும் எதிர்காலமில்லை ' என்று முழங்கிய சர்ச்சிலின் தேசமான இங்கிலாந்து மக்களும் தேசப்பற்றிற்கு பேர் போனவர்கள். அமெரிக்காவைப் பற்றி கேட்கவே வேண்டாம். அமெரிக்க மக்கள் வியட்நாம் யுத்தத்தை மிகவும் எதிர்த்தனர். இருப்பினும் அமெரிக்கர் பலர் இப்போரில் பங்குகொண்டு இறந்து போன மற்றும் காயம்பட்ட வீரர்களை மறந்துவிடவில்லை.

நார்மண்டி படையெடுப்பில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் இறந்தனர். பிணக்குவியலாயிருந்த 9,000 அமெரிக்க வீரர்களின் உடல்களை பிரித்தெடுத்து ஓமகா கடற்கரைக்கு அருகே செயிண்ட் லெளரண்ட் என்னுமிடத்தில் அடக்கம் செய்தனர். லா காம்பே என்னுமிடத்தில் சுமார் 20,000 ஜெர்மனி வீரர்கள் அவ்வாறே அடக்கம் செய்யப்பட்டனர். ரான்வில் என்னுமிடத்தில் சுமார் 2,000 இங்கிலாந்து வீரர்களுக்கு சமாதிகள் உருவானது. நேச நாடுகளைத்தும் ஒவ்வொரு வருடமும் உயிர்த்தியாகம் புரிந்த இவ்வீரர்களை நன்றியோடு நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றன.



இப்போது நார்மண்டியில் பல தரப்பட்ட மக்கள் விஜயம் செய்கின்றனர். இறந்த தோழர்களின் நினைவாகவும், உயிரோடு மீண்டவர் ஒன்று கூடவும், வரலாற்று சிறப்புமிக்க இடத்தை காணும் ஆவலிலும் என்று பார்வையாளர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

தொழிநுட்பத்தின்பயன்பாடு


கையடக்கமான நவீன தொழிநுட்ப சாதனங்களைப் பொறுத்தவரை, அவற்றை பராமரிப்பதைவிட போகும் இடங்களில் அவற்றை கவனமாகப் பத்திரப்படுத்துவது கடினமான ஓரு விடயமாக கணிக்கப்படுகிறது.
கையடக்கத் தொலைபேசிகள், PDA, Note book கணணிகள் போன்றவற்றை போகும் இடங்களில் மறந்து வைத்துவிடுவது மிகவும் சாதாரணமாக நிகழக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
எனினும், நமது தனிப்பட்ட பாதுகாப்பு முறையாக PIN இலக்கங்களை உருவாக்கி பாதுகாக்கலாம்.
இவ்வாறு செய்வது குறிப்பிட்ட சாதனத்தை பிறர் பாவிக்க முடியாதபடி செய்துவிடுமாயினும், இப்பாதுகாப்பு முறை குறித்த பலவீனங்களும் அதிகமாகவே காணப்படுகிறது.

குறிப்பிட்ட நேரத்தில் தானாக இயங்கும் பாதுகாப்பு முறையை (auto lock - active) ஏற்படுத்தத்தவறியிருந்தால் இம்முறையிலும் பயன் இல்லாமல் போய்விடுகிறது.
எனினும், இதைவிட சிறந்த முறைகள் பற்றிய ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், புதிய தொழிநுட்பம் ஒன்றை கையடக்க சாதனங்களில் அறிமுகப்படுத்துவது பற்றிய ஆர்வம் மேலோங்கியுள்ளது.

Biometric தொழிநுட்பம் பல்வேறு வடிவங்களில் உலகில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
எனினும், சிறிய ரக கணணிகள்,கையடக்கத் தொலைபேசிகள் போன்றனவற்றில் இவை ஏற்படுத்தப்போவது நாம் எதிர்நோக்கக்கூடிய ஒரு புதிய விடயமாகவே இருக்கும்.
note book,pda,mobile phone மற்றும் கணணிகளுக்கான பாதுகாப்பு முறையை அவரவர் விரல் ரேகைகளில் உருவாக்குவது என்பது ஒரு புதிய விடயமாகவும், அதே நேரம் நம்பிக்கை தரும் விடயமாகவே கணிக்கலாம்.

ஒருவரின் விரல் அடையாளத்தைப்பெற்று Locking / Unlocking System உருவாக்கப்படும் போது அதன் பயன்பாடு அதிகமாகவே இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.

கணணிகளில் பாவிக்கப்படக்கூடிய USB drive,Data Keys போன்ற சாதனங்களையும் இவ்வாறான பாதுகாப்பிற்குட்படுத்தப்படும் போது, தனிப்பட்ட தகவல்களும் பயன்பாடுகளும் பாதுகாக்கப்படலாம்.

எவ்வாறாயினும், இவ்வகைப் புதுமுறையில் பயன்பாடு பற்றிய ஆழமான தகவல்கள் பரவும் வரை இவை பாதுகாப்பானதாகவே அமையும்.
தற்போது கையடக்கத்தொலைபேசிகளில் காணப்படும் PIN முறையிலான Lock முறைகளை Unlock செய்வதை ஒரு வியாபாரமாகவே செய்து வருகின்றனர்.

எனவே, தொழிநுட்பத்தின் ஆழமான அறிவு பரவும் வரை அது பாதுகாப்பானதாகவே இருக்கும்.

வியாழன், 23 செப்டம்பர், 2010

எந்திரன் - விமர்சனம்!



எந்திரன் - விமர்சனம்!

190 கோடி ரூபாய் செலவு, சன் பிக்ஸர்ஸ் + ஷங்கர் + சூப்பர்ஸ்டார் ஆகியோர் இணந்துள்ள பிரம்மாண்டமான படைப்பு. சிவாஜிக்குப் பிறகு மீண்டும் ஷங்கரும் ரஜினியும் இணைந்துள்ளனர். ஐய்வர்யா பச்சன் ஹீரோயினென மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்ட படம். ரஜினி ரசிகர்கள் எந்திராவளியாக கொண்டாடுகிற படம் நேற்று எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் என கனவில் வெளியாகியது. ஒரு படம் பார்த்தால் விமர்சனம் எழுதுவதுதானே கல் தோன்றா மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய தமிழ்ப்பதிவரின் கடமை.ஆகவே ஓவர் டூ விமர்சனம்.

ஒரு முக்கோண காதல் கதையை இவ்வளவு பிரம்மாண்டமாக சொல்ல ஷங்கரால்தான் முடியும். ஒரு விஞ்ஞானி, அவர் பணிபுரியும் அதே இடத்தில் பணிபுரியும் ஒரு பெண், விஞ்ஞானி உருவாக்கும் ஒரு ரோபோ இவர்களுக்குள் நடக்கும் முக்கோண காதல் கதை. விஞ்ஞானியாக சூப்பர்ஸ்டார் பட்டையைக் கிளப்புகிறார். மிக மிக ஸ்டைலிஸாக அந்த குறுந்தாடி அவருக்கு சூப்பராக பொருந்துகிறது. ஸ்டைல் என்ற வார்த்தையே அவருக்காகத்தான் கண்டுபிடிக்கப்பட்டதைப் போலிருக்கிறது.ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் "க்ளாஸ்".

ரஜினியுடன் பணிபுரியும் பெண்ணாக, எப்போதோ உலக அழகியானாலும் இன்னும் நாம் அழைத்துக் கொண்டிருப்பதால் ,"உலக அழகி" ஐஸ்வர்யா பச்சன். ராவணனில் தெரிந்ததை விட ஒப்பனைக் கலைஞரின் தொழிற் நேர்த்தியால் அம்மணி இப்படத்தில் மிக இளமையாக தெரிகிறார். இருந்தாலும் சில இடங்களில் வயதை மறைக்க முடியவில்லை. பாடல் காட்சிகளில் அதகளம் செய்கிறார். விஞ்ஞானி ரஜினிக்கும் ஐஸ்வார்யாவுக்கும் முதலில் மோதலில் ஆரம்பித்து, தமிழ்த் திரைப்படவுலகின் தலையாய விதிப்படி அது காதலிலேயே முடிகிறது.
ரஜினி நாட்டுக்கு நல்ல‌ வேலை செய்ய, தன் ஆராய்ச்சி மூலம் ஒரு ஒன்மேன் ஆர்மியான் ரோபோவை தயார் செய்கிறார். அந்த ரோபோதான் இன்னோர் ரஜினி. அதாவது ரஜினியின் முகவமைப்புடன் கூடிய இன்னோர் ரஜினி. மனித உணர்ச்சிகள் எதுவும் இல்லாமல், மற்ற எல்லா வித்தைகளும் மொழிகளும் பேசும் திறனும் ப்ரோகிராமிங் செய்யப்பட்டதொரு ஹைடெக் ரோபோ. ஒரு எந்திரத்தை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தினால் நல்லதைச் செய்யலாம். மாறாக கெட்ட விஷய்ங்களுக்கும் பயன்படுத்தலாம். நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்த விஞ்ஞானி ரஜினி இருந்தால், கெட்ட விஷயங்களுக்கு பயன்படுத்த ஒரு வில்லன் வேண்டுமல்லவா..? இருக்கிறார். டேனிதான் அந்த வில்லன். அவர் பேசும் தமிழுக்கும் வாயசைப்புக்கும் ஒட்டவேயில்லை. டப்பிங் கலை என்றென்றும் வாழ்க!

ஒரு கட்டத்தில் ரோபோவான ரஜினிக்கு மனித உணர்ச்சிகளான காதல், துரோகம், வெறுப்பு முதலியன வரத் துவங்குகின்றன. அதாவது ஐஸ்வர்யா மீது காதலும் அதனால், தன் தந்தையான விஞ்ஞானி ரஜினி மீது வெறுப்பும் சேர்கிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வில்லன் விஞ்ஞானியான டேனி, ரோபோ ரஜினியை தன்வசப்படுத்துகிறார். விஞ்ஞானி ரஜினிக்கு துரோகம் செய்யும் விதமாக நாட்டின் அழிவுகளுக்கு ரோபோ ரஜினியை பயன்படுத்தத் துவங்குகிறார். விஞ்ஞானியான ரஜினி ரோபோவைவும் வில்லன் டேனியையும் என்ன செய்தார்..? ஐஸ்வர்யா இறுதியில் யாரைக் கரம் பிடித்தார்..? என்பனவற்றை வெள்ளித்திரையில் காண்க.

என்னதான் விஞ்ஞானி ரஜினி ஸ்டைலாக நடித்திருந்தாலும் இரண்டாம் பாதியில் வில்லனாக அவதாரம் எடுக்கும் ரோபோ ரஜினி வந்து ஒருமுறை சிரிப்பதில் மனதைக் கொள்ளை கொண்டு போய் விடுகிறார். பழைய பரட்டை ரஜினியாக சிம்மாசனம் போட்டுக் கொள்கிறார். அவர் துப்பாக்கியைச் சுழட்டும் விதமும் நொடிக்கணக்கில் நூற்றுக்கணக்கான புல்லட் மழை பொழிவதும் அழகே அழகு. அவரும் ரஜினிதானே!! எல்லாப்புகழும் ரஜினிக்கே!!

முதற்பாதியில் ரோபோ ரஜினியான சிட்டி அடிக்கும் டைமிங்க் காமெடிகள் சூப்பர் ரகம் . சுஜாதாவுக்கே ஸ்தோத்திரம். பற்றாக்குறைக்கு சந்தானமும் கருணாஸும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் தனி. இருவரும் போட்டி போட்டு மாறி மாறி சிரிக்க வைக்கின்றனர். இந்தப்படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் பீட்டர் ஹெய்ன். மனிதர் உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார். கேமராமேன் ரத்தினவேலு தனக்குக் கொடுத்த வேலையை மிக மிகச் சிறப்பாக செய்து முடித்துள்ளார். வைரமுத்துவின் வைரவரிகளில் ரஹ்மானின் இசையில் ஏற்கனவே பாடல்களனைத்தும் பட்டையைக் கிளப்ப, பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார் ரஹ்மான். அதுவும் ரஜினியின் அறிமுகக் காட்சியில் அவர் அடித்திருக்கும் இசை இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

சாபுசிரிலின் கலை வியக்க வைக்கிறது. எது கிராஃபிக்ஸ்..? எது செட்..? என பிரித்துப் பார்க்க முடியாத வண்ணம் வேலை செய்திருக்கிறார். பாடல் காட்சிகளில் இவர் போட்டிருக்கும் செட்ஸ் அனைத்தும் அசத்தல் ரகம். அவையனைத்தையும் ரத்னவேலு தன் கேமராவுக்குள் காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் சூப்பரோ சூப்பர். வசனங்கள் பல இடங்களில் ஷார்ப்பாக உள்ளது. மூன்று பேர் எழுதியிருப்பதால் யார் யார் எதை எழுதினார்களென சரியாகத் தெரியவில்லை. சுஜாதாவை மட்டுமே சில இடங்களில் கண்டுபிடிக்க முடிகின்றது.

ஒரு சில காட்சிகளை ஆங்காங்கே ஆங்கில படங்களிலிருந்து சுட்டிருந்தாலும், அவற்றை தமிழ் ரசிகர்களுக்காக கொஞ்சம் மாற்றி கமர்ஷியலாக்கிக் கொடுத்திருக்கிறார் ஷங்கர். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். படக்குழுவினர் மூச்சுக்கு முன்னூறு முறை சொல்வதைப் போலவே, இந்த மாதிரி ஒரு படம் தமிழில் இதுவரை வந்ததேயில்லை. கண்டிப்பாக திரையரங்கில் மட்டுமே கண்டுகழிக்க வேண்டியதொரு முக்கியமான தமிழ்த்திரைப்படமுங்கோ இது! thanks website.

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010


அ. இர. இரகுமான் (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: சனவரி 6, 1967), புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என்ன அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரே.

இவர் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியனியர் படத்திற்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார் இசைப்புயல் ரஹ்மான்.
81 வது,2009 பிரமாண்டமான ஆஸ்கார் விருது மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர வார்த்தையை அங்கே உச்சரித்தார்.
வாழ்க்கைக் குறிப்பு...
ரகுமான் பிறந்த ஜனவரி 6ம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். இயற்பெயர் திலீப்குமார். இசையுலகப் பயணம் ஆரம்பித்தது 1985 இல். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். கஷ்டத்தோடு பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் வாசிக்க கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்று கொண்டார். 11 வயதில் [[இளையராஜா[[ இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடன் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.
இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, மின் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
1992 இல் தனது வீட்டிலேயே மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர் அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனயாக அமைந்தது. படத்தின் பாடல்கள் அனத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கி தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக்கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003ல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்கு தேசிய விருகள் வாங்கி தந்தன.
முதல் படம் ஜப்பானில் வெற்றி பெற்று இவரது புகழ் உலகமெங்கும் பரவ தொடங்கியது. 2005 இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலே நவீன தொழிநுட்ப ரெகார்டிங் ஸடுடியோவாக உள்ளது.
திரைப்பட இசையமைப்புகள்



ஆண்டு தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம்


1992 ரோஜா ரோஜா ரோஜா
1993 ஜென்டில்மேன் ஜென்டில்மேன் தி ஜென்டில்மேன்
1993 கிழக்குச்சீமையிலே
1993 புதிய முகம்
1993 திருடா திருடா டொங்கா டொங்கா ச்சோர் ச்சோர்
1993 உழவன்
1994 டூயட்
1994 காதலன் ஹம்ஸே ஹே முக்காப்லா
1994 கருத்தம்மா
1994 மே மாதம் 1994 புதிய மன்னர்கள்
1994 வண்டிச்சோலை சின்னராசு
1994 பவித்ரா
1994 சூப்பர் போலீஸ்
1994 கேங் மாஸ்டர்
1995 பம்பாய் பம்பாய் பம்பாய்
1995 இந்திரா
1995 முத்து
1995 ரங்கீலா ரங்கீலா
1996 இந்தியன் பாரதீயடு ஹிந்துஸ்தானி
1996 காதல் தேசம் பிரேம தேசம் துனியா தில்வாலோன் கீ
1996 லவ் பேர்ட்ஸ் ஃபயர்
1996 மிஸ்டர் ரோமியோ
1997 இருவர்
1997 மின்சாரக் கனவு மெருப்பு கலலு சப்னே
1997 ரட்சகன் ரக்ஷடு
1997 தவுட்
1998 ஜீன்ஸ் ஜீன்ஸ் ஜீன்ஸ்
1998 உயிரே ஹிருதயாஞ்சலி தில் ஸே
1998 தோலி சஜா கே ரக்ஹ்னா
1998 கபி நா கபி
1999 முதல்வன் ஒக்கே ஓக்கடு நாயக்
1999 தாஜ் மஹால்
1999 சங்கமம்
1999 காதலர் தினம் பிரேமிகுலு ரோஜு
1999 ஜோடி
1999 தாளம் தாள்
1999 என் சுவாசக்காற்றே
1999 படையப்பா
1999 1947 எர்த்
1999 தக்ஷக்
1999 புக்கார்
2000 அலைபாயுதே சகி சாத்தியா
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ப்ரியலு பிலிச்சிந்தி
2000 ரிதம் ரிதம்
2000 தெனாலி தெனாலி
2000 தில் ஹே தில் மே
2001 ஸ்டார்
2001 பார்த்தாலே பரவசம் பரவசம்
2001 அல்லி அர்ஜூனா
2001 சுபைதா
2001 ஒன் 2 கா 4
2001 லவ் யூ ஹமேஷா
2001 லகான்
2002 கன்னத்தில் முத்தமிட்டால் அம்ருதா
2002 பாபா
2002 காதல் வைரஸ்
2002 தி லெஜன்ட் ஆஃப் பகத் சிங்
2002 சாத்தியா
2003 உதயா
2003 பரசுராம்
2003 பாய்ஸ் பாய்ஸ்
2003 வாரியர்ஸ் ஆப் ஹெவென் அண்ட் எர்த்
2003 எனக்கு 20 உனக்கு 18 நீ மனசு நாக்கு தெலுசு
2003 கண்களால் கைது செய்
2003 தெஹ்ஜீப்
2004 ஆய்த எழுத்து யுவா யுவா
2004 நியூ நானி
2004 தேசம் ஸ்வதேஸ்
2004 லகீர்
2004 மீனாக்சி - எ டேல் ஆஃப் 3 சிட்டீஸ்
2004 தில் நே ஜிஸே அப்னா கஹா
2004 கிஸ்னா
2005 போஸ் - தி ஃபர்காட்டன் ஹீரோ
2005 மங்கள் பாண்டே - தி ரைஸிங்
2005 அ... ஆ ...
2005 வாட்டர்
2006 ரங் தே பசந்தி
2006 சில்லுனு ஒரு காதல்
2006 வரலாறு
2007 குரு குரு குரு
2007 ப்ரோவோக்டு
2007 சிவாஜி
2007 அழகிய தமிழ் மகன்
2007 எலிசபெத்: தி கோல்டென் ஏஜ்
2008 ஜோதா அக்பர்
2008 ஜானே து யா ஜானே நா
2008 அடா : எ வே ஆப் லைப்
2008 சக்கரகட்டி
2008 யுவ்ராஜ்
2008 ஸ்லம் டாக் மில்லியனியர்
2009 டில்லி 6
பின் வரும் பிற மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்:
1993 யோதா (மலையாளம்)
1999 Return of the Thief of Baghdad (ஆங்கிலம்)
2003 Tian di ying xiong (சீன மொழி)
1999- பிஸா- ஹிந்தி) (ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைப்பு).
[திரைப்பட அல்லாத இசையமைப்புகள்


தீன் இசை மாலை (1989) (திலீப் குமார் என்ற பெயரில்)


செட் மீ ஃப்ரீ (1991)
வந்தே மாதரம் (1997)
ஜன கன மன (2000)
பாம்பே ட்ரீம்ஸ் (2002) (இசை நாடகம்)
இக்னைட்டட் மைன்ட்ஸ் (2003) (இசைத்தொகுப்பு வெளியிடப்படாத நேரடி இசை நிகழ்ச்சி)
ராகாஸ் டான்ஸ்(2004) (வனேசா மே நடனத்திலிருந்து)
இவர் பெற்ற விருகள்...
2008 ஆம் ஆண்டுகான சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.
மொரீசியசு நாட்டின் விருது, மலேசிய விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தேசிய திரைப்பட விருது, இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ, ஆறு முறை தமிழக திரைப்பட விருது, 13 முறை பிலிம்பேர் விருது, 12 முறை பிலிம்பேர் சவுத் விருது, ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது, 2009ம் ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லினியர்" படத்திற்காக கோல்டன் குளோப் விருது, பெப்டா விருது, ஆகியவற்றுடன் மிடில்செக்ஸ் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.
ந‌ன்றி விக்கிபீடியா

சர்வதேச ஓசோன் தினம்

சர்வதேச ஓசோன் தினம்

ஓசோன் படுகையை பாதுகக்கும் தினம் அனுசரிக்கப்படுகிறது. கனடா நாட்டு தலை நகரில் 1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி ஓசோன் படுகையை நாசம் செய்யும் ரசாயனங்களுக்கு எதிரான மான்ட்ரீல் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதையடுத்து அந்த தினமே 1995ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஓசோன் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பூமியை நாசம் செய்து வரும் முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சனைகளை கவனப்படுத்தும் தினமாக இதனை அனுசரிக்க உலக நாடுகள் தீர்மானித்தன.

பல ஆண்டுகால ஆய்வுகளால் எழுந்ததுதான் இந்த உடன்படிக்கை. அதாவது பூமியிலிருந்து விண்வெளிக்குச் செல்லும் ரசாயன வாயுக்களால் ஓசோன் படுகையில் ஓட்டை விழுகிறது என்பது இந்த ஆய்வுகளின் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும்.

மீவளி மண்டலத்தில் செறிவு தளர்ந்த ஓசோன் படுகையால் சூரியனின் புற ஊதாக்கதிர்களுக்கு பூமியின் உயிரினங்கள் பாதிக்கப்படுகிறது.

உலக சுகாதாரக் கழகத்தின் கண்டுபிடிப்புகளின் படி ஒவ்வொரு ஆண்டும் 20 முதல் 30 லட்சம் பேர் தோல் புற்று நோய்க்கு ஆளாவதாகவும், இதில் 20 விழுக்காடு புற ஊதாக் கதிர்களின் பாதிப்புகளால் விளைந்தவையே என்றும் தெரிவித்துள்ளது.

துவக்கத்தில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடுகள் ஓசோன் படுகையில் நாசம் விளைவிக்கும் ரசாயனங்களான குளோரோ ஃபுளோரோ கார்பன், ஹேலோன், கார்பன்டெட்ரா குளோரைடு ஆகியவற்றை படிப்படியாக குறைத்து முற்றிலும் இதன் வெளிப்பாட்டை ஒழிக்கும் முயற்சியை மேற்கொள்கின்றன.

ஆனால் இதே துறையில் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளில் மெதில் குளோரோஃபார்ம், ஹைட்ரோ குளோரோ ஃபுளூரோ கார்பன், மெதில் புரோமைட் ஆகிய ரசாயனங்களும் ஆபத்து மிகுந்தவை பட்டியலில் சேர்க்கப்பட்டு, இதன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தவும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ரசாயனங்கள் குளிர்சாதனப் பெட்டிகள், குளிர்பதனப் பெட்டிகள் உள்ளிட்ட பிற பொருட்களின் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுவதாகும். தீயணைப்புக் கருவி, நுரை வெளியேற்ற கருவி, உலோக-துப்புரவாக்க கருவிகள், நிலக்கிருமி அழிக்கும் புகை வெளியீட்டு எந்திரங்கள் ஆகியவற்றிலும் இந்த ரசாயனங்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் 1993-ஆம் ஆண்டு முதல் மாண்ட்ரீல் உடன்படிக்கையை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொண்ட நாடுகள் இந்த ரசாயனங்களை கட்டுப்படுத்தும் 296 திட்டங்களுக்கு நிதி உதவிகளும் அளிக்கப்பட்டன.

இந்த அடிப்படையில் குளோரோ ஃபுளோரோ கார்பன் (சி.எஃப்.சி.) ரசாயனங்களை முற்றிலும் கட்டுப்படுத்திய நடவடிக்கையை இந்தியா இந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதியே நிறைவேற்றியது. அதாவது, குறித்த நேரத்தைக் காட்டிலும் முன்னதாகவே இந்தியா இந்த காரியத்தை நிறைவேற்றியுள்ளது.

மெதில் குளோரோஃபார்ம் உள்ளிட்ட பிற சி.டி.சி. ரசாயங்களின் பயன் மற்றும் உற்பத்தியையும் இந்தியா 85 விழு‌க்காடு கட்டு‌ப்படுத்தியுள்ளது. ஹேலோன்கள் 2003ஆம் ஆண்டு முதலே நிறுத்த‌ப்பட்டு வந்து இப்போது முழுதும் இதன் உற்பத்தி, நுகர்வு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுக்காக 2007-ஆம் ஆண்டு இதே தினத்தில் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட மான்ட்ரீலில் மான்ட்ரீல் உடன்படிக்கை சிறந்த அமலாக்க விருது இந்தியாவிற்கு அளிக்கப்பட்டது.
உலகில் உயிரினங்கள் உயிர்வாழ வான்பரப்பில் ஓசோன் படலம் ஆற்றிவரும் பணி மகத்தானது. எமது கண்ணுக்குப் புலப்படாத அந்த ஓசோன் படலத்திற்கு மானசீகமான நன்றிகளைத் தெரிவிக்கவும், இன்று எம்மை அறியாமல் எமது நடவடிக்கைகள் காரணமாக ஓசோன் படலத்திற்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகளை ஏனையவர்களுக்கும் உணரச் செய்யவும், அதே நேரத்தில் அதன் பாதுகாப்பின் அவசியத்தை உறுதி செய்யவும் ஆண்டுதோறும் உலக நாடுகள் செப்டம்பர் 16ம் திகதியை ஓசோன் தினமாக நினைவு கூருகின்றன.

1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் திகதி கனடா நாட்டின் தலைநகரில் ஓசோன் படையை அழிக்கும் இரசாயனங்களுக்கு எதிரான ‘மொன்றியல்” உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதையடுத்து அந்தத் தினமே 1995ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஓசோன் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1994 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொது சபையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பூமியை அழித்து வரும் முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஒருமுகப்படுத்தும் தினமாக இதனை அனுசரிக்க உலக நாடுகள் தீர்மானித்தன.

ஓசோன் (Ozone) என்பது மூன்று ஒட்சிசன் அணுக்கள் சேர்ந்திருக்கும் ஒரு மூலக்கூறாகும். இது வளிமண்டலத்தின் மேல் வாயு நிலையில் காணப்படுகின்றது. இது ஒட்சிசனின் பிறிதொரு மாற்றுரு (allotrope) வாகும். இது ஈரணு ஒட்சிசன் மூலக்கூறு போல் நிலைத்தன்மை இல்லாதது. இலகுவாக சிதைந்து விடும் தன்மை கொண்டது.
1840 இல் சி. எப். ஸ்கோன்பின் (Christian Friedrich Schönbein) என்பவர் ஓசோனைக் கண்டுபிடித்தார். அது ஒருவகையான மணம் தருவது என்ற அடிப்படையில் கிரேக்க மொழியில் மணத்தைக் குறிக்கும் (ozein, “மணத்தல்”) ஓசோன் என்று பெயர் சூட்டினார். ஆனால் மூன்று ஒட்சிசன் அணுக்கள் சேர்ந்த விஞ்ஞானப் பெயரின் பொருள் ஓசோன் என்பது, இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து, 1865 இல் ஜாக்ஸ் லூயிஸ் சோரெட் (Jacques-Louis Soret) என்பார் செய்த ஆய்வுக்கு முன்னர் அறியப்படவில்லை. இது பின்னர் சி. எப். ஸ்கோன்பின் அவர்களால் 1867 இல் உறுதி செய்யப்பட்டது. ஒரு இரசாயனப் பொருளின் மாற்றுரு (allootrope) வாக அறியப்பட்டவற்றுள் ஓசோனே முதலாவதாகும்.

புவிக்கு அருகே காணப்படும் ஓசோன் சூழலில் மாசுத்தன்மை ஊட்டுவதாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் மனிதர்கள் உட்பட, விலங்குகள் பலவற்றின் சுவாச செயற்பாட்டிற்கு கேடு விளைவிப்பதாக நிரூபிக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும்..

ஆனால் புவியின் வளிமண்டலத்தின் மேல் மட்டங்களில் உள்ள ஓசோன் வளி, உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை தடுத்து, உலகில் பாயும் அளவைக் குறைக்கின்றது. சூரிய ஒளிக் கதிர்களில் நம் கண்ணுக்குத் தெரியாத ஒளிக்கதிர்கள் உள்ளன. இத்தகைய ஒளிக் கதிர்களை செங்கீழ்க் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் என பிரிக்கலாம். செங்கீழ்க் கதிர்கள் சூரியனிடமிருந்து வெப்பத்தை சுமந்து வந்து பூமியை வெப்பம் அடையச் செய்கிறது. புற ஊதாக்கதிர்கள் பூமியில் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்கினங்களும் தாவரங்களும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துக்கின்றன. இத்தகைய தீமை விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களிடமிருந்து (UV) பாதுகாப்பு கவசமாக ஓசோன் படலம் செயற்படுகின்றது.

ஓசோன் படைமண்டலத்தில் உற்பத்தியானாலும் இதன் 90 வீதம் படைமண்டலத்தின் தாழ் பகுதியில் உள்ளது. படை மண்டலத்தின் தாழ்பகுதியில் ஒட்சிசன், உயர் ஆற்றல் வாய்ந்த சூரியனில் இருந்து வெளியேற்றப்படும் கதிர்வீசலின் மூலமும் ஓசோன் உற்பத்தியாகின்றது. இப்பகுதி புவியின் வளிமண்டலத்தின் அதிகளவான பகுதியை (90%) உள்ளடக்கி உள்ளது. இப்பகுதி புவியின் மேற்பரப்பில் இருந்து 10-25 மைல் (15-40 கிமீ) உயரத்தில் அமைந்துள்ளது.

வளிமண்டலத்தில் ஓசோன் அடர்த்தி ‘டாப்சன்” அலகினால் அளவிடப்படுகிறது. ஓசோன் அடர்த்தி கணக்கிட பத்தொன்பது வகையான கருவிகள் உள்ளன. அவற்றில் சில டாப்சன் ஸ்பேக்ட்ரோ போட்டோ மீட்டர், ப்ருவர் ஸ்பேக்ட்ரோ போட்டோ மீட்டர், ஜோடு மீட்டர், பில்டர் ஓசோன் மீட்டர் எம். 83, பில்டர் ஓசோன் மீட்டர் எம். 124, மாஸ்ட், ஒக்ஸ்போர்டு, சர்பேஸ் ஓசோன் பப்ளர், எலக்ட்ரோ கெமிக்கல் செல் சோன்ட் போன்றனவாகும்.

அண்டார்டிகா பனிக் கண்டத்தில் ஓசோன் அளவு பருவநிலைக்கேற்ப சிறிய அளவிலான மாறுதலுடன் சராசரியாக நிலவுகிறது. ஆனால் வசந்த காலத்தில் (ஆகஸ்ட், நவம்பர்) ஓசோன் அளவு சராசரி அளவில் 50 முதல் 60 வீதம் வரை குறைந்து காணப்படுகின்றது. இந்த ஓசோன் குறைவே ‘ஓசோன் துவாரம்” (Ozone hole) என்று அழைக்கப்படுகிறது. பிரித்தானிய விஞ்ஞானி ஜே. போர்மன் தலைமையிலான ஆய்வுக் குழு அண்டார்டிகாவின் ‘ஹாலேபே” என்ற நிலையத்தில் 1970 ம் வருட மத்தியில் ஓசோன் அளவு குறைந்து காணப்பட்டதை முதன் முதலாகக் கண்டறிந்தது.

துருவப் பிரதேசத்தில் ஓசோன் அடர்த்தி குறைவதற்கு காரணமாக விளங்குவது துருவப் படை மேகங்களாகும். இந்த மேகங்கள் மீது நிகழும் பல்வேறு வகையான இரசாயனச் செயல்பாடுகளின் போது குளோரின் வெளிப்படுகின்றது. இந்த குளோரின் அணு ஓசோனுடன் தாக்கம் புரிந்து குளோரின் ஒட்சைட்டை வெளிப்படுத்துவதால் ஓசோன் செறிவு குறைகின்றது.

அண்டார்டிக் பகுதி ஒசோன் படுகையில் உள்ள ஓட்டை கடந்த 2007 இல் இருந்ததை விட இந்த ஆண்டு பெரிதாகியுள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் 2006 இல் இருந்ததை விட ஓசோன் துவாரத்தின் அளவு குறைவாக உள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து உலக வானிலை ஆய்வு மையம் 2008ம் ஆண்டில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்டார்டிக் பகுதியில் உள்ள ஓசோன் படுகையில் 27 மில்லியன் சதுர கி.மீ. அளவு துவாரம் உள்ளது. இது கடந்த 2007ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 25 மில்லியன் சதுர கி.மீ. ஆகவும் 2000ம் ஆண்டில் 28.3 மில்லியன் ச. கி. மீ. ஆகவும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓசோன் படையினை கண்டுபிடித்த காலத்தில் இருந்து விஞ்ஞானிகள் அதன் இயற்கை அமைப்பு மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 1974 இல் இரசாயனவியலாளர்கள் சேர்வூட் ரொலன்ட் மற்றும் மரியா மொலினா என்போர் மனித செயற்பாடுகளின் மூலம் வளிமண்டலத்திற்கு வெளியிடப்படும் பொருட்களினால் ஓசோன் படைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கண்டுபிடித்தனர். இதனால் பல்வேறுபட்ட எதிர்விளைவுகள் ஏற்படுவதுடன் அதனை தடுப்பதற்கான சட்டதிட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை ஓசோன் படை தேய்விற்கு காரணமான பொருட்களை வெளியிடாமல் இருப்பதற்கான பொறுப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய கடமை மக்களையே சார்ந்துள்ளது. 1995-ம் ஆண்டு ஓசோன் ஆய்விற்காக குரூட்சன் மற்றும் நிகோலஸ் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த அறிஞர்களின் விருப்பமெல்லாம் ‘இந்த பூவுலகை காக்கும் ஓசோன் படலத்தை காக்க உலகத்திலுள்ள அனைவரும் ஒன்றாக கைகோர்க்கவேண்டும்” என்பதுதான்.

ஓசோன் துவாரத்திற்குக் காரணம் ஓசோனை தேய்வடைய செய்யக்கூடிய பொருட்களை வெளியிடுதலே (Ozone Depleting Substances) எனக் கூறப்படுகிறது. இப்பொருட்கள் பிரதானமாக மனித உருவாக்கங்களாகவே உள்ளதுடன் இதற்கு காரணமாக குறிப்பிட்டு காட்டக்கூடிய இயற்கை மூலகங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவ் ஊறுவிளைவிக்கும் பொருட்கள் கைத்தொழில் விவசாய நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்படுகின்றது. குறிப்பாக குளோரோ புளோரோ காபன் (CFC, Chloro Floro Carban), கார்பன் நாற்குளோரைட் (Carban Thetrachlorite), ஐதரோ குளோரோ புளோரோ கார்பன் (HCFC) மற்றும் மெதைல் புரோமைட் (Methil Bromite) போன்றவை பிரதானமாக ஓசோன் தேய்விற்கு காரணமாக அமைகின்றன.

இவ்வூறு விளைவிக்கும் பதார்த்தங்கள் மேல் வளிமண்டலத்தினை அண்மித்தவுடன் அவற்றின் அணுக்களினை பகுதி பகுதியாக பிரித்துவிடுகின்றது. அப்பதார்த்தங்களை உருவாக்கியுள்ள அணுக்கள் அனைத்தும் விடுவிக்கப்படுகின்றன. உதாரணமாக குளோரீன் மற்றும் புரோமின் அணுக்களை குறிப்பிடலாம். இவ்வாறு விடுவிக்கப்பட்ட அணுக்கள் தமக்கு சேதம் விளைவிக்காது பிற பொருட்களை சேதமடைய செய்யும் செயற்பாட்டினூடாக ஓசோன் படை தேய்வினை துரிதப்படுத்துகின்றது. ஒவ்வொரு அணுவும் வளிமண்டலத்தில் இருந்து அகற்றப்படுவதற்கு முன்பதாக ஆயிரக்கணக்கான ஓசோன் மூலகங்களை அழிக்கக்கூடிய திறன்வாய்ந்தனவாக காணப்படும்.
ஓசோன் படைத் தேய்வினால் மனித சுகாதாரம் மற்றும் சூழல் மீது பாரிய தாக்கங்கள் ஏற்படுகின்றன.

புற ஊதாக்கதிர்வீசலின் UV அளவு அதிகரிப்பதினால் மனித சுகாதாரம் மற்றும் சூழலுக்கு தீங்கு தரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றது. பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழலின் சம நிலையிலும் பாதிப்பு ஏற்படுகின்றது. பூமியின் சராசரி வெப்பநிலை உயரும் போது பனிப்பிரதேசங்களில் மிகவும் அதிகமான பனி உருகி கடல் மட்டம் உயர்கிறது. கடல்மட்ட உயர்வின் விளைவால் கடலருகே உள்ள பூமியின் பெரும்பான்மையான நிலப்பகுதி நீரால் சூழப்பெற்று உயிரினங்கள் வாழும் நிலப்பகுதி வெகுவாக குறைந்து விடும் அபாயம் பூதாகாரமானதாக தெரிகின்றது.

ஆய்வுகளின் படி UV கதிர்வீசலுக்கும் தோல் புற்றுநோய்க்கும் இடையில் திடமானதொரு உறவு நிகழ்வதாக கூறப்படுகின்றது. உலக சுகாதாரக் கழகத்தின் கண்டுபிடிப்புகளின் படி ஒவ்வொரு ஆண்டும் 20 முதல் 30 லட்சம் பேர் தோல் புற்று நோய்க்கு ஆளாவதாகவும், இதில் 20 வீதத்தினர் புற ஊதாக் கதிர்களின் பாதிப்புகளால் விளைந்தவையே என்றும் தெரிவித்துள்ளது. UV கதிர்வீசலினால் கண் நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறானது உயர்ந்த அளவில் காணப்படுகின்றது. UV தரை மேற்பரப்பை அடைவதுடன் அதனை உட்சுவாசிக்கும் போது நச்சுவாக மாறி சுவாசத்தொகுதி பிரச்சினைகளையும் உருவாக்குகின்றது. உயர் புறஊதாக்கதிர் மட்டமானது சில உயிர் வாழ் நுண்ணுயிர்களின் வாழ்வை பாதிக்கின்றது. உதாரணமாக Cyanobacteria நுண்ணுயிர்களானது பல தாவரங்களின் நைதரசன் நிலைநாட்டுகை செயற்பாட்டில் பிரதான பங்கினை வகிக்கின்றன. தாவரங்கள் UV கதிர்வீசலுக்கு இலகுவில் பாதிப்படைகின்றன.

இதன் காரணமாக பிளான்தன்களும் பாதிப்படைகின்றன. அதேவேளை பிளான்தன்கள் உணவு வலையின் முதல்நிலை உற்பத்தியாக்கிகளின் ஜீவாதாரமானவையாகும். சமுத்திரத்தின் பிளான்தன்களின் அளவு குறைவடைதலானது (சமுத்திர உயிர் சூழலியல் செயற்பாட்டின் உணவு சங்கிலி முறைமையினுடாக) மீன்களின் அளவு குறைவடைவதற்கு வழிவகுக்கின்றது.

ஓசோன் படை தேய்வினை தடுப்பதும் ஓசோன் படையை பாதுகாப்பதும் பூமியின் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை நிலைநாட்டுவதற்கு எடுக்கவேண்டிய முக்கிய விடயமாகும். எனவே ஓசோன் படை தேய்வினை தடுப்பதற்காக பூகோள ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.

குளிர்சாதன பெட்டிகள், குளிரூட்டிகள் போன்றவற்றின் பாவனையானது குளோரோ புளோரோ காபன், ஐதரோ குளோரோ புளோரோ காபன் போன்றவற்றினை வெளியிடுவதுடன் புவியின் நிலையான வாழ்க்கைக்கு பொறுப்பான சூழலுக்கு அபாயத்தினையும் விளைவிக்கின்றது. எனவே இச்சாதனங்களை தடை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக மாற்றுச் சாதனங்களை கண்டுபிடிக்கவேண்டும். குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள் ஆகியவற்றில் குளோரோ புளோரோ கார்பனுக்கு ஈடான சுற்றுச்சூழலை மாசு அடைய செய்யாத வேறு பொருள்களை பயன்படுத்தவேண்டும்.

ஓசோன் படை தேய்வினை நோக்கிய சர்வதேச பிரயத்தனமாக
விஞ்ஞானிகளின் அறிவுறுத்தலின் பின்பு உலகின் அனைத்து சமூகங்களும் இணைந்து 1985 இல் ஓசோன் படையினை பாதுகாப்பதற்காக ‘வியன்னா மகாநாட்டி”னை உருவாக்கின. இச்சான்றுகள் உறுதிப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் அதாவது 1987 இல் ‘மொன்றியல் சாசனம்” ஓசோன் தேய்வுப்பொருட்களை வெளியிடுவதனை தடுப்பது தொடர்பாக ஏற்படுத்தப்பட்டது. CFC, HCFC மற்றும் ஏனைய தேய்விற்கு பொறுப்பான பொருட்களை வெளியிடாது சூழல்-நட்பான ஓசோனுக்கு பாதிப்பினை ஏற்படுத்தாத மாற்றுப்பொருட்களை பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டது.

‘மொன்றியல் சாசனப்” பிரகாரம் ODS பொருட்களை உற்பத்தி செய்தல் நுகர்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்துதல், ODS இன் சர்வதேச வர்த்தகத்தினை கட்டுப்படுத்தல், ODS இன் வருடாந்த உற்பத்தி தரவுகளைப் பேணுதல் போன்ற நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டன. அபிவிருத்தியடைந்த நாடுகள் பல்பக்க நிதியுதவியினை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கி மாற்று தொழினுட்பங்களை ODS வெளியேற்றத்திற்கு பயன்படுத்தக் கோரியதில் சிறந்த பலன்கள் ஏற்பட்டுள்ளன. 192 நாடுகள் இதில் கையெழுத்திட்டு கொள்கை உருவாக்கியுள்ளதுடன் அதற்கான நிதிசம்பந்தமான விடயங்களுக்கு வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 7 அங்கத்தவர்கள் (அபிவிருத்தியடைந்த, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இருந்து) பொறுப்பு வகிக்கக்கூடிய வகையில் இச்சட்டம் உருவாக்கப்பட்டது.

1992 இல் லண்டன் சட்டம் அதிகப்படியாக ஓசோனை சேதப்படுத்தும் பொருட்களை வெளியிடும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் தொடர்பானதாக இருந்தது. 1996 இல் இச்சட்டம் விரைவுபடுத்தப்பட்டது.

ஓசோன் படை தேய்வினை குறைப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அவதானிக்குமிடத்து மானிடகாரணிகள் (Anthropogenic) மூலம் வெளிவிடப்படும் பொருட்கள் ஓசோனின் உற்பத்தியை விட அழிவை துரிதப்படுத்துவதனால் இயற்கை சமநிலை குலைகின்றது. இந்த குளோபல் வார்மிங். [global warming], ஓசோன் ஓட்டை..[ozone depletion], பசுமை இல்ல விளைவு [green house effect], ஆகிய மூன்றுக்கும் அதிகப்படியான வாகன, தொழிற்சாலை, அணுமின் நிலையம், மின் உற்பத்தி இவைகளால் ஏற்படும் புகையே காரணமெனப்படுகிறது. மொன்றியல் சாசனத்தின் மூலம் ஓசோனின் மீள் உற்பத்தி நடவடிக்கையினை ஊக்குவிக்கும் தொழிற்பாடுகள் செயற்படுத்தப்படுகின்றன. ODS இரசாயனங்களை கட்டுப்படுத்தும் 296 திட்டங்களுக்கு நிதி உதவிகளும் அளிக்கப்படுகின்றன. கைத்தொழில் குழுக்கள் (CFC மற்றும் ODS பாவனையாளர்கள்) சூழல்-நட்பு முறையிலான பாதுகாக்கப்பட்ட மாற்று முறைமைகளை கையாள முனைந்து வருகின்றன. தொழில்நுட்பத்தினூடாக மாற்று திட்டங்களை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் அமுல்படுத்துவதனை ஊக்குவித்து வருகின்றன .மொன்றியல் சாசனமானது வழக்கத்தை மாற்றி புதுமையை புகுத்தும் விடயங்களையும் தொழில்நுட்பத்தினூடாக அவற்றின் வியாபித்தலினையும் சட்ட ரீதியான மற்றும் நிறுவனரீதியான தடைகளை அகற்றுதலையும் செய்து வருகின்றது.

உலகரீதியாக நகரும் குளிரூட்டிகள் (Mobile Airconditioner) சூழல்-நட்பு தொடர்பான நுட்பங்களுக்கு மாற்றப்பட்டு ஓசோன் படையினை பாதுகாப்பதுடன் அதேவேளை ODS, பொருட்களினால் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களும் குறைக்கப்படுகின்றது. (ODS, Ozone Depliting Substances) 1970 காலகட்டங்களில் காணப்பட்ட பாதுகாக்கப்பட்ட ஓசோன் முறைமையினை மொன்றியல் சாசனம் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக இன்னும் 5-6 தசாப்தங்களில் எதிர்பார்க்கலாம் என வளிமண்டல கணினி மாதிரிகள் காட்டிநிற்கின்றன. அதாவது ஓசோன் படுகையை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தினால், வரும் 2075ஆம் ஆண்டில் முற்றிலும் சீரடைந்த ஓசோன் படுகையை (அதாவது 1980ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைப் போன்ற சூழலை) ஏற்படுத்த முடியும் என உலக வானிலை ஆய்வு மைய மூத்த விஞ்ஞானி கெய்ர் பிராத்தென் கூறியுள்ளார்.thanks.web

சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day

சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day ஆண்டு தோறும் செப்டம்பர் 8ம் திகதியன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அடிப்படை எழுத்தறிவை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், எழுத்தறிவைப் பெற்றுக்கொள்ள முடியாமற் போன வளர்ந்தோருக்கு முறைசாராக் கல்வித் திட்டத்தின் மூலம் எழுத்தறிவைப் போதிக்கும் நோக்கத்துடனும் ஆண்டுதோறும் எழுத்தறிவு தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் திகதி தெஹ்ரான் நகரில் உலகளாவிய கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இம் மகாநாட்டில் உலகளாவிய ரீதியில் எழுத்தறிவின்மையால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமுகமாக பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதியை சர்வதேச எழுத்தறிவு நாளாக அனுசரிக்க வேண்டும் என்பது முக்கியத் தீர்மானங்களில் ஒன்றாகும்.

இதனடிப்படையில் 1965 நவம்பர் 17, திகதி யுனெஸ்கோ நிறுவனம் கூடியபோது செப்டம்பர் 8ஆம் திகதியை சர்வதேச எழுத்தறிவு தினமாகப் பிரகடனம் செய்தது. இத்தினம் 1966ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுக்கிறது. தனி மனிதர்களுக்கும் பல்வேறு வகுப்பினருக்கும் சமுதாயங்களுக்கும் எழுத்தறிவு எவ்வளவு முதமையானது என்பதை எடுத்துரைப்பதே இந்த நாளின் குறிக்கோள் ஆகும்.

எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது. பொதுவாக எழுத்தறிவு ஒரு மொழியை வாசிக்க, எழுத, பேச, கேட்டுப் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும். இன்று எழுத்தறிவு பல்வகைப்பட்ட தொடர்பாடல் முறைகளைப் பின்பற்றி ஒரு எழுத்தறிவுள்ள சமூகத்துடன் இணையாக பங்களிக்க கூடிய ஆற்றலைக் குறிக்கின்றது. இதில் கணித்தலும், கணினி பயன்பாடும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் எழுத்தறிவைப் பின்வருமாறு வரையறை செய்கின்றது: “எழுத்தறிவு என்பது, பல்வேறு சூழ்நிலைகளுடன் தொடர்புடைய அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்டவற்றைப் பயன்படுத்தி அடையாளம் காண்பதற்கும், புரிந்து கொள்வதற்கும், விளக்குவதற்கும், ஆக்குவதற்கும், தொடர்பு கொள்வதற்கும், கணிப்பதற்குமான திறனைக் குறிக்கும். எழுத்தறிவு, ஒரு தனியாளுக்கு தன்னுடைய இலக்கை அடைவதற்கும், தனது அறிவையும், தகுதியையும் வளர்ப்பதற்கும், பரந்த சமுதாயத்தில் முழுமையாகப் பங்குபற்றுவதற்குமான ஆற்றலைப் பெறுவதற்குரிய தொடர்ச்சியான கல்வியைப் பெறுவதோடு தொடர்புடையது. “தற்காலத்தில் எழுத்தறிவுப் பிரச்சினை என்பது கல்வியால் தீர்க்கப்படவேண்டிய சமூகப் பிரச்சினையாக நோக்கப்படுகின்றது.

உலகில் சுமார் 776 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வயது வந்தவர்களில் 5 பேரில் ஒருவருக்கு எழுதப்படிக்கத்தெரியாது. இவர்களில் மூன்றில் இரு பகுதியினர் பெண்கள். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள்.படிப்பை பாதியில் நிறுத்திவிட்டவர்கள், அரைகுறையாக பள்ளிகள் செல்பவர்கள் ஏராளம். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
உலகமயமாக்கத்தில் விழிப்புடன் செயற்பட்டு வரும் காலத்தில் எழுத்தறிவின்மை என்பது வெட்கப்படக்கூடிய விளைவு தான் என்றால் பிழையாகாது. அதி நவீன தொழில்நுட்ப திறனும் கணிணிப்பயன்பாடும் இன்றைய உலகை ஆக்கிரமித்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் எந்தவொரு நாடும் தனது மக்கள் எழுத்தறிவில் பின்தள்ளப்பட்டுள்ளனர் என்று கூற வெட்கப்பட்டே ஆக வேண்டும்.

இவ்வாறாக எழுத்தறிவைப் பெற்றுக் கொள்ள முடியாமைக்கான காரணங்களாக உள்ள சமூக நிலைகள் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.வறுமை, போஷாக்கின்மை, அரசியல் நெருக்கடிகள், கலாசார பாகுபாடு, அடிமைப்படுத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் எழுத்தறிவின்மை உலக நாடுகளில் இன்றும் காணப்படுகின்றது என்பதை ஏற்றாக வேண்டியுள்ளகல்வியறிவு அல்லது எழுத்தறிவின் முக்கியத்துவம் தான் என்ன? தேசிய ரீதியிலும், சர்வதேசரீதியாக இது தொடர்பான செயற்றிட்டங்கள் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன? இவற்றை கொண்டு செல்வது யார் என்ற வினாக்களுக்கு நாம் விடை காணவேண்டியதாக உள்ளோம்.

எழுத்தறிவு என்பது மனித உரிமைகளுடன் தொடர்புபட்ட ஒரு அம்சம். தனிநபர் ஆளுமையிலிருந்து சமூக மனித வள அபிவிருத்தி மற்றும் கல்வி செயற்பாடுகள் அதற்கான சந்தர்ப்பங்கள் என்பன எழுத்தறிவிலேயே தங்கியுள்ளன. எழுத்தறிவின்மை எனும் போது எந்த ஒரு மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமல் இருத்தலாகும் என ஐக்கிய நாடுகள் சபை எழுத்தறிவின்மையை தனது சாசனத்தில் வரையறை செய்துள்ளது.

எழுத்தறிவின் பயனை அறிந்த பெற்றோர் தான் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர். எழுத்தறிவு பெற்றோர் கல்வி வாய்ப்புக்களை இலகுவாக பெற்றுக்கொள்கின்றனர், மேலும் ஒரு கல்வி கற்ற சமுதாயமானது அபிவிருத்தி இலக்குகளை இனங்கண்டு சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டது. ஆனால் உலகில் இன்று பல நாடுகள் பல பிரச்சினைகள் காரணமாக எழுத்தறிவை பெறமுடியாதுள்ளனர்.

வறுமையை ஒழித்தல், சிறுவர் இறப்பு வீதத்தை குறைத்தல், சனத்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தல், பால் சமத்துவத்தை கட்டியெழுப்பல், முறையான அபிவிருத்தியை உறுதி செய்தல் சமாதானம் மற்றும் ஜனநாயகம் போன்ற பல விடயங்களின் அபிவிருத்தியையும் எழுத்தறிவு அபிவிருத்தியுடன் இணைத்து நோக்க வேண்டியுள்ளது. எழுத்தறிவு என்பது கல்விக்கு எந்தளவில் முக்கியமான ஒரு மையப்புள்ளியாக விளங்குகிறது என்பதற்கு பல நல்ல வழுவான உதாரணங்களைக்கூறலாம். ஒரு சிறந்த அடிப்படை கல்வியானது மக்களுக்கு வாழ்க்கைக்கு எந்தளவிற்கு முக்கியமோ அதேயளவிற்கு ஏனைய பிற தேவைகளுக்கும் காரணகர்த்தாவாக இருக்கின்றன.

யுனெஸ்கோவின் “அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை (2006)” அறிக்கையின்படி தெற்கு மற்றும் மேற்கு ஆசியாப் பகுதிகளிலேயே மிகக் குறைந்த வீதமானோர் (வயது வந்தோரில்) (58.6 %) படிப்பறிவில்லாமல் உள்ளனர். அதற்கு அடுத்த படியாக உள்ள பகுதிகள் ஆபிரிக்கா (59.7 %), அரபு நாடுகள் (62.7 %). எழுத்தறிவின்மைக்கும் நாடுகளின் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

2009 சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான்-கி-மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எழுதுவதும், படிப்பதும் மட்டுமே எழுத்தறிவு பெற்றதாக ஆகிவிடாது. வாய்ப்புகளைக் கண்டறிவதுடன், வளர்ச்சியை மையமாகக் கொண்டதாகவும் அந்தக் கல்வியறிவு இருக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் அனைத்தும் சர்வதேச அளவில் அனைவரும் எழுத்தறிவு பெறுவதை இலக்காகக் கொண்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தல் அவசியம். இதற்கு உறுதுணையாக தேவையான உதவிகளை அளிப்பதோடு உண்மையான வளர்ச்சிக்குத் தேவையான வளங்களை உருவாக்க வேண்டும்.
உலகில் மிகுந்த அளவில் வளம் உள்ளது. இந்த உலகில் வாழ கல்வியும், அறிவும்தான் பாஸ்போர்ட் போன்றவை.

ஆனால் உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 77.60 கோடி பேர், பெரும்பாலான பெண்கள் அடிப்படை வசதிகளின்றி, எழுத்தறிவு இல்லாதவர்களாக வாழ்கின்றனர். அத்துடன் 7.5 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது மிகவும் கவலையளிக்கும் விடயமாகும். பாதியிலேயே பள்ளிக் கல்வியை கைவிடும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது.

குறைந்தபட்ச கல்வி மூலம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை பிரபல கல்வியாளர் டாக்டர் லாலகே குறிப்பிட்டுள்ளார். அவரது கூற்றை அனைவரும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இதை மனதில் கொண்டு இந்த ஆண்டு கல்வியறிவு இயக்கத்தை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என்று பான்-கி-மூன் வலியுறுத்தியிருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 2000ம் ஆண்டுக்கான மனித அபிவிருத்தி அறிக்கையில் உலகில் 90 மில்லியன் குழந்தைகளுக்கு எந்தவிதமான கல்வியும் ஆரம்பக் கல்வியும் மறுக்கப்பட்டுள்ளது. 232 மில்லியன் குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் இரண்டாம் நிலைக் கல்வியைக்கூட பெறமுடியாத நிலை உள்ளது.

கிழக்கு ஐரோப்பாவிலும், முன்னைய சோவியத் யூனியன் நாடுகளிலும் பாடசாலைக் கல்வி 1989ல் இருந்ததை விட வீழ்ச்சி கண்டுள்ளது. எழுத்தறிவின்மை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இந்தியாவில் ஆரம்ப கல்வி வழங்கப்பட்டாலும், 1996ம் ஆண்டு வட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 60 வீதமான பாடசாலைகள் ஒழுகும் கூரைகளைக் கொண்டுள்ளன. 89 வீதமான பாடசாலைகளில் மலசலகூட வசதி இல்லை 59 வீதமான பாடசாலைகளில் குடிநீர் இல்லை.
1991ல் இந்தியாவில் 7 வயதிற்கு கூடிய மக்களில் 52 சதவீதமானவர்களுக்கு எழுத்தறிவு இருந்தது.

இதில் இந்திய பிராந்திய அரசுகளில் கிராமிய பெண்களில் 16 சதவீதமானவர்களுக்கு எழுத்தறிவு உள்ளதாகவும் அறிக்கை குறிப்பிடுகின்றது. ராஜஸ்தான் மாநிலத்தில் இது 4 சதவீதமாகும். உலக ரீதியாக 100 கோடிக்கு அதிகமானோர் எழுத்தறிவு இல்லாதவர்களாகும். கல்வியறிவுக் குறைபாட்டாலும் பரந்த எழுத்தறிவின்மையாலும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் 250 மில்லியன் சிறுவர்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதில் 140 மில்லியன் சிறுவர்களும் 110 மில்லியன் சிறுமியர்களாகும். 18 வயதிற்கு குறைந்த 1.2 மில்லியன் பெண்களும் சிறுமியர்களும் வருடாந்தம் விபச்சாரத்தில் ஈடுபடத் தள்ளப்படுகின்றனர் என்றும் கூறப்பட்டிருந்தது.

உலக நாடுகளின் எழுத்தறிவு விகிதங்கள்

1998 ஆம் ஆண்டு ஐ.நாவின் கணிப்பீட்டின் படி உலக சனத்தொகையில் 20வீதமானோர் எழுத்தறிவற்றவர்களாக இருந்தனர்.இந்தத்தொகையினர் எந்த மொழியிலும் அமைந்த மிக இலகுவான வாக்கியங்களை எழுதவோ வாசிக்கவோ முடியாதவர்கள். எனினும் அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை முகவர் அமைப்பின் (C.I.A) 2007 அறிக்கையின் படி தற்போது உலக சனத்தொகையின் எழுத்தறிவு வீதம் 82 ஆகும்.

மனித அபிவிருத்தி உள்ளடக்க 2007/2008 புள்ளி விபரப்படி (Human Development Index 2008 Statistical Update Human Development Report 2007/2008, p. 226 Human Development Report 2007/2008) உலகில் 100 சதவீத எழுத்தறிவை பெற்றுள்ள நாடு என்ற பெருமையை ஜோர்ஜியா பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் முறையே எஸ்ட்டோனியா 99.8, லாட்வியா 99.8, கியூபா 99.8 ஆகிய நாடுகள் உள்ளன. 99 வீத எழுத்தறிவை உள்ள நாடுகளில் மேற்படி பட்டியலில் 49 நாடுகள் காட்டப்பட்டுள்ளன. 98 வீத எழுத்தறிவை உள்ள 8 நாடுகளும், 97 வீத எழுத்தறிவை உள்ள 10 நாடுகளும், 96 வீத எழுத்தறிவை உள்ள 6 நாடுகளும், 95 வீத எழுத்தறிவை உள்ள 2 நாடுகளும், 94 வீத எழுத்தறிவை உள்ள 06 நாடுகளும், 93 வீத எழுத்தறிவை உள்ள 08 நாடுகளும், 92 வீத எழுத்தறிவை உள்ள 05 நாடுகளும், 91 வீத எழுத்தறிவை உள்ள 05நாடுகளும், 90 வீத எழுத்தறிவை உள்ள 04 நாடுகளும் காட்டப்பட்டுள்ளன.

இப்பட்டியலின் படி இலங்கை இப்பட்டியலில் 99ஆவது இடத்தைப்பிடித்துள்ளது. எழுத்தறிவு விகிதம் 90.8 ஆகும். இலங்கையில் பெருந்தோட்டப்பகுகளில் எழுத்தறிவு விகிதம் குறைவு காரணமாக தேசிய ரீதியில் இவ்விகிதம் குறைந்து காணப்படுகிறது.அதே நேரம் தெற்காசியாவுடன் ஒப்பிடும் போது இலங்கை முதலிடத்தில் உள்ளது.

இப்பட்டியலில் இந்தியாவானது 159 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. எழுத்தறிவு விகிதம் 65.2 ஆகும். இந்தியாவிலுள்ள மக்கள் தொகை அதிகரிப்பே அது எழுத்தறிவு விகிதத்தில் பின்தள்ளப்பட்டுள்ளதற்குக் காரணம் என கூறப்படுகிறது. இப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் (28.0) 189 ஆவது இடத்திலும் பர்க்கீனா ஃவாசோ (26.0) 190 ஆவது இடத்திலும், சாட் (25.7) 191 ஆவது இடத்திலும் மாலி (22.9) 192 ஆவது இடத்திலும் காணப்படுகின்றன.

இலங்கையும் எழுத்தறிவு வீதமும்

எழுத்தறிவை பொறுத்தவரை தென்னாசியாவில் இலங்கை ஒரு முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது.இலங்கையில் 5 தொடக்கம் 14வயது வரையான வயதெல்லை கட்டாயக் கல்விக்கான வயதெல்லையாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையானது யுனெஸ்கோவின் கல்வி சார் அபிவிருத்தித் திட்டங்களில் இணைந்து செயற்படுவதற்காக 1949 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி யுனெஸ்கோ அமைப்பில் இணைந்து கொண்டது.

இன்று இலங்கையின் எழுத்தறிவு வீதமானது நகரப்புறங்களிலேயே முன்னேற்றங்கண்டுள்ளது எனலாம்.

சுதந்திரம் கிடைத்து 61வருடங்களுக்குப் பிறகும் கூட பெருந்தோட்டப்பகுதிகளில் அடிப்படை கல்வி வசதியை பெறத்தவறியுள்ளவர்கள் எத்தனையோ பேர்.

இலங்கை குடிசன மதிப்பீட்டு புள்ளி விபர திணைக்களத்தின் அறிக்கையின் படி இலங்கையின் நகர்ப்புறங்களில் எழுத்தறிவு வீதம் 95 ஆகவும் கிராமப்புறங்களில் 93 வீதமாகவும் பெருந்தோட்டப்பகுதிகளில் 76 வீதமாகவும் உள்ளது. பால் வேறுபாட்டில் ஆண்கள் 94 சதவீத கல்வியறிவையும் பெண்கள் 91.1வீத கல்வியறிவையும் பெற்றுள்ளனர்.

யுனெஸ்கோவின் அபிவிருத்தித்திட்டங்களில் எழுத்தறிவித்தல் ஒரு முக்கிய இடத்தைப்பிடிக்கின்றது. ஒவ்வொரு நாடுகளிலும் இத்திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றமை முக்கிய அம்சம். இதில் முதியோர்களுக்கு கல்வி போதித்தல் பிரதான இடத்தை வகிக்கின்றது.