வியாழன், 23 செப்டம்பர், 2010

எந்திரன் - விமர்சனம்!



எந்திரன் - விமர்சனம்!

190 கோடி ரூபாய் செலவு, சன் பிக்ஸர்ஸ் + ஷங்கர் + சூப்பர்ஸ்டார் ஆகியோர் இணந்துள்ள பிரம்மாண்டமான படைப்பு. சிவாஜிக்குப் பிறகு மீண்டும் ஷங்கரும் ரஜினியும் இணைந்துள்ளனர். ஐய்வர்யா பச்சன் ஹீரோயினென மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்ட படம். ரஜினி ரசிகர்கள் எந்திராவளியாக கொண்டாடுகிற படம் நேற்று எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் என கனவில் வெளியாகியது. ஒரு படம் பார்த்தால் விமர்சனம் எழுதுவதுதானே கல் தோன்றா மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய தமிழ்ப்பதிவரின் கடமை.ஆகவே ஓவர் டூ விமர்சனம்.

ஒரு முக்கோண காதல் கதையை இவ்வளவு பிரம்மாண்டமாக சொல்ல ஷங்கரால்தான் முடியும். ஒரு விஞ்ஞானி, அவர் பணிபுரியும் அதே இடத்தில் பணிபுரியும் ஒரு பெண், விஞ்ஞானி உருவாக்கும் ஒரு ரோபோ இவர்களுக்குள் நடக்கும் முக்கோண காதல் கதை. விஞ்ஞானியாக சூப்பர்ஸ்டார் பட்டையைக் கிளப்புகிறார். மிக மிக ஸ்டைலிஸாக அந்த குறுந்தாடி அவருக்கு சூப்பராக பொருந்துகிறது. ஸ்டைல் என்ற வார்த்தையே அவருக்காகத்தான் கண்டுபிடிக்கப்பட்டதைப் போலிருக்கிறது.ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் "க்ளாஸ்".

ரஜினியுடன் பணிபுரியும் பெண்ணாக, எப்போதோ உலக அழகியானாலும் இன்னும் நாம் அழைத்துக் கொண்டிருப்பதால் ,"உலக அழகி" ஐஸ்வர்யா பச்சன். ராவணனில் தெரிந்ததை விட ஒப்பனைக் கலைஞரின் தொழிற் நேர்த்தியால் அம்மணி இப்படத்தில் மிக இளமையாக தெரிகிறார். இருந்தாலும் சில இடங்களில் வயதை மறைக்க முடியவில்லை. பாடல் காட்சிகளில் அதகளம் செய்கிறார். விஞ்ஞானி ரஜினிக்கும் ஐஸ்வார்யாவுக்கும் முதலில் மோதலில் ஆரம்பித்து, தமிழ்த் திரைப்படவுலகின் தலையாய விதிப்படி அது காதலிலேயே முடிகிறது.
ரஜினி நாட்டுக்கு நல்ல‌ வேலை செய்ய, தன் ஆராய்ச்சி மூலம் ஒரு ஒன்மேன் ஆர்மியான் ரோபோவை தயார் செய்கிறார். அந்த ரோபோதான் இன்னோர் ரஜினி. அதாவது ரஜினியின் முகவமைப்புடன் கூடிய இன்னோர் ரஜினி. மனித உணர்ச்சிகள் எதுவும் இல்லாமல், மற்ற எல்லா வித்தைகளும் மொழிகளும் பேசும் திறனும் ப்ரோகிராமிங் செய்யப்பட்டதொரு ஹைடெக் ரோபோ. ஒரு எந்திரத்தை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தினால் நல்லதைச் செய்யலாம். மாறாக கெட்ட விஷய்ங்களுக்கும் பயன்படுத்தலாம். நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்த விஞ்ஞானி ரஜினி இருந்தால், கெட்ட விஷயங்களுக்கு பயன்படுத்த ஒரு வில்லன் வேண்டுமல்லவா..? இருக்கிறார். டேனிதான் அந்த வில்லன். அவர் பேசும் தமிழுக்கும் வாயசைப்புக்கும் ஒட்டவேயில்லை. டப்பிங் கலை என்றென்றும் வாழ்க!

ஒரு கட்டத்தில் ரோபோவான ரஜினிக்கு மனித உணர்ச்சிகளான காதல், துரோகம், வெறுப்பு முதலியன வரத் துவங்குகின்றன. அதாவது ஐஸ்வர்யா மீது காதலும் அதனால், தன் தந்தையான விஞ்ஞானி ரஜினி மீது வெறுப்பும் சேர்கிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வில்லன் விஞ்ஞானியான டேனி, ரோபோ ரஜினியை தன்வசப்படுத்துகிறார். விஞ்ஞானி ரஜினிக்கு துரோகம் செய்யும் விதமாக நாட்டின் அழிவுகளுக்கு ரோபோ ரஜினியை பயன்படுத்தத் துவங்குகிறார். விஞ்ஞானியான ரஜினி ரோபோவைவும் வில்லன் டேனியையும் என்ன செய்தார்..? ஐஸ்வர்யா இறுதியில் யாரைக் கரம் பிடித்தார்..? என்பனவற்றை வெள்ளித்திரையில் காண்க.

என்னதான் விஞ்ஞானி ரஜினி ஸ்டைலாக நடித்திருந்தாலும் இரண்டாம் பாதியில் வில்லனாக அவதாரம் எடுக்கும் ரோபோ ரஜினி வந்து ஒருமுறை சிரிப்பதில் மனதைக் கொள்ளை கொண்டு போய் விடுகிறார். பழைய பரட்டை ரஜினியாக சிம்மாசனம் போட்டுக் கொள்கிறார். அவர் துப்பாக்கியைச் சுழட்டும் விதமும் நொடிக்கணக்கில் நூற்றுக்கணக்கான புல்லட் மழை பொழிவதும் அழகே அழகு. அவரும் ரஜினிதானே!! எல்லாப்புகழும் ரஜினிக்கே!!

முதற்பாதியில் ரோபோ ரஜினியான சிட்டி அடிக்கும் டைமிங்க் காமெடிகள் சூப்பர் ரகம் . சுஜாதாவுக்கே ஸ்தோத்திரம். பற்றாக்குறைக்கு சந்தானமும் கருணாஸும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் தனி. இருவரும் போட்டி போட்டு மாறி மாறி சிரிக்க வைக்கின்றனர். இந்தப்படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் பீட்டர் ஹெய்ன். மனிதர் உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார். கேமராமேன் ரத்தினவேலு தனக்குக் கொடுத்த வேலையை மிக மிகச் சிறப்பாக செய்து முடித்துள்ளார். வைரமுத்துவின் வைரவரிகளில் ரஹ்மானின் இசையில் ஏற்கனவே பாடல்களனைத்தும் பட்டையைக் கிளப்ப, பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார் ரஹ்மான். அதுவும் ரஜினியின் அறிமுகக் காட்சியில் அவர் அடித்திருக்கும் இசை இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

சாபுசிரிலின் கலை வியக்க வைக்கிறது. எது கிராஃபிக்ஸ்..? எது செட்..? என பிரித்துப் பார்க்க முடியாத வண்ணம் வேலை செய்திருக்கிறார். பாடல் காட்சிகளில் இவர் போட்டிருக்கும் செட்ஸ் அனைத்தும் அசத்தல் ரகம். அவையனைத்தையும் ரத்னவேலு தன் கேமராவுக்குள் காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் சூப்பரோ சூப்பர். வசனங்கள் பல இடங்களில் ஷார்ப்பாக உள்ளது. மூன்று பேர் எழுதியிருப்பதால் யார் யார் எதை எழுதினார்களென சரியாகத் தெரியவில்லை. சுஜாதாவை மட்டுமே சில இடங்களில் கண்டுபிடிக்க முடிகின்றது.

ஒரு சில காட்சிகளை ஆங்காங்கே ஆங்கில படங்களிலிருந்து சுட்டிருந்தாலும், அவற்றை தமிழ் ரசிகர்களுக்காக கொஞ்சம் மாற்றி கமர்ஷியலாக்கிக் கொடுத்திருக்கிறார் ஷங்கர். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். படக்குழுவினர் மூச்சுக்கு முன்னூறு முறை சொல்வதைப் போலவே, இந்த மாதிரி ஒரு படம் தமிழில் இதுவரை வந்ததேயில்லை. கண்டிப்பாக திரையரங்கில் மட்டுமே கண்டுகழிக்க வேண்டியதொரு முக்கியமான தமிழ்த்திரைப்படமுங்கோ இது! thanks website.