செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

மூணாறு

கேரள மாநிலத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான மூணாறில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றிய 23 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் பெருமழை காரணமாக, கடந்த 07-08-2020 அன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் உறங்கிகொண்டிருந்தபோதே வீடுகளோடு புதையுண்டு அதில் பலரும் உயிரிழந்தனர். இதுவரை 49 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது; இன்னும் பலரது நிலை என்னவென்றே தெரியாமல் இருப்பதுதான் மிகுந்த துயரத்தை அளிக்கிறது. அந்த அற்புதமான நிலத்திற்காகவும், மக்களுக்காகவும் பிராத்திக்கின்றேன்.

தெரிந்து கொள்வோம்

#மூணாறு, தென்னிந்தியாவின் புகழ்பெற்ற ஒரு மலைவாசஸ்தலம், வருகைத் தருவதற்கும், அறிந்து கொள்வதற்கும் அனுபவிப்பதற்குமான இயற்கை அழகினைக் கொண்டிருக்கும் ஒரு ரம்மியமான இடமாகும். முதிரப்புழா, நல்லத்தண்ணி மற்றும் குண்டலா என்னும் மூன்று மலை நீரோடைகளின் சங்கம இடத்தில் அமைந்துள்ளது - மேலும், ”மூணாறு” என்ற வார்த்தையும் மலையாளத்தில் மூன்று ஆறுகள் என்று பொருள்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1600 அடி உயரத்தில் அமைத்துள்ள மலைவாசஸ்தலம் காலனி ஆட்சியின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கோடை ஓய்விடமாக இருந்தது. ஆங்கில கன்ட்ரி காட்டேஜ்களின் வடிவத்தில் மூணாறு நகரத்தில் காலனிய சுவடுகள் இன்னும் உயர்ந்து நிற்கின்றன. கன்னிக்காடுகள், வனாந்தரங்கள், உருட்டும் மலைகள், கண்ணுக்கனிய பள்ளத்தாக்குகள், எண்ணற்ற நீரோடைகள், பெரிய நீர்வீழ்ச்சிகள், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வளைந்து வளைந்து செல்லும் நடைபாதைகள் மூணாறில் பயணியருக்கு கிடைக்கும் சிறந்த விடுமுறை அனுபவத்தின் பகுதிகளாகும். மூணாறு நீலக்குறிஞ்சிக்குப் பெயர் பெற்ற ஒன்று. அரிய மலர் வகையான இது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரும். மூணாறில் ”குறிஞ்சிப்பருவம்” ஒரு கண்கொள்ளாக்காட்சி, நீலக்குறிஞ்சி மலர்களால் மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்திருக்கும்.


அற்புதமான மனிதர்களையும், ரம்மியமான இயற்கை  சூழ்நிலையும் அமைய பெற்ற இந்த மலைவாசல்தளம் மலை ஏற்ற வீரர்களின் சொர்க்கம். நான் அலைந்து திரிந்த இந்த இடத்தில்  ஏற்பட்டிருக்கும் இயற்கை அனர்த்தம் கவலைகொள்ள செய்கின்றது.

மூணாறு மீண்டும் துளிர் கொள்ளட்டும். 🌱⛰ #Munnar