ஈராக்கில் வசிக்கும் குர்து இனமக்களின் தனி நாடு கோரிக்கையை அடுத்து இன்று ஈராக்கின் எதிர்ப்பையும் மீறி பொது வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது.
பாக்தாத்:
ஈராக்கின் வடபகுதியில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். குர்திஸ்தான் என்றழைக்கப்படும் இந்தப் பகுதி ஈராக் ஆட்சியின் கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுகிறது. ஈராக்கின் எண்ணெய் வளம் மிக்க குர்துகள் வசிக்கும் இந்த பகுதியை தனிநாடாக அறிவிக்க அம்மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இக்குழுக்கள்ளில் பிகேகே எனப்படும் குர்துக்கள் தொழிலாளர் கட்சியினர் ஆயுதமேந்திய போராட்டம் நடத்திவருகின்றனர். ஆனால், குர்து இன மக்களின் இந்த கோரிக்கையை ஈராக் ஏற்க மறுத்து விட்டது. ஈராக் துண்டாக பிரிவதை அனுமதிக்க மாட்டேன் என ஈராக் பிரதமர் ஹைதர் அல்-பாக்தாதி தெரிவித்திருந்தார்.
தனி நாடு கோரி பொதுவாக்கெடுப்பு நடத்த குர்து மக்கள் முடிவெடுத்துள்ள நிலையில், அவர்களின் கோரிக்கையை ஆதரிப்பதாக இஸ்ரேல் கூறியது. இதற்கான தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், தனி நாடு கோரிக்கைக்கான ஆதரவு பெருகி வருகிறது.
பரபரப்பான சூழ்நிலையில் இன்று பொதுவாக்கெடுப்பு நடைபெற உள்ளது. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஈராக் குர்துக்களின் முடிவுக்கு துருக்கியில் வசித்துவரும் சிறுபான்மை குர்துக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அந்நாட்டில் வசிக்கும் குர்துக்கள் குர்திஸ்தான் தனிநாடு கேட்டு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்திவருகின்றனர்.
ஈராக் குர்துக்களின் தனிநாடு கோரிக்கை நிறைவேறினால் அது சிரியா மற்றும் துருக்கி நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என துருக்கி அச்சம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஈராக் பிரதமர் ஹைதர் அல்-பாக்தாதி கூறியபோது, குர்து இன மக்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அவர்கள் தீயோடு விளையாடுகிறார்கள். ஏதாவது பிரச்சினை எழுந்தால் ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈராக் துணை அதிபர் நவுரி அல்-மாலிக் கூறியபோது, குர்து இன மக்களின் தனி நாடு கோரிக்கையை ஒருபோதும் ஏற்க முடியாது. இரண்டாவதாக இஸ்ரேல் நாடு உருவாவதை நாங்கள் அனுமதிக்கவில்லை. பொது வாக்கெடுப்பு திட்டத்தை குர்து இன தலைவர்கள் கைவிட வேண்டும் என்று தெரிவித்தார்.