திங்கள், 28 நவம்பர், 2016

தியாக தீபங்கள்

உலகமெல்லாம் வாழும் தமிழர்களுடைய திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், மதசார் பண்டிகைகளை விட கார்த்திகை மாதம் பெறுமதியானது, உணர்வுபூர்வமானது என்பது நேற்றைய தினம் பலருக்கு உணர்த்தியிருக்கும். நெருக்கடியான நேரத்திலும் ஈழத்தில் நடைபெற்ற உணர்வெழுச்சிகள் வலிமிகுந்தவை! வேதனையானவை! போற்றுதலுக்குரியவை!
இனிவரும் ஆண்டாண்டு காலங்களில் தமிழர்களுக்கென்று தனித்துவமாகி, அங்கமாகிப்போன நிளைவேந்தலை எந்த ஆயுதங்கள் கொண்டும் மௌனிக்கமுடியாது என்பதை மனித அவலத்தை விதைத்தவர்கள் புரிந்துகொள்ளட்டும்.


கார்த்திகை பூ எடுத்து வாடா.! 
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...! 
இனம் வாழ இவர் செய்தார் தியாகம்.! 
இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்.! 
உறவுகளுக்காய் உயிர் கொடுத்த உத்தமரே..! 
உங்கள் 'உயிர்விலைக்கு' எது இங்கே ஈடாகும்? 
உமைக்கருவில் சுமந்த தாய் வயிற்றில் நெருப்பெரியும்..! 
அந்த நெருப்பினில் விடுதலைத்தீ மூண்டெரியும். 
ஆறடிக்குள் துயிலும் அற்புதங்களே-எங்கள் 
ஆணிவேரான ஆலமரங்களே..! 
வாழ்ந்தாலும் ம(வ)ரமாக... 
வீழ்ந்தாலும் விதையாக 
மாவீரன் மறைவதில்லை 
மாவீரம் அழிவதில்லை 
ஆண்டுக்கொருமுறையா உமை நினைக்கிறோம் 
இல்லை 
தீயெரியும் தேசத்தில் தினம் தினம் உம் நினைவும் சேர்ந்தெரியும். 
கல்லறைக்கு வருகையிலே கால் கூசும்-உமைக் 
கண்டவுடன் கட்டியணைத்து மெய் சோரும். 
மணியோசை கேட்டால் மனமுருகும்... 
மாவீரர் கல்லறையில் உயிர் கருகும்... 
கண்களிலே கண்ணீர் கவி எழுதும் 
கையிரண்டும் உமை நோக்கி கூம்பி எழும். 

கார்த்திகை பூ எடுத்து வாடா.! 
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...! 
துயிலும் இல்லங்கள் எங்கள் தேசத்தின் ஆலயங்கள்-அதில் 
வாழும் நீங்கள் எங்கள் ஆதிமூலங்கள். 
சாவினை கழுத்தினில் கட்டிக்கொண்டீர்-அந்த 
சாவினை சரித்திரமாய் ஆக்கிக்கொண்டீர். 
விடுதலைத்தீயினை விழி சுமந்தீர் 
வீர வித்துக்காளாய் மண்ணுக்குள் நீர் புதைந்தீர். 
கண்முன்னே கணப்பொழுதில் கரைந்து போனீர்-அந்த 
காலனுக்கே கணக்கெழுதி வைத்துப்போனீர். 
மண்ணின்று மறத்தமிழர் மானம் காத்தீர்-பின் 
விண் சென்றும் மங்காத விடிவெள்ளியானீர். 
கார்த்திகை பூ எடுத்து வாடா.! 
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...! 
எவன் சொன்னான் நீங்கள் எம்மோடு இல்லையென்று? 
கூட்டிவா அவனுக்கு உமைக்காட்டுகிறேன். 
சுட்டெரிக்கும் புழுதிமணல் வெளியில் உங்கள் 'கால்த்தடம்' 
கத்தும் கடலோசையில் உங்கள் 'உயிர்மூச்சு' 
காண்டாமணி ஓசையில் உங்கள் 'கணீர்க்குரல்' 
மூண்டெரியும் தீயினில் உங்கள் 'பூமுகம்' 
கல்லறையில் பூத்திருக்கும் பூக்களில் உங்கள் 'புன்னகை' 
எவனடா சொன்னான் நீங்கள் எம்மோடு இல்லையென்று? 
தாயகமே தாயாக 
தலைவனே உயிராக 
தமிழ் மானம் பெரிதாக 
தம் உயிர் தந்தவர்கள் 
எரித்தாலும் கடலினுள் கரைத்தாலும் மண்ணினில் புதைத்தாலும் 
மாவீரன் மறைவதில்லை 
மாவீரம் அழிவதுமில்லை 
கார்த்திகை பூ எடுத்து வாடா.! 
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...! 
இப்போது கொஞ்ச நாளாய் எங்கள் வானம் கறுத்துக்கிடக்கிறது. 
எப்போதும் இல்லாமல் 'வெயில்' கொளுத்தித்தியும் எறியுது. 
ஏறுக்குமாறாய் ஏதேதோ நடக்கிறது..! 
எவருக்குமே விளங்கவில்லை..! 
எங்கள் தேசம் எப்போதும் சுமக்காத 'சிலுவை' சுமக்கிறது..! 
எங்கள் சனமும் எப்போதும் சுமக்காத 'வலி' சுமக்கிறார்கள் 
எதிரி எம்மண் ஏறி ஏறி வந்து 'எல்லாம்' முடிந்ததாய் 
எக்காளம் போட்டு 'இறுமாப்பு' காட்டுகிறான். 
கண்மணிகளே..! 
கல்லறை வந்து உமைக்கட்டித்தழுவி-எங்கள் 
கவலைகள் சொல்லி கண்ணீர் வடிக்க தவிக்கிறது மனசு... 
என்ன நடக்கிறது எங்கள் தேசத்தில் இன்று? 
எவனுக்குமே விளங்கவில்லை..! 
யார் சொன்னது? 
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகளே உமக்குத்தெரியும்.! 
காற்றோடு கலந்திருக்கும் கருவேங்கைகளுக்குத்தெரியும்.! 
கார்த்திகை பூ எடுத்து வாடா.! 
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா..!

இந்நாளில் இழக்கப்பட்ட அனைத்து மனித உயிர்களின் ஆன்மாக்களுக்காக பிராத்திக்கிறேன்…!