பிரமிடுகளில் அரசர்கள், அரசிகளின் சவங்களை, ஏராளமான செல்வங்களுடன் புதைத்து வைத்திருந்ததால் பிற்காலத்தில் பலரும் உள்ளே நுழைந்து அந்த செல்வங்களை சூறையாடிச் செல்ல ஆரம்பித்தனர். எகிப்துக்குப் படையெடுத்தவர்கள், உள் நாட்டவர்கள் என பல்லாண்டுகள் வந்து கொள்ளையடித்துச் சென்ற பின் மிஞ்சியது விலை போகாத சவங்களும், சில பொருள்களும், எடுத்துச் செல்ல முடியாத பிரமிடுகளின் கட்டிடங்கள் மட்டுமே. ஆனால் பிரமிடுகளில் இருந்து கொள்ளையடித்துச் செல்ல முடியாத ஆன்மீக ரகசியங்கள் இன்னும் ஏராளமாக அவற்றில் உள்ளன என்பது உலகப் பெரியோரின் கருத்து. எனவே தான் பால் ப்ரண்டன் பெரிய பிரமிடினுள்ளே ஒரு நாள் இரவைக் கழித்து அந்த ரகசியங்களை அறிய விரும்பினார்.
பெரிய பிரமிடு அரசாங்கத்தின் சொத்தாக இருந்ததால், நுழைவுக் கட்டணம் செலுத்தி சென்று பார்த்து வரும் உரிமை பார்வையாளர்களுக்கு இருந்தாலும் அங்கு ஒரு இரவு முழுவதும் தங்க வேண்டுமானால் அரசாங்க உத்தரவு வேண்டும் என்று அவருக்குச் சொல்லப்பட்டது. எனவே அரசாங்கத்தின் பழங்காலக் கலைப் பொருள் காப்பகத்தில் சென்று தன் விருப்பத்தை அவர் தெரிவித்தார். அந்த அதிகாரி நிலவுக்குச் செல்ல பால் ப்ரண்டன் ஆசைப்பட்டது போல் அவரைத் திகைப்போடு பார்த்தார். பின் அவரை ஒரு மனநோயாளியைப் பார்ப்பது போல் பார்த்து சொன்னார். “நான் இது வரை இது போன்ற கோரிக்கையைக் கேட்டதில்லை. ஆனால் இதற்கு அனுமதி வழங்கும் அதிகாரம் என் கையில் இல்லை. உயர் அதிகாரியைப் பாருங்கள்”
எகிப்து பிரமிடின் அமானுஷ்யம் – பால் பிரண்டனின் நேரடி அனுபவம்
எகிப்தும் இந்தியாவைப் போன்றே இன்னொரு சித்தர்கள் தேசம் என்றால் அது மிகையாகாது. இந்தியாவைப் போன்றே மிகப்பழமையான நாகரிகம் வாய்ந்த எகிப்து ஆன்மீகத் தேடல்களிலும் சிறந்தே விளங்கியது. இன்றும் ஸ்பிங்க்ஸ¤ம், பிரமிடுகளும் எத்தனையோ ஆன்மீக ரகசியங்களைத் தங்களுள் மறைத்து வைத்திருக்கின்றன என்பது பலருடைய ஆழ்ந்த நம்பிக்கை.
அதுவே பால் ப்ரண்டனை அங்கும் ஈர்த்தது. பால் ப்ரண்டன் இன்னொரு தேடலை எகிப்தில் தொடர்ந்தார்.
எகிப்தில் பிரமிடுகளைக் காக்கும் காவல் தெய்வமாகக் கருதப்படும் ஸ்பிங்க்ஸ் மனிதத்தலையும், சிங்கத்தின் உடலையும் கொண்ட பிரம்மாண்டமான அமைப்பு. அது எப்போது கட்டப்பட்டது என்பதை இன்றும் யாராலும் சரியாக ஊகிக்க முடியவில்லை. கிறிஸ்து பிறப்பதற்கும் முன் சுமார் 2500 ஆண்டுகளிலிருந்து 3000 ஆண்டுகளுக்கு முன்பிற்குள் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் அனுமானிக்கிறார்கள். மிகப்பழமை வாய்ந்த அந்த ஸ்பிங்க்ஸ் தேவதை மனிதனின் நுண்ணறிவையும், சிங்கத்தின் தேகபலத்தையும் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. அது ஏழு முறை பாலைவன மணலால் புதையுண்டது என்றும் ஏழு முறை அந்த மணல் விலகி மீண்டது என்றும் சொல்லப்படுகிறது
பால் ப்ரண்டன் ஸ்பிங்க்ஸ் மற்றும் பெரிய பிரமிடு இரண்டிலிருந்தும் ஞானச் செய்தி பெற வேண்டும் என்று விரும்பினார். ஸ்பிங்க்ஸ் முன் பாலைவன மணலில் ஒரு நாளிரவு முழுவதும் தனியாக அமர்ந்து தியானம் செய்த பால் ப்ரண்டன் கடைசியில் அதிகாலை நேரத்தில் ஸ்பிங்க்ஸிடமிருந்து ஒரு செய்தி கிடைத்ததாகக் கூறுகிறார். “நீ உருவாகி அழியும் சதைகளால் ஆன உருவமல்ல மனிதனே. நீ அழிவில்லாத ஆத்மா! உன்னுடைய இதயத்தில் அது நீ கண்டடையக் காத்திருக்கிறது, இந்தப் பாலைவன மண்ணில் நான் காத்திருப்பதைப் போல். அதனால் உன்னையே நீ அறிவாய்…”
அடுத்ததாக உலக அதிசயங்களில் ஒன்றான பெரிய பிரமிடின் உள்ளே ஒரு நாள் இரவைக் கழிக்க எண்ணினார் பால் ப்ரண்டன். இங்கே பிரமிடுகளைப் பற்றி சில தகவல்களை அறிந்து கொள்வது நல்லது. பெரிய பிரமிடு ஒவ்வொரு புறமும் 756 அடி நீளமும், 450 அடி உயரமும் கொண்டது. சுமார் இரண்டரை டன் எடையுள்ள கற்கள் 23,00,000 பயன்படுத்தி கட்டப்பட்ட பிரம்மாண்டமான அமைப்பு அது. சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்தது. அக்காலத்தில் பிரம்மாண்டமான அமைப்புகளை அளக்க சரியான அளவுகோல் இல்லை என்றாலும் எவ்வளவு கச்சிதமாகக் கட்டப்பட்டிருக்கிறது என்றால் ஒரு பக்கத்திற்கும் மறுபக்கத்திற்கு இடையே உள்ள வித்தியாசம் எட்டு அங்குலங்களுக்கும் குறைவாகவே இருக்கிறது. இது இன்றைக்கும் கட்டிட வல்லுனர்களை வியக்க வைக்கிறது.
அந்த உயர் அதிகாரி “அனுமதிக்க முடியாது” என்று உறுதியாகச் சொன்னார். அவருடைய பணிக்காலத்தில் இது போன்ற ஒரு கோரிக்கை வந்ததோ, அனுமதிக்கப்பட்டதோ இல்லை என்றார். பால் ப்ரண்டன் தன் கோரிக்கையில் விடாப்படியாக நிற்க அவர் “இரவு வேளையில் தங்குவது போலீசார் அதிகாரத்தில் தான் வருகிறது. அவர்களைப் போய்ப் பாருங்கள்” என்றார்.
போலீசாரும் இந்த வினோத கோரிக்கையை ஏற்க முடியாமல் தங்கள் தலைமை அதிகாரியிடம் அனுப்ப அவரும் திகைத்து முடிவெடுக்க ஒரு நாள் தேவை என்றும் மறுநாள் வந்து பார்க்கும் படியும் சொன்னார். மறுநாள் அவர் மறுபடியும் பழங்கால கலைப் பொருள் காப்பகத்தையே அணுகச் சொன்னார். கடைசியில் கெய்ரோ நகர ஜென்ரல் கமாண்டண்டைச் சென்று பால் ப்ரண்டன் தன் கோரிக்கையைச் சொல்ல அவர் பிரமிடுகளைக் காக்கும் போலீஸ் உயர் அதிகாரிக்கு அனுமதி வழங்குமாறு எழுதி அனுப்பினார்.
அந்தப் போலீஸ் அதிகாரி “நாங்கள் தினமும் மாலையில் பிரமிடின் நுழைவாயிலைப் பூட்டி வருகிறோம். நீங்கள் உள்ளே செல்ல வேண்டுமென்றால் மறுநாள் காலை வரை உள்ளேயே இருக்க வேண்டி வரும். சுமார் 12 மணி நேரம் உள்ளே இருக்க ஒத்துக் கொள்கிறீர்களா?”
பால் ப்ரண்டன் ஒத்துக் கொண்டார். மறுநாள் மாலை பால் ப்ரண்டன் டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு பிரமிடினுள் நுழைந்தார். ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர் ஒருவர் அவர் உள்ளே சென்றவுடன் நுழைவாயிலைப் பூட்டிக் கொண்டு வெளியே பூட்டிக் கொள்ள தன்னந்தனியனாய் பால் ப்ரண்டன் தன் பயணத்தைத் தொடங்கினார். அந்தப் பிரமிடுக்குள் பல பாதாளச் சுரங்கங்கள் இருந்தன. சில மிகவும் குறுகலாய் இருந்தன. சில இடங்களில் அவர் தவழ்ந்து போக வேண்டி இருந்தது. உள்ளே சில இடங்களில் வௌவால்களும், எலிகளும் அவருக்குத் துணையாய் இருந்தன. வேறொருவராக இருந்திருந்தால் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்து வெளியேற நினைத்திருப்பார். ஆனால் பால் ப்ரண்டன் மனம் தளராமல் அரசனுடைய உடலை வைத்துள்ள பிரபலமான சேம்பரை அடைந்தார்.
அங்கு சென்ற அவர் அங்கு சென்றதும் தான் கொண்டு வந்திருந்த தொப்பி, தேனீர் நிறைந்த ·ப்ளாஸ்க், தண்ணீர், நோட்டுப்புத்தகம், பேனா எல்லாவற்றையும் கீழே வைத்து விட்டு சம்மணமிட்டு அமர்ந்து தன் டார்ச் லைட்டை அணைத்து விட்டார். உடனே இருள் சூழ்ந்தது. மயான அமைதி அங்கு நிலவியது. நேரம் செல்லச் செல்ல குளிர் அதிகரிக்க ஆரம்பித்தது. ஆனால் அதைப் பொருட்படுத்தாது அமைதியாகக் காத்திருந்தார். நேரம் செல்லச் செல்ல ஏதோ அமானுஷ்ய சக்திகள் தன்னைச் சுற்றி உலவுவதை அவரால் உணர முடிந்தது. அவர் அந்த இருட்டில் விழிப்புணர்வோடு சூட்சுமமாகக் கவனித்த போது அது கற்பனையல்ல நிஜம் என்பதை அவரால் உணர முடிந்தது. பயத்தில் அவர் உடல் மேலும் சில்லிட்டது.
பிரமிடின் உள்ளே தனிமையில் நள்ளிரவின் கும்மிருட்டில் அமர்ந்திருந்த பால் ப்ரண்டனுக்கு ஏதோ சக்திகளின் நடமாட்டம் இருப்பதை உணர முடிந்தது. சில நாட்கள் விரதமும் தியானமும் இருந்து அவன் தன் புலன்களை கூர்மைப்படுத்தி இருந்ததால் அந்த சக்திகள் துஷ்ட சக்திகள் என்பதையும் அவரால் மிகத் தெளிவாக உணர முடிந்தது…
இப்போது அவர் தனிமையில் இல்லை, உடன் துஷ்ட சக்திகளும் உள்ளன என்பதை உணர்ந்த போது அவர் பிரமிடுக்குள்ளே போகப் போவதாகச் சொன்ன போது ஒரு இளம் அரபு நண்பன் எச்சரித்தது நினைவுக்கு வந்தது. “அங்கு ஒவ்வொரு அங்குலமும் தீய சக்திகளாலும் ஆவிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. அவை ஒன்றல்ல இரண்டல்ல ஒரு பட்டாளமே இருப்பதால் இந்த விஷப் பரிட்சைக்கு நீங்கள் போகாமல் இருப்பது நல்லது…”
சிறிது நேரத்தில் அவரால் அந்த துஷ்ட சக்திகளின் மாய உருவங்கள் கூட அலைகளாய், நிழலாய் தென்படத் துவங்கியது. ஓரிரு உருவங்கள் அவர் முகத்தின் வெகு அருகில் வந்து அவரை உசுப்புவது போல் தோன்றியது. பால் ப்ரண்டன் இரவின் தனிமைக்குப் பெரிதும் பழக்கப்பட்டவர் என்றாலும் இந்த அனுபவம் அவர் இரத்தத்தை உறைய வைத்தது. அந்த சக்திகள் அவரை உட்கார்ந்த இடத்தை விட்டு எழுப்புவதற்கு முயற்சிப்பதாக அவருக்குத் தோன்றியது. ஒரு கட்டத்தில் பக்கத்தில் வைத்திருந்த டார்ச் விளக்கைப் போட்டு அந்த சக்திகளை விரட்டுவது நல்லது என்று தோன்றினாலும் பிரமிடுகளின் உள்ளே
என்ன தான் இரவில் நிகழ்கின்றது என்பதை அறியும் வாய்ப்பை இழந்து விடுவோம் என்ற எண்ணம் அவரை அவ்வாறு செய்யாமல் தடுத்தது.
ஒரு கட்டத்தில் அந்த சக்திகளின் பலம் உச்சத்திற்கு சென்றதாய் பால் ப்ரண்டனுக்குத் தோன்றியது. ஆனாலும் ஒரு அசாதாரண மனபலத்துடன் பால் ப்ரண்டன் தாக்குப் பிடித்தார். திடீரென்று அந்த துஷ்ட சக்திகளின் போக்குவரத்து நின்று போயிற்று. அவை எல்லாம் மாயமாக மறைந்து போயின. அங்கு ஒரு வித மயான அமைதி நிலவியது. பால் ப்ரண்டனுக்கு சிறிது நேரம் கழித்தே காரணம் விளங்கியது.
இரு புதிய உருவங்களின் அருகாமையை பால் ப்ரண்டன் உணர்ந்தார். மிகவும் அமைதியான தெய்வீக சக்தி உடையவையாய் அவை இருந்தன. துஷ்ட சக்திகளைப் போன்ற தெளிவில்லாத நிழல்களாகவோ, அலைகளாகவோ இல்லாமல் அந்த இரண்டு உருவங்களும் ஓரளவு தெளிவாகத் தெரிந்தன. பழங்கால எகிப்திய குருமார்கள் போலத் தெரிந்த அவர்களிடத்தில் விவரிக்க முடியாத தூய்மையை அவர் உணர்ந்தார். அவர்களைச் சுற்றி ஒரு ஒளிவெள்ளத்தை பால் ப்ரண்டன் கண்டார்.
வந்தவர்கள் இருவரும் பால் ப்ரண்டன் அருகில் வந்து சிலைகளைப் போல் நின்றனர். இருவரும் தங்கள் கைக¨ள் மார்பிலே கட்டிக் கொண்டு நின்று பால் ப்ரண்டனை ஊடுருவிப் பார்த்தார்கள். அடுத்ததாக முதலில் மிக அருகில் நின்றவர் உதடுகள் அசைவது தெரிந்தது. ஆனால் வார்த்தைகள் ஒலியாக வெளிவரவில்லை என்று புரிந்தாலும் பேசுவது தெளிவாக பால் ப்ரண்டன் மூளையை எட்டியது.
“ஏனிங்கு வந்தாய்? அபூர்வ சக்திகளைப் பெற வந்தாயா? மானிடர்களின் வழியில் கிடைப்பது போதவில்லையா?”
அந்த வார்த்தைகள் எண்ணங்களாக தன் மூளையில் பதியவில்லை என்பதையும், அவருடைய குரலாய் தான் மூளையில் பதிகிறது என்பதையும் புரிந்த பால் ப்ரண்டனுக்கு அது எப்படி என்பது தான் தெரியவில்லை. பால் ப்ரண்டன் சொன்னார். “போதவில்லை”
“திரும்பிப் போய் விடு. இங்கு ரகசியங்களைத் தேடி வந்தவர்கள் பைத்தியம் பிடித்துப் போயிருக்கிறார்கள்”
“நான் தேடி வந்ததை அறியாமல் போக முடியாது”
“எங்களை நெருங்கியவர்கள் சொந்த பந்தங்களை இழந்து தனியராகப் போயிருக்கிறார்கள். அது உனக்கு சம்மதமா?”
“எனக்குத் தெரியவில்லை” என்பதை உண்மையில் பால் ப்ரண்டன் ஒத்துக் கொண்டார். ஆனாலும் திரும்பிப் போக முனையவில்லை.
“சரி அப்படியே ஆகட்டும். நீ தேர்ந்தெடுத்த செயலிற்கான பலனை நீயே அனுபவித்தாக வேண்டும்” என்ற அந்த முதல் உருவம் அங்கிருந்து உடனடியாக மறைந்தது. அடுத்த உருவம் பால் ப்ரண்டனை நெருங்கியது. இரண்டாவது உருவத்தின் முகம் மிக மிக வயதானதாக இருந்தது. எவ்வளவு வயதிருக்கும் என்பதை பால் ப்ரண்டனால் அனுமானிக்க முடியவில்லை.
இரண்டாவது உருவத்திடம் இருந்தும் வார்த்தைகள் குரலுடன் பால் பரண்டன் மூளையில் பதிந்தன. “மகனே. இரகசிய சக்திகளின் தலைவர்கள் தங்கள் கைகளில் உன்னை எடுத்துக் கொண்டு விட்டார்கள். நீ ஞான மண்டபத்திற்கு தற்போது அழைத்து செல்லப்படவிருக்கிறாய். நீ அமர்ந்திருக்கும் இந்தக் கல்லில் காலை நீட்டி மல்லாக்கப் படுத்துக் கொள்…”
பால் ப்ரண்டனுக்கு அதன்படி நடப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அப்படியே படுத்துக் கொண்டார். ஆனால் அதன் பின் நடந்ததென்ன என்று பால் ப்ரண்டனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அவருடைய தசைகள் எல்லாம் இறுக ஆரம்பித்தன. அவருடைய உடல் முழுவதும் பக்கவாதம் வந்தது போல் செயல் இழக்க ஆரம்பித்தது. முழு உடலும் பாறையாக கனக்க ஆரம்பித்தது. உடலில் இருந்து உணர்வுகள் மங்க ஆரம்பித்தன. மரணம் நெருங்குவது போல் இருந்தது. ஆனால் பால் ப்ரண்டனின் தத்துவார்த்தமான பக்குவம் அதற்கு பயப்படவில்லை.
ஒருவித இனம் புரியாத சிலிர்ப்பு தண்டுவடத்தில் கீழிருந்து மேலாகப் பரவி கடைசியில் மூளையில் மட்டும் ஏதோ உணர்வு தங்கியது. பால் ப்ரண்டன் நினைவை இழக்க ஆரம்பித்தார். நினைவினை இழக்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் “நாளை என்னுடைய பிணத்தை இந்தப் பிரமிடினுள் பார்ப்பார்கள். இதுவே என் முடிவு” என்ற எண்ணம் வந்து போயிற்று.
உடலெல்லாம் மரத்தாலும் தலையில் மட்டும் லேசான உணர்வு சிறிது நேரம் தங்கியிருந்தது. ஏதோ சூறாவளியில் சிக்கியதைப் போல் ஒரு உணர்வு மூளையில் தங்கி ஏதோ ஒரு துளை வழியாக வெளியேறுவதை பால் ப்ரண்டன் உணர்ந்தார். பின் உடலிலிருந்து பரிபூரண விடுதலை பெற்றது போல் உணர்ந்தார். உடலின் கனம் இல்லாமல் லேசானதைப் போன்று தோன்றிய அந்த நேரத்தில் உடல் தானல்ல என்பது அவருக்குப் புரிந்தது. இவ்வளவு நாள் தான் அடைபட்டிருந்த சிறையாகவே உடல் தோன்றியது. உடலை விட்டு வெளியே வந்திருந்த போதும் இன்னும் எல்லாவற்றையும் காணக் கூடிய சக்தியும், உணரக் கூடிய சக்தியும் தன்னை விட்டு போய் விடவில்லை என்பது புரிந்த போது அவருக்குத் திகைப்பு மேலிட்டது. இன்னும் சொல்லப் போனால் முன்னெப்போதையும் விட உணர்வுகள் கூர்மை பெற்றது போல் தோன்றியது.
அவரால் அவர் உடலைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கண்கள் லேசாக மூடிய, இரண்டு கைகளையும் மடித்து மார்பில் வைத்திருந்த தன் உடலை அவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஏக காலத்தில் நிற்பதைப் போலவும் மிதப்பதைப் போலவும் அவருக்குத் தோன்றியது.
அந்த உடலிலிருந்து ஏதோ மங்கலான வெளிர் ஒளி கிளம்பி பார்த்துக் கொண்டிருக்கும் அந்த ஆவி நிலை வந்திருப்பதை அவர் கண்டார். அது என்ன என்பதை பால் ப்ரண்டனால் சொல்ல முடியவில்லை. சுற்றிலும் உள்ள சுவர்களில் கூட மெல்லிய நிலவொளியாய் அது பிரதிபலிக்கக் கண்டார். உடலில்லாமல் உணர்வுகள் மட்டுமாய் ஒரு மிதவை நிலையில் பால் ப்ரண்டன் இருந்தார். பழங்கால எகிப்தியர்கள் மனிதனின் ஆன்மாவை பறவை வடிவத்தில் பல கல்வெட்டுகளில் வரைந்திருப்பதன் பொருள் உயரத்தில் இருக்கும் போது புரிகிறது போல இருந்தது.
உடலை விட்டுப் பிரிந்திருந்த அந்த நேரத்தில் எடையில்லாத மிகவும் லேசானதொரு நிலையை பால் ப்ரண்டன் உணர்ந்தார். தன் உடலைப் பார்க்கையில் பெரியதொரு உண்மை அவருக்குப் புலப்பட்டது. “இது தான் மரண நிலை. உடலை விட்டுப் பிரியும் போது உண்மையாக நான் சாவதில்லை. உடலை விட்டுப் பிரிந்தும் நான் இருக்க முடியும் என்ற உண்மை நிரூபணம் ஆகி விட்டதால் நான் நம்புகிறேன்.” அதே நேரத்தில் “இந்த உடலையா நான் “நான்” என எண்ணி இருந்தேன்?” என்ற திகைப்பும் அவருள் எழுந்தது.
புவியீர்ப்பு விசை பாதி அவரைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, பாதி அந்தரத்தில் மிதப்பது போலிருக்க அந்த நிலையில் அவருக்கு ஆத்மஞானம் கிடைத்தது. “அர்த்தமில்லாத இந்த சதைக் குவியல் நான் அல்ல உண்மையில் இந்த உடல் என்னை இத்தனை காலம் சிறை வைத்திருந்தது” என்ற எண்ணம் அவருக்கு பலப்பட்டது. அப்போது உடன் இருந்த அந்த முதிய குரு அவருடைய எண்ணத்தைப் படித்தது போல சொன்னார். “உண்மையே. மிகப் பெரிய பாடத்தை நீ கற்றாய் மகனே. ஆத்மா அழிவில்லாதது!”
அந்த நேரத்தில் பால் ப்ரண்டன் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்து போன அரைகுறையாய் நினைவிருந்த ஒரு பெண்ணின் முகத்தையும், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த அவர் நண்பர் ஒருவர் முகத்தையும் ஒரு விபத்தில் அகால மரணமடைந்த ஒரு குழந்தையின் புன்னகை தவழும் முகத்தையும் அண்ட வெளியில் பார்த்தார். அந்த மூன்று முகங்களும் அவரைப் பார்த்தன, பேசின. மிகக் குறுகிய காலமே அவரிடம் பேசிய அந்த முகங்கள் உருகி மறைந்தன.
அந்த குரு அவரிடம் சொன்னார். “நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு வாழ்வது போல் அவர்களும் வாழ்கிறார்கள் மகனே. இங்கு இறைவன் படைத்த அனைத்து உயிர்களின் சரித்திரமும் பதிவாகியுள்ளது. மனித இனத்தின் மறைந்து போன ஆரம்ப கால வம்சாவழியினரின் செயல்கள் எல்லாம் கூட இங்கு பதிவாகியுள்ளது. அட்லாண்டிஸ்* நகரம் கற்பனையல்ல. அந்த நகரம் அழிந்ததும் அந்நகர மக்கள் இறைவனை மறந்து வெறுப்பு, தீமைகளின் வழி சென்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் தான். சுயநலமும், ஆன்மீகக் குருட்டுத்தனமும் தான் அட்லாண்டிஸைக் கடலுக்குள் மூழ்க வைத்தது. இறைவன் அன்பு மயமானவன். ஆனால் அவன் ஏற்படுத்திய விதிகளின் படியே உலகம் இயங்குகிறது. அந்த விதிகளின்படி செய்த தவறுகளுக்கான தண்டனையிலிருந்து யாரும் தப்பி விட முடியாது. இங்கிருந்து செல்லும் போது இந்த செய்தியை மனிதகுலத்திற்கு எடுத்துக் கொண்டு போ மானிடனே”
(*அட்லாண்டிஸ் நகரம் குறித்து இந்த இடத்தில் நாம் தெரிந்து கொள்வது நல்லது. சகல சுபிட்சங்களுடனும் அட்லாண்டிஸ் என்ற தீவு நகரம் சுமார் 11000 ஆண்டுகளுக்கும் முன்னால் இருந்ததாக கிரேக்க ஞானி ப்ளேட்டோ கி.மு.360ல் கூறினார். மிக சக்தி வாய்ந்த மனிதர்கள் வசித்த அந்தத் தீவில் எந்த இயற்கை வளத்திற்கும் குறைவிருக்கவில்லை. மனிதர்கள் அனைவரும் மிக அறிவாளிகளாகவும், குணசீலர்களாகவும் இருந்தனர். அவர்கள் வணிகம் ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் வரை நீண்டதென்றும் அவர்கள் அந்தக் கண்டங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் காலம் செல்லச் செல்ல அவர்கள் தங்கள் பண்புகளிலிருந்தும், அறிவார்ந்த செயல்களிலிருந்தும் விலகிச் செல்ல ஆரம்பித்த பின் அவர்களுடைய சிறப்பு குறைய ஆரம்பித்தது. சுயநலம், பேராசை, பொறாமை என்ற வழிகளில் அவர்களின் தவறுகள் மிக அதிகமாகிய போது அந்தத் தீவு கடலில் மூழ்கி அழிந்தது என்று சொல்கிறார்கள். பலரும் கற்பனை என்றும் கதை என்றும் நினைத்த அட்லாண்டிஸ் உண்மையில் இருந்தது என்று சொல்லும் ஆராய்ச்சியாளர்களும் இருக்கிறார்கள். அதையே அந்தக் குருவும் இங்கே சொல்கிறார்.)
“இங்கே வரும் எல்லா மனிதர்களுக்கும் இந்த இரகசியங்கள் விளக்கப்படுவதில்லை. ஆனால் உன் ஆர்வமும், விளக்கினால் புரிந்து கொள்ளப்படும் பக்குவமும் உனக்கு இருப்பதால் மட்டுமே உனக்கு இந்த இரகசியங்கள் விளக்கப்படுகின்றன”
பால் ப்ரண்டன் அடுத்த கணம் புவியீர்ப்பு விசை முழுவதும் தனக்கு அற்றுப் போவதை உணர்ந்தார். முழுவதுமாய் காற்றில் மிதப்பது போல இருந்தது.
“உன்னை ஒரு ரகசிய ஞான கருவூலத்திற்கு அழைத்துப் போகப் போகிறேன்….”
அப்படிச் சொன்னவுடன் பால் ப்ரண்டன் ஆர்வம் அதிகப்பட்டது. உடனடியாக அந்த இடத்திற்குச் செல்ல விரும்பினார் அவர். அந்தக் குருவின் ஆவி அதைப் படித்தது போல இருந்தது. “எல்லாவற்றிற்கும் ஒரு காலம் இருக்கிறது மகனே அவசரப்படாதே. வா என்னுடன்” என்றார் அந்த குரு.
அடுத்த கணம் பால் ப்ரண்டன் ஏதோ கோமாவில் இருப்பவர் போல தன் பெரும்பாலான உணர்வுகள் ஸ்தம்பித்தது போல் உணர்ந்தார். அடுத்ததாக அவர் நினைவு திரும்பிய போது அவர் வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
பால் ப்ரண்டன் சென்றடைந்த பாதை மங்கலாய் ஒளிபடர்ந்ததாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்த போது விளக்கையோ, சன்னல்களையோ அவர் காணவில்லை. பின் எங்கிருந்து ஒளி வருகிறது என்பதை அவரால் ஊகிக்க முடியவில்லை.
தன்னைப் பின் தொடர்ந்து வரும்படி அந்த மதகுருவின் ஆவி அவரிடம் சொன்னது. அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் “பின்னால் மட்டும் திரும்பிப் பார்க்காதே. தலையைத் திருப்பாதே” என்றும் அவருக்குக் கட்டளையிட்டது. பால் ப்ரண்டனுக்கு அது பிரமிடுக்குள் உள்ள ரகசியப்பாதை என்று தோன்றியது. கீழ் நோக்கிச் சென்ற அந்தப் பாதையின் முடிவில் தூரத்தில் ஏதோ கோயில் போன்ற அமைப்புடைய வாயில் இருந்தது. அவர் பிரமிடுக்குள் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்திருந்தாலும் இந்தப் பாதையையும் தூரத்தில் தெரிந்த அந்தக் கோயில் வாசல் போன்ற ஒரு அமைப்பையும் அவர் பார்த்ததாக அவருக்கு நினைவில்லை. இந்த ரகசியப்பாதை எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றறியும் ஆவல் அவருக்கு அதிகமாயிற்று. அந்த மதகுரு ஆவி சொன்னதைப் பொருட்படுத்தாமல் பின்னால் அவர் திரும்பிப் பார்த்தார். அந்த நீண்ட பாதையின் இறுதியில் நுழைவாயில் எதுவும் இருக்கவில்லை. ஏதோ ஒரு நுழைவிடம் போல் தெரிந்த இடம் சதுரமான கற்களால் மூடப்பட்டிருந்தது.
ஆனால் திரும்பிப் பார்த்ததன் தண்டனையாகவோ என்னவோ பால் ப்ரண்டனை ஏதோ ஒரு பெரும் சக்தி பின்னுக்கு இழுத்தது. அடுத்த கணம் அவர் உடல் கிடந்திருந்த அந்த ஆரம்ப இடத்திற்கே வந்து சேர்ந்தார். பால் ப்ரண்டன் திரும்பிப் பார்க்காதிருந்திருந்தால் அவர் ரகசிய ஞானக் கருவூலத்திற்கு சென்று காணும் பாக்கியம் கிடைத்திருக்கலாம். ஆனால் திரும்பிப் பார்த்த ஒரு தவறு அவரை அந்த வாய்ப்பை இழக்க வைத்தது.
தனது உடலைப் பார்த்தபடி இருந்த அவரை பெருத்த ஏமாற்றம் ஆட்கொண்டது. அந்த மதகுருவின் மெல்லிய குரல் அவருக்குத் தெளிவாகக் கேட்டது. “மகனே ரகசியப்பாதையின் வாசலை நீ காண்பது ஒரு பெரிய விஷயம் அல்ல. உன் மனதில் உள்ள ரகசிய ஞானக் கருவூலத்திற்கு உன்னை அழைத்துச் செல்லக் கூடிய ரகசியப்பாதையை நீ காண்பதே முக்கியம். இந்தப் பிரமிடின் ரகசியம் உன் ஆத்மாவின் ரகசியமே. உன் ஆத்மாவில் எல்லா ரகசியங்களும் புதைந்துள்ளன. பிரமிடு சொல்வதெல்லாம் மனிதனை தனக்குள்ளே கவனத்தைச் செலுத்தச் சொல்வது தான். அவன் இதுவரை அறிந்திராத அவனுக்குள் உள்ள மையப்புள்ளியில் அவன் ஆத்மரகசியத்தை அறிவதன் மூலம் அனைத்து ஞானத்தையும் பெறவே மனைதனைப் பிரமிடு வலியுறுத்துகிறது. போய் வருகிறேன்”
ஏதோ ஒரு சக்தி பால் ப்ரண்டனை அவருடைய உடலுக்குள் பலமாக ஈர்க்க அவர் மறுபடியும் தன் உடலுக்குள் நுழைந்தார். மரத்துப் போயிருந்த உடலை சிறிது சிறிதாக உணர ஆரம்பித்தார். இருள் சூழ்ந்திருந்த பிரமிடின் அந்த அறைக்குள் தனியாக அவர் இருப்பதைக் கண்டார். மதகுருவின் ஆவியைக் காண முடியவில்லை. இருட்டிலும் தெளிவாகப் பார்க்க முடிந்த நிலையும் போயிற்று.
அதிர்ச்சியில் இருந்து மீண்ட அவர் டார்ச்சைத் தேடி எடுத்து போட்டுப் பார்த்த போது எல்லாம் அவர் முன்பு விட்டுப் போயிருந்த நிலையிலேயே இருந்தன. கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தார். மணி சரியாக பன்னிரண்டு. பொழுது புலரும் வரை தன் அனுபவங்களைக் குறித்து பால் ப்ரண்டன் சிந்தித்தபடி இருந்தார். பொழுது புலர்ந்து போலீஸ்காரர் வந்து அவரை அழைத்துக் கொண்டு போய் வெளியே விட்டார்.
மதகுரு கடைசியில் பால் ப்ரண்டனிடம் சொன்ன அறிவுரை, நம் நாட்டில் உபநிஷத்துக்கள் சொல்லும் அறிவுரையே என்பது நம் ஆன்மீக நூல்களைப் படித்தவர்களுக்கு விளங்கும். The End.
Research Articles on Egypt written by London swaminathan in this blog:–
Did Indians Build Egyptian Pyramids? (Posted on 27 August 2012)
Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda (Posted on 26 September 2012)
Hindu Gods in Egyptian Pyramids (Posted on 16 September 2012)
Vishnu in Egyptian Pyramids (Posted on 5 September 2012)
Vedas and Egyptian Pyramid Texts (Posted on 29 August 2012)
Why did Sumeria and Egypt worship Indra? (Posted on 14 September 2014)
Vedic Echo in Sumer and Egyptian Concept of Dreams ( Posted on 31 July 2015)
Flags:Indus Valley – Egypt Similarity (Posted on 15 October 2012)
Human Sacrifice in Indus Valley and Egypt (Posted on 31-10-2012)
Magic in Hindu,Sumer, Egyptian Cultures (Posted on 2 August 2015)
Mata and Pita in Egyptian Religion (Posted on 17 November 2014)
More Tamil and Sanskrit Names in Egypt (Posted on 15 November 2014)
Hindu Mudras in Ancient Egyptian and Sumerian sculptures (posted on 7-10-2012)
Tirumular in Egyptian Pyramids (in Tamil Egiptil Tirumular Karuththukkal posted on 23-11-2013)
எகிப்தில் திருமூலர் கருத்துக்கள் ( 23 நவம்பர் 2013)