வியாழன், 5 செப்டம்பர், 2013

ஒருவனின் மரணம், இன்னொருவனுக்கு உணவு. ஆதலினால் போர் செய்வீர்....


மத்திய கிழக்கில் ஏதும் பிரச்சனை என்றால் அடுத்த நொடி மூக்கை நுழைக்கும் அமெரிக்கா, மேற்குலகம் மற்றும் ஜ.நா சபைக்கு...


கஷ்மீர், கொலம்பியா, பலஸ்தீனம், குர்திஸ்தான், மியன்மார், திபெத், ஈழம், நாகலாந்து, பாஸ்க், சீனாவின் ஷின்-ஷியாங், பல ஆபிரிக்க தேசங்கள் மற்றும் இன்னும் வெளிஉலக விளம்பரம் இல்லாமல் பல தசாப்த கால வரலாற்றைக் கொண்டுள்ள சுதந்திர தேசங்களின் பிரச்சனைகளில் ஏன் நீதியாக நடந்து கொள்வதில்லை! இங்கு சொல்லப்படுகின்ற அனைத்து தேசங்களிலும் எண்ணை வயல்கள் இல்லாத குறையா, இல்லை வளப்பற்றாக்குறையா? உலகம் பன்னாட்டு நிறுவனங்களின் குறுகிய நலன் சார்ந்த உலகமயமாவதை எடுத்துக் காட்டுகின்றது. மூலதனத்துக்குப் பைத்தியம் முற்றும் போது, ஏகாதிபத்திய யுத்தங்கள் அரங்கேறுகின்றன.  (தொடரும்...)


எங்கும் அமைதி பற்றியும், சமாதானம் பற்றியும் உரத்துப் பேசுகின்றனர். எங்கும், அனைத்துத் துறைகளிலும் படுமோசமான வன்முறையே நவீனமாகின்றது. இதை நியாயப்படுத்தி அல்லது மூடிமறைக்கும், முதுகு சொறியும் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், தமது சொந்த ஜனநாயகத்தின் பெயரால் மக்களின் முதுகில் ஏறி அமருகின்றனர். அமைதியான, சமாதானமான உலகம் பற்றி, வண்ணவண்ணமான கோட்பாடுகளை முன்வைக்கின்றனர். மனித இனத்தைச் சுரண்டிக் கொழுக்கும் மனிதவிரோத, சமூகவிரோத செயலையிட்டு, இந்த ஜனநாயக எழுத்தாளர்கள் யாரும் எப்போதும் கவலைப்படுவது கிடையாது. இந்தக் கொடுமையை எதிர்த்துப் போராடுவதையே, இவர்கள் கோட்பாட்டு ரீதியாக எப்போதும் மறுத்துரைக்க முனைகின்றனர். சமாதானமாகச் சுரண்டும் உலக அமைதிக்கும், சுதந்திரமாகச் சுரண்டும் உரிமைக்கும் எதிராகப் போராடுபவர்களையே, சமாதானத்தின் எதிரிகளாக இவர்கள் சித்தரிப்பவர்களாக உள்ளனர். மனித உழைப்பு மற்றொருவனால் சுரண்டப்படுவதே, உலகின் சமாதானத்துக்குச் சவாலாகின்றது என்பதை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை அல்லது சிலர் சடங்குக்காக அதை ஒத்துக் கொண்டு அதற்கு எதிராகவே எதார்த்தத்தில் உள்ளனர். இதை இட்டு இவர்கள் கவலை கொள்ளாத ஒரு நிலையிலும், ஏகாதிபத்தியத்துக்கு இடையில் மூலதனம் உருவாக்கும் பிரதான முரண்பாடு, அமைதிக்கும் சமாதானத்துக்கும் எதிராக செயல்படுவதை மூடிமறைப்பதே இன்றைய இலட்சியமாகி விடுகின்றது. இந்த மூலதனத்துக்கு இடையிலான மோதல், மனித இனத்தையே அழித்துவிடும் என்ற உண்மையைக் கூட கண்டு கொள்வதை திட்டமிட்டே மூடி மறைக்கின்றனர். இன்று மூலதனத்துக்கு இடையிலான மோதல் உலக அமைதிக்கும், சமாதானத்துக்கும் ஆபத்தான ஒன்றாகவே வளர்ச்சியுற்று வருகின்றது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முதல் இரண்டு உலக யுத்தங்களும், மூலதனத்துக்கு இடையேதான் நடந்தன. ஏகாதிபத்திய சகாப்தம் முதல் இன்று வரையில், நாடுகளுக்கு உள்ளேயான வர்க்கப் போராட்டம் அல்லாத அனைத்து மோதல்களும் கூட ஏகாதிபத்திய மூலதனத்துக்கு இடையிலானதாகவே இருந்தது. ஆனால் இதை வெறும் தனிநபர்கள், சிறு குழுக்கள் சார்ந்தாகக் கட்டுவது, மூலதனத்தின் தந்திரமான விளையாட்டாக உள்ளது. இதையே பற்பல ஜனநாயக எழுத்தாளர்களும் பிரதிபலித்து, எதிரொலிக்கின்றனர்.


இந்த மோசடித்தனமான கூச்சல் அன்று முதல் இன்று வரை ஒரேவிதமாக பல வண்ணத்தில் அரங்கேறுகின்றது. லெனின் இதைத் தனது காலத்தில் எதிர் கொண்ட போதே, அதை அம்பலப்படுத்தினார். ""சர்வதேசக் கார்ட்டல்கள், மூலதனம் சர்வதேசியமயமாக்கப்படுதலின் மிகவும் எடுப்பான வெளிப்பாடுகளில் ஒன்றாகுமாதலால், முதலாளித்துவத்தில் தேசங்களிடையே சமாதானம் மலர்வதற்கான நம்பிக்கையை அளிப்பனவாகும் என்ற கருத்தைச் சில முதலாளித்துவ எழுத்தாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். தத்துவார்த்தத்தில் இந்தக் கருத்து அறவே அபத்தமானது, நடைமுறையில் குதர்க்க வாதமும், படுமோசமான சந்தர்ப்பவாதத்தை நேர்மையற்ற முறையில் ஆதரித்து வாதாடுவதுமே ஆகும் என்றார். இந்த உண்மை இன்று பரந்த தளத்தில், ஜனநாயகத்தின் பெயரில் நடக்கின்றது. சமாதானம், அமைதி, சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் எதிர்களாக, மக்களுக்காகப் போராடுபவர்கள் மீது அவதூறாக சுமத்தப்படுகின்றது. உலகின் எஞ்சி இருக்கும் சுதந்திரம், ஜனநாயகம் என அனைத்தையும் படிப்படியாக அழித்துவரும் மூலதனம், இதை மற்றவர்கள் மேல் சுமத்தி விடுகின்றனர். யாரிடம் வாழ்வதற்கான அடிப்படையான வாழ்க்கை ஆதாரப் பொருட்கள் தாராளமாக உள்ளனவோ, அவர்கள் மட்டும் தான், குறைந்தபட்சம் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை நினைத்துப் பார்க்கமுடியும். மற்றவனிடம் கையேந்தி நிற்கும் ஒருவன் எப்படி சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை நினைத்துப் பார்க்க முடியும். தான் நினைத்ததைச் சொல்லவும், அதை எழுதவும் கூட முடியாத வகையில், மூலதனம் அனைத்து ஊடக வடிவங்களையும் கூடக் கைப்பற்றி வைத்துள்ளது.

இந்த நிலையில் உலகத்தில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் எப்படி இருக்கமுடியும். அமைதி முதல் சமாதானத்துக்கு எதிராக மூலதனம் நடத்தும் மோதல்கள் தான், உலக அமைதிக்கு சவால்விடுகின்றது. இதனடிப்படையில் மூலதனம் தமக்கு இடையில் அன்றாடம் மோதுகின்றது. மனிதனைப் பட்டினி போட்டே மனித இனத்தைக் கொன்று போடுகின்றது. வாழ்க்கை ஆதாரப் பொருட்களைக் கைப்பற்றி வைத்துள்ள மூலதனத்துக்கு எதிராகப் போராட வைக்கின்றது. மக்கள் கிளர்ந்து எழுவது ஒருபுறம் நடக்க, மறுபுறத்தில் ஒழுங்குப்படுத்தப்பட்ட வடிவில் உருவாகாத எதிர்வினைகள் அரங்கேறுகின்றன. இது மக்களின் பெயரில் நடக்கும் உதிரியான கொள்ளை, கொலை முதல் தனிநபர் பயங்கரவாதம் வரை விரிந்து செல்கின்றது. ஏகாதிபத்தியம் மறுபுறத்தில் எல்லாவிதமான கொள்ளையையும், சூறையாடலையும், மனிதப் படுகொலைகளையும் கவர்ச்சிகரமாக மூடிமறைத்தபடி, மற்றவர்கள் மீது அதை குற்றம் சுமத்துகின்றனர். கேடுகெட்ட மூலதனத்தின் வல்லான்மையின் துணையுடன், உண்மைகளையே கவிழ்த்துப் போடுகின்றனர். பணத்துக்குப் பல் இளித்து நக்கிப் பிழைக்கும் அறிவுத்துறையினர், உலகத்தையே தம்மையொத்த பன்றிகளின் கூடாரமாக்குகின்றனர். (தொடரும்...)