ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

மூலதனத்துக்குப் பைத்தியம் முற்றும் போது, ஏகாதிபத்திய யுத்தங்கள் அரங்கேறுகின்றன

மூலதனத்தின் ஆன்ம ஈடேற்றத்துக்குத் தடையான அனைத்தையும் மூலதனம் தகர்த்தெறிகின்றது. இங்கு ஈவு, இரக்கம் என்று எதையும் மூலதனம் காட்டுவதில்லை. இன்றைய இந்த நவீன சமூகக் கட்டமைப்பு மூலதனத்தின் ஈடேற்றத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்தியப் பார்ப்பனர்கள் தனது சொந்த நலன் சார்ந்த சமூக ஈடேற்றத்துக்காக எப்படி சாதிகளை உருவாக்கினாரோ, அதேபோல் தான் இன்றைய நவீன நாகரிகக் கட்டமைப்பை மூலதனம் உருவாக்கியது, உருவாக்கி வருகின்றது. இந்த பொதுஅம்சம், மற்றவனை அழிப்பதையே அடிப்படையாகக் கொண்டது. மூலதனக் குவிப்புக்கு எதிரான அனைத்து விதமான போட்டியாளர்களையும் ஈவிரக்கமின்றி ஒடுக்குகின்றது. இதன் போது எங்கும் சமூக அராஜகத்தை ஆணையில் வைக்கின்றது. இது ஜனநாயகம், சுதந்திரம் என்ற பெயரிலேயே அரங்கேறுகின்றது. இதன் மூலம் மூலதனம் தங்கு தடையற்ற வகையில் வீங்கிச் செல்லுகின்றது.


தடையாக உள்ளவை அனைத்தையும் சமூகக் கட்டமைப்பிலான, ஒழுங்குமுறைக்குட்பட்ட சட்டதிட்டங்கள் மூலம், திட்டமிட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு வன்முறை மூலம் தகர்க்கின்றது. இதன் போது ஈவிரக்கமற்ற வக்கிரத்துடன் களமிறங்குகின்றது. மூலதனத்தைக் குவிக்கின்ற போக்கில் ஏற்படுகின்ற தடைக்கு எதிராக ஏற்படும் பைத்தியம் முற்றும் போது, தவிர்க்க முடியாது ஏகாதிபத்திய மோதலாகத் தொடங்கி, அதுவே வெறிகொண்ட யுத்தமாக மாறிவிடுகின்றது. இது ஆரம்பத்தில் தணிவான தாழ்நிலையில் இரகசியமாகவும், (இது இரகசிய சதிகளுக்கு உட்பட்ட, எல்லைக்குள் பேசித் தீர்க்க முனைகின்றனர்), பகிரங்கமாகவும் ஏற்ற இறக்கத்துடன் தன்னை வெளிப்படுத்துகின்றது.


மூலதனம் தான் உருவாக்கிய சமூக அமைப்பில் சுரண்டப்படும் மக்களுக்கு வெளியில் சந்திக்கும் தடைகளில் மிகப் பிரதானமானது, எப்போதும், போட்டி மூலதனமே. இங்கு மூலதனத்துக்கு எதிரான வர்க்க மோதல்கள், இதன் மேல்தான் உருவாகின்றன. மூலதனத்துக்கு இடையிலான முரண்பாடு, ஏகாதிபத்திய மோதலாக, யுத்தமாகப் பிரதிபலிக்கின்றது. ஆனால் இது எப்போதும் வேறுயொன்றின் பின்னால் தன்னை மூடிமறைத்துக் கொண்டு, மக்களை அதற்கு பலியிடுகின்றனர். உலகச் சந்தையில் மூலதனத்துக்கு இடையில் நடக்கும் நெருக்கடிகள், அன்றாடம் ஒவ்வொரு செக்சனுக்குமுரிய ஒரு நிகழ்ச்சி நிரலாகவே உள்ளது. இதற்குள் நடக்கும் பேரங்களே ராஜதந்திரமாகக் காட்டப்படுகின்றது. இதன்போது ஒன்றையொன்று காலைவாரிக் கவிழ்த்துப் போட முனைகின்றது. போட்டி மூலதனத்தை எதிர்த்தே, சந்தை தனது செயல்பாட்டை களத்தில் வக்கிரமாகவே நடத்துகின்றது. அன்றாடம் நடக்கும் இந்த வர்த்தக நெருக்கடியில், ஒரே ஏகாதிபத்தியத்தைச் சேர்ந்த போட்டியாளர்கள் ஒருபுறம் சந்திக்கும் அதேநேரம், மற்றைய ஏகாதிபத்தியப் போட்டியாளனை எதிர்கொண்ட பலமுனை முரண்பாடுகள் ஒருங்கே நிகழ்கின்றன.


ஒரே ஏகாதிபத்தியத்தைச் சார்ந்த மூலதனப் போட்டியாளர்கள் ஒரே சட்டவிதிகளுக்குள் இருந்து உருவாகுவதால், போட்டியை இலகுவாகவே மட்டுப்படுத்த முடிகின்றது. இந்தச் சட்டயெல்லை உள்ளூர்ப் போட்டியாளனைக் கட்டுப்படுத்தி ஒன்றையொன்று மேவி அழிப்பதற்கு ஏற்ற ஒரு அதிகார சமூக உறுப்பை, ஜனநாயகத்தின் பெயரில் மூலதனம் உருவாக்குகின்றது. இதன் மூலம் சொந்த நாட்டுப் போட்டியாளனை எதிர்கொள்வது இலகுவாகின்றது. இப்படி உருவாகும் அதிகார வர்க்கம் பெரும் மூலதனத்தை நேரடியாகச் சார்ந்து இருப்பதால், இலகுவாகவே போட்டி மூலதனங்களை அழித்தொழிப்பதற்கு சொந்த சட்டதிட்டம் மூலம் துணைசெய்கின்றனர். இதன் மூலம் உள்ளூர் மூலதனப் போட்டியாளனை இலகுவாக அழித்து விடமுடிகின்றது. ஆனால் மற்றைய ஏகாதிபத்தியப் போட்டியாளர்கள் அப்படி அல்ல. அவன் தனது நாடு என்ற எல்லையில், தனக்கான ஒரு அதிகார அமைப்பைச் சார்ந்த ஒரு சட்ட அமைப்பைச் சார்ந்து வாழ்கின்றது. இதனால் போட்டியாளனை எதிர்கொள்ளும் போது, சதியை அடிப்படையாகக் கொண்ட ராஜதந்திரப் பேச்சு வார்த்தைகள் முதல், பலாத்காரத்தின் எல்லை வரையிலான எல்லைக்குள் ஒன்றையொன்று தற்காத்தும், தகர்த்தும் மோதுகின்றன.


சர்வதேச ரீதியாக நடக்கும் போட்டி மூலதனத்தின் மோதல், அடங்காத வெறியுடன் பல்வேறு நாடுகளை அடிமைப்படுத்தி, சுரண்டவே கடுமையாக முயலுகின்றது. இதன் போது தமக்கு இடையிலான முரண்பாடுகளை எதிர்கொள்ள ஒவ்வொரு ஏகாதிபத்தியமும், இராணுவ மோதல் என்ற எல்லை வரை வன்முறைச் செயலில் குதிக்கின்றது. ஏகாதிபத்திய மோதலில் ஒரு முதிர்ந்த வடிவமாகவே, இராணுவ ரீதியான மோதல் பரிணமிக்கின்றது. மூலதனத்தின் எல்லாவிதமான கடைகெட்ட சமூக விரோதப் பாத்திரங்களினதும் ஒருங்கிணைந்த வடிவம் தான், இதற்கான அடிப்படையாக இருக்கின்றது. ஏகாதிபத்தியத்தின் கடைகெட்ட சமூக விரோத வக்கிரம், ஏகாதிபத்தியத்தின் தோற்றத்திலேயே அதன் உயிர்நாடியாகப் புழுத்துக் கிடக்கின்றது. இதன் அடிப்படையில் தான் லெனின் ஏகாதிபத்தியம் என்றால் என்ன என்பதைத் தெளிவாக வரையறுத்து முன்வைக்கின்றர்.


ஏகாதிபத்தியமானது


1. ஏகபோக முதலாளித்துவமாகும்.


2. புல்லுருவித்தனமான, அல்லது அழுகத் தொடங்கிவிட்ட முதலாளித்துவமாகும்.


3. அந்திமக்கால முதலாளித்துவமாகும்....



அதன் சாரப் பொருள்...


1. கார்ட்டல்கள், சிண்டிக்கேட்டுகள், டிரஸ்டுகள் முதலாளிகளது இந்த ஏகபோகக் கூட்டுகள் தோற்றுவிக்கப்படும் அளவுக்கு பொருளுற்பத்தியின் ஒன்றுகுவிப்பு வளர்ந்து விடுகிறது.


2. பெரிய வங்கிகளின் ஏகபோகநிலை....


3. மூலப்பொருட்களுக்கான ஆதாரங்களை முதலாளித்துவ டிரஸ்டுகளும் நிதி ஆதிக்கக் கும்பலும் கைப்பற்றிக் கொண்டு விடுகின்றன...


4. சர்வதேசக் கார்ட்டல்கள் உலகைத் தம்மிடையே கூறுபோட்டு பாகப்பிரிவினை செய்து கொள்வது ஆரம்பமாகிவிட்டது....


5. உலகின் பிரதேசம் (காலனிகள்) பங்கிட்டுக் கொள்ளப்படுதல் நிறைவுற்றுவிட்டது.... ஏகாதிபத்தியத்தை இனம் கண்டு கொள்வதற்குரிய அடையாளமாய் இருப்பது தொழிற்துறை மூலதனத்தின் ஆதிக்கம் அல்ல, நிதி மூலதனத்தின் ஆதிக்கமே ஆகும்'' என்றார் லெனின்.


ஏகாதிபத்தியம் பற்றி மிகச் சாலச் சிறந்த எடுப்பான அடிப்படைகளே, இன்று மேலும் துல்லியமாகக் காணப்படுகின்றன. உலகின் மூலை முடுக்கு எங்கும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவதிலும், அதிகாரத்தை அதன் மேல் செலுத்துவதிலும் மூலதனம் உயர்ந்தபட்ச நிலையைத் தொட்டு நிற்கின்றது. நிதி மூலதனத்தின் ஆதிக்கம், உலகையே விசுவாசமாக வாலாட்டும் வளர்ப்பு அடிமையாக்கி விட்டது. ஆனால் இது பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளைச் சார்ந்து காணப்படுகின்றது. இதனால் ஏகாதிபத்திய முரண்பாடுகள் தணலாக மாறிச் சிவந்து கிடக்கின்றன. அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பானுக்கு இடையிலான, ஏகாதிபத்திய பிரதான முரண்பாடுகள், கடும் மோதல் நிலையில் நடக்கின்றது. இதனால் அன்றாடம் மூலதனச் சந்தையில், பெரும் அதிர்வுகள் நடந்த வண்ணமே உள்ளது. செல்வம் சிறகு முளைத்து அங்குமிங்கும் பறந்தோடுகின்றது. வர்த்தகம் ஒரு சதிவலையாக, சதிக்கிடங்காக மாறிக் கிடக்கின்றது. இங்கு மோசடியும், சூதாட்டமும் வர்த்தகமுமே ஆன்மாவாகி, உலகை அங்குமிங்குமாக அலைக்கழித்துச் செல்கின்றது. எங்கும் நிலையாத தன்மை, வர்த்தகச் சந்தையில் பெரும் பீதியை ஆணையில் நிறுத்தி விடுகின்றது. 24 மணி நேரத்தில் வரும் ஒவ்வொரு வினாடியும் கண்விழித்து சதிகளைத் தீட்டுவதே, இன்றைய நவீன திட்டமிடலாகயுள்ளது. இதையே இராஜதந்திரம் என்று வாய் கூசாது பிரகடனம் செய்கின்றனர்.


இப்படி ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் பற்றி லெனின் கூறிய கூற்றுகள், உலகமயமாதலில் இன்றும் மிகச் சரியாகவும், சிறப்பாகவும், எடுப்பாகவும் இருக்கின்றன. லெனின் இது பற்றி என்ன கூறுகின்றார் எனப் பார்ப்போம். ""ஏகபோகத்துக்கும் அதன் கூடவே இருந்துவரும் தடையில்லாப் போட்டிக்கும் இடையேயுள்ள முரண்பாடு (பிரம்மாண்டமான இலாபங்களுக்கு) தடையில்லாச் சந்தையிலான "நேர்மையிலான' வாணிபத்துக்கும் இடையிலான முரண்பாடு ஒரு பக்கம் கார்ட்டல்களும் டிரஸ்டுகளுடனானவற்றுக்கும் மறுபக்கம் கார்ட்டல் மயமாகாத தொழிலுக்கும் இடையிலான முரண்பாடு'' ஏகாதிபத்தியத்தின் ஆழமானதும் மோதலுக்குமுரிய அடிப்படை முரண்பாடு என்Ùர் லெனின். இது இன்று பன்னாட்டு தேசங்கடந்த மூலதனத்துக்கும் அப்படியே பொருந்தி நிற்கின்றது. எங்கும் ஒரு அதிகாரத்துடன் கூடிய சதி கட்டமைக்கப்படுகின்றது. வர்த்தகச் சந்தையை திட்டமிட்டே கவிழ்த்து விட்டு, அதை கைப்பற்றுகின்றனர். சந்தை பேரங்கள் முதல் கையூட்டுகள் (லஞ்சம்) கொடுத்தும் கவர்ந்தெடுக்கப்படுகின்றது. தமக்கு இசைவான வகையில் மற்றைய நாட்டுச் சட்டத்திட்டங்களையே திருத்தி விடுகின்றனர் அல்லது மாற்றி விடுகின்றனர். ஏகாதிபத்தியமல்லாத நாடுகளின் கழுத்தில் காலை வைத்தபடிதான், ஒப்பந்தங்களை ஏகாதிபத்தியங்கள் அமைதியாகவே திணிக்கின்றன. அங்கும் இங்குமாகக் கையெழுத்தான ஒருதலைப்பட்சமான ஒப்பந்தங்கள் மக்களுக்கு எதிராகச் செயல்படுத்துவதே இன்றைய அரசுகளின் நவீன கடமையாகி விட்டது. தடையில்லாத சந்தையின் நேர்மையான வர்த்தகம் என்பதைக் கூட, எதார்த்தத்தில் மறுக்கின்றது. மூலதனம் தனது விரிவாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தனது சொந்தக் கோட்பாட்டை மீறி, அடத்தாகவே தனது சொந்த விதியையே மறுத்து வீங்குகின்றது. இன்று ஆளும் வர்க்கங்கள் தங்களைத் தாம் பாதுகாக்க உருவாக்கிய ஜனநாயகத் தேர்தல் முறையைக் கூட, ஆளும் வர்க்கங்கள் முறைகேடாக எப்படிக் கையாளுகின்றதோ அதே போல்தான் வர்த்தகத்திலும் நடக்கின்றது.


மூலதனம் உலகளவிலான சூறையாடலுக்கான மேலாதிக்கத்துக்காக நடத்தும் மோதலினால் ஏற்படும் விளைவுகள், அனைத்து நாடுகளிலும், அனைத்து மக்களிலும் பட்டுத் தெறிக்கின்றது. இதன் போதுதான் சமாதான உலகம் பற்றியும், மனித சுதந்திரம் பற்றியும் ஜனநாயகம் பற்றியும் வாய்கிழிய ஓதி அரங்கேற்றுகின்றனர். இதை மூடிமறைக்கவே, மனித குலத்தைப் பிளந்து அதில் குளிர் காய்கின்றது ஏகாதிபத்தியம். மக்களுக்கு இடையில் திட்டமிட்டே மோதல்களை உற்பத்தி செய்கின்றனர். இதன் மூலம் மனித இனப் பிளவுகளின் மேல் கொள்ளை அடிப்பவர்கள், தம்மைத் தாம் தற்காத்துக் கொண்டு, கொடூரமான முகத்துடன் களத்தில் புதுவடிவம் எடுக்கின்றனர். இதன் ஒரு அங்கமாக உருவானதே உலகமயமாதல்.


இதன் போது எங்கும் அமைதி பற்றியும், சமாதானம் பற்றியும் உரத்துப் பேசுகின்றனர். எங்கும், அனைத்துத் துறைகளிலும் படுமோசமான வன்முறையே நவீனமாகின்றது. இதை நியாயப்படுத்தி அல்லது மூடிமறைக்கும், முதுகு சொறியும் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், தமது சொந்த ஜனநாயகத்தின் பெயரால் மக்களின் முதுகில் ஏறி அமருகின்றனர். அமைதியான, சமாதானமான உலகம் பற்றி, வண்ணவண்ணமான கோட்பாடுகளை முன்வைக்கின்றனர். மனித இனத்தைச் சுரண்டிக் கொழுக்கும் மனிதவிரோத, சமூகவிரோத செயலையிட்டு, இந்த ஜனநாயக எழுத்தாளர்கள் யாரும் எப்போதும் கவலைப்படுவது கிடையாது. இந்தக் கொடுமையை எதிர்த்துப் போராடுவதையே, இவர்கள் கோட்பாட்டு ரீதியாக எப்போதும் மறுத்துரைக்க முனைகின்றனர். சமாதானமாகச் சுரண்டும் உலக அமைதிக்கும், சுதந்திரமாகச் சுரண்டும் உரிமைக்கும் எதிராகப் போராடுபவர்களையே, சமாதானத்தின் எதிரிகளாக இவர்கள் சித்தரிப்பவர்களாக உள்ளனர். மனித உழைப்பு மற்றொருவனால் சுரண்டப்படுவதே, உலகின் சமாதானத்துக்குச் சவாலாகின்றது என்பதை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை அல்லது சிலர் சடங்குக்காக அதை ஒத்துக் கொண்டு அதற்கு எதிராகவே எதார்த்தத்தில் உள்ளனர். இதை இட்டு இவர்கள் கவலை கொள்ளாத ஒரு நிலையிலும், ஏகாதிபத்தியத்துக்கு இடையில் மூலதனம் உருவாக்கும் பிரதான முரண்பாடு, அமைதிக்கும் சமாதானத்துக்கும் எதிராக செயல்படுவதை மூடிமறைப்பதே இன்றைய இலட்சியமாகி விடுகின்றது. இந்த மூலதனத்துக்கு இடையிலான மோதல், மனித இனத்தையே அழித்துவிடும் என்ற உண்மையைக் கூட கண்டு கொள்வதை திட்டமிட்டே மூடி மறைக்கின்றனர். இன்று மூலதனத்துக்கு இடையிலான மோதல் உலக அமைதிக்கும், சமாதானத்துக்கும் ஆபத்தான ஒன்றாகவே வளர்ச்சியுற்று வருகின்றது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முதல் இரண்டு உலக யுத்தங்களும், மூலதனத்துக்கு இடையேதான் நடந்தன. ஏகாதிபத்திய சகாப்தம் முதல் இன்று வரையில், நாடுகளுக்கு உள்ளேயான வர்க்கப் போராட்டம் அல்லாத அனைத்து மோதல்களும் கூட ஏகாதிபத்திய மூலதனத்துக்கு இடையிலானதாகவே இருந்தது. ஆனால் இதை வெறும் தனிநபர்கள், சிறு குழுக்கள் சார்ந்தாகக் கட்டுவது, மூலதனத்தின் தந்திரமான விளையாட்டாக உள்ளது. இதையே பற்பல ஜனநாயக எழுத்தாளர்களும் பிரதிபலித்து, எதிரொலிக்கின்றனர்.


இந்த மோசடித்தனமான கூச்சல் அன்று முதல் இன்று வரை ஒரேவிதமாக பல வண்ணத்தில் அரங்கேறுகின்றது. லெனின் இதைத் தனது காலத்தில் எதிர் கொண்ட போதே, அதை அம்பலப்படுத்தினார். ""சர்வதேசக் கார்ட்டல்கள், மூலதனம் சர்வதேசியமயமாக்கப்படுதலின் மிகவும் எடுப்பான வெளிப்பாடுகளில் ஒன்றாகுமாதலால், முதலாளித்துவத்தில் தேசங்களிடையே சமாதானம் மலர்வதற்கான நம்பிக்கையை அளிப்பனவாகும் என்ற கருத்தைச் சில முதலாளித்துவ எழுத்தாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். தத்துவார்த்தத்தில் இந்தக் கருத்து அறவே அபத்தமானது, நடைமுறையில் குதர்க்க வாதமும், படுமோசமான சந்தர்ப்பவாதத்தை நேர்மையற்ற முறையில் ஆதரித்து வாதாடுவதுமே ஆகும் என்றார். இந்த உண்மை இன்று பரந்த தளத்தில், ஜனநாயகத்தின் பெயரில் நடக்கின்றது. சமாதானம், அமைதி, சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் எதிர்களாக, மக்களுக்காகப் போராடுபவர்கள் மீது அவதூறாக சுமத்தப்படுகின்றது. உலகின் எஞ்சி இருக்கும் சுதந்திரம், ஜனநாயகம் என அனைத்தையும் படிப்படியாக அழித்துவரும் மூலதனம், இதை மற்றவர்கள் மேல் சுமத்தி விடுகின்றனர். யாரிடம் வாழ்வதற்கான அடிப்படையான வாழ்க்கை ஆதாரப் பொருட்கள் தாராளமாக உள்ளனவோ, அவர்கள் மட்டும் தான், குறைந்தபட்சம் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை நினைத்துப் பார்க்கமுடியும். மற்றவனிடம் கையேந்தி நிற்கும் ஒருவன் எப்படி சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை நினைத்துப் பார்க்க முடியும். தான் நினைத்ததைச் சொல்லவும், அதை எழுதவும் கூட முடியாத வகையில், மூலதனம் அனைத்து ஊடக வடிவங்களையும் கூடக் கைப்பற்றி வைத்துள்ளது.


இந்த நிலையில் உலகத்தில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் எப்படி இருக்கமுடியும். அமைதி முதல் சமாதானத்துக்கு எதிராக மூலதனம் நடத்தும் மோதல்கள் தான், உலக அமைதிக்கு சவால்விடுகின்றது. இதனடிப்படையில் மூலதனம் தமக்கு இடையில் அன்றாடம் மோதுகின்றது. மனிதனைப் பட்டினி போட்டே மனித இனத்தைக் கொன்று போடுகின்றது. வாழ்க்கை ஆதாரப் பொருட்களைக் கைப்பற்றி வைத்துள்ள மூலதனத்துக்கு எதிராகப் போராட வைக்கின்றது. மக்கள் கிளர்ந்து எழுவது ஒருபுறம் நடக்க, மறுபுறத்தில் ஒழுங்குப்படுத்தப்பட்ட வடிவில் உருவாகாத எதிர்வினைகள் அரங்கேறுகின்றன. இது மக்களின் பெயரில் நடக்கும் உதிரியான கொள்ளை, கொலை முதல் தனிநபர் பயங்கரவாதம் வரை விரிந்து செல்கின்றது. ஏகாதிபத்தியம் மறுபுறத்தில் எல்லாவிதமான கொள்ளையையும், சூறையாடலையும், மனிதப் படுகொலைகளையும் கவர்ச்சிகரமாக மூடிமறைத்தபடி, மற்றவர்கள் மீது அதை குற்றம் சுமத்துகின்றனர். கேடுகெட்ட மூலதனத்தின் வல்லான்மையின் துணையுடன், உண்மைகளையே கவிழ்த்துப் போடுகின்றனர். பணத்துக்குப் பல் இளித்து நக்கிப் பிழைக்கும் அறிவுத்துறையினர், உலகத்தையே தம்மையொத்த பன்றிகளின் கூடாரமாக்குகின்றனர்.


எதிர்மறையில் உலக எதார்த்தம் நிர்வாணமாகவே நிற்கின்றது. ஏகாதிபத்திய முரண்பாடே பிரதான முரண்பாடாக, மூலதனத்தின் முன்னே நின்று பேயாட்டமாடுகின்றது. முன்பே இந்த நூலில் சில அடிப்படையான புள்ளிவிபரத் தரவுகளை இதனடிப்படையில் பார்த்தோம். ஏகாதிபத்தியங்களான ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்காவுக்கு இடையில் மூலதனங்கள் எப்படி அங்குமிங்குமாக அலைபாய்கின்றது என்பதைக் கண்டோம். மூலதனம் நிம்மதியற்று, பைத்தியம் படித்த நிலையில் அங்குமிங்குமாகத் தாவிக் குதறுகின்றது. இதை நாம் மேலும் குறிப்பாகப் பாப்போம்.


உலகில் உள்ள 200 முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள், உலகமயமாதல் பொருளாதார நெருக்கடிக்குள் அமெரிக்காவுக்கும் ஜப்பனுக்கும் இடையில் எப்படிக் கைமாறியது எனப் பார்ப்போம்.

ஆண்டு - நாடு - பன்னாட்டு நிறுவன எண்ணிக்கை - வருமானம் கோடி டாலரில்

1982 ஜப்பான் 35 65,700
1982 அமெரிக்கா 80 1,30,000
1992 ஜப்பான் 54 2,00,000
1992 அமெரிக்கா 60 1,70,000
1995 ஜப்பான் 58 2,70,000
1995 அமெரிக்கா 59 2,00,000

14 வருடங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தரவு, அங்கும் இங்குமாக மூலதனம் நடத்திய குழிபறிப்புகளின் வெட்டுமுகத் தோற்றமே இது. இவை ஒரு இழுபறியான மோதலாக மாறி, அரங்கில் உண்மைக் காட்சியாகியுள்ளது. 1982இல் முன்னணி 200 நிறுவனங்களில் ஜப்பான் 35 பன்னாட்டு நிறுவனங்களை சொந்தமாக கொண்டிருந்தது. இது 1992இல் 54ஆகவும், 1995இல் 58ஆகவும் அதிகரித்தது. அமெரிக்காவோ 1982இல் மிகப்பெரிய 200 நிறுவனங்களில் 80 பன்னாட்டு நிறுவனங்களை சொந்தமாகக் கொண்டிருந்தது. இது 1992இல் 60ஆகவும், 1995இல் 59ஆகவும் குறைந்தது. மறுபக்கம் இந்த நிறுவனங்கள் சார்ந்த மூலதன திரட்சி 1982இல் ஜப்பான் 65,700 கோடி டாலரை கொண்டு 35 பன்னாட்டு நிறுவனங்கள் காணப்பட்டது. இது 1992இல் 54 ஆகிய அதேநேரம் மூலதனம் 2,00,000 கோடி டாலராகியது. 1995இல் 58 நிறுவனத்தை சொந்தமாகக் கொண்டு 2,70,000 கோடி டாலரை சொந்தமாக்கியது. அமெரிக்கா 1982இல் 80 பன்னாட்டு நிறுவனத்தைக் கொண்டு 1,30,000 கோடி டாலரை சொந்தமாகக் கொண்டிருந்தது. 1992இல் பன்னாட்டு நிறுவனங்கள் 60ஆக குறைந்ததுடன் 1,70,000 கோடி டாலரையும், 1995இல் 59 நிறுவனத்துடன் 2,00,000 கோடி டாலரைக் கொண்டு ஜப்பானுக்கு கீழ் சரிந்து சென்றது. இது ஒன்றையொன்று உறிஞ்சியதையும், ஏகாதிபத்திய முரண்பாடுகளையும் எடுத்துக் காட்டுகின்றது. மூலதனம் தனக்கிடையில் ஒரு நிலையற்ற தன்மையை அடைவதுடன், மோதல் போக்குக் கொண்ட நெருக்கடியை அன்றாடம் சந்திப்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. இதுவே ஏகாதிபத்திய முரண்பாடாக இருப்பதுடன், இதுவே இராணுவ மோதலுக்குரிய முதிர்வு நிலையை அடைகின்றது. உலகச் சந்தை மறுபடியும் மீளப் பகிர்வதன் மூலமே, மூலதனம் தப்பிப் பிழைக்க முனைகின்றது.


மக்களை மிக அதிகளவில் சூறையாடுவதையே, மூலதனத்துக்கு இடையிலான முரண்பாடு கோருகின்றது. மக்களின் அடிப்படையான வாழ்வியல் கூறுகளை மூலதனம் ஒழித்துக் கட்டுவதன் மூலம், தன்னை தற்பாதுகாத்துக் கொள்ள முனைகின்றது. இதனால் இதை எதிர்த்து கீழ் இருந்து எழும் வர்க்கப் போராட்டம், மூலதனத்தின் முரண்பாட்டை மேலும் கூர்மையாக்குகின்றது. இது தொடர்ச்சியானதும், ஏற்றமும், இறக்கமும் கொண்ட ஒரு அலையாகவே எதார்த்தத்தில் எழுகின்றது.
இந்த முரண்பாடு பல பத்து வருடங்களில் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றது. 1960இல் அமெரிக்கா ஜப்பானுக்கு 160 கோடி டாலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்த அதேநேரம், 110 கோடி டாலருக்கு பொருட்களை இறக்குமதி செய்தது. 1984இல் அமெரிக்கா 3,815 கோடி டாலர் பெறுமதியான பொருட்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்த அதேநேரம், 3360 கோடி டாலருக்கு பொருட்களை இறக்குமதி செய்தது. 1988இல் அமெரிக்கா 6,560 கோடி டாலர் பெறுமதியான பொருட்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்த அதேநேரம், 5,920 கோடி டாலருக்கு பொருட்களை இறக்குமதி செய்தது. தமக்கு இடையிலான வர்த்தகம் அதிகரித்த அதே நேரம், சர்வதேச ரீதியான வர்த்தகத்தில் பிளவுகள் அதிகரித்தது. ஜப்பான் 196080 இடையில் தனது பொருளாதார வளர்ச்சியை 300 மடங்காக அதிகரித்த போது, சந்தையில் புதிய நெருக்கடிகள் உருவானது. சந்தையை கட்டுப்படுத்தி வைத்திருந்தவர்கள் அதைத் தக்கவைக்க ஜப்பானுடன் மோதவேண்டிய சூழல் உருவானது. உலகளவில் ஜப்பானின் வர்த்தகம் விரிந்தபோது, உள்நாட்டில் செழிப்பு உருவானது. 1960இல் ஜப்பானின் தலா வருமானம் அமெரிக்க தலா வருமானத்தில் 30 சதவீதமாக இருந்தது. இது 1980இல் 70 சதவீதமாக வளர்ச்சி கண்டது. பெரும் மூலதனத்தின் கொழுப்பு ஏறியபோது, பணக்காரக் கும்பலின் தனிநபர் வருமானம் ஜப்பான் மக்களின் வாழ்வையே நாசமாக்கத் தொடங்கியது. ஏகாதிபத்திய முரண்பாடுகள் உலகச்சந்தையை அங்கும் இங்குமாகப் புரட்டிப் போட்ட அதேநேரம், ஏகாதிபத்தியத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வுகள் சூறையாடப்படுவது அதிகரித்தது.


ஜப்பான் மற்றும் ஜெர்மனிய ஏகாதிபத்தியங்களின் பொருளாதார மீட்சி, ஏகாதிபத்திய மோதலைக் கூர்மையாக்கியது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின் அமெரிக்கப் பொருளாதாரம் பெற்ற மேன்மையான அனுகூலங்கள் தொடர்ச்சியான இழப்புக்குள்ளாகின. இந்த மோதல் உலகளாவிய வர்த்தகத்தை வெம்பவைத்து, வீங்கி அதிகரிக்க உதவிய அடுத்த கணமே, வீழ்ச்சியும் அதன் பின்னாலே அலை மோதுகின்றது. மூலதனத்தைக் கொழுக்க வைக்கும் வர்த்தக இயங்கியல் விதி என்பது, ஏற்றத்தையும் இறக்கத்தையும் ஒருங்கே கொண்டது. எங்கேயோ ஒரு இடத்தில் நடக்கும் இழப்புத் தான், மற்றொரு பக்கத்தில் குவிப்பாகின்றது. உதாரணமாக 1969இல் அமெரிக்கா நாளாந்தம் 100 கோடி டாலருக்கு அந்நியச் செலாவணி வியாபாரத்தை செய்தது. இது 1983இல் 3400 கோடி டாலராகியது. உலக ரீதியில் இது 750 கோடியில் இருந்து 20,000 கோடி டாலராகியது. 1969இல் அமெரிக்காவின் உலகளாவிய வர்த்தகத்தின் பங்கு 7.5 க்கு ஒன்றாக இருந்தது. இது 1983இல் 5.8க்கு ஒன்றாகியது. வர்த்தக நெருக்கடி தொடராகவே உருவாகின்றது. உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்காவின் பங்கு 19691983க்கும் இடையில் அதிகரித்த போது, இழப்பு மூன்றாம் உலக நாடுகளினதும் மக்களினதும் தலைகள் மீது நடந்தது. ஆனால் இந்த வர்த்தக அதிகரிப்பு, அமெரிக்காவின் உலகளாவிய வர்த்தக ஆதிக்கத்தைத் தக்க வைக்கவில்லை. மற்றைய ஏகாதிபத்தியத்துடனான போட்டியில் அதை இழப்புக்குள்ளாகியது.


அமெரிக்கா 1950இல் உலகச் சந்தையில் 50 சதவீதத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தது. இது 1988இல் 25 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. 1965இல் 65 சதவீதமாக இருந்த அமெரிக்க வாகன உற்பத்தி ஆதிக்கம், 1980இல் 20 சதவீதமாக வீழ்ச்சி கண்டது. 198084 இடையில் தனது மொத்த ஏற்றுமதிச் சந்தையில் 23 சதவீதத்தை இழந்தது. 1955இல் எஃகு உற்பத்தியில் 39.3 சதவீதத்தை வைத்திருந்த அமெரிக்கா 1975இல் 16.4 சதவீதமாகக் குறைந்து போனது. இது 1984இல் 8.4 சதவீதமாகியது. அதாவது 19731983க்கு இடையில் எஃகு உற்பத்தி 44 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது. 1950இல் அமெரிக்கச் சந்தையில் அமெரிக்கப் பொருட்கள் 95 சதவீதத்தை வழங்கியது. இது 1984இல் 60 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. 40 சதவீதம் அமெரிக்கா அல்லாத அன்னியப் பொருட்களால் அமெரிக்கச் சந்தை நிரம்பியது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பாக சந்தை மீதான நெருக்கடி தொடர்ச்சியாக, மிகவும் கடுமையாகி வருகின்றது. இது உலகளாவிய சந்தைகளில் மட்டுமல்ல, உள்நாட்டிலும் இது பொருந்துகின்றது. அமெரிக்கா வகித்த மேன்மையான பொருளாதாரம், படிப்படியாகத் தகர்ந்து வருகின்றது. இது மூன்றாம் உலக யுத்தத்துக்கான ஒரு புதியநிலைக்கு உந்தித் தள்ளுகின்றது. தன்னைத் தான் தக்கவைக்க இராணுவ ரீதியான ஒரு தாக்குதல் யுத்தத்தை, அமெரிக்கா உலகளாவிய ரீதியில் மற்றைய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக வலிந்து தொடங்கியுள்ளது. எந்த மூன்றாம் உலக நாடுகளில் தலையிட்டாலும், ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான முரண்பாட்டில் இருந்தே இவை தொடங்குகின்றது. இது சோவியத் சிதைவின் பின்பான, புதிய ஒரு உலக நிலையாகும். ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான முரண்பாடே, மூலதனத்துக்கு முதன்மை முரண்பாடாகியுள்ளது. எங்கும் ஒரு மூடி மறைக்கப்பட்ட இரகசிய யுத்தம் நடக்கின்றது. இது பகிரங்கமாக அரங்கேறுவது அதிகரிக்கின்றது. இது முழுமையான ஒரு ஏகாதிபத்திய உலக யுத்தமாக மாறுவதை பின்போடவும், அதில் இருந்து தப்பிப் பிழைக்கவும், மூன்றாம் உலக நாடுகள் மேலான சுரண்டல் கடுமையாகி தீவிரமாக்குகின்றனர். இதன் மூலம் பொருளாதார நெருக்கடிகள், ஒரு இராணுவ மோதலாக மாறுவதை பின்போடுகின்றனர்.


இந்தப் பொருளாதார நெருக்கடி பிரிட்டனுக்கும் கடுமையாக ஏற்பட்டது. முன்னாள் காலனிகளைக் கொண்டு பிரிட்டிஷ் மூலதனம் செழித்தோங்கிய காலம் கனவாகிவிட்டது. உலகம் மறுபங்கீடு செய்யப்பட்ட புதிய நிலையில் கடுமையான முரண்பாடுகளுடன் உள்ளது. பிரிட்டன் தொடர்ச்சியாக ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து, தனது தங்கக் கையிருப்பில் இருந்த 145 டன் தங்கத்தை 19992002க்கு இடையில் விற்றது. இன்று மூலதனம் உருவாக்கும் ஏகாதிபத்திய நெருக்கடி என்பது ஒரு நிகழ்ச்சிப் போக்காகிவிட்டது. பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சி வீதம் மந்த நிலைக்குள் சென்றுள்ளது. இது உலகளவில் மூலதனத்துக்கு இடையிலான மோதலைத் தோற்றுவிக்கின்றது. இதுவும் ஏகாதிபத்திய மோதலாக அரங்கில் பிரதிபலிக்கின்றது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான பொருளாதார நெருக்கடி, தவிர்க்கமுடியாது பொருளாதார வளர்ச்சி விகிதத்தை மந்த நிலைக்குள் நகர்த்துகின்றது. அதிரடியான பொருளாதாரத் தேக்கம், மூலதனத்துக்கு பீதியை உருவாக்குகின்றது.


உலகின் பிரதான நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வீதங்கள்

1950 - 1960 - 1970 - 1980 - 1990 - 1996

அமெரிக்கா 8.7 2.2 0.0 0.5 1.2 1.5
ஜப்பான் 10.3 13.1 10.2 3.6 4.8 1.5
மேற்கு ஜெர்மனி 19.4 8.7 5.0 1.0 5.7 1.5
பிரிட்டன் 3.5 5.6 2.3 2.2 0.4 2.2
சீனா 11.4 5.5 15.5 4.2 3.3 9.3

பொருளாதார வளர்ச்சி வீதத்தில் சீனா மட்டும் விதிவிலக்காகும். இதை நாம் பின்னால் தனியாகப் பார்ப்போம். ஜப்பான், ஜெர்மனி என்பன இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பாக பொருளாதார ரீதியாக மீண்ட போது ஏற்பட்ட வளர்ச்சி, 1990களுடன் முடிவுக்கு வந்து விடுகின்றது. 1990ஆம் ஆண்டு இரண்டு ஜெர்மனிகளும் இணைக்கப்பட்ட போது ஏற்பட்ட அதியுயர் சுரண்டல் சார்ந்த சந்தையில், ஒரு திடீர் வீக்கமே இறுதியான வளர்ச்சியாகக் காணப்பட்டது. பின் ஏகாதிபத்திய முரண்பாடுகள் கூர்மையடைந்து நெருக்கடியான எல்லைக்குள் உலகம் புகுந்துள்ளது. இதில் இருந்து மீள உருவான உலகமயமாதல் கூட, அவர்களுக்கு இடையிலான நெருக்கடியை மட்டுமல்ல, பொருளாதார மீட்சியையும் மீட்டு விடவில்லை. ஏகாதிபத்தியப் பொருளாதாரம் ஒரு நெருக்கடி ஊடான வீழ்ச்சியையே சந்தித்தது, சந்திக்கின்றது. சந்தித்து வருகின்றது. இவை எல்லாம் மூன்றாம் உலக நாடுகளிடம் இருந்து வருடாந்தம் 35,000 கோடி டாலருக்கு மேலாக அறவீடும் வட்டி மற்றும் கடன் மீட்பு என்ற ஏகாதிபத்தியத்தின் பொற்காலத்தில் தான், ஏகாதிபத்திய நெருக்கடிகள் அக்கம்பக்கமாக காணப்படுகின்றன. உண்மையில் ஏகாதிபத்தியம் மூன்றாம் உலக நாடுகளில் இருந்து கொள்ளையிடும் பெரும் தொகை செல்வத்தினால் தான் இன்று தப்பிப் பிழைத்து உயிர் வாழ்கின்றது. இதைக் கொண்டு தான் உலகமயமாதலை ஏகாதிபத்தியம் தனக்குத் தானே பூச்சூட்டுகின்றனர்.



உலகமயமாதலூடாக தப்பிப் பிழைக்கும் பொருளாதாரக் கட்டமைப்புக்குள், மூன்றாம் உலக நாடுகளைக் கொள்ளையடிக்கும் ஏகாதிபத்திய வடிவங்கள் பலவகைப்பட்டது. உதாரணமாக 1977இல் அமெரிக்காவின் தேசங்கடந்த தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்த மூலதனம் 2,11,750 கோடி இந்தியா ரூபாவாகும். ஆனால் இவை அந்நிய நாடுகளில் தொழில் வர்த்தகம் மூலம் கட்டுப்படுத்திய வரவு செலவு 11,34,000 கோடி இந்தியா ரூபாவாகும். அதாவது இது ஐந்து மடங்காகும். எங்கும் ஒரு அராஜகம் மூலம், மனித சமூகத்தை சூறையாடித்தான் ஏகாதிபத்தியங்கள் நீடிக்கின்றன. 1976இல் வர்த்தக ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 12.8 சதவீதமாகும். அதாவது 1,34,100 கோடி இந்தியா ரூபாவாக இருந்தது. அந்நிய வர்த்தகத்தில் உபரி லாபமாக அமெரிக்காவுக்கு கிடைத்த தொகையோ 35,000 கோடி இந்தியா ரூபாவாகும். 1976இல் நேரடி முதலீட்டின் மூலம் வெளிநாடுகளில் இருந்து லாபமாக கொள்ளையிட்ட தொகை 39,200 கோடி இந்தியா ரூபாவாகும். இதைவிட 1977இல் சேவைத்துறை, தொழில்நுட்ப வர்த்தக உபரி மட்டும் 1,00,725 கோடி இந்தியா ரூபாவாக இருந்தது. ஏகாதிபத்தியத்தின் கொள்ளைகள் பற்பல வழிகளில் சூக்குமமாகவே நடக்கின்றது. மூன்Ùம் உலக நாடுகள் 2003இல் வட்டியாகவும், மீள் கொடுப்பனவாகவும் கொடுத்த தொகை 35,000 கோடி டாலர். அதாவது அண்ணளவாக 17,50,000 கோடி இந்தியா ரூபாவாகும்.


எப்படி ஏகாதிபத்திய உலகமயமாதல் சகாப்தம் தப்பி பிழைக்கின்றது என்பதை, இந்தக் கொள்ளை தெளிவாகவும் சிறப்பாகவும் எடுத்துக்காட்டுகின்றது. மூன்றாம் உலக நாடுகள் வட்டி கொடுத்தலை நிறுத்தினால் ஏகாதிபத்திய உலக சகாப்தமே தகர்ந்துபோகும். ஏகாதிபத்தியங்களின் வரவு செலவில் மூன்றாம் உலக நாடுகள் கட்டும் வட்டி மற்றும் மீள் வரவு, எந்தப் பங்கை வகித்து வருகின்றது என்பதை ஒப்பீட்டளவில் ஆராய்வோம்.

சில ஏகாதிபத்தியங்களின் தேசிய வருமானம் கோடி டாலரில்


மூன்றாம் உலக நாடுகள் ஏகாதிபத்தியத்துக்கு கட்டும் வட்டி மற்றும் மீள் கொடுப்பனவுகள் கனடா ஏகாதிபத்தியத்தின் மொத்த தேசிய வருமானத்தில் 56 சதவீதமாகும். 1999இல் மூன்றாம் உலக நாடுகளின் கடன் 2,43,000 கோடி டாலராகவும், வட்டி மற்றும் மீள் கொடுப்பனவு 36,000 கோடி டாலராகவும் இருந்தது. இந்த கடன் அமெரிக்காவின் மொத்த தேசிய வருமானத்தில் 26.5 சதவீதமாக இருந்தது. இது ஜெர்மனி தேசிய வருமானத்தை விட அதிகமாகவும் காணப்பட்டது. பிரான்சின் தேசிய வருமானத்தை விடவும் இரண்டு மடங்கு அதிகமாகவே மூன்றாம் உலக நாடுகளின் கடன் இருந்தது. கனடாவின் தேசிய வருமானத்தை விடவும், நான்கு மடங்கு அதிகமாக மூன்றாம் உலக நாடுகளின் கடன் காணப்பட்டது. ஏகாதிபத்தியத்தின் வரவுகளில் வட்டி மற்றும் மீள் கொடுப்பனவு முக்கியமான ஒன்றாகி விட்டது. இப்படி ஏற்றுமதி, நேரடி வர்த்தகம், மறைமுக வர்த்தகம், பங்குச்சந்தை, மூன்றாம் உலக நாடுகளின் ஏற்றுமதி பொருட்களின் மீது திட்டமிட்டு உருவாக்கும் விலை குறைப்பு என்ற ஒரு சுற்று வழிப்பாதையிலான பெரும் கொள்ளைகள் மூலம் தான் ஏகாதிபத்தியம் தப்பிப் பிழைக்கின்றது.


இப்படி தப்பிப் பிழைக்கும் ஏகாதிபத்தியத்தின் மொத்த தேசிய வருமானம் கூட, ஏகாதிபத்திய முரண்பாடுகளால் கூடிக்குறைந்து செல்வதை நாம் மேலே காணமுடிகின்றது. உதாரணமாக ஜப்பானை எடுப்பின் 1987யுடன் 1988 ஒப்பிடின் வருடாந்தர வருமானத்தில் 41,400 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டது. இந்த இழப்பை 1994யுடன் 1998யை ஒப்பிடின் 90,700 கோடி டாலர் இழப்பாக இருந்தது. இப்படி பல நாடுகளில் தேசிய வருமானம் ஏற்ற இறக்கம் கொண்டதாக அங்கும் இங்குமாக மற்றைய ஏகாதிபத்தியத்துடன் மோதியே வெளிவருகின்றது. ஒன்றையொன்று மிஞ்சமுனையும் அதே தளத்தில், ஏழை நாடுகளை கடுமையாகச் சூறையாடி தம்மைத் தக்கவைக்கவே முனைகின்றது.


ஏகாதிபத்திய கூர்மையான முரண்பாடுகளின் இடையே நடக்கும் ஏற்றுமதி இறக்குமதி குறித்து ஆராய்வோம். 1973க்கும் 1987க்கும் இடையிலான காலத்தில் நடந்த ஏற்றுமதி இறக்குமதியை இந்த அட்டவணை ஆராய்கின்றது.



மற்றையவை முதல் 40க்குள் இல்லை.


1998இல் 92 சதவீதமான ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியமுதல் 30 நாடுகளும் சதவீதத்தில்

ஐரோப்பா 20.3 சதவீதம்
அமெரிக்கா 17 சதவீதம்
ஜப்பான் 9.7 சதவீதம்
கனடா 5.3 சதவீதம்
சீனா 4.6 சதவீதம்
ஹாங்காங் 4.3 சதவீதம்
தென்கொரியா 3.3 சதவீதம்
மெக்சிகோ 2.9 சதவீதம்
தாய்வான் 2.7 சதவீதம்
சிங்கப்பூர் 2.7 சதவீதம்
சுவிஸ் 2.0 சதவீதம்
மலேசியா 1.8 சதவீதம்
ரசியா 1.4 சதவீதம்
ஆஸ்திரேலியா 1.4 சதவீதம்
தாய்லாந்து 1.3 சதவீதம்
பிரேசில் 1.3 சதவீதம்
இந்தோனேசியா 1.2 சதவீதம்
நோர்வே 1.0 சதவீதம்
சவுதிஅரேபியா 1.0 சதவீதம்
இந்தியா 0.8 சதவீதம்
30 வது நாடாக வெனிசுவேலா 0.4 சதவீதம்

1985இல் பிரதேசங்களின் மொத்த உள்நாட்டு வருமானமும் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி கோடி டாலரிலும், மக்கள் தொகை கோடியிலும்



ஏற்றுமதி இறக்குமதி எப்படி உலகில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் பகிரப்படுகின்றது என்பதையே நாம் மேலே பார்க்கின்றோம். பிரதான ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான இழுபறியையும், ஏகாதிபத்தியம் எப்படி உலகில் உள்ள அனைத்து செல்வங்களின் சொந்தக்காரராக மாறுகின்றனர் என்பதையும் காண்கின்றோம். இங்கு சிதைந்து போன சோவியத் என்ற சமூக ஏகாதிபத்தியத்தின் பலத்தையும் நாம் கணக்கில் எடுக்கக் கூடியதாக உள்ளது. 1985இல் உலகில் அதிக ஏற்றுமதி செய்த நாடு, முன்னாள் சோவியத்தாக இருப்பதை நாம் காணமுடியும். தேசிய வருமானத்தை எடுப்பினும் கூட அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் காணப்பட்டது. சமூக ஏகாதிபத்தியமான சோவியத் மிக பெரிய போட்டியாளனாகவே அக்கால கட்டத்தில் இராணுவத் துறையில் மட்டுமல்ல, பொருளாதாரத் துறையிலும் காணப்பட்டது. ஜப்பான், ஜெர்மனி ஏகாதிபத்தியத்துக்கு உள்ளேயே மிகவேகமாக முன்னேறி வந்த இக்காலகட்டத்தில் தான், சோவியத் உலக ஆதிக்கத்துக்காக ஏகாதிபத்திய போட்டியில் குதித்து இருந்தது. சமூக ஏகாதிபத்தியத்தை எதிர்கொள்ள, மற்றைய ஏகாதிபத்தியத்துக்கு இடையில் ஒரு நெருக்கமான இணக்கப்பாடு காணப்பட்டது. ஆனால் சமூக ஏகாதிபத்தியத்தின் சிதைவின் பின்பு, இவர்களுக்கு இடையிலான இணக்கப்பாடு சிதைந்து இவர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ளது.


1985இல் வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ரசியா என்ற மூன்று பிரதானமான ஏகாதிபத்திய மையங்கள் மொத்த ஏற்றுமதியில் 76.5 சதவீதத்தைக் கட்டுப்படுத்தியது. 1973, 1987, 2000ஆம் ஆண்டுகளில் முதல் ஆறு பிரதான ஏற்றுமதியாளர்களும், உலக ஏற்றுமதியில் முறையே 46, 47.3, 46.2 சதவீதத்தைக் கட்டுப்படுத்தினர். இதற்குள் பல ஏற்றத்தாழ்வுகளை உலகம் சந்தித்தது. உதாரணமாக அமெரிக்கா முறையே 12.4, 10.2, 19.1 சதவீத அளவில் உலக ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியது. 1990இல் உலக ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 18 சதவீதமாகும். இது படிப்படியாக ஏற்ற இறக்கத்துடன் வீழ்ச்சி கண்டு வந்தது. இதேநேரம் ஜெர்மனியை எடுத்தால் முறையே 11.7, 11.8, 5.6 சதவீதத்தை கட்டுப்படுத்திய அதேநேரம், ஏற்றுமதியில் ஒரு சரிவைக் கொடுத்துள்ளது. இந்தச் சரிவுகள் சந்தையில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான நெருக்கடியை அதிகரிக்க வைக்கின்றது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இறக்குமதி கடும் பற்றாக்குறைக்கு வழி வகுத்துள்ளது.

உதாரணமாக 2002யை எடுத்து ஆராய்ந்தால் அவை அப்பட்டமாக வெளிபடுத்தப்பட்டு நிற்கின்றது. 2002இல் உலகின் முன்னணி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கோடி டாலரில்


2002ஆம் ஆண்டு உலகளாவிய ஏற்றுமதி இறக்குமதி பிரதான நாடுகள் சார்ந்த அட்டவணையை நாம் மேலே காண்கின்றோம். உலகமயமாதலின் நேரடி விளைவு ஏற்றுமதி இறக்குமதியின் அளவை பல மடங்காக்கியுள்ளது. அமெரிக்காவின் ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையில் உள்ள ஏற்றத்தாழ்வு இரண்டுமடங்காகி உள்ளது. இந்தப் பற்றாக்குறை சர்வதேச நெருக்கடிக்கு இட்டுச் செல்லுகின்றது. அமெரிக்க டாலர் சர்வதேச நாணயமாக இருப்பதால், அதைக் கொண்டு பெறுமதியற்ற டாலர் நோட்டுகளை சந்தையில் தள்ளி விடுவதன் மூலம், இறக்குமதியிலான பற்றாக்குறையில் இருந்து தப்பி பிழைக்க முனைகின்றனர். டாலர் பெறுமதிக்கு ஏற்பட்ட சரிவு ஈரோவுடன் ஒப்பிடும் போது மிகக் குறுகிய காலத்தில் அண்ணளவாக 30 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டது. இதனால் சர்வதேச நாணயமாக தொடர்ந்தும் டாலர் இருப்பது என்பது கேள்விக்குள்ளாகின்றது. அன்னிய நிதிக் கையிருப்புகள் கணிசமாக ஈரோவுக்கு மாறிவருகின்றது. சர்வதேச வர்த்தகங்கள் கூட டாலருக்கு பதில், ஈரோ மூலம் நிகழத் தொடங்கியுள்ளது. இது கூட ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான முரண்பாட்டையே அதிகரிக்க வைத்துள்ளது. பொதுவாக பல தளத்தில் ஏற்றுமதிச் சந்தை ஏகாதிபத்தியத்துக்கு இடையில் கடும் நெருக்கடியை உருவாக்கி உள்ளதுடன், கடும் போட்டியுடன் போராட வைக்கின்றது. சூதாட்டங்கள் முதல் சதிகள் வரையிலான வர்த்தக ராஐதந்திர மொழியில், ஒன்றையொன்று குழிபறிக்கின்றது.


2000த்துடன் ஒப்பிடும் போது 2002இல் ஏற்றுமதி பல மடங்காகியுள்ளது. உலகமயமாதல் நிபந்தனைகள் ஏகாதிபத்தியத்தின் ஏற்றுமதியை திடீரென வீங்கவைத்துள்ளது. மறுபக்கத்தில் மூன்றாம் உலக நாடுகளின் ஏற்றுமதி அதாவது ஏகாதிபத்தியம் நோக்கிய இறக்குமதி மிக மலிவாகவே சூறையாடப்படுகின்றது. சர்வதேச ரீதியாக மூன்றாம் உலக நாடுகளின் பொருட்கள் மிகக் குறைந்த விலைக்கு வாங்கப்படுகின்றன. இதை தனியாக பிறிதொரு அத்தியாயத்தில் நான் தனியாக ஆராய உள்ளேன். ஏகாதிபத்தியம் மூன்றாம் உலக நாடுகளின் ஏற்றுமதிப் பொருட்களை சந்தைப் பெறுமானத்தில் குறைய வைத்துள்ளது. இதனால் ஏகாதிபத்திய நாடுகளின் நுகர்வின் அளவு அதிகரிப்பதுடன், உலகை அதிகம் சூறையாடுவது உலகமயமாகி விடுகின்றது. எதிர்மறையில் ஏகாதிபத்திய ஏற்றுமதிப் பொருட்கள் சந்தை விலையை அதிகரிக்க வைத்து, மூன்றாம் உலக நாடுகளை மேலும் ஆழமாகச் சூறையாடுவது அதிகரித்துள்ளது. இதன் மூலம் மூன்றாம் உலக நாட்டு மக்கள் சமூகத் தேவையைக் கூடப் பெறமுடியாத வகையில், இழிநிலைக்கு பெரும்பான்மை மக்கள் அன்றாடம் தள்ளப்படுகின்றனர். இப்படி மக்களை வரைமுறையின்றி சூறையாடும் ஏகாதிபத்தியம், யார் அதிகம் நுகர்வது என்ற போட்டியில் ஈடுபடுகின்றது. அதிகம் நுகரும் போது, மற்றவர் அதை இழக்க வேண்டும். இது நுகர்வின் அடிப்படையான இயங்கியல் விதி. அதிகம் நுகரும் போது, ஏழை நாட்டு மக்கள் நுகர்வு வீழ்ச்சி காணும் அதே நேரத்தில், போட்டி ஏகாதிபத்தியத்துக்கு இடையிலும் மோதல் நடக்கின்றது.


இந்த நிலையில் ஏகாதிபத்தியத்தின் ஏற்றுமதிகள் வெள்ளமாகவே திடீரென உலகெங்கும் திறந்து விடப்பட்டுள்ளது. இதுவே உலகமயமாதலின் சிறப்பான எடுப்பான வடிவமாக இங்கு காட்சி அளிக்கின்றது. ஒவ்வொரு வருடமும் நடக்கும் திடீர் ஏற்றுமதி அதிகரிப்புகள் பிரமிப்பைத் தரக் கூடியவை. 2003ஆம் ஆண்டை எடுத்து 2000, 2002யுடன் ஒப்பிட்டு பார்த்தாலே புரிந்து கொள்ளமுடியும்.

ஏற்றுமதி இறக்குமதி 2003இல் கோடி டாலரில்



2000க்கும் 2003க்கும் இடையில் உலகளாவிய ஏற்றுமதி ஐந்து மடங்குக்கு மேலாகவே அதிகரித்தது. உலகமயமாதலில் உலகம் எப்படி திறந்துவிடப்பட்டுள்ள விபச்சாரச் சந்தையாக, குறுகிய காலத்தில் மாற்றப்பட்டது என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. இது நுகர்வின் வடிவங்களில் மிகத் தீவிரமான மாற்றத்தை உலகளவில் ஏற்படுத்தியுள்ளது. தேசிய நுகர்வு சார்ந்த பண்பாடுகள் சிதைக்கப்பட்ட அளவு பலமடங்காக இருப்பதை, சர்வதேச ஏற்றுமதி சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றது. தேசிய வளங்கள் சிதைந்து நலிந்து போவதையும், நுகர்வுப் பண்பாடுகள் குறுகிய காலத்தில் மாற்றப்பட்டதையும் எடுத்துக் காட்டுகின்றது. தேசிய நுகர்வு சார்ந்த பன்மையான பண்பாடு அழிக்கப்பட்டு, அதனிடத்தில் அன்னியரின் ஒற்றை நுகர்வு சார்ந்த பண்பாடு உலகளாவிய ஒன்Ùக திறந்துவிட்ட சந்தை உருவாக்குகின்றது. உண்மையில் தேசங்களின் சிதைவையே இது எடுத்துக்காட்டுகின்றது. உலகம் பன்னாட்டு நிறுவனங்களின் குறுகிய நலன் சார்ந்த உலகமயமாவதை எடுத்துக் காட்டுகின்றது.


2003இல் உலகின் முன்னணி ஏற்றுமதியாளனாக ஜெர்மனி மாறியது. 2000உடன் ஒப்பிடும் போது 2003இல் ஏற்றுமதி ஐந்து மடங்காக மாறிய போது, இது ஏகாதிபத்தியத்துக்கு இடையில் ஒரே மாதிரி நிகழவில்லை. ஜெர்மனிய ஏற்றுமதி 9 மடங்கு மேலாக அதிகரித்தது. சீன ஏற்றுமதி 10 மடங்கு மேலாக அதிகரித்தது. ஜப்பானின் ஏற்றுமதி 6 மடங்கு மேலாக அதிகரித்தது. அமெரிக்காவின் ஏற்றுமதி 2.6 மடங்காக அதிகரித்தது. தீவிரமான ஏகாதிபத்திய மோதலூடாகவே இந்த அதிகரிப்பு நிகழ்கின்றது. உலகமயமாதலின் இலாபங்களைப் பகிர்வதில் கடுமையான ஏகாதிபத்திய முரண்பாடுகள் இருப்பதை இது எடுத்துக்காட்டுகின்றது. இதற்குள் சீனாவும் குதித்துள்ளது. சோவியத் சிதைவின் பின்பு புதிதாக சீனா களத்தில் குதித்துள்ளது.

ஐரோப்பிய தேசங்களுக்கிடையே யுத்தங்கள்.

உலக நாடுகள் ஒவ்வொன்றும் தமது பக்கத்து நாட்டுடன் உறவு அல்லது பகையை எப்படி வளர்த்துக்கொண்டன என்று ஆராயப்போனால் மூன்று அல்லது நான்கு காரணங்களுக்குள் இதற்கான விடை அடங்கிவிடும்.

எல்லைப்பகுதி நிலப்பரப்பு, எல்லையோர மக்களின் மொழி, கலாசாரம், சமயம் ஆகியவை, அடுத்த தேசத்தின் அரசியல் ஸ்திரத்தன்மை அல்லது ஸ்திரமின்மை. அவ்வளவுதான்.

இந்தச்சில காரணங்களால்தான் உலகில் ஒவ்வொரு தேசமும் தன் அடுத்த தேசத்துடன் எப்போதும் மல்லுக்கு நிற்கவேண்டியதாகிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல ஐரோப்பிய தேசங்கள் மேற்கண்ட காரணங்களை முன்னிட்டு எந்தக்கணமும் தன் அண்டை தேசத்துடன் ஒரு முழுநீள யுத்தம் செய்யத் தயாராக இருந்தன.

ஒவ்வொரு தேசமும், அடுத்த தேசத்துக்குத் தெரியாமல் தன்னுடைய ஆயுதபலத்தை அதிகரித்துக்கொண்டிருந்தது. ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை நம்பமுடியாத அளவுக்கு உயர்த்திக்கொண்டிருந்தது.

ராணுவத்துக்கு ஒதுக்கும் வருடாந்தர நிதியின் அளவு, இதர இனங்களுக்கு ஒதுக்கப்படும் தொகையைக் காட்டிலும் குறைந்தது பத்து மடங்கு அதிகமாக இருந்தது.

இவையெல்லாம் ஒரு தேசம் அல்லது இரண்டு மூன்று தேசங்களில் நடந்த காரியங்கள் அல்ல. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த ஐரோப்பாவும் இப்படித்தான் இருந்தது. ஆனால், ஒவ்வொரு தேசமும் தன்னுடைய இந்தப் போர்த்தயாரிப்பு நடவடிக்கை மற்றவர்களுக்குத் தெரியாது என்றே நம்பிக்கொண்டிருந்தன.

உலகப்போர் என்று யாரும் சொல்லிவிட்டு ஆரம்பிக்கவில்லை. ஒரு சிறிய எல்லையோரத் தகராறாகத்தான் அது தொடங்கி முடிவுபெற்றிருக்க வேண்டும்.

துரதிருஷ்டவசமாக அந்தச் சிறு எல்லைத்தகராறு ஆஸ்திரிய இளவரசர் ஃப்ரான்சிஸ் பெர்ட்டினாண்டின் படுகொலைக்குக் காரணமாக அமைந்துவிட, ஆஸ்திரியாவுக்கும் செர்பியாவுக்கும் யுத்தம் மூண்டது.

இதன் காரணத்தைச் சற்று சுருக்கமாகப் பார்த்துவிட்டு மேலே போய்விடலாம்.

இன்றைக்கு ஆஸ்திரியா, ஹங்கேரி என்று இரண்டு தேசங்கள் வரைபடத்தில் இருக்கின்றன அல்லவா?

ஆனால், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவை ஒரே தேசமாக இருந்தன. ரஷ்ய எல்லையை ஒட்டி அமைந்திருந்த ஒரு ஐரோப்பிய தேசம் அது. அந்த எல்லையோர தேசத்தின் எல்லைப்பகுதி, இன்றைக்கு போஸ்னியா என்று அழைக்கப்படுகிறது. அப்போது அதுவும் ஆஸ்திரியாவின் ஒரு பகுதிதான்.

ஒரே தேசம் என்றாலும் போஸ்னிய மக்களின் இனம் வேறு. அவர்கள் ஸ்லாவ் என்று அழைக்கப்பட்டார்கள். போஸ்னியாவுக்குப் பக்கத்தில் இருந்த செர்பியாவிலும் பெரும்பான்மை மக்கள் ஸ்லாவ் இனத்தைச் சேர்ந்தவர்கள்தாம்.

ஆஸ்திரிய மக்களின் மொழி, கலாசாரம் ஆகியவற்றோடு எந்த சம்பந்தமும் இல்லாத போஸ்னியப் பகுதி ஸ்லாவ் இன மக்கள் தமது உடன்பிறப்புகள் என்றும், போஸ்னியாவை எப்படியாவது ஆஸ்திரியாவின் பிடியிலிருந்து விடுவித்துத் தன்னுடன் இணைத்துக்கொண்டுவிடவேண்டுமென்றும் செர்பியா விரும்பியது.

தொடர்ந்து போஸ்னிய ஸ்லாவ்களைத் தூண்டிவிட்டு உள்நாட்டுக் கலவரங்களை அவ்வப்போது நடத்திக்கொண்டிருந்தது.

இந்தக் கலவரம் அல்லது கிளர்ச்சியை அடக்குவதற்காகத்தான் ஆஸ்திரிய இளவரசர் (அவர் ராணுவத்தளபதியும் கூட.) ஃப்ரான்சிஸ் பெர்ட்டினாண்ட் போஸ்னியப் பகுதிக்கு வந்து தங்கியிருந்தார்.

செரஜிவோ என்கிற நகரில் கூடாரம் அடித்துத் தங்கியிருந்த இளவரசரை, சரஜீவோ காவ்ரிலோ ப்ரின்ஸி என்கிற ஒரு ஸ்லாவ் இன இளைஞன் சுட்டுக்கொன்றான்.

ஆகவே, ஆஸ்திரியா இந்தப் படுகொலைக்கு செர்பியாதான் காரணம் என்று சொல்லி, செர்பியாவின் மீது போர் தொடுத்தது. போரில் ஆஸ்திரியா மட்டும் ஈடுபட்டிருக்கலாம்.

ஆனால், தனது அப்போதைய நட்பு நாடான ஜெர்மனியை உதவிக்கு அழைத்தது. ஆஸ்திரியாவுக்கு ஒரு ஜெர்மனி என்றால், செர்பியாவுக்கு உதவ ரஷ்யா முன்வந்தது.

எப்படி ஆஸ்திரியா, ஜெர்மனி என்கிற இரு தேசங்களுக்குமே செர்பியாவைக் கைப்பற்றும் ரகசிய வேட்கை இருந்ததோ, அதேபோலத்தான் ரஷ்யாவுக்கும் ஆசை இருந்தது. எதிரிக்கும் நண்பனுக்கும் தன்னை விழுங்கத்தான் ஆசை என்பது தெரியாத செர்பியா, அந்த யுத்தத்தின் சரியான பகடைக்காய் ஆனது.

ரஷ்யாவுக்கு ஜெர்மனியை ஒழித்துக்கட்டவேண்டும் என்கிற இன்னொரு ஆசையும் இருந்தது. அதுவும் போஸ்னியாவுக்குத் தெரியாது.

அது 1914-ம் வருடம். ஜூலை மாதம், 28-ம் தேதி. நான்கு ஐரோப்பிய தேசங்கள் பங்குகொண்ட அந்த பிரசித்தி பெற்ற யுத்தம் ஆரம்பமானது.

யுத்தம் தொடங்கியபோதே ஒட்டுமொத்த ஐரோப்பாவும், பிரான்ஸ் இப்போது என்ன செய்யப்போகிறது என்றுதான் பார்த்தது. ஏனென்றால் பிரான்ஸுக்கும் ஜெர்மனிக்கும் பெரும்பகை இருந்த காலம் அது.

ஜெர்மனிக்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுக்க பிரான்ஸ் சமயம் பார்த்துக்கொண்டிருந்தது. இதை அறிந்த ஜெர்மனி, எங்கே பிரான்ஸ் மூக்கை நுழைத்தால் யுத்தத்தின் நோக்கம் திசைமாறிவிடுமோ, செர்பியாவைக் கைப்பற்ற முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சி, பிரான்ஸ் நடுநிலைமை வகிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

பிரான்ஸுக்கு அப்போது நடுநிலைமை வகிக்கும் உத்தேசமெல்லாம் இல்லை. மாபெரும் யுத்தம் ஒன்றுக்கான ஆயத்தங்களைச் செய்துவைத்துவிட்டு, சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்த தேசம் அது. தவறவிடுமா? ஆகவே எப்படியும் யுத்தத்தில் பங்குபெற்றே தீர்வது என்று முடிவு செய்தது.

ஜெர்மனிக்குக் கோபம் வந்தது. செர்பியா ஒரு கொசு. அதை எப்போது வேண்டுமானாலும் அடித்துக்கொல்லலாம்; முதலில் பிரான்ஸை ஒழித்துவிடலாம் என்று முடிவு செய்து, யாரும் எதிர்பாராத கணத்தில் பெல்ஜியம் வழியாக பிரான்ஸை நோக்கி ஒரு பெரும் படையை அனுப்பிவிட்டது.

இங்கும் பிழை. ஒரு தேசத்தின் வழியே இன்னொரு தேசத்துக்குப் படை அனுப்புவதென்றால், வழியில் உள்ள தேசத்திடம் முதலில் அனுமதி கேட்கவேண்டும். ஜெர்மனி அதைச் செய்யவில்லை. அதுவும் யுத்தத்தில் நடுநிலைமை வகிப்பதாக பெல்ஜியம் அறிவித்திருந்த சமயம் அது.

நடுநிலைமை வகிக்கும் தேசத்தின் வழியாக ஜெர்மனி படைகளை அனுப்புவது வீண் வம்பு மட்டுமே என்று கருத்துத் தெரிவித்த பிரிட்டன், ஜெர்மனிக்கு எதிராகப் போரில் குதித்தது. பிரிட்டன் போரில் இறங்கியது தெரிந்ததும், அதன் நட்பு நாடான ஜப்பானும் களத்தில் இறங்கியது. ஜப்பானுக்கு ஜெர்மனியைப் பிடிக்காது.

எல்லோருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துக்குத் தான் காத்திருந்தார்கள். ஆகவே இந்த ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததும் தவறவிடாமல் பயன்படுத்திக் கொண்டுவிட்டார்கள்.

இந்தப் பக்கம் ருமேனியா, பிரிட்டனுடன் சேர்ந்துகொண்டது. அந்தப்பக்கம் பல்கேரியா, ஜெர்மனியுடன் இணைந்துகொண்டது. இங்கே சீனாவும் பிரிட்டனை ஆதரித்தது.

துருக்கி, ஜெர்மானிய அணியில் இணைந்தது. ஒட்டாமான்களின் துருக்கி. ஐரோப்பாவை மத்திய ஆசியாவுடன் இணைக்கும் பாலம்போல் அமைந்திருந்த துருக்கி. மாபெரும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை மத்தியக்கிழக்கில் வேரூன்ற வழிசெய்த துருக்கி.

பாலஸ்தீனத்தை அப்போது ஆண்டுகொண்டிருந்த துருக்கி.

ஐரோப்பா எப்படி போப்பாண்டவருக்கு அடிபணிந்து நடந்ததோ, அதுமாதிரி அப்போது ஒட்டுமொத்த மத்திய ஆசியாவும் இஸ்தான்புல் அதிகார மையத்துக்குக் கட்டுப்பட்டே நடந்தது.

பெரிய அளவில் இன மோதல்களுக்கோ, இட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கோ வழியில்லாமல் ஒரு கட்டுக்கோப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது ஒட்டாமான் துருக்கியப் பேரரசு.

சுல்தான், யூதர்களை அரவணைத்துத்தான் போனார். கிறிஸ்துவர்களும் அங்கே பிரச்னையின்றி வாழமுடிந்தது. ஒருவருக்கொருவர் பகைவர்தான் என்று உள்மனத்தில் எண்ணம் வேரூன்றியிருந்தாலும் வெளியில் தெரியாத வண்ணம் பூசி மெழுகத் தெரிந்திருந்தது அவர்களுக்கு. பகையையோ, பிளவையோ தவிர்க்கமுடியாது என்றாலும் தள்ளிப்போட முடியும் என்பது தெரிந்திருந்தது.

ஆனால் இதெல்லாமே உள்நாட்டு விவகாரங்கள். ஒட்டுமொத்த ஐரோப்பாவும் பங்குபெறும் ஒரு யுத்தம் என்று வரும்போது, துருக்கியும் ஒரு நிலையை எடுத்து பகிரங்கமாக அறிவிக்கத்தான் வேண்டியிருந்தது. துருக்கி சுல்தான், ஜெர்மானிய ஆதரவு நிலை எடுத்தார். ஆகவே, பிரிட்டன், துருக்கியின் எதிரி தேசமாகிப்போனது.

நவீன காலத்தில், குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாலஸ்தீன் பிரச்னை புதிய பரிமாணம் எடுப்பதற்குத் தொடக்கக் கண்ணியாக இருந்த சம்பவம் இதுதான்.

முதல் உலகப்போரில் பங்குபெற்ற ஒவ்வொரு தேசத்துக்கும் இருந்த அரசியல் காரணங்கள், நியாயங்கள் போன்றவை இந்த வரலாற்றுக்குச் சம்பந்தமில்லாதவை.

ஆனால் கவனிக்கவேண்டிய ஒரு விஷயம் உண்டு. இந்த யுத்தத்தில் பங்குபெற்ற யூதர்கள் பற்றிய குறிப்பு அது.

தமக்கென ஒரு தனிநாடு வேண்டுமென்று போராடிக்கொண்டிருந்த யூதர்கள், அந்தத் தனிநாடு பாலஸ்தீனில்தான் அமையவேண்டும் என்று விரும்பிய யூதர்கள், சொந்த இடம் என்று ஒன்று இல்லாமல் ஐரோப்பாவெங்கும் பரவி வசித்துக்கொண்டிருந்த யூதர்கள், யுத்தம் ஆரம்பித்தபோது ஒவ்வொரு ஐரோப்பிய தேசத்திலும் இருந்த யூதர்கள் போரில் தம்மையும் இணைத்துக்கொண்டார்கள்.

அதாவது, ஒவ்வொரு தேசமும் யுத்தம் தொடங்குமுன் அளித்த வாக்குறுதிகளில் யூதர்களுக்கும் ஏதோ கொஞ்சம் நம்பிக்கையளிக்கும் விதத்தில் பேசியிருந்தன. ஆகவே, யுத்தத்தில் பங்கெடுப்பதின்மூலம், யுத்தம் முடிந்தபிறகு சில சாதகமான பலன்களைப் பெறமுடியும் என்று யூதர்கள் கருதினார்கள்.

சரித்திரத்தில் அதற்குமுன் எந்த சந்தர்ப்பத்திலும் ‘ஒரே இனம்’ என்கிற அடையாளத்தை எக்காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்காமல் போராடிய யூதர்கள், முதல் முறையாக தாம் வாழும் தேசங்களின் சார்பில் யுத்தத்தில் பங்கெடுத்தார்கள்.

அதாவது ஒரு படையில் யூதர்கள் இருக்கிறார்கள் என்றால், எதிரிப் படையிலும் அந்நாட்டு யூதர்கள் இருப்பார்கள்.

தேசத்துக்காக, சொந்த இனத்தைச் சேர்ந்தவரோடு யுத்தம் புரிந்தாகவேண்டிய நெருக்கடி! யூதர்களை யூதர்களே அடித்துக் கொல்ல வேண்டிய கட்டாயம்.

யுத்தத்துக்குப் பிறகு ஐரோப்பிய தேசங்களின் அரசியல் சூழ்நிலை மிக நிச்சயமாக மாறும்; ஒவ்வொரு தேசமும் அதுவரை எடுக்காத பல புதிய முடிவுகளை எடுத்தே தீரும் என்று யூதர்கள் நினைத்தார்கள். அப்படியரு சூழல் வரும்போது, எந்த தேசம் வெற்றி பெற்ற அணியில் இருக்கும், எது தோல்வியுற்ற அணியில் இருக்கும் என்று இப்போது சொல்ல முடியாது. யார் வென்றாலும் யூதர்களின் தனிநாடு கோரிக்கை ஏற்கப்பட்டாக வேண்டும்.

பாலஸ்தீனில் அவர்களுக்கான பங்கை உறுதி செய்தாகவேண்டும். யார் ஜெயிப்பார்கள் என்று ஜோசியம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஆகவே, எல்லா தேசங்களின் படைகளிலும் யூதர்கள் இருந்தாக வேண்டியது அவசியம்.

களப்பலி போல சொந்தச் சகோதரர்கள் சிலரை இழந்தே தீரவேண்டியிருக்கும். ஆனால் நீண்டநாள் நோக்கில், யூதர்களுக்கான தனிநாடு என்கிற இலக்கை அடையவேண்டுமானால் இது தவிர்க்கவே முடியாதது என்று அவர்கள் நினைத்தார்கள்.

ஆகவே, ஐரோப்பிய யூதர்கள் அத்தனை பேரும் தத்தமது தேசத்தின் ராணுவத்துடன் தம்மை இணைத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

பல தேசங்களின் ராணுவத்தில் யூதப் படைப்பிரிவே தனியாக அமைக்கப்பட்டது. அவர்கள் எதிரி தேசத்தின் யூதப் படையுடனேயே மோத வேண்டி இருந்தது.

எத்தனை உணர்ச்சிமயமான கட்டம்! ஆனாலும் தம் உணர்ச்சியைக் காட்டிக்கொள்ளாமல் யூதர்கள் உலக யுத்தத்தில் பங்கெடுத்தார்கள். நூற்றுக்கணக்கில். ஆயிரக்கணக்கில். லட்சக்கணக்கில்!ஒரே நோக்கம்தான். ஒரே எதிர்பார்ப்புதான். யுத்தத்தின் இறுதியில் தமக்கொரு தனிநாடு!

முதல் உலகப்போரில் யூதர்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல.

போருக்குப் பின் ஐரோப்பிய அரசியல் சூழலில் இருந்த வெப்பம் தணிந்து, யாராவது கரம் கொடுத்துத் தங்களைத் தூக்கிவிடமாட்டார்களா?

தங்களுக்கென்று ஒரு தனிதேசம் அமையாதா? என்கிற மாபெரும் எதிர்பார்ப்பு அவர்களிடம் இருந்தது. கொள்கைரீதியில் அவர்கள் தமக்கான அணியைத் தேர்ந்தெடுக்கும் நிலையில் எல்லாம் இல்லை. எல்லா அணிகளிலும் இருப்பது.

போரில் ஜெயித்தாலும் சரி, தோற்றாலும் சரி. ஜெயிக்கிற அணி எதுவானாலும் அதில் யூதர்களும் இருப்பார்கள். சொல்லிக்கொள்ள சௌகரியமாக, தாங்கள் வாழும் தேசத்தின் படையில் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்வது.

இப்படியரு சிந்தனைகூட உலகில் வேறு எந்த இனத்துக்கும் எந்தக் காலத்திலும் தோன்றியதில்லை. உண்மையில் ஐரோப்பாவெங்கும் யூதர்கள் வசித்து வந்தார்கள் என்றாலும் எந்த தேசத்தின் குடிமக்களாகவும் மனத்தளவில் அவர்கள் போரில் பங்கெடுக்கவில்லை. மாறாக, யூத குலத்தின் நலனுக்கு போரின் முடிவில் யாராவது உதவுவார்கள் என்கிற ஒரே ஒரு எதிர்பார்ப்புதான்.

ஒருபுறம், சாமானிய யூதர்கள் படைகளில் சேர்ந்து யுத்தகளத்துக்குப் போய்விட, மறுபுறம் யூதத் தலைவர்களும் ராஜதந்திரிகளும் அரசியல் மேல்மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடத்த ஆரம்பித்தார்கள்.

போர்ச்செலவுகளுக்காக ஏராளமான பணத்தை யூதர்கள் வசூலித்து வழங்கினார்கள்.

இதுவும் எல்லா தேசங்களுக்கும். எப்படி நம் தேசத்தில், தேர்தல் சமயங்களில் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள் எல்லாக் கட்சிகளுக்கும் நிதி உதவி செய்யுமோ அதே மாதிரி. எந்தக் கட்சி வென்றாலும் தமது தொழில் தடையின்றி அவர்களுக்கு நடந்தாக வேண்டும்.

யூதர்களுக்கும் யார் போரில் வென்றாலும் தங்களுக்கு இஸ்ரேலை உருவாக்கித் தரவேண்டும். அவ்வளவுதான்.

குறிப்பாக ஜெர்மனிக்கு எதிராக பிரிட்டன் போரில் குதித்தவுடன் இங்கிலாந்தில் வசித்துவந்த யூதர்கள் அதுவரை இல்லாத வேகத்தில் தமது அரசை ஆதரிக்க ஆரம்பித்தார்கள். லட்சக்கணக்கில் பணம் வசூலித்து போர்நிதியாக அளித்தார்கள். இப்படி வசூல் நடத்திப் பணம் தந்தது தவிர, அன்றைக்கு இங்கிலாந்தில் வசித்துவந்த பெரும் பணக்கார யூத வர்த்தகர்கள் அரசின் பல செலவினங்களைத் தாமே நேரடியாகவும் ஏற்றுக்கொண்டார்கள்.

உதாரணமாக, ராணுவத்தினருக்கு ஆடைகள் தைப்பது, மருந்துப்பொருள்கள் வாங்குவது, ஆயுதங்கள் வாங்கிச் சேகரிப்பது போன்ற பல செலவினங்களுக்கு யூத வர்த்தக முதலைகளே நேரடியாகப் பணம் தந்துவிடுவார்கள். பொருள்கள் நேரடியாக அரசுக்குப் போய்விடும். பணத்தை மட்டும் இவர்களிடம் வாங்கிக்கொள்ளவேண்டும்.

இதைவிட யூதர்கள் பிரிட்டனுக்குச் செய்த மகத்தான உதவி ஒன்று உண்டு. ஜெர்மனியில் உள்ள யூதர்களின் உதவியுடன் ஜெர்மானியப் படைகளின் இலக்கு, செல்லும் பாதை, தீட்டும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மிக முக்கிய விவரங்களைச் சேகரித்து ரகசியமாக பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிவித்து வந்தார்கள்.

ஜெர்மனி யூதர்கள், ஜெர்மன் ராணுவத்தில் இடம்பெற்று அதே பிரிட்டனை எதிர்த்துக்கொண்டிருந்தார்கள் என்றபோதும் இந்தப் பணியும் எவ்வித மனத்தடங்கலும் இல்லாமல் நடக்கத்தான் செய்தது! (இதே வேலையை ஜெர்மன் ராணுவத்துக்காக பிரிட்டன் யூதர்களும் செய்திருக்க வேண்டும். ஆனால் அதற்கான உரிய ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை.)

புரிந்துகொள்வதற்கு மிகவும் சிக்கலான விஷயமாக இது தோன்றலாம். உண்மை இதுதான்.

யூதர்கள் எந்த தேசத்தின் ராணுவத்தில் இருந்தாலும் அவர்களுக்கு அந்தந்த தேசத்தின்மீது பக்தியோ, பெரிய ஈடுபாடோ கிடையாது. மாறாக, தமது இனத்துக்காகச் செய்யும் கடமையாகவே அதைக் கருதினார்கள். யுத்தத்துக்குப் பிறகு இஸ்ரேல் உருவாக வேண்டும். அதுதான். அது ஒன்றுமட்டும்தான் அவர்களது நோக்கம்.

முதல் உலகப்போரில் கலந்துகொண்ட யூதப் பிரபலங்கள் யார் யார் என்று தெரிந்தால் ஆச்சர்யமாக இருக்கும். புகழ்பெற்ற தத்துவஞானி லுட்விக் விட்ஜென்ஸ்டைன் இந்தப் போரில் ரஷ்யப் படையின் ஒரு பிரிவுக்குத் தலைமை தாங்கி ஆஸ்திரியாவில் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்.

ஐ.நாவின் மனித உரிமை கமிஷனின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட (அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டுடன் இணைந்து இப்பொறுப்பை வகித்தவர்) ரெனே கேஸின் முதல் உலகப்போரில் ஈடுபட்ட பிரெஞ்சுப் படையில் பணியாற்றியவர். போரில் மிகப்பலமான காயமடைந்து பின்னால் அதனாலேயே பிரான்ஸ் அரசின் மிக உயர்ந்த விருதைப் பெற்றவர்.
டைபாய்ட், பாராடைஃபாய்ட் காய்ச்சலுக்குக் காரணமான பாக்டீரியாவையும் அதற்கான மாற்று மருந்தையும் கண்டுபிடித்து உலக அளவில் இன்றும் கொண்டாடப்படும் மாபெரும் மருத்துவரான லுட்விக் ஹிர்ஸ்ஃபெட் யுத்த சமயத்தில் ஜெர்மானியப் படைகளுக்கான மருத்துவராக செர்பியாவில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்.

‘கான் வித் தி விண்ட்’ என்கிற புகழ்பெற்ற திரைப்படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தப் படத்தில் நடித்து உலகப்புகழ் பெற்ற யூதரான லெஸ்லி ஹோவர்ட் உலகப்போரில் துடிப்புமிக்க பிரிட்டிஷ் ராணுவ வீரர்! (இவர் இரண்டாம் உலகப்போரிலும் பிறகு பங்குபெற்றார்)

முதல் உலகப்போர் சமயத்தில்தான் யுத்தத்தில் ஹெலிகாப்டர்களின் பங்களிப்பு இடம்பெறத் தொடங்கியது. யுத்த சாத்தியங்களுக்கேற்ற வகையில் ஹெலிகாப்டரை வடிவமைத்து வெற்றிகரமாக இயக்கிக் காட்டியவரும் ஒரு யூதர்தான். அவர் பெயர் தியோடர் வோன் கர்மன். புடாபெஸ்ட் நகரைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர் அவர். ஆஸ்திரிய ஹங்கேரிய ராணுவத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர்.

முதல் உலகப்போரில் பங்குபெற்ற அத்தனை தேசங்களுமே வியந்து பாராட்டிய ஒரு அம்சம், இத்தாலியத் தயாரிப்பான போர்விமானங்கள். ஒரு சிறிய குறைபாடுகூடச் சொல்ல முடியாத வகையில் சிறப்பாக அதை வடிவமைத்து, தயாரித்துத் தருவதற்கு மூல முதற்காரணமாக இருந்தவர், இத்தாலியின் புகழ்பெற்ற கணித அறிஞர் விடோ வோல்டெரா. (அதுநாள் வரை போர் விமானங்களின் பிரதான எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஹைட்ரஜனுக்கு பதிலாக ஹீலியத்தைப் பயன்படுத்தலாம் என்றும் அதன்மூலம் விபத்து சாத்தியங்களைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்பதையும் கண்டுபிடித்துச் சொன்னவரான இவரும் ஒரு யூதர்தான்.

இதையெல்லாம் விட முக்கியம், போரில் ஜெர்மனி பயன்படுத்திய விஷவாயு ரசாயன வேதிப்பொருட்கள் சிலவற்றைக் கலந்து விஷ வாயுவை உருவாக்கி, அதை ஒரு போர் ஆயுதமாகவும் பயன்படுத்தமுடியும் என்று நிரூபித்துக்காட்டியது ஜெர்மனி என்றால், ஜெர்மனியின் இந்தத் திட்டத்தின் சூத்திரதாரியாக இருந்து செயல்வடிவமும் கொடுத்தவர் ஃப்ரிட்ஸ் ஹேபர் என்கிற வேதியியல் துறை விற்பன்னர். பின்னாளில் வேதியியல் துறையில் இவர் மேற்கொண்ட வேறுபல முக்கிய ஆய்வுகளுக்காகவும் சாதனைகளுக்காகவும் நோபல் பரிசுகூடக் கிடைத்தது. ஹேபரும் ஒரு யூதர்தான்!

மேற்சொன்ன உதாரணங்களைத் தொகுத்துப் பார்த்தால் ஓர் உண்மை புரியலாம்.

உலகப்போரில் கூட களத்தில் இறங்கிப் பங்களித்ததைக் காட்டிலும் யூதர்கள், யுத்தத்தின் பின்னணியில் நின்று செலுத்தக்கூடிய சக்திகளாகவே பெரும்பாலும் இருந்திருக்கிறார்கள் என்பதே அது.

ஒரு சில தேசங்களில் மட்டும்தான் இவ்வாறு என்றில்லை. ஐரோப்பா முழுவதிலுமே, எங்கெல்லாம் யுத்த சத்தம் கேட்டுக்கொண்டிருந்ததோ, அங்கெல்லாம் யூதர்கள் தமது முழுத்திறமையைச் செலுத்திப் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள்.

ஆயிரக்கணக்கான சாதாரண ராணுவ வீரர்களை யூதகுலம் தராமல் இல்லை. ஆனாலும் இத்தகைய அதிபுத்திசாலிகள்தான் போரின் முடிவுகளைத் தீர்மானிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.

இன்றைக்கு வரை ஜெர்மனியின் விஷவாயுத்தாக்குதல் பேசப்படும் ஒரு பொருளாக இருக்கிறது. இன்றைக்கு வரை டைபாய்ட் மருந்து நமக்கு வேண்டித்தான் இருக்கிறது. இன்றைக்கு வரை போர் விமானங்களில் ஹீலியம்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இவையெல்லாமே முதல் உலகப்போரின் விளைவுகள்.

அந்தச் சூழ்நிலையில், அப்போதைய தேவைக்கேற்பக் கண்டுபிடிக்கப்பட்டவை அல்லது அறிமுகப்படுத்தப்பட்டவை. அத்தனையையும் செய்தவர்கள் யூதர்கள்தான்!

ஏன் செய்தார்கள்? ஐரோப்பியப் பங்காளிச் சண்டையில் யூதர்களுக்கு என்ன அக்கறை என்று கேட்டால் அதற்கான பதில் முன்னர் சொன்னதுதான்!

அவர்களுக்கு யுத்தத்தில் அல்ல; யுத்தத்தின் முடிவில் தமக்கொரு தனிநாடு கிடைக்காதா என்கிற எதிர்பார்ப்பு இருந்ததுதான் இதற்கெல்லாம் ஒரே காரணம். (முதல் உலக யுத்தத்தில் மொத்தம் ஒருலட்சம் ரஷ்ய யூதர்கள் கொல்லப்பட்டார்கள். நாற்பதாயிரம் ஆஸ்திரிய யூதர்கள், பன்னிரண்டாயிரம் ஜெர்மானிய யூதர்கள், எட்டாயிரத்து அறுநூறு பிரிட்டிஷ் யூதர்கள், ஒன்பதாயிரத்து ஐந்நூறு பிரான்ஸ் யூதர்கள் கொல்லப்பட்டதாக இன்றைக்கு இஸ்ரேல் புள்ளிவிவரம் தருகிறது.)

யுத்தத்தில் அமெரிக்கா சற்று தாமதமாகப் பங்குபெற்றதால் உயிரிழந்த அமெரிக்க யூதர்களின் எண்ணிக்கை மற்ற நாட்டு யூதர்களோடு ஒப்பிடுகையில் கொஞ்சம் குறைவுதான். (மூவாயிரத்து ஐந்நூறு.)

ஐரோப்பாவுக்குச் சம்பந்தமே இல்லாமல் பாலஸ்தீனில் வசித்துக்கொண்டிருந்த யூதர்களும் யுத்தத்தில் பங்குபெறுவதற்காக பிரிட்டனுக்குப் போயிருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் ஒட்டாமான் அரசால் நாடுகடத்தப்பட்டவர்கள் என்று இஸ்ரேல் அரசுத்தரப்பு வெளியிட்டிருக்கும் போர்க்கால அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஆனால், ஒட்டாமான் துருக்கியப் பேரரசு யூதர்களை இப்படி மொத்தமாக பல்லாயிரக்கணக்கில் வெளியேற்றியதாக வேறு எந்த சரித்திர நூலிலும் குறிப்புகள் இல்லை. சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள், கலவரங்களைத் தூண்டியவர்கள் அல்லது பங்குபெற்றவர்கள் எனச் சில நூறுபேர் அவ்வப்போது நாடுகடத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஐயாயிரம், பத்தாயிரம் என்று பாலஸ்தீனிலிருந்து யூதர்கள் நாடுகடத்தப்பட்டதாக குறிப்பாக ஒட்டாமான்களின் காலத்தில் ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

மாறாக, துருக்கிப் பேரரசின் பல்வேறு பகுதிகளில் வசித்துக்கொண்டிருந்த யூதர்கள் பாலஸ்தீனுக்கு இடம்பெயர அரசே உதவி செய்திருக்கிறது.

உலகப்போர் தொடங்கிய பிறகு பாதுகாப்புக் காரணங்களுக்காக சுமார் எழுநூறு பாலஸ்தீன் யூதர்கள் நாடுகடத்தப்பட்டிருக்கிறார்கள்; அவ்வளவுதான்.

உலக யுத்தம் தொடங்கிய ஓராண்டு காலத்துக்குள்ளாக யுத்தத்தில் பிரிட்டனின் கை ஓங்குவது தெளிவாகத் தெரிந்தது. எப்படியும் பிரிட்டனின் கூட்டணிப்படைகள்தான் போரில் வெற்றிபெறும் என்பதை வல்லுநர்களால் ஊகித்துவிடமுடிந்தது.

இவ்விவரம் வெளியே வரத் தொடங்கிய மிகச் சில காலத்துக்குள்ளாக (சுமார் நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்குள் என்று வைத்துக்கொள்ளலாம்.)

யூதர்களின் பிரிட்டன் ஆதரவு நடவடிக்கைகள் அதிகரிக்கத் தொடங்கின.

பிரிட்டனில் வசித்துவந்த பணக்கார யூதர்களும் அதிகாரமையமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த யூதர்களும் பிரிட்டன் அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் அடிக்கடி கலந்து பேச ஆரம்பித்தார்கள்.

பிரிட்டனுக்கு யூதகுலம் எந்தெந்த வகையில், எந்தெந்த இனங்களில் அனுகூலமாக இருக்கமுடியும் என்று தெளிவாக விளக்கிச் சொல்லப்பட்டது.

இஸ்ரேல் என்றொரு தேசம் உருவாக பிரிட்டன் உதவி செய்யுமானால், பதிலுக்கு சாத்தியமான விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி பல கட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடந்தன.

கொள்கை அளவில் அப்போது இஸ்ரேல் உருவாவதற்கான வரலாற்று நியாயங்கள் உள்ளதாகவே பிரிட்டன் கருதியதையும் நாம் கவனிக்க வேண்டும். என்ன இருந்தாலும் அவர்களும் பாலஸ்தீனத்தின் பூர்வகுடிகள் என்பதை பிரிட்டன் நினைவு கூர்ந்தது.

தவிர யூதர்கள் பிரிட்டன் அரசுக்கு அளிக்கும் கண்மூடித்தனமான ஆதரவும் அவர்களைச் சிந்திக்க வைத்தது. ஒருவேளை இஸ்ரேல் உருவாவதற்கு தான் ஒரு முக்கியக் காரணமாக இருக்க முடியுமானால், பின்னாளில் மத்தியக் கிழக்கில் தனக்கொரு வலுவான தளமாக அத்தேசத்தை அமைத்துக்கொள்ள முடியுமே என்று பிரிட்டன் நினைத்தது.

அமெரிக்கா ஒரு மாபெரும் சக்தியாக உருவாகிக்கொண்டிருந்த நேரம் அது.
ஒரு வல்லரசாக அமெரிக்கா உருவாகிவிடுமோ என்கிற கவலை அனைத்து ஐரோப்பிய தேசங்களுக்குமே இருந்தது என்றாலும் பிரிட்டனுக்கு அக்கவலை மிகவும் அதிகமாகவே இருந்தது.

ஏனெனில் பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் என்கிற மூன்று தேசங்கள்தான் அப்போது உலகின் மாபெரும் வல்லரசுகள் என்று சொல்லப்பட்டன.

இந்த மூன்றையும் ஒதுக்கிவிட்டு எங்கே அமெரிக்கா முன்னால் வந்துவிடுமோ என்கிற பிரிட்டனின் நியாயமான கவலையைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

உலகெங்கும் தனது காலனிகள் மூலம் தனது வல்லரசுத்தன்மையைப் பறைசாற்றிக்கொண்டிருந்த பிரிட்டன், இஸ்ரேலை உருவாக்கித் தருவதன் மூலம் சர்வதேச அரசியல் அரங்கில் இன்னொரு புதுப்பரிமாணம் பெற்று, மேலும் முக்கியத்துவம் உள்ள தேசமாக உருவாவதற்கு இருந்த சாத்தியங்களை யோசித்துப் பார்த்தது.

அரசு என்பது என்ன? சில மனிதர்களால் ஆன ஓர் அமைப்பு. அவ்வளவுதானே? யூதர்களுக்கு இது மிக நன்றாகப் புரிந்திருந்ததால், பிரிட்டிஷ் அரசின் மிக உயர்ந்த பதவிகளில் இருந்தவர்களை மிக கவனமாக, ‘கவனித்து’க்கொள்ள ஆரம்பித்தார்கள். எல்லாமாகச் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தன.

புதன், 6 ஏப்ரல், 2011

வாழ்க்கையின் வடிவம்

வாழ்க்கையெனும் சோலையிலே வசந்த மலர்பறிக்கணும். நாம் வாழ்ந்தோம் என்ற முத்திரையை வரலாற்றில் புதிக்கணும் என்றுதான் எல்லோரும்நினைக்கிறார்கள். ஆனால் எல்லோராலும் அப்படி வாழ முடிவதில்லை. ஏனென்றால் அவர்களுடைய சிந்தனை வலுப்பெற்றதாக அமையாததே அதற்குக் காரணம் ஆகும். எந்தச் செயலுக்கும் அடிப்படை சிந்தனையே! அதைப்பற்றிச் சொல்லுகிறபோது “உங்களுடைய சிந்தனையை கவனியுங்கள், ஏனென்றால் அது செயலாக மாறுகிறது. உங்களுடைய செயலைக் கவனியுங்கள். ஏனென்றால் அது பழக்கமாக மாறுகிறது. உங்களுடைய பக்கத்தைக் கவனியுங்கள், ஏனென்றால் அது உங்கள் வழக்கமாக மாறுகிறது. உங்கள் வழக்கத்தைக் கவனியுங்கள். ஏனென்றால் அது உங்கள் வாழ்க்கையாக மாறுகிறது.” என்றான் ஒரு மேதை. ஆகவே எல்லாவற்றிற்கும் மூலாதாரம் சிந்தனையே என்பது தெளிவு.



வாழ்க்கையின் வடிவம்

சிந்தனையே மனிதனின் வாழ்க்கையை வடிவமைக்கிறது. எழுகின்ற சிந்தனைப் பெருக்கத்தை அளவிட்டு, வரையறை செய்து கூற முடியாது. நல்ல சிந்தனைகள், தீய சிந்தனைகள், மலட்டுச் சிந்தனைகள் என்பன ஒவ்வொருவருக்கும் உதயமாகிக்கொண்டே இருக்கும் என மனோத்த்துவ அறிஞர்கள் கூறுகிறார்கள். ஏற்படுகின்றன சிந்தனைகளை வடிவமைத்து சீர்செய்து செம்மைப்படுத்துவதற்கு உதவுவது இலட்சியம் என்று சொல்லப்படுகிற வாழ்க்கையின் இலக்கு. வாழ்க்கையின் இலட்சியம் அல்லது வாழ்நாளில் எதைச் சாதிக்க விரும்புகிறோம்என்பதை தீர்மானமாக நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். இலட்சியம் இல்லாத வாழ்க்கை, சேரும் இடம் தெரியாத கப்பலைப் போலத் தத்தளித்து மூழ்கிப்போகும். இலட்சியம் என்ன எனபதை முடிவு செய்த பின், ஏற்படுகிற சிந்தனைகளை இலட்சியத்தை நோக்கி திருப்பி விடல் எளிது. உயர்ந்த சிந்தனைகளால் உருவாக்கப்பட்டதாக இலட்சியம் இருக்க வேண்டும். மறந்தும் பிறருக்கு தீங்கு விளைவிப்பதாக சிந்தனை இருக்கக் கூடாது. சிந்தனைப்பயிர்களில் ஆரோக்கியமானவைகளை காழ்ப்புணர்ச்சி, தீங்கு போன்ற நோய்கள் தாக்காமல் வளர்க்க வேண்டும்.

பாரதியின் எண்ணம்

எதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்பதை திட்ட வட்டமாக கூறுகிறார் புரட்சிக் கவி.

“எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்”

நல்லதையே நாம் எண்ண வேண்டும். அப்படிச் செய்தால் எண்ணியது முடியும். தோல்விகளைக் கண்டு துவண்டு போகாத உறுதியான மனம் அமையப் பெறும். குழப்பம் இல்லாத தெளிந்த நல்லறிவு வாய்க்கப் பெறும் என்று, எண்ணம் அனைருக்கும் நன்மை விளைவிக்கும் படியாகவே இருக்க வேண்டும் என்கிறார்.

வள்ளுவரின் உள்ளல்:

மனத்தளவில் கூட தீயவற்றை நினைக்கக்கூடாது என்றும், அவ்வாறு தீய சிந்தனைகளை ஏற்பட்டாலே ஒருவன் அழிந்து விடுவான்என்றும் செப்புகிறார்.

“உள்ளத்தால் உள்ளலும் தீதே” என்ற வரிகளின் ஆழம் அளவிட முடியாது.

ஆகவே, சிந்தனை சிறப்பானதாக இருந்தால்தான் மனம் ஆற்றல் மிக்கதாக அமைந்து வெற்றியின் படிகளை ஒருவர் அடைய முடியும். இதைதான் ‘மனம் போல் வாழ்வு’, ‘மாந்தர் தம் உள்ளத்தனைய உயர்வு’ என்பவை குறிக்கும்.

சிந்தனைத் தொழிற்சாலை

மூளையையும் மனதையும் நல்ல சிந்தனைகளால் நிரப்பிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தீய சிந்தனை தாமாகவே மூளையில் ஏறி அமர்ந்துகொண்டு நம்மை தீய வழியில் நடத்திச் செல்லும்.

நிலத்தில் நெல்லை விளைவிக்கலாம். கரும்பை விளைவிக்கலாம். தென்னையை விளைவிக்கலாம்.

பெரும் பசிபோக்கும் தானியங்கள தரமாகப் பயரிடலாம். அவ்வாறு செய்யாமல் காலியாக விட்டோமானால், அதில் களைகளும், முட்புதர்களும் பெருகி அங்கு விஷ ஜந்துக்கள் வசிக்கும்படியாக ஆகிவிடும். அதுபோலவேதான் நற்சிந்தனைகளால் மூளையையும் மனதையும் நிரப்பாவிட்டால் அது பேயின் தொழிற்சாலை ஆகிவிடும். அது வாழ்க்கையையும் கெடுத்து சமுதாயத்தையும் நாசமாக்கிவிடும்.

சிந்தனைக் சுவடுகள்:

எதைப் பற்றி சிந்திக்கலாம் என்ற சந்தேகம் ஒருவருக்கு ஏற்படுவது இயல்பே. ஆகவே.

1. எந்நேரமும் இலட்சியத்தைப் பற்றி சிந்திக்கலாம்.

2 திறமைகளை வளர்த்துக் கொள்வதைப் பற்றிச்சிந்திக்கலாம்.

3. குறைகளைக் குறைக்கும் வழிகளைப் பற்றி சிந்திக்கலாம்.

4. நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவு செய்து பற்றி சிந்திக்கலாம்.

5. இலட்சியத்தை அடைவதற்கு உதவுபவர்கள் பற்றி சிந்திக்கலாம்.

6. புதியன படைத்தல் பற்றி சிந்திக்கலாம்.

7. மனித குலமேம்பாடு பற்றி சிந்திக்கலாம்.

8. வாய்ப்புகளைப் பற்றியும் அவற்றை முழுமையாகக் பயன்படுத்துவது பற்றியும் சிந்திக்கலாம்.

9. சாதனையாளர்களுக்கு ஏற்பட்ட தடங்கல்கள் சோதனைகளைப் பற்றியும், அவற்றை எவ்வாறு அவர்கள் முறியடித்தார்கள் என்பது பற்றியும் சிந்திக்கலாம்.

10. முன்னேற்றம் பற்றி முழுமயாக சிந்திக்கலாம்.

மனிதனுக்கு உதவும் அனைத்துக் கண்டுபிடிப்புகளும் சிந்தனையில் விளைந்த விலைமதிப்பிட முடியாத முத்துமணிகள். மனிதன் சிந்திக்காமல் இருந்திருந்தால் நவநாகரிக உலகம் கிடைத்திருக்காது. உலகம் முழுவதையும் ஒளி, ஒலி கற்றைக்குள் அடைத்து வைக்கும் விஞ்ஞானம் பிறந்திருக்காது. சிந்தனையே வெற்றியின் விதை. அதிலும் முன்னேறச் சிந்திப்பவர்கள் மட்டுமே முன்னேறுகிறார்கள். மற்றவர்களை இவ்வுலகம் உமிழ்ந்து விடுகிறது.

நல்ல சிந்தனை – நல்ல செயல் – நல்ல வாழ்க்கை – நல்ல வரலாறு.

உலக நடன தினம்.ஏப்ரல் 29 International Dance Day (World Dance Day)

ஏப்ரல் 29 - உலக நடன தினம். International Dance Day (World Dance Day)

இந்திய, இலங்கை போன்ற நாடுகளில் நடனக்கலை முக்கியத்துவம் பெற்ற ஒரு கலையாகவும், சில சந்தர்ப்பங்களில் தெய்வீகத்தன்மை கொண்ட ஒரு கலையாக விளங்குகின்ற போதிலும் கூட உலக நடன தினம் (World Dance Day) என்ற அடிப்படையில் ஏனைய உலக தினங்களைப் போல இத்தினம் ஒரு முக்கியத்துவம் பெற்ற தினமாக அனுட்டிக்கப் படுவதில்லை. உலக நடன தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 29ம் திகதி சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகிறது.

நடனம் (Dance ) எனும் போது நாட்டுக்கு நாடு, பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபடுவதை அவதானிக்கலாம். உதாரணமாக பரதம் தென்னிந்தியாவுக்குரிய, குறிப்பாக தமிழ்நாட்டுக்குரிய நடனமாகக் கருதப்படுகின்றது. இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் ‘பரதம்’ என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல் ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக்கலைஞரின் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம். ஆனால் மேற்கத்தேய நாடுகளில் முக்கியத்துவம் பெற்றுள்ள பாலே (மேற்கத்திய மரபு நடனம்), டிஸ்கோ, சல்சா, போல்கா, லம்பாடா, லிம்போ போன்ற நடனங்களில் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளைக் காண்பது அரிது.

பரத நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் ‘தாண்டவம்’ என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் ‘ஆனந்த தாண்டவம்’ என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் ‘ருத்ர தாண்டவம்’ என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் ‘லாஸ்யா’ என்று அழைக்கப்படுகிறது.
உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது ‘அடவு’ என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது ‘ஜதி’ எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம் ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன.பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒரு புறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யோகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார்.

இதேபோல இந்தியாவில் பிராந்தியத்திற்குப் பிராந்தியம் நடனக் கலை வேறுபட்ட வகைகளின் பிரபல்யம் அடைந்து காணப்படுகின்றது. இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட நடனம் சிறப்பாக இருக்கிறது. உதாரணமாக கீழே மாநில வாரியாக புகழ் பெற்ற நடனங்களை பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.

தமிழ்நாட்டில் - பரதநாட்டியம், கோலாட்டம், கும்மியாட்டம், தெருக்கூத்து, கேரளாவில் -சாக்கியார் கூத்து, கதகளி, மோகினிஆட்டம், ஓட்டம் துள்ளல், தாசி ஆட்டம், கூடி ஆட்டம், கிருஷ்ணா ஆட்டம்: ஆந்திராவில் - குச்சுப்பிடி, கோட்டம், வீதி பகவதம்: கர்நாடகாவில்; - யக்ஷகானம்: ஒரிசாவில் - ஒடிசி: மணிப்பூரில் - மணிப்புரி, லாய்-ஹரோபா: பஞ்சாப்பில் - பாங்ரா, கிட்டா: பீகாரில் - பிதேஷியா, ஜட்டா-ஜட்டின், லாகூய், நாச்சாரி: அஸ்ஸாமில்- பிகு : ஜம்மு-காஷ்மீரில் - சக்ரி, ரூக்ப் என்றவாறு அமைந்துள்ளன.

அதேபோல நடனக்கலையின் முக்கியத்துவம் கருதி இந்திய பாரம்பரிய நடனங்களை பின்வருமாறு சுருக்கமாக வகுக்கலாம். பரத நாட்டியம், குச்சிப்புடி, கதகளி, மோகினியாட்டம், ஒடிசி, மணிப்புரி.

இந்தியாவின் கிராமிய நடனங்களை பின்வருமாறு பிரித்தாரயலாம்.

தென்னிந்தியக் கிராமிய நடனங்கள் - தேவராட்டம், தொல்லு குனிதா, தண்டரியா, கரகம், கும்மி, கூட்டியாட்டம், படையணி, கோலம் (நடனம்) இலவா, நிக்கோபாரிய நடனம்
வடஇந்தியக் கிராமிய நடனங்கள் - டும்ஹால் இரூவ்ப், லாமா நடனம், பங்கி நடனம், பங்காரா, ராஸ், கிட்டா, தம்யால் டுப், லகூர், துராங், மாலி நடனம், தேரா தலி .

கிழக்கிந்தியக் கிராமிய நடனங்கள் நாகா நடனம், ஹஸாகிரி, மூங்கில் நடனம், நொங்கிறேம், பிகு, தங்-டா, கர்மா, பொனுங், பிரிதா ஓர் வ்ரிதா, ஹுர்க்கா பாவுல், காளி நாச், கண்ட பட்டுவா, பைக், தல்காய் . மேற்கிந்திய நடனங்கள் கெண்டி, பகோரியா நடனம், ஜாவார் இகர்பா, தாண்டியா, காலா டிண்டி, மண்டோ


இனி உலக நடன தினம் பற்றி சற்று நோக்குவோம்.

பொது மக்களிடையே நடனத்தின் முக்கியத்துவம் பற்றிய அறிவினை அதிகரிக்கச் செய்வதுடன் ஒவ்வொரு நாடுகளிலுமுள்ள அரசாங்கங்கள் நடனத்திற்குரிய முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட வேண்டும் என்பதுடன் முறையான நடனக்கல்வியை நாடுகளின் ஆரம்பக்கல்வியிலிருந்து உயர்கல்வி வரை வழங்குவதற்குத் தூண்டுவதும் அவற்றின் அவசியத்தை வலிறுறுத்துவதும் சர்வதேச நடனதினத்தின் முக்கிய இலக்காகும்.

1982ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனத்தின் கலாசார ஊக்குவிப்பின் கீழ் சர்வதேச நடன சபை International Dance Council (CID) ஏற்படுத்தப்பட்டது. இச்சபையின் மூலமாகவே உலக நடன தின ஏற்பாடுகள் 2003ம் ஆண்டிலிருந்து முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. 2003ம் ஆண்டு நடன தினம் பற்றிய செய்தியை வெளியிட்ட சர்வதேச நடன சபையின் International Dance Council (CID), தலைவர் பேராசிரியர் அல்கீஸ் ராப்டிஸ் Prof. Alkis Raftis அவர்கள் ‘உலகிலுள்ள இருநூறு நாடுகளின் அரைவாசிக்கும் மேற்பட்ட நாடுகளில் நடனத்திற்கு சட்டரீதியான அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை. பொதுவாக அரசாங்கங்கள் வரவு செலவு திட்டத்தில் நடனக்கலையை ஊக்குவிக்கும் வகையில் எத்தகைய நிதி ஒதுக்கீடுகளையும் செய்யப்படுவதுமில்லை. மேலும் தனிப்பட்ட அல்லது நிறுவன ரீதியான நடனக்கல்விக்கு அரச நிதி உதவிகள் கிடைப்பதில்லை” என்றார்.

2005ம் ஆண்டில் நடன தினத்தின் கவனம் ஆரம்பக் கல்வியின் ஊடாக நடனத்தைப் போதிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. தனிப்பட்ட நடனப்பயிற்சியாளர்கள், நடன நிறுவனங்கள் தமது பிரேரனைகளுடன் தத்தமது நாடுகளின் கல்வி, கலாசார அமைச்சுகளை தொடர்பு கொண்டு பாடசாலைகளில் நடன தின விழாவைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் நடனம் பற்றிய கட்டுரைகள் எழுதுதல், நடனம் பற்றிய புகைப்படங்களை காட்சிப் படுத்துதல், வீதி நடனங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்தல். நடனம் பற்றிய கருத்தரங்குகள் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்தல் போன்றன இத்தினத்தில் எதிர்பார்க்கப்பட்டது.

2006ம் ஆண்டில் சர்வதேச நடன சபையின் International Dance Council (CID), தலைவர் தனது நடன தின உரையில் குறிப்பிட்ட விடயம் இங்கு கவணத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதாவது ‘நடனக்கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள் நிறுவன ரீதியில் ஒன்றுபடாமையும்> இது விடயமாக அக்கரை செலுத்தாமல் இருப்பதுமே சர்வதேச ரீதியில் நடனக்கலை அங்கிகரிக்கப்படாமைக்கான காரணங்கள் என்றும் இதற்காக நடனக்கலைஞர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டு”மென அழைப்பு விடுத்திருந்தார்.

2007ம் ஆண்டில் நடன தினம் பிள்ளைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

2008ம் ஆண்டில் நடன தினத்தின் போது மேற்குறித்த விடயங்களை சுட்டிக்கட்டி அரசாங்கங்களும், அனுசரனையாளர்களும், ஊடகங்களும் இது விடயமாக ஈடுபடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 2009ம் ஆண்டிலும் நடனக் கலையை பிரபல்யப்படுத்துவதற்கு ஊடகங்களின் பங்களிப்பு வேண்டப்பட்டுள்ளது.

நடனதினத்துடன் இணைந்த வகையில் இது விடயமாக விழிப்புணச்சியை ஏற்படுத்து முகமாக ஐக்கிய அமெரிக்காவில் தேசிய நடன வாரத்தை National Dance Week (NDW) பிரகடனப்படுத்தி நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். 1981ல் நடனத்திற்கு முறையான அங்கிகாரத்தப் பெறுவதற்காக வேண்டி நடனங்கள் தொடர்பான ஒரு நிறுவனம் தேசிய நடனவாரத்திற்கான கூட்டு ஒன்றியமொன்றினை Coalition for National Dance Week உருவாக்கியுள்ளனர்.

இந்திய இலங்கை போன்ற நாடுகளில் வாழும் நடனக் கலைஞர்கள், பயிற்சியாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள், நடன அமைப்புகள் இவ்விடயத்தை எதிர்காலத்திலாவது கவனத்தில் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். நன்றி - இணையம்