ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

Avatar - 3Dயின் இன்னொரு பரிணாமம்

Avatar - 3Dயின் இன்னொரு பரிணாமம்

3D திரைப்படம் என்றவுடன், நமது முகத்தில் எறியப்படும் ஈட்டிகளையும், தீப்பந்துகளையும், குத்துகளையும் எதிர்பார்த்தே தான் சென்றேன். அதே போல் அட்டையால் செய்யப்பட்ட கண்ணாடியையும் எதிர்பார்த்திருந்தேன். டிக்கெட் விலையை 2 மடங்கு ஆக்கியிருந்தார்கள், oops.., ஆனால் கையில் அழகிய டிசைனர் கண்ணாடிகள். இனி 3D படம் பார்க்கும் போது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியும். கூச்சம் தேவையில்லை.




ஏற்கனவே மூன்று நான்கு 3D திரைப்படங்கள் இந்த வருட வெளியீட்டிற்கு தயாராகி இருப்பது, டிரைலர்களில் தெரிந்தது. அனைத்தும் அனிமேஷன் படங்கள். சரி அவதாருக்கு வருவோம்.



James Cameron என்ற வார்த்தைதான் இந்த படத்திற்கு என்னை இழுத்தது. மிக மிக சாதாரண கதை, one liner, one liner, என்று கேள்வி படும்போதெல்லாம், ஒரு வரியில் எப்படி ஒரு கதையை சொல்வது என்று நான் பலமுறை யோசித்திருக்கிறேன். ஆனால் இந்த கதையை என்னால் ஒரு வரியில் தாராளமாக சொல்ல முடியும். ஆனால் திரையில் அவர் கொடுத்திருக்கும் விதம், அமர்க்களம். கதையும் சொல்லிக் கொள்ளும்படி அட்டகாசம் இல்லை, வசனங்கள் பிரமாதம் என்று சொல்லமுடியாது, ஆனாலும் அப்படி என்ன தான் இருக்கிறது இந்த படத்தில்?



அனுபவம்... இது ஒரு அனுபவம், கிராபிக்ஸ் காட்சிகளை பார்த்து பார்த்து அலுத்து போயிருந்தால், நாம் பார்ப்பது, கிராபிக்ஸ் என்றே தெரியாத கிராபிக்ஸ் காட்சிகள். 3D படத்தின் அச்சுறுத்தலை பார்த்து அயர்ந்து போயிருந்தால் நாம் பார்ப்பது ஒரு இனிய உணர்வை தரும் 3D காட்சிகள். அப்படி ஒரு பிணைப்பு, கிராபிக்ஸிற்கும் 3Dக்கும் மட்டுமல்ல, அந்த பிணைப்பு கதையிலும் படத்திலும் இருக்கிறது. எந்த ஒரு இடத்திலும் கிராபிக்ஸும், 3Dயும் நமது கவனத்தை படத்தில் இருந்து சிதறவிடாமல் செய்ய வேண்டும் என்பதில் டைரக்டர் தெளிவாக இருந்திருக்கிறார்.



முந்தைய 3D யில் மொத்த படமும் சாதாரணமாகத் தெரிய ஒரு சில பாத்திரமோ பொருளோ மட்டும் உங்கள் கண் முன்னே தெரியும். ஆனால் இந்த படத்தில் மொத்த படமும் சில அடுக்குகளாய் திரையில் தெரிகிறது. ஏதோ ஜன்னல் வழியே நீங்கள் வேறு ஒரு உலகத்தை காண்பது போல. இன்னும் 20 வருடத்திற்கு பிறகு திரைப்படங்கள் எப்படி இருக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அவதார் படம் பாருங்கள்.