செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

91வது ஆஸ்கர் திரைப்பட விருது

91வது ஆஸ்கர் திரைப்பட விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் சிறந்த படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்ற விழாவை தொகுப்பாளர் இல்லாமல் பிரபலங்கள் தொகுத்து வழங்கினர். 


சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது, Roma திரைப்படத்தை இயக்கிய Alfanzo Cuaron-க்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பொஹிமியான் ரப்சோடி படத்தில் நடித்த ரமி மாலிக்குக்கு வழங்கப்பட்டது. இதேபோன்று, சிறந்த நடிகைக்கான விருது ”தி ஃபேவரைட்” படத்தில் நடித்த ஒலிவியா கால்மேனுக்கு வழங்கப்பட்டது. 


சிறந்த கேமரா ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருது "ரோமா" திரைப்பட ஒளிப்பதிவாளர் அல்ஃபோன்சோ குவாரானுக்கு வழங்கப்பட்டது. இந்த திரைப்படம் 10 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.


சிறந்த படத்தொகுப்பான விருது போகிமியான் ரப்சோடி திரைப்படத்தில் பணியாற்றிய ஜான் ஓட்மேன் என்பவருக்கு வழங்கப்பட்டது. சிறந்த SOUND EDITING-க்கான ஆஸ்கர் விருதையும் “போகிமியான் ரப்சோடி” படம் தட்டிச் சென்றது. இதேபோன்று, சிறந்த SOUND MIXING-க்கான விருதையும் “போகிமியான் ரப்சோடி” வென்றது. 


சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை மெக்சிகோ திரைப்படமான ரோமா தட்டிச் சென்றது. வெனிஸ் திரைப்பட விழாவில் 'கோல்டன் லயன்' பரிசு பெற்ற ரோமா, ஆஸ்கர் விழாவில் வெளிநாட்டு திரைப்படத்தை வெல்லும் ஏன ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. 


சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்துக்கான ஆஸ்கர் விருதை VICE திரைப்படம் படம் தட்டிச் சென்றது. சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருது "Black Panther" படத்திற்காக ரூத் கார்ட்டருக்கு வழங்கப்பட்டது. விருதை ரூத் கார்ட்டர் ஆனந்த கண்ணீருடன் பெற்றுக் கொண்டார். சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் Black Panther தட்டிச் சென்றது.


சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது, IF BEALE STREET COULD TALK படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ரெஜினா கிங் என்பவருக்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகருக்கான விருதை GREEN BOOK திரைப்படத்தில் நடித்த மகெர்ஷலா அலி வென்றார்.


சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது கடந்தாண்டு வெளியான SPIDER-MAN INTO THE SPIDER VERSE திரைப்படத்துக்கும், சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான விருது போ (bao) திரைப்படத்துக்கும் வழங்கப்பட்டது. சிறந்த லைவ் ஆக்சன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது SKIN படத்திற்கு வழங்கப்பட்டது.  


சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான ஆஸ்கர் விருது "ஃபர்ஸ்ட் மேன்" படத்திற்காக பால் லாம்பெர்ட், இயான் ஹண்டர், டிரிஸ்டன் மைல்ஸ், ஜே.டி.ஸ்ச்வாம் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டது.


உண்மை கதையை மையமாக கொண்டு உருவான க்ரீன் புக் திரைப்படத்துக்கு சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதும், பிளாக் க்ளான்ஸ்மேன் திரைப்படத்துக்கு சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதும் வழங்கப்பட்டது. 
 


Period. End of Sentence - ஆஸ்கரை வென்றது.

#Oscars2019: India-based film '#Period. End of Sentence' wins Documentary Short Subject

தமிழர் 'அருணாச்சலம் முருகானந்தம்' பற்றிய குறும்படம் ஆஸ்கரை வென்றது.🏆

மாதவிடாய் காலங்களில் இந்திய பெண்கள் படும் அவதி மற்றும் கோவையைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தத்தின் குறைந்த விலை நாப்கின் குறித்து பேசும் Period. End of Sentence என்ற சிறந்த ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

வட மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பெண்கள் எதிர்கொள்ளும் மாதவிடாய் சார்ந்த பிரச்னை பற்றி Period. End of Sentence ஆவணப்படம் பேசுகிறது. இந்தியாவின் ரியல் பேட்மேன் என அழைக்கப்படும் கோவையைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் கண்டுபிடித்த மலிவு விலை நாப்கின் தயாரிக்கும் இயந்திரம் முக்கிய அம்சமாக இந்த ஆவணப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மலிவு விலை நாப்கின் இந்திய கிராமங்களில் உள்ள பெண்களுக்கு எந்த அளவிற்கு உதவியாக உள்ளது என இந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது.

அருணாசலம் முருகானந்தமும் தனது பங்களிப்பு குறித்து இந்த ஆவணப்படத்தில் பேசியுள்ளார். ஆஸ்கர் விருது வென்ற இந்த ஆவணப் படத்தின் இரு நிர்வாக தயாரிப்பாளர்களில் ஒருவராக இந்தியாவைச் சேர்ந்த Guneet Monga உள்ளார். ஈரான்-அமெரிக்க பெண் இயக்குநர் Rayka Zehtabchi இதனை இயக்கியுள்ளார்.

வியாழன், 21 பிப்ரவரி, 2019

உலக தாய்மொழி தினம் – பிப்ரவரி 21

உலக தாய்மொழி தினம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?


உலகில் வாழும் மக்கள் எல்லோருக்கும் தாய்மொழி என்பது நிச்சயம் உண்டு. இத்தாய்மொழியைச் சிறப்பிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21-ம் நாளை உலக தாய்மொழி தினம் என்று அறிவித்து கடைப்பிடித்து வருகிறது.

உலக மக்களின் தாய்மொழிகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதே இந்நாள் கடைப்பிடிப்பதின் நோக்கமாகும்.

ஒரு மனிதன் தன்னுடைய உணர்வுகளை சக மனிதனுக்கு மொழியாலே தெரிவிக்கிறான்.

குழந்தை தன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தாயின் ஒலியை தாய்மொழி வடிவில்தான் முதலில் அறிகிறது. எனவே தாய்மொழி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் விழி போன்றது.

பல மொழிகளைக் கற்று அறிந்த அறிஞனால் ஏதேனும் ஒன்றை புரிந்த கொள்ள அவன் முதலில் பயன்படுத்துவது தாய்மொழியே ஆகும்.

உலக தாய்மொழி தினம் உருவான விதம்

இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் பிரிந்த பின் உருது பாகிஸ்தானின் அரசு மொழியாக இருந்தது. 1952-ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) மக்கள் வங்கமொழியை அரசு மொழியாக அங்கரீக்க கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கை போராட்டமாக வெடித்த நிலையில் 1952, பிப்ரவரி 21 அன்று தாகாவில் ஊரடங்கு உத்திரவு இடப்பட்டது. உத்திரவினையும் மீறி தாகா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் நான்கு மாணவர்கள் உயிர் நீத்தனர்.

இந்த நான்கு மாணவர்களின் நினைவாக யுனெஸ்கோ நிறுவனம் பிப்ரவரி 21-ஐ உலக தாய்மொழி தினமாக அறிவித்தது.

வங்கதேச அரசின் முயற்சிகள் மற்றும் அனைத்துலக ஆதரவு அமைப்புகள் காரணமாக 1999 பிப்ரவரி 21 அன்று பொது மாநாட்டில் உலக தாய்மொழி தின அறிவிப்பினை யுனெஸ்கோ வெளியிட்டது.

பல்வேறு மக்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைப் பேணுவதையும் மற்றும் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதையும் கொள்கையாகக் கொண்டு இவ்வறிப்பு யுனெஸ்கோவால் வெளியிடப்பட்டது.

2000 ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21-ஆம் நாள் உலக தாய்மொழி தினம் உலகெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு சர்வதேச மொழிகளின் ஆண்டாக அறிவிக்கப்பட்டது.

வங்காளதேச நாட்டில் உலக தாய்மொழி தினம் கடைப்பிடிப்பதற்காக அன்றைய தினம் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்மொழியின் சிறப்பு

தாய்மொழியைப் பயிற்று மொழியாக கொண்ட ஜெகதீஸ் சந்திர போஸ், பி.சி.ராய், எடிசன் உள்ளிட்ட அறிவியல் அறிஞர்கள் பலர் உலகில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கின்றனர்.

ஜப்பானியர்கள், ஜெர்மனியர்கள் போன்றோர் தங்கள் தாய்மொழி மூலம் கல்வி கற்று பொருளாதார தன்னிறைவு பெற்று தாங்களும் முன்னேறி தாங்கள் சார்ந்த நாட்டினையும் முன்னேற்றி வருகின்றனர்.

பல மொழி புலமை பெற்ற பாரதியும் தன்னுடைய தாய்மொழியாம் தமிழ்மொழியானது தான் கற்றறிந்த மொழிகளில் மிகவும் இனிமையானது என “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று குறிப்பிடுகின்றார்.

காந்திஜியும் “குழந்தைக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும் பள்ளியில் தோன்றும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். தெரிந்தறியாத ஒரு மொழியின் மூலம் கல்வி கற்பிப்பது குழந்தைகளின் எண்ணங்களுக்கிடையேயான இணக்கத்தைக் குறைத்துவிடும். எனவே தாய்மொழியே பயிற்று மொழியாக இருப்பது சிறந்தது” என 1917-ல் புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் உரை ஆற்றியுள்ளார்.

இந்திய தேசிய கீதம் இயற்றியவரும், நோபல் பரிசு பெற்றவரும், ஆங்கில மொழியில் கவிதைகளை திறம்பட எழுதியவரும் ஆகிய ரவீந்தரநாத் தாகூரும் தன் தாய்மொழியான வங்களாத்தில் நன்கு புலமைப் பெற்றதாலே கவிதை உலகில் புகழின் உச்சியை தொட்டார்.

காந்திஜியும் தன் சுயசரிதையான சத்திய சோதனையை முதலில் தம் தாய்மொழியிலேயே எழுதினார் என்பதும் தாய்மொழிக்கான சிறப்பாகும். 

தாய்மொழியாம் தமிழின் சிறப்பு

நம்முடைய தாய்மொழியாம் தமிழ் மிகவும் தொன்மையானதும், இனிமையானதும் ஆகும். தமிழில் இயற்றப்பட்ட திருக்குறள் சுமார் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.

தமிழ்மொழி உலகில் தோன்றிய மொழிகளுள் மிகப் பழமையான மொழியாக மொழி ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

தமிழ்மொழி ஏனைய மொழிகளைவிட மிகநீண்ட இலக்கண இலக்கிய மரபுகளை உடையது. அதனாலே தமிழ்மொழிக்கு செம்மொழி என்ற சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது.

இன்றைக்கு இணையத்தில் அதிகம் பயன்படுத்தும் மொழியாகவும் தமிழ் உள்ளது. காலத்தினால் பிறமொழிகளின் ஆதிக்கம் அதிகரித்த போதும் இன்றைக்கும் நிலைத்து வழக்கத்தில் இருக்கும் மொழி தமிழ் என்பது பெருமை கொள்ளத்தக்க விசயமாகும்.

ஒவ்வொருவரும் தம்தம் தாய்மொழியைப் போற்றி பாதுகாக்க உலக தாய்மொழி தினத்தில் உறுதி மொழி ஏற்று அதனை செயல்படுத்த முனைவோம்.