உலகம் முழுக்க இன்று சமூக வலைத்தள தினம் கடைபிடிக்கப்படுகிறது. சமூக வலைத்தள வாசிகள் பலருக்கும் தெரிந்திராத சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #SocialMediaDay
தொழில்நுட்ப யுகத்தின் அகன்ற கண்டுபிடிப்புகளில் நமக்கு அதிகம் பயன்தரும் சிலவற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன.
இணைய வசதி மட்டும் இருந்தால் உலகில் உயிருடன் வாழும் எவருடனும் நட்பு கொள்ள வைக்கும் வலைத்தளங்களாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் கம்ப்யூட்டரில் அமர்ந்து வலைத்தளங்களில் உலவி, சில மணி நேரங்களில் புதிய நட்பு வட்டாரத்தை டிஜிட்டல் உலகில் உருவாக்கக்கூடிய நிலை இருந்து வந்தது.
ஆனால் ஸ்மார்ட்போன் வரவுக்கு பின், சமூக வலைத்தளங்கள் நம் உள்ளங்கையில் வந்துவிட்டது. ஸ்மார்ட்போன் ஆப் மூலம் நட்புகளை கடல் கடந்தும் காதல் செய்ய இவை பாலமாக இருக்கின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களின் எண்ணிக்கை நீளும் தருவாயில் உலக மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 30% பேர் இவற்றில் நீந்துகின்றனர்.
மக்கள் அதிகம் பயன்படுத்த துவங்கினால் கொண்டாட்டம் என்ற வகையில், இன்று உலகம் முழுக்க சமூக வலைத்தள தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் சமூக வலைத்தளம் குறித்து பலரும் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
உலக மக்கள் தொகை சுமார் 760 கோடியாக இருக்கும் நிலையில், இணையத்தை பயன்படுத்துவோர் மட்டும் சுமார் 420 கோடி என கண்டறியப்பட்டு இருக்கிறது.
உலகில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 300 கோடி ஆகும்.
உலகின் பிரபல பிராண்டுகள் குறைந்தபட்சம் இரண்டுக்கும் அதிகமான சமூக வலைத்தள சேனல்களை பயன்படுத்துகின்றன.
வியாபாரம் செய்வோரில் 81% பேர் ஏதேனும் வகையில் வியாபார வளர்ச்சி காரணங்களுக்காக சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
2017-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து 2017 மூன்றாவது காலாண்டு வரை மட்டும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 12.1 கோடியாக அதிகரித்தது. அந்த வகையில் ஒவ்வொரு 15 நொடியிலும் ஒருவர் சமூக வலைத்தளத்தில் சேர்கின்றனர்.
ஃபேஸ்புக் மெசன்ஜர் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளில் தினமும் 6000 கோடி குறுந்தகவல்கள் தினசரி அடிப்படையில் பரிமாறப்படுகின்றன.
சமூக வலைத்தள விளம்பரங்களில் மட்டும் 2017-ம் ஆண்டு சுமார் 4000 கோடி டாலர்கள் செலவிடப்பட்டிருக்கிறது.
உலகின் 38 சதவிகித நிறுவனங்கள் 2015-ம் ஆண்டு வாக்கில் சமூக வலைத்தள செலவினங்களை சுமார் 20 சதவிகிதம் வரை அதிகரித்து இருக்கின்றன, இது முந்தைய ஆண்டை விட 13 சதவிகிதம் அதிகம் ஆகும்.
ட்விட்டரில் குறிப்பிட்ட பிரான்டு மீது புகார் தெரிவிப்போர் அந்நிறுவனத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள் பதில் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
ஃபேஸ்புக்கில் இருக்கும் வீடியோக்கள் தினமும் சராசரியாக 800 கோடி முறை பார்க்கப்படுகின்றன.
ஸ்னாப்சாட் தளத்திலும் வீடியோக்கள் தினமும் சுமார் 800 கோடி முறை பார்க்கப்படுகின்றன.
2018ம் ஆண்டு மொத்த ஆன்லைன் தரவுகளில் 74 சதவிகிதம் வீடியோவாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
உலகில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மற்றும் இத்துறை சார்ந்த வளர்ச்சி பல்வேறு பரிணாமங்களை கடந்து வருகிறது. உலக அரசியல் வரை ஆதிக்கம் செலுத்தும் சமூக வலைத்தளங்கள் பல்வேறு நன்மைகளை நமக்கு வழங்கினாலும், இவற்றால் நமக்கு ஏற்படும் அபாயங்களும் அதிகமாவதை அனைவரும் உணர வேண்டிய காலக்கட்டம் இது. #SocialMediaDay
www.amalathaselroy.blogspot.com