வியாழன், 31 ஆகஸ்ட், 2017

ரோஹிங்கியா முஸ்லிம்கள் - நடப்பது என்ன? மனிதவுரிமையாளரான மாங் சார்ன் குறிப்பு




நீண்ட காலமாக மியான்மர் நாட்டில் நிலவி வரும் பௌத்த மதத்தைச் சாராத பர்மியர்களுக்கு எதிரான இனப் பாகுபாடு சமீப காலத்தில் அதிர்ச்சி தரத்தக்க அளவில் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் என்று அழைக்கப்படும் இஸ்லாமிய சமூகம் ஒன்றுக்கு எதிராக மியான்மரின் ராணுவ ஆட்சியாளர்களும் மைய நீரோட்ட பர்மிய கட்சிகளும் பௌத்த துறவிகளும் புதிதாகக் கிளம்பியிருக்கும் மதவெறி அமைப்புகளும் ஊடகங்களும் சமீப காலமாக மாபெரும் இனவாத ஒடுக்குமுறையில் இறங்கியிருக்கிறார்கள்.

கடந்த ஓராண்டில் (இது 2013 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது) மட்டும் ராணுவமும் காவல்துறையும் பார்த்துக் கொண்டிருக்க, நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உயிரோடு எரிக்கப்பட்டிருக்கிறார்கள். சுமார் ஒன்றரை லட்சம் முஸ்லிம்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். வீடுகளை விட்டு விரட்டியடிக்கப்பட்டு முகாம்களில் கும்பல் கும்பலாகத் தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு எந்தவித வசதிகளும் கிடையாது. சமீபத்தில் இந்த நிலைமை உச்சத்தைத் தொட, வெளியுலகமும் சற்றே வளைந்துகொடுக்க ஆரம்பித்திருக்கிறது.

இலங்கை நினைவுக்கு வருகிறதா? இலங்கையில் தமிழர்களுக்கும் இப்போது முஸ்லிம்களுக்கும் ஏற்பட்டு வரும் அதே மாதிரியான இனவாத ஒடுக்குமுறைதான் மியான்மரிலும் இப்போது சிறுபான்மையர்களான முஸ்லிம்களுக்கும் கச்சின் பகுதியிலுள்ள கிறிஸ்தவர்களுக்கும் எதிராக நடக்கிறது. இரண்டு நாடுகளிலும் பௌத்த மதவாதம் ஒரு மதவாத பாசிச கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது.

சீனாவின் உதவியுடன் சர்வாதிகார ஆட்சியாளர்கள் சிறுபான்மையர்களுக்கு எதிரான இன ஒழிப்பில் வெளிப்படையாக இறங்கியிருக்கிறார்கள். பொது சமூகமும் ஊடகமும் ஜனநாயகவாதிகள் என்று கூறிக் கொள்வோரும் பௌத்த இனவெறி துறவிகளின் கைப்பாவையாக மாறியுள்ளனர். பர்மாவின் தேசத்தந்தை ஆங் சானின் மகளும் ராணுவ சர்வாதிகாரத்துக்கு எதிராக போராடி ஜனநாயக தேவதையாகப் பெயர் பெற்றவருமான ஆங் சான் சூ க்யி, இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க போலவே, வெளியே ஜனநாயகவாதியாகவும் உள்ளே பெரும்பான்மை இனவாத அரசியல்வாதியாகவுமே இருக்கிறார் என்பது அம்பலமாகியுள்ளது.

மியான்மரில் உள்ள முஸ்லிம்கள் ஓர் இனப்படுகொலைக்கு உள்ளாகி வருகிறார்கள் என நேரடியாக குற்றம்சாட்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கிறார் பர்மாவில் பிறந்து ஒரு கலகக்காரராக இன்று புலம்பெயர்ந்து வசித்து வருபவரும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயின்சஸில் சிவில் சமூகம் மற்றும் மனிதப் பாதுகாப்பு ஆராய்ச்சி குறித்த பிரிவில் வருகைதரு பேராசிரியராக இருப்பவருமான மாங் ஃஸார்னி.

மியான்மர் நிலவரத்தைப் பற்றியும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை பற்றியும் பௌத்த மதம் ஒரு மோசமான மதவாத அரசியலுக்கு மையமாக மாறியிருப்பது குறித்தும் மாங் ஃஸார்னியுடன் தொடர்பு கொண்டு உரையாடினார் தமிழ் ஆழி எடிட்டர் செந்தில்நாதன். தனது முன்னோர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த செட்டியார் என்று கூறிய ஃஸார்னி தமிழ் ஆழியுடன் பல விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். அவருடனான நேர்காணலிலிருந்து:

1 . மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் பௌத்த மதத்தினரின் தாக்குதல்களை வரலாற்று ரீதியில் எப்படிப் பார்க்கிறீர்கள்? இந்த இனவாதத்தின் பின்னணி என்ன?

ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஒரு குழுவாக வாழமுடியாத அளவுக்கு அவர்களது வாழ்க்கையை நாசமாக்கும் வேலையில்தான் பர்மாவிலுள்ள அரசியல் சக்திகளும் மதவாத சக்திகளும் இறங்கியுள்ளன. முஸ்லிம்கள் மட்டுமல்ல, இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து பர்மாவுக்கு வந்த அனைவர் மீதும் காலங்காலமாகத் தொடர்ந்து வரும் இந்திய எதிர்ப்பு இனவாத அரசியல் வரலாறு இதற்கு பின்புலமாக இருக்கிறது. பிரிட்டிஷ் காலத்தில் நாட்டின் உயர் மட்டத்தில் பிரிட்டிஷ்காரர்கள் இருந்தார்கள். அரசியலும் பொருளாதாரமும் அவர்கள் கையில் இருந்தது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பர்மா கிட்டத்தட்ட இந்தியாவின் ஒரு மாகாணமாகவே இருந்தது. எண்ணெய் வளம், தொழில்துறை, விவசாயம் உள்ட பல துறைகளின் வளர்ச்சிக்காக இந்தியர்கள் பலர் பிரிட்டிஷாரால் பர்மாவுக்குள் கொண்டுவரப்பட்டனர். இவர்கள் நாட்டின் இடைநிலை அதிகார மட்டத்தில் இருந்தார்கள். குறிப்பாக வர்த்தகம் இந்தியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. உள்ளூர் பர்மியர்கள் பெரும்பாலும் கீழ்த்தட்டில் இருந்தார்கள். இந்தப் பின்னமியில்தான் பர்மிய இனவாதம் இந்தியர்களுக்கு எதிரான ஒன்றாக உருவெடுத்தது. இரண்டாம் உலகப் போரின்போது ராகைன் மாநிலத்திலுள்ள பர்மியர்கள் ஜப்பானோடு சேர்ந்துகொண்டார்கள். ஆனால் இந்தியர்கள் பிரிட்டிஷாரின் பக்கம் இருந்தார்கள். இதில் இந்திய முஸ்லிம்கள், இந்துக்கள் இரு தரப்பினரும் உண்டு. மேற்கு பர்மியர்களும் பிரிட்டிஷ் பக்கம் இருந்தார்கள். எனவே ராகைன் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக 1942 ஆம் ஆண்டிலேயே  கலவரம் வெடித்தது.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறித்து மத ரீதியிலான அச்சங்களும் பர்மியர்களுக்கு இருந்து வருகிறது. இஸ்லாம்மயமாக்கம் என்பது அதில் முக்கியமானது. பர்மாவின் பெருவழக்கம் என்னவென்றால் ஒரு முஸ்லிம் ஆண் முஸ்லிமல்லாத பர்மியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால், அந்தப் பர்மியப் பெண் முஸ்லிமாக மதம் மாற வேண்டும். இல்லையென்றால் அவருக்கு சொத்து, வாரிசுரிமை எதுவும் கிடைக்காது. இது போன்ற விவகாரங்கள் இரு தரப்பினரிடையே மோதலை உருவாக்கின.

மலாய், இந்தோனேஷிய சமூகங்கள் ஒரு காலத்தில் பௌத்த, இந்து சமூகங்களாக இருந்தன. பிறகு முஸ்லிம் வணிகர்கள் மற்றும் பிற சக்திகள் மூலம் அவை முஸ்லிம் நாடுகளாயின. இதே மாதிரி தங்கள் நாட்டுக்கு ஆகிவிடுமோ என்கிற அச்சமும் பர்மியர்களுக்கு உண்டு.

2 . மியான்மரில் நடப்பது ஒரு இனப்படுகொலை என்று கூறுகிறீர்கள். மியான்மரில் ராணுவ சர்வாதிகாரம் மட்டுமே பிரச்சனை என்று நினைத்துக் கொண்டிருந்தோம். உலக நாடுகளும் மியான்மரில் நடப்பது இனப்படுகொலை என்று கருதுவதாகத் தெரியவில்லையே?

நாஜி ஜெர்மனியின் ராணுவம் நேரடியாக இனப்படுகொலையை நடத்தியது. ஆனால் மியான்மர் ராணுவம் வேறு வழிகளைக் கையாள்கிறது. அது கிட்டத்தட்ட இனப்படுகொலையை மற்றவர்களை வைத்துச் செய்துகொள்கிறது. மதக்கலவரங்கள் உருவாவதற்கான சூழலை உருவாக்கி தாக்குதல்கள் அதிகரிக்கும்படி அது பார்த்துக் கொள்கிறது. கடந்த நாற்பதாண்டுகளாக முஸ்லிம்கள் விஷயத்தில் பர்மிய அரசு என்னவல்லாம் செய்துவருகிறது எனப் பார்க்க வேண்டும். அது முஸ்லம்களின் பிறப்பு வீதத்தைக் கட்டுப்படுத்த முயன்றது. மக்கள்தொகைக் கொள்கைகள் மூலம் ஒரு சமூகப் பிரிவைக் கட்டுப்படுத்துவதும் அவர்களது சமூக இயக்கத்தை மட்டுப்படுத்துவதும் இனப்படுகொலையின் ஒரு பகுதிதான்.

தாங்களாகவே உயிர் பிழைத்து ஓடுவதற்குரிய சூழலில் ஒரு சமூகத்தைத் தள்ளுவதும் அப்படி கடலில் படகேறி தப்பிக்கும்போதும் எல்லைகளைத் தாண்டிச் செல்ல முயலும்போதும் அவர்களது உயிருக்கு உலை வைப்பதும் என இவை அனைத்துமே இனப்படுகொலை நடவடிக்கைகள்தான். இனப்படுகொலை என்றால் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்கிற எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து மட்டுமே பேச முடியாது.

ராகைன் பௌத்தர்களுக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையில் நடப்பதை வகுப்புக் கலவரம் என மீடியா கூறுவது முற்றிலும் பிழையானது. இதில் வகுப்புவாதத்தின் பங்கும் இருக்கிறது. ஆனால் அது ஒரே ஒரு பகுதி மட்டுமே. பல்வேறு வியூகங்கள் அமைத்து ஒரு மக்கள் பிரிவையே ஒழித்துக்கட்டுவது என்கிற ராணுவ ஆட்சியாளர்களின் திட்டமே இந்த இனப்படுகொலையின் மையமாகும்.

மத்திய பர்மாவில் மெய்க்திலாவில் நடந்த தாக்குதல்களில் பட்டப்பகலில் ராணுவ, போலீஸ் கண்பார்வையில் பேரளவில் முஸ்லிம்களின் வியாபாரத் தலங்கள் சூறையாடப்பட்டன. முஸ்லிம்களின் வீடுகளும் தாக்கப்பட்டன. தாக்குதல் நடத்தியோரில் பெரும்பாலானோர் பொதுமக்கள். ஆனால் பர்மாவில் முஸ்லிம்கள் வியாபாரத் துறையை ஆதிக்கம் செலுத்தவில்லை. அது இப்போது சீனர்களின் கையில்தான் இருக்கிறது.

ஆனால் எந்த அரசும் சர்வதேச சமூகமும் இதை இனப்படுகொலை என்று கூற விரும்பவில்லை. காரணம் அப்படிக் கூறிவிட்டால் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஐ.நாவின் தலையீடு தவிர்க்க முடியாமல் போகும். பர்மிய ராணுவ ஆட்சியாளர்களையெல்லாம் தண்டிக்கும் ஆர்வம் இப்போது மேற்கத்திய நாடுகளிடம் இல்லை. பர்மாவைத் தங்கள் சந்தைக்கான இடமாகப் பார்க்கும் எண்ணம் முதன்மை பெற்றுவிட்டது. மனித உரிமைகள் பின்சென்றுவிட்டன. ஆசியாவில் நாடுகளுக்கிடையிலான உறவை மறுசமன்பாட்டுக்குட்படுத்தும் மேற்குலகின் புதிய உத்தி இது. ஆசிய மைய அச்சு என்கிற ஒபாமாவின் புதிய கொள்கை இதைத்தான் குறிக்கிறது.

3 . டிரைசைக்கிள் இதழுக்கு நீங்கள் அளித்த ஒரு நேர்காணலிலும் அதில் எழுதிய ஒரு கட்டுரையிலும் இனப்படுகொலைவாத பௌத்தம் என்று வர்ணிக்கும் அளவுக்குச் சென்றிருக்கிறீர்கள். இது அதிர்ச்சி அலைகளை எழுப்புவதாக இருக்கிறது. ஆனால் இதே போன்ற சூழலை இன்றும் இலங்கையில் தமிழர்களும் இப்போது முஸ்லிம்களும் அனுபவித்து வருகிறார்கள். பௌத்தமும் ஒரு மதவெறி கருத்தியலாக மாறிவிட்டதா?

பௌத்தம் என்றால் ஒரு கவர்ச்சி மேற்குலகில் இருக்கிறது. ஆனால் பௌத்த தலைவர்களும் சமூகங்களும் எப்படி நடந்துகொள்ளக்கூடும் என்பதை நமது சமீப கால யுத்தங்களிலேயே மிகவும் மோசமான இனப்படுகொலை யுத்தம் நடந்த இலங்கை நிரூபிக்கிறது. இலங்கை அடிப்படையில் மிகவும் ஆழமான பௌத்த சமூகம். பௌத்தரல்லாத தமிழர்கள் சரணடைந்த பிறகும் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட்டார்கள். தாய்லாந்தின் தெற்கில் உள்ள இஸ்லாமிய சமூகத்தவர்களை தாய்லாந்து நாட்டின் பௌத்த சமூகமும் ராணுவமும் எப்படி நடத்துகின்றன என்பதைப் பாருங்கள். உலகின் மிகவும் வன்முறைத்தனம் மிக்க சமூகங்களாக பௌத்த சமூகங்கள் இருக்கும் நிலையில், மேற்குலகம் இன்னமும் அதை ஏன் ஈர்ப்புள்ள, “மன ரீதியாக ஸ்மரணை உள்ள” சமூகங்களாகப் பார்க்கின்றன என்பதுதான் தெரியவில்லை. சொல்லுக்கும் செயலுக்கும் பௌத்த சமயங்களில் இப்போது தொடர்பில்லாமல் போய்விட்டது. பௌத்தர்களாகிய நாங்கள் இப்போது பிழையான, பேராசை கொண்ட, பொறாமை கொண்ட, மற்றவர்களைப் போலவே வன்முறை மிக்க சமூகங்களாக ஆகிவிட்டோம்.

அரசின் நவபாசிச, நவநாஜி தன்மையும் இந்தியர்கள், குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக மிக ஆழமாக பர்மியர்கள் மனத்தில் புதைந்திருக்கும் தவறான அபிப்பிராயங்களும் பொருளாதார ரீதியிலான கஷ்ட காலத்தில் தாங்கள் பலிகாடாவாக ஆகியிருக்கிறோம் என்கிற எண்ணமும் இரண்டாம் உலகப் போருக்கு முன்பிருந்த இனவாத தூய்மை குறித்த கருத்தாக்கங்களும் ஒன்று சேர்ந்து பர்மாவில் பௌத்தம் ஓர் இனவாத கருத்தியலாகவே உருவாகியிருக்கிறது.

4. புதிய மதத் தீவிரவாத அமைப்புகளும் பர்மாவில் தோன்றியிருக்கின்றன. குறிப்பாக 969 என்கிற அமைப்பு. இவற்றுடன் அரசும் ராணுவமும் சேர்ந்தே முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதலைத் தொடுக்கின்றன எனக் கூறியிருக்கிறீர்கள். இதை விரிவாக எடுத்துச் சொல்லுங்கள்.

சமீப காலத் தேர்தல்களில் ராணுவ ஆட்சியாளர்களின் பினாமிக் கட்சியாக இருந்தவர்களுக்கு தேர்தல்களில் வெற்றி கிடைக்கவில்லை. இந்தச் சூழலில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி இனவாத நெருப்பை ஊதிப் பெருக்கி ஆதாயம் அடைய நினைக்கின்றன அரசு சார்பு சக்திகள்.

திடீரென பல மதவாத அமைப்புகள் முளைத்திருக்கின்றன. இப்போது உருவாகியுள்ள புதிய அமைப்புகளில் மிக முக்கியமானது 969 என்கிற அமைப்பு. இது நியோ நாஜி தன்மையுள்ள பௌத்த அமைப்பு. மஞ்சளாடை அணிந்த போலித் துறவியான விராத்து என்பவர்தான் இதன் தலைவர். க்யாக்சே என்ற இடத்தில் முஸ்லிம்களைக் கொன்றதற்காக 2003 ஆம் ஆண்டிலேயே  இவர் சிறையில் அடைக்கப்பட்டவர். பௌத்த மதத்தையும் பர்மாவையும் முஸ்லிம்களிடமிருந்து பாதுகாப்பது என்கிற பெயரில்தான் இந்த அமைப்பே உருவானது. இந்தப் பெயரில் உள்ள 9, 6, 9 ஆகிய எழுத்துக்கள் பௌத்த நெறிகளை பிரதிபலிக்கின்றன. இந்த அமைப்புக்கு பர்மிய ராணுவம், ஊடகம் ஆகியவற்றின் ஆதரவும் ராணுவத் துறையின் மக்கள் தொடர்பு மற்றும் உளவியல் யுத்தப் பிரிவின் ஆதரவும் உண்டு. துவேஷ பிரச்சாரம் இந்த அமைப்பின் மிகப் பெரிய ஆயுதம். கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் துவேஷ பிரச்சாரத்தை ஒரு நாடு ஏற்க முடியாது என்றால் இவர்களது பிரச்சாரம் தடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை. முஸ்லிம் வியாபார நிறுவனங்களைப் புறக்கணிப்பது, அவர்களை சமூகத்திலிருந்து விலக்கி வைப்பது என அவர்களது முஸ்லிம், இந்திய எதிர்ப்புப் பிரச்சாரம் வெகு தீவிரமாக பர்மிய மக்கள் மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆங் சான் சூ க்யி உள்பட பல முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பழி போடவும் 969ஐ ராணுவம் பயன்படுத்திக் கொள்கிறது. சூ க்யியை பணக்கார முஸ்லிம்களின் கையாள் என்று கூட 969 வர்ணிக்கிறது. ஆனால் சூ க்யி முஸ்லிம்களின் துன்பங்களுக்கு பாராமுகம் காட்டுகிறவராகவே இருக்கிறார் என்பது தான் உண்மை. இன்றைய அரசு திட்டமிட்டு இவர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் மேலும் ஒரு முழு வீச்சிலான இனப்படுகொலை நடந்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் அரசும் ராணுவமும் எப்போதும் இனவாதச் செயலை ஊக்குவிக்கின்றன. த டிஸ்ஆர்டர் இன் ஆர்டர்: த ஆர்மிஸ்டேட் இன் பர்மா சின்ஸ் 1962 என்கிற நூலை எழுதிய பேராசிரியர் டோனால்டு ஸீகின் நியூயார்க் டைம்ஸில் எழுதிய தலைஎதிர் கட்டுரையொன்றில் சில விஷயங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். நே வின் ஆட்சிக் காலத்திலும் சமீபத்தில் எஸ்எல்ஓஆர்சி மற்றும் எஸ்பிடிசி ஆட்சிக் காலத்திலும் (1962 - 2010) ராணுவம் மேற்கொள்ளும் ஓர் உத்தியை அவர் அம்பலப்படுத்தியிருந்தார். ஒரு பௌத்த பெண்ணை ஒரு முஸ்லிம் ரேப் செய்துவிட்டார் என்றோ பௌத்தர்களை இஸ்லாமியர்களாக்க சதி செய்கிறார்கள் என்றோ ராணுவம் திட்டமிட்டு ஒரு வதந்தியைக் கிளப்பும். அதை ஒட்டி தானாகவே கலவரங்களை மூட்டும். இவ்வாறான பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் அது தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும். ராணுவத்திலுள்ள மோசமான தளபதிகள் விராத்து போன்ற மதவெறியர்கள் மூலம் தங்கள் பினாமி ராஜ்ஜியத்தை நடத்துகிறார்கள் என்பதே தெளிவான விஷயம்.

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய ராணுவத்தால் உருவாக்கப்பட்டதுதான் பர்மிய ராணுவம். அது ஹிட்லரின் ஆசீர்வாதம் பெற்ற ஒன்று. ஓய்வு பெற்ற ராணுவ உயரதிகாரி ஒருவர் கடந்த ஆண்டு என்னிடம் நேருக்கு நேராக ஒன்றைச் சொன்னார்: எனக்கும் என் சகாக்களுக்கும் இந்த “மு”க்களைக் கண்டாலே பிடிக்காது என்றார் அவர். மு என்றால் முஸ்லிம்கள். “அவர்கள் அனைவரையுமே கொன்றுவிட முடியாதே” என்பதுதான் தங்களுக்கு சங்கடமாக இருக்கிறது என்றார் அவர். அவர் குறிப்பிட்டது மேற்கு பர்மாவிலுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களைத்தான்.

இத்தகைய வகுப்புவாதக் கலவரங்களைத் தூண்டிவிட்டால் ராணுவத்தின் தேவை அதிகமாக உணரப்படும் என்பதும் ஜனநாயகமயமாதலின் வேகம் தடைபடும் என்பதும்கூட ராணுவத்தின் வியூகம். பர்மிய மக்களை அச்சத்தில் இருக்க வைத்து, சமூகத்தில் ராணுவத்தின் கையை ஓங்கச் செய்வதற்காக இத்தகைய வகுப்புவாத, மதக்கலவரங்கள் மூட்டப்படுகின்றன எனப் புலம்பெயர் பர்மிய அறிவுஜீவியான மூ தீ கன் சமீபத்தில் கூறியிருந்தார்.

சில தசாப்தங்களுக்கு முன்பு பர்மாவில் நிலவிய இந்திய எதிர்ப்பு மனநிலை போன்றதா இன்றைய முஸ்லிம்கள் எதிர்ப்புப் போக்கு? முன்பு தமிழர்கள் ஆயிரக்கணக்கில் பர்மாவிலிருந்து தப்பிவந்த ஒரு காலமும் உண்டு.

அன்று தமிழர்களும் பிற இந்தியர்களும் எதிர்கொண்ட எந்தவொரு அனுபவத்தையும்விட இன்று பர்மாவின் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறை மிக மிக தீவிரமானது. இன்றைய அரசு ஓர் இனப்படுகொலை அரசு. இன ரீதியிலும் மத ரீதியிலும் மாற்றாரைத் துடைத்தெறிவது என்கிற கண்ணோட்டமும் இரக்கமற்ற முறையில் அதை நடைமுறைப்படுத்துவதும் முந்தைய சூழலைவிட வித்தியாசமானது.

வரலாறு எப்படிப்பட்ட சுமைகளை நம் மீது சுமத்தியுள்ளபோதும் மியான்மரில் ஜனநாயக மீட்சி என்பது அங்கே ஒரு பன்மொழி, பல்சமய, பல்லின அரசு அமைக்கப்படுவதன் மூலமாகவே சாத்தியமாகும்.

5.  பர்மாவிலுள்ள ஜனநாயகவாதிகள் இதைப் புரிந்துகொண்டிருக்கிறார்களா? ஆங் சான் சூ க்யியை ஒரு ஜனநாயக அடையாளமாக தலைவராக நாங்கள் பார்த்தோம். இந்த விவகாரத்தில் அவரது பங்கு சிக்கலானதாக இருப்பதாகவே தெரிகிறது. அவர் யார் பக்கம் நிற்கிறார்?

ஆங் சான் சூ க்யி ஆக்ஸ்போர்டில் படித்தவர். மேற்கத்திய லிபரல்களோடு இரண்டு தசாப்தங்கள் வாழ்ந்தவர். ஆனாலும் உள்ளுக்குள் அவர் ஒரு பர்மா பௌத்தவாத கலாச்சார வெறியர் தான். அவர் கமுக்கமான இனவெறியர்.

மதசார்பின்மையில் உறுதியான, பல் இன, பல் கலாச்சார தேசியத்தையே அவரது தந்தை உருவாக்க விரும்பினார். ஆனால் அவரது தந்தையைவிட முற்றிலும் மாறுபட்டவர் சூ க்யி. ரோஹிங்கியா முஸ்லிம்கள், கச்சின் கிறிஸ்தவர்கள் உட்பட பர்மாவின், இன, மத சிறுபான்மையர் விவகாரத்தில் அவர் நெடுங்காலமாகவே மௌனம் காத்து வந்திருக்கிறார். அதைப் போலவே அடித்தட்டிலுள்ள பர்மிய பௌத்த விவசாய வர்க்கத்தினருடனும் அவர் தன்னை இனம்கண்டதில்லை.
இன்று பர்மாவில் நிறைய பேர் அவர் மீது நம்பிக்கை இழந்து வருகிறார்கள். நீதிக்கும் சுதந்திரத்துக்குமான அடையாளமாக அவர் இருந்த காலம் மாறிக் கொண்டிருக்கிறது. ராணுவத் தளபதிகள் அவ்வளவாகத் தீங்கற்றவர்கள் என அவர் நினைப்பதாகத் தெரிகிறது. தான் அதிபராக ஆகவேண்டும் என்பதற்காக உண்மையான கொள்கைகளைப் பேசாமல் கல்நெஞ்சம் படைத்தவராக மாறிய ஹிலாரி கிளிண்டனைப் போன்றவர்தான் சூ க்யியும் என்றே தோன்றுகிறது.

6. பர்மாவிலிருந்து தப்பித்துவராமல் அங்கேயே தங்கிவிட்ட தமிழர்களின் நிலைமை பற்றி சொல்வீர்களா? அவர்கள் என்ன ஆனார்கள்? அவர்கள் சம உரிமையுடன் வாழ்கிறார்களா? தமிழர்களுக்கும் பிற இனச் சிறுபான்மையருக்கும் அங்கே என்ன அரசியல் எதிர்காலம் இருக்கிறது?

தமிழர்கள் பற்றியோ அவர்களின் வம்சாவளியினர் பற்றியோ எனக்கு உண்மையிலேயே எதுவும் தெரியவில்லை. உண்மையில் எனது தாய் வழிப் பாட்டன்களில் ஒருவர் தமிழர். அவர் எப்போதோ இறந்துவிட்டார். இங்கே பர்மியர்கள் பார்வையில் தமிழர்களுக்கும் இந்தியர்களுக்குமென தனியே வித்தியாசங்கள் கிடையாது. பர்மியர்கள் இந்திய வம்சாவளியினர் அனைவரையுமே காலர்கள் (கலர்டு பீப்பிள் என்கிற பிரிட்டிஷ் நிறவாத சொல்லாட்சியிலிருந்து வந்தது) என்று கீழ்மைப்படுத்திக் கூப்பிடுவார்கள்.

7.இன்றைய பர்மிய விவகாரங்களில் இந்தியாவின் பங்கு எப்படி இருக்கிறது?

புத்தனும் காந்தியும் தாகூரும் இன்ன பிறரும் பிறந்த இந்தியா இப்போது கல்நெஞ்சம் கொண்ட தனக்கு லாபமா நட்டமா என கணக்குப் போட்டுப் பார்க்கும் நாடாக இருக்கிறது. இந்தியாவின் “கிழக்கு நோக்கிப் பார்ப்போம்” வெளியுறவுக் கொள்கையில் மனிதாபிமானமும் கருணையும் இல்லை. பர்மாவில் நடக்கும் இனவெறித் தாக்குதல்களில் இந்தியாவுக்கு நேரடி பங்கு இல்லை. ஆனால் பர்மிய ராணுவத்துக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் அது இந்திய மண்ணில் வைத்து பயிற்சி அளக்கிறது. பர்மாவின் ராணுவத்துக்கும் அரை சிவிலியன் ஆட்சி நடத்தும் தெயன் சியெனின் அரசுக்கும் இந்தியா உறுதுணை புரிந்து வந்தது. இவ்வகையில் குற்றம் இந்தியாவின் மீதும் இருக்கவே செய்கிறது. கொஞ்சம் எண்ணெயும் எரிவாயும் கிடைத்த காரணத்தால், பர்மிய ராணுவத்துக்கு நற்சான்றிதழ் அளித்திருக்கிறது இந்தியா.

8. இலங்கையில் 2009 யுத்தத்தில் சர்வதேச சமூகம் தமிழர்களுக்கு துரோகமிழைத்தது. பர்மிய முஸ்லிம் விஷயத்திலும் இப்போது இதுவே நடக்குமா? ஒரு சமூகத்துக்கு புவிசார் அரசியல் மதிப்பு இல்லை என்றால் அல்லது அதிகார ஆடுகளத்தில் அதற்கு பயன்பாட்டு மதிப்பு இருக்காது என்றால் மேற்குலகம் அதைப் பொருட்படுத்துவதில்லை. இந்த வஷயத்தில் உலக வல்லரசுகளின் பங்கை எப்படிப் பார்க்கிறீர்கள்? சீனாவின் பங்கு என்ன?

சர்வதேச சமூகம் என்றழைக்கப்படுவதே முரண்பாடுகளுள்ள சுயநலன் மிக்க சித்தாந்தங்களின் சந்தர்ப்பவாத கூட்டுதான். அது ஒருபோதும் மனிதாபிமான லட்சியங்களுக்கு விசுவாசமாக இருந்ததில்லை. இலங்கையில் தமிழர்களின் விஷயத்திலும் சரி பர்மாவில் எல்லா இன, மத சிறுபான்மையர் விஷயத்திலும் சரி, கதாபாத்திரங்கள் மாறலாம், கதை ஒன்றுதான்.

உலகின் பார்வையில் பர்மா ஒரு அசிங்கமாக இருந்தாலும் சரி சொல்கிறேன்: அது இயற்கை வளங்களின் விபச்சார விடுதி. அது கடைசியில் உருவாகியிருக்கும் “புதிய சந்தை” அல்லது “கன்னி பொருளாதாரம்”. யோசித்துப் பாருங்கள். ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இனத் துடைத்தழிப்பு நடக்கிறது என்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் அங்கே நடந்துகொண்டிருக்கின்றன என்றும் தியென் சியென் அரசாங்கத்தைக் குற்றம்சாட்டி ஹியூமன் ரைட்ஸ் வாச் அமைப்பு அறிக்கை வெளியிட்ட அதே நாளில், அதிபரும் முன்னாள் தளபதியுமான தியென் செயினை “அமைதியின் வழி செல்பவர்” எனக் கூறி விருது அளித்து மகிழ்கிறது இன்டர்நேஷனல் கிரைசிஸ் குரூப். பர்மா மீதான எல்லா பொருளாதாரத் தடைகளையும் நீக்க ஐரோப்பிய யூனியன் முன்வந்திருக்கிறது. பர்மாவில் நடப்பது “முன்னுதாரணமாகத் திகழக்கூடிய ஜனநாயத்துக்கான மாறுதல் காலகட்டம்” என்று அழைக்கிறார் அமெரிக்க குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா. ஆசியான் ஐஎம்எஃப், வேர்ல்ட் பேங்க், ஜப்பானின் சென்ட்ரல் பேங்க் அனைத்துமே அங்கே கடைவிரித்துவிட்டன. பர்மாவின் 7 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை ஜப்பானும் பிற கடன் வழங்கு நாடுகளும் ரத்து செய்துவிட்டன. ஆக பர்மாவில் ஓர் இனப்படுகொலை அரசு தன் இனப்படுகொலையை செவ்வனே செய்து முடிக்க அனைத்து உதவிகளையும் சர்வதேச சமூகம் செய்துகொண்டிருக்கிறது என்றே கூறமுடியும்.

இலங்கையில் தமிழர்களுக்கு மாபெரும் அழிவை கொழும்பு நடத்தி முடிப்பதற்கு வியூக முக்கியத்துவம் வாய்ந்த அதிமுக்கிய உதவியை சீனா அளித்தது. அந்த சீனா இன்று பர்மாவின் மீதும் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறது. அதற்குத் தேவை பர்மாவின் இயற்கை வளங்கள், பர்மாவின் மேற்கு மற்றும் தெற்கு கடலோரங்களில் கால் பதிப்பதற்கான அனுமதி ஆகியவைதான். அப்படி நடந்துவிட்டால் இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகிய இரு மாகடல்களிலும் தன் கடற்படைக்கு நேரடித் தொடர்பை சீனா பெற்றுவிடும்.

இன்று மியான்மரில் நடக்கும் இனப்படுகொலை. அதன் பின்னணி என்ன ? என்பதை நாம் அறிந்துக்கொள்ள ஓர் அறிமுகமாக  2013 ஆம் ஆண்டு மே மாதம் தமிழ் ஆழி இதழில் வெளியான மியான்மர் மனிதவுரிமையாளரான மாங் சார்னியிடம் எடுத்த நேர்காணல் தான் இந்த நேர்காணல்.

மனிதவுரிமையாளரான மாங் சார்ன் குறிப்பு :

ரோஹிங்கியா முஸ்லீம்களின் மீதான தாக்குதல் என்பது இனப்படுகொலைதான் என்று கூறும் மாங் சார்னி தற்போது மியான்மரைவிட்டு வெளியே வசிக்கிறார்.

ஈழ இனப்படுகொலைக்கும் இதற்கும் உள்ள ஒப்புமை, பர்மாவில் ஒரு காலத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டது. இந்தியாவின் பங்கு, சீனாவின் எண்ணம், அமைதிப்புறா என்று நாம் கருதும் ஆங் சான் ச்சுகியின் உண்மை முகம், இனவாத பெளத்தம் என பலவற்றைப் பற்றியும் பேசினார் மாங் சார்னி.

ஈழத்தமிழர்களுக்கு சர்வதேச அளவில் பேசிவருபவர்களில் ஒருவரான மாங் சார்னியின் முன்னோர்களில்
(ரோஹிங்கியா முஸ்லீம்களின் மீதான மியான்மர் அரசின் இனவழிப்பு நடவடிக்கைகள் குறித்து மனித உரிமை செயல்பாட்டாளர் மாங் சார்னியுடனான ஆழி செந்தில் நாதனின் விரிவான நேர்காணல் - (indosri)