நாங்க மட்டுமல்ல..! மஹேந்திர பல்லவன் கால எடுத்தனூர் நடுகல்லில் கோவிவன் என்ற நாயின் பெயர் வருகிறது. தமிழர்களும் 1400 ஆண்டுகளுக்கு முன் நாய்களை வளர்த்து அவைகளுக்கு அன்பான பெயர் சூட்டுவதும் அதை யுத்த களம் வரை அழைத்துச் சென்றதும் இதனால் தெரிகிறது. யுத்த வீரனுடன் அந்த நாயும் இறக்கவே அது கல்வெட்டில் அழியா இடம் பெற்று அமரத்துவம் பெற்று விட்டது. அன்பானது, பண்பானது நமது உணர்வின் ஆழத்தை புரிந்து வைத்தது. நாங்கள் வெறுத்தாலும் ஒதுக்கினாலும் ஒரு நேர அரவணைப்பின் பாசத்துக்கு செஞ்சோற்று கடனை வாழ்நாள் முழுதும் செய்யும் கடவுளின் படைப்பின் அரிய உயிரினம்...
நாய்கள், மனிதர்களின் சிறந்த நண்பர்கள் என்பது உலகம் ஏற்றுக் கொண்ட உண்மை. அதற்கு மேலும் நாய்களுக்கு சிறப்பு உண்டு. உயிரின வளர்ச்சி வரலாறு, அகழ்வாய்வு மூலம் கண்டறியப்பட்டவை நாய்களைப் பற்றி பல்வேறு செய்திகளை அறிய முடிகிறது. இன்று நாம் நேசிக்கும் நாய் 20000 ஆண்டுகளுக்கு முன் இருந்ததில்லை.
எப்பொழுது, எங்கே, முதல் முதலாக நாய் என்ற மிருகம் பற்றி அறிய வந்தது? அவை முதலில் உணவுக்காக பயன்படுத்தப்பட்டதா? வளர்ப்பு நண்பனாக வைத்திருந்தார்களா? வேட்டையாடும் திறமை கண்டு வளர்த்தார்களா? இந்த கேள்விகள் விலங்கியல் துறையிடையே முக்கியத்துவம் பெற்றன.
நாய் இனம் வேட்டையாடும் முரட்டு நாய் ஜேக்கால் (Jackal) சீனவழி வந்தவை என்ற கருத்து சரியல்ல என்பதாயிற்று. சாம்பல் நிற ஓநாய் (Wolf) இனத்தின் வழி வந்தவை என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. அடுத்து, நாய்கள் முதலில், சீன நாட்டிலா, தூரகிழக்கு நாட்டிலா, ஆப்பிரிக்காவிலா செல்லப் பிராணி யாக வளர்க்கப்பட்டது என்ற கேள்வி எழுந்தது. புதிய கற்காலத்தில் நாய்கள் முக்கிய பங்கு வகித்தன. 10000 ஆண்டு களுக்கு முன்னதாக, மனித வாழ்க் கையில் நாய்கள் சிறந்த காவலாளியாக, மதச்சடங்குகளில் பலியிடுவதற்காக, உடலுக்குத் தேவையான புரதசத்தை பெறுவதற்கான மிருகம் என்ற பங்கை வகித்து வந்தன. இந்த செய்தி சீனா, ஆப்பிரிக்கா நாடுகளில் கண்டெடுக்கப்பட்ட எலும் புக் கூடுகளின் வாயிலாக அறியப்படுகிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன் ஓநாய் (Wolf) இன வழியாக இவை உற்பத்தி அடைந்தன என்றும், பயிர் தொழில், வேட்டையாடுதல் தொழிலில் ஈடுபட்டவரி டையே நாய்கள் வளர்ச்சி யடைந்திருக்க முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது. லாஸ்ஏன்ஜல்ஸ் கலி போர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் ராபர்ட்வயன், வளர்ப்பு நாயின் டி.என்.ஏ. கிழக்கு நாடுகளின் ஓநாயினுடைய டி.என்.ஏ வுடன் ஒத்து உள்ளதாகக் கூறுகிறார். விக்டோரியா பல்கலைக்கழக அகழா ராய்ச்சிப் பேராசிரியர் கிராக்போர்ட் (Crockford) கூறுவது; நாய்களை புதைக்கும் பழக்கம், ஆன்மீக சிந்தனையுடன் நாய் தொடர்புள்ளதை காட்டுகிறது. அடுத்து காவலுக்கு பயன்படுத்தும் பழக்கம் வந்துள்ளது. வேட்டைக்கு அன்று துவக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.
மக்கள் கலாச்சாரத்தோடு நாய் எப்படி தொடர்புடையதாக இருந்தது என்பதைப் பற்றிய செய்தி வருமாறு:
தென் அமெரிக்காவின் பெருநகரத் தின் கல்லறைகளில், 80 நன்கு பதப் படுத்தப்பட்ட நாய்கள் அவற்றின் சொந் தக்காரருடன் புதைக்கப்பட்டிருந்தது. அழகான கம்பிளி துணியால் மூடப்பட்டு அவற்றின் மூக்கின் அருகில் மீன் வைத்துள்ளனர். அதன் எலும்பு காணப்படுகிறது. அவை குட்டியிலிருந்து பெரிய நாய்களாக உள்ளன. பண்டய எகிப்தியர் நாயை கடவுளாக மதித்தனர். இந்த உலகத்திற்கும், இறந்த பின் மறு உலகத்துக்கும் துணைவனாக கருதப் பட்டது. சில புதைக்கப்பட்ட நாய்களுடன் ஒரு கிண்ணமும் உள்ளது. ரோம கலாச்சாரத்தில் நாயை மனிதருக்குக் கொடுக்கும் மதிப்போடு மதிக்கும் பழக்கம் இருந்தது.
தேவதைகளை திருப்திபடுத்த நாயை பலியிடும் பழக்கம், மதத்தின் அடிப்படையில் நடைபெற்றது. கிரேக்க நாட்டில் ஸ்பார்டன் பகுதி மக்கள் போரில் வெற்றிபெற நாயை பலியிட் டனர். குழந்தை பிறந்த பிறகு, ஒருவர் இறந்த பிறகு தூய்மை ஏற்பட நாயை பலியிடும் பழக்கம் கிரேக்கரிடம் இருந்தது. இதைப்போலவே ஹங்கேரி நாட்டில் நாய்குட்டிகளை சிறு பானைகளில் வைத்து புதைத்துள்ளனர். தீய சக்திக்களை நீக்குவதற்கு இந்த பழக்கம் இருந்தது. இங்கிலாந்தில் உள்ள ரோம நாட்டு கட்டடங்களில் சுடுமண் ஓடுகளில் நாய்களின் பாதங்களை பதிய வைக்கும் பழக்கம் இருந்துள்ளது.
உணவுக்காக நாய்
பழக்கத்தின் காரணமாக, விருப்பத் தின் காரணமாக அல்லது தேவையின் காரணமாக நாயை உணவுக்காக பயன் படுத்தும் கலாச்சாரம் இருந்து வந்துள் ளது. உலோக காலத்தில் (450 - 100 BC)உணவுக்காக நாயை வளர்த்து வந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. எளிதில் புரத உணவுப்பொருளை பெறு வதற்கு நாய் உணவு பயன் பட்டது. சில நேரங்களில் விழாக்காலங்களிலும் நாய் உணவு சாப்பிட்டு வந்தனர்.
ஆத்மாவுக்கு பாதுகாவலன்
பழங்கால மக்கள், இறந்த பின் மறு உலகத்தில் நாய் களை சந்திக்க முடியும் என்று நம்பினர். ரிக்வேதத் திலும் , கிரேக்க, ரோம நாட்டு கதைகளிலும் இது பற்றி கூறப்பட்டுள்ளது. பல கலாச்சாரங்களில் ஆத்மா வுக்கு வழிகாட்டியாக நாய் உள்ளதாகக் கருதப்பட்டது.
(‘ARCHAEOLOGY’ (அகழ் ஆராய்ச்சி) அக்டோபர் 2010 இதழிலிருந்து வழங்கப்படும் செய்தி)
இந்தியாவிலும் நவீன கற்கால மனிதர்கள் இறந்தவர்களை குழியில் புதைக்கும் வழக்கத்தில் இருந்தனர். சில சமயங்களில் இறந்தவர்களை புதைக்கும் போது அவருடைய நாயுடன் புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது. காஷ்மீர், கர்நாடகம், தமிழகம் போன்ற பகுதிகளில் இந்த முறை இருந்துள்ளது. (வி.வி.கிருஷ்ணசாஸ்திரி, பழங்கால வரலாற்று நாகரீகங்கள்) நாய் பற்றிய பழமொழிகளுக்கும் பஞ்சமில்லை. நாயின் குணங்களைப் பற்றியும், இன்று அவை எந்தெந்த வகையில் மனிதர் களுக்குப் பயன்படுகிறதென்றும் நாம் அறிவோம்.
நாய் கண்காட்சிகள் நடப்பதும், அவற்றிற்கு பரிசளிப்பதும் உலகெங்கும் நடைபெறுவதுண்டு. அக்கண்காட்சிகளில் பலவகைத் தோற்றத்துடைய நாய்களைக் காண் கிறோம். நாய்களை வீட்டில் வளர்ப்பதற்கு சில விதிமுறைகளை அரசு விதிப்பதால், தெரு நாய்கள் என்று ஒரு கூட்டம் இருப்பதில்லை. இந்த முறையை சிறப்பான வகையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் கடைபிடிப்பதைக் காண முடிந்தது. நாய்கடிக்கு பல நாட்கள் ஊசி போடும் முறைக்குப் பதிலாக ஒரு ஊசி போதும் என்பதாக அறிவியல் உதவியுள்ளது.
ரிக் வேதத்தில் நாய் வளர்ப்பு
இதற்கு என்ன ஆதாரம்?
1. இந்த நாய் வளர்க்கும் வழக்கமும், அதற்குப் பெயர் வைக்கும் வழக்கமும் ரிக் வேத காலத்திலேயே துவங்கிவிட்டது. இப்பொழுது அமெரிக்கர்கள் ரிக் வேதத்துக்குக் கொடுக்கும் கி.மு.1700 என்று கொண்டாலும் இற்றைக்கு 3700 ஆண்டுகளுக்கு முன்னரே இந்திரன் வளர்த்த சரமா என்ற பெண் நாய் மற்றும் அதன் இரண்டு குட்டிகள் சரமேயஸ் பற்றி ரிக் வேதப்பாடல்கள் மூலம் அறிகிறோம் (R. V. 7-55-2 and 10-108). இதை வழக்கம் போல கிரேக்கர்கள் ‘’திருடி’’ பெயரை ஹரமஸ் என்று மாற்றி கதை எழுதிவிட்டனர். அவர்கள் மூலம் வேறு பல கலாசாரங்களிலும் இது நுழைந்துவிட்டது. கிரேக்கர்களுக்கு ‘’எஸ்’’ வராது என்பதால் சிந்து என்பதை ஹிந்து என்பது போல சரமாவும் ஹரமஸ்—ஹெர்மஸ் ஆகிவிட்டது. ஆக முதலில் நாய் வளர்த்தவர்களும் நாமே. அதற்குப் பெயர் சூட்டு விழா நடத்தியதும் நாமே!
2.தர்மபுத்திரன் தனது ஆட்சியை முடித்துக் கொண்டு, சகோதரர்களுடன் வடதிசைப் பயணத்தை மேற்கொண்டான். அதாவது சாகும் வரை நடந்து கொண்டே இருக்க வேண்டும். தமிழ் மன்னர்களும் இதைச் செய்ததை கோப்பெருஞ்சோழன் — -பிசிராந்தையார் – பொத்தியார் கதைகளில் விரிவாகச் சொல்லிவிட்டேன். ஒவ்வொரு சகோதரராக ‘’தொப்பு தொப்பு’’ என்று கீழே விழுந்து இறந்தனர். ஆனால் தர்மபுத்திரன் மட்டும் வடதிசையை நோக்கி தொடர்ந்து நடந்தார். அவருடன் ஒரு நாய் மட்டும் தொடர்ந்து சென்றது. சொர்க்கத்தின் வாசலுக்குச் சென்ற போது, ‘’வெரி ஸாரி, சொர்க்கத்தில் நாய்களுக்கு அனுமதி கிடையாது. அதை வெளியில் அம்போ என்று விட்டுவிட்டு உள்ளே வாருங்கள்’’ — என்றனர் வாயிற் காப்போர். தருமனோ அதற்கு மறுத்து விட்டான். பின்னர் யம தர்மராஜனே இவ்வாறு தர்மன் இறுதிவரை தர்மத்துடன் இருக்கிறானா என்பதைக் காணவந்ததாக மஹாபாரதம் கதையை முடிக்கிறது.
ரிக் வேத நாயும், மஹாபாரத நாயும் யமனுடன் தொடர்புடைய கதைகள்.
தமிழ் கல்வெட்டில் நாய்
3.மஹேந்திர பல்லவன் கால எடுத்தனூர் நடுகல்லில் கோவிவன் என்ற நாயின் பெயர் வருகிறது. தமிழர்களும் 1400 ஆண்டுகளுக்கு முன் நாய்களை வளர்த்து அவைகளுக்கு அன்பான பெயர் சூட்டுவதும் அதை யுத்த களம் வரை அழைத்துச் சென்றதும் இதனால் தெரிகிறது. யுத்த வீரனுடன் அந்த நாயும் இறக்கவே அது கல்வெட்டில் அழியா இடம் பெற்று அமரத்துவம் பெற்று விட்டது. ஆக பாரதம் முழுதும் ஒரே கலாசாரம் இருந்தமைக்கு நாயும் சான்று பகரும்!
4.பசுமாடுகளுக்கு அன்பான பெயர் சூட்டுவதால் காமதேனு சுரபி போன்ற பெயர்களை நாம் அறிகிறோம். பாற்கடலைக் கடைந்த போது வெளியே வந்த குதிரை உச்சைஸ்ரஸ், யானை ஐராவதம் ஆகியவற்றின் கதைகளை நாம் அறிவோம். பகவத்கீதையில் உச்சைஸ்ரவஸ் பெயர் வருவதால் அதுவும் அழியா இடம் பெற்றுவிட்டது.
நாய் வளர்ப்போர் கவனிக்க…!
சமூக அந்தஸ்துக்காக, குழந்தைகளுக்காக என்பது போன்ற காரணங்களுக்காக நாய் வளர்க்காமல், உண்மையில் செல்லப்பிராணி வளர்ப்பில் பிரியமும், ஆர்வமும் இருப்பவர்கள் மட்டுமே நாய் வளர்ப்பது நன்று!’’
* ஸ்டேட்டஸை வெளிப்படுத்தும் விதமாக, வெளிநாட்டு நாய் மோகத்தில், வாயில்லா ஒரு ஜீவனை தான் வாழும் சூழ்நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சூழலுக்குக் கொண்டு வந்து வளர்ப்பதைவிட, கன்னி, கோம்பை, சிப்பிப்பாறை போன்ற அழியும் நிலையில் உள்ள நம் நாட்டு நாய் இனங்களை வளர்க்கலாம்.
* சில பிரீடர்ஸ், இங்கேயே வெளிநாட்டு நாய்களை வளர்த்து இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்கிறார்கள். இவர்களில் சிலர் ஒரு நாய் 6 குட்டிகளை ஈன்றால், 4 குட்டிகளை விற்றுவிட்டு, 2 குட்டிகளை அடுத்த இனப்பெருக்கத்துக்காக வைத்துக் கொள்கிறார்கள். இதனால் குறையுள்ள நாய்கள் பிறக்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் அவர்கள் அதையும் சாமர்த்தியமாக விற்று விடுவார்கள். வாங்குவோர்தான் கவனமாக இருக்க வேண்டும்.
* வீட்டுச் சூழலுக்கு ஏற்ப நாய் வாங்க வேண்டும். பெரிய வீடு அல்லது தனி வீடுகளில் பாக்ஸர், டாபர்மேன், ஜெர்மென் ஷப்பர்டு, லேப்ரடார் போன்ற நாய்களை வளர்க்கலாம். இவை அதிகமான உணவை உட்கொள்ளக் கூடியவை. அதனால் செரிமானத்துக்கு அவற்றுக்கு ஓடுவது, நடப்பது, விளையாடுவது என்று பயிற்சிகளும் அதிகம் தேவைப்படும் என்பதால், பெரிய சுற்றுப்புறம் அவசியம். மேலும் தோல் நோய்கள் வராமல் இருக்க சூரிய ஒளி அவசியம் என்பதால், அவற்றை இரு வேளை வாக்கிங் அழைத்துச் செல்ல வேண்டும்.
* அப்பார்ட்மென்ட்களில் பெரிய நாய்களைத் தவிர்த்து, ‘ஸ்மால் ப்ரீட்ஸ்’ என்ற அழைக்கப்படும் பக், பொமரேனியன் போன்றவற்றை வளர்க்கலாம். இவை வளர குறைந்த அளவிலான இடம் போதுமானது. அதிக சூரிய ஒளி தேவைப்படாத இவற்றை, ஒருமுறை வாக்கிங் அழைத்துச் சென்றால் போதுமானது.
* நம்மைப் போலவே நாய்களுக்கும் ஊட்டச்சத்து உணவு அவசியம். மினரல்கள், வைட்டமின்கள், புரதம், கார்போஹைட்ரேட் போன்றவற்றை சரிவிகித அளவில் அவற்றுக்கு வழங்க வேண்டும். தொடர்ந்து ஒரே வகை உணவை கொடுத்தால், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் தொற்றுநோய்களில் ஆரம்பித்து, தோல் நோய்கள், அனீமியா, அனீமியாவால் உள்ளுருப்புகளின் செயல்பாடுகள் குறைவது என்று நாயின் ஆயுள் பாதியிலேயே முடிந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.
* நாய்களுக்கென்றே பிரத்யேக பாக்கெட்களில் விற்கப்படும் உணவுகள் மட்டுமே அவற்றுக்குப் போதாது. காரணம், மேலைநாடுகளில் குளிர்பிரதேச தட்பவெட்ப சூழலில் வளரும் நாய்களுக்காக தயாரிக்கப்படுபவை, டிரை ஃபுட். அங்கு நாய்களை வாக்கிங்கூட அழைத்துச் செல்ல முடியாது என்பதால், உடலுக்குச் சூடு தரும் வகையில் ட்ரை ஃபுட் தயாரிக்கப்படுகிறது. அதே ரக உணவு, நம் நாட்டில் வாழும் நாய்களுக்கு எப்படி செட் ஆகும்? எனவே, தண்ணீர்ப்பதம் சேர்ந்த உணவே நம் நாய்களுக்குத் தரப்பட வேண்டும். அந்த ‘டிரை ஃபுட்’ வகைகளை ஸ்நாக்ஸ் ஆக வழங்கலாம், உணவாக வேண்டாம்.
* நாய்களின் சுபாவமே எதைப் பார்த்தாலும் முகர்ந்து பார்ப்பதுதான். இதனால் நாசி வழி கிருமிகள் உள் சென்று தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால், மாதத்துக்கு ஒரு முறை பூச்சி மருந்து கொடுப்பதுடன், தவறாமல் தடுப்பூசிகளைப் போட வேண்டும்.
* நாம் சாப்பிடும் உணவில் வெங்காயம் அதிகம் சேர்க்கப்பட்டிருந்தால், அதை நாய்க்கு வழங்கக் கூடாது. காரணம், நாய்க்கு வெங்காயம் செரித்து வெளியேறாது உள்ளேயே தங்கிவிடும். பல நாட்களாக இப்படி சேரும்போது, அது விஷமாக மாறிவிடும். இதனால் தோல் பிரச்னை முதல் உள்ளுறுப்புகள் பாதிப்பு வரை ஏற்படலாம்.
தெருநாய் என சித்தரிக்கப்பட்ட நம் நாட்டு நாய்கள் பற்றிய ஒரு தொகுப்பு
“நாட்டு நாய்கள் மிகவும் நன்றி கொண்டவை. நாம் என்றாவது ஒரு நாள் உணவு போட்டுவிட்டு, பின்பு கல்லால் அடித்தால்கூட நம்மை பார்த்ததும் வாலை ஆட்டிக்கொண்டு பின்னால் ஓடிவரும். பட்டி நாய்கள் எனப்படும் நாட்டு நாய்களிடம், வெளிநாட்டு நாய்களிடம் இல்லாத பல்வேறு விசேஷ குணங்கள் இருக்கின்றன..” என்கிறார், நாட்டு இன நாய் ஆய்வாளர் பொன் தீபங்கர். இவருக்கு 29 வயது. டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் கற்றுவிட்டு ஈரோடு வந்திருக்கும் இவர், இந்தியாவின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதில் விவசாயம், நாட்டு இன நாய்கள் போன்ற விஷயங்களும் இடம் பெற்றிருக்கின்றன. நாட்டு இன நாய்கள் பற்றி அவர் கூறும் அபூர்வ தகவல்களின் தொகுப்பு: “எனது சிறுவயது பருவத்தில், எங்கள் தோட்டத்தில் உள்ள கால் நடைகளை பாதுகாக்க ராஜபாளையம் நாய் இருந்தது. அது நாம் சிந்தும் உணவை மட்டுமே சாப்பிட்டாலும் நம்மையே சுற்றி வரும். நம்மை மீறி நமது வீட்டிற்குள் நுழையாது. தோட்டத்துக்குள் எங்கேனும் ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டால் பதிலுக்கு முதல் குரல் அந்த நாயிடம் இருந்துதான் எழும். தமிழகத்தில் ஆடு, மாடுகளை அடைத்து வைத்திருக்கும் இடத்தை தொழுவம் அல்லது பட்டி என்று கூறுவோம். அந்த பட்டியை பாதுகாக்கும் நாய்கள்தான் அந்த காலத்தில் பட்டிநாய்கள் என்று அழைக்கப்பட்டன. மலையாள மொழியில் நாய்களை பட்டி என்று அழைப்பதற்கும் இது காரணமாக இருக்கலாம்.
எனக்கு தெரிந்தவரை பட்டி நாய்களில் கருவாய் செவலை, கருநாய், பச்ச நாய் ஆகிய மூன்று இனங்கள் இருந்திருக்கின்றன. உடல் முழுக்க செவலையும் வாய் பகுதி கருப்பாகவும் இருக்கும் கருவாய் செவலை அதிக மவுசாக இருந்திருக்கிறது. இது காவலுக்காகவும், செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்பட்டிருக்கிறது. கருநாய் முழுக்க முழுக்க கறுப்பு நிறத்தில் இருக்கும். பட்டிகளில் காவல் காக்க இந்த நாய்கள்தான் மிகச்சிறந்தவை. இருளோடு இருளாக இந்த நாய்கள் படுத்து இருந்தால் பிற மிருகங்களுக்கு காவல் நாய் இருப்பது தெரியாமல் வந்து மாட்டிக்கொள்ளும். பச்ச நாய் என்றால் துரத்தித்துரத்தி கடிக்கும் ஆற்றல் கொண்டது. இந்த நாய்கள் இருக்கும் சுற்று வட்டார பகுதிக்கு யாரும் செல்ல முடியாது. பாய்ந்து வந்து கடித்து விடும். இதுபோன்று வேறு சில நாட்டு இன நாய்களும் இருந்துள்ளன. ஆனால் இன்று வெளிநாட்டு இன நாய்களின் மோகத்தால் நம் நாட்டு நாய்களை தெருவுக்கு துரத்தி, தெருநாய்களாக்கிவிட்டோம். நமது விவசாய நிலங்களில் நச்சுப்பாம்புகளும், தேள்களும், வேறு பல விஷ ஜந்துகளும் உள்ளன. இவற்றில் இருந்து விவசாயிகளை பெரிதளவும் காத்து வந்திருப்பவை பட்டி நாய்கள்தான். முன்பு விவசாயிகள் தங்கள் தோட்டத்துக்கு செல்லும்போது பட்டி நாய்கள் அவர்களுக்கு முன்னால் நடந்து செல்லும். பாம்புகள் வந்தால் அவற்றின் குரைப்பு சத்தம் வித்தியாசமாக இருக்கும். அதை விவசாயிகள் உணர்ந்து, தங்களை காத்துக்கொள்வார்கள். எல்லா விதமான விஷ ஜந்துக்களையும் நாய்களுக்கு அடையாளம் தெரியும். அவைகளை தங்கள் எஜமானர் அருகே அணுக விடாமல் பார்த்துக்கொள்ளும். அதுபோலவே மாட்டுப்பட்டிகளை காவல் காக்கும் இந்த நாய்கள், மாடுகளை எந்த ஜந்துவும் அணுகாமல் பார்த்துக்கொள்ளும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் ஒரு உயர் போலீஸ் அதிகாரி இருந்தார். அவருடைய மனைவிக்கு வெளிநாட்டு நாய்கள் மீது கொள்ளை பிரியம். வீட்டில் 14 நாய்கள் வளர்த்து வந்தார். அந்த நாய்களுடன் ஒரே ஒரு நாட்டு நாயை, அந்த அதிகாரி விரும்பி வளர்த்து வந்தார். ஆனால் அந்த நாயை அவருடைய மனைவிக்கு கொஞ்சமும் பிடிக்காது. ஒருநாள் இரவில் அவரது வீட்டுக்குள் திருடர்கள் புகுந்து விட்டனர். நாட்டு நாயுடன் சேர்த்து 15 நாய்களும் சுற்றிக்கொண்டன. திருடர்கள் சாமர்த்தியமாக மயக்க பிஸ்கெட்டை தூக்கி வீசினார்கள். அனைத்து நாய்களும் ஓடிச்சென்று பிஸ்கெட்டுகளை தின்று விட்டு சாப்பிட சிறிது நேரத்திலேயே மயங்கி விட, திருடர்கள் போட்ட பிஸ்கெட்டை சாப்பிடாத நாட்டுநாய் பாய்ந்து அவர்களை தாக்கியது. இதில் நிலை தடுமாறிய திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். நாயின் குரைப்பு சத்தம்கேட்டு அந்த அதிகாரி வெளியே வந்து பார்த்தபோது வெளிநாட்டு நாய்கள் மயக்கத்தில் கிடந்தன. நாட்டு நாய் மட்டுமே கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. காரணம், நாட்டு நாய்கள், முன்பின் தெரியாதவர்கள் போடும் உணவுகளை உண்பதில்லை. வீட்டை மட்டுமல்ல, ஒரு கிராமத்தையே கட்டிக்காக்கும் திறன் பட்டி நாய்களிடம் உண்டு.
இப்போது தெருநாய்களாக்கப்பட்ட பின்பு கூட, அந்த வீதியில் தினமும் வந்து செல்பவர்களை தவிர இரவு நேரத்தில் புதிய நபர் ஒருவர் வந்தால் அதை பார்த்ததும் நாட்டு நாய் உடனடியாக குரைக்கும். அதைத்தொடர்ந்து ஆங்காங்கே நிற்கும் நாய்களும் குரைக்கும். இப்படி தகவலை பரப்பி, ஒருசேர உஷாராக்கி தகவலை பரப்பும் ஆற்றல் நாட்டு நாய்களுக்கு மட்டுமே உண்டு. வேட்டிக்கட்டிக்கொண்டு செல்லும் நபர்களை பார்த்து பெரும்பாலும் நமது பட்டி நாய்கள் குரைப்பதில்லை. காரணம், வேட்டி கட்டியவன் தன்னை தாக்க மாட்டான் என்பது பட்டி நாய்களின் ஜீனில் பதிவாகி இருக்க வேண்டும். இன்று நாம் கொண்டாடும் வெளிநாட்டு நாய்களின் மூலம் ஆஸ்துமா, சைனஸ் நோய்கள் உருவாகும். தொற்று நோய்கள் பரவும். குளிர் பிரதேசத்தில் வாழும் தன்மை கொண்ட அவைகளை, அதற்கேற்றபடி பராமரிக்கவும் வேண்டும். ஆனால், வெப்ப நாடுகளின் காலநிலைக்கு தகுந்தாற்போல நம்மோடு வாழும் பட்டி நாய்களால் எந்த நோயும் பரவாது. அவை நோயால் பாதிக்கப்பட்டால் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு தானாகவே சென்று செத்துவிடும் அறிவாற்றல் கொண்டது. கிராமங்களில் நாய் வளர்த்தவரின் வீட்டில் ஒருவர் உடல்நலமில்லாமல் இறக்கும் தருவாயில் இருந்தால், அவருக்கு பதிலாக நாய் தனது உயிரைக்கொடுத்து காப்பாற்றும் என்பார்கள். எனவேதான் காலபைரவரின் வாகனமாக பட்டி நாய் அமைக்கப்பட்டு உள்ளது. பட்டி நாய்களை சற்று உற்றுநோக்கி கவனியுங்கள். அது ஒவ்வொரு சூழலிலும் வெவ்வேறு விதமாக குரல் எழுப்பும். சிறு குழந்தைகளை கடிக்காது. பாதுகாப்பற்ற சூழலில் வீட்டைவிட்டு வெளியே செல்லும் குழந்தைகளை பார்த்தால் குரைத்து மிரட்டி மீண்டும் வீட்டுக்குள் வரும்படி செய்துவிடும். இதற்கு காரணம், முன்பு பட்டியில் இருந்து தொலைந்து போகும் கன்றுகளை, பட்டி நாய்கள்தான் தேடிக் கண்டுபிடித்து திரும்ப கொண்டு வந்து சேர்க்கும். கால்நடைகளுக்கும், மக்களுக்கும், விவசாயத்திற்கும் நாட்டு நாய்கள் காவல் அரணாகும். நமது கலாசாரத்தோடும், வாழ்வியல் ஆதாரங்களோடும் பின்னிப் பிணைந்த பட்டி நாய்களை பாதுகாப்பது நம் சமூக கடமை” என்கிறார், ஆய்வாளர் பொன் தீபங்கர்.
தேள் மற்றும் விஷ பூச்சிகளை பட்டி நாய்கள் எந்த பயமுமின்றி கடித்து தின்றுவிடும். பாம்புகளையும் எதிர்த்து நின்று கடித்து விரட்டும். நாட்டு நாய்கள் விஷப்பாம்புகளையும் கடித்து கொல்லும் ஆற்றல் கொண்டவை மட்டுமல்ல, பாம்புகள் கடித்தாலும் அவற்றுக்கு எளிதில் மரணம் ஏற்படாது. ஏன் என்றால் உடனே அதற்குரிய பச்சிலையை தேடிச் சென்று கடித்து தின்றுவிட்டு, தரையில் மல்லாந்து படுத்துக்கொள்ளும். யோகாசனத்தில் சவாசனம் என்பார்களே அதுபோல எந்த அசைவும் இல்லாமல் சில மணி நேரம் கிடக்கும். நாம் பார்த்தால் கூட அது செத்து விட்டதோ என்று தான் தோன்றும். அருகில் சென்று பார்த்தால்தான் அதன் உடல் அசைவு தெரியும். ஏன் அது அப்படி கிடக்கிறது என்றால், பாம்பின் விஷம் தலைக்கு ஏறி மூளையில் கலந்து விட்டால் உயிரிழப்பு ஏற்பட்டு விடும். எனவேதான் அறிவுள்ள அந்த நாய்கள் சவாசனம்போல படுத்துக்கொள்கின்றன. அப்படி படுத்துக்கொள்ளும்போது, ரத்தம் இயற்கையாகவே சிறுநீரகத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு விஷம் சிறுநீராக வெளியேறும். சிறுநீர் வெளியேறியதும் எந்த பிரச்சினையும் இல்லாமல் அது தொடர்ந்து தனது காவல் பணியை செய்யும்...