இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், இந்திய வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இவர் பற்றிய மர்மங்களையும் வாழ்க்கையையும் அறிவதற்கு மிகவும் ஈடுபாட்டுடன் தேடலில் உள்ளவன் நான். இன்றைய தினம் மாலைமலர் பத்திரிகையில் வந்த விடயங்களை எனது கருடன் பக்கத்தில் பகிர்கிறேன்.
கும்நாம் பாபா என்ற பெயரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பைசாபாத் நகரில் 1985-ம் ஆண்டுவரை உயிரோடு வாழ்ந்ததாக நம்பத்தகுந்த தகவல்களும், அதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.இந்திய தேசிய ராணுவம் என்ற போராளிகள் பட்டாளத்தை உருவாக்கி, இந்திய விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தி, வெள்ளையர் அரசுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவில் இருந்து வெளியேறி, ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்ற சுபாஷ் சந்திர போஸ், பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து போரிட்ட ஜெர்மனி படைகளுடன் சேர்ந்து இந்திய விடுதலைக்காக போராடினார். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி போர் விமானத்தில் ஜப்பான் நோக்கி அவர் சென்றுக்கொண்டிருந்த போது, இயந்திரக்கோளாறு காரணமாக விமானம் மலை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், நேதாஜி பலியாகி விட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது மரணம் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த 1956ம் ஆண்டு ஷா நவாஸ் கமிட்டியும், 1999ம் ஆண்டு முகர்ஜி கமிஷனும் அமைக்கப்பட்டது. 2005ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட முகர்ஜி கமிஷன் அறிக்கையில், 1945ம் ஆண்டு நேதாஜியின் விமானம் எரிந்து விழுந்ததாக கூறப்படும் இடத்தில் அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. கடந்த 70 ஆண்டுகளாக நிலவி வரும் நேதாஜியின் மரணம் தொடர்பான மர்மமுடிச்சு, இதுவரை அவிழ்க்க முடியாத கல்முடிச்சாகவே இருந்து வருகிறது. நேதாஜி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் தலைமையக அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த 64 கோப்புகளை சமீபத்தில் மம்தா பானர்ஜி வெளியிட்டார். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து பணியாற்றி, பின்னர், காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசிவந்த டெப்நாத் தாஸ் என்பவரைப் பற்றிய போலீசாரின் உளவுத்தகவல்கள் மேற்கண்ட 64 கோப்புகளில் 22-ம் எண் கோப்பில் காணப்படுகிறது.அவரது கருத்தின்படி,1948-ம் ஆண்டுவரை சீனாவின் மன்சூரியா பகுதியில் நேதாஜி உயிருடன் வாழ்ந்ததாகவும், இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் மூன்றாம் உலகப்போர் வெடிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன் இந்தியா மற்றும் சர்வதேச அரசியலின் போக்கை அவர் உன்னிப்பாக கவனித்து வந்ததாகவும் தெரியவந்தது.இதற்கிடையில், நேதாஜியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்களில் ஒருவரான சைபுத்தீன் என்கிற நிஜாமுதீன் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆசம்கர் மாவட்டத்தின் டக்கோவா கிராமத்தில் தற்போது வசித்து வருகிறார். தனக்கு 115 வயதாவதாக கூறும் நிஜாமுதீன், நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களில் ஒருபகுதி வெளியாகியுள்ள நிலையில் கடந்த ஆண்டில் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்திருந்தார்.‘கடைசியாக நேதாஜியை 1947-ம் ஆண்டு நான் சந்தித்தேன். அவரை ஒரு காரில் அழைத்துவந்து, பர்மாவின் சித்தான் நதியில் தயாராக இருந்த படகில் ஏற்றி வழியனுப்பி வைத்தோம். மிகவும் குறுகலான அந்த நதி, இந்திய எல்லையில் உள்ள கடலில் போய் கலக்கக் கூடியது. அங்கிருந்து அவரை எங்கோ அழைத்துச் செல்வதற்கு கடலில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் தயார் நிலையில் காத்திருப்பதாக கூறப்பட்டது. அவர் படகில் ஏறிச்சென்ற சில நிமிடங்களில், நேதாஜியை நாங்கள் அழைத்து வந்த கார் மீது அங்கு வந்த ஒரு போர் விமானம் குண்டு வீசித் தகர்த்துவிட்டு சென்றது. நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். என்னுடன் இருந்த சிலர் மரணம் அடைந்தார்கள்’ என்று அந்த பேட்டியின்போது அவர் தெரிவித்திருந்தார்.1945-ம் ஆண்டு நேதாஜி இறந்து விட்டதாக அவரது வரலாற்றின் சந்தேகத்துக்குரிய பகுதி கூறுகின்றதே..? நீங்கள் 1947-ம் ஆண்டில் அவரை சந்தித்ததாக சொல்கிறீர்களே..? என்ற நிருபரின் கேள்விக்கு ‘இந்தியன்’ தாத்தா பாணியில் ஒரு மர்மப் புன்னகை உதிர்த்தபடி, பதில் அளித்த நிஜாமுதீன், ‘ஆமாம், அவர் மரணம் அடைந்து விட்டதாக வானொலியில் அப்போது வாசிக்கப்பட்ட செய்தியை எங்களுடன் சேர்ந்து அவரும் கேட்டுக்கொண்டிருந்தார்’ என்று தெரிவித்திருந்தார்.அவரது மரணச் செய்தியை அவரே வானொலியில் கேட்டதாக வந்த திடுக்கிடும் தகவலையடுத்து, 1952-ம் ஆண்டு வரை சர்தானந்தா முனிவராக வாரணாசி குகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்ந்ததாக மற்றொரு தகவலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதவாக்கில் வெளியானது.மத்திய அரசின் உளவுத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற ஷியாமாச்சரண் பாண்டே என்பவர், தனது தந்தையான கிருஷ்ணகாந்த் பாண்டேவின் டைரி குறிப்புகளில் கண்ட சில விபரங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.அந்த குறிப்புகளின் அடிப்படையில் நேதாஜி 1945-ம் ஆண்டு இறந்ததாக கூறப்படும் வரலாறு தவறானது என அவர் சுட்டிக் காட்டியிருந்தார். 1952-ம் ஆண்டுவரை நேதாஜி வாரணாசியில் உள்ள ஒரு குகையில் சர்தானந்தா முனிவர் என்ற பெயரில் ரகசியமாக வாழ்ந்து வந்ததாகவும் ஷியாமாச்சரண் பாண்டே மத்திய அரசிடம் ஆதாரத்துடன் தெரிவித்தார்.இதற்கு ஆதாரமாக நேதாஜிக்கும் தனது தந்தை கிருஷ்ணகாந்த்துக்கும் இடையில் நடைபெற்ற கடித தொடர்புகளையும் அவர் ஆவணப்படுத்தி இருந்தார்.2-12-1951 அன்று கங்கை-மோமதி ஆற்றங்கரை பகுதியில் நைந்துப்போன உடையில் இருந்த ஒரு முனிவரை எனது தந்தை சந்தித்தார். காசிபூரில் உள்ள பஹுரி பாபா ஆசிரமத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த அந்நபர், எனது தந்தையிடம் இன்றிரவு இந்த பகுதியில் தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்ய முடியுமா? என்று கேட்டுள்ளார்.உடனடியாக அவருக்கு ஒரு கம்பளியை கொடுத்த எனது தந்தை கிருஷ்ணகாந்த், நீங்கள் விரும்பும்வரை இங்கே தங்கியிருக்கலாம் என தெரிவித்துள்ளார். இதற்கு ஒப்புக்கொண்ட அந்த முனிவர், நான் யார் கண்களிலும் படாமல் வசிக்கக்கூடிய ஒரு தனிஇடத்தை ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று கூறியுள்ளார்.இதையடுத்து, வாரணாசி-காசிபூர் சாலையில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காத்தி என்ற இடத்தின் அருகே மூங்கில்களினால் உருவாக்கப்பட்ட ஒரு குகைக்குள் 14-1-1952 சங்கராந்தி தினத்தன்று அந்த முனிவர் குடியேறினார். அந்த குகையில் அவர் சிலகாலம் தங்கியிருந்தார். அப்போது, மிக பிரபலமாக விற்பனையாகிவந்த ஒரு ஆங்கில நாளிதழை அவர் அன்றாடம் விரும்பி படித்தார்.அந்த மூங்கில் குகையில் ஒரு புதிய முனிவர் தங்கியுள்ளதை அறிந்த உள்ளூர் மக்கள் அவரது அருளைப்பெற குகையை நோக்கி வர ஆரம்பித்தனர். ஒரேயொரு நிபந்தனையின் பேரில் அவர்களில் சிலரை நேதாஜி சந்தித்துள்ளார். தேசிய விடுதலைப் படை ராணுவத்தை உருவாக்கிய நேதாஜியின் ஜாடையை ஒத்துள்ள தன்னிடம் நேதாஜி தொடர்பாக யாரும், எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என்பதே அந்த நிபந்தனை.அந்த முனிவரைப் பற்றிய செய்தியை இரு உள்ளூர் பத்திரிகைகள் அப்போது வெளியிட்டிருந்தன. இதையடுத்து, காத்தி குகையில் இருந்து தனது இருப்பிடத்தை காலி செய்த அவர், பிப்ரவரி மாதம் 14-ம் தேதி விந்தியாச்சல மலைப்பகுதியை நோக்கி இடம் பெயர்ந்தார் என கிருஷ்ணகாந்த் பாண்டேவின் டைரி குறிப்புகளில் கண்ட ஆதாரங்களை சுட்டிக்காட்டிய ஷியாமாச்சரண் பாண்டே, பிரதமர் மோடியின் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.நேதாஜி சொந்த நாட்டிலேயே தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய முக்கிய காரணமும் இருந்தது. இந்தியாவுக்கு விடுதலை அளித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், சர்வதேச போர்க்குற்ற உடன்படிக்கையின்படி, நேதாஜி உயிருடன் கிடைத்தால் அவரை பிரிட்டைன் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது.அந்த நிலையில், அப்போது யார் கண்களிலாவது பட்டால், மேற்கண்ட நிபந்தனையின்படி, அந்நாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நேதாஜியை கைது செய்து பிரிட்டைன் ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதை தவிர்க்கவே அவர் முனிவர் வேடத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டிய அவசியம் ஏற்பட்டது, என தெரியவந்தது. இதற்கிடையே, உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் இரட்டை நகரமான அயோத்தி மற்றும் பைஸாபாத்தில் சுமார் 15 வருடங்களாக சுற்றிக் கொண்டிருந்தவர் பகவான்ஜி. பார்ப்பதற்கு ஒரு சாதுவை போல் தோற்றமளித்த அவர் கோயில்களுக்கு அடிக்கடி செல்லாதவராக இருந்திருக்கிறார். தோற்றத்தில் நேதாஜியை போல் இருந்தவரது நடவடிக்கைகள் மிகவும் சந்தேகத்திற்குரியதாக இருந்தது. இதனால், அவரை அங்குள்ள மக்கள் 'கும்நாமி (காணாமல் போன) பாபா' என அழைத்தனர்.18-9-1985 அன்று அவர் இறந்தபின்னர், அயோத்தியின் சரயு நதிக்கரையில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. பிறகு அவர் தங்கியிருந்த அயோத்தியின் ராம்பவனில் இருந்த அவரது உடமைகளை சோதனையிட்டபோது பகவான்ஜி எழுதிய பல கடிதங்கள் கிடைத்தன. இதை தேசிய குற்றவியல் மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வு மையத்தின் முன்னாள் கூடுதல் இயக்குநரான பி.லால் ஆய்வு செய்தார். அவை நேதாஜியின் கையொப்பத்துடன் ஒத்துப்போவதாக முன்னர் கூறி இருந்தார்.இந்நிலையில், மாவட்ட கருவூலத்தில் பாதுகாத்து வைக்கப்படிருந்த கும்நாம் பாபாவின் உடமைகளை நேதாஜியின் குடும்பத்தார் தற்போது பெற்றுள்ளனர். அந்த டிரங்க் பெட்டியை நேற்று திறந்துப் பார்த்தபோது, அதில் நேதாஜி தனது மனைவி மகளுடன் காணப்படும் ஒரு புகைப்படமும், இதுவரை யாருமே கண்டறியாத மற்றொரு அபூர்வ புகைப்படமும் கிடைத்துள்ளது. அந்த அபூர்வ புகைப்படத்தில் நேதாஜியின் பெற்றோரான ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி போஸ் ஆகியோர் காணப்படுகின்றனர்.அவர்களுடன் சுதிர் சந்திரபோஸ், சதிஷ் சந்திரபோஸ், சரத் சந்திரபோஸ், சுரேஷ் சந்திரபோஸ், சுனில் சந்திரபோஸ், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் நின்றபடி காணப்படுகின்றனர். நடுவரிசையில் நேதாஜியின் பெற்றோரான ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி போஸ் ஆகியோர் தங்களது மூன்று மகள்களுடன் அமர்ந்த நிலையில் உள்ளனர்.இதுதவிர, இந்திய விடுதலைக்காக நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்துப் போரில் ஈடுபட்ட அவரது உளவுத்துறை மூத்த அதிகாரியான பகிட்ரா மோஹன் மற்றும் சுனில் காந்த் குப்தா ஆகியோர் துர்கா பூஜை மற்றும் நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி மாதம் 23-ம் தேதி ஆகிய நாட்களில் முன்னர் அனுப்பியிருந்த வாழ்த்து தந்திகள் போன்றவையும் அந்த பெட்டியில் காணப்படுகிறது.இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது ‘சர்தானந்தா முனிவர்’ மற்றும் ‘கும்நாம் பாபா’ என்ற புனைப்பெயர்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நமது நாட்டின் பலபகுதிகளில் 1985-ம் ஆண்டுவரை வாழ்ந்திருப்பதாக யூகிக்க முடிகிறது, அல்லவா..?