“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது.
19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான், சியோனிச அரசியல் அமைப்பு உருவானது. அவர்களது அரசியல் ஒரு மத நூலான பைபிளை அடிப்படையாக கொண்டிருந்தது. (யூத மதத்தவரின் புனித நூலான “தோரா”, கிறிஸ்தவர்களால் பைபிளில் “பழைய ஏற்பாடு” என்ற பெயரில் இணைக்கப்பட்டது.)
பைபிளில் வரும் சரித்திர சம்பவங்கள் போன்று தோற்றமளிக்கும் கதைகள், புராண-இதிகாச தரவுகளை விட சற்று தான் வேறுபடுகின்றது. சரித்திரம் என்பது, ஒரு சம்பவம் நடந்தாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட வேண்டிய தேவை உள்ள ஒன்று. இல்லாவிட்டால் அவை வெறும் புராண-இதிகாச கதைகள் என்ற வரையறைக்குள் தான் வரும்.
சில உண்மைகள் இருக்கலாம், சம்பவங்கள் ஒன்றில் வேறு இடத்தில், வேறு பெயரில் நடந்திருக்கும், அல்லது மிகைப்படுதப்பட்டவையாக இருக்கலாம். இல்லாவிட்டால் அப்படியான ஒன்று நடந்திருக்கவே வாய்ப்பில்லாத, கற்பனைக்கதையாகவும் இருக்கலாம். சியோனிஸ்டுகளுக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கறை இல்லை. பைபிளின் படி தமது தாயகமான இஸ்ரேல், அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தில் இருப்பதாக நம்பினர். பைபிள் என்ற மத நூலை, தமது இயக்கத்திற்கான அரசியல் தத்துவார்த்த நூலாக மாற்றினார்.
பாலஸ்தீனத்தில் (அதாவது தமது முன்னோரின் தாயகத்தில்) சென்று குடியேறுவதற்காக உலகம் முழுவதும் யூத முதலாளிகளிடம் நிதி சேர்த்தனர். ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் தான், பாலஸ்தீனத்தில் சென்று குடியேற முன்வந்தனர். (ரஷ்ய பேரரசர் சார் ஆட்சிக்காலத்தில் நடந்த, யூதர்களுக்கெதிரான “பொக்ரொம்” என்ற இனப்படுகொலை ஒரு காரணம்.) சியோனிச அமைப்பு சேகரித்த நிதியைக் கொண்டு, பாலஸ்தீன நிலவுடமையாளரிடம் நிலங்களை வாங்கி குடியேறினர்.
புதிதாக உருவான யூத கிராமங்கள் கூட்டுறவு விவசாய அடிப்படையில் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டன. இரண்டாம் உலக யுத்தம் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில், பெருமளவு யூதர்கள், கப்பல் கப்பலாக பாலஸ்தீனா செல்வதை, பிரிட்டன் விரும்பவில்லை. அதனால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப் பட்டன. அப்போது பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்கள் பயங்கரவாத குழுக்களை உருவாக்கி, பிரிட்டிஷ் இலக்குகளை தாக்கினர்.
ஜெர்மனியில் ஹிட்லரின் யூத இனப்படுகொலையும், இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளின் வெற்றியும், உலக வரைபடத்தை மாற்றியது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை உருவாக்க பிரிட்டனும், ஐக்கிய நாடுகள் சபையும் ஒப்புக் கொண்டன. சியோனிஸ்டுகளின் இஸ்ரேலிய தாயகக் கனவு நிஜமானது. அவர்கள் எழுதி வைத்த அரசியல் யாப்பின் படி, உலகில் எந்த மூலையில் இருக்கும் யூதரும், இஸ்ரேலின் பிரசையாக விண்ணப்பிக்கலாம்.(பூர்வகுடிகளான பாலஸ்தீன அரேபியருக்கு அந்த உரிமை இல்லை).
அதன் படி, ஐரோப்பாவில் வசித்த யூதர்கள் மட்டுமல்ல, ஈராக், யேமன், மொரோக்கோ போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் வசித்த யூதர்களும் இஸ்ரேலில் வந்து குடியேறுமாறு ஊக்குவிக்கப் பட்டனர். பெரும் பணச் செலவில், அதற்கென பிரத்தியேகமாக அமர்த்தப் பட்ட வாடகை விமானங்கள், லட்சக்கணக்கான யூதர்களை இஸ்ரேல் கொண்டு வந்து சேர்த்தன. இந்தியா, கேரளாவில் இருந்தும் சில ஆயிரம் யூதர்கள் சென்று குடியேறினர்.
சியோனிஸ்டுகள் கண்ட கனவு நிதர்சனமானாலும், இஸ்ரேல் என்ற தாயகத்தை கட்டியெழுப்ப தேவையான மனிதவளம் இருந்த போதும், வேண்டிய நிதி வழங்க யூத பெரு முதலாளிகள் மற்றும் (குற்றவுணர்வு கொண்ட) ஜேர்மனி இருந்த போதும், ஒரேயொரு குறை இருந்தது. இஸ்ரேல் என்ற தாயகக் கோட்பாட்டின் நியாயவாத அடிப்படை என்ன? பைபிளை தவிர வேறு எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இன்றைய விஞ்ஞான உலகில் ஒரு மத நூலை ஆதாரமாக காட்டி யாரையும் நம்பவைக்க முடியாது. சரித்திரபூர்வ ஆதாரங்கள் தேவை.
பைபிளில் எழுதியிருப்பதெல்லாம் உண்மை என்று நம்பும் இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், அவற்றை நிரூபிக்கும் நோக்கில், சரித்திர ஆசிரியர்களையும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும், மொழியியல் அறிஞர்களையும் பணியில் அமர்த்தினர். இஸ்ரேல் உருவாகி அறுபது ஆண்டுகளாகியும், இந்த ஆராய்ச்சியாளரால் பைபிளில் உள்ளபடி “புலம்பெயர்ந்து வாழும் யூத மக்களின் தாயகம் இஸ்ரேல்” என்னும் கருத்தை இன்று வரை நிரூபிக்க முடியவில்லை.
மேலும் பைபிளில் எழுதப்பட்டுள்ள கதைகள் உண்மையில் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பிள்ளையார் பிடிக்கப் போய், அது குரங்காக மாறிய கதையாக, தாம் காலங்காலமாக கட்டி வளர்த்த நம்பிக்கை தகருவதை காணப் பொறுக்காத இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், இந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளிப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். இன்று வரை உலகில் மிகச் சிலருக்கு மட்டுமே தெரிந்த, ஆராய்ச்சியின் பெறுபேறுகளை இங்கே தொகுத்து தருகிறேன்.
1980 ம் ஆண்டு இடம்பெற்ற நிலநடுக்கம் சியோனிச கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தியது. அதுவரை அறியாத பழங்கால இடிபாடுகளை வெளிப்படுத்தியது, அந்த நிலநடுக்கம். ஆனால் அந்த கண்டுபிடிப்புகள் எதுவும் யூத கதைகளை உண்மையென்று நிரூபிக்காததால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏமாற்றமடைந்தனர். அதிலிருந்து தான் இஸ்ரேலின், அல்லது யூத வரலாற்றை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் போக்கு ஆரம்பமாகியது. பைபிளில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான கதைகள் உண்மையாக இருக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டது.
கிறிஸ்தவர்களுக்கு இயேசு எந்த அளவுக்கு முக்கியமோ, அது போல யூதர்களுக்கு மோசெஸ் ஒரு கேள்விக்கிடமற்ற தீர்க்கதரிசி. எகிப்தில் அடிமைகளாக இருந்த யூத குடிகளை மோசேஸ் விடுதலை செய்து, செங்கடலை கடந்து, கடவுளால் நிச்சயிக்கப்பட்ட நாட்டிற்கு(பாலஸ்தீனம்) கூட்டிச் சென்றதாக பைபிள் கூறுகின்றது. ஆனால் சரித்திர ஆசிரியர்கள் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நிரூபிக்கின்றனர்.
முதலாவதாக இப்போது உள்ளது போல அப்போதும், எகிப்திற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நிலத்தொடர்பு இருந்திருக்கும் போது, மொசெஸ் எதற்காக கஷ்டப்பட்டு கடல் கடக்க வேண்டும்? இரண்டாவதாக பைபிள் கூறும் காலகட்டத்தை வைத்துப் பார்த்தால் கூட, அன்று பாலஸ்தீனம் எகிப்து தேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மோசெஸ் வழிநடத்திய யூத குடிமக்கள் எகிப்தின் உள்ளே தான் இடப்பெயர்ச்சி செய்திருக்க வேண்டும். மூன்றாவதாக எகிப்தியர்கள் பல சரித்திர குறிப்புகளை ஆவணங்களாக விட்டுச் சென்றுள்ளனர். அவை எல்லாம் தற்போது மொழிபெயர்க்கப் பட்டு விட்டன. ஆனால் எந்த இடத்திலும் யூதர்களை அடிமைகளாக பிடித்து வைத்திருந்ததகவோ, அல்லது இஸ்ரேலிய அடிமைகள் கலகம் செய்ததாகவோ குறிப்பு காணப்படவில்லை.
டேவிட் மன்னன் தலைமையில் சிறு இராசதானி இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற போதிலும், பைபிள் கூறுவது போல இஸ்ரேலியர்களின் சாம்ராஜ்யத்தை வைத்திருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் அன்றைய பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல், யூதேயா என்ற இரு சிறிய அரசுகள் இருந்துள்ளன. இவை பிற்காலத்தில் (ஈராக்கில்/ஈரானில் இருந்து வந்த) பாபிலோனியர்களால் கைப்பற்றப்பட்டாலும், பைபிள் கூறுவதைப் போல அனைத்து இஸ்ரேலிய யூதர்களையும் பாபிலோனிற்கு கொண்டு சென்றதாக ஆதாரம் இல்லை.
இருப்பினும், அரச அல்லது பிரபுக் குடும்பங்களை சேர்ந்தோரை கைது செய்து பாபிலோனில் சிறை வைத்திருக்கிறார்கள். யூதர்கள் அங்கே தான் ஒரு கடவுள் கொள்கையை அறிந்து கொண்டார்கள். (யூதர்கள் மத்தியிலும் பல கடவுள் வழிபாடு முறை நிலவியதை பைபிளே கூறுகின்றது) அன்றைய காலகட்டத்தில் இன்றைய ஈரானிலும், ஈராக்கிலும் சராதூசரின் மதம் பரவியிருந்தது. அவர்கள் “மாஸ்டா” என்ற ஒரேயொரு கடவுளை வழிபட்டனர். இதிலிருந்து தான் யூத மதமும், “யாஹ்வே” அல்லது “எல்” (ஒரு காலத்தில் சிரியர்கள் வழிபட்ட கடவுளின் பெயர்) என்ற ஒரே கடவுளை வரித்துக் கொண்டது. பிற்காலத்தில் யூதர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட, “ஒரு கடவுள் கோட்பாட்டை” கிறிஸ்தவர்களின் மீட்பர் இயேசு, மற்றும் முஸ்லிம்களின் இறைதூதர் முஹம்மது ஆகியோர் பின்பற்றினர்.
கி.பி. 70 ம் ஆண்டுக்கு முன்னர் யூதர்களின் தாயக பூமி, ரோமர்களின் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது, . ஜெருசலேமில் யூதர்களின் மிகப் பெரிய கோவில் சேதமடைந்த பின்னர், முழு யூத மக்களையும் ரோமர்கள் நாடுகடத்தியதாக இதுவரை நம்பப்பட்டு வருகின்றது. அதனால் தான் யூதர்கள் மத்திய ஆசியா, ஐரோப்பா எங்கும் புகலிடம் தேடியதாக, இன்றுவரை அவர்கள் வேற்று இனத்துடன் கலக்காமல் தனித்துவம் பேணியதாக, யூதர்கள் மட்டுமல்ல பிறரும் நம்புகின்றனர். ஆனால் ரோமர்கள் ஒரு போதும் எந்த ஒரு தேச மக்களையும் ஒட்டு மொத்தமாக நாடுகடத்தியதாக வரலாறு இல்லை. ரோமர்கள் பல இனத்தவரை அடிமைகளாக்கியிருக்கிறார்கள். அப்போது கூட குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறுதொகையினர் அடிமைகளாக ரோமாபுரி செல்ல, பெரும்பான்மை மக்கள் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
இதிலிருந்து ஒன்று தெளிவாகின்றது. யூத மக்கள் எங்கேயும் புலம்பெயராமல் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஆகவே இன்றுள்ள பாலஸ்தீன அரேபியர்கள் தான் உண்மையான யூதர்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. அவர்கள் பிற்காலத்தில் இஸ்லாமியராகவும், கிறிஸ்தவர்களாகவும் மாறியிருக்கலாம். முதலாவது இஸ்ரேலிய பிரதமர் பென் கூரியன் உட்பட பல சியோனிச தலைவர்களுக்கு இந்த உண்மை தெரிந்தே இருந்தது. ஆனால் அதனை வெளியே சொன்னால், அவர்களது சியோனிச அரசியல் அத்திவாரமே அப்போது ஆட்டம் கண்டிருக்கும்.
இன்று, இஸ்ரேலிய ஆராய்ச்சியாளரின் முடிவுகள் வந்த பின்னர் கூட பலர் பகிரங்கமாக இதைப்பற்றி பேச மறுக்கின்றனர். “யூத எதிர்ப்பாளர்” என்ற முத்திரை குத்தப் பட்டுவிடும் என்ற அச்சமே காரணம். மேற்குலகில் யூத எதிர்ப்பாளர் என்று சொல்வது, இனவெறியர் என்று சொல்வதற்கு சமமானது.
யூத இனத்தவர்கள் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து செல்லவில்லை என்றால், “யார் இந்த யூதர்கள்” என்ற கேள்வி எழுகிறதல்லவா? “யூத இனம்” என்ற தவறான கோணத்தில் இருந்து பார்ப்பதால் இந்த குழப்பம் ஏற்படுகின்றது. யூதர்கள் என்பது ஒரு மதத்தை சேர்ந்தவர்களை குறிக்கும் சொல்லாகும். கிறிஸ்தவ மதம் தான் பிறந்த மண்ணை விட்டு, வெளி உலகத்தில் பரவியது போன்று, யூத மதமும் பரவியது.
முதலில், யூதேயா அரசாட்சியின் கீழ் வாழ்ந்தவர்களை மட்டுமல்ல, அயலில் இருந்த மக்களையும் கட்டாய யூத மத மாற்றத்திற்கு உள்ளாக்கினர். தொடர்ந்து மதப் பிரசாரகர்கள் யூத மதத்தை மத்திய கிழக்கு எங்கும் பரப்பினர். அரேபியா (யேமன்), வட ஆப்பிரிக்கா (மொரோக்கோ), மத்திய ஆசியா (குர்திஸ்தான்) போன்ற இடங்களில் எல்லாம், அண்மைக்காலம் வரையில், யூதர்கள் லட்சக்கணக்கில் வாழ்ந்து வந்தனர்.
குர்திஸ்தானிலும், வட அபிரிக்காவிலும் (அல்ஜீரியா-மொரோக்கோ), குறிப்பிட்ட காலம் யூத இராசதானிகள் உருவாகின. பிற்காலத்தில் வட ஆப்பிரிக்கா மீது படையெடுத்து கைப்பற்றிய அரேபிய சரித்திரவியாளர்கள் இவற்றை எழுதி வைத்துள்ளனர். முதலில் அரேபிய-இஸ்லாமிய படையெடுப்பை எதிர்த்த யூதர்கள், பிற்காலத்தில் அரேபிய படைகளுடன் இணைந்து, ஸ்பெயினை கைப்பற்றி அங்கேயும் குடியேறி இருந்தனர்.
நீண்ட காலமாக, யூதர்கள் என்பது ஒரு இனம் என்ற கருத்தியலை, மரபணு சோதனை மூலம் நிரூபிப்பதற்கு முயற்சி நடந்தது. சில ஆராய்ச்சி முடிவுகள், யூதர்கள் தனியான மரபணு கொண்டிருப்பதாக தெரிவித்த போதும், அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. பொதுவான பெறுபேறுகள், யூதர்களும் அந்தந்த நாடுகளில் வாழும் பிற மக்களும், ஒரே விதமான மரபணு கொண்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றன. இதனை பரிசோதனைசாலையில் விஞ்ஞானிகள் சோதித்து தான் அறிய வேண்டிய அவசியமில்லை.
யூதர்களிடையே வெளிப்படையாக தெரியும் வேறுபாடுகள் நிறைய உள்ளன. ஐரோப்பிய யூதர்கள் வெள்ளைநிற ஐரோப்பியர் போலவும், எத்தியோப்பிய யூதர்கள் கறுப்புநிற ஆப்பிரிக்கர் போலவும் வெளித்தோற்றத்தில் காணப்படுவதை வைத்தே கூறிவிடலாம், யூதர்கள் ஒரே இனமாக இருக்க சாத்தியமே இல்லை என்று. யூத இன மையவாதத்தை ஆதரிப்பவர்கள் இந்த எளிய உண்மையை காண மறுக்கின்றனர். இன்றைய நவீன இஸ்ரேலில் கூட ரஷ்ய யூதர்கள், கிழக்கு ஐரோப்பிய யூதர்கள், மேற்கு ஐரோப்பிய யூதர்கள், அரபு யூதர்கள், எத்தியோப்பிய யூதர்கள், என்று பலவகை சமூகங்கள் தனிதனி உலகங்களாக வாழ்வதேன்? இந்த சமூகம் ஒவ்வொன்றுக்கும் ஹீப்ரூ மொழியில் விசேட பட்டப் பெயர்கள் உள்ளன.
இன்றைய இஸ்ரேலிய தேசத்தின் அரசியல், இராணுவ, பொருளாதார ஆதிக்கம் ஐரோப்பாவில் இருந்து வந்து குடியேறிய யூதர்களின் கைகளில் உள்ளது. இவர்களது நதிமூலம் பற்றிய சுவாரஸ்யமான ஆய்வுகள் நடந்துள்ளன. அந்த தேடலில் “கஸார்” இராசதானி பற்றி தெரியவந்தது. அதுவே ஐரோப்பிய யூதர்களின் மூலமாக நம்பப்படுகின்றது.
முன்னொரு காலத்தில் கஸ்பியன் கடலுக்கும், கருங்கடலுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தையும், தெற்கு ரஷ்யாவையும், கிழக்கு உக்ரைனையும் சேர்த்து ஒரு மாபெரும் யூத இராஜ்யம் பத்தாம் நூற்றாண்டு வரை நிலைத்து நின்றது. கஸார் மக்கள் மத்திய ஆசியாவை சேர்ந்த துருக்கி மொழி பேசும் இனத்தை சேர்ந்தவர்கள்.
இருப்பினும் அவர்கள் ஆட்சியின் கீழ் பிற இனத்தவர்களும் வாழ்ந்தனர். மேற்கே கிறிஸ்தவ மதமும், கிழக்கே இஸ்லாமிய மதமும் பரவிக் கொண்டிருந்த காலம் அது. இரண்டுக்குமிடையே தமது தனித்தன்மையை காப்பாற்றுவதற்காக, கஸார் ஆளும் வர்க்கம் யூத மதத்திற்கு மாறியது. இந்த மத மாற்றம் அரசியல் காரணத்திற்காக ஏற்பட்ட ஒன்று. இன்று நடுநிலை பேண விரும்பும் சுவிட்சர்லந்துடன் ஒப்பிடத்தக்கது.
கஸார் இராசதானி அரபு-இஸ்லாமிய படையெடுப்புகளை வெற்றிகரமாக தடுத்து நின்ற போதும், அதனது வீழ்ச்சி வடக்கே இருந்து வந்த ரஷ்யர்களால் ஏற்பட்டது. அதற்குப் பிறகு கஸார் மக்கள் அந்தப் பிரதேசத்தில் இருக்கும் பிற இனத்தவர்களுடன் கலந்து விட்டனர். பெரும்பாலானோர் யூத மதத்தை கைவிட்டு, இஸ்லாமியராகி விட்டனர். இருப்பினும் குறிப்பிடத்தக்க கஸார் யூதர்கள் போலந்திற்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்ததாக நம்பப்படுகின்றது.
புலம்பெயர்ந்த யூதர்கள் “யிட்டிஷ்” கலாச்சாரத்தை உருவாக்கினர். யிட்டிஷ் என்பது, ஹீப்ரூ, ஜெர்மன், ஸ்லோவாக்கிய சொற்கள் கலந்த மொழியைக் குறிக்கும். கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் இந்த மொழியை பேசினர். நவீன இஸ்ரேல் உருவாகி, ஹீப்ரூ உத்தியோகபூர்வ மொழியாகிய பின்னர், இப்போது அந்த மொழி மறைந்து வருகின்றது.
இஸ்ரேல் என்ற தேசம் உருவான போது, அங்கே யூதர்களின் புராதன மொழியான ஹீபுரூ பேசுவோர் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் அதற்கு முன்னர் வாழ்ந்த நாட்டு மொழிகளையே பேசினர், இன்றும் கூட வயோதிபர்கள் ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், அரபு என்று பல்வேறு மொழிகளை வீடுகளில் பேசி வருகின்றனர். இளம் சந்ததி மட்டுமே ஹீப்ரூ மொழியை தமது தாய் மொழியாக்கியது.
உண்மையில் பல்வேறு கலாச்சாரப் பின்னணியை கொண்ட யூதர்களை, ஒரே இனமாக இஸ்ரேல் என்ற தேசத்தினுள் ஒற்றுமையாக வைத்திருப்பது கடினமான விடயம். (”எங்கள் யூத சமூகத்திற்குள் ஒற்றுமையில்லை.” என்ற சுயபச்சாதாபம் இஸ்ரேலியர் மத்தியில் நிலவுகின்றது.) அதற்காக தான் இஸ்ரேலிய அரசு, பைபிள் கதைகளை நிதர்சனமாக்க இராணுவ பலம் கொண்டு முயற்சித்து வருகின்றது.
தமது ஆக்கிரமிப்பு, “கடவுளால் முன்மொழியப்பட்டது” என்பதால் நியாயமானது, என்று வாதிடுகின்றனர். அதனால் தான், யூத குடிகளின் முதலாவது ஒப்பற்ற பெருந்தலைவனான, டேவிட் மன்னன் தலைநகராக வைத்திருந்த ஜெருசலேமினை (அது இப்போது இருக்கும் நகரை விட அளவில் சிறியதாக இருந்தது) நவீன இஸ்ரேலின் தலைநகராக்குவதன் மூலம், தமது சரித்திர ஆதாரத்தை எதிர்காலத்திலேனும் நிலைநாட்ட முயல்கின்றனர்.