வெள்ளி, 5 செப்டம்பர், 2014

இயற்கை வழிபாடு

இயற்கை வழிபாடு

இயற்கை வழிபாடு என்பது, உலகின் பல பாகங்களில், தொன்றுதொட்டு இருந்து வரும் ஒரு பழக்கமாகும். ஆதியில் மனிதன் இயற்கையையே தெய்வமாக வணங்கினான் என்பதும் உலகில் உள்ள மதங்களுக்கு இயற்கையே முன்னோடியாய் இருந்தது என்பதும் எல்லோராலும் கருதப்படும் ஒரு பொது கருத்தாகும்.
இயற்கை வழிபாடு தோன்ற காரணங்கள்:
மனிதன், இயற்கையின் வளங்களை பயன்படுத்திக்கொண்டாலும், இயற்கையின் சீற்றங்களையும் அதன் வலிமையையும் கண்டு அதை பிரமிப்புடன் பார்க்கத் தொடங்கினான். இந்த பிரமிப்பே நாளடைவில், பயமாய் மாறி, பின், அந்த இயற்கையையே வணங்க தொடங்கினான். பயத்திலும், இயற்கையால் வரும் நன்மைகளை அனுபவித்ததால், அதன் காத்தல், அழித்தல் எனும் இருவேறு தன்மைகளையும் உணர்ந்து, அதை தன்னை விட மேலான ஒரு சக்தியாய் கருத ஆரம்பித்தான். பயமே பக்தி எனும் வழி இன்றும் பல மதங்களில் நிலவி வரும் ஒரு உண்மையாகும்.
இந்த பிரபஞ்சத்தில், எந்த ஒரு உயிரினமும், இயற்கையை ஒத்தே வாழ்கின்றன. உயிர் அல்லாத பொருள்களும், இயற்கை சார்ந்தே அமைகின்றன. அத்தகைய ஒருமித்த இயற்கை அமைப்பில், ஒவ்வொரு உயிர்ப்பொருளும், ஜடப்பொருளும், இயற்கையிலிருந்து தோன்றி சிறிது காலம் இருந்துப்பின் இயற்கையிலேயே மீண்டும் கலந்து அழிகின்றன.
இந்த கருத்தில் தான் இயற்கையின் அமைப்பினை, நிலம், நீர், தீ, காற்று மற்றும் வெளி என ஐந்து வகைகளாக பிரித்துள்ளனர். எல்லா பொருள்களும், இவை ஐந்திலிருந்தே தோன்றிப்பின் இவை ஐந்திலேயே கலந்து அழிகின்றன. இந்த தத்துவத்தை அறிந்த மனிதன், இந்த ஐந்து பூதங்களையும் முதலில் தெய்வமாக வணங்க தொடங்கினான். இயற்கையை வணங்கும் இந்த முறை உலகின் பல்வேறு புராதன வாழ்வியல்களில் இடம் பெற்றுள்ளது. கீழ்கண்ட பகுதிகளில் இது குறித்து நாம் அறிவோம்.
நிலம்:
கிரேக்கத்தின் 'கயா வழிமுறை' அழைக்கப்படும் வழிமுறை, பூமியை வழிபடும் முறையாகும். கிரேக்க மொழியில், கயா என்பது பூமியை குறிக்கும். இவ்வழிமுறையில், இயற்கைச் சமனியாக இந்த புவிக்கடவுளாகிய கயா அமைந்துள்ளதாகவும், இதுவே, பூமியில் ஏற்படும் பல்வேறு உயிர் நிலை மாற்றங்களுக்கும் காரணமாகவுள்ளது என கருதப்படுகிறது.
பண்டை கால எகிப்தியர்கள், பூமியை ஒரு ஆண் கடவுளாக கருதினர். எகிப்திய புராணங்களில் பூமி, செப், கெப் மற்றும் ஜெப் எனும் மூன்று பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமேரிய நாகரீகத்தில், நிலம், நீர், ஆகாயம் எனும் முப்பெரும் கடவுள்களில் ஒன்றாக கருதப்படும் பூமி என்லில் எனும் பெயரில் அழைக்கப்படுகிறது.
இந்தியப் பண்பாட்டிலும், பூமி என்பது பொறுமைக்கு எல்லையாக கருதப்படும் இயற்கை கடவுள் ஆகும்.
நீர்:
நீர் என்பது பொதுவாக, அழுக்கை நீக்கும் ஒரு பொருளாகவே உள்ளது. தூய்மை எனும் பொருளுக்கு நீர் ஒரு அடையாளமாக உள்ளது. இத்தகைய தன்மையினால், நீர் என்றும் எல்லா மதத்திலும், வழிபாட்டு முறையில் இன்றும் இருந்து வருவதை காணலாம். 'மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்' என்ற வகையிலே, மழை மனிதனுக்கு உறவை உணர்த்தும் ஒரு சக்தியாக உள்ளது.
தீ:
தீயைத் தொழுவது ஜொராஸ்ட்ரியர்களின் பழக்கமாகும். தீக்கோயில்களையும் இவர்களது அமைப்பில் காண முடியும். தீ என்பது எப்போதும் மேல் நோக்கி செல்லும் குணங்கொண்டது. மேலும் தீயை அழுக்காக்க இயலாது. தீயின் இவ்விரு முக்கியமான குணங்களே தீ இவர்களது வாழ்முறையில் மேலானதாக எண்ணப்படுவதற்கான காரணங்களாக கூறப்படுகின்றன.
இந்திய வேத முறைப்படி தீ என்பது, மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஒரு பொருளாக கருதப்படுகிறது. இதன் விளைவே, எல்லா வகையான சம்பிரதாயங்களிலும் தீயின் பயன் அமைந்துள்ளது. இறந்த உடலை எரிப்பதும் இந்த நோக்கத்தில் தான் எனவும் எண்ணப்படுகிறது.
இன்றைய நிலை:
காலப்போக்கில் உண்மையான இந்த உருவங்களுக்கு வடிவங்கள் கொடுக்கப்பட்டு, பின் அந்த வடிவங்களையே மக்கள் வணங்கத்தொடங்கினர். இதன் தொடர்ச்சியே இந்த காலத்திலும் மேற்கூறிய இயற்கை தெய்வங்களையும் அதன் தொடர்ச்சியாய், வாழ்வாங்கு வாழ்ந்த மானிடர்களை தெய்வங்களாக தொழும் நிலையும் ஆகும்.