வெள்ளி, 26 ஏப்ரல், 2019

ஸ்கூபா டைவிங் மூலம் கடலுக்கு அடியில் தேங்கிய பிளாஸ்டிக் அகற்றம்!

ராமேஸ்வரத்தில் கடலுக்கு அடியில் தேங்கிய 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை ஸ்கூபா டைவிங் மூலம் வனத்துறை அதிகாரிகள் அகற்றினர். 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே பாக் ஜலசந்தியில் கடலுக்கு அடியில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் தேங்கியுள்ளன. இந்நிலையில் சர்வதேச பூமி தினத்தை கொண்டாடும் வகையில் கடலுக்கு அடியில் உள்ள குப்பைகளை அகற்ற வனத்துறையினர் திட்டமிட்டனர். 

இதற்காக வனத்துறையை சேர்ந்த 2 பெண் உட்பட 10 பேர் ஸ்கூபா நீச்சல் மூலம் கடலுக்கு அடியில் சென்று பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினர். இந்த வித்தியாசமான முயற்சிக்கு பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

வியாழன், 25 ஏப்ரல், 2019

பிணங்களின் மீதே அரசியல் செய்து பழகிவிட்ட ஒரு இந்திய பைத்தியகாரனின் வாக்குமூலம்

இலங்கை குண்டுவெடிப்பின் ரத்த ஈரம் காய்வதற்குள் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சாமி, “இலங்கையில் நடந்த தீவிரவாத நடவடிக்கை காரணமாக இப்போது  இந்தியாவில் பாஜக அரசுதான் வரவேண்டும். ஏனெனில் காங்கிரஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவானது. விரைவில் திக்விஜய் கொழும்பில் நடந்த தாக்குதலுக்கு இந்து தீவிரவாதமே காரணம் என அறிவிப்பார்” என டிவிட்டரில் கருத்திட்டார்.

இந்த கருத்துகளுக்கு பல எதிர்ப்புக்கள் வலுத்தன.

இலங்கை மக்களின் கண்டனத்துக்கு பதிலளித்திருக்கும் பல இந்தியர்கள், அவர்களின் துயரத்தில் பங்கெடுப்பதாக ஆதரவு தெரிவிக்கின்றனர்; பாஜக-வின் கீழ்த்தரமான சந்தர்ப்பவாதத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

வழிபாடும், அவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்!

சகிப்புதன்மைகளை வளர்த்து இயல்பு வாழ்க்கையை மீட்போம்..!

மதத்தளங்களை குறிவைத்துத் தாக்குவது கோழைத்தனமானது. கொடூரமானது. சமீபத்திய சம்பவங்களில் இருந்து  இலங்கை  தேசத்து மக்கள் மட்டுமல்ல. உலக தேசங்களும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை 

இன்றும் தன் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்தியவர்கள் ஏற்படுத்திய அனர்த்தங்களினால் பல இஸ்லாமிய சமூகத்தவர்களுடைய  உள்ளங்களும் அதிகமாக காயப்பட்டிருக்கின்றது. மீளமுடியாத துன்பியல் சம்பவத்தின் குற்றவாளிகளா? என்ற கேள்விகளையும் மனிதம் நிறைந்தவர்கள் தாங்கி நிற்கின்றார்கள்.

'வன்மம் நிறைந்த கொடூரமான மனிதர்களுக்காக அந்த சமூகத்தினருடைய நம்பிக்கைகளையும், வழிபாடுகளும் தண்டனைகளுக்கு இலக்காகி விடக்கூடாது.'

இறந்த அப்பாவி ஆன்மாக்களின் சாந்திக்காகவும், மனித அவலங்களை கடந்த இயல்பு வாழ்க்கைக்காகவும் நாளை வெள்ளிக்கிழமை அவர்களுடைய தொழுகையும் பிராத்தனைகளாய் நிச்சயம் பள்ளிவாயல்களில் எதிரொலிக்கும். அவர்கள் அச்சுறுத்தல்கள் எதிர்கொள்ளா வண்ணம் அவர்களுடைய சூழலையும் நாங்கள் பாதுகாக்க வேண்டும். இது புரிந்துணர்வுகளையும், நம்பிக்கைகளையும் கட்டியெழுப்பும் காலம்.

பிற மதங்களையும், மனிதங்களை நேசிப்பவர்களும் பாதுகாப்புத்துறையுடன் இணைந்து ஆரோக்கியமான வழிபாட்டு சுதந்திரங்களை அனைத்து மதத்தவர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும். கிரகத்தில் வாழ தகுதியில்லாத நபர்களுடைய எதிர்வினைகளை அப்பாவிகள் மீதும், இயல்பான சமூக வாழ்வியல் மீதும் காயம் ஏற்படாத வண்ணம் நடந்து கொள்வோம். சகிப்புத்தன்மைகளை வளர்த்து மனிதம் காப்போம்

இறந்த அப்பாவிகளுக்காகவும், அவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்காக பிராத்திக்கின்றேன். 'அந்த சிறு குழந்தைகள்' இறைவனின் தோட்டத்தில் பட்டாம்பூச்சிகளாய் சிறகடிப்பார்கள். விரைந்து தேசம் மீட்சி கொள்ள அமைதிக்காகவும், இயல்பு வாழ்க்கைக்காகவும் பிராத்திப்போம்.


கனத்த இதயத்துடன்....!
அமலதாஸ் எல்றோய்

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

இலங்கை அரசாங்க அவசர கால சட்டம் என்றால் என்ன? கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள்.

அவசர கால சட்டம் என்றால் என்ன? அவசர கால தடைச் சட்டம் என்றால் என்ன என்பதை கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும், இல்லையென்றால் மிகப் பெரிய தண்டனைகளுக்கோ, துப்பாக்கிப் பிரயோகத்திற்கோ இலக்காக நேரிடும். இந்த செய்தி அனைவருக்குமான ஒரு எச்சரிக்கை!
President issues gazette declaring State of Emergency in Sri Lanka giving more powers to police and military

இலங்கை அரசாங்கத்தால் நேற்றில் இருந்து அடுத்து வரும் பத்து நாட்களுக்கு அவசர காலத் தடைச் சட்டம் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அவசர கால தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் காலத்தில் எங்கேயும் எதற்காகவும் சுடப்படலாம். இந்த அதிகாரத்தின் கீழ் முப்படையினரும் 24 மணி நேரமும் கடமையில் இருக்க வேண்டும். விடுமுறைகளை எடுக்க முடியாது.

இந்த சட்டத்தின் கீழ் நபரொருவர் எந்த நேரத்திலும் எவ்வித காரணமின்றியும் கைது செய்யப்படலாம். அத்துடன் சந்தேகத்தின் பேரில் எவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முடியும்.

இரண்டு பேருக்கு அதிகமாக பொது இடங்களில் (தேசிய பாதுகாப்புக்கு பங்கம் இல்லாத அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகள் தவிர்ந்த ஏனைய இடங்களில்) கூடுதல், திட்டம் தீட்டுதல், அதிக ஒலி எழுப்புதல் உட்பட ஆயுதங்களை உடமையில் (முகச் சவரம் செய்யும் அலகு, ஊசி என்பனவற்யைும்) வைத்திருத்தல் பாரிய குற்றமாகும்.

அத்துடன் தீவிரவாதத்திற்கு ஒத்துழைத்தல், நிதிசேகரித்தல் உட்பட பல விடயங்கள் இதற்குள் அடங்கும்.

சாதாரண சிவில் கடமைகளுக்கு கூட பொலிஸாரின் கைகளில் ஆயுதங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

அவசர கால தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர் ஒருவர் விசாரணைகள் எதுவும் இன்றி எவ்வளவு காலத்திற்கேனும் தடுத்துவைக்க முடியும்.

கைதுக்கு முன்னோ கைதுக்கு பின்னரோ விசாரணை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

கைது செய்யப்படும் போது யாராவது தப்பியோட முயன்றால் சுட்டுப்பிடிப்பதற்கும் அதிகாரம் உள்ளது. அதேவேளை கைது செய்யப்படும் நபர் தேவையெற்படின் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிப்பதற்கும் உரிமை உண்டு.

விசாரணைக்காக புலனாய்வுப் பிரிவினரின் கைகளுக்கும் ஒப்படைப்பதற்கான சரத்துக்களும் உண்டு.

மேலும், அவசரகாலச்சட்டமானது, மக்களின் அல்லது வாகனங்களின் போக்குவரத்துக்களை தடை செய்யவும், பாதுகாப்பு பிரதேசங்களை உருவாக்கி, அங்கு வெளியிலிருந்து செல்பவர்களைத் தடுக்கவும் அனுமதி அளிக்கின்றது.

பாதுகாப்பு பிரிவினரின் கடமைக்குக் குந்தகம் விளைவிக்கும், குறிப்பிட்ட நபர்களை, குறிப்பிட்ட பகுதிக்கு வருவதற்கும், அல்லது குறிப்பிட்ட பிரதேசத்தில் வசிப்பதற்கும், தடைசெய்யும் அதிகாரத்தை வழங்குகின்றது.

மக்கள் வாழும் பகுதிகளில், உடனாடியான பாதுகாப்புப் பிரதேசத்தை உருவாக்கி, அவர்களைப் பாதுகாக்கவும் காவற்துறையினர்க்கு அதிகாரம் அளிக்கின்றது.

யாரையும் அவர்களின் வீடுகளில் வைத்துக் கைது செய்வதற்கு அனுமதி வழங்க உள்துறை அமைச்சரிற்கு அதிகாரம் வழங்குகின்றது.

நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிப்பவர்கள் எனச் சந்தேகப்படும் யாரையும் கைது செய்து விசாரைண செய்ய முடியும்.

விழா மண்டபங்களையோ அல்லது திரையங்குகளையோ அல்லது கூட்டம் நடக்கும் இடங்களையோ, உடனடியாக மூடுவதற்கும் அங்குள்ளவர்களை வெளியேற்றுவதற்கும் அனுமதி அளிக்கின்றது.

ஒரு கூட்டமோ, அல்லது சந்திப்புகளோ, அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் எனச் சந்தேகிக்கப்பட்டால், அதனைத் தடை செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தனியாரிடம் இருக்கும் ஆயுதங்களை, அனுமதி பெற்றிருந்தாலும் கூட, பறிமுதல் செய்யமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வரப்போகும் மறு காலனிய காவலாதிக்கம். வாய்ப்புக்கள் வேறு. வரலாறு ஒன்றே!


இலங்கையில் நடைபெற்ற துன்பியல் சம்பவங்களின் பின்னணியில் ஏகாதிபத்திய சக்திகளுக்கும், இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பிற்கும் ஒரு பரந்த, குற்றவியல் ஒத்துழைப்பு உண்டு. அவை கண்ணுக்கு புலப்படாத பிம்பங்கள். ஒரு வனப்பான சிறுதீவு அவர்களால் இலக்காக்கப்பட்டிருக்கின்றது. அப்பாவிகள் மதத்தின் பெயரால் நிகழ்ச்சி நிரல்களுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள்.

தூண்டப்பட்டிருக்கின்றார்கள்...

தண்டிக்கப்பட்டிருக்கின்றார்கள்...

பிராந்திய நலன்சார்ந்த அரசியலின் புதிய உள்ளக அதி ஒத்துழைப்பு கொண்ட தூர தேச நாட்டை தள்ளி வைப்பதற்காக தூபம். இவை கொள்கை வகுப்பாளர்களுடைய அறியாமைகள் அல்ல!

இந்து சமுத்திர தேவைகளை தாங்கிய புதிய கலாச்சாரம். இனி இலங்கைக்கு அறிமுகப்படுத்துவார்கள்.

விரிவடையும் பதற்றங்கள் பிராந்தியத்தில் மேலைத்தேய தளங்களுக்கான வாய்ப்புக்களை உருவாக்கும்.

இரத்தக்களரியான தேசத்தில் சிதைந்து போன மனித உயிர்கள் குறித்த “மனிதாபிமான” பாசாங்கு கதைகளும் ஆராயப்பட வேண்டியவை.

தமது ஏகாதிபத்திய நலன்களைப் பின்பற்றுவதற்கும், வன்முறைகளை தூண்டவும், குழப்பவும் பயங்கரவாத அமைப்புக்களை தங்களின் பினாமிகளாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

மத்திய கிழக்கில் அவர்கள் செய்ததை மறவாதீர்கள்.

பயங்கரவாத வலையமைப்புகளுக்குப் பெருமளவு பொது நிதியை  வாரி இறைக்கும் அமைப்புக்களையும், வெளி உலக  பினாமி அரசாங்கங்களின் பின்னணிகளை ஆராய்ந்தால் சில திரைகள் விலகும்.

அரசியலுக்காகவோ, அதிகாரத்துக்காகவோ விசாரணைகள் முற்றிலும் அம்பலமாகாமல் முற்றுப்பெறுமாயின் காட்டுமிராண்டித்தன அச்சுறுத்தல்களாக பிராந்தியத்தில் தொடரும். அவை தென்னாசியாவில் ஒரு சிரியாவையோ, ஈராக்கையோ கொண்டு வரலாம்.


அமலதாஸ் எல்றோய்

பாசிச கட்சிகளை வளர்த்து விடப்போகும் இலங்கையின் புதிய சட்டங்கள்.

(பாசிச கட்சிகளை வளர்த்து விடப்போகும் இலங்கையின் புதிய சட்டங்கள்... மனிதம் நிறைந்த சுதந்திர வாழ்க்கைக்கு தடையில்லாமல் இருக்கும் வரையில்...)
கேள்விக்குள்ளாகும் கருத்துச்சுதந்திரங்கள். ஊடகவியலாளர்களின் எல்லைகள் ஏதுவரை

தமிழ் உறவுகளே நினைவேந்தல்கள் MAY 18  அடுத்த மாதம் ஏற்பாடுகள் பண்ணுகிறீர்களா?
தங்களது உறவுகளை நிறைவேந்தல் செய்பவர்களுக்கான சாவுமணி அடிக்கப்பட்டாயிற்று. - இலங்கையின் புதிய சட்டம்!

வெறுமனே தமிழர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் மற்றும் மாவீரர் நினைவு தினங்களின் ஞாபகார்த்த சம்பவங்கள் மட்டுமல்ல,
இது பொதுவாக இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் பொதுவானது.
பொதுப்படையான...

தொழிலாள வர்க்க போராட்டங்களின் எழுச்சி

வேலைநிறுத்த அலைகளும்

விவசாயிகள் மற்றும் ஏழைகளின் போராட்டங்களும் 

அரசியல் எழுச்சி  போராட்டங்களும்

மாணவர்கள் போராட்டங்களும் 


பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுவதன் போக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ்-அரச வழிமுறைகள் தவிர்க்க முடியாத வகையில் சமூக, சயாதீன வர்க்கத்திற்கு எதிராக பயன்படுத்தப்படும்.

அழகான, வனப்பான தேசத்தில் எதிர்கால தனிநபர் சுதந்திரங்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வரை சட்டங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் மனிதர்களும் அவ்வாறே!

இப்படிக்கு
அன்புள்ள சுதந்திர சுற்றுலாவாசி
அமலதாஸ் எல்றோய்

இலங்கையில் 2019 வருடம் சபிக்கப்பட்டதா?

  • அரசியல் குழப்பங்கள்
  • பொருளாதார வீழ்ச்சிகள்
  • கடும் வரட்சி 
  • அதிக போக்குவரத்து விபத்துக்கள் 
  • போதைபொருள் கடத்தல்கள்
  • கொலைகள்
  • கொள்ளைகள்
  • மோசடிகளும், ஊழல்களும்
  • கொடூரமான குண்டுவெடிப்புக்கள்
தொடர்ந்து மற்றுமொரு சாபங்களுக்குள் சிக்கப்போகும் இலங்கை. பேரழிவுகளை ஏற்படுத்தும் இயற்கையின் ரூபத்தில் நம்மை நோக்கி நகருகின்றது. பலி கொள்ளும் சூழற்சியில் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

மனித நேயத்தை வளர்ப்போம், வரும்முன் காப்போம்...

திங்கள், 22 ஏப்ரல், 2019

இலங்கை காலியாகிவிட்டதா? நெட்டிசன்கள் கிண்டலுக்கு ஆளான அதிபர் ட்ரம்ப்

இலங்கையில் இன்று நடந்த 8 மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகக்கூறி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தவறாக ட்விட் செய்ததால், நெட்டிசன்கள் கிண்டலுக்கு ஆளாகினார்.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையான இன்று, நீர்கொழும்பு, மட்டக்களப்பு, கொழும்பு நகரங்களில் உள்ள தேவாலாயங்கள், ஹோட்டல்கள் என 8 இடங்களில் மனிதவெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் 207 பேர் கொல்லப்பட்டனர், 450-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தும், இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.
அமெரிக்க அதிபர்  டொனால்ட் ட்ரம்பும், இலங்கை தாக்குதல் குறித்து கேள்விப்பட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தையும் வேதனையையும் பதிவு செய்தார். ஆனால், சற்று அதிகமாக வருத்தப்பட்டு, மக்கள் எண்ணிக்கையை தவறாக பதிவிட்டதால், நெட்டிசன்கள் கிண்டலுக்கு ஆளாகினார். இலங்கை தாக்குதலில் 138 பேர் கொல்லப்பட்டார்கள் என்று பதிவிடுவதற்கு பதிலாக 138 மில்லியன்(13.80 கோடி) மக்கள் என்று தவறாக பதிவிட்டார். இதைத்தான் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.


அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் கூறுகையில், " இலங்கையில் உள்ள தேவாலாயங்கள், ஹோட்டல்களில் நடந்த தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 138 மில்லியன் மக்கள், 600க்கும் மேற்பட்ட காயமடைந்தவர்களுக்காக அமெரிக்க மக்கள் சார்பில் நான் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவிக்கிறேன். உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம் " எனத் தெரிவித்தார்.
அதிபர் ட்ரம்பின் ட்விட்டை கவனித்த நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கிவிட்டனர்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ட்விட்டரில் கூறுகையில், " அனைத்தையும் மில்லியனில் குறிப்பிடாதீர்கள், உங்கள் எண்ணிக்கையை மாற்றுங்கள். இவ்வாறு தவறான எண்ணிக்கையில் பதிவிட்டால் எப்படி உளப்பூர்வமாக ஆறுதல் தெரிவித்து இருப்பீர்கள்" எனத் தெரிவித்தார்.
மற்றொருவர் " 138 மில்லியனா, அப்படியென்றால், தாக்குதல் அதிகரிப்புக்காக காத்திருக்க வேண்டுமா" எனக் கேட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன், " இலங்கையி்ல இருப்பதே 2 கோடி மக்கள்தான், 13.80 கோடி மக்களுக்கு எங்கு செல்லவது வாய்ப்பே இல்லை. உங்களின் தப்பான அனுதாபங்களை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். அது தேவையில்லை" என்று இலங்கையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர் " 138 மில்லியனா,... இலங்கை மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. டொனால்ட் ட்ரம்ப் கணக்கின்படி எங்கள் நாடு இப்போது காலியாகிவிட்டதா" எனத் கிண்டலடித்துள்ளார்.
அதிபர் ட்ரம்ப் தவறாக ட்வீட் செய்வது முதல்முறை அல்ல, இதற்கு முன் அமேசான் அதிபர் ஜெப் பிஜோஸ் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக ஜெப் போஜோ என்று குறிப்பிட்டார்.
ஆப்பிள் அதிபர் டிம் குக் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக டிம் ஆப்பிள் என்று குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.