புதன், 24 ஜூலை, 2019

முதுகெலும்பை பற்றி பேச பேராயர் 'கார்தினால் மல்கம் ரஞ்சித்துக்கு' தகுதி இருக்கின்றதா?

"முதுகெலும்பை பற்றி பேச பேராயர் 'கார்தினால் மல்கம் ரஞ்சித்துக்கு' தகுதி இருக்கின்றதா? என்றொரு சந்தேகம் என்னிடம் உண்டு.

'பொதுநலமாய் நகர்த்தும் சுயநலம் எனும் மதப்போர்வை' என் 'சமூகத்தின் மீதான கொடிய மனித அவலத்தின் போது 'உன்' முதுகெலும்பு எங்கே போனது?' என்றொரு கேள்வி உள்ளடங்கலாக...! பல கண்ணீர் ஆதாரங்களும் உண்டு.

'அதிமேற்றாசனம்' அதிமேதாவித்தனமாய் காலங்காலமாய் பேரினவாத முகமூடிக்குள் புனிதம் உரைப்பதை யாரறிவார்கள்.!

'பிதாவே' இவர்கள் அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும் என்று நான் உரையேன். கடந்த காலங்களில் கொத்துக்கொத்தாய் பலர் கொலை செய்யப்பட்ட போது  நீங்கள் முதுகெலும்பற்று உறக்கத்திலா இருந்தீர்கள்..?'

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி அமெரிக்க யுத்தக் குற்றச் செயல் பிரதிநிதி ஸ்டீவன் ரெப்பை சந்தித்த மன்னார், யாழ்ப்பாண பேராயர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது. இலங்கை கத்தோலிக்க பேராயர் பேரவை ஆதரவளிக்காது. நீங்கள் கூறியதை மறக்கவில்லை பேராயரே??

இராவண தேசம் எது என்பதையும், சிவபூமியை பற்றியும், நாகர்களையும், மூத்த குடிகளையும் முதன்மொழி பற்றிய வரலாறுகளையும், புனிதருக்கு தமிழ் காக்கும் பாதிரியார்கள் கொஞ்சம் போதிக்க வேண்டும். இனவாதிக்கு பால் வார்த்து தன் வரலாற்று புனைவோடு முதுகெலும்பில்லாத தன்மை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை பேராயருக்கு...!

'நீங்கள் யாரை திருப்திபடுத்த முனைகிறீர்கள்..?'

'வரலாறு என்பது உண்மை' என்பதை முதலில் கற்றுக்கொள்ளுங்கள். மதமோ, அரசியலோ இரண்டாம்பட்சம். ஒரு சமூகநீதிக்கான தர்மங்களையும் புரிந்து கொள்ளுங்கள்.

பதிவுகள் புரியவில்லையாயின் கார்தினாலின் தர்க்க ரீதியான நீர்கொழும்பு கட்டுவ தேவாலய உரையை முழுவதுமாக தேடி படியுங்கள். தர்மரீதியில் புரிபவர்கள் புரிவீர்கள்!'

பிற மதமன உலைச்சலுக்கான பதிவல்ல. மனு நீதிக்கான சிறு பதிவு இது...(வளரும்)©

#எல்றோய் "

வியாழன், 11 ஜூலை, 2019

2027ம் ஆண்டுக்குள் மக்கள் தொகையில் இந்தியா சீனாவை மிஞ்சிவிடும்: ஐநா

2027ம் ஆண்டுக்குள் மக்கள் தொகையில் இந்தியா சீனாவை மிஞ்சிவிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 

2019ம் ஆண்டிற்கான உலக மக்கள் தொகை ஆய்வறிக்கையை ஐ.நா. அளித்திருந்தது. அதில் இந்திய மக்கள் தொகை தற்போது 137 கோடியாகவும், சீன மக்கள் தொகை 143 கோடியாகவும் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் 2027ம் ஆண்டிற்குள் சீன மக்கள் தொகையை இந்தியா முந்தி இந்த நூற்றாண்டில் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறிவிடும் என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2050ம் ஆண்டிற்குள் இந்தியாவின் மக்கள் தொகை மேலும் 27 கோடி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சீனாவின் மக்கள் தொகை 3 கோடி குறையும் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது 770 கோடியாக உள்ள உலக மக்கள் தொகை அடுத்த 30 ஆண்டுகளில் 970 கோடியாக அதிகரிக்கும் என ஐ.நா. தெரிவித்துள்ளது. மேலும் இந்த நூற்றாண்டு இறுதியில் உலக மக்கள் தொகை 1,100 கோடியை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 10 ஜூலை, 2019

காலிஸ்தானை ஆதரிக்கும் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்புக்கு மத்திய அரசு தடை

புதுடெல்லி:

பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என சீக்கியர்களின் காலிஸ்தான் அமைப்பு போராடி வருகிறது. இந்த அமைப்புக்கு அமெரிக்காவை தலையிடமாக கொண்டு செயல்படும் ‘நீதிக்கான சீக்கியர்கள்’ அமைப்பு ஆதரவு அளிக்கின்றது.

இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்கள் மற்றும் அத்துமீறல்களின்போது குரல் எழுப்பி வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி டெல்லியில் உள்ள தனது வீட்டில் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டபோது நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக தூண்டி விடப்பட்ட தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு (முன்னாள்) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இழப்பீடு அளிக்க வேண்டும் என சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. பின்னர், அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

பஞ்சாப்பை தனிநாடாக அறிவிப்பது தொடர்பாக அடுத்த ஆண்டு அங்குள்ள சீக்கியர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தவும் இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் செயல்படும்  ‘நீதிக்கான சீக்கியர்கள்’ அமைப்பை சட்டப்புறம்பான அமைப்பாக மத்திய மந்திரிசபை இன்று அறிவித்துள்ளது. தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதால் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் உள்ளிட்ட சில மாநில அரசுகளின் கருத்துகளை அறிந்த பின்னரே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.