வியாழன், 8 மார்ச், 2018

தமிழ் மொழி இருக்கக்கூடாது என்பதற்காக திராவிடம் திணிக்கப்பட்டது: ஹெச்.ராஜா கருத்தால் மீண்டும் சலசலப்பு

தமிழ் மொழி இருக்கக்கூடாது என்பதற்காக திராவிடம் திணிக்கப்பட்டது என்று ஹெச்.ராஜா கருத்தால் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. #HRaja

ஒட்டன் சத்திரம்,

பெரியார் சிலை பற்றிய ஹெச்.ராஜாவின் சர்ச்சை பேச்சு தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்த ஹெச். ராஜா, தனது முகநூல் நிர்வாகி தனக்கு தெரியாமலே, பெரியார் சிலை பற்றிய சர்ச்சை பதிவை பதிவிட்டு விட்டதாகவும்  விளக்கம் அளித்து இருந்தார். இதனால், இந்த விவகாரம் சற்று ஓய்ந்த நிலையில், பெரியார் பெயரில் ஹெச்.ராஜா மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். 

திண்டுக்கல் அருகே உள்ள ஒட்டன்சத்திரத்தில் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- “ தமிழ் மொழியே இருக்க கூடாது என்பதற்காக  தமிழர்கள் மீது திணிக்கப்பட்டதுதான் திராவிடம். தமிழ் மொழியை சனியனே என்று  ஈவேரா பேசியதற்கு ஆதாரங்கள் உள்ளது. இந்த உண்மைகளை மக்களிடம் எடுத்துச் சொல்வதால்தான் வசைபாடுகிறார்கள்” என்று தெரிவித்தார்.  ஹெச்.ராஜாவின் இந்த கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில்  மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர அமைச்சரவையிலிருந்து பாஜக அமைச்சர்கள் விலகல் சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி

சந்திரபாபு நாயுடுவுக்கு பாரதீய ஜனதா கட்சி பதிலடி கொடுக்கும் விதமாக ஆந்திர அமைச்சரவையிலிருந்து 2 பாஜக அமைச்சர்கள் பதவி விலகி உள்ளனர். #ChandrababuNaidu

கடந்த 2014–ம் ஆண்டு ஆந்திர மாநிலம் 2-ஆக பிரிக்கப்பட்டு புதிதாக தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்ட சட்டசபை தேர்தலில் ஆந்திராவில் தெலுங்கு தேசம்–பா.ஜனதா கூட்டணி வென்றது. சந்திரபாபு நாயுடு முதல்–மந்திரி ஆனார். தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா  ராஷ்டிர சமிதி ஆட்சியை கைப்பற்றியது.

ஆந்திரா பிரிக்கப்பட்டபோது செழிப்பான ஐதராபாத் நகரம் தெலுங்கானாவுக்கு சென்றுவிட்டது. மேலும் புதிய தலைநகரை (அமராவதி) உருவாக்கவேண்டிய நெருக்கடியும் ஆந்திராவுக்கு ஏற்பட்டது. இதனால் அப்போதைய தேர்தல் பிரசாரத்தின்போது, நாங்கள் வெற்றி பெற்றால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்போம் என்ற வாக்குறுதி அந்த கூட்டணியின் சார்பில் அளிக்கப்பட்டது. 

மத்திய மந்திரிசபையில் தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த அசோக் கஜபதி ராஜூவும் (விமான போக்குவரத்து), ஒய்.எஸ்.சவுத்ரியும் (தகவல் தொழில்நுட்பம்) இடம் பெற்று உள்ளனர்.

4 ஆண்டுகள் ஆகியும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது தொடர்பாக  பா.ஜனதா தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தெலுங்கு தேசம் அதிருப்தி அடைந்தது. 

இதனால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

சந்திரபாபு நாயுடு நேற்று இரவு விஜயவாடா நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது  மத்திய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மந்திரிகள் அசோக் கஜபதி ராஜூவும்,  ஒய்.எஸ்.சவுத்ரியும் வியாழக்கிழமை இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று அறிவித்தார்.

பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகவும் தீர்மானித்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மத்திய மந்திரிசபையில் இருந்து விலகும் முடிவை பிரதமர் மோடியிடம் தொலைபேசி மூலம் தான் தெரிவிக்க முயன்றதாகவும், ஆனால் முடியவில்லை என்றும் பேட்டியின் போது சந்திரபாபு நாயுடு கூறினார்.

மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவதாக அறிவித்த சந்திரபாபு நாயுடுவுக்கு பாரதீய ஜனதா கட்சி பதிலடி கொடுத்து உள்ளது. மத்திய அமைச்சர் பதவி விலகலுக்கு முன்பாக  ஆந்திர அமைச்சரவையிலிருந்து பாஜக அமைச்சர்கள் 2 பேர் பதவி விலகினர்.

உலகைச் சுற்றி... 8.3.2018

* ஈரான் தனது ஏவுகணை உற்பத்தியை 3 மடங்காக உயர்த்தி இருப்பதாக அதன் மூத்த ராணுவ தளபதி ஒருவர் தகவல் வெளியிட்டு உள்ளார்.

* வியட்நாம் போருக்கு பின்னர் இப்போது முதன்முறையாக அமெரிக்காவின் விமானம்தாங்கி போர்க்கப்பல், வியட்நாமுக்கு சென்று உள்ளது. இது சீனாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக சீனா கூறுகிறது.

* இலங்கையில் பெரும்பான்மை புத்த மதத்தினருக்கும், சிறுபான்மை இஸ்லாமிய மதத்தினருக்கும் இடையேயான மோதல் காரணமாக நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு மத்தியிலும் அங்கு மசூதிகள் மீதும், இஸ்லாமியர்களின் வணிக நிறுவனங்கள் மீதும் தாக்குதல்கள் நடந்து உள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. இதை அடுத்து கண்டி மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

* அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால், அணு ஆயுதங்களை கை விடத்தயார் என்கிற அளவுக்கு வடகொரியா இறங்கி வந்து பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் வெளியிட்டு உள்ளது. வடகொரியா உண்மையான ஈடுபாட்டுடன் இப்படி கூறுகிறது என நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து தெரிவித்து உள்ளார்.

* அமெரிக்காவில் இந்திய என்ஜினீயர் சீனிவாஸ் குச்சிபோட்லா, இனவெறி தாக்குதலில் கொல்லப்பட்டதில் கைதான அந்த நாட்டின் கடற்படை முன்னாள் வீரர் ஆதம் புரிண்டன், தன் மீதான குற்றச்சாட்டை கன்சாஸ் கோர்ட்டில் நேற்று ஒப்புக்கொண்டார். அவரது தண்டனை விவரம், மே மாதம் 4–ந் தேதி அறிவிக்கப்படும். அவருக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது. 

இலங்கையில் வன்முறை: அமைதி திரும்ப வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் கோரிக்கை

இலங்கையில் வன்முறையான சூழல் நிலவும் நிலையில், அமைதி திரும்ப வேண்டும் என அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #SriLankaemergency

கொழும்பு,

இலங்கையின் மத்திய கண்டி மாவட்டத்தில் புத்த மதத்தினருக்கும் சிறுபான்மை இனத்தவராக உள்ள இஸ்லாமிய மதத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 2 பேர் உயிரிழந்தனர். கண்டியில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவரின் கடை தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து அங்கு கலவரம் மூண்டது.

இதன்காரணமாக தெல் தெனியா பகுதியில் ஊரடங்கு உத்தரவு  அமல்படுத்தப்பட்டது. இதே போன்று பல இடங்களில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் நடந்து உள்ளன. இது சிறிசேனா அரசுக்கு தலைவலியாக அமைந்தது. இந்த நிலையில்,  நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்துவது என அதிபர் சிறிசேனா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்திற்கு பிறகு அறிவிப்பு வெளியிடப்பட்டது. 3-வது நாளாக  நெருக்கடி நிலை அங்கு நீடிக்கிறது. தொடர்ந்து கண்டியில் பதட்டமான சூழல் நிலவுவதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இலங்கை முழுவதும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன. மொபைல் இணைய சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்களான சனத் ஜெயசூர்யா, குமார் சங்கக்காரா, மகிலா ஜெயவர்தனே ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தனது அடுத்த தலைமுறை உள்நாட்டுப் போருக்குள் தள்ளப்படுவதை தான் விரும்பவில்லை . என்று மஹில ஜயவர்த்தன கூறியுள்ளார். 25 வருடம் தொடர்ந்த ஒரு போருக்கு உள்ளாகவே தான் வளர்ந்ததாக தெரிவித்துள்ள  ஜயவர்த்தனே, சமீபத்திய வன்செயல்களை தான் கடுமையாக கண்டிப்பதுடன், அதற்கு காரணமானவர்கள் நீதிமுன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதே போல், குமார் சங்ககாரா கூறியிருப்பதாவது, நாம் அனைவரும் ஒரே நாடு மற்றும் ஒரே மக்கள் என்ற கொள்கையை சேர்ந்தவர்கள். அன்பு, நம்பிக்கை ஆகியவற்றை ஏற்பதே நமது பொதுவான மந்திரமாக இருக்க வேண்டும். வன்முறை மற்றும் இனவெறி தாக்குதலுக்கு இங்கு இடமில்லை. வன்முறைக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஏப்ரல் பூமியில் மோதும் அபாயம்

சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஏப்ரல் முதல் வாரம் பூமியின் மீது மோதவுள்ளதாக அந்நாட்டு விண்வெளித்துறை தெரிவித்துள்ளது. #Tiangong1 #SpaceStation

சீனாவின் முதலாவது விண்வெளி ஆராய்ச்சி நிலையமான டியாங்கோங் - 1 பூமியின் மீது மோத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் வாரம்  இவ்விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியின் மீது மோத உள்ளதாக அந்நாட்டு விண்வெளித்துறை தெரிவித்துள்ளது.

ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு போட்டியாக 2011-ஆம் ஆண்டு மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தினை சீனா விண்வெளியில் வெற்றிகரமாக கட்டி முடித்தது. சுமார் 8.5 டன் எடைகொண்ட விண்வெளி ஆராய்ச்சி நிலையம் 2016-ஆம் ஆண்டுடன் தனது கட்டுப்பாட்டை முற்றாக இழந்துவிட்டது. இந்த நிலையில் டியாங்கோங் - 1 பூமியுடன் மோதி அழிவுக்குள்ளாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மணிக்கு சுமார் 27,000 கிலோ மீட்டர் அதிக வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் டியாங்கோங் – 1, பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது எரியத் தொடங்கிவிடும். எனினும் முற்றாக எரியாத நிலையில் பெரும்பாலான பகுதிகள் பூமியில் மோதக் கூடிய வாய்ப்பு உள்ளதாக சீன விண்வெளித்துறை தெரிவித்துள்ளது. டியாங்கோங் – 1 பூமியுடன் மோதப்போகும் இடம் எது அதனால் ஏற்படும் பாதிப்பு  என்ன என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இன்று மகளிர் தினம்- பெண்மையை போற்றுவோம்

பெண்களுக்கான சமத்துவம் மற்றும் உரிமைகளை வலியுறுத்தும் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், தாயாக, வழிபடும் தெய்வமாக, வழிகாட்டும் கருவியாக வலம் வரும் பெண்மையை போற்றுவோம். #WomensDay

“உயிரை காக்கும் உயிரினை சேர்த்திடும் 
உயிரினுக்குயிராய் இன்பமாகிடும் உயிரினும்
இந்த பெண்மை இனிதடா”

பெண் என்பவள் வியப்புக்குரியவள். இறைவன் படைப்பிலே மனஉறுதி கொண்ட உயர்வான சிற்பம். விண்ணுலகின் கவிதை மலர்கள் விண்மீன்கள் என்றால், மண்ணுலகின் கவிதை மலர்கள் பெண்கள். பெண் மனம் அறிவு பெறுவதைப் பொறுத்தே இம்மண்ணுலகம் அறிவு பெறுகிறது.

ஒரு அழகிய கற்புடைய பெண் ஆண்டவனின் முழுமையான படைப்பாகவும் தேவதைகளின் பெருமையாகவும், உலகின் அதி அற்புதமான தனித்த அதிசயமாகவும் விளங்குகிறாள் என்று ஹெர்மிஸ் என்ற உலக அறிஞன் ஒத்துக் கொள்கிறான்.

மனிதகுலத்தின் வாழ்விற்கும் அந்த வாழ்வை தகுதி உள்ளதாக மாற்றி காட்டியதற்கும், படைத்த இறைவனுக்கே நிகர் இவள். பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல பின்பற்றப்பட வேண்டியவர்களும் கூட.

பெண்கள் சிரித்தால் செண்பகமரம் பூக்கும். அவள் காலடி பட்டால் அசோகமரம் பூக்கும். பேசினால் பூக்கும் நமேரு மரங்கள், பெண்கள் தழுவினால் பூக்கும் குராபக மரங்கள், அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால் பூக்கும் திலக மரங்கள் என்று பறைசாற்றுகிறது பழமையான சமஸ்கிருத பாடல்.

வாய்பேசத் தெரியாத விருட்சங்கள் கூட பெண்ணின் அன்பையும், அரவணைப்பையும் உள் வாங்குகிறது என்று சொன்னால் மீதமுள்ள உயிர்கள் இப்பெருமைகளை எண்ணிப் பார்ப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. அதனால்தான் பெண்ணின் கருணை, அடியாள் போல் செய்யும் தொண்டு, பூமாதேவி போல் காட்டும் பொறுமை, குடும்ப நிர்வாகத்தில் செயல்படும் மந்திரி, என்று நீதி வெண்பா “அன்னை தயையும் அடியாள் பணியும் மலர்ப் பொன்னின் அழகும் புவிப் பொறையும் வன்னமுலை வேசி துயிலும், விறல் மந்திரி மதியும் பேசில் இவையுடையாள் பெண்”, என்றது. இத்தனைச் சிறப்புகளையும் அசை போடுவதற்கு காரணம் உலக மகளிர்தின கொண்டாட்டம்.

1789-ம் ஆண்டு பிரெஞ்சு புரட்சி நடந்த போது சமத்துவம், வாக்குரிமை, வேலைக்கு ஏற்ற ஊதியம் வேண்டி பெண்கள் போராட்ட களத்தில் இறங்கினர். அதன் விளைவு மன்னர் லூயிஸ் பிலிப் தன் பதவியைத் துறந்தான். ஐரோப்பா முழுவதும் அமெரிக்காவிலும் போராட்டம் பரவியது. இதையடுத்து பிரான்சின் 2-ம் குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங் 1848 மார்ச் 8-ல் பெண்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புக்கொண்டார்.

1910-ம் ஆண்டு ஓப்பன் ஹேகலில் வீரப் பெண்மணி கிளாராஜெட்கின் தலைமையில் அனைத்துலக பெண்கள் மாநாடு நடந்தது. பின்னர் சர்வதேச மாதர் அமைப்பு உருவானது. 1920-ம் ஆண்டு சோவியத் ரஷியாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட அலெக்ஸண்டிரா ஹெலன்ரா ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8-ம் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.

ஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்நாள் பல நாடுகளில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருப்பது பெண் இனத்தின் பெருமைகளை மற்றவர்கள் மனப்பூர்வமாக ஏற்று கொண்டிருக்கிறார்கள் என்பதைதான் காட்டுகிறது.

ஒரு காலத்தில் ஆணாதிக்க சமூகத்தில் இருந்து, பெண்கள் தங்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கப் போராடினார்கள். ஆனால் இன்று சமுத்துவம், சுதந்திரம், உரிமைகளைப் பெற்று சாதனைப் படைத்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் ஒவ்வொரு பெண்களும் மார்ச் 8-ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்திய ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரா ஜெட்கினியையும் அதனை பிரகடனம் செய்த ரஷியாவின் பெண்மணி அலெக்ஸண்டிரா ஹெலன்ராவையும் மாதர்கள் கைகூப்பி தொழ வேண்டும்.

மேற்கூறியவர்களை நினைவு கூர்கின்ற அதே வேளையில் இந்தியாவின் குறிப்பாக தமிழ் மண்ணின் சாரத்தை, அதில் உயிர்ப்போடு நடமாடும் பெண்மையை, அபாரசக்தி பெற்றிருந்தும் அடிமைபட்டு கிடந்த பெண்குலத்தின் அறிவு கண்களைத் திறந்து அவர்களுக்கு உத்வேகம் கிடைக்கும்படியாக ஓட்டுமொத்த பெண் குலத்தின் எண்ணப்புரட்சிகளை எட்டயபுரத்து கவிஞன் மகாகவி பாரதி, அவனின் தாசன் பாவேந்தன் எழுத்துக்களால் செய்த புரட்சி, அப்புரட்சி சிந்தனைகளுக்கு, உரமளித்து உயிர் பெறும்படி செய்த நம் முன்னோடிகள் என்றுமே இப்பெண்ணினத்தின் ஜீவநாடிகள்.

உலக அரங்கில் பெண்கள், தங்கள் உரிமைக்காக குரல் கொடுத்தார்கள். ஆனால் தமிழ் மண்ணின் சிறப்பு, பல ஆண்கள் பெண்களின் பெருமையை உணர்ந்து பெண்களுக்காக குரல் கொடுத்ததை நம்மால் பார்க்க முடிகிறது. அதனால் தான்

“நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம் புரிவாள் எங்கள் தாய்- அவர்
அல்லவராயின் அவரை விழுங்கிப்பின்
ஆனந்த கூத்திடுவாள் பெண்”

என்று பாடினான் பாரதி.

பெண்கள் தங்கள் சாதனைப் பயணத்தை தொடங்குகின்ற களம் இல்லறம். இல்லறமாவது கற்பெனும் திண்மையுடைய இல்லாளோடு மாறுபாடின்றி, கருத்தொருமித்து கூடித் தர்மத்தை புரிவதாம். தான் கற்பதோடு தன்னைச் சார்ந்தவர்களை கற்கும்படி தூண்டுபவள் பெண். ஆண், பெண் குழந்தைகள் இரு சாரருக்கும் இளமையில் இருந்து கற்பொழுக்கத்தைப் போதித்து இந்நாட்டின் வீரர்களை, சிறந்த பக்திமான்களை, அடையாளம் காட்டி நீங்களும் இப்படி உலகம் போற்றும் உத்தமர்களாக விளங்க வேண்டும் என்று உபதேசித்து அவர்களைப் பண்படுத்த வேண்டிய பொறுப்பு பெண்கள் வசம் என்பதை உணர்ந்து

“வேதம் படைக்கவும், நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோமென்று கும்மியடி
சாதம் படைக்கவும் செய்திடுவோம் - தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்”

என்று உரக்கப் பாடினான் பாரதி.

அதே நேரம் உரிமையைப் பாடிய கவிஞன், அவள் கடமை என்ன என்பதையும் வலியுறுத்தினான்.

“காதல் ஒருவனை கைப்பிடித்தே, அவன் 
காரியம் யாவினும் கைகொடுத்து 
மாதரறங்கள், பழமையைக் காட்டிலும் 
மாட்சி பெறச்செய்து வாழ்வோமடி”

என்றான்.

பாண்டிய நாட்டிலே ஒரு பழமொழி உண்டு.

“தாயைப் பார்த்து பெண் எடு” என்பார்கள். எல்லாவற்றிக்கும் அடித்தளம், அவள்தான். பெண்ணாய் பிறந்தால் அவலம், அவஸ்தை, பரிதவிப்பு என்ற நிலைமாறி, கள்ளி பாலுக்கு இரையாகிய காலம் பறந்தோடி அவள் வாய்மொழிக்கு முக்கியத்துவம் கிடைக்கும் காலம் கனிய தொடங்கியுள்ள இந்த வேளையில், சில கசப்பான உண்மைகளையும் நாம் ஆழமாக உணர்வதில் தவறில்லை. நம் குணத்திற்கு பின் ஒரு மனம் உண்டு. குணத்திலும் மேலான குணம் பெண் பெண்ணாக இருப்பது. இதை மிக நுணுக்கமாக நாம் உள்வாங்க வேண்டும்.

பெண் உரிமை என்று பேசுகின்ற பெண்கள் மூன்று வடிவங்களாக காட்சி தருகிறார்கள்.

“கண்கள் இரண்டிருந்தும் காணும் திறமையற்ற
பெண்களின் கூட்டமடி கிளியே”

என்று மகாகவி பாடியதைப் போல இன்றும் இத்தனை உரிமைகள் தரப்பட்டும், சட்டங்கள் பெறப்பட்டும் கண்ணிருந்தும் குருடர்களாய் ஒருசாரார் இப்புவியில் வலம் வரும் அவலநிலை ஒருபுறம்.

இன்னொரு புறம் கிடைத்த உரிமைகளை, வரங்களை, வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தாமல், “கண்டதே காட்சி, கொண்டதே கோலம்” என்று பெண் விடுதலையை தவறாகப் புரிந்து கொண்டு ஆண் வர்க்கத்தை அடிமைப்படுத்துவதுதான் உண்மையான பெண்ணின் உரிமை என்று அறியாமையினால் மிகத் தவறுதலாக புரிந்து கொள்ளும் கண்ணோட்டமும் பெண்களிடையே நிலவுகிறது.

“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்”

என்று பாரதி பாடியதன் அர்த்தத்தை பெண்ணினம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

“எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் 
இளைப்பில்லை காணென்று கும்மியடி”

என்றானே!

ஒரு காலத்தில் ஆண்கள் பெண்களை அடிமைபடுத்தினார்களே, அதேபோல இன்று ஆண்களை அடிமைப்படுத்த பெண்கள் ஒருசிலர் நினைப்பது துரதிஷ்டம். நிகர், இளைப்பில்லை என்று பாடியதன் ஆழத்தை செவி மடுத்து நமக்கு பெறப்பட்ட உரிமைகளை சரியாகப் பயன்படுத்துவது சாலச்சிறந்தது. அதை விடுத்து ஒரு காலத்தில் ஆண்கள் இப்பெண் சமூகத்திற்கு இளைத்த அதே கொடுமைகளை நாம் ஏவுகணைகளாக பிரயோகம் செய்தால் நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண 
நன்னயம் செய்துவிடல்”

என்ற வள்ளுவனின் உலக பொது மறையை நினைவில் கொள்வோம்.

“தாய்க்கு மேல் இங்கே ஓர் தெய்வம் உண்டோ
காதல் செய்யும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள் நிலை அவளாலே எய்தல் வேண்டும்”

என்பதை பெரும்பாலான பெண்கள் நிதர்சன உண்மையாக்கி வாழ்ந்து காட்டுவது பாராட்டுக்குரியது.

நமக்காக போராடி நம் உரிமைக்காக குரல் கொடுத்த நம் முன்னோடிகளின் கனவை நனவாக்க முயல்வோம். பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் என்பதை உலகறியச் செய்வோம். அந்த ஞானத்திற்கு உதாரணமாக விளங்கிய பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலெட்சுமி, முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி, ஆங்கில படையுடன் போரிட்டு வெற்றி கொண்ட முதல் பெண் அரசி ராணி வேலு நாச்சியார், சாதிய ஆதிக்கங்களுக்கு எதிராகப் போராடிய குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த சாவித்திரிபாய் போன்றோரை, மேலும் பல சாதனைகளைப் படைத்த பெண்களைப் பின்பற்றி சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட சமூகத்தை உருவாக்க முயல்வோம்.

தண்ணீரைக் கண்டால் பயிர்கள் எப்படி பசுமையாக நிமிர்ந்து நிற்குமோ, அதைப்போல பெண்கள் தங்கள் குணங்களால் தலைநிமிர்ந்து வாழ முடியும், நல்லொழுக்கத்தை படைக்க முடியும் என்பதையும், உலகிற்கு உணர்த்த வேண்டும்.

விஞ்ஞான உலகை அசைத்து பார்க்கக் கூடிய வீரமங்கையாக, இல்லறத்திலும், சமூகத்திலும், நாடு போற்றக்கூடிய வகையில் திட்டங்களை வகுத்து திறமையாக செயல்படும் மந்திரியாக அதற்கேற்றாற்போல் மதிநுட்பத்தை மகுடமாக சூடியவளாக பெண் வலம் வந்தால் இவ்வுலகம் உள்ளளவும் வாழும்.

“நற்குணமுடைய வேந்தை
நயந்து சேவித்தலொன்று 
பொற்புடை மகளிரோடு 
பொருந்தியே வாழ்தலொன்று 
பற்பல ரோடு நன்னூல்
பகர்ந்து வாசித்த லொன்று 
சொற்பெரும் இவைகள் மூன்றும் 
இம்மையில் சொர்க்கம் தானே”

என்ற விவேக சிந்தாமணியில் எது சொர்க்கம் என்பதில், நடுநாயகமாக, உச்சி திலகமாக, புனிதவதியாக, மென்மையானவளாக, மலர்ந்த முகமுடையவளாக, இன் சொல்லரசியாக, புன்சிரிப்பின் பெட்டகமாக, சுதந்திரச்சிந்தனை படைப்பாளியாக, உரிமைகளைக் கட்டிக்காத்து தக்க வைக்கும் தாயாக, வழிபடும் தெய்வமாக, வழிகாட்டும் கருவியாக வலம் வரும் பெண்மையைப் போற்றுவோம்.

பெண் என்பவள் மகளாக, மனைவியாக, தாயாக, தன்னலம் கருதா தொண்டுள்ளம் கொண்ட சேவகியாக, உதவுவதன் மூலம் உயிர்களை வாழ்விக்க முடியும் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திய முதல் ஜீவனாகிய, பெண்ணின் சிறப்புகளை, உயர்வினை போற்றுவோம்! வாழ்த்துவோம்! வணங்குவோம்!

வாழ்க பெண்மை, வளர்க அவள் நல்லறம்.

ஆன்மீக சொற்பொழிவாளர் 
எல்.வாசுகி மனோகரன்.