சனி, 17 அக்டோபர், 2015

சர்வதேச வறுமை ஒழிப்பு

சமுதாயத்தில் மக்களிடம் பொருளாதாரத்தில் நிலவும் வேறுபாடுதான் எல்லா வித சமத்துவமின்மையையும் வன்மையாக பிரதிபலிக்கச் செய்கிறது.

வறுமை ஏற்பட்ட குடும்பம் ஆனாலும், ஒரு இனம் ஆனாலும், ஒரு நாடு ஆனாலும் தாழ்ந்த மனநிலைக்கு செல்வது தவிர்க்க முடியாததாகிவிடும்.

சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை 1993 ம் ஆண்டில் ஐ.நா. அறிவித்து ஆண்டுதோறும் அக்டோபர் 17 ம் திகதியில் கொண்டாடி வருகிறது.

உழைக்க தயாராக ஒருவன் இருப்பதால் மட்டும் தன் வறுமையை ஒழித்துவிட முடியாது என்ற நிலை உலகில் உருவாகியிருப்பது தான் சிக்கலே.

வறுமையில் சிக்கிய மக்கள் உழைக்க துணிந்தும் எங்கே எப்படி என, பண வரவான தொழிலுக்கு வழிதெரியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருக்கின்றனர்.

முதலாளித்துவத்திலும் அரசியலிலும், கனவு தொழிற்சாலைகளிலும் ஒருவனின் உழைப்புக்கு பொருத்தமின்றி குவியும் கோடிக்கணக்கான பணத்தோடு, ஒரு கூலித் தொழிலாளியின் சம்பளம் எப்படி போட்டிபோட முடியும். அதேசமயம், கூலித்தொழிலாளி வேலைகளும் ஒழிக்கப்படக் கூடியது அல்ல.

இந்த ஏற்றத்தாழ்வுகளை எப்படி சமப்படுத்துவது கடினமோ, அதே சிரமம் வறுமை ஒழிப்பிலும் இருக்கிறது.

பணம் என்ற உலகின் ஒரு தலையாய கொள்கை, சமுதாயத்தின் அத்தியாவசியப் பொருள், அத்தியாவசிய உழைப்பு, தொழிலை கூட மதிப்பற்றதாக்கிவிடும்.

மாறாக, உபயோகம் குறைந்த பொய்யான ஒரு பொருளையும் விலைவைத்துவிடும் தந்திர கருவியாக மனிதர்கள் கையில் தவழ்கிறது.

இதனால், நல்ல உழைப்பாளர்களாலும் வறுமையை போக்கிக்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. உன்னதமான உணவு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளும் மீனவர்களும் வறுமையில் வாடுவதே இதற்கு சாட்சி.

அறிவுப்பூர்வமான உழைப்பும் மக்களின் அத்தியாவசியமும் அந்த தொழிலுக்கு இருந்தும் கூட, பணத்தின் விளைவு மட்டும் ஏன் பரிதாபத்திற்கு உரியதாக கிடைக்கிறது.

இதுபோல எத்தனையோ அவசியமான வேலைகள் அடிமாட்டு விலையிலேயே நடக்கின்றன.

இதற்கான காரணத்தை அறிந்திருந்தாலும், பொறுப்பிலிருக்கும் எந்த ஆட்சியாளர்களாலும் ஆராய்ந்து தீர்வு காண முடியவில்லை.

இன்றைய வாழ்வின் போதாத நிலைக்கு காரணங்கள்:

தவறான இலக்கு நோக்கிய முன்னேற்றங்கள், லஞ்சம், ஊழல், வேலைவாய்ப்பின்மை, மக்கள்தொகை, ஆட்சியாளர்களின் இயலாமை, சுயநலம், சந்தர்ப்ப முடிவுகள், இன மொழி மத பிரிவினை தாக்கங்கள், இளைஞர்களை திசைமாற்றும் அரசியல் கட்சிகள், விளையாட்டு, சினிமா, வலைதளங்கள். முதலாளித்துவம், வணிகமயம் இவைகளோடு பணம் என்ற கண்டுபிடிப்பும் நிச்சயமாக முதன்மை காரணமாகவே இடம்பெறும்.

இந்த கடினமான காரணங்கள் வேர் வலுவடைந்து சரிசெய்யப்பட முடியாத தூரத்துக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

தன் நாட்டைப் பற்றி வெளி உலகுக்கு பொய் தோற்றத்தை காட்டும் திறமையற்ற ஆட்சியாளர்கள்.

50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமலும் ஒரு நாளைக்கு இரு வேளை உணவுக்கே வழியில்லாமலும் இருக்கும்போது, அந்த நாட்டில் மெட்ரோ ரயில், பல்லாயிரம் கோடிகளில் ராணுவ தளவடங்கள், உலக அளவிலான விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என பணக்கார நாடு போல காட்டி தங்கள் மரியாதையை தேடிக்கொள்கிறார்கள்.

இது நோயால் சீரழிந்த உடலுக்கு, உயர்ரக ஆடையும் தலைப்பாகையும் உடுத்திப்பார்க்கும் நிலையே, அதனால், ஆரோக்கியம் வந்துவிடாது.

என்றாலும், என்றாவது இந்த வறுமை எல்லோரிடமும் ஒழிக்கப்படும் என்று, அணு விஞ்ஞானி அப்துல் கலாம் கூறியதுபோல, ஒவ்வொருவரும் கனவு காண இந்த வறுமை ஒழிப்பு தினத்தை பயன்படுத்துவோம்.

கனவு என்பது தூங்குவதல்ல, தூங்கவிடாமல் செய்வது.