புதன், 26 பிப்ரவரி, 2014

கடவுளே வலியாய் கொடுத்துவிட்டார்

சுற்றும் பூமியில்
சுழன்று அடிக்கும் பித்தன் நான்.
விழித்தெழுத்து பார்க்கையில்
வியப்போடு வெளி பார்க்கிறேன்

கலை தாவும் ஆவலை
கடவுளே வலியாய் கொடுத்துவிட்டார்
மலை தாவும் வலிமை பெற
மனதை உடைத்து பெயர்த்துவிட்டார்



உறவுகள் உண்டு இவைக்கு
உள்உணர்வுகள் இல்லை
ஓடித்திரியும் கனவுகளை எனக்குள்
ஒளித்து வைக்க துணிவுமில்லை

அறிமுகமில்லா யார்யாரோ
அன்பாய் அணைக்கிறார்கள் ஒருபுறம்
ஆழமான சொந்தங்கள்
ஆப்பாகின பலபுறம்

தேடலில் உள்ள ருசிதனை
தேக்கி வைக்க இயலவில்லை
காட்டினிலே உள்ள கனிவினைபோல்
கார்பட்டிலே காணமுடிவதில்லை

புழுதியில் கிளப்பிய பயணம்
புலம்பெயர்வாக கற்றுக்கொடுத்தது
எழுதிய விதியை மாற்ற
என் பெருமானுக்கும் பொறுப்புமில்லை

தவிப்போடு யான் வேண்ட
தலை தடவி எனை கூர்ந்து
அடிபடு மகனே என்று
அன்பாய் சொல்லிவிட்டார்



பகலையும் இரவையும்
பண்பாய் அரவணைத்தேன்
பாசத்தையும் நேசத்தையும்
பாயுக்குள் சுருட்டி வைத்தேன்


இடைவிடா தேடலில்
இசை எனக்கோர் இளைப்பாற்றி
புணர்ந்து விட்ட உறவுபோல்
புகைப்படம் எனது பொண்டாட்டி


மூச்சிறைக்க ஓடுகிறேன்
மூடுபனி விலகவில்லை
பேச்செடுக்க மறுக்கிறது
பேசும் பொருள் அருகிலில்லை



சிறகடிக்கும் சிந்தனைகளுக்கு
சிறகே வரமாக வேண்டுகிறேன்
முப்பொழுதும் கற்பனை தொடர
முடிவற்ற பயணத்தை தேடுகிறேன்…


© அ. எல்றோய்