திங்கள், 18 மே, 2020

எனக்குப் பிடித்த உலக சினிமா.. (Dunkirk-2017)

எனக்குப் பிடித்த உலக சினிமா..  (Dunkirk-2017)
'கிறிஸ்டோபர் நோலன்' இந்த இயக்குனர் உடைய எந்த திரைப்படத்தையும் நான் தவற விட்டதில்லை. திரைக்கதையை எங்கள் வாழ்க்கையுடன்    ஒன்றிணைக்க செய்து எங்களையும் திரைப்படம் முழுவதுமாக கட்டி வைப்பதில், சிந்திக்க வைப்பதில் இந்த இயக்குனருக்கு நிகர் எவரும் இல்லை. நேற்றைய தினம் மீண்டுமொருமுறை (Dunkirk)
டன்கிர்க்  இந்தத் திரைப்படத்தை Netflixல் பார்த்தேன். பார்த்ததும் நிச்சயம் உங்களுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பதிவிடுகின்றேன்.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் 2017ல் வெளிவந்திருக்கும் படம், டன்கிர்க் (Dunkirk).
டன்கிர்க் என்பது பிரான்ஸில் உள்ள ஒரு துறைமுகத்தின் பெயர். பெல்ஜிய நாட்டு எல்லைக்கு மிக அருகில் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த டன்கிர்க் துறைமுகத்தில் 1940ம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது நடைபெற்ற ஒரு போர் நிகழ்வின் ஒரு பகுதியே டன்கிர்க் திரைப்படம்.
ஜெர்மனிக்கும் நேசநாட்டுப்படைகளுக்கும் நடந்த சண்டையில், இந்த டன்கிர்க் துறைமுகத்தையும் அங்கே இருந்த நேச நாட்டுப்படையின் வீரர்களையும் வான் வழியாகவும், நீர் (கடல்) வழியாகவும் சுற்றி வளைத்தது ஜெர்மானியப்படை. சுற்றி வளைத்தது மட்டுமில்லாமல் அவர்களை தொடர்ந்து வான் வழியாக தாக்கி அழிக்கும் வேலையையும் செய்தது.
பிரான்சுப்படை உள்ளிட்ட நேசநாடுகளின் படையை ஜெர்மானியப்படை முறியடித்த இந்த நிகழ்வில் டன்கிர்க் துறைமுகத்தில் மாட்டிக்கொண்ட 4 இலட்சம்(4,00,000) நேசநாட்டுப் படைவீர்கள் பட்ட பாடும், அவர்கள் எப்படி மீண்டனர் என்பதும் தான் டன்கிர்க்கின் கதை. 3 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இங்கிலாத்திற்கு தப்பி மீட்கப்பட்டனர்.
கப்பலோ, படகோ எது கிடைத்தாலும் பயன்படுத்தி அவர்களை மீட்க முயற்சி செய்யுங்கள் என்று அப்போதைய இங்கிலாந்து பிரதம மந்திரி வின்சென்ட் சர்ச்சிலின் உத்தரவின் பேரில் 1 இலட்சத்திற்கும் அதிகமான பிரான்சுப்படை வீர்ர்கள் நேசநாட்டுப்படை வீரர்கள் ஆங்கிலக்கால்வாய் வழியாக மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை படமாக்கி இருக்கிறார், கிறிஸ்டோபர் நோலன். படம் பார்க்கும் உணர்வைத்தாண்டி நிஜமாகவே போர்க்களத்தை நேரடியாக பார்ப்பது போலவே இருக்கிறது. வழக்கமான திரைப்படங்கள் போன்று நிமிடத்திற்கு நிமிடம் மாறும் திரைக்கதை, ட்விஸ்ட் என்றில்லாமல்… போர்க்களம் அதன் நிகழ்வுகள்… தந்திரங்கள், தொழில்நுட்பங்கள்… என்று நமக்குத் தெரியாத தகவல்கள் நிறைந்து இருக்கிறது, டன்கிர்க். போர் விமானிகள் எப்படி செயல்படுவார்கள், எதிரியின் விமானப்படையை முறியடித்து தங்கள் படைகளுக்கு சாதகமாக இருப்பதிலும், தங்கள் படைகளை காப்பாற்றுவதிலும் எப்படி முக்கிய பங்காற்றுகிறார்கள்… எரிபொருள் தீரும் வரை கடைசிநொடி வரை போரிட்டு அதன் பின் எப்படி தப்பிக்க முயற்சி செய்கிறார்கள்… இப்படி நேரடி போர்க்களக்காட்சிகள்…

இலட்சக்கணக்கில் இராணுவ வீரர்கள் அடுத்தநொடி உயிர்வாழ்வது நிச்சயமில்லாத நிலையிலும்… எப்படியாவது தப்பித்து வீட்டுக்கு போகவேண்டும்…. என்று பரிதவித்து நிற்கிற நிலை… யுத்தங்கள் மீதான பேரச்சத்தையும் பெரும் வெறுப்பையும் உருவாக்குகிறது.

டன்கிர்க் திரைப்படம்.   பார்க்க வேண்டிய உலக சினிமா...

Battle of #Dunkirk (டன்கிர்க் சண்டை)
May 26, 1940 – Jun 4, 1940

ஞாயிறு, 17 மே, 2020

சுமந்திரன் சொல்லத் தவறியது...!

சுமந்திரன் சொல்லத் தவறியது...!
விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் சரியானதென்று ஏற்றுக்கொள்ளவில்லை என சுமந்திரன் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறிவிட்டார் என்று எல்லோரும் நெருப்பெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 

அவரது இந்தக் கருத்துப் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் - அவருக்கு எதிராக அதிகளவிலும், ஆதரவாக சிறியளவிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. 

ஆனால், இதில் எவருமே சுட்டிக்காட்டாத சில விடயங்கள் இருக்கின்றன. அவற்றையே நான் இங்கு கவனத்தில் கொண்டுவர விரும்புகிறேன். 

இந்த வாதப் பிரதிவாதங்களில் நண்பர் ஒருவரின் பதிவில், ஆயுதப் போராட்டம் ஆயிரக்கணக்கான உயிரிழிவுகள், அங்கவீனங்கள், காணாமல்போதல்கள், சொத்தழிவுகள், இடப்பெயர்வுகள், சனத்தொகைச் சரிவு, பொருளாதார சிதைவு, கல்வி வீழ்ச்சி, நிலங்கள் இழப்பு, இராணுவ முகாம்களின் பெருக்கம் என்று ஏராளம் துன்பங்களையே இறுதியில் விட்டுச்சென்றிருக்கின்றது என்கின்ற ஒரு யதார்த்தமான அவதானத்தை வெளியிட்டிருந்தார். 

இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, ஆயுதப் போராட்டம் ஏற்படுத்தியிருக்கும் இழப்புக்கள் அதிகம் என்பதை மறுக்க முடியாது. 

வீம்புக்கு வேண்டுமானால் தமிழரின் பிரச்சினையை, வீரத்தை உலகறியச் செய்யவில்லையா என்று கேட்டாலும், சரி உலகறிந்து கண்டபலன் என்ன என்ற கேள்விக்கு பதிலேதும் உண்டா? 

சரி, ஆயுதப்போராட்டத்தை ஏற்றுக்கொள்கிறோமோ, இல்லையோ, அதன் பாதகமான அம்சங்களுக்கான பழியை அவ்வளவு இலகுவாக புலிகள்மீதும், அதன் தலைவர் பிரபாகரன்மீதும் சுமத்திவிட்டுத யாரும் இலகுவாகத் தப்பிக்கொண்டுவிட முடியுமா? 

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட பல தமிழ்ப் போராட்ட இயக்கங்களின் தலைவர்கள் ஆயுதமேந்துவதற்கான பின்னணியில் இருந்த “எய்தவர்களை“ வசதியாக மறந்துவிட்டு, “அம்புகளை” நோவது ஏற்றுக்கொள்ளத்தக்கதா?

சேர் பொன் இராமநாதன் காலத்திலேயே தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கக் கிடைத்த வாய்ப்புக்களைத் தவறவிட்டுவிட்டு,

தமிழ்க் காங்கிரஸ் அமைத்து 50க்கு 50 என்று பேரம் பேசியும், அரசுடன் இணைந்து அமைச்சுக்களைப் பெற்றும் அரசியல் செய்து வந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் முன்னெடுத்த அரசியல் வழிமுறையையும் நிராகரித்துவிட்டு,

ஜீ.ஜீ.பொன்னம்பலத்துக்குப் போட்டியாக வாக்கு வங்கியைக் கவரும் வகையில், ஆங்கிலத்தில் Federal Party(சமஷ்டிக் கட்சி) என்று தேசியளவில் காட்டிக்கொண்டு, தமிழில் தமிழரசுக் கட்சி என்று தமிழர்களின் மனதில் தனிநாட்டுக் கனவை முதலில் வளர்த்துவிட்டு வாக்கள்ளியவர் செல்வநாயகமே. 

இவரது இந்த தேர்தல் வாக்கு வங்கியை இலக்காகக் கொண்ட அணுகுமுறையை மேலும் விரிவாக்கி, வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றி, தனிநாடுதான் ஒரே தீர்வு என்று தமிழ் இளைஞர்களின் இரத்தத்தைச் சூடேற்றி ஆயுதமேந்தத் தூண்டியவர் அமிர்தலிங்கமே.

இடையில், மாநகரசபை முதல்வராக யாழ் நகரில் அதிக அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்ட அல்பிரட் துரையப்பா எங்கே தமக்கு அரசியல் ரீதியான போட்டியாக வளர்ந்துவிடுவாரோ என்று, பொன்னாலை வரதராஜப்பெருமாள் ஆலயத்தில் வழிபாடியற்றும்போது அவரைப் போட்டுத் தள்ளும்படி பிரபாகரனைத் தூண்டியவர்கள் இந்த வேட்டி அரசியல்வாதிகளே. 

சாத்வீகம் தோற்றதால்தான் ஆயுதமேந்தினோம் என்கிறார்களே, சாத்வீக வழியில் அப்படி என்னதான் பெரிதாகப் போராடினார்கள்? 

அப்படியே போராடியிருந்தாலும், சாத்வீக வழியில் போராடிய எந்தத தலைவர் தானே ஆயுதமேந்தினார்...?

ஆயுதமேந்திய எந்தத் தலைவர் முன்னதாக சாத்வீக வழியில் போராடியிருந்தார்....?

எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும், எந்த நிலையிலும் விட்டுக்கொடாமல் சாதீவகப் போராட்டம் நடாத்திய காந்தியின் வழியில் ஒரு அங்குலமேனும் இந்த வேட்டித் தலைவர்கள் ஏதும் முயன்றிருக்கிறார்களா....?

குறுக்கு வழியில் தேர்தல் வாக்குவேட்டைக்காக தமிழரசு, தமிழீழம், ஆயுதப் போராட்டம் என்று வாய்வீரம் பேசி, இரத்தத் திலகமிட்டு இளைஞர்களை ஆயுதமேந்தத் தூண்டிய “எய்தவர்களை“ விட்டுவிட்டு, இவர்களால் தூண்டப்பட்டு ஆயுதமேந்தி அதற்கு இறுதி வரையில் உண்மயாக இருந்து தம்முயிர்களையே மாய்த்த “அம்புகளை” ஏன் நோவான்?

பிரபாகரன், சிறிசபாரத்தினம், பத்மநாபா, உமாமகேஸ்வரன், பாலகுமார் என்று நீண்டுசெல்லும் இந்த “அம்புகளிடம்”, தாம் சரி என்று நம்பிய ஒன்றுக்காக தம்மையே அர்ப்பணித்த நேர்மை இருந்ததல்லவா?

உண்மையான அர்த்தத்தில் பார்த்தால், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுலைக் கூட்டணி ஆகியவற்றின் வாக்குவேட்டைக்கான வாய்வீச்சாக அறிவிக்கப்பட்ட ஆயுதப்போராட்டக் கூச்சலால் உந்தப்பட்டு இளைஞர்கள் ஆயுதமேந்த, 

பிராந்தியத்தில் தலையீடு செய்த அமெரிக்காவை ஓரங்கட்ட, இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கும் பூகோள அரசியலின் பிராந்திய நகர்வுகளுக்காக அந்த இளைஞர்களை அண்டை நாடான இந்தியா மேலும் வளர்த்துவிட்டு பயன்படுத்திக்கொண்டது என்பதே நடந்தேறியது. 

இந்த ஆயுதப் போராட்டம் தவறானது என்று வாதிட்டால், அதற்கான பொறுப்பை இன்று மிதவாத வேடம் பூண்டிருக்கும் தலைவர்களே ஏற்றுக்கொள்ளவேண்டும். 

அவர்களுடன் ஒரு அங்கமாக இருந்துகொண்டு, இது ஏதோ அவர்களுக்குச் சம்பந்தமில்லாத “பெடியள்“ விட்ட தவறு என்று அவர்களைக் காப்பாற்றும் கைங்கரியத்தையல்லவா சுமந்திரன் செய்திருக்கிறார்?

ஆயுதப்போராட்டம் உண்மையில் தீமையாகத்தான் முடிந்தது என்ற முடிவுக்கு வந்தால், “அம்புகளை” விட்டுவிட்டு, “எய்தவர்களை” அம்பலப்படுத்தவேண்டும்.

அதைச் செய்தால், “நெஞ்சில் உரமும், நேர்மைத் திடமும் கொண்ட“ ஒரு அரசியல்வாதியாக தன்னை நிரூபிக்க இது அவருக்கு ஒரு சந்தர்ப்பம்!

புதன், 6 மே, 2020

ஐசக் நியூட்டன்

புகழ்பெற்ற விஞ்ஞானி ஐசக் நியூட்டன் ஒரு நாயை வளர்த்துவந்தார். அதற்கு டயமண்ட் (வைரக் கல்) என்று பெயரும் சூட்டி அன்பாகப் போற்றி வந்தார். ஒரு நாள் அவர் மாலையில் உலாவச் சென்றார். அப்பொழுது அறையின் மேஜை மீது மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. அன்று என்ன நிகழ்ந்ததோ தெரியவில்லை. அவர் உலாவச் சென்ற நேரத்தில் அந்த நாய் மேஜை மீது தாவிக் குதித்தது போலும். மெழுகுவர்த்தி கீழே சாய்ந்து அங்கு அவர் எழுதிவைத்திருந்த காகிதங்களுக்குத் தீவைத்தது. அத்தனையும் எரிந்து கருகின. அதன் அருமை பெருமை நியூட்ட்ன் ஒருவருக்கே தெரியும். ஏனெனில் அவை அவரது இருபது ஆண்டுக் கால ஆராய்ச்சியின் முடிவுகளடங்கிய காகிதங்கள்.

உலாவச் சென்று திரும்பிய நியூட்டனுக்கு அவற்றைப் பார்த்தவுடன் பெரும் அதிர்ச்சி. எல்லாம் டயமண்டின் ‘திருவிளையாடல்’ தான் என்பது அவருக்குப் புரிந்தது. அதுவோ தான் செய்த பெரிய தீங்கை அறியாது அன்பாக வாலைக் குழைத்து நியூட்டனை வரவேற்றது.

நியூட்டனைத் தவிர வேறு ஒருவர் அந்த சூழ்நிலையில் இருந்திருந்தால், நாயை எத்தி உதைந்து அறைக்கு வெளியே தள்ளி கதவைச் சாத்தியிருப்பார். ஆனால் நியூட்டனோ அன்பாக நாயை எடுத்துத் தழுவி அணைத்து, “டயமண்ட், நீ செய்த சிறிய காரியத்தின் விளைவுகளை நீ அறியமாட்டாய்” என்றுசொல்லிக் கொஞ்சினார். அது மீண்டும் வாலை ஆட்டி தன் நன்றியைத் தெரிவித்தது. நியூட்டன் மீண்டும் எழுதத் துவங்கினார்.

👉 சிறியோர் செய்த சிறு பிழையெல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே”- வெற்றி வேர்க்கை

👉 நிறையுடைமை நீங்காது வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் – குறள்

வியாழன், 23 ஏப்ரல், 2020

உலக புத்தக தினம்

"படிப்பதில் ஆழ்ந்து,
மாய உலகங்கள் சென்று வருவோமா...?

கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்கலாமா,
ஒரு பிறவியில்,பல பிறவிகளின் அனுபவம் பெறலாமா...? 

புத்தக கடலில்,
ஆழ்ந்து மூழ்கி,
புத்துணர்வு பெறலாமா...?

எண்ண வெளியில் பறந்து
எல்லையில்லா பெருவெளியில் கரைந்து விடலாமா...?"

#WorldBookDay 
#உலகபுத்தகதினம்❤

'தூக்கு கயிற்றை முத்தமிடும் வரை படித்துகொண்டிருந்தார்
உமர்முக்தர்!

தூக்குமேடைக்கு செல்லும் வரை
படித்துகொண்டிருந்தார்
பகத்சிங்!

படுக்கும் இடம்கூட
படிப்பகம் அருகே வேண்டுமென்றார் 
அம்பேத்கர்!

படித்த புத்தகத்தை 
முடிக்கவேண்டும் என்பதற்காக 
அறுவை சிகிச்சையை அடுத்த நாள் மாற்ற சொன்னார் அண்ணா!

கடைசி வரையிலுப் புத்தகத்தை நேசித்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்!
-
வாசிப்பை நேசிப்போம், அதை மூச்சாகியும் சுவாசிப்போம்..'

“Books are like mirrors: You only see in them what you already have inside you.”
#உலகபுத்தகதினம்

செவ்வாய், 31 மார்ச், 2020

அமெரிக்காவில் இரு வாரத்தில் கொரோனா வைரஸ் தாக்கமும், உயிர்ப்பலியும் உச்சத்துக்கு செல்லும் - அதிர வைத்த டிரம்ப்

அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கமும், உயிர்ப் பலியும் 2 வாரத்தில் உச்சத்துக்கு செல்லும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதியான டிரம்ப் கூறினார்.
வாஷிங்டன், 

வல்லரசு நாடான அமெரிக்காவிலும் இப்போது கொரோனா வைரஸ் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகிறது. நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நிலவரப்படி, அங்கு இந்த வைரஸ் பிடிக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்து விட்டது. பலியானவர்களின் எண்ணிக்கை 2,475.

நேற்று முன்தினம் ஒரே நாளில் இந்த வைரஸ் 18 ஆயிரம் பேருக்கு தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 255 அமெரிக்கர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று கொரோனா வைரசுக்கு பலியாகி இருக்கிறார்கள்.

தற்போதைய நிலவரப்படி நியூயார்க் நகரத்தில் மட்டும், 60 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. அங்கு இதுவரை 960 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

நியூஜெர்சி மாகாணத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவத்தொடங்கி உள்ளது. அங்கு இதுவரை 13 ஆயிரம் பேர் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். 161 பேர் பலியாகியும் உள்ளனர்.

மேலும் 20 மாகாணங்களில் தலா ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக அமெரிக்காவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

24 மாகாணங்களில் ஊரடங்கு, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒரு வாரத்துக்கு முன்னதாக தேசிய நெருக்கடி நிலையையும் ஜனாதிபதி டிரம்ப் ஏற்கனவே அறிவித்து அதுவும் நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் நிருபர்கள் மத்தியில் காணொலி காட்சி வழியாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வெள்ளை மாளிகையின் பொது சுகாதார ஆலோசகர்கள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குழு உறுப்பினர்களான டாக்டர் டெபோரா பிரிக்ஸ், டாக்டர் அந்தோணி பாசி ஆகியோர் ஆலோசனைப்படி, சமூக இடைவெளியை கடைப்பிடித்து வருவதற்கான கால வரையறை ஏப்ரல் 30-ந்தேதி நீட்டிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை தணிப்பதற்கு எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள், புதிதாக கொரோனா வைரஸ் பரவுவதை குறைக்கும், பலி எண்ணிக்கையையும் குறைக்கும் என்று டாக்டர் டெபோரா பிரிக்ஸ், டாக்டர் அந்தோணி பாசி எடுத்துக்காட்டி உள்ளனர்.

தங்களது தன்னலமற்ற எழுச்சியூட்டும், துணிச்சலான முயற்சிகள் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றும் என்பதை அமெரிக்க மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள்தான் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள்.

புதிய சமூக வழிகாட்டுதல் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் 1-ந் தேதி அறிவிக்கப்படும். ஜூன் 1-ந் தேதி வாக்கில் நாம் மீண்டு வருவதற்கான பாதையில் நன்றாக இருப்போம் என்று நம்புகிறேன்.

கொரோனா வைரசால் நாம் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை விதிக்காவிட்டால் உயிர்ப்பலி 22 லட்சம் அளவுக்கு போகக்கூடும் என எனக்கு சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரசால் ஏற்படுகிற உயிர்ப்பலியை 1 லட்சம் என்ற அளவுக்கு கட்டுப்படுத்தி விட்டாலே நாம் நன்றாக செயல்பட்டிருக்கிறோம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே டிரம்ப், கொரோனா வைரஸ் பற்றி கருத்து தெரிவிக்கையில் ஈஸ்டர் பண்டிகைக்குள் (ஏப்ரல் 12-ந்தேதி) இயல்பு நிலைக்கு அமெரிக்கா திரும்பி விடும் என எதிர்பார்ப்பதாக கூறி இருந்தார்.

இப்போது அவரே ஜூன் 1-ந் தேதி வாக்கில் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் இருப்போம் என கூறி இருப்பது, அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் எந்தளவுக்கு உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.

இதற்கு இடையே சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்ற அரசாங்க உத்தரவை கடைப்பிடிக்காமல் பொதுவெளியில் சுற்றித்திரிகிறவர்கள் மீது மாகாண அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் நடவடிக்கை எடுக்கத்தொடங்கி உள்ளன.

சிலிக்கான் பள்ளத்தாக்கு மற்றும் நியூயார்க்கிலும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பவர்களுக்கு 200 டாலர் முதல் 400 டாலர்வரை (சுமார் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையில்) அபராதம் விதிக்கத்தொடங்கி இருக்கிறார்கள்.

நியூயார்க் நகரத்தில் கொரோனா வைரஸ் தாக்கி பலியானவர்களின் உடல்களை பாதுகாப்பாக வைக்க போதுமான அளவுக்கு பிணவறை வசதி இல்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

தற்போது அந்த நகர ஆஸ்பத்திரிகளில் உடல்களை வைப்பதற்கு குளிரூட்டப்பட்ட லாரிகளை நிறுத்தி இருப்பதை பார்ப்பதாக டிரம்ப் கூறி உள்ளார்.

ஏற்கனவே தாக்கியுள்ள மற்ற வைரஸ்களின் புள்ளி விவரத்தின்படி பார்த்தால், இப்போதைக்கு கொரோனா வைரஸ் பரவலை தணிக்காவிட்டால், அதனால் 16 லட்சம் முதல் 22 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என்று டாக்டர் டெபோரா பிரிக்ஸ் எச்சரித்துள்ளார்.

டாக்டர் பிரிக்ஸ் கணிப்பு அடிப்படையில் பார்த்தால், 2 வாரத்தில் கொரோனா வைரஸ் பரவல் அமெரிக்காவில் உச்சம் தொடும், பலியும் அதேபோல அதிகரிக்கும் என்று டாக்டர் அந்தோணி பாசி கூறி உள்ளார்.

இப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்கான கால வரம்பை ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை நீட்டித்து, டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ள நிலையிலும், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் உயிர்ப்பலி 80 ஆயிரம் முதல் 1 லட்சத்து 60 ஆயிரம் வரையில் இருக்கும் என்று டாக்டர் டெபோரா பிர்க்ஸ் கணித்து கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Coronavirus: Trump says US in good shape to meet 'peak'

திங்கள், 30 மார்ச், 2020

கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது.தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் என நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணித்து உள்ளார்.

லாஸ்ஏஞ்சல்ஸ்

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் உகானில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 199க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 721,412 ஆக உள்ளது.  தற்போதைய நிலவரப்படி 33,956 பேர் உயிரிழந்துள்ளனர். 151,004 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிர் இயற்பியலாளரும், வேதியலுக்கான  நோபல் பரிசு பெற்றவருமான மைக்கேல் லெவிட் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு  அளித்த பேட்டியில்  கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது.தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் 

 சமூக விலகல் இந்த நேரத்தில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு அவசியமான ஒரு சக்தியை  உலகிற்கு அளித்துள்ளது.

ஏனெனில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய போது, சீனா குறித்து நிபுணர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டிருந்து போதிலும், மைக்கேல் லெவிட்  துல்லியமான கணிப்புகளை வெளியிட்டிருந்தார்.

சீனாவில் 80,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்படுவார்கள் மற்றும் 3,250 உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று மைக்கேல் லெவிட்  மதிப்பிட்டு இருந்தார் அதுபோலவே நடந்து உள்ளது.சீனாவில் 3277 உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன், 81,171 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அவரின் கூற்றின் படியே, சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், கொரோனா வைரஸினால் அத்துடன், சீனாவில் கொரோனா வைரஸின் மையமாக இருந்த ஹூபே மாகாணம் நீண்ட நாட்களுக்குப் பின் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி உள்ளது குறிப்பிடதக்கது. இதை தொடர்ந்து மைக்கேல் கருத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. 

‘We’re going to be fine’ — Nobel winner Michael Levitt says COVID-19 pandemic will end soon



வியாழன், 26 மார்ச், 2020

கிருமிகள் உலகில் மனிதர்கள்

கொரோனா .. .. .. "கிருமிகள் உலகில் மனிதர்கள்"

தற்கால சூழ்நிலையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நிறைய விடயங்களை உள்ளடக்கியது இந்த புத்தகம். கிடைத்திருப்பது வரப்பிரசாதமே. நேரம் ஒதுக்கி படியுங்கள் என்று சொல்ல வேண்டிய தேவையில்லை. சுய ஊரடங்கு உங்களை வாசிப்பின் தாற்பரியத்தை மேம்படுத்தும். அதற்கேற்றால் போல் நுண்ணங்கிகளையும் உலகின் அசைவையும் ஓரளவு புரிந்து வைக்க இந்த நூல் உதவும் என நம்புகிறேன்.

- எல்றோய் அமலதாஸ்

நாடெங்கும் ஏன் பாரெங்கும் ஒரு பாதையில் விரைந்து கொண்டிருக்கும் போது அதற்கு எதிரான பாதையில் இயல்பாகவே ஒரு மாற்றுக் குறைவு ஏற்பட்டு விடுகிறது. என்றாலும் அதில் இருக்கும் நியாயங்கள் மறைக்கப்பட்டாக வேண்டுமா? விவாதிக்கப்பட வேண்டும் எனக் கருதுகிறேன்.

நுண்ணுயிர் தேற்றம் (Germ theory) அதன் தொடக்க காலத்திலிருந்தே எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அவை மறைக்கப்பட்டிருக்கின்றன.

அலோபதி மருத்துவத்தின் போதாமையும், அறிவியல் ஆய்வுகள் என்ற பெயரில் நடக்கும் ஒற்றைப் பார்வை ஆய்வுகளும் கண்டிப்பாக மக்களின் ஆரோக்கியத்தை காக்கப் போவதில்லை. என்றால் மக்களை நேசிப்பவர்களின் அடுத்த அசைவு எதை நோக்கியதாக இருக்க வேண்டும்?

கிருமிகள் உலகில் மனிதர்கள் எனும் அக்கு ஹீலர் உமர் ஃபாரூக் எழுதிய இந்த நூலை படித்துப் பாருங்கள். நுண்ணுயிர்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் பார்வையை எளிமையாகவும், வலிமையாகவும் மறுத்து விளக்கங்களையும் தரவுகளையும் முன் வைக்கிறார்.

மருத்துவ மாணவர்களே, மருத்துவர்களே, மருத்துவ வல்லுனர்களே, இதை விவாதிக்க நீங்கள் நேரம் ஒதுக்க வேண்டும் எனக் கருதுகிறேன். இதன் மூலம் கொரோனாவுக்கு எதிரான மக்களின் ஒருமையையும், ஓர்மையையும் குலைப்பது இதன் நோக்கம் இல்லை. சரியானதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனும் முனைப்பு தான்.

வாருங்கள் விவாதிப்போம்.



நூலை பதிவிறக்க
https://drive.google.com/file/d/13Et9_ThqgJ3vWOuErXyZU724zYJSJwjt/view

புதன், 25 மார்ச், 2020

256 தவிர்க்க முடியாத இலக்கம்..!

பரிசோதனைகளின் உண்மைத்தன்மையை பொறுத்து இலக்கம் ஏறத்தாழ என கொள்ளப்பட்டாலும் இராவண தேச நுண்ணிய காவுகள் கதை கொண்டுபேசும்...! #256