புதன், 28 ஆகஸ்ட், 2019

உலகின் அதிகம் சம்பளம் பெரும் நாடுகளின் தலைவர்களின் டாப்-10 பட்டியல்.

உலகின் அதிகம் சம்பளம் பெரும் நாடுகளின் தலைவர்களின் டாப்-10 பட்டியல்.

தலைவர்களின் ஆண்டு வருமானம்: (அடைப்புக்குறிக்குள் இலங்கை ரூபாயின் மதிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது)

No 10 | Xavier Bettel - Prime Minister of Luxembourg | $278,035 (சுமார் ரூ.5 கோடி)

No 9 | Sebastian Kurz - Former Chancellor of Austria | $328,584 (சுமார் ரூ.5.9 கோடி)

No 8 | Mohamed Ould Abdel Aziz- President of Mauritania | $330,000 (சுமார் ரூ.6 கோடி)

No 7 | Jacinda Ardern - Prime Minister of New Zealand | $339,862 (சுமார் ரூ.6.1 கோடி)

No 6 | Angela Merkel - Chancellor of Germany | $369,727 (சுமார் ரூ. 6.7 கோடி)

No 5 | Scott Morrison - Prime Minister of Australia | $378,415 (சுமார் ரூ.6.8 கோடி)

No 4 | Donald Trump - President of the United States | $400,000 (சுமார் ரூ.7.2 கோடி)

No 3 | Ueli Maurer - President of the Swiss Confederation | $482,958 (சுமார் ரூ.8.7 கோடி)

No 2 | Carrie Lam - Chief Executive of Hong Kong | $568,400 (சுமார் ரூ..10.3 கோடி)

No 1 | Lee Hsien Loong - Prime Minister of Singapore |$1,610,000 (சுமார் ரூ.29.3 கோடி)

#T10 #HighestPaid #WorldLeaders

பசுமையான அழகை இழந்து சாம்பல் காடாக மாறி வரும் அமேசான்...!

பிரேசிலில் நிகழ்ந்த பயங்கர காட்டுத்தீயால், பசுமையான அழகை இழந்து சாம்பல் காடாக மாறி வருகிறது அமேசான் காடுகள். 

55 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள அமேசான் மழைக்காடுகளின் தற்போதைய நிலை படுமோசமான நிலைக்கு மாறிவிட்டது. பூமியின் நுரையீரல் என வர்ணிக்கப்படும் இந்த காடுகள், உலகுக்கு 20 சதவீத ஆக்சிஜனை வழங்கி வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால் தற்போது அமேசான் காடுகள் தன் அழகை இழந்து, சாம்பலாக மாறியுள்ளது. 


பிரேசில் நாட்டில் தற்போது கோடைகாலம் என்பதால், இயற்கையாகவே தீ பற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 74 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீ விபத்துக்கள் அமேசான் வனப்பகுதியில் நிகழ்ந்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 85 சதவீதம் அதிகம் என்றும் பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே, தீயை அணைக்கும் பணியில் ஏராளமான தீயணைப்புத்துறை வீரர்கள், ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அடர்ந்த காடுகளுக்குள் சென்று கொளுந்துவிட்டு எரியும் மரங்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள தீ விபத்தை விரைந்து கட்டுப்படுத்த வலியுறுத்தி, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் போராட்டம் நடைபெற்றது. பசுமை ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து நடத்திய இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த அதிபர் ஜேர் போல்சனரோ அதிக முனைப்பு காட்ட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். 

அமேசான் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ, ஒட்டு மொத்த பூமிக்கும் பேராபத்தை ஏற்படுத்தும் என இயற்கை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

கீழடியில் பண்டைய கால தண்ணீர் தொட்டி கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் பண்டைய கால மக்கள் பயன்படுத்திய சிறிய அளவிலான தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

பண்டைய தமிழர் நாகரீகத்தை உணர்த்தும் கீழடியில், 5ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.  முருகேசன் என்பவரது நிலத்தில் நடைபெற்ற அகழாய்வில், சிறிய அளவிலான தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். 

செங்கற்களால் கட்டப்பட்ட இந்த தொட்டியின் அளவு 4 அடி உயரமும், 2 அடி அகலமும், 5 அடி நீளமும் கொண்டுள்ளது. இந்த தொட்டியின் பயன்பாடு குறித்து முழுமையாக தெரியவில்லை. 
இந்த இடத்தின் அருகிலேயே இரும்பு கழிவுகள் அதிகளவில் கிடைத்துள்ளன, எனவே இரும்பு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் இருந்திருக்க வாய்ப்புண்டு, இரும்பை குளிர்விக்க இந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பி பயன்படுத்தி இருக்கலாம் என கருதுகின்றனர்.  ஆய்விற்கு பின்னரே இதன் உண்மையான பயன்பாடு தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

கானகம் படைப்போம்

ஆச்சரியங்களும், அதிசயங்களும் நிறைந்த இப்பிரபஞ்சத்தின் சூரிய குடும்பத்தில் மற்ற கோள்களை விட மிகவும் அழகானது நாம் வாழும் பூமிப்பந்து ஆகும்.

சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன், செவ்வாய், புதன், வெள்ளி போன்ற கிரகங்கள் பாறைகள், மலைகள், மேடு, பள்ளம் என கரடு முரடான அமைப்பையே கொண்டுள்ளன. ஆனால் இதற்கு நேர் மாறாக நம் பூமிதான், நீல வண்ணக்கடல், பசுஞ்சோலைகள், ஆறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள், அடர்ந்த காடுகள் என கொள்ளை அழகோடு ஒரு மென்மையான பூவைப்போல் அதன் தனித்தன்மையை வெளிப்படுத்துகிறது.

அதனால்தான் பூமியை ஒரு பூப்பந்து என்று கூட அழைக்கலாம். அப்படிப்பட்ட இந்தப் பூப்பந்தைத்தான் நாம் படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறோம். வெள்ளையர்களிடம் இருந்து நம் நாடு விடுவிக்கப்பட்டதைப் போல், இந்த பூமி மனிதர்களின் அட்டூழியத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.

நமது எல்லா சுகங்களுக்காகவும் நாம் தெரிந்தோ, தெரியாமலோ பூமியை அழித்துக் கொண்டிருக்கிறோம். அதிநவீன தொழில் நுட்பம், நாகரிக மாற்றம், நாடுகளுக்கு இடையிலான போர், பணத்தை சுற்றி ஓடும் வாழ்க்கை முறை, தொழில் பெருக்கம், லாபவெறி போன்றவற்றால் இந்த அழகிய பூப்பந்து சிதைக்கப்பட்டு வருகிறது. மனிதர்களால் சிதைக்கப்படும் இந்த பூமி, மனிதர்களால் தான் காப்பாற்றப்பட வேண்டும். அந்தப் பொறுப்பு மனித சமுதாயத்திற்குத்தான் உள்ளது. பூமி அதிர நடக்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இந்த பூமியை பூமாதேவி தாங்கிக்கொண்டிருக்கிறாள் என்ற நம்பிக்கையில், பூமிக்கு தர வேண்டிய ஒரு மரியாதைக்காக இப்படிச் சொல்வார்கள். ஆனால் நாமோ பூமியை இன்று அணுகுண்டுளால் பிளக்கிறோம். காடுகளை வெட்டி பூமிபந்துக்கு நெருப்பு வைக்கிறோம். சுரங்கம் தோண்டுகிறோம் என்ற பெயரில் பூமியின் அடிவயிற்றைக் கிழிக்கிறோம். தொழிற்சாலைகள் மூலமும், வாகனங்கள் மூலமும் வான்வெளியில் புகை மூட்டி பூமித்தாயை மூச்சடைக்கச் செய்கிறோம். வான்வெளி திணறுகிறது. சமவெளி சுடுகிறது. பனிமலைகள் உருகி கடல் மட்டம் உயர்கிறது.

வெண்ணெய்ப் பானையை உடைத்துவிட்டு திருதிருவென முழிக்கும் குழந்தையைப் போல இந்த பூமிப்பந்தை நசுக்கி, மிதித்து, உதைத்து, கிழித்து........ இன்னும் எதை எதையோ செய்துவிட்டு மனித சமுதாயம் இப்போது திருதிருவென விழிபிதுங்கி நிற்கிறது. இனியாவது நாம் திருந்‍துவோமா? நமது செயல்களுக்காக வருந்துவோமா? வருங்கால சந்ததிக்கு மிச்ச சொச்சமுள்ள பூமியையாவது விட்டு வைப்போமா? போன்ற கேள்விகள் நம் கண் முன் சூலாயுதமாய் எழுந்து நிக்கின்றன. இனியாகிலும் இந்த பூமியைக் காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனை மக்களிடையே வலுப்பெறுமா?

காடுகளை வளர்ப்போம் சுற்றுச் சூழல் காப்போம் இயற்கையால் இணைவோம் வருங்கால சந்ததிகளுக்கு வன வளம் விட்டுச் செல்வோம். 

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

6 வயது சிறுவன் வயிற்றில் 64 காந்த மணிகள்... அதிர்ந்து போன மருத்துவர்கள்...!

சீனா நாட்டை சேர்ந்த 6 வயது சிறுவன் வயிற்றில் 64 காந்த மணிகள் இருந்ததை கண்டு மருத்துவர் மற்றும் அக்குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

சீனா நாட்டை சேர்ந்த 6 வயது சிறுவன் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்  அச்சிறுவனுக்கு மருத்துவர்கள்  scan பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதனை முடிவில் சிறுவனின் வயிற்றில் வட்ட வடிவில் 64 சிறுகுண்டுகள் இருந்தது கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அச்சிறுவனின் பெற்றோரிடம் விசாரித்ததில் விளையாடுவதற்காக சில நாட்களுக்கு முன்பு காந்த மணிகள் வாங்கிகொடுத்தாக கூறியுள்ளார். 


சிறுவன் அந்த காந்த மணிகளைத்தான் முழுங்கியுள்ளான் என்பதை அறிந்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை ஏற்பாடு செய்துள்ளனர். மூன்று மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்பு சிறுவனின் வயிற்றில் இருந்து 64 காந்த மணிகளையும் வெளியே எடுத்துள்ளனர். 


சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் Xu Bo கூறுகையில் முதலில் காந்த மணிகளை necklace (neodymium magnets) என்றே நினைத்தோம். பின்பு சிறுவன் முழுங்கியுள்ளது காந்த மணிகள்  என்றவுடன் அதிர்ந்துப்போனோம்; அறுவை சிகிச்சைக்குப்பின் சிறுவன் தற்போது நன்றாக உள்ளான் என தெரிவித்துள்ளார்.

இரண்டு வாய் கொண்ட மீன் - வைரல் புகைப்படம்...!

Fish with 'two mouths' shocks anglers: 'It’s a catch of a lifetime'

நியூயார்க்கில் பெண் ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ஓர் அரிய வகை மீன் அவரது வலையில் சிக்கியது. அந்த மீனின் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த புதன் கிழமையன்று, நியூயார்க் நகரை சேர்ந்த பெண் ஒருவர், அங்குள்ள ஏரி ஒன்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது வலையில் மீன் ஒன்று சிக்கியது. அந்த மீனை எடுத்து பார்த்தபோது அதற்கு இரண்டு வாய் இருந்தது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பெண், அந்த மீனின் புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவு சமூகவலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அதற்கான காரணம் குறித்து பலர் தேடத்தொடங்கினர். எனினும் அதற்கான சரியான காரணம் கிடைக்கவில்லை. சிலர் மீனுக்கு அடிபட்டதால் இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் எனக்கூறுகின்றனர். மேலும் சிலரோ, மரபணு மாற்றம் காரணமாக இதுபோன்று நிகழலாம் என தெரிவிக்கின்றனர்.

இதேபோலவே, கடந்த 2015ல் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையில் இரண்டு வாய் உள்ள மீன் சிக்கியது குறிப்பிடத்தக்கது. 


சனி, 17 ஆகஸ்ட், 2019

வரவிருக்கும் நோயை முன்கூட்டியே அறிய உதவும் எச்சில் ஆராய்ச்சி!

எச்சிலை வைத்து ஒருவரின் ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம் என, இங்கிலாந்தை சேர்ந்த பிராட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் பார்பரா ஸ்டூவர்ட் கண்டுபிடித்துள்ளார்.. 

CANCER, BP என நமது ஆயுட்காலத்தை குறைக்கும் நோய்களுக்கு ஒன்றும் இந்த உலகில் பஞ்சமில்லை. நோய் வந்த பிறகு மருந்து, மாத்திரை என அல்லோலப்படுகிறோம். ஒரு வேளை இந்த நோய்கள், நமக்கு வருவதற்கு முன் கூட்டியே அறிந்து கொண்டால் எப்படி இருக்கும்? 

அப்படிபட்ட ஒரு ஆராய்ச்சியில் தான் வெற்றியை சுவைத்துள்ளார், இங்கிலாந்தை சேர்ந்த பிராட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் பார்பரா ஸ்டூவர்ட் .

ஒருவரின் உமிழ்நீரில் உள்ள மரபணுக்களை ஆராய்ச்சி செய்வதன் மூலம், பின்னாளில் அந்த நபருக்கு வரவிருக்கும் நோய்களை கண்டறியக்கூடிய முறையை பார்பரா கண்டுபிடித்துள்ளார்.  இந்த கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், ஒருவரின் உணவுப்பழக்கவழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இந்த மாற்றங்களை ஒருவர் விடாமல் கடைபிடிக்கும் பட்சத்தில் அவருக்கு, பின்னாளில் வரவிருக்கும் ரத்த அழுத்த நோய், இருதய நோய் உள்ளிட்ட பிரச்னைகளை வரவிடாமல் தடுத்துவிடலாம் என பார்பரா கூறுகிறார். 

நாம் வாழும் சூழல், முந்தைய உணவு பழக்கவழக்கங்கள், நம் பெற்றோர்களிடம் இருந்து நமக்கு கிடைத்துள்ள மரபணு குறிப்புக்கள் - இவை தான் நமக்கு எந்தெந்த உணவுகள் பிடிக்கும், பிடிக்காது என்பதை தீர்மாணிக்கின்றன. ஒருவருக்கு இட்லி பிடிக்கலாம், மற்றொருவருக்கு பிரியாணி பிடிக்கலாம், பலருக்கு மாமிச உணவுகளே பிடிக்காமல் கூட இருக்கலாம். பார்பராவின் ஆராய்ச்சி மூலம் ஒருவருக்கு தேவையான personalised nutrition என்று சொல்லப்படும் தனிப்பட்ட ஊட்டச்சத்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளமுடியும். மேலும் இதன் மூலம் நம் நாவிற்கு ஏற்ற சுவையான உணவுகளையும், நமக்கு வரவிருக்கும் நோய்களை தடுக்கும் ஆரோக்கியமான உணவுகளையும் தேர்தெடுத்த கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எச்சிலை ஆராய்ச்சி செய்து, எதிர்காலத்தை ஆரோக்கியமானதாக மற்றிக்கொள்ளும் தொழில்நுட்பம் இந்த நூற்றாண்டில் நமக்கு கிடைத்திருப்பது வரமாகவே பார்க்கப்படுகிறது. தங்களுக்கு ஏற்ற ஊட்டச்சத்து அடங்கிய ஆரோக்கியமான உணவுகளை அனைத்து மக்களும் தெரிந்துக்கொள்ளும் வகையில், அனைவருக்கும் இச்சேவை கிடைத்தால், எச்சில் தான் எதிர்காலம்’ என்ற கூற்று மிகையாகாது. 
 

கிரீன்லாந்தை விலை பேசும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

உலகின் மிகப்பெரிய தீவாக விளங்கும் கிரீன்லாந்தை விலைக்கு வாங்கலாமா என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முழுவதும் பனிப்பாறைகளால் சூழப்பட்டுள்ள கிரீன்லாந்து தீவானது, கனடாவின் வடகிழக்கில் அமைந்துள்ளது. 57,000 பேர் வசிக்கும் இத்தீவு டென்மார்க் நாட்டின் ஆளுகைக்கு கீழ் உள்ள பிரதேசமாகும். இதன் பரப்பளவு 2 மில்லியன் சதுர கிமீ ஆகும். பெயருக்கு ஏற்றார் போல கிரீன்லாந்து தீவு இல்லை என்பதே உண்மை. 85% அதிகமான அதன் பரப்பளவு 1.9 மைல் (சுமார் 3 கிமீ) அகலம் கொண்ட பனிப்பாறைகளால் சூழப்பட்டுள்ளது. உலகின் 10% நன்னீர் கிரீன்லாந்தில் உள்ளது.

கிரீன்லாந்து தீவினை அமெரிக்க அரசு விலைக்கு வாங்குவது குறித்து ஆலோசகர்களுடன் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கிரீன்லாந்து தீவை வாங்குவது அமெரிக்காவிற்கு பலன் தரும் என்று அரசு ஆலோசர்களால் நம்பப்படுகிறது. அமெரிக்காவின் வடக்கில் உள்ள Thule விமானதளம் கிரீன்லாந்தில் அமைந்துள்ளது. கிரீன்லாந்தின் இயற்கை வளமும், புவிசார் அரசியல் முக்கியத்துவத்தையும் உணர்ந்தே டொனால்ட் ட்ரம்ப் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபராவதற்கு முன்னர் டொனால்ட் ட்ரம்ப் பெயர் போன ரியல் எஸ்டேட் தொழிலதிபராக திகழ்ந்தார். அமெரிக்க அதிபர் ஆனதற்கு பின்னரும் அவர் தனது முந்தைய வேலைக்கு அவர் திரும்பியுள்ளதாக சமூல வலைத்தளங்களில் சிலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதனிடையே டென்மார்க்கைச் சேர்ந்த எம்.பிக்கள் சிலர் டொனால்ட் ட்ரம்பை கடிந்தும் வருகின்றனர்.

முன்னதாக 1945ம் ஆண்டில் அமெரிக்காவின் 33வது அதிபரான ஹாரி எஸ் ட்ருமென் இதே போன்று கிரீன்லாந்த் தீவை விலைக்கு வாங்க முயற்சித்தார். அப்போது அத்தீவிற்கு 100 மில்லியன் டாலர்கள் விலை பேசப்பட்டது. இருப்பினும் சில காரணங்களால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.