ஞாயிறு, 22 மே, 2016

”தேஜாமஹாலயா” - தாஜ்மஹாலின் இருண்ட பக்கங்கள்- வெளிவராத மர்மங்கள்..!




முகலாயமன்னர் ஷாஜகானால் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டபட்ட சமாதிதான் தற்போதைய உலக அதிசயங்களில் ஒன்றான ”தாஜ்மஹால்” என்று வரலாறு தெரிவிக்கிறது. ஆனால் தாஜ்மஹால் என்பது ”தேஜாமஹாலயா” என்றழைக்கப்பட்ட பழைய சிவன் கோவில்தான் என்கிற புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.



தாஜ்மஹால் குறித்து தகவல்கள் அனைத்தும் உலகை ஏமாற்றியுள்ளது. தாஜ்மஹால் மும்தாஜின் சமாதி அல்ல அது புராதான சிவன்கோயில் என்று ஆதாரங்களுடன் கூறுகிறார் இந்தியாவின் வடமாநில வரலாற்று பேராசிரியர் பி.என்.ஓக்.


முன்பு ”தேஜாமஹாலயா” என்கிற பெயரால் தாஜ்மஹால் அழைக்கப்பட்டுவந்தது என்று அவர் தெரிவிக்கிறார், ஜெய்ப்பூர் ராஜா ஜெய்சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக்கொண்டார் என்றும் ஷாஜகான் மன்னரின் சொந்த வாழ்க்கை குறிப்பான ”பாத்ஷாநாமாவில்”,ஆக்ராவில் மிகவும் அழகான மாளிகையை மும்தாஜின் உடலை அடக்கம் செய்கின்றமைக்கு தேர்தெடுத்தது குறித்து குறிப்புகள் உள்ளன என்றும் பேராசிரியர் கூறியுள்ளார். இந்தியாவின் வடமாநில வரலாற்று பேராசிரியர் பி.என்.ஓக்.

பாத்ஷாநாமாவில் பழமையான தாஜ்மாஹாலை ஒப்படைக்க கேட்டு மன்னர் ஷாஜகான், ஜெய்ப்பூர் மன்னர் ஜெய்சிங்கிற்கு ஆணை பிறப்பித்து உள்ள ஆவணம்.

tmm-page-of-badsha-namah-219x350


ஆதியில் சிவன்கோயிலாக இருந்ததை கையளிக்கச் சொல்லி ஷாஜகான் மன்னரால் ஜெய்சிங் ராஜாவிற்கு அனுப்பட்ட இரு ஆணைகள் இன்னும் பத்திரமாகவே உள்ளன என்றும்,கைப்பற்றி கொள்கின்ற கோயில்கள், மாளிகைகள் போன்றவற்றில் முகலாய மன்னர்கள் மற்றும் ராணிகளின் உடல்களைவழக்கமாக புதைத்து வந்துள்ளனர் . முகலாய மன்னர்கள் ஹிமாயூன், அக்பர், எத்மத்உத்தௌலா, சப்தர்ஜத் ஆகியோரின் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களை இதற்கு சான்றாக காட்டுகிறார் அந்த பேராசிரியர்.

தாஜ்மஹால் என்ற பெயரை எடுத்துக்கொள்கிற போது ஆப்கானிஸ்தான் முதல் ஆல்ஜீரியா வரையான எந்தவொரு இஸ்லாமிய நாட்டிலும் ”மஹால்” என்கிற பெயர் எந்த கட்டிடத்திற்கும் கிடையாது.மும்தாஜின் முழுபெயர் ”மும்தாஜ்உல்ஜமானி” ஆகும். மும்தாஜின் நினைவாக ஷாஜகான் சமாதி கட்டியிருந்தார் என்றால் மும்தாஜ் என்ற பெயரில் இருந்து மும் என்பதை நீக்கிவிட்டு தாஜ் என்பதை மட்டும் நினைவுச்சின்னத்திற்கான பெயரில் ஏன் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று பேராசிரியர் பி.என்.ஓக் கேள்வியை எழுப்பியுள்ளார்.


தாஜ்மஹாலின் உண்மையான வரலாற்றை மறைத்திட பிற்காலத்தில் புனையப்பட்ட பெயர்தான் மும்தாஜ்- -ஷாஜகான் காதல் கதை என்கிறார் நியூயார்க்கை சேர்ந்த பேராசிரியர் மார்வின்மில்லர்.அவர்தான் தாஜ்மஹாலின் மாதிரிகளை எடுத்து கார்பன் டேட்டிங் முறையில் தாஜ்மஹாலின் ஆயுளை கணித்தவர். மில்லரின் கருத்துப்படி தாஜ்மஹால் வயது 300க்கும் மேல் இருக்கும்,இதையும் பேராசிரியர் ஓக் ஆதாரமாக சொல்கிறார். ஐரோப்பிய நாட்டு முதல் சுற்றுலாப் பயணியான அல்பர்ட் மாண்டேஸ்லா என்பவர் 1638ம் ஆண்டு அதாவது மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ஆக்ரா வந்திருந்தார், இவரது பயண குறிப்புகளில் ஆக்ரா பற்றி விரிவாக ஏழுதப்பட்டுள்ளது. ஆனால் தாஜ்மஹால் கட்டப்படுவது சம்பந்தமாக எந்த குறிப்புகளும் அதில் இடம் பெற்வில்லை.

அதே சமயம் மும்தாஜ் இறந்து ஒருவருடத்திற்குள் ஆங்கிலேய பயணியான பீட்டர்மாண்டி ஆக்ரா வந்திருந்தார்.இவரது பயணக்குறிப்புகளில் தாஜ்மஹாலின் கலை நயம் குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இன்று சொல்லப்படுகிற வரலாற்றில் மும்தாஜ் இறந்து 20 வருடத்திற்கு பிறகல்லவா தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கிறது என இவற்றையும் ஆதாரங்களாக முன்வைக்கிறார் பேராசிரியர் ஓக்.



தாஜ்மஹாலின் பெரும் பகுதி பொதுமக்களுக்காக இன்றளவும் திறந்துவிடப்படவில்லை. இதற்கு காரணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று கூறப்படுகிறது. தாஜ்மஹாலின் உள்ளே தலையில்லாத சிவன் சிலையும்,பூஜைக்கு பயன்படுத்துகிற பொருட்களும் இருக்கின்றன என்று அடித்து கூறும் பேராசிரியர் ஓக், தாஜ்மஹாலின் கட்டிடகலை நுட்பங்களை பார்க்கும் போது அனைத்தும் இது ஒரு இந்துகோயிலுக்கு குறியது என்பதில் சந்தேகமில்லை என்கிறார்.



மும்தாஜ்
இத்தனை விபரங்களையும் பேராசிரியர் ஓக் ”தாஜ்மஹால் உண்மையான வரலாறு” என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கிறார். இதில் பல்வேறு சர்ச்சைகள் இருப்பதாக கூறி அரசியல் காரணங்களுக்காக இவரது புத்தகம் அன்றைய பாரதப்பிரதமர் இந்திராகாந்தி அரசால் தடைசெய்யப்பட்டது. தாஜ்மஹால் குறித்த உண்மைகள் வெளிவர வேண்டுமானால் ஐக்கியநாடுகள் சபையின் மேற்பார்வையில் சர்வதேச தொல்லியியல் நிபுணர்களை கொண்ட குழுவின் மூலமாக ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் பேராசிரியர் ஓக்.


இந்த சர்ச்சையை கிளப்பிய பேராசிரியர் ஓக் எனப்படும் புருசோத்தம் நாகேஷ்ஓக் 1917 ம் ஆண்டு மார்ச் 2 ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர்.தாஜ்மஹாலின் உண்மை வரலாறு உட்பட பல்வேறு ஆராய்ச்சி புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் கடந்த 2007 ம்ஆண்டு டிசம்பர் 4ம் தேதி மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 90.தாஜ்மஹால் குறித்த சர்ச்சையை கிளப்பிய பேராசிரியர் ஓக் மறைந்து விட்டாலும் சர்ச்சைகள் மட்டும் தொடர்ந்து கிளம்பிக்கொண்டுதான் இருக்கின்றன.

அதிரவைக்கும் உலக மர்மங்கள்

உலகத்தில் நமக்கு தெரியாத விடயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அப்படிப்பட்ட விடயங்களை நமக்கு தெரியப்படுத்த/ அறிவியல் ஆய்வு  நடத்தி அதனை விளக்க விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்களா என்றால், இன்னும் இல்லை என்பது உண்மை! அப்படி என்றால் எல்லாம் வல்ல அறிவியலால் கூட புரிந்து கொள்ள முடியாத மர்மங்கள் நமக்கு மத்தியில் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.  உதாரணமாக பேய்/பிசாசு, ஆவி அப்படி நிறைய சொல்லிகொண்டே போகலாம். 

இப்போது நாம் பார்க்க போவது, அந்த மாதிரி மனிதனால்/அறிவியலால் கூட விளக்க முடியாத சில அமானுஷ்ய நிகழ்வுகள்/சக்திகளை பற்றித்தான்! சரி, அப்படியெனின் முதலில் மனிதனிலிருந்தே தொடங்குவோம்….

உடல்-மூளை தொடர்பு


நம் மூளை எப்படி நமது உடலைப் பாதிக்கிறது என்னும் விவரத்தை, இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மருத்துவத்துறை நமக்கு விளக்க தொடங்கி இருக்கிறார்கள். உதாரணமாகச் சொல்லவேண்டும் என்றால், சில நோய்களுக்கு மாத்திரை என்று பிரத்தியேகமாக தயாரித்துக் கொடுக்காமல், ஒரு இனிப்பு மாத்திரையை, நோயைக் குணப்படுத்தும் என்றும் சொல்லி, நோயாளிகளுக்கு கொடுத்தால் மட்டுமே கூட சில நோய்களை குணப்படுத்த முடியும் என்பது மருத்துவத்துறையில் ஒரு விளங்க முடியாக் கவிதை போலவே வெகு காலமாக இருந்து வருகின்றது! இதற்கு ஆங்கிலத்தில் “placebo effect”, என்று சொல்கின்றோர்கள். ஆக, இது ஒரு நம்பிக்கை மட்டுமே. இருந்தாலும் நோய் குணமடைகிறது. அது எப்படி? அது யாருக்கும் தெரியாது? அதாவது, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்வது எப்படி என்று எந்த புதுயுக மருத்துவத்தாலும் இதுவரை வரையறுத்துச் சொல்ல முடியவில்லை.




அமானுஷ்ய சக்தி/ ESP 

உலகத்தில் மனிதனைப் பற்றி மனிதனாலேயே புரிந்துகொள்ள முடியாத விடயங்களிலேயே மிக முக்கியமானதுதான் இந்த அமானுஷ்ய சக்தி/இ.எஸ்.பி என்பது. அதாவது, ஐம்புலன்களையும் தாண்டி உலகத்தை உணரக்கூடிய ஒரு சக்தி (Extra-sensory perception ESP). ஆங்கிலத்தில் “Intuition” என்று சொல்லக்கூடிய, எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்கூட்டியே தெரிந்து சொல்வது எப்படி என்பது இதுவரை யாருக்கும் புரியாத, ஆனால் நம் எல்லோரையும் அதிர வைக்கும் ஒரு மர்மம்! இதில் செய்த ஆய்வுகள் இதுவரைக்கும் ஒரு தெளிவான பதிலை சொல்லவே இல்லை. குழப்பமான, புரியாத ஆய்வு முடிவுகளையே கொடுத்திருக்கிறது இ.எஸ்.பி பற்றிய ஆய்வுகள் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இன்னும் சிலர், இந்த மாதிரி அமானுஷ்ய சக்தி பற்றிய ஆய்வு எப்போதும் ஒரு தெளிவான முடிவைத் தராது, மனிதனிற்கு அப்பாற்பட்டது என்று சொல்கிறார்கள். அப்ப்டியானால், கடைசி வரைக்கும் இது ஒரு புரியாத புதிராகவேதான் இருக்குமா? தெரியவில்லை, காலம் தான் பதில் சொல்லவேண்டும்.


இறப்பை ஒத்த அனுபவங்கள்இறப்புக்குப் பின் வாழ்வு

நம்மில் சில பேர், சில சமயத்தில் சாகிற நிலைக்குப் போய் பிழைத்துக் கொள்வதுண்டு. இதைப்பற்றி சொல்லும்போது “செத்துப் பிழைத்தவன்” என்று சில பேர் சொல்வதுண்டு. அதாவது சாகும் தருவாய் வரைக்கும் சென்று பின் அதிர்ஷடவசமாக பிழைத்துக்கொள்வார்கள். ஆங்கிலத்தில் “Near-Death Experiences”, என்று சொல்கிறார்கள். இந்த மாதிரி அனுபவம் இருக்கிறவர்கள், அந்த அனுவபம் பற்றி விவரிக்கும்போது, “ஏதோ பாதாளத்துக்குள்ளே போன மாதிரி இருந்தது, உடனே பிரகாசமான வெளிச்சத்துக்குள் வந்து, சொந்த பந்தங்களோட இணைந்த மாதிரி ஒரு உணர்வு” என்றெல்லாம் சொல்லக் கேட்டிருப்போம் இல்லையா? அதாவது, கல்லறையையும் தாண்டிய ஒரு உணர்வு/வாழ்வு? இதுமாதிரி கதைகள் பல நம்மிடையே இருந்தாலும் இதுவரையில் யாரும் தகுந்த ஆதாரங்களோடு அப்படியொரு நிகழ்வை உறுதிப்படுத்தவில்லை என்பதே உண்மை. இது ஒருபுறமிருக்க, இந்த மாதிரி ஆய்வுகள் செய்யும் விஞ்ஞானிகளோ, இவையெல்லாம் பாதிக்கப்பட்ட மூளையின் ஒரு வித உணர்வே தவிர இதில் உண்மை என்று எதுவும் இல்லை  என்று சொல்கிறார்கள்.


UFOs


UFOs என்றால் “அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்” (Unidentified Flying Objects). இத்தகைய பொருட்களை பலர் பார்த்திருக்கிறார்கள் என்பது உண்மை. அதாவது, சில சமயம் வானத்தில் திடீர் என்று எதாவது ஒன்று பறக்கிற மாதிரி தெரியும், அது விண்கற்களா/ஏவுகணைகளா என்று அடையாளம் சொல்ல முடியாது. அதேசமயம், இது வேற்றுகிரக மனிதனுடைய வேலையாகக் கூட இருக்கலாம் என்பது இன்னொரு விடயம். என்னதான் கூர்மையா கவனித்து ஆய்வு பண்ணினாலும் இதுவரைக்கும் இது என்ன என்றே தெரியாமல்தான் இருக்கிறோம்.


தேஜா வு (Deja vu)

“தேஜா வு”, என்றால் ப்ரெஞ்சு மொழியில் “மூன்கூட்டியே பார்த்தது” என்று அர்த்தமாம். அதாவது, இதுவரைக்கும் செல்லாத ஒரு இடத்திற்கு சென்றுவிட்டு வந்த மாதிரி ஒரு உணர்வைத்தான் இப்படி சொல்கிறார்கள்! உதாரணத்துக்கு, ஒரு பெண்  ஒரு வெளிநாட்டுக்கு முதல் முதலில் சென்று, ஒரு கட்டிடத்திற்குள்ளே அடியெடுத்து வைக்கிறார்கள். ஆனால் அவர்கள், அவர்களது வாழ்க்கையில் முதல்முதலில் பார்க்கின்றவையெல்லாமே முன்பே அவர்கள் பார்த்து, அனுபவித்தது மாதிரி ஒரு உணர்வு வருகின்றது. இதுதான் “தேஜா வு” என்கிறார்கள். சில விஞ்ஞானிகள் கூற்றுப்படி, தேஜா வு-வுக்கு காரணம் முன் ஜென்ம நினைவுகள் என்று சொன்னாலும், இதுவரைக்கும் இந்த உளவியல் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒரு மர்மமாகவேதான் இருக்கிறது.


பேய்/பிசாசு/ஆவி

நம் பாரம்பரியத்தில், கலாச்சாரத்தில் ஊறிப்போன ஒரு விஷயம்தான் இந்த பேய், பிசாசு, ஆவி எல்லாம். கண்டிப்பாக நாம் எல்லாரும் அப்பா/அம்மா, பாட்டி/தாத்தா இப்படி நம்ம குடும்பத்தச் சேர்ந்த ஒருத்தர் சொல்லக் கேட்ட ஒரு பேய் கதை கண்டிப்பாக இருக்கும். மேலே சொன்னது மாதிரி உலகத்தின் எல்லா மூலைகளிலும் இருந்தும் இந்த மாதிரி கதைகள் நிறைய சொல்லப்பட்டாலும், சில புகைப்படங்கள் கூட எடுக்கப்பட்டு இருந்தாலும், இதுவரைக்கும் யாரும் “பேய்” என்ற ஒன்று  இருக்கு என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கவேயில்லை. அது ஒரு அழகிய மர்மமாகவேதான் இருக்கிறது.

மர்மமாக மறையும் மனிதர்கள் (Mysterious Disappearances)

பொதுவாக மனிதர்கள் தொலைந்து போவதும், கொஞ்ச காலம் கழித்து திரும்ப கிடைப்பதும்/விபத்தில் இறந்து போவதும் உலகத்தில் சாதாரணமாக நடக்கும் ஒன்று. ஆனால் இப்போது நாம் பார்க்க போகும் விடயம் அப்படியில்லை. நம்முடன் இருந்துகொண்டிருக்கும் ஒருத்தருக்கு திடீர் என்று மறைந்து போவது எப்படி சாத்தியம்? அது எப்படி என்று தெரியாது, ஆனால் இது மாதிரி நிறைய நடக்கிறது. தொலைந்து போனவர்கள் கிடைத்தால் பறவாயில்லை, ஆதாரம் எதுவுமே இல்லாமல், தொலைந்து போறவர்களை பற்றி விசாரணை பண்ணாலும் அவங்க கிடைப்பதில்லை எனும் போது, அது ஒரு மர்மம்தானே?


ஆறாவது அறிவு(Intuition)

நம் எல்லாருக்குமே “உள்ளுணர்வு” என்ற ஒன்று இருக்குதாம். அது ஆறாவது அறிவோ இல்ல வெறும் உள்ளுணர்வோ, எதாவது ஒரு தருணத்தில் நாம் எல்லோரும் அதை உணர்ந்திருப்போம்தானே? அந்த மாதிரி உள்ளுணர்வுகள் சில நேரங்களில் பொய்த்துப் போனாலும், பெரும்பாலான நேரங்களில் உண்மையாவதை உணர்ந்து/கேள்விப்பட்டிருப்போம். உதாரணத்துக்கு, ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று நாம் நினைத்து முடிக்கிறதுக்குள்ளே ஒரு விபத்து நடந்து விடும். இவை எல்லாவற்றிற்கும் காரணம், நமது ஆழ்மனதில் நம்மை சுற்றி நடக்கும் விடயங்கள் பதிந்துபோய், அதில் இருந்து நமக்கே தெரியாமல் நாம், இப்படி நடக்கப்போகிறது என்று உணர்கிறோம். அது நமக்கு “எப்படி”, தெரிகிறது, “ஏன்” உணர்கிறோம் என்கிற கேள்விக்கெல்லாம் இன்னும் பதில் தெரியவில்லை.



மனிதன் போன்ற மிருகம் (Bigfoot)


பல வருட காலமாக அமெரிக்காவில், பெரிய, அடர்த்தியான முடியுடன், மனிதன் மாதிரியே இருக்கிற “Bigfoot”, என்கிற மிருகத்தைப் பார்த்ததாக நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். அப்படி அந்த மாதிரி மிருகங்கள் இருந்து, இனப்பெருக்கம் செய்தால் குறைந்தது ஒன்றையாவது, இல்லை என்றால் அதனுடன் இதுவரைக்கும் ஒரு பிணத்தையாவது கண்டுபிடித்திருக்கவேண்டுமே? ஆனால் அவ்வாறு ஒன்றையும் இதுவரைக்கும் கண்டுபிடிக்கவில்லை, வேட்டையாடவும் இல்லை என்பதுதான் உண்மை. வெறும், கண்ணால் கண்ட சாட்சி, புரியாத போட்டோ மட்டும் வைத்துக்கொண்டு அந்த மாதிரி ஒரு மிருகம் இருக்கிறது என்று சொல்வதில் எந்த யதார்த்தமும் இல்லை என்று சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.


டாவோஸின் முனுமுனுக்கும் பாடல் (The Taos Hum) 

அமெரிக்காவில், நியூ மெக்சிகோவில் இருக்கும் ஒரு சின்ன நகரத்துக்கு பெயர்தான் டாவோஸ் (Taos). இந்த நகரத்தைச் சேர்ந்த சில மக்கள் பல வருடமாக, யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு பாடலை முனுமுனுக்கிற மாதிரியே தூரத்தில் ஒரு சத்தம் கேட்டு கொண்டு இருக்கிறதாகச் சொன்னார்கள். ஆனால் சில மக்கள்தான் இதைச் சொல்கிறார்களே தவிர, மற்றவர்கள் இது ஏதோ ஒலி அலைகளினால் ஏற்படும் ஒரு சத்தம்தானே தவிர, வித்தியாசமான முனுமுனுப்பு எல்லாம் இல்லை என்கிறார்கள். எது எப்படியோ, அது என்ன சத்தம் என்று இதுவரைக்கும் யாராலையும் உறுதியாச் சொல்லமுடியவில்லையாம்.

புதன், 16 மார்ச், 2016

இதுதான் அமுக்குவான் பேய்

இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது,
யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல்
இருக்கும்.
உங்களால் கண்ணைத் திறக்க முடியாது.
கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி,
திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும்
திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம்
கழித்துத்தான் உங்களால் எதுவும்
செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும்
அருகில் இருக்கமாட்டார்கள்.



என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான்
அமுக்குவான் பேய். உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமானபேய் இல்லை என்றாலும், இதுவும்
ஒரு முக்கியமான பேயாக புராணங்களில் கூறப்படுகிறது. பொதுவாய்
அமுக்குவான் பேய்கள் மற்ற பேய்கள் போல்
புளியமரத்திலோ வேப்பமரத்தின்
உச்சியிலோ இருக்காது. பூச்சிகளின்
இராஜாவான......... என்றெல்லாம்
சுவாரஸ்யமாக த்ரில்லாக கதை எழுத ஆசைதான்
ஆனால் அது உண்மை இல்லையே,



என்ன செய்வது?
நம்மூரில் அமுக்குவான் பேய்
என்று சொல்லப்படுவது உண்மையில் தூக்க
பக்கவாதம் என்கிற கோளாறு.

சில சமயம் உங்கள் மூளை விழித்துக்கொண்ட
பிறகும் உங்கள் உடல் தூங்கிக் கொண்டே இருக்கும்.
அதனால்தான் உங்களால் எழவோ, பேசவோ, கண்களைத் திறக்கவோ முடியாது. இந்தக்
கோளாறு தூக்கத்தில் ஏற்படும் இடையூறினால்
இது வருகிறது.
துயில் மயக்க நோய், ஒற்றைத்
தலைவலி, ஏக்க நோய்கள், மற்றும் தூக்கத்தில்
மூச்சுத் திணறல் ஆகிய கோளாறுகளுக்கும்
இதற்கும் தொடர்புகள் உண்டு.

இதை தனிமைத் தூக்க பக்கவாதம், தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள்.
இதில் தனிமைத் தூக்க பக்கவாதம்
என்பது ஒரு நபரின் வாழ்க்கையில்
எப்போதாவது இரு நிமிடங்களுக்கும் குறைந்த
நேரத்தில்தான் நிகழும். இது ஒன்றும்
பிரச்னைக்குரியது அல்ல. தொடர் தனிமைத் தூக்க
பக்கவாதம் பேருக்கு ஏற்றபடி அடிக்கடி ஏற்படும்.



மேலும் இது ஒரு மணி நேரம் வரைக்கும் கூட
இருக்கும். சில சமயம் அந்தரத்தில் பறப்பது போல்கூட
தோன்றும். இதற்கு மருத்துவர்களிடம்
(மந்திரவாதிகளிடம் அல்ல) சென்றே ஆகவேண்டும்.
துயில் மயக்க நோய் உடையவர்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களில் 50 சதவீதம்
பேருக்கு இப்பிரச்னை ஏற்படும்
என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


ஆனால், இன்றும் பெரும் அளவில் மக்கள்
இது ஏதோ பில்லி சூனியத்தின்
வேலை என்று நினைத்துக்
கொண்டு மந்திரவாதிகளைத்
தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்த
மாதிரி மூட நம்பிக்கைகளில் இருந்து மக்கள்
விடுபடும் காலம் என்றுதான் வருமோ?



கும்நாமி பாபாவின் கருவூலத்தில் நேதாஜியின் பெற்றோர் புகைப்படங்கள்: நேதாஜி 1985 வரை உயிருடன் இருந்தாரா?

இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், இந்திய வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றவர்,  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இவர் பற்றிய மர்மங்களையும் வாழ்க்கையையும் அறிவதற்கு மிகவும் ஈடுபாட்டுடன் தேடலில் உள்ளவன் நான். இன்றைய தினம் மாலைமலர் பத்திரிகையில் வந்த விடயங்களை எனது கருடன் பக்கத்தில் பகிர்கிறேன்.
கும்நாம் பாபா என்ற பெயரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பைசாபாத் நகரில் 1985-ம் ஆண்டுவரை உயிரோடு வாழ்ந்ததாக நம்பத்தகுந்த தகவல்களும், அதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

இந்திய தேசிய ராணுவம் என்ற போராளிகள் பட்டாளத்தை உருவாக்கி, இந்திய விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தி, வெள்ளையர் அரசுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். 

இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவில் இருந்து வெளியேறி, ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்ற சுபாஷ் சந்திர போஸ், பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து போரிட்ட ஜெர்மனி படைகளுடன் சேர்ந்து இந்திய விடுதலைக்காக போராடினார். 

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி போர் விமானத்தில் ஜப்பான் நோக்கி அவர் சென்றுக்கொண்டிருந்த போது, இயந்திரக்கோளாறு காரணமாக விமானம் மலை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், நேதாஜி பலியாகி விட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இவரது மரணம் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த 1956ம் ஆண்டு ஷா நவாஸ் கமிட்டியும், 1999ம் ஆண்டு முகர்ஜி கமிஷனும் அமைக்கப்பட்டது. 2005ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட முகர்ஜி கமிஷன் அறிக்கையில், 1945ம் ஆண்டு நேதாஜியின் விமானம் எரிந்து விழுந்ததாக கூறப்படும் இடத்தில் அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. 

கடந்த 70 ஆண்டுகளாக நிலவி வரும் நேதாஜியின் மரணம் தொடர்பான மர்மமுடிச்சு, இதுவரை அவிழ்க்க முடியாத கல்முடிச்சாகவே இருந்து வருகிறது. 

நேதாஜி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் தலைமையக அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த 64 கோப்புகளை சமீபத்தில் மம்தா பானர்ஜி வெளியிட்டார். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து பணியாற்றி, பின்னர், காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசிவந்த டெப்நாத் தாஸ் என்பவரைப் பற்றிய போலீசாரின் உளவுத்தகவல்கள் மேற்கண்ட 64 கோப்புகளில் 22-ம் எண் கோப்பில் காணப்படுகிறது.

அவரது கருத்தின்படி,1948-ம் ஆண்டுவரை சீனாவின் மன்சூரியா பகுதியில் நேதாஜி உயிருடன் வாழ்ந்ததாகவும், இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் மூன்றாம் உலகப்போர் வெடிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன் இந்தியா மற்றும் சர்வதேச அரசியலின் போக்கை அவர் உன்னிப்பாக கவனித்து வந்ததாகவும் தெரியவந்தது.

இதற்கிடையில், நேதாஜியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்களில் ஒருவரான சைபுத்தீன் என்கிற நிஜாமுதீன் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆசம்கர் மாவட்டத்தின் டக்கோவா கிராமத்தில் தற்போது வசித்து வருகிறார். தனக்கு 115 வயதாவதாக கூறும் நிஜாமுதீன், நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களில் ஒருபகுதி வெளியாகியுள்ள நிலையில் கடந்த ஆண்டில் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்திருந்தார்.

‘கடைசியாக நேதாஜியை 1947-ம் ஆண்டு நான் சந்தித்தேன். அவரை ஒரு காரில் அழைத்துவந்து, பர்மாவின் சித்தான் நதியில் தயாராக இருந்த படகில் ஏற்றி வழியனுப்பி வைத்தோம். மிகவும் குறுகலான அந்த நதி, இந்திய எல்லையில் உள்ள கடலில் போய் கலக்கக் கூடியது. அங்கிருந்து அவரை எங்கோ அழைத்துச் செல்வதற்கு கடலில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் தயார் நிலையில் காத்திருப்பதாக கூறப்பட்டது. 

அவர் படகில் ஏறிச்சென்ற சில நிமிடங்களில், நேதாஜியை நாங்கள் அழைத்து வந்த கார் மீது அங்கு வந்த ஒரு போர் விமானம் குண்டு வீசித் தகர்த்துவிட்டு சென்றது. நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். என்னுடன் இருந்த சிலர் மரணம் அடைந்தார்கள்’ என்று அந்த பேட்டியின்போது அவர் தெரிவித்திருந்தார்.

1945-ம் ஆண்டு நேதாஜி இறந்து விட்டதாக அவரது வரலாற்றின் சந்தேகத்துக்குரிய பகுதி கூறுகின்றதே..? நீங்கள் 1947-ம் ஆண்டில் அவரை சந்தித்ததாக சொல்கிறீர்களே..? என்ற நிருபரின் கேள்விக்கு ‘இந்தியன்’ தாத்தா பாணியில் ஒரு மர்மப் புன்னகை உதிர்த்தபடி, பதில் அளித்த நிஜாமுதீன், ‘ஆமாம், அவர் மரணம் அடைந்து விட்டதாக வானொலியில் அப்போது வாசிக்கப்பட்ட செய்தியை எங்களுடன் சேர்ந்து அவரும் கேட்டுக்கொண்டிருந்தார்’ என்று தெரிவித்திருந்தார்.

அவரது மரணச் செய்தியை அவரே வானொலியில் கேட்டதாக வந்த திடுக்கிடும் தகவலையடுத்து, 1952-ம் ஆண்டு வரை சர்தானந்தா முனிவராக வாரணாசி குகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்ந்ததாக மற்றொரு தகவலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதவாக்கில் வெளியானது.

மத்திய அரசின் உளவுத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற ஷியாமாச்சரண் பாண்டே என்பவர், தனது தந்தையான கிருஷ்ணகாந்த் பாண்டேவின் டைரி குறிப்புகளில் கண்ட சில விபரங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

அந்த குறிப்புகளின் அடிப்படையில் நேதாஜி 1945-ம் ஆண்டு இறந்ததாக கூறப்படும் வரலாறு தவறானது என அவர் சுட்டிக் காட்டியிருந்தார். 1952-ம் ஆண்டுவரை நேதாஜி வாரணாசியில் உள்ள ஒரு குகையில் சர்தானந்தா முனிவர் என்ற பெயரில் ரகசியமாக வாழ்ந்து வந்ததாகவும் ஷியாமாச்சரண் பாண்டே மத்திய அரசிடம் ஆதாரத்துடன் தெரிவித்தார்.

இதற்கு ஆதாரமாக நேதாஜிக்கும் தனது தந்தை கிருஷ்ணகாந்த்துக்கும் இடையில் நடைபெற்ற கடித தொடர்புகளையும் அவர் ஆவணப்படுத்தி இருந்தார்.

2-12-1951 அன்று கங்கை-மோமதி ஆற்றங்கரை பகுதியில் நைந்துப்போன உடையில் இருந்த ஒரு முனிவரை எனது தந்தை சந்தித்தார். காசிபூரில் உள்ள பஹுரி பாபா ஆசிரமத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த அந்நபர், எனது தந்தையிடம் இன்றிரவு இந்த பகுதியில் தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்ய முடியுமா? என்று கேட்டுள்ளார்.

உடனடியாக அவருக்கு ஒரு கம்பளியை கொடுத்த எனது தந்தை கிருஷ்ணகாந்த், நீங்கள் விரும்பும்வரை இங்கே தங்கியிருக்கலாம் என தெரிவித்துள்ளார். இதற்கு ஒப்புக்கொண்ட அந்த முனிவர், நான் யார் கண்களிலும் படாமல் வசிக்கக்கூடிய ஒரு தனிஇடத்தை ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, வாரணாசி-காசிபூர் சாலையில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காத்தி என்ற இடத்தின் அருகே மூங்கில்களினால் உருவாக்கப்பட்ட ஒரு குகைக்குள் 14-1-1952 சங்கராந்தி தினத்தன்று அந்த முனிவர் குடியேறினார். அந்த குகையில் அவர் சிலகாலம் தங்கியிருந்தார். அப்போது, மிக பிரபலமாக விற்பனையாகிவந்த ஒரு ஆங்கில நாளிதழை அவர் அன்றாடம் விரும்பி படித்தார்.

அந்த மூங்கில் குகையில் ஒரு புதிய முனிவர் தங்கியுள்ளதை அறிந்த உள்ளூர் மக்கள் அவரது அருளைப்பெற குகையை நோக்கி வர ஆரம்பித்தனர். ஒரேயொரு நிபந்தனையின் பேரில் அவர்களில் சிலரை நேதாஜி சந்தித்துள்ளார். தேசிய விடுதலைப் படை ராணுவத்தை உருவாக்கிய நேதாஜியின் ஜாடையை ஒத்துள்ள தன்னிடம் நேதாஜி தொடர்பாக யாரும், எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என்பதே அந்த நிபந்தனை.

அந்த முனிவரைப் பற்றிய செய்தியை இரு உள்ளூர் பத்திரிகைகள் அப்போது வெளியிட்டிருந்தன. இதையடுத்து, காத்தி குகையில் இருந்து தனது இருப்பிடத்தை காலி செய்த அவர், பிப்ரவரி மாதம் 14-ம் தேதி விந்தியாச்சல மலைப்பகுதியை நோக்கி இடம் பெயர்ந்தார் என கிருஷ்ணகாந்த் பாண்டேவின் டைரி குறிப்புகளில் கண்ட ஆதாரங்களை சுட்டிக்காட்டிய ஷியாமாச்சரண் பாண்டே, பிரதமர் மோடியின் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

நேதாஜி சொந்த நாட்டிலேயே தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய முக்கிய காரணமும் இருந்தது. இந்தியாவுக்கு விடுதலை அளித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், சர்வதேச போர்க்குற்ற உடன்படிக்கையின்படி, நேதாஜி உயிருடன் கிடைத்தால் அவரை பிரிட்டைன் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது.

அந்த நிலையில், அப்போது யார் கண்களிலாவது பட்டால், மேற்கண்ட நிபந்தனையின்படி, அந்நாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நேதாஜியை கைது செய்து பிரிட்டைன் ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதை தவிர்க்கவே அவர் முனிவர் வேடத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டிய அவசியம் ஏற்பட்டது, என தெரியவந்தது. 

இதற்கிடையே, உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் இரட்டை நகரமான அயோத்தி மற்றும் பைஸாபாத்தில் சுமார் 15 வருடங்களாக சுற்றிக் கொண்டிருந்தவர் பகவான்ஜி. பார்ப்பதற்கு ஒரு சாதுவை போல் தோற்றமளித்த அவர் கோயில்களுக்கு அடிக்கடி செல்லாதவராக இருந்திருக்கிறார். தோற்றத்தில் நேதாஜியை போல் இருந்தவரது நடவடிக்கைகள் மிகவும் சந்தேகத்திற்குரியதாக இருந்தது. இதனால், அவரை அங்குள்ள மக்கள் 'கும்நாமி (காணாமல் போன) பாபா' என அழைத்தனர்.

18-9-1985 அன்று அவர் இறந்தபின்னர், அயோத்தியின் சரயு நதிக்கரையில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. பிறகு அவர் தங்கியிருந்த அயோத்தியின் ராம்பவனில் இருந்த அவரது உடமைகளை சோதனையிட்டபோது பகவான்ஜி எழுதிய பல கடிதங்கள் கிடைத்தன. இதை தேசிய குற்றவியல் மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வு மையத்தின் முன்னாள் கூடுதல் இயக்குநரான பி.லால் ஆய்வு செய்தார். அவை நேதாஜியின் கையொப்பத்துடன் ஒத்துப்போவதாக முன்னர் கூறி இருந்தார்.

இந்நிலையில், மாவட்ட கருவூலத்தில் பாதுகாத்து வைக்கப்படிருந்த கும்நாம் பாபாவின் உடமைகளை நேதாஜியின் குடும்பத்தார் தற்போது பெற்றுள்ளனர். அந்த டிரங்க் பெட்டியை நேற்று திறந்துப் பார்த்தபோது, அதில் நேதாஜி தனது மனைவி மகளுடன் காணப்படும் ஒரு புகைப்படமும், இதுவரை யாருமே கண்டறியாத மற்றொரு அபூர்வ புகைப்படமும் கிடைத்துள்ளது. 

அந்த அபூர்வ புகைப்படத்தில் நேதாஜியின் பெற்றோரான ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி போஸ் ஆகியோர் காணப்படுகின்றனர்.

அவர்களுடன் சுதிர் சந்திரபோஸ், சதிஷ் சந்திரபோஸ், சரத் சந்திரபோஸ், சுரேஷ் சந்திரபோஸ், சுனில் சந்திரபோஸ், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் நின்றபடி காணப்படுகின்றனர். நடுவரிசையில் நேதாஜியின் பெற்றோரான ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி போஸ் ஆகியோர் தங்களது மூன்று மகள்களுடன் அமர்ந்த நிலையில் உள்ளனர்.

இதுதவிர, இந்திய விடுதலைக்காக நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்துப் போரில் ஈடுபட்ட அவரது உளவுத்துறை மூத்த அதிகாரியான பகிட்ரா மோஹன் மற்றும் சுனில் காந்த் குப்தா ஆகியோர் துர்கா பூஜை மற்றும் நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி மாதம் 23-ம் தேதி ஆகிய நாட்களில் முன்னர் அனுப்பியிருந்த வாழ்த்து தந்திகள் போன்றவையும் அந்த பெட்டியில் காணப்படுகிறது.

இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது ‘சர்தானந்தா முனிவர்’ மற்றும் ‘கும்நாம் பாபா’ என்ற புனைப்பெயர்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நமது நாட்டின் பலபகுதிகளில் 1985-ம் ஆண்டுவரை வாழ்ந்திருப்பதாக யூகிக்க முடிகிறது, அல்லவா..?

--நன்றி மாலைமலர்.com--

திங்கள், 29 பிப்ரவரி, 2016

யார் இந்த யூதர்கள்? – ஒரு வரலாறு

“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது.
19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான், சியோனிச அரசியல் அமைப்பு உருவானது. அவர்களது அரசியல் ஒரு மத நூலான பைபிளை அடிப்படையாக கொண்டிருந்தது. (யூத மதத்தவரின் புனித நூலான “தோரா”, கிறிஸ்தவர்களால் பைபிளில் “பழைய ஏற்பாடு” என்ற பெயரில் இணைக்கப்பட்டது.)
பைபிளில் வரும் சரித்திர சம்பவங்கள் போன்று தோற்றமளிக்கும் கதைகள், புராண-இதிகாச தரவுகளை விட சற்று தான் வேறுபடுகின்றது. சரித்திரம் என்பது, ஒரு சம்பவம் நடந்தாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட வேண்டிய தேவை உள்ள ஒன்று. இல்லாவிட்டால் அவை வெறும் புராண-இதிகாச கதைகள் என்ற வரையறைக்குள் தான் வரும்.
சில உண்மைகள் இருக்கலாம், சம்பவங்கள் ஒன்றில் வேறு இடத்தில், வேறு பெயரில் நடந்திருக்கும், அல்லது மிகைப்படுதப்பட்டவையாக இருக்கலாம். இல்லாவிட்டால் அப்படியான ஒன்று நடந்திருக்கவே வாய்ப்பில்லாத, கற்பனைக்கதையாகவும் இருக்கலாம். சியோனிஸ்டுகளுக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கறை இல்லை. பைபிளின் படி தமது தாயகமான இஸ்ரேல், அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தில் இருப்பதாக நம்பினர். பைபிள் என்ற மத நூலை, தமது இயக்கத்திற்கான அரசியல் தத்துவார்த்த நூலாக மாற்றினார்.
பாலஸ்தீனத்தில் (அதாவது தமது முன்னோரின் தாயகத்தில்) சென்று குடியேறுவதற்காக உலகம் முழுவதும் யூத முதலாளிகளிடம் நிதி சேர்த்தனர். ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் தான், பாலஸ்தீனத்தில் சென்று குடியேற முன்வந்தனர். (ரஷ்ய பேரரசர் சார் ஆட்சிக்காலத்தில் நடந்த, யூதர்களுக்கெதிரான “பொக்ரொம்” என்ற இனப்படுகொலை ஒரு காரணம்.) சியோனிச அமைப்பு சேகரித்த நிதியைக் கொண்டு, பாலஸ்தீன நிலவுடமையாளரிடம் நிலங்களை வாங்கி குடியேறினர்.
புதிதாக உருவான யூத கிராமங்கள் கூட்டுறவு விவசாய அடிப்படையில் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டன. இரண்டாம் உலக யுத்தம் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில், பெருமளவு யூதர்கள், கப்பல் கப்பலாக பாலஸ்தீனா செல்வதை, பிரிட்டன் விரும்பவில்லை. அதனால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப் பட்டன. அப்போது பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்கள் பயங்கரவாத குழுக்களை உருவாக்கி, பிரிட்டிஷ் இலக்குகளை தாக்கினர்.
ஜெர்மனியில் ஹிட்லரின் யூத இனப்படுகொலையும், இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளின் வெற்றியும், உலக வரைபடத்தை மாற்றியது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை உருவாக்க பிரிட்டனும், ஐக்கிய நாடுகள் சபையும் ஒப்புக் கொண்டன. சியோனிஸ்டுகளின் இஸ்ரேலிய தாயகக் கனவு நிஜமானது. அவர்கள் எழுதி வைத்த அரசியல் யாப்பின் படி, உலகில் எந்த மூலையில் இருக்கும் யூதரும், இஸ்ரேலின் பிரசையாக விண்ணப்பிக்கலாம்.(பூர்வகுடிகளான பாலஸ்தீன அரேபியருக்கு அந்த உரிமை இல்லை).
அதன் படி, ஐரோப்பாவில் வசித்த யூதர்கள் மட்டுமல்ல, ஈராக், யேமன், மொரோக்கோ போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் வசித்த யூதர்களும் இஸ்ரேலில் வந்து குடியேறுமாறு ஊக்குவிக்கப் பட்டனர். பெரும் பணச் செலவில், அதற்கென பிரத்தியேகமாக அமர்த்தப் பட்ட வாடகை விமானங்கள், லட்சக்கணக்கான யூதர்களை இஸ்ரேல் கொண்டு வந்து சேர்த்தன. இந்தியா, கேரளாவில் இருந்தும் சில ஆயிரம் யூதர்கள் சென்று குடியேறினர்.
சியோனிஸ்டுகள் கண்ட கனவு நிதர்சனமானாலும், இஸ்ரேல் என்ற தாயகத்தை கட்டியெழுப்ப தேவையான மனிதவளம் இருந்த போதும், வேண்டிய நிதி வழங்க யூத பெரு முதலாளிகள் மற்றும் (குற்றவுணர்வு கொண்ட) ஜேர்மனி இருந்த போதும், ஒரேயொரு குறை இருந்தது. இஸ்ரேல் என்ற தாயகக் கோட்பாட்டின் நியாயவாத அடிப்படை என்ன? பைபிளை தவிர வேறு எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இன்றைய விஞ்ஞான உலகில் ஒரு மத நூலை ஆதாரமாக காட்டி யாரையும் நம்பவைக்க முடியாது. சரித்திரபூர்வ ஆதாரங்கள் தேவை.
பைபிளில் எழுதியிருப்பதெல்லாம் உண்மை என்று நம்பும் இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், அவற்றை நிரூபிக்கும் நோக்கில், சரித்திர ஆசிரியர்களையும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும், மொழியியல் அறிஞர்களையும் பணியில் அமர்த்தினர். இஸ்ரேல் உருவாகி அறுபது ஆண்டுகளாகியும், இந்த ஆராய்ச்சியாளரால் பைபிளில் உள்ளபடி “புலம்பெயர்ந்து வாழும் யூத மக்களின் தாயகம் இஸ்ரேல்” என்னும் கருத்தை இன்று வரை நிரூபிக்க முடியவில்லை.
மேலும் பைபிளில் எழுதப்பட்டுள்ள கதைகள் உண்மையில் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பிள்ளையார் பிடிக்கப் போய், அது குரங்காக மாறிய கதையாக, தாம் காலங்காலமாக கட்டி வளர்த்த நம்பிக்கை தகருவதை காணப் பொறுக்காத இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், இந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளிப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். இன்று வரை உலகில் மிகச் சிலருக்கு மட்டுமே தெரிந்த, ஆராய்ச்சியின் பெறுபேறுகளை இங்கே தொகுத்து தருகிறேன்.
1980 ம் ஆண்டு இடம்பெற்ற நிலநடுக்கம் சியோனிச கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தியது. அதுவரை அறியாத பழங்கால இடிபாடுகளை வெளிப்படுத்தியது, அந்த நிலநடுக்கம். ஆனால் அந்த கண்டுபிடிப்புகள் எதுவும் யூத கதைகளை உண்மையென்று நிரூபிக்காததால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏமாற்றமடைந்தனர். அதிலிருந்து தான் இஸ்ரேலின், அல்லது யூத வரலாற்றை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் போக்கு ஆரம்பமாகியது. பைபிளில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான கதைகள் உண்மையாக இருக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டது.
கிறிஸ்தவர்களுக்கு இயேசு எந்த அளவுக்கு முக்கியமோ, அது போல யூதர்களுக்கு மோசெஸ் ஒரு கேள்விக்கிடமற்ற தீர்க்கதரிசி. எகிப்தில் அடிமைகளாக இருந்த யூத குடிகளை மோசேஸ் விடுதலை செய்து, செங்கடலை கடந்து, கடவுளால் நிச்சயிக்கப்பட்ட நாட்டிற்கு(பாலஸ்தீனம்) கூட்டிச் சென்றதாக பைபிள் கூறுகின்றது. ஆனால் சரித்திர ஆசிரியர்கள் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நிரூபிக்கின்றனர்.
முதலாவதாக இப்போது உள்ளது போல அப்போதும், எகிப்திற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நிலத்தொடர்பு இருந்திருக்கும் போது, மொசெஸ் எதற்காக கஷ்டப்பட்டு கடல் கடக்க வேண்டும்? இரண்டாவதாக பைபிள் கூறும் காலகட்டத்தை வைத்துப் பார்த்தால் கூட, அன்று பாலஸ்தீனம் எகிப்து தேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மோசெஸ் வழிநடத்திய யூத குடிமக்கள் எகிப்தின் உள்ளே தான் இடப்பெயர்ச்சி செய்திருக்க வேண்டும். மூன்றாவதாக எகிப்தியர்கள் பல சரித்திர குறிப்புகளை ஆவணங்களாக விட்டுச் சென்றுள்ளனர். அவை எல்லாம் தற்போது மொழிபெயர்க்கப் பட்டு விட்டன. ஆனால் எந்த இடத்திலும் யூதர்களை அடிமைகளாக பிடித்து வைத்திருந்ததகவோ, அல்லது இஸ்ரேலிய அடிமைகள் கலகம் செய்ததாகவோ குறிப்பு காணப்படவில்லை.
டேவிட் மன்னன் தலைமையில் சிறு இராசதானி இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற போதிலும், பைபிள் கூறுவது போல இஸ்ரேலியர்களின் சாம்ராஜ்யத்தை வைத்திருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் அன்றைய பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல், யூதேயா என்ற இரு சிறிய அரசுகள் இருந்துள்ளன. இவை பிற்காலத்தில் (ஈராக்கில்/ஈரானில் இருந்து வந்த) பாபிலோனியர்களால் கைப்பற்றப்பட்டாலும், பைபிள் கூறுவதைப் போல அனைத்து இஸ்ரேலிய யூதர்களையும் பாபிலோனிற்கு கொண்டு சென்றதாக ஆதாரம் இல்லை.
இருப்பினும், அரச அல்லது பிரபுக் குடும்பங்களை சேர்ந்தோரை கைது செய்து பாபிலோனில் சிறை வைத்திருக்கிறார்கள். யூதர்கள் அங்கே தான் ஒரு கடவுள் கொள்கையை அறிந்து கொண்டார்கள். (யூதர்கள் மத்தியிலும் பல கடவுள் வழிபாடு முறை நிலவியதை பைபிளே கூறுகின்றது) அன்றைய காலகட்டத்தில் இன்றைய ஈரானிலும், ஈராக்கிலும் சராதூசரின் மதம் பரவியிருந்தது. அவர்கள் “மாஸ்டா” என்ற ஒரேயொரு கடவுளை வழிபட்டனர். இதிலிருந்து தான் யூத மதமும், “யாஹ்வே” அல்லது “எல்” (ஒரு காலத்தில் சிரியர்கள் வழிபட்ட கடவுளின் பெயர்) என்ற ஒரே கடவுளை வரித்துக் கொண்டது. பிற்காலத்தில் யூதர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட, “ஒரு கடவுள் கோட்பாட்டை” கிறிஸ்தவர்களின் மீட்பர் இயேசு, மற்றும் முஸ்லிம்களின் இறைதூதர் முஹம்மது ஆகியோர் பின்பற்றினர்.
கி.பி. 70 ம் ஆண்டுக்கு முன்னர் யூதர்களின் தாயக பூமி, ரோமர்களின் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது, . ஜெருசலேமில் யூதர்களின் மிகப் பெரிய கோவில் சேதமடைந்த பின்னர், முழு யூத மக்களையும் ரோமர்கள் நாடுகடத்தியதாக இதுவரை நம்பப்பட்டு வருகின்றது. அதனால் தான் யூதர்கள் மத்திய ஆசியா, ஐரோப்பா எங்கும் புகலிடம் தேடியதாக, இன்றுவரை அவர்கள் வேற்று இனத்துடன் கலக்காமல் தனித்துவம் பேணியதாக, யூதர்கள் மட்டுமல்ல பிறரும் நம்புகின்றனர். ஆனால் ரோமர்கள் ஒரு போதும் எந்த ஒரு தேச மக்களையும் ஒட்டு மொத்தமாக நாடுகடத்தியதாக வரலாறு இல்லை. ரோமர்கள் பல இனத்தவரை அடிமைகளாக்கியிருக்கிறார்கள். அப்போது கூட குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறுதொகையினர் அடிமைகளாக ரோமாபுரி செல்ல, பெரும்பான்மை மக்கள் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
இதிலிருந்து ஒன்று தெளிவாகின்றது. யூத மக்கள் எங்கேயும் புலம்பெயராமல் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஆகவே இன்றுள்ள பாலஸ்தீன அரேபியர்கள் தான் உண்மையான யூதர்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. அவர்கள் பிற்காலத்தில் இஸ்லாமியராகவும், கிறிஸ்தவர்களாகவும் மாறியிருக்கலாம். முதலாவது இஸ்ரேலிய பிரதமர் பென் கூரியன் உட்பட பல சியோனிச தலைவர்களுக்கு இந்த உண்மை தெரிந்தே இருந்தது. ஆனால் அதனை வெளியே சொன்னால், அவர்களது சியோனிச அரசியல் அத்திவாரமே அப்போது ஆட்டம் கண்டிருக்கும்.
இன்று, இஸ்ரேலிய ஆராய்ச்சியாளரின் முடிவுகள் வந்த பின்னர் கூட பலர் பகிரங்கமாக இதைப்பற்றி பேச மறுக்கின்றனர். “யூத எதிர்ப்பாளர்” என்ற முத்திரை குத்தப் பட்டுவிடும் என்ற அச்சமே காரணம். மேற்குலகில் யூத எதிர்ப்பாளர் என்று சொல்வது, இனவெறியர் என்று சொல்வதற்கு சமமானது.
யூத இனத்தவர்கள் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து செல்லவில்லை என்றால், “யார் இந்த யூதர்கள்” என்ற கேள்வி எழுகிறதல்லவா? “யூத இனம்” என்ற தவறான கோணத்தில் இருந்து பார்ப்பதால் இந்த குழப்பம் ஏற்படுகின்றது. யூதர்கள் என்பது ஒரு மதத்தை சேர்ந்தவர்களை குறிக்கும் சொல்லாகும். கிறிஸ்தவ மதம் தான் பிறந்த மண்ணை விட்டு, வெளி உலகத்தில் பரவியது போன்று, யூத மதமும் பரவியது.
முதலில், யூதேயா அரசாட்சியின் கீழ் வாழ்ந்தவர்களை மட்டுமல்ல, அயலில் இருந்த மக்களையும் கட்டாய யூத மத மாற்றத்திற்கு உள்ளாக்கினர். தொடர்ந்து மதப் பிரசாரகர்கள் யூத மதத்தை மத்திய கிழக்கு எங்கும் பரப்பினர். அரேபியா (யேமன்), வட ஆப்பிரிக்கா (மொரோக்கோ), மத்திய ஆசியா (குர்திஸ்தான்) போன்ற இடங்களில் எல்லாம், அண்மைக்காலம் வரையில்,  யூதர்கள் லட்சக்கணக்கில் வாழ்ந்து வந்தனர்.
குர்திஸ்தானிலும், வட அபிரிக்காவிலும் (அல்ஜீரியா-மொரோக்கோ), குறிப்பிட்ட காலம் யூத இராசதானிகள் உருவாகின. பிற்காலத்தில் வட ஆப்பிரிக்கா மீது படையெடுத்து கைப்பற்றிய அரேபிய சரித்திரவியாளர்கள் இவற்றை எழுதி வைத்துள்ளனர். முதலில் அரேபிய-இஸ்லாமிய படையெடுப்பை எதிர்த்த யூதர்கள், பிற்காலத்தில் அரேபிய படைகளுடன் இணைந்து, ஸ்பெயினை கைப்பற்றி அங்கேயும் குடியேறி இருந்தனர்.
நீண்ட காலமாக, யூதர்கள் என்பது ஒரு இனம் என்ற கருத்தியலை, மரபணு சோதனை மூலம் நிரூபிப்பதற்கு முயற்சி நடந்தது. சில ஆராய்ச்சி முடிவுகள், யூதர்கள் தனியான மரபணு கொண்டிருப்பதாக தெரிவித்த போதும், அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. பொதுவான பெறுபேறுகள், யூதர்களும் அந்தந்த நாடுகளில் வாழும் பிற மக்களும், ஒரே விதமான மரபணு கொண்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றன. இதனை பரிசோதனைசாலையில் விஞ்ஞானிகள் சோதித்து தான் அறிய வேண்டிய அவசியமில்லை.
யூதர்களிடையே வெளிப்படையாக தெரியும் வேறுபாடுகள் நிறைய உள்ளன. ஐரோப்பிய யூதர்கள் வெள்ளைநிற ஐரோப்பியர் போலவும், எத்தியோப்பிய யூதர்கள் கறுப்புநிற ஆப்பிரிக்கர் போலவும் வெளித்தோற்றத்தில் காணப்படுவதை வைத்தே கூறிவிடலாம், யூதர்கள் ஒரே இனமாக இருக்க சாத்தியமே இல்லை என்று. யூத இன மையவாதத்தை ஆதரிப்பவர்கள் இந்த எளிய உண்மையை காண மறுக்கின்றனர். இன்றைய நவீன இஸ்ரேலில் கூட ரஷ்ய யூதர்கள், கிழக்கு ஐரோப்பிய யூதர்கள், மேற்கு ஐரோப்பிய யூதர்கள், அரபு யூதர்கள், எத்தியோப்பிய யூதர்கள், என்று பலவகை சமூகங்கள் தனிதனி உலகங்களாக வாழ்வதேன்? இந்த சமூகம் ஒவ்வொன்றுக்கும் ஹீப்ரூ மொழியில் விசேட பட்டப் பெயர்கள் உள்ளன.
இன்றைய இஸ்ரேலிய தேசத்தின் அரசியல், இராணுவ, பொருளாதார ஆதிக்கம் ஐரோப்பாவில் இருந்து வந்து குடியேறிய யூதர்களின் கைகளில் உள்ளது. இவர்களது நதிமூலம் பற்றிய சுவாரஸ்யமான ஆய்வுகள் நடந்துள்ளன. அந்த தேடலில் “கஸார்” இராசதானி பற்றி தெரியவந்தது. அதுவே ஐரோப்பிய யூதர்களின் மூலமாக நம்பப்படுகின்றது.
முன்னொரு காலத்தில் கஸ்பியன் கடலுக்கும், கருங்கடலுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தையும், தெற்கு ரஷ்யாவையும், கிழக்கு உக்ரைனையும் சேர்த்து ஒரு மாபெரும் யூத இராஜ்யம் பத்தாம் நூற்றாண்டு வரை நிலைத்து நின்றது. கஸார் மக்கள் மத்திய ஆசியாவை சேர்ந்த துருக்கி மொழி பேசும் இனத்தை சேர்ந்தவர்கள்.
இருப்பினும் அவர்கள் ஆட்சியின் கீழ் பிற இனத்தவர்களும் வாழ்ந்தனர். மேற்கே கிறிஸ்தவ மதமும், கிழக்கே இஸ்லாமிய மதமும் பரவிக் கொண்டிருந்த காலம் அது. இரண்டுக்குமிடையே தமது தனித்தன்மையை காப்பாற்றுவதற்காக, கஸார் ஆளும் வர்க்கம் யூத மதத்திற்கு மாறியது. இந்த மத மாற்றம் அரசியல் காரணத்திற்காக ஏற்பட்ட ஒன்று. இன்று நடுநிலை பேண விரும்பும் சுவிட்சர்லந்துடன் ஒப்பிடத்தக்கது.
கஸார் இராசதானி அரபு-இஸ்லாமிய படையெடுப்புகளை வெற்றிகரமாக தடுத்து நின்ற போதும், அதனது வீழ்ச்சி வடக்கே இருந்து வந்த ரஷ்யர்களால் ஏற்பட்டது. அதற்குப் பிறகு கஸார் மக்கள் அந்தப் பிரதேசத்தில் இருக்கும் பிற இனத்தவர்களுடன் கலந்து விட்டனர். பெரும்பாலானோர் யூத மதத்தை கைவிட்டு, இஸ்லாமியராகி விட்டனர். இருப்பினும் குறிப்பிடத்தக்க கஸார் யூதர்கள் போலந்திற்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்ததாக நம்பப்படுகின்றது.
புலம்பெயர்ந்த யூதர்கள் “யிட்டிஷ்” கலாச்சாரத்தை உருவாக்கினர். யிட்டிஷ் என்பது, ஹீப்ரூ, ஜெர்மன், ஸ்லோவாக்கிய சொற்கள் கலந்த மொழியைக் குறிக்கும். கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் இந்த மொழியை பேசினர். நவீன இஸ்ரேல் உருவாகி, ஹீப்ரூ உத்தியோகபூர்வ மொழியாகிய பின்னர், இப்போது அந்த மொழி மறைந்து வருகின்றது.
இஸ்ரேல் என்ற தேசம் உருவான போது, அங்கே யூதர்களின் புராதன மொழியான ஹீபுரூ பேசுவோர் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் அதற்கு முன்னர் வாழ்ந்த நாட்டு மொழிகளையே பேசினர், இன்றும் கூட வயோதிபர்கள் ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், அரபு என்று பல்வேறு மொழிகளை வீடுகளில் பேசி வருகின்றனர். இளம் சந்ததி மட்டுமே ஹீப்ரூ மொழியை தமது தாய் மொழியாக்கியது.
உண்மையில் பல்வேறு கலாச்சாரப் பின்னணியை கொண்ட யூதர்களை, ஒரே இனமாக இஸ்ரேல் என்ற தேசத்தினுள் ஒற்றுமையாக வைத்திருப்பது கடினமான விடயம். (”எங்கள் யூத சமூகத்திற்குள் ஒற்றுமையில்லை.” என்ற சுயபச்சாதாபம் இஸ்ரேலியர் மத்தியில் நிலவுகின்றது.) அதற்காக தான் இஸ்ரேலிய அரசு, பைபிள் கதைகளை நிதர்சனமாக்க இராணுவ பலம் கொண்டு முயற்சித்து வருகின்றது.
தமது ஆக்கிரமிப்பு, “கடவுளால் முன்மொழியப்பட்டது” என்பதால் நியாயமானது, என்று வாதிடுகின்றனர். அதனால் தான், யூத குடிகளின் முதலாவது ஒப்பற்ற பெருந்தலைவனான, டேவிட் மன்னன் தலைநகராக வைத்திருந்த ஜெருசலேமினை (அது இப்போது இருக்கும் நகரை விட அளவில் சிறியதாக இருந்தது) நவீன இஸ்ரேலின் தலைநகராக்குவதன் மூலம், தமது சரித்திர ஆதாரத்தை எதிர்காலத்திலேனும் நிலைநாட்ட முயல்கின்றனர்.