சனி, 14 மார்ச், 2020

அமெரிக்க ராணுவம் தான் வுகானுக்கு கொரோனாவை கொண்டு வந்தது - சீனா குற்றச்சாட்டு

பீஜிங்

கொரோனா வைரஸ் நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை கெடுத்துவருகிறது. ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் பரவ காரணம் இந்த நாடுதான் என, மற்றொரு நாட்டை சுட்டிக்காட்டி வருகின்றன. எங்கள் நாட்டில் கொரோனா பரவ ஜெர்மனிதான் காரணம் என  இத்தாலி கூறியது.

அமெரிக்க ராணுவம்தான் தங்கள் நாட்டுக்குள் கொரோனாவைக் கொண்டுவந்தது என சீன செய்தி தொடர்பாளர்  குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ராபர்ட் ஓ பிரைன், சீனா வுகானில் இருந்து பரவிய கொரோனாவை தடுக்க சரியான நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதற்கு பதிலாக, அதை மூடி மறைப்பதிலேயே கவனம் செலுத்தியது.

அதனால், கொரோனாவை எதிர்கொள்வதற்கு உலகம் இரண்டு மாதங்களை செலவிடவேண்டியதாயிற்று என்றார். சீனாவிலும் உலகத்திலும் தற்போது நடக்கும் இந்த பயங்கரத்தை, அந்த இரண்டு மாதங்களுக்குள் பெருமளவில் குறைத்திருக்கலாம், கட்டுக்குள் கொண்டுவந்திருக்கலாம் என்றார் ஓ பிரைன் 

சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லிஜியன் ஜாவோ அமெரிக்கா தான் ஒளிவு மறைவில்லாமல் இருந்தது  என அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.

லிஜியன் ஜாவோ கூறியதாவது:-

சில மூத்த அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறிய பல்வேறு தவறான மற்றும் பொறுப்பற்ற கருத்துக்களை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம். அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் வைரஸின் மூலத்தைப் பற்றி வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளது. இது ஒரு விஞ்ஞான பிரச்சினை என்று சீனா எப்போதும் நம்புகிறது மற்றும் அறிவியல் மற்றும் தொழில்முறை ஆலோசனை தேவை.

எப்போது அமெரிக்காவில் முதல் நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது? எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்? எந்த மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்க ராணுவம்தான் வுகானுக்கு கொரோனாவையே கொண்டு வந்திருக்கவேண்டும்.

இதற்கு  விளக்கம் கொடுங்கள் என சுடச்சுட தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிகாரிகள் இப்படி கருத்துச் சொல்லிக்கொண்டிருப்பது எந்த வகையிலும் கொரோனா பரவுவதை தடுக்க உதவாது என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 12 மார்ச், 2020

சிக்மண்ட் ஃபிராய்ட் : சிறகுகள் விரிக்கும் கனவுகளின் ஆதிமூலத்தை அகழ்ந்தெடுத்தவர்!

சிக்மண்ட் ஃப்ராய்ட் என சுருக்குமாக அழைக்கப்படும் ‘சிக்சிமண்ட் ஸ்க்ளோமோ ஃப்ராய்ட்’, 1856ம் ஆண்டு இதேநாளில் அதாவது மே 6ஆம் தேதி ஆஸ்திரியாவின் ஃப்ரைபெர்க் எனும் ஊரில் பிறந்தார். உளவியல் பகுப்பாய்வு என்னும் கோட்பாட்டை முதன்முதலில் கொண்டுவந்த பெருமை ப்ராய்ட்டையே சேரும். 

நரம்பியல், உளவியல் மருத்துவம் மற்றும் உளவியல் பகுப்பாய்வு போன்ற துறைகளிலும் தனது ஆராய்ச்சிகள் மூலமாகவும், ஆய்வுகள் வழியாகவும் தனக்கென தனியிடத்தை சிக்மண்ட் ஃப்ராய்ட் உருவாக்கிக் கொண்டார்.

உளவியல் சிக்கலுக்குள்ளானவர்களை தனித்து பார்த்த அன்றைய மருத்துவ முறையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ஃபிராய்ட், உளவியல் சிக்கலுக்கு உள்ளானோருடன் கலந்துரையாடல் மூலம் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து சிகிச்சை அளிக்கும் உளவியல் பகுப்பாய்வு முறையை உருவாக்கி ஃப்ராய்ட் புகழ் பெற்றார். உளவியல் துறையில் தனது பங்களிப்பிற்காய் 1930ஆம் ஆண்டிற்கான கோதே பரிசை பெற்றார்

1881ஆம் ஆண்டு வியன்னா பல்கலைக்கழகத்தில் மருத்துவப்பட்டம் பெற்ற ஃப்ராய்ட், 1885ஆம் ஆண்டு நரம்பு நோயியல் பிரிவில் சிறப்பு பட்டம் பெற்று 1902ஆம் ஆண்டு இணை பேராசிரியராக பணியாற்றத் தொடங்கினார். 

கட்டற்ற தொடர்பு மற்றும் இடமாற்றீடு போன்ற கோட்பாடுகளை கொண்டுவந்து உளவியல் மருத்துவத்தில் புதிய கண்ணோட்டத்தை உருவாக்கினார் ஃபிராய்ட். இடிபஸ் மனப்பான்மை போன்ற பாலின உணர்வு ரீதியான உணர்ச்சிகளை ஆராய்ந்து பாலின பாகுபாடு குறித்த பார்வையை மறுவரையறை செய்தார்.

ஆழ்மனதில் அமுக்கப்பட்ட எண்ணங்களே வண்ணம் பெற்று கனவுகளாக வருகிறது என கூறினார் ஃப்ராய்ட். “லிபிடோ” என்னும் உணர்வுதான் எதிர்பாலின கவர்ச்சி, திரும்பத் திரும்ப ஒரு செயலை செய்யத் தூண்டும் எண்ணம், வெறுப்பு, ஆவேசம் மற்றும் ஒரு வகையான குற்ற உணர்வுக்கு காரணமாக அமைகிறது என்றும் கூறுகிறார். 

ஃப்ராய்ட் உருவாக்கிய இந்த முறைகளின் மருத்துவ நம்பகத்தன்மை, விஞ்ஞான முக்கியத்துவம் மற்றும் சமூகவியல் ரீதியில் இந்த கருத்துக்கள் பெண்ணியத்திற்கு சார்பானவையா அல்லது எதிரானவையா என்பன போன்றவை ஃப்ராய்டியம் குறித்து பெரிதும் விவாதிக்க கூடிய தலைப்புகளாக அமைகிறது. ஆடன் என்னும் கவிஞர் ஃப்ராய்டுக்காக எழுதிய கவிதையில், மக்களின் மனஓட்டத்தை காலநிலையைப் போல விளக்குபவர் ஃப்ராய்டு என புகழாரம் சூட்டியுள்ளார்.


செரிப்ரல் பால்சி என்னப்படும் நோயைப் பற்றியும் அதிகமாக ஆராய்ச்சி செய்தார் ஃப்ராய்ட். குழந்தை பிறக்கும் போது ஏற்படும் பிராணவாயு குறைபாடால் தான் இந்த நோய் வருகிறது என்ற தவறான நம்பிக்கையை உடைத்து, அந்த நோய் இருப்பதற்கான அறிகுறியாகவே குழந்தைப் பிறப்பின் போது உள்ள சிக்கலை பார்த்தார். 

1890 ஆம் ஆண்டில் அதிகமான மக்கள் இளவயதில் ஏற்பட்ட பாலியல் பிரச்சினைகளை பற்றி கூறியதால் அது குறித்த ஆய்வில் ஈடுபடும் போது இடிபஸ் மனப்பான்மையை முக்கியத்தன்மையை கண்டறிந்தார். கொகைன் மன மற்றும் உடல் ரீதியான பல உபாதைகளுக்கும் தீர்வாக அமையும் என நம்பிய ஃப்ராய்ட், 1884ஆம் ஆண்டு “On Coco" என்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார். 

இதே போல 1883 முதல் 1887 ஆம் ஆண்டு வரை எழுதிய கட்டுரைகளில் கொகைன் ஒரு மன அழுத்தத்தை ஒழிக்கும் நிவாரணி என கூறினார். கொகைன், மார்ஃபைன் என்னும் போதை பழக்கத்தை மாற்ற வல்லதாக இருக்கும் என்ற நோக்கில் ஃப்ராய்ட் செய்த சோதனை தோல்வியில் முடிந்த காரணத்தால், அறிவியல் பூர்வமாக அவரின் கொகைன் தொடர்பான கூற்றை நிரூபிக்க முடியவில்லை. 

நாம் மனதில் நினைக்கும் எண்ணங்களை நாம் மறந்தாலும், ஆழ்மனதில் தங்கியுள்ள அது கனவுகளாக வருவதாகவும், சுயநினைவுகளில் இருந்து நீக்கப்பட்டாலும் தொடர்ந்து செயல்பட்டு குறிப்பிட்ட சூழ்நிலைகளின் வழியாக வெளிப்படும் எனவும் ஃப்ராய்ட் கூறினார். செயற்கையாக அந்த எண்ணங்களை வெளிக்கொண்டுவர மனோவசியம் (hypnosis) பயன்படுகிறது. இதை குறித்து ஃப்ராய்ட் "The Interpretation of Dreams" மற்றும் "Jokes and their Relation to the Unconscious" என்னும் நூலில் விளக்கமாக கூறியுள்ளார்.

பாலுணர்வு தொடர்பான அனைத்து ஆராய்ச்சிகளுக்கும் இடிபஸ் மனப்பான்மை அடித்தளமாக அமைந்துள்ளது. “Eros"என்னும் உணர்வு வாழ்வதற்கான உத்வேகத்தை தருவதாகவும்  "Thanatos" என்னும் உணர்வு நம் பிரச்சினையை முழுமையாக குறைக்க வேண்டும் என்னும் எண்ணத்தையும் தருவதாக கூறுகிறார். 

1917ஆம் ஆண்டு "Mourning and Melancholia" என்னும் கட்டுரையில் கவலைப்படுவதின் வகைகளைக் குறித்து கூறியுள்ளார். இவர் கூறிய சில கருத்துக்கள் ஆணாதிக்கம் மிகுந்ததாக கூறி பெண்ணியவாதிகள் எதிர்த்தனர். மனிதர்கள் கடவுளை பின்பற்றுவது, அவர் மீது உள்ள நம்பிக்கையினால் என கூறுவதை விட தன்னை சுற்றியுள்ள உலகத்தின் மீதான பயத்தினால் தான் என்பதே கடவுள் மீதான ஃப்ராய்டின் கருத்து.

1938ஆம் ஆண்டு நாசிப்படைகளிடம் இருந்து தப்பிக்க ஆஸ்திரியாவை விட்டு வெளியேறிய அவர், 1939ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். உளவியல் துறையில் தான் ஏற்படுத்திய மாபெரும் தாக்கத்திற்காக இன்றளவும் சிக்மண்ட் ஃபிராய்ட் நினைவுக் கூறப்படுகிறார்

புதன், 11 மார்ச், 2020

பேச்சுவார்த்தைக்காக ரஷியா வந்த துருக்கி அதிபரை அவமதித்தாரா புதின்?

மாஸ்கோ, 
சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் துருக்கி ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைக்கும் இடையே உச்சகட்ட மோதல் நீடிக்கிறது. இதில் சிரியா அரசு படைக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது.

இது தொடர்பாக ரஷியாவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் இத்லிப் மாகாணத்தில் நடத்திவரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டுமென ரஷியாவிடம் தொடர்ந்து வலியுறுத்தினார்.

இதையடுத்து, கடந்த 5-ந்தேதி ரஷியா சென்ற தயீப் எர்டோகன் அந்த நாட்டு அதிபர் புதினை நேரில் சந்தித்து சிரியா விவகாரம் குறித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

அதன் முடிவில் இத்லிப் மாகாணத்தில் உடனடியாக சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். அதன் அடிப்படையில் இத்லிப் மாகாணத்தில் தாக்குதல் நடத்துவதை ரஷியா நிறுத்திவைத்துள்ளது.

இந்த நிலையில், சிரியா விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்த துருக்கி அதிபர் எர்டோகனை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் புதின் அவரை காக்க வைத்ததாக புகார் எழுந்துள்ளது.

மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகைக்கு வந்த துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் அந்த நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளை புதின் இருந்த அறைக்குள் உடனடியாக அனுமதிக்காமல் கதவுக்கு அருகே நிற்கவைத்தனர். சுமார் 1½ நிமிடம் அப்படியே நின்று கொண்டிருந்த எர்டோகன் பின்னர் அங்கு கிடந்த நாற்காலியில் அமர்ந்தார். சரியாக 2 நிமிட காத்திருப்புக்கு பிறகு அவர் அந்த அறைக்குள் அனுமதிக்கப்பட்டார்.

எர்டோகன் அதிகாரிகளுடன் அறைக்கு வெளியே காத்திருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் எதிரொலி: உலக பொருளாதாரத்துக்கு ரூ.148 லட்சம் கோடி இழப்பு - ஐ.நா. கணிப்பு

நியூயார்க், 

சீனாவில் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி கொரோனா வைரஸ் தோன்றியது.
இந்த 3 மாத காலத்தில் அந்த வைரஸ் 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி விட்டது. சீனாவில் அதன் தாக்கம் சற்றே குறைந்து வந்தாலும் இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் வலுத்து வருகிறது.

உலக அளவில் இந்த வைரஸ் ருத்ர தாண்டவமாடி வருவதில், இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் இப்படி ஆதிக்கம் செலுத்தி வருவது உலக பொருளாதாரத்தில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உற்பத்தி துறை மந்தமாகி உள்ளது. சுற்றுலாத்துறை முடங்கி உள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி பாதித்துள்ளது. உலகளாவிய வர்த்தகம் மந்த நிலையை அடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலால் அது உலக பொருளாதாரத்தில் 2 டிரில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.148 லட்சம் கோடி) இழப்பை ஏற்படுத்தும் என்று ஐ.நா. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கணித்துள்ளது.

இதையொட்டி, ஐ.நா. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், மனித இழப்புகளைத் தவிர அதைத் தாண்டிய பொருளாதார நிச்சயமற்ற நிலைமையால் 1 லட்சம் கோடி டாலர் (சுமார் ரூ.74 லட்சம் கோடி) இந்த ஆண்டில் இழப்பு ஏற்படும்.

முதல் கட்ட மந்த நிலையை பார்க்கிறபோது, அது உலக பொருளாதாரத்தில் 2 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.148 லட்சம் கோடி) அளவுக்கு இழப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் வளர்ந்து வரும் நாடுகளில் மட்டுமே 220 பில்லியன் டாலர் (சுமார் ரூ.16 லட்சத்து 28 ஆயிரம் கோடி) இழப்பு ஏற்படும். இதில் சீனா சேர்க்கப்படவில்லை.

தற்போதைய நிலையில் மிக மோசமான பொருளாதார சூழலை சந்திக்கிற நாடுகள் என்று பார்த்தால், அவை கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்கிற நாடுகள்தான்.

மற்ற பொருட்களை ஏற்றுமதி செய்கிற நாடுகளும் 1-க்கு மேற்பட்ட சதவீத வளர்ச்சியை இழக்க நேரிடும்.

கனடா, மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்க பிராந்திய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 0.7 சதவீதம் முதல் 0.9 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளது. 

இவ்வாறு கூறி உள்ளது.

கடந்த வாரம், ஐ.நா. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு நிறுவனம், கொரோனா வைரஸ் பாதித்துள்ள நிலையில், இந்தியாவில் 348 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2575 கோடி) அளவுக்கு வர்த்தகம் பாதிக்கும் என கணித்து கூறியது.

சீனாவில் உற்பத்தி துறை பாதித்துள்ளதால், அது உலக வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் 15 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும் ஐ.நா. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கூறியது.

புதன், 29 ஜனவரி, 2020

விண்வெளித்துறை சாதனையில் உயர... உயர... பறக்கும் இந்தியா

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா தனது விண்வெளி பயணத்தில் மாபெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது.
விண்வெளி என்பது பிரபஞ்சத்தின் பொருட்கள் எல்லாம் நகர்ந்து செல்லக்கூடிய கிட்டத்தட்ட ஒரு வெற்றிடம் ஆகும். நகர்ந்து செல்லும் பொருட்களில் நமது பூமியும் அடங்கும். இந்த பரந்த விண்வெளியில் நட்சத்திரங்களும் கிரகங்களும் பூமியும் மிகமிக சிறிய புள்ளிகளே.
மனிதன், பூமி, நிலவு, கிரகங்கள், சூரியன் மற்றும் நட்சத்திரங்கள், பால் வெளி இவை குறித்து அறிந்து கொள்வதற்கான ஆர்வத்திற்கு மனித சமுதாயம் எடுத்து கொண்ட முயற்சியே விண்வெளி பயணங்கள். ஆள் இல்லாத, ஆளோடு கூடிய விண்கலங்களை பூமியின் எல்லைகளுக்கு அப்பால் அனுப்பி இந்த பிரபஞ்சம் குறித்த பல உபயோகமான தகவல்களை பெறுவதற்கான ஒரு முயற்சியாக இது அமைந்து உள்ளது. விண்வெளி காலம் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது.
இந்த விண்வெளி பயணம் நமது பூமிக்கும், இந்த பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பை கண்டறிவதற்காகவும் சூரியன் கிரகங்கள், நட்சத்திரங்கள் எப்படி தோன்றின என்பதை ஆய்வு செய்வதற்காகவும் இந்த பூமிக்கு அப்பால் உயிரினங்கள் மற்றும் நம்மை போன்ற மனித சமுதாயங்கள் இருக்கின்றனவா என அறிந்து கொள்வதற்காகவும் மேற்கொள்ளப்படுகின்றன.
உலக நாடுகள் அனைத்தும் விண்வெளித்துறையில் பல்வேறு ஆய்வுகளை  மேற்கொண்டு வரும் நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியில்  வியத்தகு சாதனைகளை நிகழ்த்தி உலகத்தையே வியக்க வைத்து வருகிறது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ இந்திய அரசின் முதன்மையான விண்வெளி ஆராய்ச்சி நிலையமாக விளங்குகிறது. இது ஆகஸ்டு 15, 1969 -இல் நிறுவப்பட்டது. உலகின் மிகப் பெரிய விண்வெளி ஆய்வு மையங்களில் இஸ்ரோ ஆறாவதாக உள்ளது. புதிய மேம்பட்ட விண்வெளி தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து அவற்றை நாட்டு நலனுக்காக பயன்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு உள்ளது. 
இஸ்ரோவின் பல்வேறு பணிகளுக்காகவும், ஆராய்ச்சிகளுக்காகவும் பெங்களூரு, திருவனந்தபுரம், டெல்லி, ஸ்ரீஹரிகோட்டா, மகேந்திரகிரி (தமிழகம்) உள்பட 21 இடங்களில் இஸ்ரோ மையங்கள் உள்ளது.
விஞ்ஞானிகளின் விடா முயற்சி, கடின உழைப்பு, மற்றும் திறமையினால் இஸ்ரோ பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. 1975 -இல் ஆர்யபட்டா என்ற இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் இஸ்ரோவினால் உருவாக்கப்பட்டது. இது சோவியத் ரஷ்யாவின் உதவியுடன் அந்நாட்டிலிருந்து, அவர்களுடைய  ராக்கெட்  மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பாஸ்கரா, ரோகிணி, கல்பனா, இன்சாட் போன்ற பல செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது. 
நிலவை ஆராய்வதற்கு இந்தியா அனுப்பிய முதல் செயற்கைக்கோள் சந்திரயான். சந்திரயான் விண்கலம் இந்திய தயாரிப்பான பி.எஸ்.எல்.வி.(எக்ஸ்எல்) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
சந்திரயான் விண்கலம், நவம்பர் 8-ம்தேதி (2008) நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது. நவம்பர் 14-ம் தேதி நிலவின் தென்துருவ பகுதியில் இறங்கியது. அங்கு வெற்றிகரமாக இந்திய தேசியக் கொடியை நிலைநாட்டியது. இதன்மூலம் நிலவில் தனது நாட்டின் கொடியை பதித்த 4-வது உலகநாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. சந்திரயானின் முக்கியச் சாதனையாக கருதப்படுவது நிலவில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை அது உறுதிபடுத்தியதுதான்.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நிலவுக்கு சந்திரயான் விண்கலத்தை அனுப்பி வெற்றி கண்டதைத் தொடர்ந்து செவ்வாய்கிரக ஆராய்ச்சிக்காக ஒரு விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டது. அந்த விண்கலத்திற்கு மங்கள்யான் என்று பெயர்சூட்டப்பட்டது 
2013 ஆம் ஆண்டு நவம்பர் 5 ந்தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. மங்கள்யான் விண்கலம் 450 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. இதுவரை செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட விண்கலங்கள் இவ்வளவு குறைந்த செலவில் தயாரிக்கப்படவில்லை. இதன் எடை 1,350 கிலோ.
24.9.2014 அன்று இஸ்ரோ விஞ்ஞானிகளின் 3 மணி நேர தொடர் நடவடிக்கைக்குப்பின், செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையில் மங்கள்யான் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
சந்திரயான் வெற்றியைத் தொடர்ந்து பல  வெளிநாட்டினரும் செயற்கைகோள் தயாரித்து தரக்கேட்டுக் கொண்டார்கள். இதைத் தொடர்ந்து இந்தியா பல செயற்கைக்கோள்களை விண்ணுக்கும் அனுப்பியது.
2017 ஆம் ஆண்டில் ஒரே ஒரு பயணத்தில் 104 செயற்கைக்கோள்களை ஏவி சாதனை படைத்தது. பிஎஸ்எல்வி - சி 37 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன.
இந்தியாவின் கார்டோசாட்-2 செயற்கைக்கோள், ஐஎன்எஸ்-1ஏ, ஐஎன்எஸ் 1-பி என 2 நானோ செயற்கைக்கோள்கள் இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான 5 நானோ செயற்கைக்கோள், அமெரிக்காவின் 96 நானோ செயற்கைக் கோள்கள் என மொத்தம் 104 செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட் சுமந்து சென்றது. இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 505 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக  நிலை நிறுத்தப்பட்டன.
அதிகபட்சமாக 37 செயற்கைக்கோள்களை ரஷ்யா ஏவியதுதான் உலக சாதனையாக இருந்தது. 104 செயற்கைக்கோள்களை இந்தியா விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதன் மூலம் ரஷ்யாவின் சாதனை முறியடித்து உள்ளது.
இதன் மூலம் இந்தியா குறைந்த கட்டண விண்வெளி ஆய்வு மற்றும் அறிவியல் பணிகள் குறித்த நற்பெயரையும் உருவாக்கியுள்ளது.
ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் செயற்கைக்கோள்கள் விண்வெளியில் சுற்றினாலும் 10 நாடுகள்தான் அவற்றை ஏவும் வசதியைப் பெற்றுள்ளது. அவ்வகையில் இஸ்ரோவினால் 11-12-2019  வரை 319  வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.
1994 ஆம் ஆண்டிலிருந்து 40க்கும் அதிகமான முறை பிஎஸ்எல்வி ராக்கெட்டில் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்வெளி வட்டப்பாதையை முத்தமிட்டிருக்கின்றன.
2015க்குப் பிறகு இந்தியா ஹெவி வெய்ட் தொலைதொடர்பு செயற்கைக்கோள்களை ஏவ ஏரியன்ஸ்பேஸ் எனும் வர்த்தகரீதியிலான செயற்கைக்கோள் நிறுவனத்தின் உதவியை நாடியது. பிற்காலத்தில் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலமாக செயற்கைக்கோளை ஏவும் முயற்சிகளை இந்தியா தொடங்கும். தற்போதைக்கு இந்தியா, குறைந்த செலவில்  செயற்கைக்கோள்களை அனுப்பும் நிறுவனம் ஒன் அண்ட் ஒன்லி தான் மட்டுமே என உலகிற்கு கூறியுள்ளது.
இஸ்ரோ வெளிநாட்டு லைட்வெயிட் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு ராக்கெட்டுகள் மூலம் அனுப்ப 1.5 கோடி ரூபாய்களை கட்டணமாக வசூலிக்கிறது. இவ்வகையில் பிஎஸ்எல்வி ராக்கெட்டிற்கான மார்க்கெட்டை இஸ்‌ரோ கைப்பற்றும் வாய்ப்பு அதிகம்.
இந்திய செயற்கைக்கோளை அழிக்க எதிரி நாடுகள் முயன்றால் அவர்களின் ஏவுகணையை விண்ணில் தவிடு பொடியாக்கும் வல்லமையை இந்தியா பெற்றுள்ளது.
வெறும் மூன்றே நிமிடங்களில் இந்தியா இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளது. மேலும் இதன் தயாரிப்பு 100% இந்திய தொழில்நுட்பத்தால் ஆனது.
மிஷன் சக்தி என்ற பெயர் கொண்ட திட்டம் வெற்றி பெற்றுள்ளது.
உலகிலேயே இந்த வகை திறன் பெற்ற 4-வது நாடாக இந்தியா வெற்றி கண்டுள்ளது.
சந்திரயான்-1 விண்கலம் அனுப்பியதன் மூலம் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் ‘சந்திரயான்-2’ திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
சந்திரயான்-2 விண்கலம், கடந்த 2019  ஜூலை மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியின் சுற்றுப்பாதையில்  வெற்றிகரமாக நிலை நிறுத்தி சாதனை புரிந்தது.
நிலவின் மேற்பரப்பில் சந்திராயன்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அதனுடனான தொடர்பை இழந்தது. விக்ரம் லேண்டர் நிலவின் தரைப் பகுதியில் விழுந்தது. இது சிறிது  பின்னடைவை ஏற்படுத்தினாலும் சந்திரயான்-2 திட்டம் வெற்றிதான்.
2019ம் ஆண்டில் அனுப்பிய விண்கலங்களின் எண்ணிக்கை 7. இஸ்ரோ 77 முறை பூமியில் இருந்து விண்ணிற்கு ஏவுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. 2019ம் ஆண்டில் 6 முறை இது நடந்துள்ளது. 2019ம் ஆண்டில் 50 செயற்கைக்கோள்களை அனுப்பி உள்ளது.
2019ம் ஆண்டில் விண்வெளியில் ஏவப்பட்ட விண்கலங்கள்:
ஜனவரி:  மைக்ரோசாட்-ஆர் (ராணுவ நோக்கத்திற்காக) 
பிப்ரவரி : சிசாட்-31 (தொலைதொடர்புக்காக) 
ஏப்ரலில் : இ.எம்.ஐ.சாட் (மின்காந்த அளவீடுக்காக)
மே: ரிசாட்-2பி (பேரிடர் மேலாண் திட்டம், பூமியை ஆய்வு செய்ய)
ஜூலை: சந்திரயான்-2 (நிலவை ஆய்வு செய்ய)
நவம்பர்: கார்ட்டோசாட்-3 (பூமியை ஆய்வு செய்ய)
டிசம்பர் : ரிசாட்-2பிஆர்ஐ (பேரிடர் மேலாண் திட்டம், பூமியை ஆய்வு செய்ய)
இந்திய வெண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின்  எதிர்கால திட்டங்கள் பல உள்ளன.
சந்திரன், செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளை தொடர்ந்து சூரியன் பற்றிய ஆராய்ச்சிகளை 2020-ம் ஆண்டு தொடங்க உள்ளனர். ‘ஆதித்யா எல்-1’ என்ற திட்டத்தின் மூலம் சூரிய ஒளிவட்ட ஆய்வுகளையும் காலநிலை மாற்றத்திற்கான காரணங்களையும் தேட இருக்கிறார்கள்.
சந்திரனுக்கு மனிதர்களை அனுப்புவது, செவ்வாய் கிரகம் மற்றும் சந்திரனில் மனித குடியிருப்புகளை அமைப்பது உள்ளிட்ட பல பணிகளையும், 2020-ம் ஆண்டிற்குள் செய்து முடிக்க இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) ரோபோ வகைக்கு ஒரு பெரிய பாய்ச்சலை எடுத்து வருகிறது.
2021 (ஜூலை) ஆளில்லா விண்வெளி விமான ஆராய்ச்சிகள்
2021 (டிசம்பர்) ஆளில்லா விண்வெளி விமான ஆராய்ச்சிகளுக்கு அடுத்ததாக, மனிதர்களை சுமந்து செல்லும் ‘ககன்யான்’ என்ற விண்வெளி விமான சோதனையில் ஈடுபட உள்ளனர். இஸ்ரோவின் இந்த திட்டம் வெற்றிப்பெற்றால், மனிதர்களை விண்வெளிக்கு சுமந்து செல்லும் முதல் விண்வெளி விமானம் என்ற பெருமை, ககன்யானுக்கு கிடைக்கும். 3 விண்வெளி வீரர்கள் பயணிக்கும்படி ககன்யானை வடிவமைக்க உள்ளனர்.
இந்நிலையில், இந்த திட்டத்திற்கு முன்னோடியாக மனித உருவிலான பெண் ரோபோவை இந்த ஆண்டு இறுதிக்குள் விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
காலில்லாத வயோம் மித்ரா எனும் பெண் ரோபோ இதற்காக  உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் செய்யும் பல வேலைகளை செய்யும் திறமையுடைய இந்த ரோபோ இரு மொழிகளில் சரளமாக பேசும் திறனுடையது.
அறிமுகவிழாவில் பேசிய வயோம் மித்ரா நான் வியோம் மித்ரா பேசுகிறேன். நான் பாதி மனித ரோபோவின் முன்மாதிரி. முதல் ஆளில்லா ககன்யான் திட்டத்திற்காக நான் உருவாக்கப்பட்டிருக்கிறேன். என்னால் தொகுதி அளவுருக்கள் (மாடுல் பேராமீட்டர்ஸ்) மூலம் கண்காணிக்க முடியும். உங்களை எச்சரிக்க முடியும். வாழ்வியல் செயல்களை செய்ய முடியும். சுவிட்ச் பேனல் செயல்பாடுகள் போன்ற செயல்களை என்னால் செய்ய இயலும்.
நான் விண்வெளி வீரர்களுடன் ஒரு தோழியாக இருக்க முடியும். அவர்களுடன் கலந்துரையாடுவேன். அவர்களை அடையாளம் காண இயலும். அவர்கள் கேட்கிற கேள்விகளுக்கு என்னால் பதில் அளிக்கவும் முடியும் என்று பெண் ரோபோ பேசியது அனைவரையும் கவர்ந்தது.
2023 வீனஸ் கிரக ஆராய்ச்சி விண்கலம் அனுப்புவது.
2030 ககன்யான் விண்வெளி விமானத்தில், அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் வீரர்களுக்கு ஏதுவாக, விண்வெளியில் மிதக்கும் பிரத்யேக விண்வெளி  நிலையத்தை கட்டமைக்கும் முயற்சிகளில் இஸ்ரோ இறங்க உள்ளது. ‘‘இதன்படி 2030-ம் ஆண்டில், இந்தியாவிற்கு என பிரத்யேக விண்வெளி நிலையம் விண்ணில் மிதக்கும்.
இந்த விண்வெளி நிலையம் 20 டன் எடையில் உருவாக உள்ளது. இதில் விண்வெளி வீரர்கள் 15 நாட்கள் வரை தங்கியிருக்கலாம். இந்த விண்வெளி நிலையத்தை, பூமியில் இருந்து 400 கி.மீ. உயரத்தில் அமைக்க உள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற 107வது தேசிய அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி விண்வெளி துறையில் இந்தியா வெற்றி, பெற்றதைப்போல ஆழ்கடல் ஆய்விலும் பிரதிபலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

திங்கள், 27 ஜனவரி, 2020

ரஜினி... ஓர் இளைஞர், “யாரு நீங்க?” என்று கேட்கிறார்.

கட்சி ஆரம்பிக்கவில்லை, ஆட்சி அதிகாரத்துக்கு வரவில்லை, அதற்கு முன்னரே இத்தனை உச்சபட்ச திமிரும், அகம்பாவமும் இருக்கிறதென்றால், அது பார்ப்பனியக் கொழுப்பு அன்றி வேறில்லை...

"...ஓர் இளைஞர், “யாரு நீங்க?” என்று கேட்கிறார்.
கடந்த அரைநூற்றாண்டில் ரஜினி எதிர்கொண்டிராத கேள்வி. நிலைகுலைந்துப் போய், “நான் ரஜினிகாந்த், சென்னையிலிருந்து வர்றேன்” என்று இருளடைந்த முகத்தோடு பிளாஸ்டிக் சிரிப்போடு ‘வணக்கம்’ வைக்கிறார்.
மார்பில் வாங்கிய தோட்டாவுக்கு நிகரானதுஅந்த ஒரு வார்த்தை…. ரஜினி மீள சில தினங்கள் ஆகும்
முதல் அடி தூத்துகுடி மக்களிடமிருந்து…. "

வைரஸ் என்றால் என்ன?

21ஆம் நூற்றாண்டை அதிர வைத்த சில வைரஸ் தாக்குதல்கள்
வைரஸ். இந்த சொல்லை சமீப நாட்களாக அடிக்கடி கேட்டிருப்பீர்கள். வைரஸ் என்பது மிகச்சிறிய புரதங்கள் மற்றும் மரபணு பொருட்களை கொண்டதாகும். உலகில் நூற்றுக்கணக்கான வைரஸ்கள் உள்ளன. வைரஸ் தொற்றால்தான் காய்ச்சல்,சளி போன்றவையும் ஏற்படுகிறது.

வைரஸ்கள் பரவுவது எப்படி?

சில வகையான வைரஸ்கள் நேரடியாக ஒரு மனிதரிடம் மற்றொரு மனிதருக்கு பரவும். HIV போன்ற வைரஸ், இதனால் பாதிக்கப்பட்ட நபரருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதன் மூலம் பரவும்.
வைரஸ் தொற்று பரவுதலை மூன்றாக பிரிக்கலாம். எண்டமிக், எபிடமிக் மற்றும் பாண்டமிக்.

எண்டமிக் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த நேரம் வேண்டுமாலும் பரவக்கூடிய வைரஸாகும். உதாரணமாக அம்மை போன்ற விஷயங்களை சொல்லலாம். அதே போல மலேரியா காய்ச்சலையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

எபிடமிக் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிகமாக பரவக்கூடிய நோயாக இருக்கும். உதாரணமாக மழைக்காலத்தில் பலருக்கும் காய்ச்சல் வரும். அந்த குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த வைரஸ் பரவுவது குறைந்துவிடும்.

பாண்டமிக் வகையை சேர்ந்த வைரஸ்கள் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் பரவக்கூடியதாகும். ஒரு நாட்டில் இருந்து மற்ற நாட்டுக்கு இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் பயணிக்கும்போது, அந்த குறிப்பிட்ட நாட்டில் வைரஸ் பரவக்கூடிய சூழல் இருந்தால், அது அங்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
21ஆம் நூற்றாண்டில் ஒரு சில வைரஸ் தாக்குதலால் பல நாடுகள் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் மிகுந்த கவனம் பெற்று, பல உயிர்களை கொன்ற வைரஸ்கள் குறித்து பார்க்கலாம்.

இபோலாவைரஸ்
மனிதக்குரங்குகள், பழந்தின்னி வௌவால்கள் போன்ற விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கும், ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்கும் வேகமாக பரவக்கூடியது இபோலா வைரஸ்.
1976ஆம் ஆண்டு முதன்முதலில் தற்போதைய தென் சூடான் பகுதியிலும், காங்கோ குடியரசு நாட்டிலும் இபோலா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. காங்கோ குடியரசில் இபோலா என்ற நதி அருகே உள்ள ஒரு கிராமத்தை இந்த வைரஸ் தாக்கியதால், இதற்கு இபோலா வைரஸ் என்று பெயரிடப்பட்டது.

  • லைபீரியா, கினியா மற்றும் சியாரா லியோனில் 2013 - 2016 வரை பரவிய இபோலா வைரஸ் தொற்றால் 11,300 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2019ஆம் ஆண்டு ஆகஸ்டில் மீண்டும் ஏற்பட்ட இபோலா தொற்று, மத்திய ஆப்பிரிக்காவில் 1,800 பேரை கொன்றது.
அப்போதைய சூழலை பொது சுகாதார நெருக்கடி நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
திடீர் காய்ச்சல், கடுமையான உடல் சோர்வு, தசை வலி மற்றும் தொண்டை வலி இதன் அறிகுறிகள். நீர்சத்து இழப்பு மற்றும் உறுப்பு செயலிழப்பின் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்படும்.
நிரூபிக்கப்பட்ட தீர்வு அல்லது சிகிச்சை என்று இபோலா வைரஸிற்கு ஏதுமில்லை. இதற்கான மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

சார்ஸ் (SARS)
21ஆம் நூற்றாண்டின் மோசமான நோயாகவும், உலக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாகவும் பார்க்கப்பட்டது சார்ஸ்.
Severe Acute Respiratory Syndrome என்பதுதான் சார்ஸ் என்பதன் பொருள். தீவிர சுவாசப் பிரச்சனைக்கான நோய்க்குறி என்று அர்த்தம்
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பும் கவலை தெரிவித்திருந்தது. மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய சார்ஸ் வைரஸ், கொரோனா வைரஸ் வகையை சார்ந்தது.
  • 2002ஆம் ஆண்டு தென் சீனாவில் உள்ள குவாங்டாங்க் மாகாணத்தில்தான் முதன்முதலில் இந்த தொற்று கண்டறிப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 26 நாடுகளில் 8,000க்கும் மேற்பட்டோருக்கு சார்ஸ் பாதிப்பு ஏற்பட்டதாக உலக சுகாதார அமைப்பின் வலைதளம் கூறுகிறது.
காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் உடல்நடுக்கம் இதன் அறிகுறிகள். இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட இரண்டாம் வாரத்தில் இருமல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு, தீவிரமான சுவாசக் கோளாறில் இது முடியும்.
சார்ஸ் பரவுவது குறித்தும், இதனை கட்டுப்படுத்தவது குறித்தும் உலக சுகாதார அமைப்பு 2003ஆம் ஆண்டு ஜெனீவாவில் உலக நாடுகளுடன் சந்திப்புக் கூட்டம் நடத்தியது.
  • சார்ஸ் வைரஸால் சீனாவில் மட்டும் 774 பேர் உயிரிழந்தனர். இதில் மருத்துவர்களும் அடங்குவர்.
இதனை கட்டுப்படுத்த தவறியதாக சீனாவை ஜ.நா விமர்சித்தது.
தற்போது வரை இதற்கு எந்த சிகிச்சையும் கிடையாது.

ஜிகா வைரஸ்
Aedes எனப்படும் கொசு வகை கடிப்பால் ஜிகா வைரஸ் தொற்று ஏற்படும். இந்த கொசு பகல் நேரத்தில் கடிக்கக் கூடியது.
முதன் முதலில் உகாண்டாவில் 1947ல் குரங்குகளிடம் இந்த வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 1952ல் உகாண்டா மற்றும் தான்சானியாசில் மனிதர்களிடம் இந்த தொற்று கண்டறியப்பட்டது.
பின்னர் 2007ஆம் ஆண்டுதான் மைக்ரொனீசியாவில் உள்ள யாப் எனும் தீவில் இந்த வைரஸ் தொற்று பதிவாகியது. அதனை தொடர்ந்து 2013ல் பிரெஞ்சு பாலினீசியா மற்றும் பசிபிக் எல்லையில் உள்ள மற்ற நாடுகளில் ஜிகா வைரஸ் ஆயிரக்கணக்கான மக்களை தாக்கியது.
  • 2015ல் பிரேசிலில் இந்த வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை உண்டாக்கியது.
கொசுவில் இருந்து பரவக் கூடிய ஜிகா வைரஸ் தொற்று, இதுவரை 86 நாடுகளில் பதிவாகியிருக்கிறது.
Aedes கொசு வகைதான் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களையும் பரப்புகிறது.
காய்ச்சல், தடிப்பு, தசை மற்றும் மூட்டு வலி, தலைவலி ஆகியவை இதன் அறிகுறிகள்.
  • ஜிகா வைரஸிற்கு இதுவரை எந்த சிகிச்சையும் கிடையாது.

நிபா வைரஸ்
நிபா தொற்று விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கடுமையான நோயை உண்டாக்கும் வைரஸாகும். இதன் பிறப்பிடம் `Fruit bats` எனப்படும் பழந்தின்னி வௌவால்கள்.
1998ஆம் ஆண்டு முதன்முதலில் மலேஷியாவில் இந்த வைரசால் நோய் தொற்று ஏற்பட்டது. வௌவால்களிடம் இருந்து பன்றிகளுக்கு இந்த நோய் பரப்பப்பட்டது.
2004ஆம் ஆண்டு வங்க தேசத்தில் பழந்தின்னி வௌவால்கள் கடித்த பனையை சாப்பிட்ட மனிதர்களுக்கு நிபா வைரஸ் பரவியது. ஒரு மனிதரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதும் கண்டறியப்பட்டது.
இந்த வைரஸ் தொற்றால் கடுமையான சுவாசப் பிரச்சனை ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படலாம்.
  • இந்தியாவின் கேரளா மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு நிபா வைரஸ் பரவிய போது, 17 பேர் உயிரிழந்தனர். முக்கியமாக கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இது பரவியது.
நிபா வைரசால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ எந்த தடுப்பூசியும் இல்லை. இதனால் பாதிக்கப்படும் மனிதர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டும்.
காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் தொண்ட வலி ஆகியவை இதன் அறிகுறிகள். மேலும் மயக்கம், நரம்பு பிரச்சனைகளும் ஏற்படலாம்.
இந்த வைரஸிற்கு தற்போது வரை எந்த தடுப்பூசியும் கிடையாது.

பாம்புக் கறியில் இருந்து கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற தகவலால் சைவத்துக்கு மாறும் சீனர்கள்!

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ள நிலையில், ஊஹான் உள்ளிட்ட 13 நகரங்களில் வசிக்கும் மூன்றரை கோடி மக்கள் வெளியேற சீன அரசு தடைவிதித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய ஊஹான் நகர மருத்துவமனைகளில் நீண்ட வரிசை காணப்படுகிறது. கூட்டம் அலைமோதுவதால் பலரும் சிகிச்சை பெற முடியாமல் வீடு திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக மருத்துவமனையை 6 நாளில் கட்டி முடிக்க சீன அரசு பணிகளை துவங்கியுள்ளது.

பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீனா தடை செய்த நிலையில் பலி எண்ணிக்கை 82 ஆக அதிகரித்து அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கையும் 1000 ஆக அதிகரித்துள்ளது.

இதனால் பதறிப்போன சீன அரசு, ஊஹான், ஹூவாங்காங், இசோ உட்பட 13 நகரங்களில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நகரங்களை விட்டு மக்கள் வெளியேறவும் தடை விதித்துள்ளது.

இரண்டரை கோடி பேர் வசிக்கும் ஹூவாங்ஷி நகரில் படகுப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 3.5 கோடி பேரின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பாம்பு கறியிலிருந்து நோய் பரவியிருக்கலாம் என்று சீன விஞ்ஞானிகள் கூறியிருப்பதால், மக்கள் ஊர்வன பறப்பன போன்றவற்றை விடுத்து காய்கறி மார்க்கெட்டுகளை நாடத் தொடங்கியுள்ளனர். எனினும், இதற்கான ஆய்வு முடிவுகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

ஹாங்காங்கிலும் கொரோனா வைரஸ் சோதனைக்காக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தற்போது சிங்கப்பூர் மற்றும் வியட்நாமிலும் பரவியுள்ளது. சீனாவில் இருந்து திரும்பிய 2 ஆயிரம் பேரை தீவிரமாக கண்காணிக்கும் இங்கிலாந்து அரசு யாராவது பாதிக்கப்பட்டவர்களை வீட்டிலேயே அடைத்து வைக்க திட்டமிட்டுள்ளது. இதனிடையே ஊஹான் நகரில் இருந்து இத்தாலிக்கு வந்த பயணிகள் கடுமையான சோதனைக்கு பின்னரே நாட்டிற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் கொரோனா தொற்றை பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்காதது சந்தேகங்களை கிளப்பியுள்ளது.