திங்கள், 22 ஏப்ரல், 2019

இந்திய மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் முக்கிய 2 பேர் பலி


இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் முக்கிய நிர்வகைகள் 2 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியான இந்தியர்கள் 5 பேரில் இருவர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சார்ந்தவர்கள் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மஜக நிர்வாகிகள் 5 பேர் இலங்கை சென்றதாகவும், அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் இன்று காலை கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்த நிலையில் தற்போது இந்த செய்தி வெளியாகியுள்ளது.

நேற்று கொழும்புவில் 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை இன்று மதிய நிலவரப்படி 300 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குண்டுவெடிப்பில் காயமடைந்த 500 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கை மக்களுக்கு மலாலா டிவீட்!

இலங்கையில் நேற்று ஈஸ்டர் பண்டிகைக்காக தேவாலயத்தில் மக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இதில் இந்தியர்கள் மூன்று பேர் உட்பட சுமார் 200 க்கும் மேற்பட்டோர் பலியாகினார். மேலும் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீவிரவாத தாக்குதலில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட பல பகுதிகளில் தொடர்ச்சியாக 8 முறை குண்டுகள் வெடித்தது. இந்த தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா , அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் கண்டணத்தைத் தெரிவித்து வருகின்றனர். 

அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானில் பெண் கல்விக்கு ஆதரவாக போராடி , தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் இருந்து மீண்டு, தற்போது லண்டனில் வசித்து வரும்  மலாலா உலக அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார். இவர் இலங்கை தீவிரவாத தாக்குதல் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். இதில் அவர் கூறுகையில் ஈஸ்டர் திருநாளன்று இலங்கையில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வரும் இவ்வேளையில் இலங்கையில்  தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் , "தீவிரவாதிகள் ஒருவரையொருவர் நேசிக்க மாட்டார்கள் " . 

இதனால் தான் ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தியுள்ளதாக மலாலா அவர்கள் தனது டிவிட்டர் வாயிலாக தெரிவித்தார். உலகம் முழுவதும் தீவிரவாதத்தை அடியோடு ஒழித்து அமைதி என்னும் மகிழ்ச்சி மற்றும் மனநிறைவை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பது அனைத்து மக்களின் கருத்தாக உள்ளது.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

எல்லை தாண்டும் சிலுவை யுத்தம்.

800 வருட பழமையான பாரிஸ் தேவாலயம் எரிந்து இலங்கைக்கு சொன்ன செய்தி. '900' வருட பகைக்கு சம்பந்தமில்லாமல் நீ இலக்காவாய் என்று...

எல்லை தாண்டும் சிலுவை யுத்தம். அவற்றுக்கான வயது 900+.

விரைவில் அலுவல அறிக்கைகளை சர்வதேச தீவிரவாதிகளே வெளியிடுவார்கள். காரணங்களாய் 'நியுசிலாந்து' ஆன்மாக்களுக்காக பரிந்துரைப்பார்கள்.

அதிக சுற்றுலா பயணிகள் வரும் சிறு தேசத்தில் பிற சக்திகளின் அழிவுக்கான களமாக ஏன் தெரிவு செய்யப்பட்டது. 2002 இந்தோனேஷியாவின் பாலி தீவுகளில் நடந்த குண்டுவெடிப்பை ஆராயுங்கள்.

பல்லின மக்கள் வாழும் தேசம், முரண்பாடுகளை கடந்து ஜக்கியப்படும் சந்தர்ப்பங்களை விதைத்த சர்வதேச தீவிரவாதம், இது அரசியலல்ல. மனிதர்களுக்காக பிராத்திப்போம்!

www.amalathaselroy.blogspot.com

Pray for srilanka

'10,917 km' க்கான எதிர்வினைகளா?

'5,697 km' க்கான
10ம், 12ம் நூற்றாண்டு இடைவெளிகளின் களமாற்றங்களா?

Srilanka...!

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

91வது ஆஸ்கர் திரைப்பட விருது

91வது ஆஸ்கர் திரைப்பட விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் சிறந்த படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்ற விழாவை தொகுப்பாளர் இல்லாமல் பிரபலங்கள் தொகுத்து வழங்கினர். 


சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது, Roma திரைப்படத்தை இயக்கிய Alfanzo Cuaron-க்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பொஹிமியான் ரப்சோடி படத்தில் நடித்த ரமி மாலிக்குக்கு வழங்கப்பட்டது. இதேபோன்று, சிறந்த நடிகைக்கான விருது ”தி ஃபேவரைட்” படத்தில் நடித்த ஒலிவியா கால்மேனுக்கு வழங்கப்பட்டது. 


சிறந்த கேமரா ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருது "ரோமா" திரைப்பட ஒளிப்பதிவாளர் அல்ஃபோன்சோ குவாரானுக்கு வழங்கப்பட்டது. இந்த திரைப்படம் 10 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.


சிறந்த படத்தொகுப்பான விருது போகிமியான் ரப்சோடி திரைப்படத்தில் பணியாற்றிய ஜான் ஓட்மேன் என்பவருக்கு வழங்கப்பட்டது. சிறந்த SOUND EDITING-க்கான ஆஸ்கர் விருதையும் “போகிமியான் ரப்சோடி” படம் தட்டிச் சென்றது. இதேபோன்று, சிறந்த SOUND MIXING-க்கான விருதையும் “போகிமியான் ரப்சோடி” வென்றது. 


சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை மெக்சிகோ திரைப்படமான ரோமா தட்டிச் சென்றது. வெனிஸ் திரைப்பட விழாவில் 'கோல்டன் லயன்' பரிசு பெற்ற ரோமா, ஆஸ்கர் விழாவில் வெளிநாட்டு திரைப்படத்தை வெல்லும் ஏன ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. 


சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்துக்கான ஆஸ்கர் விருதை VICE திரைப்படம் படம் தட்டிச் சென்றது. சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருது "Black Panther" படத்திற்காக ரூத் கார்ட்டருக்கு வழங்கப்பட்டது. விருதை ரூத் கார்ட்டர் ஆனந்த கண்ணீருடன் பெற்றுக் கொண்டார். சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் Black Panther தட்டிச் சென்றது.


சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது, IF BEALE STREET COULD TALK படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ரெஜினா கிங் என்பவருக்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகருக்கான விருதை GREEN BOOK திரைப்படத்தில் நடித்த மகெர்ஷலா அலி வென்றார்.


சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது கடந்தாண்டு வெளியான SPIDER-MAN INTO THE SPIDER VERSE திரைப்படத்துக்கும், சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான விருது போ (bao) திரைப்படத்துக்கும் வழங்கப்பட்டது. சிறந்த லைவ் ஆக்சன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது SKIN படத்திற்கு வழங்கப்பட்டது.  


சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான ஆஸ்கர் விருது "ஃபர்ஸ்ட் மேன்" படத்திற்காக பால் லாம்பெர்ட், இயான் ஹண்டர், டிரிஸ்டன் மைல்ஸ், ஜே.டி.ஸ்ச்வாம் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டது.


உண்மை கதையை மையமாக கொண்டு உருவான க்ரீன் புக் திரைப்படத்துக்கு சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதும், பிளாக் க்ளான்ஸ்மேன் திரைப்படத்துக்கு சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதும் வழங்கப்பட்டது. 
 


Period. End of Sentence - ஆஸ்கரை வென்றது.

#Oscars2019: India-based film '#Period. End of Sentence' wins Documentary Short Subject

தமிழர் 'அருணாச்சலம் முருகானந்தம்' பற்றிய குறும்படம் ஆஸ்கரை வென்றது.🏆

மாதவிடாய் காலங்களில் இந்திய பெண்கள் படும் அவதி மற்றும் கோவையைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தத்தின் குறைந்த விலை நாப்கின் குறித்து பேசும் Period. End of Sentence என்ற சிறந்த ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

வட மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பெண்கள் எதிர்கொள்ளும் மாதவிடாய் சார்ந்த பிரச்னை பற்றி Period. End of Sentence ஆவணப்படம் பேசுகிறது. இந்தியாவின் ரியல் பேட்மேன் என அழைக்கப்படும் கோவையைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் கண்டுபிடித்த மலிவு விலை நாப்கின் தயாரிக்கும் இயந்திரம் முக்கிய அம்சமாக இந்த ஆவணப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மலிவு விலை நாப்கின் இந்திய கிராமங்களில் உள்ள பெண்களுக்கு எந்த அளவிற்கு உதவியாக உள்ளது என இந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது.

அருணாசலம் முருகானந்தமும் தனது பங்களிப்பு குறித்து இந்த ஆவணப்படத்தில் பேசியுள்ளார். ஆஸ்கர் விருது வென்ற இந்த ஆவணப் படத்தின் இரு நிர்வாக தயாரிப்பாளர்களில் ஒருவராக இந்தியாவைச் சேர்ந்த Guneet Monga உள்ளார். ஈரான்-அமெரிக்க பெண் இயக்குநர் Rayka Zehtabchi இதனை இயக்கியுள்ளார்.

வியாழன், 21 பிப்ரவரி, 2019

உலக தாய்மொழி தினம் – பிப்ரவரி 21

உலக தாய்மொழி தினம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?


உலகில் வாழும் மக்கள் எல்லோருக்கும் தாய்மொழி என்பது நிச்சயம் உண்டு. இத்தாய்மொழியைச் சிறப்பிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21-ம் நாளை உலக தாய்மொழி தினம் என்று அறிவித்து கடைப்பிடித்து வருகிறது.

உலக மக்களின் தாய்மொழிகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதே இந்நாள் கடைப்பிடிப்பதின் நோக்கமாகும்.

ஒரு மனிதன் தன்னுடைய உணர்வுகளை சக மனிதனுக்கு மொழியாலே தெரிவிக்கிறான்.

குழந்தை தன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தாயின் ஒலியை தாய்மொழி வடிவில்தான் முதலில் அறிகிறது. எனவே தாய்மொழி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் விழி போன்றது.

பல மொழிகளைக் கற்று அறிந்த அறிஞனால் ஏதேனும் ஒன்றை புரிந்த கொள்ள அவன் முதலில் பயன்படுத்துவது தாய்மொழியே ஆகும்.

உலக தாய்மொழி தினம் உருவான விதம்

இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் பிரிந்த பின் உருது பாகிஸ்தானின் அரசு மொழியாக இருந்தது. 1952-ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) மக்கள் வங்கமொழியை அரசு மொழியாக அங்கரீக்க கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கை போராட்டமாக வெடித்த நிலையில் 1952, பிப்ரவரி 21 அன்று தாகாவில் ஊரடங்கு உத்திரவு இடப்பட்டது. உத்திரவினையும் மீறி தாகா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் நான்கு மாணவர்கள் உயிர் நீத்தனர்.

இந்த நான்கு மாணவர்களின் நினைவாக யுனெஸ்கோ நிறுவனம் பிப்ரவரி 21-ஐ உலக தாய்மொழி தினமாக அறிவித்தது.

வங்கதேச அரசின் முயற்சிகள் மற்றும் அனைத்துலக ஆதரவு அமைப்புகள் காரணமாக 1999 பிப்ரவரி 21 அன்று பொது மாநாட்டில் உலக தாய்மொழி தின அறிவிப்பினை யுனெஸ்கோ வெளியிட்டது.

பல்வேறு மக்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைப் பேணுவதையும் மற்றும் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதையும் கொள்கையாகக் கொண்டு இவ்வறிப்பு யுனெஸ்கோவால் வெளியிடப்பட்டது.

2000 ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21-ஆம் நாள் உலக தாய்மொழி தினம் உலகெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு சர்வதேச மொழிகளின் ஆண்டாக அறிவிக்கப்பட்டது.

வங்காளதேச நாட்டில் உலக தாய்மொழி தினம் கடைப்பிடிப்பதற்காக அன்றைய தினம் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்மொழியின் சிறப்பு

தாய்மொழியைப் பயிற்று மொழியாக கொண்ட ஜெகதீஸ் சந்திர போஸ், பி.சி.ராய், எடிசன் உள்ளிட்ட அறிவியல் அறிஞர்கள் பலர் உலகில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கின்றனர்.

ஜப்பானியர்கள், ஜெர்மனியர்கள் போன்றோர் தங்கள் தாய்மொழி மூலம் கல்வி கற்று பொருளாதார தன்னிறைவு பெற்று தாங்களும் முன்னேறி தாங்கள் சார்ந்த நாட்டினையும் முன்னேற்றி வருகின்றனர்.

பல மொழி புலமை பெற்ற பாரதியும் தன்னுடைய தாய்மொழியாம் தமிழ்மொழியானது தான் கற்றறிந்த மொழிகளில் மிகவும் இனிமையானது என “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று குறிப்பிடுகின்றார்.

காந்திஜியும் “குழந்தைக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும் பள்ளியில் தோன்றும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். தெரிந்தறியாத ஒரு மொழியின் மூலம் கல்வி கற்பிப்பது குழந்தைகளின் எண்ணங்களுக்கிடையேயான இணக்கத்தைக் குறைத்துவிடும். எனவே தாய்மொழியே பயிற்று மொழியாக இருப்பது சிறந்தது” என 1917-ல் புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் உரை ஆற்றியுள்ளார்.

இந்திய தேசிய கீதம் இயற்றியவரும், நோபல் பரிசு பெற்றவரும், ஆங்கில மொழியில் கவிதைகளை திறம்பட எழுதியவரும் ஆகிய ரவீந்தரநாத் தாகூரும் தன் தாய்மொழியான வங்களாத்தில் நன்கு புலமைப் பெற்றதாலே கவிதை உலகில் புகழின் உச்சியை தொட்டார்.

காந்திஜியும் தன் சுயசரிதையான சத்திய சோதனையை முதலில் தம் தாய்மொழியிலேயே எழுதினார் என்பதும் தாய்மொழிக்கான சிறப்பாகும். 

தாய்மொழியாம் தமிழின் சிறப்பு

நம்முடைய தாய்மொழியாம் தமிழ் மிகவும் தொன்மையானதும், இனிமையானதும் ஆகும். தமிழில் இயற்றப்பட்ட திருக்குறள் சுமார் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.

தமிழ்மொழி உலகில் தோன்றிய மொழிகளுள் மிகப் பழமையான மொழியாக மொழி ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

தமிழ்மொழி ஏனைய மொழிகளைவிட மிகநீண்ட இலக்கண இலக்கிய மரபுகளை உடையது. அதனாலே தமிழ்மொழிக்கு செம்மொழி என்ற சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது.

இன்றைக்கு இணையத்தில் அதிகம் பயன்படுத்தும் மொழியாகவும் தமிழ் உள்ளது. காலத்தினால் பிறமொழிகளின் ஆதிக்கம் அதிகரித்த போதும் இன்றைக்கும் நிலைத்து வழக்கத்தில் இருக்கும் மொழி தமிழ் என்பது பெருமை கொள்ளத்தக்க விசயமாகும்.

ஒவ்வொருவரும் தம்தம் தாய்மொழியைப் போற்றி பாதுகாக்க உலக தாய்மொழி தினத்தில் உறுதி மொழி ஏற்று அதனை செயல்படுத்த முனைவோம்.

செவ்வாய், 4 டிசம்பர், 2018

உலக மண் தினம்! டிசம்பர் 5


உலகளாவிய ரீதியில் மண்ணின் மகத்துவத்தினை அறியும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதியான உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது.
World Soil Day: 5 December 2018

பாறைகள் சிதைவடைவதன் விளைவால் உருவாகின்ற நுண்ணிய துகள்கள் மண் எனப்படுகின்றது. மண் உருவாக்கத்தில் பிரதானமாக இரு படி முறைகள் காணப்படுகின்றன. மூலப்பாறைகள் வானிலையால் அழிதல் காரணமாக உடைவடைந்து துகள்களாக மாற்றமடைகின்றன. மேலும் நீர் வாயுக்கள், உயிர்வாழ் அங்கிகள், சிதைவடைந்த சேதன பொருட்களின் சேர்வைகள் இவ்வாறான பல காரணிகளின் செயன்முறையினால் மண் உருவாக்கப்பட்டு விருத்தியடைகிறது.

ஒரு பிரதேசத்தின் மண்ணின் அமைப்பு தன்மை முதலியவற்றைக் கொண்டே தான் அப்பிரதேச விவசாய நடவடிக்கைகள் இடம்பெறுமென்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் முன்னேற்றத்துக்கு விவசாயம் முதுகெலும்பு. அந்த விவசாயத்துக்கு முதுகெலும்பாக திகழ்வது மண். உலகில் ஜீவ ராசிகளின் வாழ்க்கைக்குப் புகலிடமாகவும் இருக்கிறது. மண்ணை உயிரற்ற பொருள் என கருது கிறோம். அது தவறு என்கின்றனர் விவசாய வல்லுநர்கள்.

“மண்ணுக்கும் உயிர் உள்ளது. சுவை, நிறம், மணம் உள்ளது. மழை பெய்தால் மணம் வீசும், கையில் எடுத்தால் மற்றொரு மணம் வீசும். நிறத்தின் அடிப்படையில் செம்மண், கரிசல், வண்டல் என மண்ணில் பலவகைகள் உள்ளன. பூமியில் 2.5 செமீ அளவு மண்ணை உருவாக்க இயற்கை 10 ஆயிரம் ஆண்டுகள் நெடிய போராட்டம் நடத்த வேண்டும்” என்கின்றனர். இவ்வளவு பெரிய உழைப்பு தேவைப்படும் மண்ணை, மனிதன் எப்படியெல்லாம் பாதுகாக்க வேண்டும். இந்த மண் வளத்தைப் பாதுகாக்கவும், உறுதி செய்யவும் இதனை விவசாயிகள், மக்களுக்கு நினைவுப்படுத்தவும் ஆண்டு தோறும் டிசம்பர் 5-ம் தேதி உலக மண்வள தினமாக கடைபிடிக்கப் படுகிறது.

மண்ணினால் மனிதர்களுக்கு ஏற்பட்டு வரும் நன்மைகளும் சாதகங்களும் எண்ணற்றவை, ஆனால் மனிதனது சில செயற்பாடுகளால் மண் இன்னமும் அழிவடைந்து செல்கின்றமை இடம்பெற்ற வண்ணமேயுள்ளது என்பது உண்மையான கருத்தாகவே காணப்படுகிறது.


இயற்கையான மண்ணில் பாஸ்பரஸ், சுண்ணாம்பு, இரும்பு, மக்னீசியம், துத்தநாகம், மாங்கனீஸ், பொட்டாசியம் போன்ற கனிம சத்துக்கள் உள்ளன. இன்றைய நிலையில் பெரும்பாலான நிலங்கள் சத்துக்களை இழந்து, நச்சுகளால் விவசாயம் முடங்கியுள்ளது. வேளாண் அதிகாரிகள், இழந்த சத்துக்களை மீண்டும் மண்ணில் சேர்க்க பல்வேறு வழி முறைகளை சொல்லிவருகின்றனர். மண்ணில் இருக்கும் வளத்தை அதிகரித்து, பாதுகாக்க வேண்டும் என்பதையே மண்வள தினம் உணர்த்துகிறது. மண்ணில் சத்துக்கள் குறைந்துவிட்டதால், மழை நீர் நேரடியாக மண்ணுக்குள் இறங்காமல் வழிந்தோடுகிறது.இதனால், மண்ணின் அனைத்து சத்துகளும் பறிபோய், மலட்டுத்தன்மையை பெற்று வருகிறது. இந்நிலை வராமல் இருக்க விவசாயிகள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும். மண்ணில் உள்ள நுண்ணுாட்டச்சத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பொதுவாக மண்ணில், 16 வகை நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. இவற்றை பாதுகாப்பதே மண் தினம் கொண்டாடுவதன் நோக்கம்.

‘மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை, மனிதன் மீது மண்ணுக்கு ஆசை, மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது, இதை மனம்தான் உணர மறுக்கிறது’ என்ற பாடல் நம்மை தாங்கி நிற்கும் மண்ணின் மகத்துவத்தைப் பறைசாற்றுகிறது. பஞ்சபூதங்களில் ஒன்றான நிலத்தின் ஆதாரமாக விளங்கும் மண்ணின் முக்கியத்துவம், அதன் வளம், மனிதனின் வாழ்வில் மண்ணின் பங்கு, மண் இன்றி மனிதன் இல்லை ஆகியவை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது.

மண்ணில் 25 சதவீதம் காற்று, 25 சதவீதம் நீர், 45 சதவீதம் உலோகப் பொருட்கள், 5 சதவீத அங்ககப் பொருள்கள் அடங்கியுள்ளன. மேல் பரப்பில் சுமார் 2.5 செ.மீ. ஆழத்தில் காணப்படும் டாப் சாயில் உருவாக சுமார் ஆயிரம் ஆண்டுகளாகும். மேல்மண் மிகவும் வளம் வாய்ந்தது. விவசாயம் செழிப்படையச் செய்கிறது.

மேல் மண்ணின் தன்மையைப் பொறுத்தே பயிர் விளைச்சல் அமைகிறது. சுமார் ஒரு கிராம் மேல்மண்ணில் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள், பூஞ்சைக் காளான்கள், பல லட்சம் ஆக்டினோமைசீட்ஸ் நுண்ணுயிரிகள் உள்ளன. இந்த நுண்ணுயிரிகள் பெரும்பாலும் நமக்கு நன்மை புரிகின்றன.

மண்ணின் தன்மை அறிந்து பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தற்போது மண் ணின் முக்கியத்துவம் உணராமல் பாழ்படுத்துவதில் முனைப்பு காட் டப்படுகிறது. மண்ணுக்கும், மனிதனுக்கும் இடையே சில வேறுபாடுகள்தான் உள்ளது.

மண்ணுக்கும் உயிர் உண்டு. மனித உடலில் நடைபெறும் பல்வேறு வகையான வினை சார்ந்த செயல்களான செரிமானம், சுவாசம், வெப்பநிலை வேறுபாடு போன்றவை மண்ணிலும் நடைபெறுகின்றன. எண்ணிலடங்கா உயிரினங்களின் ஆத்மாக்களின் கலவைதான் மண். பெற்றோரின் குணாதிசயங்களை மனிதன் பிரதிபலிப்பது போல, பாறையின் குணாதிசயத்தை மண் பிரதிபலிக்கிறது.

மனித உடலில் உள்ள செரிமான சக்தியைப் போல், மண்ணில் பிளாஸ்டிக் தவிர்த்து அனைத்து பொருட்களும் செரிமானம் அடைந்து உருமாற்றம் பெறுகிறது. மனிதன் காற்றை சுவாசித்து கார்பன்-டை- ஆக்சைடை வெளியிடுவது போல மண்ணிலும் நடைபெறுகிறது. மனிதன் உடல் பெரும்பாலான பகுதி நீரால் நிரப்பப்பட்டது. மண்ணில் நான்கில் ஒரு பங்கு நீர் உள்ளது.

மண் சிந்தனை ஏதுமின்றி தன்னாலான பங்களிப்பை உலகுக்கு வழங்கி வருகிறது. மனிதர்களால் பல்வேறு இடையூறுகளை சந்தித்த போதிலும், எந்தவித வேறுபாடும் காட்டாமல் மனிதனை தாங்கி நிற்கிறது மண். மண் நிரந்தரமானது. நாட்டின் முன்னேற்றத்துக்கு, மேம்பாட்டுக்கு மரங்கள் மட்டுமின்றி மண் வளமும் இன்றியமையாதது.

இதை உணர்ந்தே நமது மூதாதையர்கள் மரங்களோடு இணைந்து, மண் வளம் நிரம்பிய நிலங்களில் பயிர் சாகுபடி, அங்கிருந்து பெற்ற தரமான உணவுகளை உட்கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தினர். அந்த மகிழ்வான வாழ்வு மீண்டும் வர வேண்டும். மண்ணின் வளத்தை பாதுகாக்க வேண்டும்.

இந்த மண்ணில் பிறந்து, மண்ணில் விளையாடி மண்ணில் வீடுகட்டி, மண்ணில் விளைந்த உணவை உண்டு வளர்ந்து, கடைசியாக இறந்த பின்னும் இந்த மண்ணிலே மக்கிப் போகக் கூடிய நாம் தற்போது மண்ணைப் பற்றி, சிந்திக்க வேண்டிய கடமையை ஐக்கிய நாடுகள் சபை நமக்கு அளித்திருக்கிறது. எனவே மனிதனின் பேராசை மற்றும் பொறுப்பற்ற தன்மையால் மண் தொடர்ந்து தனது வளத்தை இழந்து வருகிறது. விருப்பு, வெறுப்பு இல்லாமல் மனிதனை தாங்கி நிற்கும் மண்: இன்று உலக மண் தினம் எனவே மண் வளத்தை பாதுகாக்க நாமும் முற்படுவோம்