சனி, 10 மார்ச், 2018

ஏலியன் நம் கடவுள்!

ஏலியன்களுடைய பறக்கும் தட்டுக்கு கண்களை விரித்து ஆச்சரியப்படுகிறோம். ஆனால், ஏலியன்களுடைய கிரகத்துக்கே போய், அவங்களோட தங்கி, சாப்பிட்டு, பொரணிப் பேசிவிட்டு வந்த ஒருத்தர் இருக்கிறார். அவர் பெயர், கிளாட் வொரிலன். ஊர், பிரான்ஸ் நாட்டின் விச்சி நகரம். கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக, ஏலியன்களைப் பற்றி விதவிதமான கதைகளைச் சொல்லும் இவர், ஏலியன்களை நம்பும் ‘ரெய்லிஸம்’ என்ற மதத்தின் நிறுவனர். ஏலியன்களைச் சந்தித்தது பற்றியும், ரெய்லிஸம் மதத்தைப் பற்றியும் ஏராளமான புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். சாருக்கு இருக்கும் இன்னொரு பெயர், ‘ரெய்ல்’. சரி, கதையைக் கேட்போமா?

பிரான்ஸ் நாட்டில் வாகனங்களைப் பற்றிய ‘ஆட்டோ-பாப்’ இதழில் டெஸ்ட் டிரைவிங் செய்து கட்டுரை எழுதும் பத்திரிகையாளராக இருந்த கிளாட்டுக்கு, கார் ரேஸிங் மீது சிறுவதில் இருந்தே பிரியம். 1973-ல் ஒருநாள், பிரான்ஸின் எரிமலைப் பகுதி ஒன்றில் காரை பார்க்கிங் செய்துவிட்டு, ஜாக்கிங் சென்றுகொண்டிருக்கும்போது திடீரென கூம்பு வடிவ பறக்கும் தட்டு ஒன்று இவரை நோக்கி வந்ததாம். ‘அட, சத்தமே இல்லாத ஒரு வாகனமா?’ என ஆச்சரியத்தோடு அருகே சென்றவருக்கு, மற்றொரு ஆச்சரியம். உள்ளிருந்து இறங்கியது ஒரு ஏலியன். கருப்பு முடி, பச்சை வண்ண உடையோடு வந்த அந்த உருவத்தைப் பார்த்து தலைதெறிக்க ஓடாமல், நின்று நிதானமாகப் பேசியிருக்கிறார் கிளாட். ‘எங்கே இருந்துப்பா வர்ற?’, ‘நான் பேசுறது உனக்கு எப்படிப் புரியுது?’ என கேஷூவலாகப் பேசிக்கொண்டு இருந்தார்களாம். அப்போ, ஏலியன் சொன்ன கதை என்ன தெரியுமா?

‘‘நான் பூமிக்கு வெகுதொலைவுல இருக்கிற கிரகத்துல இருந்து வர்றேன். அங்கே, ஏழு பில்லியன் ஏலியன்கள் வசிக்கிறாங்க. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னாடி சில விஞ்ஞானப் பரிசோதனை செய்றதுக்காக பூமிக்கு வந்தோம். அப்போதான், செடி, கொடிகளோட சேர்த்து மனிதர்களையும் உருவாக்கினோம். அப்போ மனிதர்கள் சிலர் எங்களோட தொழில்நுட்பத்தைத் தெரிஞ்சுக்க முயற்சிக்கவே, சில ஏலியன்கள் அவங்களுக்குச் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அவங்களையெல்லாம் விட்டுட்டு, நாங்க எங்க கிரகத்துக்கு வந்துட்டோம். ஆனா, என்னைக்காவது மனிதர்கள் எங்களை அழிக்க வந்துட்டா என்ன பண்றதுனு எங்க கிரகத்துல இருக்கிற ‘அரசாங்கம்’ பயந்துச்சு. சரி, ஒட்டுமொத்தமா பூமியையே அழிச்சுடலாம்னு அழிச்சுட்டோம். ஆனா, சில மனிதர்கள் எங்களுக்குத் தெரியாம, எல்லா உயிரினங்களிலும் ஒவ்வொரு ஜோடியை எங்கேயோ ஒளிச்சி வெச்சிருந்தாங்க. தவிர, ஒரு விண்கலத்தையும் தயாரிச்சு வெச்சிருந்தாங்க. ஏன்னா, ‘ஏலியன்களைப் பத்தி தெரிஞ்சுக்க ஆசைப்பட்டது தப்புதான்’னு மன்னிப்பு கேட்க!’’ என்று சிரித்திருக்கிறது அந்த ஏலியன். தவிர, ‘‘நீ ஒரு இயக்கம் ஆரம்பிக்கணும். நாங்கள்தான் உங்களைப் படைச்ச கடவுள்னு உலகத்துல இருக்கிற எல்லா மக்களுக்கும் சொல்லணும். அப்போதான், உலகத்துல எந்தச் சண்டையும் நடக்காம இருக்கும்!’’ எனச் சொல்லிவிட்டுக் கிளம்பியது. புல்லரித்த உணர்வோடு, ‘ரெய்ல்’ என்ற பெயரில் உடனடியாக, ஏலியன் புகழ்களைப் பரப்ப ஆரம்பித்தார் கிளாட். சில வருடங்கள் கழித்து, இவரது பரப்புரைகளில் திருப்தியடைந்த ஏலியன்கள் மீண்டும் ஒருமுறை பூமிக்கு வந்து, ரெய்லை அவர்களுடைய கிரகத்திற்கு அழைத்துச்சென்று விருந்து வைத்திருக்கிறார்கள்.

இந்த அனுபவத்தை ‘இன்டலிஜென்ட் டிசைன் (Intelligent Design)’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டு, ‘நான் ஏலியன் கிரகத்துக்குப் போனேனே!’ என டான்ஸைப் போடாமல், ‘ரெய்லிஸம்’ என்ற புது மதத்தை உருவாக்கி, ஏலியன்களைக் கும்பிடுவதை வழக்கமாக்கிக்கொண்டார். கூடவே, ‘அந்தக் கிரகத்துல இயேசுவைப் பார்த்தேன். முகமது நபியைப் பார்த்தேன். புத்தரைப் பார்த்தேன்’ எனத் திண்ணையில் உட்கார்ந்து பேச, கூட்டமும் கூடியது. 1974-ல் ஏலியன்கள் மட்டும்தான் கடவுள் என்று சொல்லும் ரெய்ல், அதற்காக ஒரு மதம், கோட்பாடு, விதிமுறை என பக்கா செட்டப்போடு நிதி திரட்ட ஆரம்பித்தார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இவரது சிஷ்யகோடிகளும் கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்க, சகல வசதிகளும் கொண்ட பெரிய மாளிகையைக் கட்டி, பால் காய்ச்சினார். ‘ஏலியன்கள் பூமிக்கு வரும்போது, இங்கதான் தங்கிட்டுப் போவாங்க!’ என்பது இந்த மாளிகைக்கு ரெய்ல் சொல்லும் காரணம். 

பிறகென்ன? ‘ஏலியன்களின் அருள்பெற அணுகுவீர்’ என்ற போர்டு மாட்டாத குறையாக, அடிக்கடி ஏலியன்களைச் சந்திப்பதாக, ஏலியன்களைப் பார்த்துவிட்டு வருவதாக, ஏலியன்கள் நலம் விசாரித்ததாக... பக்தர்களிடம் சொல்லி பரவசப்படுத்திக் கொண்டிருக்கிறார். இவருடைய ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம், மனிதர்களை ‘குளோனிங்’ முறையில் உருவாக்கிவிட்டதாகச் சொல்லி அரசாங்கத்தைப் பதறவைத்துக்கொண்டும் இருக்கிறார். 

இதுமட்டுமா? ஏலியன்களுக்காக ‘கெஸ்ட் ஹவுஸ்’ கட்டியிருக்கிறார். ஏலியன்கள் செய்யும் தியானம் என்று, தியான வகுப்புகளை நடத்துகிறார். பிரபாகரனைச் சந்தித்த சாகசப் பயணத்தை சீமான் விளக்கும் விதமாக, ஏலியன்களைச் சந்தித்த விதத்தை அடிக்கடி தொலைக்காட்சிகளில் தோன்றி விளக்கிக்கொண்டிருக்கிறார். 69 வயதான ரெய்லுக்கு, 107 நாடுகளில் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். 2035-க்குள் ஏலியன்களுக்காவே பிரமாண்டமான ஒரு ‘தூதரகம்’ கட்ட வேண்டும் என்ற இலக்கோடு, பூமி பூஜை போட்டிருக்கிறார்!

‘ஏலியன்’களை நேரில் சந்தித்தால் என்ன செய்வது?

மனிதன் உள்பட இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் இறந்தே தீர வேண்டும் என்பதுதான் இதுவரையிலான உலக நியதி.

மனிதன் உள்பட இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் இறந்தே தீர வேண்டும் என்பதுதான் இதுவரையிலான உலக நியதி. இந் நிலையில், கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில், பிரபல விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங், ‘இன்னும் ஆயிரம் வருடங்களில் பூமியும், அதிலுள்ள மனித இனம் உள்ளிட்ட அனைத்து உயிரினமும் அழியும்’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

அந்த கணிப்பு வெளியான ஒரு வருடத்துக்குள்ளாக, ‘இன்னும் 100 வருடங்களில் பூமி அழியும்’ என்ற ஒரு அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

பூமி எப்படி அழியும் என்று ஹாக்கிங் இன்னும் விவரிக்காத நிலையில், ‘1000 வருடங்களை திடீரென்று பத்து மடங்கு குறைத்து, 100 வருடமாக குறைக்கும் அளவுக்கு இந்த ஒரு வருடத்தில் பூமியில் அப்படி என்ன நிகழ்ந்துவிட்டது?’ என்று உலகின் பல அறிவியலாளர்கள் யோசித்து வருகிறார்கள்.

புவி வெப்பயமாதல் உள்ளிட்ட ஆபத்தான பருவநிலை மாற்றங்கள், மனித இனத்தை அழித்துவிடும் ஆபத்துகள் நிறைந்த செயற்கை நுண்ணறிவு எந்திரங்கள் மற்றும் பூமியின் மீதான ஏலியன் தாக்குதல் ஆகியவற்றை பூமி அழிவுக்கான காரணங்களாக ஹாக்கிங் குறிப்பிடுவார் என்று கருதப்படுகிறது.

இவற்றில் பருவநிலை மாற்றங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு எந்திரங்கள் மூலமான ஆபத்துகளை இதுவரையிலான ஆய்வுகள் மூலமாக நம்மால் ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடியும். ஆனால், ஏலியன் என்ற ஒரு இனம் இருக்கிறதா? அப்படி இருக்கும் பட்சத்தில் ‘ஹியூமனாய்டு ரோபாட்டுகள்’ போல இருக்குமா? அல்லது முற்றிலும் பரிச்சயமில்லாத வேறு வடிவத்தில் இருக்குமா? அடுத்து, அவை எப்படி இருந்தாலும், அவற்றை நண்பர்களாக பார்ப்பதா அல்லது எதிரிகளாக பாவிப்பதா? இப்படி ஏலியன்கள் தொடர்பான பல கேள்விகள் நம்மிடம் உள்ளன. இது தவிர, ஸ்டார் வார்ஸ் போன்ற திரைப்படங்களில் உள்ள கற்பனை ஏலியன்களை மட்டும்தான் நம்மில் பலருக்கும் தெரியும்.

அமெரிக்காவின் நாசா மற்றும் ஏலியன் ஆய்வு நிறுவனமான எஸ்.இ.டி.ஐ. (SETI Search for Extra Terrestrial Intelligence) ஆகியவற்றின் கடந்த பல வருட ஏலியன் ஆய்வுகளில் ஏலியன்களின் மொழியாகக் கருதப்படும் சில ரேடியோ அலைகள் மற்றும் ஏலியன் இருப்பதைக் குறிக்கும் சில மூலக்கூறுகள் என சொற்ப ஆதாரங்களே நம்மிடம் இருக்கின்றன.

இந்நிலையில், ஏலியன் ஆதாரங்கள் என்று சேகரிக்கப்படும் தகவல்களை நான்கு விதிகளைக் கொண்டு 1 முதல் 10 வரையிலான எண்ணிக்கை மூலம் உறுதி செய்யும் ‘ரியோ ஸ்கேல்’ (Rio Scale) எனும் அளவுகோல் ஒன்றை கண்டறிந்துள்ளனர் எஸ்.இ.டி.ஐ.யின் ஆய்வாளர்கள்.

அதெல்லாம் சரி, இந்த அளவுகோலின் அடிப்படையில் 5 அளவு கொண்ட ஒரு ஏலியனை திடீரென்று எதிர்கொள்ள நேர்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது என்ன செய்வது?

பூங்கொத்து ஒன்றைக் கொடுத்து ‘வாங்க ஏலியன் ஐயா, வாங்க! நல்லாயிருக்கீங்களா? என்ன சாப்பிடுறீங்க? டீயா இல்ல காபியா?’ என்று வீட்டுக்கு அழைத்து விருந்தோம்பல் செய்ய வேண்டுமா? அல்லது ஏலியனை சந்தித்த உடனே முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு, ‘யார் நீ? யாரைக் கேட்டு பூமிக்குள் அடியெடுத்து வைத்தாய்? இப்போது உன்னை என்ன செய்கிறேன் பார்’ என்று விரட்டி அடிக்க வேண்டுமா? என்பது குறித்து தற்போது வரை ஒரு தெளிவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதும், ‘ஏலியனீஸ்’ எனும் ஒரு மொழியில் பூமி மற்றும் மனிதர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் பூமியின் வரைபடம் மற்றும் ஆகியவை கொண்ட பயோனியர் விண்கலத்தை தூரத்து நட்சத்திரங்களுக்கு நாசா அனுப்பியுள்ளது. ஆனால் ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்ட சில விஞ்ஞானிகள் இம்மாதிரியான ஏலியன் தொடர்பு முயற்சிகள் நன்மையை விட ஆபத்தையே ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர்.

ஏனென்றால், செயற்கை நுண்ணறிவை விட பல மடங்கு சக்திவாய்ந்த தொழில்நுட்பங்களை கைவசம் வைத்திருப்பதாகக் கருதப்படும் ஏலியன்கள், நாம் பாக்டீரியா போன்ற நுண்ணியிரிகளை அற்பமாகப் பார்ப்பது போலவே, நம்மை துச்சமாக எண்ணி துடைத்தெறியக் கூடும் என்று அச்சப்படுகின்றனர். எது எப்படி இருந்தாலும், நாசாவின் கார்ல் செக்கன் உள்ளிட்ட உலகின் பெரும்பாலான விஞ்ஞானிகள் ஏலியன் ஆய்வுகள் மனித குலத்துக்கு நன்மையையே ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்புகின்றனர் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. 

தமிழக காடுகளை மரபியல் ரீதியாக மாற்ற 385 குழுக்கள் தமிழக வனத்துறை நடவடிக்கை

அழிந்து வரும் அரிதான இனங்களை பாதுகாக்க தமிழக காடுகளை மரபியல் ரீதியாக மாற்ற 385 குழுக்கள் அமைக்க தமிழக வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அழிந்து வரும் அரிதான இனங்களை பாதுகாக்க தமிழக காடுகளை மரபியல் ரீதியாக மாற்ற 385 குழுக்கள் அமைக்க தமிழக வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து தமிழக வனத்துறை தலைமை வனபாதுகாவலர் உதயன் கூறியதாவது:-

தமிழக காடுகளில் உள்ள வளங்களை மேலாண்மை செய்வதற்காக ‘பல்லுயிர் வாரியம்’ அமைக்கப்பட்டு உள்ளது. பொருளாதார மர வளங்களை கண்டறிந்து அவற்றின் வள ஆதாரங்களை மேம்படுத்துவதே மாநில வனவியல் திட்டத்தின் நோக்கமாகும்.

இயற்கை வளங்களை மேம்படுத்துவதற்காக, அரிதான மற்றும் அழியும் நிலையில் உள்ள இனங்களை பேணி பாதுகாத்தல், வனத்தின் மறுசீரமைப்பு மற்றும் தர மேம்பாடு ஆகியவை மாநில வனத்தின் பல்லுயிரினை செறிவூட்டுதலுக்கு நோக்கங்களாக அமைந்துள்ளன.

தமிழகத்தில் 30.92 சதவீதம் வனப்பரப்பாகும். அதாவது சுமார் 7 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பு பாதுகாக்கப்பட்ட பகுதியின் கீழ் வருகிறது. களக்காடு, முண்டந்துறை, ஆணைமலை, முதுமலை, சத்தியமங்கலம் ஆகிய விலங்குகள் காப்பகங்கள் தவிர, 5 தேசிய பூங்காக்கள், 15 வன உயிரின சரணாலயங்கள், 15 பறவைகள் சரணாலயங்கள், 2 பாதுகாக்கப்பட்ட ஒதுக்கு பகுதிகள் ஆகியவை இதில் அடங்கி உள்ளன.

நீலகிரி, மன்னார் வளைகுடா, அகஸ்தியர்மலை ஆகிய 3 உயிர்கோள் காப்பகங்கள் சர்வதேச அளவில் உயிர்ப்பன்மை செழுமைக்கு பெயர் பெற்றுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி உலகின் 25 முக்கியமான உயிர்ப்பன்மை தலங்களில் ஒன்றாகும்.

இந்த வனஉயிரின செல்வங்களை மேம்படுத்துவதற்காக உயிரினங்களின் சுற்றுச்சூழல் தேவைகள் மற்றும் நிலப்பரப்பு சார்ந்த சீர்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வனஉயிரினங்களும், வனப்பகுதிகளின் அருகில் வசிக்கும் பொதுமக்களும் ஒருங்கிணைந்து பயனடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மாநிலம் முழுவதும் உள்ள காடுகளில் அழிந்து வரும் அரிதான இனங்களை பாதுகாக்க காடுகளை மரபியல் ரீதியாக மாற்ற 385 குழுக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குழுவிலும் 7 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேர்வு செய்து கலெக்டருக்கு பரிந்துரை செய்வார். இறுதி தேர்வு பட்டியலை கலெக்டர் வெளியிடுவார். இந்த குழுக்கள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது வனப்பகுதி மேம்படுவதுடன், வனத்தை சுற்றி வசிப்பவர்களின் வாழ்க்கை தரமும் உயரும். ‘அணுகுதல் மற்றும் பயன்களை சமபங்கிடுதல் கூட்டுத்திட்டம்’ என்ற தமிழக வனம் தொடர்பான திட்டம் ஜெர்மனியின் பொருளாதார ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி, 9 மார்ச், 2018

உலக சிறுநீரக தினம்: சிறுநீரக நோய் குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு

உலக சிறுநீரக தினமான இன்று சிறுநீரக நோய் குறித்து விழிப்புணர்வு பெண்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. #WorldKidneyDay

சிறுநீரக நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

சிறுநீரக நோயானது பெண்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாட்பட்ட சிறுநீரக நோயினால் உலகளாவிய அளவில் சுமார் 195 மில்லியன் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் இறப்பதற்கு காரணமான நோய்களில் நாள்பட்ட சிறுநீரக நோய் எட்டாவது இடத்தில் உள்ளது. ஆண்களில் 12 சதவீதம் பேரும், பெண்களில் 14 சதவீதம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்ப்பிணி பெண்களுக்கு  உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் இந்நோய் பெண்களை எளிதாக தாக்குகிறது. 

இந்த ஆண்டு சிறுநீரக தினம் உலக மகளிர் தினத்துடன் ஒன்றிணைந்து கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பெண்களிடையே சிறுநீரக நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. #WorldKidneyDay

“வாட்டர் கேட்” ஊழல் 

அமெரிக்காவில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 ஆண்டுகளே. ஒருவர் இருமுறை பதவி வகிக்கலாம். 1968 முதல் 1974 வரை ஜனாதிபதியாக இருந்தவர் நிக்சன். குடியரசு கட்சியைச் சேர்ந்த அவர் தன்னுடைய 55வது வயதில் 1968ல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 1972ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் நிக்சன் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அப்போது அவர் மீது ஊழல் புகார் ஒன்றை எதிர்க்கட்சியினர் கூறினர். ஜனநாயக கட்சி (எதிர்க்கட்சி) தலைமையகம் இயங்கும் “வாட்டர் கேட்” மாளிகையில் ரகசியமாக ஒலிப்பதிவு கருவிகளைப் பொருத்தி, அந்த கட்சியினரின் உரையாடல்களைப் பதிவு செய்து, அவர்களுடைய தேர்தல் வியூகம் பற்றி தெரிந்து கொண்டார் என்பதே நிக்சன் மீதான குற்றச்சாட்டு ஆகும். இந்த விவகாரம் 1974ம் ஆண்டு மத்தியில் விசுவரூபம் எடுத்தது. இந்த குற்றச்சாட்டை தொடக்கத்தில் நிக்சன் மறுத்து வந்தார்.

இதுபற்றி பூர்வாங்க விசாரணை நடத்திய பாராளுமன்ற குழு “நிக்சன் குற்றவாளி! அவரை பதவியில் இருந்து நீக்க, அமெரிக்க சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரலாம்” என்று சிபாரிசு செய்தது.

அமெரிக்க அரசியல் சட்டப்படி, ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்க வேண்டுமானால், அதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் பாதிக்கு மேற்பட்டவர்களின் ஆதரவுடன் நிறைவேற வேண்டும். அதன் பிறகு மேல்_ சபையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற வேண்டும். அப்போதுதான் ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்க முடியும்.

ஆனால் நிக்சனை பதவியில் இருந்து நீக்காமல், அவருடைய போக்கை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினால் போதும் என்று ஒரு பகுதியினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், பாராளுமன்றத்தில் உள்ள நிக்சனின் ஆதரவாளர்கள் பலரும், அவர் பதவி விலகுவதுதான் நல்லது என்று கருத்து தெரிவித்தனர். அதன் மூலம்தான், நிர்வாகத்தில் ஏற்பட்ட குறையை போக்க முடியும் என்றும் கூறினார்கள்.

இந்த நிலையில் நிக்சன் திடீர் என்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், “நான் குற்றவாளி” என்றும் ஒப்புக்கொண்டார்.

நிக்சனின் அறிக்கை வருமாறு:-
“இந்த ஊழல் வழக்கில் நான் குற்றவாளி. நடைபெற்ற தவறுகளுக்கெல்லாம் நான்தான் பொறுப்பு. அதற்காக வருந்துகிறேன். எதிர்க்கட்சி தேர்தல் அலுவலகத்தில் ஒட்டு கேட்கும் வேலை என் அனுமதியுடன்தான் நடந்தது. இந்த ஊழல் பற்றி ரகசிய போலீசார் விசாரணை தொடங்கியபோது அதை தடுக்கவும் திட்டமிட்டோம். எல்லா உண்மைகளையும் என் வக்கீலிடமும், என் உதவியாளர்களிடமும் மறைத்துவிட்டேன். இந்த குற்றத்திற்காக என்னை பதவி நீக்கம் செய்வது நியாயம் அல்ல.” இவ்வாறு நிக்சன் கூறியிருந்தார்.

இந்த திடீர் அறிவிப்பு நிக்சனின் தீவிர ஆதரவாளருக்கு பெரும் அதிர்ச்சியூட்டியது.

“நான் குற்றவாளி” என்று நிக்சன் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மந்திரிசபையின் அவசர கூட்டத்தை அவர் கூட்டினார். மந்திரிசபை கூட்டத்தில் நிக்சன் பேசும்போது, “நான் பதவியில் இருந்து ராஜினாமா செய்யமாட்டேன். தொடர்ந்து ஜனாதிபதியாக இருப்பேன்” என்று அறிவித்தார்.

உண்மையை ஒப்புக்கொண்டால், தனக்கு மன்னிப்பு கிடைக்கும் என்று நிக்சன் நம்பினார். ஆனால் அது நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்தின. நிக்சனுக்கு ஆதரவாக இருந்த சிலரும், அவருக்கு எதிராக மாறினார்கள். நிலைமை விபரீதமாக போய்க்கொண்டிருந்ததால் நிக்சனின் குடியரசு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கூடி ஆலோசனை செய்தார்கள். நிக்சனின் முக்கிய ஆதரவாளர்கள் என்று கருதப்படும் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.

பதவியில் இருந்து நிக்சன் விலகவேண்டும் என்று அவர்கள் அனைவருமே கருத்து தெரிவித்தார்கள். “பதவியை விட்டு நீங்களே (நிக்சன்) விலகிவிடுங்கள் அல்லது நாங்கள் உங்களை பதவியில் இருந்து நீக்கவேண்டியது இருக்கும்” என்று அவர்கள் ஒரு தூதுக்குழுவை அனுப்பி நிக்சனிடம் தெரிவித்து விட்டார்கள்.

குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகும் ஜனாதிபதி மீது அவர் செய்த குற்றத்துக்காக கோர்ட்டில் வழக்கு தொடரமுடியும். ஆனால், நிக்சன் அவராக ராஜினாமா செய்வதால் அவர் மீது வழக்கு தொடராமல் விட்டு விடலாம் என்று அமெரிக்க மேல் சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

9_8_1974 அன்று அதிகாலை 6_30 மணிக்கு நிக்சன் டெலிவிஷனில் தோன்றி தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார். ராஜினாமா கடிதத்தை வெளிநாட்டு இலாகா மந்திரி கிசிங்கரிடம் கொடுத்தார். பிறகு ராஜினாமா ஏற்கப்பட்டது.
“ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்ற ஒரு வரியை மட்டும் எழுதி கீழே கையெழுத்து போட்டிருந்தார்.
அமெரிக்க அரசியல் சட்டப்படி ஜனாதிபதி பதவியை விட்டு விலகினால், துணை ஜனாதிபதி, ஜனாதிபதியாக பதவி ஏற்க வேண்டும். அதன்படி இதுவரை துணை ஜனாதிபதியாக இருந்த ஜெரால்டு போர்டு ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.

புதிய ஜனாதிபதி பதவி ஏற்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே, நிக்சனும், அவர் குடும்பத்தினரும் ஜனாதிபதி மாளிகையை (“வெள்ளை மாளிகை”) காலி செய்துவிட்டு வெளியேறினார்கள். சிப்பந்திகளிடமும், அதிகாரிகளிடமும் விடைபெறும்போது நிக்சனின் மனைவி _ மகள்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். சிப்பந்திகளும் அழுதார்கள். நிக்சன் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது. “நண்பர்களே, போய் வருகிறேன். உங்கள் அன்பை என்றும் மறக்கமாட்டேன்” என்று கூறினார்.

சொந்த ஊரான கலிபோர்னியாவில் சென்று குடியேற நிக்சன் விரும்பினார். இதனால் ஹெலிகாப்டர் விமானம் மூலம் நிக்சனும், குடும்பத்தினரும் புறப்பட்டுச் சென்றனர். பதவி விலகியது பற்றி நிக்சன் கூறியதாவது:-
“என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை எதிர்த்து இறுதிவரை என்னால் போராடமுடியும். அதையே என் குடும்பத்தினரும் விரும்பினார்கள். ஆனால் நான் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக நாட்டு நிர்வாகத்தின் முழு நேரத்தையும் பாராளுமன்றத்தின் பணியையும் இந்த விசாரணைக்காக வீணாக்க விரும்பவில்லை. என் வாழ்க்கையே போராட்டத்தில் தொடங்கியதுதான். என் மனதிற்கு நியாயம் என்று எது படுகிறதோ, அதற்காக போராடி இருக்கிறேன். சில சமயம் போராட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறேன். சில சமயம் தோல்வி அடைந்திருக்கிறேன். அதில் இதுவும் ஒன்று. நான் பதவியில் இருந்து விலகிச் சென்றாலும் சமாதானத்துக்காக தொடர்ந்து பாடுபடுவேன்” என்று கூறி இருந்தார்.

பதவியை இழந்தபோது நிக்சனுக்கு வயது 61. வக்கீல் பட்டம் பெற்ற அவர், கடற்படை அதிகாரியாகவும் பணியாற்றினார். 1946_ல் அரசியலில் குதித்து, 1952_ம் ஆண்டு ஐசனோவர் ஜனாதிபதி ஆனபோது நிக்சன் துணை ஜனாதிபதி ஆனார். 8 ஆண்டுகள் துணை ஜனாதிபதியாக நீடித்தார். 1960_ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் கென்னடியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பிறகு 1968_ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியானார். நிக்சனின் மனைவி பெயர் பேட்ரிசியா. இவர்களுக்கு டிரிசியா, ஜுலியா என்ற 2 மகள்கள் இருந்தனர்.

டெயில் பீஸ்

ராஜினாமாவுக்கு பிறகு நிக்சனுக்கு மிகுந்த பண நெருக்கடி ஏற்பட்டது. அவருக்கு ரூ.11 லட்சத்து 84 ஆயிரம் வரி பாக்கி இருப்பதாக ரெவின்யூ இலாகா அறிவித்தது. அதே நேரத்தில் நிக்சனை பதவியில் இருந்து விரட்டுவதற்கு காரணமாக இருந்த கார்ல் பெர்ன்ஸ்டன், பாப்உட் ஆகிய இரண்டு நிருபருக்கும் பணம் வந்து குவியத்தொடங்கியது. ஜனாதிபதி தேர்தல் ஊழல் பற்றி இவர்கள் இருவரும் தான் முதலில் செய்தி வெளியிட்டு அதை பெரும் பிரச்சினையாக மாற்றினார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து எழுதத்தொடங்கிய ஒரு புத்தகத்துக்கு ரூ.1 கோடி தருவதாக ஒரு நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.

நிக்சன் ராஜினாமா பற்றி இங்கிலாந்து, இந்தியா, மேற்கு ஜெர்மனி, மெக்சிகோ, பிரேசில், இஸ்ரேல் போன்ற நாடுகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. குடியரசு கட்சியினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். குடியரசு கட்சித் தலைவர் ஜான்ரோட்ஸ் கூறுகையில், “ஒரு பெரிய பிரச்சினை ஓய்ந்தது” என்று குறிப்பிட்டார். நிக்சனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த ஜார்ஜ் மக்கவர்ன் (ஜனநாயக கட்சி) கூறும்போது, “இது அமெரிக்காவுக்கும், நிக்சனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் துன்பமான நேரம்” என்று தெரிவித்தார்.

ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன?

மின்சாரம் உருவாக்கும் மின்புலம் (electric field), காந்தம் உருவாக்கும் காந்தப் புலம் (magnetic field) ஆகியவற்றுக்கு இடையேயான உறவைக் கவனித்து, அவற்றை கோட்பாடு ரீதியாக ஒருங்கிணைத்து மின்காந்தப் புலம் (electromagnetic field) என்பதை முன்வைத்தார் பிரிட்டிஷ் விஞ்ஞானி, ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல். அதிலிருந்து மின்காந்த அலைகள் என்று ஏதேனும் இருக்கவேண்டும் என்று மேக்ஸ்வெல் சொன்னார். பின்னர் மேக்ஸ்வெல், ஒளி அலைகளும் மின்காந்த அலைகள்தான் என்ற கருத்தை வெளியிட்டார்.

நம் கண்ணில் படும் பல்வேறு நிறங்களைக் கொண்ட ஒளி அலைகள் யாவுமே மின்காந்த அலைகள்தாம். சூரிய ஒளி (வெள்ளை), ஒரு முக்கோணப் படிகம் வழியாகச் செலுத்தப்படும்போது 7 வெவ்வேறு வண்ணங்களாகப் பிரியும். அதே வண்ணங்கள் வானவில்லில் காணப்படும். இந்த ஒவ்வொரு வண்ண ஒளி அலையும் மின்காந்த அலைதான். இவை அனைத்தும் ஒன்றாகச் சேரும்போது வண்னங்கள் மறைந்து, வெளிர் ஒளி தென்படுகிறது.

ஆனால் நம் கண்ணுக்குத் தெரியாத பல மின்காந்த அலைகள் உள்ளன. எலும்பு முறிவைக் காண படம் எடுக்கப் பயன்படும் எக்ஸ் கதிர்கள், நீரில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லப் பயன்படும் புற ஊதாக் கதிர்கள், இரவில் பொருள்களைக் காணப் பயன்படுத்தும் அகச் சிவப்புக் கதிர்களை வெளியிடும் சிறப்புக் கண்ணாடி, நம் வீட்டில் மைக்ரோவேவ் அடுப்பில் வெளிப்படும் கதிர்கள். இவை அனைத்தும் மின்காந்த அலைகளே.

இவைதவிர, நாம் கேட்கும் வானொலி ஒலிபரப்பு மிதந்துவரும் அலைகள், தூரதர்ஷன் படங்கள் மிதந்து வரும் அலைகள், செல்பேசிச் சேவை அலைகள் என்று அனைத்தும் மின்காந்த அலைகள்தாம்.

இப்படி எல்லாமே மின்காந்த அலைகள் என்கிறோம். அதே நேரம் அவை வெவ்வேறானவை என்றும் சொல்கிறோம். இவற்றுக்கு இடையேயான ஒற்றுமை, வேற்றுமை யாவை?

இவை அனைத்துக்குமான ஒற்றுமை, இவை பரவும் வேகம். அவை அனைத்துமே ஒளியின் வேகமான c = 3 x 108 m/s என்ற வேகத்தில் செல்லக்கூடியவை.

இந்த அலைகள் ஒவ்வொன்றுக்கும் பிரத்யேகமாக இரண்டு பண்புகள் உள்ளன. அவை அதிர்வெண் எனப்படும் frequency (f); அலை நீளம் எனப்படும் wavelength (l). இந்த இரண்டுமே ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டவையும்கூட. ஒரு மின்காந்த அலையின் அதிர்வெண்ணையும் அலை நீளத்தையும் பெருக்கினால், மின்காந்த அலைகளின் வேகமான c = 3 x 108 m/s கிடைத்துவிடும்.

எனவே மின்காந்த அலையின் அதிர்வெண் அதிகரித்தால், அதன் அலை நீலம் குறையும். அலை நீளம் அதிகரித்தால் அதிர்வெண் குறைவாக இருக்கும்.

சரி, இந்த அதிர்வெண் என்றால் என்ன?

நம் வீட்டில் உள்ள தாத்தா காலத்து சுவர்க் கடிகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் உள்ள பெண்டுலம் விநாடிக்கு ஒரு முறை இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் போய்விட்டு வரும். கடிகாரம் சரியாக இயங்குகிறது என்றால் சரியாக ஒரு விநாடிக்கு ஒருமுறை மட்டும்தான் இது இப்படி ஒரு கோடியிலிருந்து மறுகோடிக்குச் சென்று வரும். பெண்டுலம் விநாடிக்கு ஒருமுறை அதிர்கிறது என்று சொல்லலாம். அப்படியானால் இதன் அதிர்வெண் = 1. இதற்கு அலகாக ஹெர்ட்ஸ் என்பதைச் சொல்கிறோம். ஹெய்ன்ரிச் ஹெர்ட்ஸ் என்ற ஜெர்மன் விஞ்ஞானிதான், மேக்ஸ்வெல் சுட்டிக்காட்டிய மின்காந்த அலைகள் இருப்பதைச் சோதனை ரீதியாகக் கண்டுபிடிக்க ஒரு கருவியை உருவாக்கினார். 

இப்போது தாத்தா காலத்து கடிகாரத்தை எடுத்து அதில் உள்ள ஸ்பிரிங், பிற பாகங்களை உல்ட்டா செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது ஒரு விநாடிக்கு பெண்டுலம் இருமுறை ஆடுகிறது. இப்போது அதன் அதிர்வெண் = 2 ஹெர்ட்ஸ். இதே, விநாடிக்கு நூறு முறை ஆடினால், அதிர்வெண் = 100 ஹெர்ட்ஸ்.

கிராம், கிலோ கிராம் என்பதைப் போல, பைட், கிலோ பைட், மெகா பைட், கிகா பைட் போல, இங்கும் உண்டு.

1000 ஹெர்ட்ஸ் = 1 கிலோ ஹெர்ட்ஸ்,
1,000,000 ஹெர்ட்ஸ் = 1000 கிலோ ஹெர்ட்ஸ் = 1 மெகா ஹெர்ட்ஸ்
1000 மெகா ஹெர்ட்ஸ் = 1 கிகா ஹெர்ட்ஸ்
1000 கிகா ஹெர்ட்ஸ் = 1 டெரா ஹெர்ட்ஸ்.

நாம் கண்ணால் காணும் ஒளிக்கதிர்களுக்கு, அதிர்வெண் 430 - 750 டெரா ஹெர்ட்ஸ் என்பதற்குள் இருக்கும். இதில் 750 டெரா ஹெர்ட்ஸ் என்பது ஊதா நிற ஒளி. 430 டெரா ஹெர்ட்ஸ் என்பது சிவப்பு நிறம். புற ஊதாக் கதிர்கள் என்றால், 750 டெரா ஹெர்ட்ஸை விட அதிகம் அதிர்வெண் கொண்ட அலைகள். அகச் சிவப்புக் கதிர்கள் என்றால் 430 டெரா ஹெர்ட்ஸை விடக் குறைந்த அதிர்வெண் கொண்ட அலைகள்.

நாம் அதிகம் அறிந்த அலைகள், கிலோ ஹெர்ட்ஸ், மெகா ஹெர்ட்ஸ் என்பதில் இருக்கும். வானொலி இயங்கும் அலைவரிசை இங்குதான் உள்ளது.

பண்பலை வானொலி (FM) பிரபலமாவதற்கு முன்பிருந்தே, AM வானொலி இயங்கிவருகிறது. AM என்றால் Amplitude Modulation. அதாவது ஒரு குறிப்பிட்ட மின்காந்த அலையை எடுத்துக்கொண்டு (Carrier Frequency - ஊர்தி அதிர்வெண்), அதன்மீது நாம் பேசுவது, பாடுவது போன்ற ஒலி அலைகளின் வீச்சை ஏற்றி, கிடைக்கும் புதிய அலையை அனுப்பும் கருவி மூலம் அனுப்புவது. Frequency Modulation என்றால், அலை வீச்சுக்கு பதிலாக, ஒலி அலையின் அதிர்வெண் மாற்றத்தை, ஊர்தி அதிர்வெண்ணுடன் சேர்த்து அனுப்புவது. (இதைப்பற்றி பின்னர் தனியாக எழுதவேண்டும்.)

இங்கே கவனத்தில் கொள்ளவேண்டியது, AM வானொலி என்றால் அதில் மீடியம் வேவ் என்று சொல்லப்படுவது இயங்குவது 520 கிலோ ஹெர்ட்ஸ் முதல் 1610 கிலோ ஹெர்ட்ஸ் வரையிலானது. இந்தப் பகுதியை மீடியம் வேவ் ஸ்பெக்ட்ரம் என்று சொல்லலாம். அதாவது ஏம்.எம் வானொலியின் மீடியம் வேவ் அலைகளின் அலைப் பரவல்.

இதே பண்பலை வானொலி என்றால் 87.5 மெகா ஹெர்ட்ஸ் தொடங்கி 108 மெகா ஹெர்ட்ஸ் வரையிலானவை.

ஏ.எம் வானொலி என்றால் அடுத்தடுத்த நிலையங்களுக்கு இடையில் 9 கிலோ ஹெர்ட்ஸ் அல்லது 10 கிலோ ஹெர்ட்ஸ் இடைவெளி வேண்டும். அப்போதுதான் ஒரு நிலையத்தின் நிகழ்ச்சிகளை, பிற நிலையங்களின் குறுக்கீடு இல்லாமல் கேட்கமுடியும். பண்பலை வானொலி என்றால், அடுத்தடுத்த நிலையங்களுக்கு இடையில் குறைந்தது 0.8 மெகா ஹெர்ட்ஸ் இடைவெளி இருக்கவேண்டும். அடுத்தடுத்துள்ள வானொலிகளின் அலைவரிசையை கவனியுங்கள். 0.8 என்ற வித்தியாசம் இருக்கும்.

சரி, ஒரு வானொலி நிலையம் எவ்வளவு தொலைவுக்கு ஒலிபரப்பமுடியும்? மீடியம் வேவ் ஏ.எம் என்றால் 100-200 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம். இதிலேயே ஷார்ட் வேவ் என்ற முறை மூலம் சில ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை செல்லலாம். அப்படித்தான் அமெரிக்க, ஆஸ்திரேலிய, பிரிட்டிஷ் வானொலிகளை இந்தியாவில் கேட்கமுடியும்.

பண்பலை என்றால், அவை ஒரே ஊருக்குள் அடங்கிவிடுபவை. அதிகபட்சம் 20-30 கிலோமீட்டர் தூரத்துக்குள் நின்றுவிடும். ஆனால், ஏ.எம் வானொலியைவிடத் துல்லியமாக, ஸ்டீரியோ திறனுடன், கொரமுர சத்தம் இல்லாமல் தெளிவாகக் கேட்கும்.

அப்படியானால் 87.5-ல் ஆரம்பித்து 108-க்குள் எத்தனை பண்பலை நிலையங்கள் இருக்கமுடியும்? 25 நிலையங்கள்தான். உடனேயே போட்டி ஆரம்பித்துவிடுகிறது அல்லவா?

யாருக்கு இந்த நிலையங்களை அளிப்பது? அதற்குத்தான் ஏலம் போடுகிறார்கள். யார் அதிக ஏலத்துக்கு எடுக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் கொடுக்கப்படும்.

*

சரி, இதை மனத்தில் வைத்துக்கொண்டு, இப்பொது செல்பேசிச் சேவைக்கு வருவோம். இந்தச் சேவைகள், 800, 900, 1800, 1900 மெகா ஹெர்ட்சில் ஏதோ ஒன்றில் இயங்கும். பல்வேறு நாடுகளில் வெவ்வேறு அதிர்வெண்ணில் இருக்கும். இந்தியாவில் 900, 1800 என்ற இரண்டு அதிர்வெண்களில் செல்பேசிச் சேவைகள் இயங்குகின்றன.

1800 மெகா ஹெர்ட்ஸில் செல்பேசிச் சேவை இயங்குகிறது என்றால் என்ன பொருள்? உண்மையில், இந்த ஊர்தி அதிர்வெண்ணை அடிப்படையாகக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட அலைப் பரவலை (spectrum) இந்தச் சேவைக்காக ஒதுக்குவார்கள். வானொலி போல இல்லாமல், செல்பேசிச் சேவைக்கு, ஒவ்வொரு நிறுவனத்துக்கு இரண்டு பரவல் தேவை. ஒன்று, செல்பேசிச் சேவையின் மையம், செல்பேசி கோபுரங்களோடு தொடர்பு கொள்ள. மற்றொன்று, கோபுரங்கள் தனிப்பட்ட செல்பேசிகளுடன் தொடர்பு கொள்ள. அதாவது,

1710 - 1785 MHz அப்லிங்க் (75 மெகா ஹெர்ட்ஸ் பரவல்)
1805 - 1880 MHz டவுன்லிங்க் (75 மெகா ஹெர்ட்ஸ் பரவல்)

இதற்குள், எத்தனை செல்பேசி நிறுவனங்களை அனுமதிக்கமுடியும்? தகவல் தொடர்பு அமைச்சகம், ஒரு GSM நிறுவனத்துக்கு 10 மெகா ஹெர்ட்ஸ் பரவலும், ஒரு CDMA நிறுவனத்துக்கு 5 மெகா ஹெர்ட்ஸ் பரவலும் தரலாம் என்று அதற்குமேல் தரப்படாது என்றும் சொல்கிறது. ஆக, சுமார் 10 நிறுவனங்கள்தான் அதிகபட்சம் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் இருக்கமுடியும்.

900, 1800 ஆகிய இரண்டையும் சேர்த்தால், இதைப்போல இரண்டு மடங்கு இருக்கமுடியும்.

இங்கும், போட்டிகள் அதிகமாக இருந்தால், ஏல முறையில் கொடுத்தால்தான் அரசுக்கு அதிகமாகப் பணம் கிடைக்கும்.

*

சரி, இந்த 2G, 3G என்றால் என்ன?

முதலில் செல்பேசி அனலாக் என்ற முறையில் இயங்கியது. இதனை முதலாம் தலைமுறை - 1st Generation - எனலாம். இதைத்தான் 1G என்கிறோம். அடுத்து டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் இயங்கும் இப்போதைய செல்பேசிச் சேவை - GSM (TDMA), CDMA என்ற இரு வழிகளிலும் இயங்குவது. இது இரண்டாம் தலைமுறை - 2G. இதில் குரலை அனுப்புவது எளிது. ஆனால் மக்களது விருப்பம், படங்கள், ஒலி, ஒளித் துண்டுகளை அனுப்புவது என்று இருப்பதால், அடுத்தக்கட்ட நுட்பம் உள்ளே வந்தது. இதுதான் 3G எனப்படும் மூன்றாம் தலைமுறை.

3G எந்த அதிர்வெண்ணில் இயங்கும்? இது 2100 மெகா ஹெர்ட்ஸ் என்ற ஊர்தி அதிர்வெண்ணில் இயங்கும் என்று வரையறுத்துள்ளாகள்.

அப்லிங்க்: 1920-1980 (60 மெகா ஹெர்ட்ஸ் பரவல்)
டவுன்லிங்க்: 2110-2170 (60 மெகா ஹெர்ட்ஸ் பரவல்)

அடுத்து, இந்தச் சேவையை வழங்க விரும்பும் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் எவ்வளவு மெகா ஹெர்ட்ஸ் பரவலைத் தருவது; எனவே எவ்வளவு நிறுவனங்களை அனுமதிப்பது என்ற கேள்வி எழுகிறது. மேலும் பல கேள்விகளும் எழுகின்றன.

1. ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களுக்கு, இந்த அதிர்வெண் பரவலை சமமாகப் பிரித்துக் கொடுத்துவிடலாமா?
2. இலவசமாகவா? ஆண்டுக்கு இத்தனை என்ற கட்டணமாகவா? அல்லது வருமானப் பங்கு (revenue sharing) என்ற முறையிலா?
3. புது ஏலத்துக்கு விட்டு, புதிதாக யார் வேண்டுமானாலும் ஏலத்தில் போட்டியிடலாம் என்று சொல்வதா?
4. அப்படி ஏலம் விடுவதால் அரசுக்குப் பணம் நிறையக் கிடைத்தாலும், இதனால், இப்படி ஏலம் எடுத்த நிறுவனங்கள் போண்டியாகும் அபாயமும் உள்ளது. அப்போது என்ன செய்வது?
5. அரசின் நிறுவனமான BSNL-ஐ எப்படி எடுத்துக்கொள்வது? அவர்களைப் பணம் கட்டச் சொல்லப்போகிறோமோ? அப்படியானால் அவர்களும் ஏலத்தில் போட்டியிடுவதா? அல்லது ஏலத்தில் ஒர் இடத்தைக் குறைவாக வைத்து, ஏலம் எடுத்தவர்களில் குறைவான தொகை என்னவோ அதையே BSNL-ம் கொடுக்கும் என்று வைத்துக்கொள்ளலாமா? அல்லது தினமணியில் சொல்வதைப் போல, அதிகபட்ச தொகை என்னவோ அதை BSNL செலுத்தவேண்டும் என்று சொல்வதா?

மேலும் பல கேள்விகளும் உண்டு. இதில் நாட்டு மக்களுக்கு எது நன்மை, எது தீமை என்று ஒரு பக்கம் இருப்பதுபோல, பதவியில் இருக்கும் அரசியல்வாதிக்கு எது நன்மை, எது தீமை என்பதும் உண்டு.

ஸ்பெக்ட்ரம் (அலைப் பரவல்) என்பது மிக முக்கியமான வளம். கனிம வளங்களைப் போல, நிலத்தைப் போல, இதுவும் மிக முக்கியமானது. இதனை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் எப்பொதுமே கொள்கைக் குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும். 

எனவேதான் கொள்கை முடிவுகளை மிகவும் வெளிப்படையாகச் செய்யவேண்டும்.

அதில்தான் நமது அரசு தோல்வியுறுகிறது. மிகவும் ரகசியமாகப் பல முடிவுகள் எடுக்கப்படுகின்றன. கேபினெட்டில் உள்ள பல அமைச்சர்களுக்கு இதைப் பற்றிய புரிதல் எதுவுமே கிடையாது. அங்கேயே அப்படி என்றால், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாடு சுத்தம்! அதற்கு மேலாக, நமக்கோ நமது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் எல்லாம் பொதுவாகவே திருடர்கள் என்று நாம் நம்புகிறோம். அதற்கு ஏற்றார்போல அவர்களது சொத்துக்களின் விவரம் (அதாவது வெளியே தெரிந்தவை) நம்மை பிரமிக்கவைக்கிறது.

இப்போது, ஸ்பெக்ட்ரம் பற்றி வெகுஜனப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பேசப்படுவதே ஆரோக்கியமான விஷயம்.