வியாழன், 8 மார்ச், 2018

சிரியாவில் நடக்கும் குத்தகைப் போர்!

சியோலில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில், வட கொரிய வீரர்களும் தென் கொரிய வீரர்களும் கொண்டாட்ட மனநிலையில் ஒன்றாகப் பேரணியாகச் சென்றதைப் பாரத்த பிறகு, சிரியாவிலிருந்து பறந்துவந்த ஆளில்லா விமானத்தை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியதையும் சிரியாவில் உள்ள ஈரான் விமானப் படைத் தளத்தின் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதையும் சிரியாவின் ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேல் தனது எஃப் -16 போர் விமானத்தை இழந்ததையும் பார்த்த பிறகு, சிரியா வில் அமெரிக்கப் படைகளை நெருங்கிய ரஷ்ய கஸாக் படையினரை அமெரிக்க ஜெட் விமானங்கள் கொன்றதை யும் பார்த்த பிறகு, சிரியா – இஸ்ரேல் – லெபனான் எல்லை தான் உலகின் மிக ஆபத்தான முனை என்று கருதுகிறேன்.

கொதிக்கும் தேசம்

சிரியா, ரஷ்யா, அமெரிக்கா, ஈரான், துருக்கி ஆகிய நாடுகளின் துருப்புகளும், இராக், லெபனான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த ஈரான் ஆதரவு ஷியா படைகளும், வடக்கு சிரியாவிலிருந்து அமெரிக்க ஆதரவு குர்து வீரர்களும், எஞ்சியிருக்கும் ஐஎஸ் படைகளும், சவுதி ஆதரவுப் படைகள், ஜோர்டான் ஆதரவுப் படைகள், சிரிய அரசுக்கு எதிரான படைகள் என்று பல்வேறு சன்னி ஆதரவுப் படையினரும், ‘பைத்தியக்காரக் காட்டுமிராண்டிகளிடமிருந்து ரஷ்யத் தாய்நிலத்தைக் காப்பதற்காக’ சிரியாவுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுப்பப்பட்டிருக்கும் கஸாக் படைகளும் (இதை நானாகச் சொல்லவில்லை!) நிலத்திலும் ஆகாயத்திலும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதை வேறு எங்கு பார்க்க முடியும்? ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் குறிப்பிட்டிருப்பதுபோல், ரஷ்யா, துருக்கி, ஈரான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் சிரியப் போரில் தங்கள் போர் விமானங்களை இழந்திருக்கின்றன.

‘பவுடர் கெக்’ (அரசியல், சமூகப் பொருளாதாரக் கொந்தளிப்புக்கு ஆளான பிரதேசத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் பதம்) எனும் பதமே இந்தப் பிரதேசத்துக்காகத்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்க வேண்டும். ‘3-டி யுத்த களம்’ எனும் வார்த்தையால்கூட இந்தப் போரின் சிக்கல்களைச் சித்தரித்துவிட முடியாது. இதில் பங்கெடுத்திருக்கும் எண்ணற்ற எதிராளிகளின் எண்ணிக்கையை, அவ்வப்போது அணிமாறும் தரப்புகளை, மோதல்களைக் கணக்கிட ஒரு குவாண்டம் கணினியே தேவைப்படும்.

ஒருவேளை இந்தக் கதை உங்களைப் பீடிக்கத் தொடங்கியிருக்கிறது என்றால்; இவ்விஷயத்தில் அமெரிக்காவின் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்று குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் – உங்களுக்காக அந்தக் குழப்ப முடிச்சை அவிழ்க்கிறேன்.

கூலிப் படைப் போர்

சிரியா போரைப் பொறுத்தவரை நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் இதுதான்: இதில் பங்கேற்றிருக்கும் எல்லாத் தரப்புகளும் ஒற்றை இரும்பு விதியால் வழிநடத்தப்படுகின்றன. அது: “இந்தப் போர் நமது சொந்தப் போர் அல்ல”. அதாவது இந்தப் போர் ஒரு வாடகைப் போர். ஒவ்வொரு தரப்பும் தங்கள் ஆதாயங்களை விரிவுபடுத்த விரும்புகின்றன; அதேசமயம், தங்கள் சொந்த வீரர்களைக் காட்டிலும் கூலிப்படைகளையும் உள்ளூர் கிளர்ச்சியாளர்களையும் பயன்படுத்தித் தங்கள் எதிரிகளின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்த விரும்புகின்றன.

ஆப்கானிஸ்தான் அனுபவத்திலிருந்து ரஷ்யாவும், ஈரான் – இராக் போர் அனுபவத்திலிருந்து ஈரானும், தெற்கு லெபனான் தந்த அனுபவத்திலிருந்து இஸ்ரேலும், இராக், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவும் ஏற்கெனவே ஒரு பாடம் கற்றிருக்கின்றன - மத்தியக் கிழக்கின் எந்த ஒரு நிலத்திலும் தங்கள் வீரர்கள் மரணமடைவதை இந்நாடுகளின் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

ரஷ்யா மீண்டும் ஒரு வல்லரசாகிவிட்டது என்றும், சிரியா வில்தான் ஒரு ‘கிங்மேக்கர்’ என்றும் ரஷ்யர்களிடம் சொல்லிக்கொள்ள விளாதிமிர் புதின் விரும்புகிறார். ஆனால், ரஷ்ய வீரர்கள் யாரையும் அவர் ஆபத்துக்குள்ளாக்க வில்லை.

மாறாக, ஈரானிடமிருந்து தரைப்படையினரைத் தருவித்துப் பயன்படுத்திக்கொள்கிறார். ஒப்பந்த அடிப்படை யில் வீரர்களைத் திரட்டிப் பயன்படுத்துகிறார். ரஷ்யாவுக்காகப் போரிட்டு மடிய, அந்நாட்டிலுள்ள ‘வாக்னர்’ எனும் தனியார் நிறுவனத்திலிருந்து கஸாக் வீரர்களைத் தரைப் படைச் சண்டைக்குப் பயன்படுத்திக்கொள்கிறார். சமீபத் தில் அமெரிக்கத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட கஸாக் வீரர்கள் அந்தப் படையைச் சேர்ந்தவர்கள்தான்.

ஈரான் அரசு சமீபத்தில்தான் மக்கள் எழுச்சியைச் சந்தித்தது. அரசு தனது சொந்த மக்களின் நலனுக்குத்தான் பணம் செலவிட வேண்டுமே தவிர, சிரியாவில் அல்ல என்று ஈரான் மக்கள் போராடினர். இந்நிலையில், ஈரானுக்கு ரஷ்யா உள்குத்தகைக்கு விட்ட தரைப்படைப் போரை, தனது நிழல் யுத்தப் பிரதிநிதிகளான - (இராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்ட) ஹெஸ்புல்லா உள்ளிட்ட ஷியா கூலிப் படையினரிடம் ஈரான் உள்குத்தகைக்கு விட்டிருக்கிறது.

வடக்கு சிரியாவில் ஐஎஸ் அமைப்பினருக்கு எதிரான போரில், குர்து வீரர்களுக்கு ஆயுதங்களையும் ஆலோசனைகளையும் அமெரிக்க சிறப்புப் படைகள் வழங்கி வருகின்றன.

அதே குர்து வீரர்களுக்கு எதிராக, சன்னி கிளர்ச்சிப் படைகளைத் துருக்கி பயன்படுத்திக்கொள்கிறது. ஈரான் ஆதரவுப் படைகளுக்கும் ஷியா ஆதரவுப் படைகளுக்கும் எதிராகப் பல்வேறு சன்னி கிளர்ச்சிப் படைகளை சவுதி அரேபியா, கத்தார், ஜோர்டான் ஆகியவை பயன்படுத்திக்கொள்கின்றன. இஸ்ரேல் தனது விமானப் படையை முழுமையாகப் பயன்படுத்துகிறது.

பொறுப்பிலிருந்து நழுவும் நாடுகள்

இன்றைக்கு சிரியாவைப் பொறுத்தவரை மாறாத விதி இதுதான்: “நீங்கள்தானே பொறுப்பு? அப்படியெனில் நீங்கள்தான் சரிசெய்ய வேண்டும்.” ஆனால், சிரியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் மிகப் பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்ள யாருமே விரும்பவில்லை. அவர்கள் விரும்பு வதெல்லாம் தங்களது ஆதிக்கத்தை வாடகைக்கு விடுவதைத்தான்!

வலி தரும் விஷயம் இது. அடிப்படையில் சிரியாவில் சமரசத்தையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்தும் அளவுக்கு போதிய அதிகாரமோ வளங்களோ உள்நாட்டைச் சேர்ந்தவர்களிடம் இல்லை. வெளியிலிருந்து போரிடுபவர்களோ சிரியாவில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்த தங்கள் அதிகாரத்தையும் வளங்களையும் பயன்படுத்தத் தயாராக இல்லை.

இதில் குறைந்தபட்ச நல்ல செய்தி என்னவென்றால், இதில் ஈடுபட்டிருக்கும் எல்லோருமே இழப்புகளைத் தவிர்ப்பதில் மிகவும் கவனமாக இருப்பதுதான். எந்தத் தரப்புமே மிக மோசமாக, பொறுப்பற்றதன்மையுடன் நடந்துகொள்ள வாய்ப்பில்லை. ஈரானியர்களும் ஹெஸ்புல்லா படையினரும் தொடர்ந்து இஸ்ரேலைச் சீண்டிக்கொண்டே இருப்பார்கள். ஆனால், இஸ்ரேல் தனது முழு பலத்தை யும் காட்டித் திருப்பித் தாக்கும் அளவுக்கு அவர்கள் சென்றுவிட மாட்டார்கள்.

இஸ்ரேல் முழு பலத்துடன் தாக்கினால் லெபனானைச் சுற்றியுள்ள ஹெஸ்புல்லா படையினர் சின்னாபின்னமாகிவிடுவார்கள். ஈரான் மீது ராக்கெட் தாக்குதலும் நடக்கும். ஆனால், பதிலடியாக ஈரான் தொடுக்கும் ராக்கெட் தாக்குதல்களால் அதிநவீன நகரங் கள் கொண்ட தனது கடற்கரைப் பகுதிகள் சின்னாபின்னமாகும் என்பது இஸ்ரேலுக்கும் தெரியும். துருக்கியர்கள் அமெரிக்காவுடன் ஒரு போரை விரும்பவில்லை. அமெரிக்காவுக்கு ரஷ்யாவுடன் போர் புரிய விருப்பமில்லை. ரஷ்யர்களோ யாருடனும் வம்புவைத்துக்கொள்ளாமல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எண்ணெயை உறிஞ்சி எடுத்துக்கொள்வதற்கும், ‘ஈகோ’வை வளர்த்தெடுக் கும் இடமாகவும் சிரியாவைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள் – ஏனெனில், வெளிப்பார்வைக்குத் தெரிவதைப் போல் அல்லாமல் ரஷ்யா மிகவும் பலவீனமாக இருக்கிறது.

ஒருவேளை, 1989-ல் லெபனான் தனது உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, அதிகாரப் பகிர்வு விஷயத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டதுபோல் இவர்கள் அனைவரும் ஒருகட்டத்தில் களைப்படைந்து ஓர் ஒப்பந்தத்தை எட்டலாம். ஆனால், அந்த நிலையை எட்டு வதற்கு லெபனானுக்கு 14 ஆண்டுகாலம் பிடித்தது. ஆக, சிரியாவிலிருந்து மேலும் பல செய்திகளுக்குத் தயாராக இருங்கள்!

புலனாய்வு இதழியல்: சில குறிப்புகள்

சிறப்புக் கட்டுரைகள்

தகவல்களும் செய்திகளும் உடனுக்குடன் பரிமாறிக் கொள்ளப்படும் கணினி - இணைய யுகம் இது. மாறிவரும் சூழலுக்கேற்பத் தற்காலத்துடன் தங்களுக்கு உள்ள தொடர்பையும் தங்கள் மதிப்பையும் உறுதிப்படுத்திக்கொள்வதற்காக வழக்கமான இதழியலும் செய்தித் தொழில்துறையும் உலகம் முழுவதிலுமே தடுமாறிவருகின்றன. இந்தச் சவாலை முறியடிக்க இத்துறை தன்னுடைய திறமைகளைக் கூர்தீட்டிக்கொள்வது, வலுப்படுத்திக்கொள்வது, சில முக்கியச் செயல்களைத் தொடர்ந்து மேற்கொள்ள தன்னையே மேம்படுத்திக்கொள்வது அவசியம் என்று இதழியல் துறையில் உள்ளவர்களால் கருதப்படுகிறது.

லண்டனில் உள்ள சிட்டி பல்கலைக்கழக இதழியல் துறைப் பேராசிரியரும் முதுபெரும் பத்திரிகையாளருமான ஜார்ஜ் பிராக் தன்னுடைய, ‘அவுட் ஆஃப் பிரிண்ட்: நியூஸ் பேப்பர்ஸ், ஜர்னலிசம் அண்ட் தி பிசினஸ் ஆஃப் நியூஸ்’ என்ற நூலில் என்ன செய்ய வேண்டும் என்று விவரித்திருக்கிறார். தரவுகள் சரியானவைதானா என்று உறுதிசெய்துகொள்வது, தரவுகள், நிகழ்வுகள் போன்றவற்றை அர்த்தப்படுத்திக்கொள்ளுதல் , தன்னைச் சுற்றி நடப்பவற்றுக்குச் சாட்சியமாக இருத்தல், புலனாய்வு செய்தல் ஆகியவையே இதழியலின் முக்கிய அடித்தளம். இதழியல் சார்ந்திருக்கும் நம்பகத்தன்மைக்கு அதுதான் அடித்தளம். 21-ம் நூற்றாண்டில் இந்த நான்கு அம்சங்கள் மீதுதான் இதழியலே மறுகட்டமைப்பு செய்யப்படும் என்கிறார்.

கடந்த 50 ஆண்டுகளில் உலகம் முழுவதுமே - இந்தியா உட்பட, புலனாய்வு இதழியல் என்பதில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டுள்ளன. கூடவே அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், சமூகம், சர்வதேச உறவுகள் தொடர்பாகப் புலனாய்வு இதழியல் வெளியிட்ட மக்கள் ஆற்றும் எதிர்வினைகளிலும் ஏற்ற, இறக்கங்கள் காணப்படுகின்றன.

புலனாய்வு இதழியல்

புலனாய்வு இதழியல் என்றால் என்ன என்று விளக்கம் அளிப்பதில் புலனாய்வுப் பத்திரிகையாளர்களுக்கும் இத்துறை அறிஞர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. குற்றச்செயல்கள் அல்லது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயம் போன்றவை தொடர்பான தகவல்களைத் தேடித் துழாவித் திரட்டுவது, இதுகுறித்து ஏற்கெனவே நிலவிய தகவல்களில் வெளிச்சம் பாய்ச்சுவது, மூடி மறைக்கப்படும் விவகாரங்களை அம்பலப்படுத்துவது அல்லது மக்களால் அறிய முடியாத தகவல்களைத் தேடிக் கண்டுபிடித்து வெளிப்படுத்துவது என்பதே புலனாய்வு இதழியல் என்பதை நாம் ஒப்புக்கொள்ளலாம். உண்மையான தகவல்களைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் இந்தப் பணியின் முக்கிய அடித்தளம். ஆனால், சம்பவங்களை இதழாளர் சரிவர உள்வாங்கிக் கொள்ளவில்லையென்றால், புலனாய்வு செய்வதில் பலன் ஏதும் இருக்காது.

பத்திரிகையாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, இதழியல் கல்விக்கே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவரான எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் புலனாய்வு என்பதன் முக்கியப் பணி எது என்பதைத் தெளிவாக விவரித்திருக்கிறார், அந்தக் காலப் பத்திரிகையாளர்கள் பலரும் ஒப்புக்கொள்வதுதான் இந்தக் கருத்து. 1996-ல் லாஸ்ஏஞ்சலீஸ் நகரில் ‘இதழியல்: உலகின் மிகச் சிறந்த பணி’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையில், அவர் இதுகுறித்து சொன்ன கருத்து இடம்பெற்றிருக்கிறது. “இளம் பத்திரிகையாளர்களுக்கு அளிக்கும் கல்வியும் பயிற்சியும் மூன்று தூண்கள் மீது கட்டமைக்கப்பட வேண்டும். 1. பத்திரிகையாளருக்கு இயல்பாக உள்ள திறமைக்கும், அதற்குப் பொருத்தமான பணிக்கும் தரப்படும் முன்னுரிமை. 2. குறிப்பிட்ட ஒரு செய்திக்காக மட்டும் புலனாய்வு செய்து எழுதுவதல்ல, எல்லாச் செய்திகளையுமே, செய்திக் கட்டுரை களையுமே அக்கறையோடு புலனாய்வு செய்து எழுதுவது குறித்து இதழாளருக்கு உள்ள இலக்கணம். 3. இந்தத் துறைக்கான அறநெறிகளை எப்போதாவது மட்டுமல்ல, எப்போதுமே கடைப்பிடிக்க வேண்டும் என்ற உணர்வு.”

இதழியலின் முக்கிய கணம்

புலனாய்வு இதழியல் என்று தனியாக ஏதும் இல்லை என்று மார்க்கேஸும் அவர் காலத்திய இதழாளர்களும் வற்புறுத்துவதற்குக் காரணம் இதுதான்: இதழியலின் ஒவ்வொரு துறையும் ஒவ்வொருவிதச் செயல்பாடும் உயர்ந்த தரத்தில் இருக்க வேண்டும். ஒரு செய்தியின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும், தகவல்களைத் தோண்டி எடுக்க வேண்டும், வரலாற்றுப் பின்னணியில் உண்மைகளையும் சம்பவங்களையும் பொருத்திப் பார்க்க வேண்டும், இதழியல் ரீதியிலான கற்பனைத் திறனைப் பயன்படுத்துவதோடு, தேவைப்படும் இடத்தில் ஒரு இலக்கியப் படைப்பாளிக்குரிய கற்பனைத் திறனையும் பயன்படுத்த வேண்டும். சுதந்திரமாகவும், எந்தச் சார்பும் இல்லாமலும் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். நியாயமாகவும் மனிதநேயத்துடனும் தார்மிக நெறிகளுடனும் நடந்துகொள்வதென்பது இதழியலில் பிரிக்க முடியாத அங்கமாக ஆக வேண்டும்.

புலனாய்வு இதழியல் என்பதை இதழியலின் தனிச்சிறப் பான துறையாகக் கருதாமல், அதனுடன் பின்னிப் பிணைந்துள்ள அடிப்படைச் செயல்பாடுகளுள் ஒன்று என்ற விசாலமான பார்வையை நாம் ஏற்றுக்கொள்வோமானால், நமக்கு முன்னே அற்புதமான காட்சி ஒன்று விரியும். உண்மை குறித்த தேடல், பல்வேறு அருமையான கருப்பொருள்கள், தேடித் துழாவும் செயல், கற்பனைத் திறன், படைப்பூக்கம், இலக்கியத் தன்மை, எல்லாவற்றுக்கும் மேலாக சுதந்திரம், மனித குலம், நீதி போன்றவை குறித்து கொள்ளும் உத்வேகம் போன்றவை நிறைந்த காட்சிதான் அது.

நல்ல தரமான பத்திரிகையாளர்கள் தங்களுடைய முயற்சியால் கிடைக்கும் வண்டி வண்டியான தரவுகளை அல்லது தங்கள் மடியில் வந்து விழும் தகவல்களை வெளியிடுவதில் மகிழ்ந்துவிடுவதே கிடையாது. இதுவரை மறைக்கப்பட்ட அல்லது மக்களின் கண்ணுக்குப் புலப்படாமல் இருந்த தகவல்களை அவற்றின் சமூக, நெறிசார்ந்த, வரலாற்றுப் பின்னணியில் பொருத்திப் பார்த்து, கோவையாகவும் சுவாரஸ்யமாகவும் கட்டுரை எழுதுவதில்தான் அவர்களது உண்மையான தேடல் இருக்கிறது. அப்போதுதான் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இதழியலால் முடியும். அப்படிப்பட்ட இதழியல்தான் காலத்தை வெல்லும்.

உயர்தரப் புலனாய்வு இதழியலுக்கு இரண்டு உதாரணங்களைக் காண்போம். லூயி அலெஹாண்ட்ரோ விலாஸ் கோ என்ற மாலுமியின் கப்பல் விபத்து அனுபவம் குறித்து கொலம்பியா நாட்டின் ‘எல் எஸ்பெக்டடோர்’ செய்தித்தாளில் 1955-ல் மார்க்கேஸ் எழுதிய ‘மூழ்கிய கப்பலிலிருந்து தப்பிய மனிதன்’ தொடர் கட்டுரை, முதலாவது. ‘ஹிரோஷிமா குறிப்புகள்’ என்ற பெயரில் கென்சாபுரோ ஓயீ என்ற ஜப்பானிய எழுத்தாளர்-பத்திரிகையாளர் ஒரு மாதாந்திரப் பத்திரிகையில் 1963-ல் எழுதத் தொடங்கி 1965-ல் முடித்தது. இரண்டாவது, ஆய்வு அலசல்களாக இவை பாடப் புத்தகங்களில் இடம்பெறாது. ஆனால், புலனாய்வு செய்திக் கட்டுரைகள் என்ற வகையில் கடின உழைப்பைச் செலுத்தி, மிகவும் கவனமாக ஆராய்ந்து, தகவல்களைச் சேகரித்து, கற்பனை வளத்துடன் அற்புதமாக எழுதப்பட்ட அவ்விரண்டும் காலத்தைக் கடந்து நிற்கும்.

புலனாய்வு என்பதைப் பற்றிய விரிவான பார்வை வேண்டும் என்று சொல்வது செய்தி நிறுவனங்கள் தங்களுடைய புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தக் கூடாது என்றோ, குறிப்பிட்ட விஷயங்களைப் புலனாய்வு செய்வதற்காகச் சிறப்புப் புலனாய்வு அணியை ஏற்படுத்தக் கூடாது என்றோ அர்த்தமாகாது. நிச்சயமாகத் தங்கள் புலனாய்வுப் பிரிவின் பலத்தை அதிகப்படுத்திக்கொள்ளவும் சிறப்புப் புலனாய்வு அணியை அமைக்கவும் வேண்டும். அதே நேரத்தில், தரமான இதழியலிலும் அதன் நெறிகளிலும் பயிற்சி பெற்ற, நன்கு படித்த இதழாளர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். நடைமுறையில் அனுமதிக்கப்படுவதைக் காட்டிலும் அதிக அளவில் அவர்களும் புலனாய்வுப் பணிகளுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். சமூக, நெறிசார்ந்த பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து செய்தி தரும் பொறுப்புக்கு ஏராளமான இளம் பெண்களையும் இளைஞர்களையும் தேர்வுசெய்து அனுபவம் பெற்றவர் களின் சீரிய மேற்பார்வையில் ஈடுபடுத்தினால் அவர்களுடைய திறன் அதிகரிக்கும், பணிக் கலாச்சாரம் மேம்படும், இதழியல் துறையின் தரமும் உயரும்.

புலனாய்வும் தார்மிக நெறிகளும்

புலனாய்வு இதழாளர்கள் எதிர்கொள்ளும் இரண்டு பிரச்சினைகளை எடுத்துக்கொள்வோம். தங்களின் பெயர், அடையாளத்தை மறைத்துக்கொண்டு புலனாய்வு செய்வது ஒன்று. இன்னொன்று, அநாமதேயமாகத் தகவல் தருபவர்களையும் ரகசியமாக வைத்திருக்க வேண்டிய தகவல் மூலங்களையும் எதிர்கொள்வது. தங்கள் உண்மை அடையாளத்தை மறைத்துத் தகவல் திரட்டும் வழிமுறையைப் பொறுத்தவரை பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட சில விதிமுறைகள் இருக்கின்றன. அந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதில்தான், குறிப்பாகச் செய்தியறையில் சிக்கல் நிலவுகிறது. ஒரு இதழாளர் தகவல் திரட்டும்போது விஷயத்தின் முக்கியத்துவம் கருதி, நேரடியாகப் பெற முடியாமல் போகும்போதுதான் அவர் தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு தகவல் திரட்டலாம் என்பது முதல் விதி. அப்படிச் செய்ய நேரும்போது, தாங்கள் அப்படி நடிப்பது அல்லது செயல்படுவது பொதுநலனுக்காகத்தானா என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும் என்பது இரண்டாவது விதி. தான் யார் என்பதை வெளிப்படுத்தாமல் தகவல் திரட்டும் இதழாளரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் செய்தியையும் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தொழில் தர்மத்துக்கு மாறாகச் செயல்பட்டால் அதைத் தடுக்க வேண்டும் என்பது மூன்றாவது விதி.

அநாமதேய, ரகசியத் தகவல் ஆதாரங்களைப் பயன்படுத்துவதும் துஷ்பிரயோகம் செய்வதும் உலகளாவிய ஓர் நிகழ்வு. இதில் பலியானவர்கள் ஏராளம். அதனால், பத்திரிகைகள் மீதான நம்பகத்தன்மைக்கும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியப் பத்திரிகையாளர்கள் இப்போது எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினை அநாமதேய, ரகசியத் தகவல்களைத் தரும் வட்டாரங்களைப் பாதுகாப்பது பற்றியதல்ல; அதிகாரபூர்வமான வட்டாரங்கள், பெருநிறு வன வட்டாரங்கள் மற்றும் இதர செல்வாக்கு பெற்ற வட்டாரங்களெல்லாம் தங்களுக்குப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் கிடைக்கும் இடத்தை, வேறு ஒரு முகமூடிக்குள் மறைந்துகொண்டு, செய்யும் துஷ்பிர யோகம்தான் இந்திய இதழியல் எதிர்கொண்டிருக்கும் பெரிய பிரச்சினை. இதைக் கட்டுப்படுத்தவில்லை யென்றால், எந்தவிதப் பொறுப்பும் இல்லாமல் அவர்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் செலுத்துவார்கள். தங்களை எதிர்ப்பவர்களையும் தங்களுக்கு எதிரான கருத்து கொண்டிருப்பவர்களையும் அச்சுறுத்தவும், குற்றஞ்சாட்ட வும், சுயநலம் சார்ந்த செய்திகளைப் பரப்பவும், அரசுக ளுக்கு ஒத்தூதும் செயல்களைச் செய்யவும், தவறான தகவல்களைப் பரப்பவும் பத்திரிகைகளையும் தொலைக் காட்சியையும் அவர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள்.

சில தகவல்களைப் பெறுவதற்காக, தாங்கள் யாரென்று தெரிவிக்க வேண்டாம் என்று கோருவதை இதழாளர்களும் ஏற்றுக்கொள்கின்றனர். அதை அவர்களால் கேள்வி கேட்க முடிவதில்லை. அந்த ரகசிய உடன்பாடுகளையும் அதற்குப் பிறகு கிடைக்கும் தகவல்களையும் பத்திரிகை அலுவலகத்தில் யாரும் மேற்பார்வை செய்ய முடிவதில்லை. எனவே, அத்தகவல்களைப் பெறுவோர் தவறாகப் பயன்படுத்துவதும் நடக்கிறது. அப்படித் தகவல் பெறுவோரை, தகவல் தந்தோர் தவறாகப் பயன்படுத்துவதும் நடக்கிறது. இது பெரிய கொள்ளை நோய்போல இப்போது பரவிவிட்டது. எனவேதான் தெளிவான, துல்லியமான வரையறுக்கப்பட்ட ஆசிரியர் குழு வழிகாட்டும் நெறிமுறைகள் அவசியமாகின்றன.

நல்ல தரமுள்ள புலனாய்வு இதழியல் அவசியமானது, பயனுள்ளது. சாதாரண மக்களுக்கும் சமூகத்துக்கும் நன்மை களைச் செய்யவல்லது. அதிகாரத்தில் உள்ளோருக்கு முன்பு உண்மையை ஆணித்தரமாக எடுத்துவைக்கக் கூடியது. களைப்படைந்து, உற்சாகமிழந்து காணப்படும் இதழியல் துறைக்குப் புத்துயிர் ஊட்ட அவசியமானது. இந்தியாவிலும் தெற்காசியாவிலும் இதழியல் துறை என்பது இன்னமும் வளர்ச்சிப் போக்கில்தான் இருக்கிறது. நாம் நினைப்பதைவிட வெகு விரைவிலேயே உலகத் தரத்துக்கு இங்கும் இதழியலின் தரம் உயர்ந்துவிடும் என்ற நம்ப இடம் இருக்கிறது. நம்முடைய மனித ஆற்றலையும் பொதுநலன் கருதி மேற்கொள்ளப்படும் ஆய்வுகளையும் பார்க்கும்போது, செய்திச் சேகரிப்பில் சமூக மதிப்பு கூடவும் வலுவுறவுமே வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. தொழில்முறை இதழியலுக்கும் செய்தித் தொழில்துறைக்கும் இது நல்லவிதமான பங்களிப்பையே செய்யவிருக்கிறது.

Social Media என்றால் என்ன? ஒரு அடிப்படை அறிமுகம்

இன்றைக்கு Social Media பற்றிய சில அடிப்படை செய்திகளை தெரிந்துக் கொள்ள போகிறோம்.

Social Media என்றால் என்ன?

Social Media (சமூக ஊடகம்) என்றால் என்ன என்பது குறித்து பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும், அதை சுருக்கமாகவும் எளிமையாகவும் சொல்ல வேண்டும் என்றால்: “உங்கள் கருத்துக்களை படைக்கவும், பகிரவும் Internet மூலம் இணைக்கப்பட்ட ஒரு தளம், அல்லது ‘மேடை’ என்று கூட சொல்லலாம்.”

Social mediaவுக்கும் Traditional mediaவுக்கும் என்ன வித்தியாசம்?

இன்றைய நவீன சமூக ஊடகத்திற்கும், வழக்கமான மரபார்ந்த ஊடகங்களான ரேடியோ, தொலைக்காட்சி, செய்தித்தாள் போன்ற ஊடகங்களுக்கான வித்தியாசம் என்னவென்று பார்ப்போம்.

1.User Generated Content – ஒரு சதாரண மனிதனின் செய்தி

பொதுவாக அச்சு ஊடகங்கலானாலும் (Print media – Newspapers), காட்சி ஊடகங்கலானாலும் (Audio-visual media – TV, Radio) சரி, செய்தியை உருவாக்குவது ஒரு நிறுவனமாகவும், அதை பார்ப்பவர், அல்லது படிப்பவர் ஒரு தனி நபராகவும் இருப்பார். அந்த நிறுவனம் என்ன சொல்ல நினைக்கின்றதோ அதைத்தான் நுகர்வோர் அனைவரும் உட்கொள்ள முடியும்.
ஆனால் Social Media எனப்படும் சமூக ஊடகத்தில், பெரும்பாலான் செய்தியை உருவாக்குவதும், பகிருவதும் தனிமனிதராகிய நுகர்வோரே (users)!
அதனாலேயே இது பரவலாக எல்லோராலும் விரும்பப்படுகிற ஒரு ஊடகமாக தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ளது. ஒரு சாமானியனின் குரலை பொதுவெளியில் உரக்கச் சொல்கிற சாதனமாக இருப்பதால், ஒரு தனிமனிதன் தன்னை இந்த சமூகத்தின் அங்கமாக உணருகிறான்.

2. Viral Capability – காட்டுத்தீயாய் செய்திகளை பரப்பும் சாத்தியம்

இரண்டாவது, வேகமாக பரவும் தன்மை (viral capability) இந்த நவீன சமூக ஊடகங்களுக்கு உண்டு. மற்ற mediaக்களைக் காட்டிலும் social mediaவில் ஒரு செய்தி அல்லது படைப்பு, லட்சக்கணக்கானோரை உடனடியாக சென்று அடைந்து விடுகிறது. ஆகவே உங்களுக்கு செய்திகளை பரப்ப ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதுமானது.

3. Low Cost Promotional Capability – குறைந்த செலவில் செய்திகளை பரப்பும் சாத்தியம்

மூன்றாவதாக உங்கள் படைப்புக்களை மற்றவர்களிடம் எடுத்து செல்வதற்கு மற்ற எந்த பழைய ஊடகங்களைக் காட்டிலும் இதில் ஆகும் செலவு மிக மிக குறைவு. காட்சி ஊடகங்கள் மற்றும் பண்பலைகள் மூலமாக உங்கள் படைப்பை எடுத்து செல்வதற்கு பல லட்சங்களை செலவழிப்பதற்கு பதிலாக மிக குறைந்த முதலீட்டில் (சில நூறு ரூபாய்களில்) அனைவரையும் சென்று அடைந்து விட எளிமையான வழி இந்த சமூக ஊடகங்கள்.

சமூக ஊடகத்தை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம்?

சமூக ஊடகங்கள் தனிமனித ஊடகமாக மாறிக்கொண்டிருக்கின்ற வேளையில், அதை பயன்படுத்தி பயனடைவது என்பது மிக அத்தியாவசிய தேவையாக மாறிக்கொண்டு இருக்கிறது. உங்களிடம் பிறருக்கு பயன்ப்படும்படிக்கு உபயோகமான ஒரு தகவலோ செய்தியோ இருக்கிறது என்றால் அதை உலகிற்கு சொல்ல சமூக ஊடகங்களை விட சிறந்த வழி இருக்க முடியாது .
Facebook எனப்படும் முகநூளில் மட்டும் நூற்று தொண்ணூற்று நான்கு கோடி பேர் பயனாளிகளாக இருப்பதாக இந்த முகநூல் நிறுவனம் தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் பிற சமூக ஊடக நிறுவனங்களான Twitter, Instagram, LinkedIn, Google Plus எனும் பிற நிறுவனங்கள் வழியாகவும் கோடான கோடி பேர் அன்றாடம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மிக எளிமையாகவும், செலவில்லாமலும் கிடைக்கும் ஒரு மேடையை நீங்களும் ஏன் பயன்படுத்தக்கூடாது?

உதாரணத்திற்கு 18 – 25 வரையுள்ள, அதுவும் இளைஞர்களுக்கான ஒரு செய்தியை, ஒரு குறிப்பிட்ட தேதியில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், அவர்கள் மட்டும் பார்க்கும் படியாக செய்ய வேண்டுமென்றால், அது இந்த நவீன சமூக ஊடகங்களில் மட்டுமே சாத்தியம்.

இதன் மூலம் உங்கள் வாடிக்கையாளரோடு தினந்தோரும் பேசலாம். உங்கள் எண்ணத்தை வெளியிட வீடியோ, ப்ளாக் (Blog) எழுதுவது, அனிமேஷன் போன்ற எண்ணற்ற வகைகளில் வெளிப்படுத்தலாம்.

நீங்கள் ஒரு தொழில் செய்பவராக இருந்தால், உங்கள் பிராண்டை (Brand) உருவாக்கவும், விளம்பரப்படுத்தவும் (Advertising), இந்த சமூக ஊடகங்கள் பெரிய அளவில் பலன் கொடுக்கும்.

தொழில் ரீதியிலான கருத்துக்களை வெளிப்படுத்த மட்டும் அல்ல, தனிமனிதனாக உங்கள் கருத்துக்களை எண்ணங்களை வெளிப்படுத்தவும் இது மிகச் சிறந்த ஊடகம்.

உங்களோடு, ஒத்த கருத்துடையவர்களோடு உரையாடுவதற்கும், உங்கள் கருத்துக்களை கூர்மைபடுத்திக் கொள்வதற்கும், உலகளாவிய அளவில் உங்கள் கருத்துக்களை கொண்டு செல்வதற்குமான மிகச் சிறந்த ஊடகம், இன்றைய நவீன சமூக ஊடகங்கள் தாம்.

அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று வருகிற காலங்களில் கூற இருக்கிறேன். நீங்களும் உங்களுக்கு பயன்படுகிற வகையில் சமூக ஊடகங்களில் கால்பதிப்பதை பற்றி சிந்தியுங்கள்.

உங்களுக்கு இதைப்பற்றி மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தால் இந்த commentsல் அதை கேட்கலாம். அல்லது Facebook மூலமாகவும் Facebook Messenger வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.

மீண்டும் இந்த Blog மூலம் சந்திக்கும் வரை நன்றி கூறி விடை பெறுகிறேன்! நன்றி வணக்கம்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழர்கள்!