வியாழன், 8 மார்ச், 2018

அச்சு இயந்திரம் உருவான வரலாறு

புத்தகங்கள் நம் அறிவுக்கண்ணை திறக்கும் திறவுகோல்கள் என்றார் ஓர் அறிஞர்.

பல்வேறு புத்தகங்களை வாசிக்க வாசிக்கத்தான் மனித குலத்தின் அறிவு வளர்கிறது ஆற்றல் பெருகுகிறது. புத்தகங்கள் இல்லாத ஒரு உலகத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அப்படி ஒரு காலம் இருந்து வந்தது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை புத்தகங்கள் என்பது ஓர் அறிய பொருளாக இருந்தது.

ஒரு புத்தகத்தில் ஒரு பிரதி மட்டும்தான் இருந்தது. அதுவும் கைகளால் எழுதப்பட்டு செல்வந்தர்கள் மட்டுமே வைத்துக்கொள்ள கூடியதாக இருந்தது. அதனைப்பார்த்து ஒரு வரலாற்று நாயகர் சிந்திக்கத் தொடங்கினார். செல்வந்தர்கள் மட்டும்தான் புத்தகங்கள் வைத்துக்கொள்ள முடியுமா? ஒரு புத்தகத்தை அப்படியே பிரதி எடுத்து பல புத்தகங்களாக உருவாக்கினால் எல்லோராலும் புத்தகங்களை வைத்துக்கொள்ள முடியுமே என்று சிந்தித்தார். சிந்தித்தத்தோடு  நின்று விடாமல் செயலிலும் இறங்கினார்.

தனி ஒரு மனிதனின் வேட்கையாலும், உழைப்பாலும், வியர்வையாலும், விடாமுயற்சியாலும் உலகுக்குக் கிடைத்த அருங்கொடைதான் அச்சு இயந்திரம். இதுவரை நிகழ்த்தப்பட்டிருக்கும் கண்டுபிடிப்புகளில் ஆக பிரசித்தியும், முக்கியத்துவமும் வாய்ந்தது அச்சியந்திரம்தான் என்று பல வரலாற்று வல்லுனர்கள் கூறுகின்றனர்

அவர்களின் கூற்று உண்மையானதுதான். ஏனெனில் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் புத்தகங்கள் உருவாகின. நூலகங்கள் பெருமளவில் தோன்றத் தொடங்கின. உலக மக்களுக்கு அறிவையும், தகவலையும் கொண்டு சேர்க்கும் பணி எளிதானது. ஒட்டுமொத்தத்தில் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஐந்து நூற்றாண்டுகளில் உலகம் பல துறைகளில் அபரிமித வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அந்த பெருமைக்கு சொந்தக்காரரைத்தான் நாம் சந்திக்கவிருக்கிறோம். அவர் பெயர் ஜோகேன்ஸ் குட்டன்பெர்க் (Johannes Gutenberg). 

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் என்பதால் குட்டன்பெர்க்கைப் பற்றிய குறிப்புகள் துல்லியமாக தெரியவில்லை. அநேகமாக அவர் 1398-ஆம் ஆண்டு அல்லது 1399-ஆம் ஆண்டு பிறந்தார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. ஜெர்மனியின் Mainz என்ற நகரில் வசதியான குடும்பத்தில் பிறந்தார் குட்டன்பெர்க். ஆரம்பம் முதலே குட்டன்பெர்க்கிற்கு வாசிக்கக் கற்றுத்தரப்பட்டது. ஆனால் அப்போதிருந்த புத்தகங்கள் இப்போது இருப்பவை போன்றவை அல்ல. கைகளால் எழுதப்பட்டவை அவற்றை புத்தகங்கள் என்று சொல்வதை விட Manuscripts அதாவது எழுத்துப்படிவங்கள் என்று சொல்லலாம். அவை கிடைப்பதற்கும் அரிதானவை. அவர் வளர்ந்து வந்த சமயத்தில் புத்தகங்களை அச்சடிக்கும் ஒரு புதிய முறை அறிமுகமானது அது அச்சுப்பால அச்சுமுறை (Block printing). ஒரு மரப்பலகையில் ஒவ்வொரு எழுத்தாக செதுக்கி எழுத்துகள் எழும்பி நிற்கும்படி செய்ய வேண்டும். பின்னர் அந்த எழுத்துகளில் மை தடவி அவற்றை தாளில் அழுத்தினால் ஒரு பக்கம் அச்சாகும்.

இந்த முறையில் ஒரே பக்கத்தைப் பல பிரதிகள் அச்சிடலாம். ஆனால் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு பலகை செய்தாக வேண்டும். அதற்கு அதிக நேரம் பிடிக்கும் அவற்றை வேறு பக்கங்களுக்கும் பயன்படுத்த முடியாது. எனினும் கைகளால் எழுதுவதைக் காட்டிலும் அச்சுப்பால அச்சுமுறை வேகமானதுதான். புதிய முறையில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களையும், எழுத்துப் படிவங்களையும் படிப்பதில் குட்டன்பெர்க்கிற்கு அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் அவற்றையும் செல்வந்தர்களால்தான் வைத்துக்கொள்ள முடிந்தது. எல்லோரும் வைத்துக்கொண்டு படிக்கும்படி புத்தகங்களை உருவாக்க வேண்டும் என்று அவர் கனவு கண்டார். ஒரு பாழடைந்த கட்டடத்தின் ஓர் அறையை சுத்தம் செய்து விட்டு அங்கு ரகசியமாக பரிசோதனைகள் செய்யத் தொடங்கினார். அதிகாலையிலேயே வீட்டை விட்டு வெளியேறுபவர் இரவுதான் திரும்புவார்.

குட்டன்பெர்க் எங்கு செல்கிறார்? என்ன செய்கிறார்? என்பது எவருக்கும் தெரியாது. யார் என்ன சொன்னாலும் நினைத்தாலும் பரவாயில்லை என்று தன்னுடைய ஆராய்ச்சிகளை தொடர்ந்தார். பலமுறை அவர் சோர்ந்தும், ஊக்கமிழந்தும் வீட்டிற்கு திரும்பியிருக்கிறார். ஏனெனில் ஒவ்வொரு முறையும் அவர் தோல்வியையே சந்தித்தார். கைவசம் இருந்த பணமும் தீர்ந்துவிட்டது. அப்போதுதான் செல்வந்தரான Johann Fust என்பவரின் நட்பு அவருக்கு கிடைத்தது. அச்சியந்திரத்தை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட Fust குட்டன்பெர்க்கிறகு தேவையான பணம் கொடுத்து உதவினார். புதிய உற்சாகத்துடன் தனது ஆராய்ச்சிகளைத் தொடங்கிய குட்டன்பெர்க் பல முயற்சிகளுக்குப் பிறகு ‘Movable type’ எனப்படும் இயங்கக்கூடிய எழுத்துருவை உருவாக்கினார். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு அச்சு என்று உருவாக்கினால் அவற்றை வேண்டிய மாதிரி தேவைகேற்ப மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம் என்பதை கண்டறிந்தார். பின்னர் பலகைக்குப் பதில் உலோகத்தாலான அச்சு சிறந்தது என்பதையும் கண்டறிந்தார்.

தாம் கண்டுபிடித்த முறையைக் கொண்டு லத்தீன் மொழியில் பைபிளை அச்சடிக்கும் பணியைத் தொடங்கினார். 1455-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் நாள்  நவீன அச்சு முறையில் உருவான உலகின் முதல் புத்தகம் உருவானது. லத்தீன் மொழியில் இரண்டு தொகுதிகளில் பைபிள் வெளியானது. ஒவ்வொன்றும் 300 பக்கங்கள் கொண்டது ஒவ்வொரு பக்கத்திலும் 42 வரிகள் இருக்கும். குட்டன்பெர்க் கண்டுபிடித்த அச்சு முறையில் உருவானது என்பதால் அது ‘குட்டன்பெர்க் விவிலியம்’ (Gutenberg Bible) என்றே அழைக்கப்பட்டது. அந்த முறையில் 200 பிரதிகள் வரை அச்சிடப்பட்டிருக்கலாம் என்று ஒரு குறிப்பு கூறுகிறது அவற்றில் தற்பொழுது 22 பிரதிகள் எஞ்சியிருப்பதாக நம்பப்படுகிறது. அந்த பைபிள் புத்தகத்தின் ஒரு பக்கம் விற்பனைக்கு வந்தால்கூட அது நூறாயிரம் டாலர் வரை விலை போகும் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது.

1455-ஆம் ஆண்டில் Bamberg புத்தக சந்தையில் தாம் அச்சிட்ட பைபிள் பிரதிகளை 300 florins-க்கு விற்றார் குட்டன்பெர்க். அது அப்போதைய ஒரு குமாஸ்தாவின் மூன்று ஆண்டு சம்பளத்திற்கு சமம். அனால் கையால் எழுதப்பட்ட பைபிளின் விலையை விட அது குறைவுதான். இதில் ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் அந்தக்காலகட்டத்தில் ஒரு பைபிளை கையால் எழுதி முடிக்க ஒருவருக்கு 20 ஆண்டுகள் வரை தேவைப்படுமாம். புத்தக சந்தையில் கிடைத்த பணம் பெரிய தொகை இல்லை என்பதால் தான் கடன் வாங்கிய பணத்தை குட்டன்பெர்க்கால் திருப்பித்தர இயலவில்லை. பொறுமையிழந்த  Fust குட்டன்பெர்க்கின் மீது வழக்குத் தொடர்ந்தார். தனக்கு சேர வேண்டிய பணத்திற்காக நீதிமன்றத்தின் துணையுடன் குட்டன்பெர்க்கின் அச்சு இயந்திரத்தை அப்படியே அபகரித்துக் கொண்டார்.

உலகின் ஆக உன்னத கண்டுபிடிப்பை செய்தும் அதிலிருந்து எந்தவித பலனையும் பெறாமல் ஏழ்மையில் இறந்து போனார் குட்டன்பெர்க் என்பதுதான் வேதனையான உண்மை. 1468-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் நாள் இயற்கை எய்திய அவர் ஒரு  Franciscan தேவலாயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அந்த தேவலாயம் இரண்டு முறை இடிக்கப்பட்டது இப்போது அவர் புதைக்கப்பட்ட இடம் எது என்பது கூட சரிவரத் தெரியவில்லை. கடந்த 500 ஆண்டுகளில் உலகம் சந்தித்திருக்கும் பல மாற்றங்களுக்கு அடிப்படையான ஒரு கண்டுபிடிப்பு அந்த அச்சு இயந்திரம்தான். புத்தகங்களை விரைவாக பல பிரதிகள் எடுக்க முடியும் என்பதால் உலகம் முழுவதும் புத்தகங்கள் பரவத் தொடங்கின. கிறிஸ்துவ மதத்தில் frattances கிளைகள் உருவானதற்கும் ஒருவகையில் குட்டன்பெர்க்தான் காரணம் என்கின்றனர் வரலாற்று வல்லுனர்கள். ஏனெனில் அதுவரை சமயத்தலைவர்களிடம் மட்டுமே இருந்த பைபிள் சாமானியர்கள் கைகளிலும் தவழத் தொடங்கியது.

சிலர் பைபிளின் கருத்துகளை வெவ்வேறு விதமாக புரிந்துகொள்ள முற்பட்ட போது frattances கிளைகள் தோன்றத் தொடங்கின. இதைத்தவிர்த்து இன்னொன்றையும் வரலாறு சுட்டிக்காட்டுகிறது. குட்டன்பெர்க் இயந்திரம் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில் ஐரோப்பாவும், சீனாவும் தொழில்நுட்பத் துறையில் சரி நிகராகவே முன்னேறியிருந்தன. அச்சியந்திரம் வந்த பிறகு அதனை பரவலாக பயன்படுத்தத் தொடங்கிய ஐரோப்பா எல்லாத் துறைகளிலும் அபரிமித வளர்ச்சிக் காணத் தொடங்கியது. ஆனால் பழைய அச்சுப் பாலமுறையையே தொடர்ந்துப் பின்பற்றிய சீனா பல துறைகளில் பின்தங்கிவிட்டது. இந்த ஒரு சான்றே போதும் உலக வரலாற்றில் குட்டன்பெர்க்கின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை பறைசாற்ற .

குட்டன்பெர்க்கின் எளிய வாழ்க்கை நமக்கு கூறும் பாடமும் எளிதானதுதான். அவர் பல தோல்விகளை சந்தித்த பிறகுதான் உலகின் ஆக உன்னத கண்டுபிடிப்பை செய்ய முடிந்தது. இன்று நம் கைகளில் தவழும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் நாம் குட்டன்பெர்க்கிற்குதான் நன்றி சொல்ல வேண்டும். தோல்விகளைக் கண்டு அவர் துவண்டு போயிருந்தால் கடந்த ஐந்து நூற்றாண்டின் உலக வரலாறே மாறிப்போயிருக்கும். தோல்விகளைக் கண்டு துவண்டுபோகாமல் விடாமுயற்சியுடன் தொய்வின்றி தொடருவோருக்குதான் வரலாறும் இடம் தரும் அவர்கள் விரும்பிய வானமும் வசப்படும்.

பார்வையற்றோருக்கு வழிகாட்டும் சவுண்ட்ஸ்கேப்

மைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்திருக்கும் சவுண்ட்ஸ்கேப் எனும் புதிய செயலி, பார்வையற்றோருக்கு வழிகாட்டும் வேலையை 3D ஆடியோ தொழில்நுட்பம் மூலம் செய்கிறது.

சான்ஃபிரான்சிஸ்கோ:

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய சவுண்ட்ஸ்கேப் செயலி பார்வையற்றோருக்காக வெளியிடப்பட்டுள்ளது. 3D ஆடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சவுண்ட்ஸ்கேப் செயலி பார்வையற்றோருக்கு ஆடியோ வடிவில் வழிகாட்டும் படி உருவாக்கப்பட்டுள்ளது. 

முதற்கட்டமாக ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் மட்டும் கிடைக்கும் சவுண்ட்ஸ்கேப் செயலியை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ஸ்டீரியோ ஹெட்செட்களை பயன்படுத்த வேண்டும். தற்சமயம் வரை சவுண்ட்ஸ்கேப் செயலி ஆண்ட்ராய்டு பதிப்பு குறித்து எவ்வித தகவலும் இல்லை.

மைக்ரோசாஃப்ட் தளத்தில் சவுண்ட்ஸ்கேப் குறித்த தகவல்களில் இந்த செயலி ஆடியோ கியூ மற்றும் லேபெல்களை 3D வடிவில் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது செயலி வழங்கும் ஆடியோ தகவல்கள் குறிப்பிட்ட இடம் இருக்கும் திசையை பார்வையற்றோருக்கு உணர்த்தும் வகையில் மிகவும் நேர்த்தியாக இருக்கும் என்றும் மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

குழந்தைகளிடம் ஐபோன் கொடுத்தால் இதுதான் நடக்கும்

சீன குழந்தை செய்த காரியம் அவரது பெற்றோர் பயன்படுத்தி வந்த ஐபோனினை 47 ஆண்டுகளுக்கு லாக் செய்திருக்கிறது.

ஷாங்காய் நகரில் வசிக்கும் இரண்டு வயது குழந்தை தனது தாயின் ஐபோனை 47 ஆண்டுகளுக்கு லாக் செய்துள்ளது. 

தொடர்ச்சியாக தவறான பாஸ்வேர்டினை பதிவு செய்ததால் ஐபோன் 2.5 கோடி நிமிடங்கள், அதாவது 47 ஆண்டுகளுக்கு லாக் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை தவறான பாஸ்வேர்டு பதிவு செய்யும் போதும் சில நிமிடங்கள் அளவு ஐபோன் லாக் செய்யப்படும். 

ஷாங்காய் நகரில் உள்ள ஆப்பிள் ஸ்டோர் ஊழியர் இதுகுறித்து கூறும் போது, ஐபோனினை சரி செய்ய ஒன்று சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் அல்லது ஐபோனில் உள்ள தகவல்களை முற்றுலுமாக அழித்து அனைத்து ஃபைல்களையும் ரீஇன்ஸ்டால் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக தவறான பாஸ்வேர்டு பதிவு செய்து ஐபோன் 80 ஆண்டுகள் வரை லாக் செய்யப்பட்டுள்ளன. ஜனவரி மாதம் நடைபெற்ற இச்சம்பவத்தில் கல்வி சார்ந்த வீடியோக்களை ஆன்லைனில் பார்க்க ஐபோன் குழந்தையிடம் வழங்கப்பட்டு இருக்கிறது. இரண்டு மாதங்கள் காத்திருந்த நிலையில், ஐபோனினை மீட்டெடுக்க எவ்வித வழியும் இல்லை என ஐபோன் வைத்திருக்கும் லு தெரிவித்து இருக்கிறார். 

ஆப்பிள் தயாரிக்கும் அனைத்து ஐபோன் மாடல்களிலும் பாதுகாப்பு அம்சத்தை பலப்படுத்த இவ்வாறான அம்சங்களை வழங்குகிறது. இதனால் மென்பொருள் அல்லது வன்பொருள் மூலம் ஐபோன்களை மிக எளிமையாக யாரும் ஹேக் செய்ய விடாமல் பார்த்து கொள்ளும்.

ஆறு முறை தொடர்ச்சியாக தவறான பாஸ்வேர்டு பதிவு செய்யும் போது ஐபோன் டிசேபிள் செய்யப்படும், பத்து முறை தவறான பாஸ்வேர்டு பதிவு செய்யும் போது ஐபோன் தகவல்கள் முழுமையாக அழிக்கப்பட்டு விடும்.

முதற்பலன் விழா

விளைச்சலின் முதற்பலனை இறைவனிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதே சுருக்கமான செய்தி.

உலகைப் படைத்தவர் இறைவன். உயிர்களைப் படைத் தவர் இறைவன். பயிர்களைப் படைத்தவர் இறைவன்.

அவரன்றி எதுவும் உருவாகவில்லை என்பதே விவிலியம் சொல்லும் பாடம். படைத்தவருக்கு எப்போதும் முதலிடம் இருக்க வேண்டும் என்பதே இந்த விழா வலியுறுத்தும் பாடம்.

முதற்பலன் விழா, இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை. விளைச்சலின் முதற்பலனை இறைவனிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதே சுருக்கமான செய்தி.

“அறுவடை செய்யும் போது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க்கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும். குரு அந்தத்தானியக் கதிர்க்கட்டினை, ஓய்வு நாளுக்குப் பின் வரும் அடுத்த நாளில் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார்.

ஆண்டவருக்கு எரிபலியாக ஓராண்டான பழுதற்ற ஆட்டுக்குட்டி ஒன்றைச் செலுத்துங்கள். இருபது படி அளவுள்ள மரக் காலில், பத்தில் இரண்டு பங்கான மிருதுவான மாவை எண்ணெயில் பிசைந்து எரிபலியாகச் செலுத்துங்கள். திராட்சைப்பழ ரசத்தை நீர்மப் படையலாகப் படையுங்கள். உங்கள் கடவுளின் காணி க்கையை நீங்கள் கொண்டுவரும் அந்த நாள்வரை, அப்பமோ, சுட்ட கதிரோ, பச்சைக் கதிரோ, உண்ணலாகாது.

இந்த விழாவுக்கான விதிமுறை களாக இறைவன் கொடுத்தவை இது. அதை இஸ்ரவேல் மக்கள் தவறாமல் நிறைவேற்றி வந்தார் கள். நிசான் மாதத்தின் 14-ம் நாள் பாஸ்காவைக் கொண்டாடி, 15-ம் நாள் முதல் புளிப்பற்ற அப்பத் திருவிழாவை ஆரம்பித்து, 16-ம் நாளில் முதல் பலன் விழாவைக் கொண்டாடினார்கள் இஸ்ரே வலர்கள்.

எகிப்தியரின் அடிமைத்தனத் திலிருந்து மீண்ட அவர்கள், வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியேறிய பிறகே இந்த விழா ஆரம்பமாகிறது. அலைந்து திரிந்த காலத்தில் அவர்கள் பயிர் செய்ய இயலாது என்பதே அதன் காரணம்.

இறைவனுக்கு முதலில் விளையும் கதிரைக் கொடுப்பது, இறைவனுக்கு தானியம் வேண்டும் என்பதால் அல்ல. இறைவன் நம் வாழ்வின் முதல் நபராக இருக்க வேண்டும் என்பதால்.

இந்த விழாவும் இறைமகன் இயேசுவை குறிப்பிடுகின்ற விழாவாகவே அமைந்திருக்கிறது. ‘முதற்பயன்’ என்பது இறைமகன் இயேசுவைக் குறிக்கிறது. அவர் தந்தையின் தலைமகன். அவர் மரணமடைந்து உயிர்த்த முதல் மனிதர்.

“இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது (1 கொரிந்தியர் 15:20)” எனும் இறைவார்த்தை அதை நமக்கு புரிய வைக்கிறது.

அந்தக்காலத்தில் விளைந்த முக்கிய தானியமான பார்லி இறைவனின் முன்பு வருகின்ற முதல் தானியமாக இருந்தது. ஏழைகளின் தானியமான பார்லி இயேசுவைக் குறிக்கிறது.

இறைமகன் இயேசு ஏழையிலும் ஏழையாய் வந்தவர். விண்ணகத்தில் கடவுளாக இருந்தவர், பூமியில் அனைத்தையும் துறந்து எளிமையாய் வந்தார். பணிவு எனும் குணத்திலும் அவர் தன்னை எளிமைப்படுத்திக் கொண்டவராய் இருந்தார்.

பார்லியானது ஆலயத்தில் அடிக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, கடைசியில் அதிலிருந்து மாவு பெறப்படும். பெறப்படும் மாவு தூய்மையானதாய் இருக்கும். அதை குரு பலியாய் செலுத்துவார்.

இறைமகன் இயேசுவும் அடிக்கப்பட்டார், நசுக்கப்பட்டார், ஆனாலும் தூய்மை விலகாமல் இருந்தார். கடைசியில் அவர் பலியாய் மாறினார்.

உயிர்த்த இயேசுவை மகதலேன் மரியா அன்பினால் தொட முயல்கிறார். அப்போது இயேசு, ‘என்னை தொடாதே, நான் இன்னும் தந்தையிடம் செல்லவில்லை’ என்றார். அதன் பின் விண்ணகம் சென்று தந்தையை சந்தித்தார். தந்தையை அடைந்த முதல் உயிர்ப்பு, இறைமகன் இயேசுவின் உயிர்ப்பு தான். அவரே நமக்கெல்லாம் முதல் சகோதரராய் இருக்கிறார்.

“இந்தக் கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர், தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார்” எனும் திருவெளிப்பாடு வசனமும் இதை தெளிவாக்குகிறது.

இப்படி இறைமகன் இயேசுவின் வாழ்க்கை முதற்பலன் பண்டிகையோடு பின்னிப் பிணைந்ததாய் மாறிவிடுகிறது.

இன்றைய சூழலில் நாம் இந்த விழாவை எப்படிக் கொண்டாட வேண்டும். இறைமகன் இயேசு ஏற்கனவே பூமியில் பிறந்து, வாழ்ந்து போதித்து, இறந்து, உயிர்த்து நம்மை மீட்டுக்கொண்டார். அந்த அடிப்படையில் இந்த முதற்பலன் விழா புதிய பரிமாணம் பெறுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசி, முதலிடத்தை எப்போதும் இறைவனுக்கே வழங்கு, எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனுக்கே மரியாதை செலுத்து, என்பது போன்ற சிந்தனைகளே இந்த முதற்பலன் விழாவின் அடிப்படையாய் இன்றைக்கு இருக்கிறது.

நமது வாழ்வும், நமது வளமும் இறைவன் நமக்குத் தந்தவை என்பதை உணரும் போது அதை அவருக்கே சமர்ப்பிப்பதில் சஞ்சலம் இருக்காது.

“வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும், பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு” என்கிறார் இயேசு.

அந்த இறைவனிடம் நம்மை ஒப்படைப்பதில் இந்த விழா முழுமையடைகிறது.

மாற்றம் பெற வேண்டியது யார்?

நம்மைத் திருத்திக் கொள்வதற்குப் பதிலாக, உலகத்தை மாற்ற முயற்சிக்கிறோம். அது சாத்தியமல்ல.. திருந்த வேண்டியது நாம் தான்.

ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது. பல ஊர்களிலிருந்து மிகப் பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும் தலைவலி குணமாகவில்லை.

ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்னியாசி வந்தார். அவர் செல்வந்தனை வந்து பார்த்தார். அவனுக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்றும், அதைக் குணப்படுத்த பச்சை நிறத்தைத் தவிர வேறு எதையும் பார்க்கக்கூடாது என்றும் கூறி விட்டுப் போய்விட்டார்.

பணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான். தலைவலி குணமாகி விட்டது. சன்னியாசி கூறியது சரிதான். உடம்பு சரியாகவே வீட்டை விட்டு வெளியே போகத் தொடங்கினான். வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது. ஆனால், அவற்றைத்தான் அவன் பார்க்கக்கூடாதே!

பச்சைப் பெயிண்டையும், பிரஷ்ஷையும் வாங்கிக் கொடுத்து, பல வேலையாட்களை வைத்து அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அடிக்கச் சொல்லிவிட்டான். கொஞ்ச நாளில் அவன் போகும் வழியில் எல்லாம் பச்சை நிறமாக காட்சியளித்தன.

சில மாதம் கழித்து சன்னியாசி அந்த ஊருக்குத் திரும்பி வந்தார். செல்வந்தனின் ஆட்கள் அவருக்கும் பச்சை நிற பெயிண்டை அடிக்கப் போனார்கள். அவர், ‘உங்கள் முதலாளியிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள்’ என்றார். அவர்களும் அழைத்துச் சென்றனர்.

செல்வந்தன் சன்னியாசியை மகிழ்ச்சியோடு வரவேற்றான்.

‘இந்த ஊரில் எல்லாவற்றுக்கும் ஏன் பச்சைப் பெயிண்ட் அடிக்கிறீர்கள்?’ என்று சன்னியாசி கேட்டார்.

‘நீங்கள் தானே நான் பச்சை நிறத்தைத் தவிர வேறு எதையும் பார்க்கக்கூடாது என்றீர்கள். அதனால் தான் அப்படிச் செய்தேன்’ என்றான் செல்வந்தன்.

சன்னியாசி சிரித்து விட்டு, ‘ஒரு நூறு ரூபாய் கொடுத்து, பச்சைக் கண்ணாடி வாங்கி அணிந்திருந்தால், உன்னைச் சுற்றியிருக்கும் பொருட்களெல்லாம் பிழைத்திருக்கும். உன் பணமும் வீணாகி இருக்காது. உலகம் முழுமைக்கும் உன்னால் பச்சை பெயிண்ட் அடிக்க முடியுமா?’ என்றார்.

நம்மில் பலரும் இந்தக் கதையில் வரும் செல்வந்தனைப் போலத்தான் இருக்கிறோம். நம்மைத் திருத்திக் கொள்வதற்குப் பதிலாக, உலகத்தை மாற்ற முயற்சிக்கிறோம். அது சாத்தியமல்ல.. திருந்த வேண்டியது நாம் தான். 

சீனாவுடனான உறவு மீது கவனம் செலுத்தும் இந்தியா, டெல்லியில் திபெத்தியர்கள் பேரணிக்கு தடை விதிப்பு

சீனாவுடனான உறவில் கவனம் செலுத்தும் இந்தியா, டெல்லியில் திபெத்தியர்கள் பேரணிக்கு தடை விதித்து உள்ளது என செய்தி வெளியாகி உள்ளது. #China #TibetansRally

புதுடெல்லி,

டோக்லாமில் சீன ராணுவம் அத்துமீறியதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது, இதனால் அங்கு மோதல் போக்கு நேரிட்டது. பின்னர் பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

அருணாச்சல பிரதேசத்தை சீனா தெற்கு தீபெத் என்று கூறி உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்திய தலைவர்கள், இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு பயணம் செய்வதற்கு தொடர்ச்சியாக சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது. சமீபத்தில் பிரதமர் மோடியின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கும் சீனா எதிர்ப்பை தெரிவித்தது. சீனாவிற்கு பதிலளித்து உள்ள இந்தியா, எங்களுடைய தலைவர்கள், மக்கள் அருணாச்சல பிரதேசத்திற்கு செல்ல உரிமை உள்ளது என்றது.

இந்நிலையில் சீனாவுடனான உறவில் கவனம் செலுத்தும் இந்தியா, டெல்லியில் திபெத்தியர்கள் பேரணிக்கு தடை விதித்து உள்ளது என செய்தி வெளியாகி உள்ளது.

டெல்லியில் திபெத்தியர்கள் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படாது என வெளியுறவுத்துறை மற்றும் உள்துறை தகவல்கள் தெரிவிப்பதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

 எல்லைத் தாண்டிய திபெத்திய அரசு தரமசலாவில் நடக்கிறது. அவர்கள் அங்கு பேரணியை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி பேசுகையில், “திபெத்தியர்கள் புதுடெல்லியில் சீனாவிற்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுப்பதை நாங்கள் விரும்பவில்லை, இது இருதரப்பு இடையே பதட்டத்தை ஏற்படுத்துகிறது. இப்போது இந்தியா மற்றும் சீனா உறவில் மிகவும் பதட்டமான காலம் நீடிக்கிறது, நாங்கள் பதட்டத்தை தணிக்கவே விரும்புகிறோம்,” என கூறினார் என ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

திபெத்திய தலைவர் தலாய்லாமாவை பின்பற்றுபவர்கள் தரமசாலாவில் மட்டுமே நிகழ்ச்சியை நடத்த முடியும், போராட்டம் நடத்த முடியும் என உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிப்பதாக செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. உள்துறை அமைச்சக அதிகாரி மீடியாவிடம் பேசுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நபர் கிடையாது என தன்னுடைய அடையாளத்தை தெரிவிக்க மறுத்துவிட்டார் எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தர்மசாலாவில் உள்ள திபெத்திய சமூகத்தினரின் பிரதிநிதி டோர்ஜி கயால்சென், புதுடெல்லியில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த அரங்கமானது மாற்றப்படும் என உறுதிசெய்து உள்ளார் எனவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரஜினி, கமல் திடீரென அரசியலுக்கு வந்து, வெற்றிடத்தை நிரப்ப முடியாது: நடிகை கவுதமி

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ஒரேநாளில் யாராலும் நிரப்ப முடியாது என்று நடிகை கவுதமி தெரிவித்தார். #RajiniKanth #KamalHasan

சென்னை, 

நடிகை கவுதமி  சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில்  மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகை கவுதமி , ரஜினி, கமல் திடீரென அரசியலுக்கு வந்து, வெற்றிடத்தை நிரப்ப முடியாது என்று தெரிவித்தார். 

கவுதமி மேலும் கூறியதாவது:- “ ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது உண்மைதான். தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை ரஜினி, கமல் நிரப்புவதற்கு நடைமுறையில் சாத்தியம் இல்லை. 

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ஒரே நாளில் யாராலும் நிரப்ப முடியாது. திருச்சியில் கர்ப்பிணிப்பெண் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.