செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

மாலைதீவை கைப்பற்ற “புளொட்” தலைவர் உமா மகேஸ்வரன் போட்ட பாரிய திட்டம் பற்றி அறிந்துள்ளீர்களா ..?

“முதலாவதாகவும் மிகவும் முக்கியமானதாகவும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது, நாங்கள் சர்வதேசவாதிகள் மற்றும் ஒரு புரட்சிகர இயக்கத்தில் உள்ளவர்கள். மாலைதீவைச் சேர்ந்த அடக்குமுறைக்கு உட்பட்டிருக்கும் ஒரு குழுவினர் உதவிக்காக எங்களை அணுகினார்கள், அவர்களிடம் பணம் இருக்கவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் நாட்டை நேசித்தார்கள் மற்றும் ஒரு அடக்குமுறைத் தலைவரை தூக்கியெறிய விரும்பினார்கள்” – உமா மகேஸ்வரன்

வரலாற்றிலேயே… ஒரு நாட்டினுடையை ஆட்சியை கவிழ்த்து, அந்த நாட்டையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரகூடிய அதி அற்புதமான மூளைசாலிகளாக ஈழத்தமிழர்கள் (“புளொட” இயக்கமும், உமா மகேஸ்வரனும்) இருந்திருக்கிறார்கள் என்பது இந்த கதையின் மூலம் நாம் அறியக் கூடியதாகவுள்ளது.

அந்த திட்டம் வெற்றி பெற்றிருந்தால் தமிழர்களுக்கான நாடு ஒன்று உருவாகியிருக்குமோ?

1988 செப்ரெம்பர் 28ல் வெளியான ஓரளவு அதிர்ச்சி தரும் செய்திகளிடையே மாலைதீவில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சி ஒன்று இடம் பெற்றதாக குறிப்பிடும் செய்தி ஒன்றும் சிறிது சிறிதாக பரவ ஆரம்பித்தது.

சதி முயற்சிக்கு தலைமை தாங்கிய மாலை தீவு தலைவர் அப்துல்லா லுபுதிக்கு ஸ்ரீலங்கா தமிழ் இராணுவக் குழுவான தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்கம் எனப்படும் புளொட் அமைப்பு உதவி செய்துள்ளது என்பதை கேள்விப்பட்ட ஸ்ரீலங்கா மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.

இதோ அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டம், தோல்வியில் முடிந்த கதை….

ஸ்ரீலங்காவை சோந்த குழு ஒன்றினால் மற்றொரு நாட்டின் ஆட்சிக் கவிழ்ப்பிற்குத் திட்டமிடுவதில் ஈடுபட எப்படி முடிந்தது? புளொட் அமைப்பின் ஒரு கடந்த கால பேச்சாளரான – ஸ்கந்தா – இது பற்றி கூறுகையில்,

தான் புளொட் தலைவர் உமாமகேஸ்வரனுடன் சேர்ந்து லுபுதியை (Abdullah Luthufi) பல சந்தர்ப்பங்களில் சந்தித்து இருப்பதாகவும், அவர் வெறுமே உமாவிற்கு ஆதரவான ரசிகர்களில் ஒருவர் என்று மட்டுமே தான் நம்புவதாகவும் சொல்லியிருந்தார்.

“லுபுதி என்னுடன் அரசியல் பற்றி வெகு அபூர்வமாகவே பேசியிருந்தாலும்” அவர் எப்போதும் சாதாரண மாலைதீவு மக்கள் சர்வாதிகாரி அப்துல் கையூமின் ஆட்சியின் கீழ் எதிர்கொள்ளும் துயரங்களைப் பற்றியே குறிப்பிடுவார். …

“பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு ஒரு அமெரிக்க டொலரிலும் குறைந்தளவு பணத்திலேயே வாழும் கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்” என்று அவர் வழக்கமாகச் சொல்லுவார்.

“யாராவது அரசாங்கத்தை விமர்சித்தால் அவர்கள் பகிரங்கமாகவே தொந்தரவுக்கு ஆளாவார்கள்”. அந்த சர்வாதிகாரி தன்னை கொன்று விடலாம் என்பதால் தனக்கு தனது சொந்த நாட்டுக்குப் போக முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

லுபுதி சொல்வதின்படி, அப்போதைய ஜனாதிபதி கையூம் (Gayoom) பெருமளவு இளைஞர்களை எகிப்தில் உள்ள மதரசாக்களுக்கு அனுப்பி அங்கு அவர்களுக்கு உத்வேக போதனையை போதிப்பதின் மூலம், நாட்டை ஒரு இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு இணங்கிச் செல்லும் பாதையை திறந்து விட்டுள்ளார்,

“உமா மற்றும் லுபுதி ஆகியோரிடையே பிணைப்பு வலுப்படுவதற்கு காரணம் என்னவென்றால் அவர்கள் இருவரும் ஒடுக்குமுறைக்கு எதிரான தங்களின் வெறுப்பை பகிர்ந்து கொண்டதுதான் என நம்பப்படுகிறது.

மத்திய குழு அல்லது அரசியற் குழுவில் உள்ள நாங்கள் எவரும் மாலைதீவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்தில் தொடர்பு கொண்டிருக்கவில்லை” என்று ஸ்கந்தா சொன்னார்.

மாலைதீவில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர், மத்திய குழுவையோ அல்லது அரசியல் குழுவையேர் கலந்தாலோசித்து அவர்கள் சம்மதம் பெறாமல், அவரது அதிகாரத்தை பயன்படுத்தியது மற்றும் மாலைதீவு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக ஒரு அங்கத்தவர்கள் குழுவை அனுப்பியது தொடர்பான பல சுய விமர்சன அமர்வுகள் இடம் பெறலாயின.

“முதலாவதாகவும் மிகவும் முக்கியமானதாகவும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது, நாங்கள் சர்வதேசவாதிகள் மற்றும் ஒரு புரட்சிகர இயக்கத்தில் உள்ளவர்கள். மாலை தீவைச் சேர்ந்த அடக்கு முறைக்கு உட்பட்டிருக்கும் ஒரு குழுவினர் உதவிக்காக எங்களை அணுகினார்கள், அவர்களிடம் பணம் இருக்கவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் நாட்டை நேசித்தார்கள் மற்றும் ஒரு அடக்குமுறைத் தலைவரை தூக்கியெறிய விரும்பினார்கள்” என்று சொல்லி உமா தனது தரப்பை நியாயப் படுத்தினார்.

கையும் தனது நாட்டை மத தீவிரவாத பாதையில் வழி நடத்தி கொண்டிருப்பதை லுபுதி சுட்டிக்காட்டினார்.

மாலைதீவு ஸ்ரீலங்காவில் இருந்து மிகவும் குறுகிய தூரத்தில் உள்ள ஒரு நாடு மற்றும் மத தீவிரமானது விரைவாக பரவி ஏற்கனவே இனவாதத்தினால் பிளவடைந்துள்ள இந்த நாட்டிலுள்ள தொழிலாளர் வர்க்கத்தை பாதிக்கும்.

மத தீவிரவாதம் இலகுவில் உழைக்கும் வர்க்கத்தினரை கூறுகளாகப் பிரித்து அழிவை ஏற்படுத்தும், அது அவர்களை அடக்குமுறை அதிகாரத்தை ஏற்படுத்த நினைப்பவர்களது பகடைக் காய்களாக மாற்றிவிடும்.

உங்களுக்குத் தெரியுமா இந்தியர்களால் ஆயுதங்கள் களையப்பட்ட ஒரேயொரு இயக்கம் நாங்கள் மட்டும்தான்.

மக்கள் வசிக்காத தீவு ஒன்றில் நாங்கள் ஆயுதங்களை இறக்குவதற்கு லுபுதி சம்மதித்தார், பின்னர் நாங்கள் அதை சிறு படகுகள் மூலமாக கொண்டு வரலாம், இவைதான் நான் தன்னிச்சையாக முடிவு செய்ததற்கான காரணங்களில் சில” என அவர் சொன்னார்.

நாங்கள் வேகமாகச் செயற்பட வேண்டியிருந்தது, ஒருவேளை கலந்தாலோசிக்காது நான் செயற்பட்டது தவறாக இருக்கலாம். “ எனினும் எங்கள் முயற்சி வெற்றி பெற்றிருந்தால் நாங்கள் கியுபாவில் பற்றி ஸ்ராவை தூக்கியெறிந்த கஸ்ட்ரோ மற்று சே குவேரா ஆகியோருடன் ஒப்பிடப் பட்டிருப்போம் மற்றும் கூலிப்படையினராக குறிப்பிடப் பட்டிருக்க மாட்டோம்.

“மாலை தீவினருக்கு உதவியற்காக எங்களுக்கு ஒரு ஒற்றைச் சதம் கூட வழங்கப்படவில்லை. உண்மையில் அவர்களுக்கு உதவும் எங்கள் முயற்சியில் நாங்கள் தான் ஆட்களையும் பணத்தினையும் இழந்துள்ளோம்.”

லுபுதியின் வேண்டுகோள் எளிமையானதும் நேரடியானதுமாகும். ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியை வீழ்த்தி அதற்குப் பதிலாக மக்களுடன் அதிகம் நட்புள்ள ஒரு ஆட்சியை ஏற்படுத்த அவர் விரும்பினார்.

மாலைதீவு பயணத்தில் தான் ஈடுபடுவது என்று உமா முடிவெடுத்ததின் பின்னர் சுமார் 80 அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு இரகசிய பிரிவு உருவாக்கப்பட்டது என்று ஸ்கந்தா சொன்னார்.

மாதக் கணக்காக புளொட் அங்கத்தவர்கள் மாலை தீவுக்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் நுழைந்து நில அமைப்பை கண்காணித்து வந்தார்கள், லுபுதியின் குழுவினருடன் சந்திப்புக்களை ஏற்படுத்தி ஒரு ஆயுத கையேற்பை நடத்த திட்டம் தீட்டினார்கள்.

ஐரோப்பாவில் உள்ள மற்றொரு குழுவினர் பயணத்துக்கு பயன்படுத்த தக்க கப்பல் ஒன்றை வாங்குவதற்கு பொறுப்பாக இருந்தனர்.

கப்பல் கொள்வனவு இரண்டு வித நோக்கங்களை கொண்டதாக இருந்தது – ஒன்று மாவை தீவினர் மற்றும் புளொட் அங்கத்தினரை மாலை தீவுக்கு அனுப்பி அங்கு அவர்கள் நிருவாகத்தை கைப்பற்ற உதவுவது மற்றும் அடுத்தது நீண்ட காலத் திட்டத்தின்படி ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்துக்கு வேண்டிய ஆயுதங்களை அனுப்புவதற்கு அதைப் பயன்படுத்துவது.

இந்த நடவடிக்கைக்கான திட்டம் உமாவினால் தீட்டப்பட்டது. லுபுதி மற்றும் இந்த செயற்பாட்டுக்கு தலைமை தாங்கிய இரண்டு புளொட் தலைவர்களான வசந்தி மற்றும் பாருக் ஆகியோர் மிகவும் சிக்கலான விடயங்களை எளிமையாகத் தீர்க்கக் கூடியவர்கள்.

துரதிருஷ்டவசமாக இந்த திட்டம் ஆரம்பக் கட்டத்திலேயே சிதைவடைந்து விட்டது. இந்த நடவடிக்கைக்காக கொள்வனவு செய்யப்பட்ட கப்பல், பிரான்சிலிருந்து ஸ்ரீலங்காவுக்கு புறப்பட இருந்த நாளுக்கு சற்று முன்னதாக காப்புறுதிக் கட்டணம் செலுத்தவில்லை என்கிற காரணத்துக்காக பறிமுதல் செய்யப்பட்டது.

திட்டமிட்டபடி திட்டத்தை நடத்துவதற்காக குழுவானது இரண்டு இழுவைப் படகுகளை கல்பிட்டி வழியாக கடத்திச் சென்றது.

ஒரு இழுவை படகில் இருந்த குழுவுக்கு வசந்தி தலைமை தாங்கினார். இரண்டாவது படகில் இருந்த குழுவை புளொட் அங்கத்தவர் பாருக்கும் மற்றும் லுபுதியும் வழி நடத்தினார்கள்.

திட்டத்தின்படி பாபுவின் தலைமையின் கீழ் செல்லும் ஒரு குழுவினர் வானொலி நிலையத்தையும் மற்றும் தொலைத்தொடர்பு வலையமைப்பையும் கைப்பற்றுவது.

பாருக் தலைமையிலான குழு ஜனாதிபதியையும் மற்றும் அவரது பாதுகாப்பு அமைச்சர் அகியோரைக் கைது செய்வது, லுபுதி மற்றும் வசந்தி தலைமையிலான குழுக்கள் அங்கிருந்த ஒரேயொரு இராணுவ தளத்தை கைப்பற்றுவது என்று எதிர்பார்க்கப்பட்டது.

வரும் குழுக்களைச் சந்திப்பதற்காக பிரதான நிலப்பரப்பில் லுபுதியின் குழு ஒன்று காத்திருந்து, வரும் குழுவினருடன் இணைந்து நிருவாகத்தை கைப்பற்றுவது என்று எதிர்பார்க்கப்பட்டது.

இரண்டு குழுக்களும் அக்டோபர் 30 நள்ளிரவு புறப்பட்டன மற்றும் அவர்களது செல்லிடத்தை நவம்பர் 2-ல் அடையும் என எதிர்பார்க்கப்பட்டது. உடனடியாகவே பிரச்சினை எழுந்தது, காலநிலை மோசமாக மாறியதால் இழுவைப் படகு அதன் பாதையை விட்டு விலகிச் சென்றது.

காற்று படகினை அவுஸ்திரேலியாவை நோக்கித் தள்ளத் தொடங்கியது. புளொட் அங்கத்தவர்கள் கொந்தளிப்பான கடற்பயணத்துக்கு முற்றிலும் பழக்கமில்லாதவர்கள் என்பதால் தீவிரமான கடல் – நோய் அசௌகரியங்களுக்கு உள்ளானார்கள்.

“ஒரு பருக்கை உணவைத் தானும் நாங்கள் வாயில் வைத்தால் அந்தக் கணமே, நாங்கள் அதை வாந்தி எடுக்கலானோம்” என்றார், அந்த நடவடிக்கையில் பங்கேற்றிருந்த ராகவன் என்பவர்.

நவம்பர் 2ல் நாங்கள் மாலை தீவை அடைவோம் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இறுதியாக நாங்கள் நவம்பர் 3, அதிகாலை 4.00 மணியளவில் மாலை தீவை அடைந்தோம்.

கப்பல்களை கட்டுவதற்கு கப்பல்கட்டும் தளம் எதையும் எங்களால் காண முடியவில்லை. இறுதியாக நள்ளிரவில் லுபுதி மற்றும் வசந்தி தலைமையில் இருந்த முதல் படகினை கரை சேர்க்க முடிந்தது.

வரும் போராளிகளைச் சந்திப்பதாக இருந்த லுபுதியின் ஆட்களை எங்குமே காண முடியவில்லை. நாங்கள் சொன்ன தினத்தை தவற விட்டிருந்தபடியால் அநேகமாக அவர்கள் சென்றிருக்க வேண்டும் என்றார் ராகவன்.

ராகவன் சொன்னதின்படி உள்ளே வந்த குழுவுக்கு இராணுவ முகாமை நோக்கி முன்செல்வதைத் தவிர வேறு மாற்று வழி இருக்கவில்லை.

படகில் இருந்து இறங்கும்போது அவர்கள் கொண்டு வந்திருந்த தொடர்பாடல் கருவி கடலுக்குள் விழுந்துவிட்டது.

இப்போது அந்தக் குழுவினருக்கு இரண்டாவது படகுடன் தொடர்பு கொள்ளவோ அல்லது ஸ்ரீலங்காவில் உள்ள தங்கள் தலைமையுடன் தொடர்பு கொள்ளவோ திறமையான தொடர்பாடல் வசதி எதுவும் இருக்கவில்லை.

துறைமுகத்தை விட்டு வெளியேறும்போது, ஒரு தொகுதி காவல்துறை மற்றும் குடிவரவு அதிகாரிகள் கண்களில் இந்தக் குழு தென்பட்டு விட்டது, அவர்கள் இந்தக் குழுவினரை நிறுத்துவதற்கு முயற்சித்தார்கள்.

புளொட் அங்கத்தவாகளில் ஒருவர் அவர்களின் திசையில் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதனால் அந்த அதிகாரிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்கள்.

எனினும் அந்த துப்பாக்கிச் சூடு இராணுவத்துக்கு எச்சரிக்கையை தெரிவித்து விட்டது மற்றும் தாக்குதலாளிகள் முகாமை அடைந்ததுமே எச்சரிக்கையுடன் இருந்த இராணுவ வீரர்கள் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.

வசந்தி, மற்றும் இந்த திட்டம் பற்றிய முழு விபரமும் தெரிந்த ஆள் ஆகிய இருவருமே துப்பாக்கிச் சூடடுக்கு இலக்காகி முதன்முதலில் இறந்தவர்களாக இடம் பிடித்தார்கள்.

இராணுவத்தினர் எச்சரிக்கை அடைந்தபடியால், அந்தக் குழவினரால் முகாமை கைப்பற்ற முடியவில்லை எனினும் அவர்களால் இராணுவத்தினரை முகாமுக்குள்ளேயே முடக்கி வைத்திருக்க முடிந்தது.

இந்த இடைநேரத்தில் இரண்டாவது குழுவினால் தங்கள் படகை கரைக்கு கொண்டுவர முடிந்தது மற்றும் அதே வளாகத்துக்குள் இருந்த தொலைத்தொடர்பு மையம் மற்றும் வானொலி நிலையத்தை நோக்கி அவர்கள் முன்னேறினார்கள்.

பீட்டர் எனும் ஒரேயொரு அங்கத்தவரை மட்டும் இரண்டாவது படகில் தொடர்பாடல் வசதிக்காக நிறுத்தியிருந்தார்கள்.

மாலைதீவில் அன்றைய தினம் விடுமுறையாக இருந்ததால் தொலைத் தொடர்பு மையம் மற்றும் வானொலி நிலையங்கள் மூடப்பட்டிருந்ததை அங்கு சென்ற பாபுவின் குழுவினர் கண்டனர்.

அங்குள்ள இரும்புக் கதவுகள் தாக்குதல்காரர்கள் தாக்கிய வெடிமருந்துகளை தாக்குப் பிடிக்கக் கூடியவையாக இருந்தன.

இதேநேரம் தொலைத்தொடர்பு மையத்தை பாபு துண்டிக்கவில்லை என்பதை அறியாத பாருக் மற்றும் அவரது குழுவினர் ஜனாதிபதி கையூம் மற்றும் அவரது பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை கைது செய்வதற்காக முன்னேறினார்கள்.

எனினும் துப்பாக்கிச் சூட்டு சத்தங்களை கேட்ட ஜனாதிபதியின் விபரமுள்ள பாதுகாப்பு பிரிவினர் அவரை அவரது வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்கள்.

பாதுகாப்பு அமைச்சரும் மறைவாக ஒளிந்து கொண்டார். பாருக் மற்றும் அவரது குழுவினர் வந்த போது பறவைகள் பறந்து விட்டன. அவர்களைத் தேடிப் பார்த்தபோதும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

தொலைத் தொடர்பு மையம் மற்றும் வானொலி நிலையம் என்பன மீதான தாக்குதலை கேள்வியுற்ற ஜனாதிபதி கையூம் அந்த வசதிகள் தாக்குதல்காரர்களின் கையில் விழுந்து விட்டது என்றே நினைத்தார்.

அதிர்ஷ்ட வசமாக காலை 7 மணியளவில்தான் தொலைத் தொடர்பு சேவை இன்னும் செயற்படுகிறது என்பதை அவர் கண்டு பிடித்தார்.

அவர் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கங்களை தாக்குதலை முறியடிக்க உதவி கோரி அழைப்பை ஏற்படுத்தினார். ராகவன் சொல்வதின்படி டியாகோ கார்சியா தளத்திலிருந்த அமெரிக்க ஜெட் விமானம்தான் முதலில் வந்தது.

காலை 07.30 மணியளவில் அமெரிக்க போர் விமானம் அந்த இடத்தைச் சுற்றி வட்டமிட்டது, அதன் பின்னர் அது அது சென்றுவிட்டது.

இந்தக் கட்டத்தில் பாருக் மற்றும் ராகவன் ஆகியோர் தங்கள் திட்டம் தோற்றுவிட்டது என்பதை உணாந்தார்கள். அங்கிருந்து திரும்பவதற்கான திட்டத்தை தீட்ட ஆரம்பித்தார்கள். ஆனால் எப்படி என்பதுதான் கேள்வி?

வசந்தியின் மரணத்துடன் திட்டம் தோல்வியுற்றால் திரும்பிச் செல்வதற்காக ஏதாவது எற்பாடு செய்யப்பட்டிருந்ததா என்பதை அவர்கள் அறிவது இயலாத காரியமாயிற்று.

“நாங்கள் தவிக்க விடப்பட்டோம” என்றார் ராகவன் – “தொடர்பாடல் எதுவும் இல்லை, 80 அங்கத்தவர்களையும் வெளியேற்றவதற்காக தொடர்பு கொள்ள வழி எதுவுமில்லை”. ஒரு அவசரத் திட்டத்தை செயற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது,

ஒரு குழு ஒரு கப்பலை கடத்துவதற்காக துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது, இரண்டாவது குழு பணயக் கைதிகளாக சிலரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

பிற்பகலளவில் முதலாவது குழு புரோகிரஸ் லைட் எனும் கப்பலைக் கைப்பற்றியது. அந்தக் கப்பலில் பணியாற்றிய குழுவினர் இந்தக் குழுவை ஏற்றிச் செல்ல சம்மதித்திருந்தனர்.

இரண்டாவது குழு மாலைதீவு அமைச்சர் மற்றும் அவரது சுவிஸில் பிறந்த மனைவி உட்பட குடிமக்கள் சிலரை பணயக்கைதிகளாகப் பிடித்துக்கொண்டது.

“கிட்டத்தட்ட பிற்பகல் 06.00 மணியளவில் துருப்புகளை ஏற்றி வந்த முதலாவது இந்திய விமானம் தரையிறங்கியது” என்று சொன்னார் ராகவன்.

“எங்கள் அங்கத்தவர்களை திரும்ப அழைத்துக் கொண்டு செல்வதற்கு இதுதான் தக்க தருணம் என நாங்கள் அறிந்து கொண்டோம். இரண்டு மணித்தியாலங்களுக்குள் துருப்புக்களை ஏற்றிய மொத்தம் ஏழு விமானங்கள் தரையிறங்கின.

நாங்கள் மின் பிறப்பாக்கிகளை அணைத்து நாட்டை இருளில் மூழ்கடித்துவிட்டு அங்கிருந்து செல்லத் தயாரானோம். எங்களது அங்கத்தவர்களில் மூவர் மாலைதீவில் மரணமானார்கள்.

மீதமாக உள்ள எங்கள் அங்கத்தவர்கள் யாவரும் கப்பலில் உள்ளார்கள் என்பதை உறுதி செய்த பின்னர் பின்னிரவு 12.30க்கு (04.11.1988) கப்பல் மாலைதீவினை விட்டு புறப்பட்டது.

மாலைதீவை விட்டு வெளிச்செல்லும் கப்பல் பாதை விமான நிலையத்தின் திசையில் சென்று அந்த இடத்தில் இருந்து படகுகள் சர்வதேச கடல் பகுதியை நோக்கித் திரும்புகின்றன.

தங்களது உண்மையான சேருமிடத்தை மறைப்பதற்காக குழு கப்பல் பணியாளர்களிடம் தாங்கள் இந்தோனசியாவின் திசையில் செல்வதாகச் சொல்லியிருந்தார்கள்.

கப்பல் விமான நிலையத்தை நோக்கித் திரும்பிய போது, இந்திய வீரர்கள் கிளர்ச்சிக்காரர்கள் தங்களை தாக்க வருவதாக நினைத்து கப்பலை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த ஆரம்பித்தார்கள்.

எனினும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை மற்றும் கப்பல் தனது பயணத்தை தொடர்ந்தது. இதே நேரம் மற்றொரு நாடகத்திற்கான திரை விலகியது.

முதலாவது வந்த குழு இராணுவ முகாமை தாக்கியபோது துப்பாக்கிச் சூடு ஆரம்பமானதும் பீட்டரும் அவரது தொடர்பாடல் கருவியும் இருந்த இழுவைப் படகில் பணியாற்றியவர்களிடம் அச்சம் குடிகொள்ளத் தொடங்கியது.

தங்களை போவதற்கு அனுமதிக்க முடியுமா என அவர்கள் வினாவினார்கள். இழுவைப் படகையும் அதன் பணியாளர்களையும் செல்ல பீட்டர் அனுமதியளித்தார். அவர் ஒரு சிறிய படகில் இருந்தார். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு தாக்குதலாளிகள் பின்வாங்கிச் சென்ற சிறிது நேரத்தின் பின்னும் பீட்டர் ஏதாவது சமிக்ஞையை எதிர்பார்த்து கடலிலேயே காத்திருந்தார்.

இறுதியாக 04.11.1988ல் தங்களது குழு மாலைதீவை கைப்பற்றிவிட்டது என்று நம்பி அவர் துறைமுகத்தை நோக்கிச் சென்றார், அங்கு அவருக்கு இந்திய துருப்புக்களால் சூடான வரவேற்பு வழங்கப்பட்டது,

அவர்கள் அவரை விசாரணை செய்ததில் அவர் இலங்கையை சேர்ந்தவர் மட்டுமல்ல, புளொட் குழுவின் ஒரு அங்கத்தவர் என்பதையும் அவர்கள் கண்டு பிடித்தார்கள்.

புரோகிரஸ் லைட் கப்பலில் இன்னும் சுவராஸ்யமான பல நாடகங்கள் நடந்து கொண்டிருந்தன. இந்திய போர் ஜெட் விமானம் புரோகிரஸ் லைட்டின் இருப்பிடத்தை அடையாளம் கண்டு அவுஸ்திரேலியாவுக்கு ஒரு பயணத்தை முடித்து விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் ஒரு இந்திய யுத்தக்கப்பலை அதைப் பிடிக்கும்படி திருப்பி விட்டார்கள்.

யுத்தக் கப்பல் புரோகிரஸ் லைட்டை பிடித்ததும் அதன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதனால் அங்கு கூச்சலும் குழப்பமும் உண்டானது. பணயக் கைதிகளில் ஒருவர் கப்பலின் மேல்தளத்திற்கு இழுத்து வரப்பட்டார். யுத்தக் கப்பல் தனது வழியில் இருந்து மாறாவிட்டால் தாங்கள் அவரைக் கொல்லப் போவதாக அவரைக் கடத்தியவர்கள் அச்சுறுத்தினார்கள். அநேகமாக உயர் அதிகாரிகளுக்கு அறித்த பின்னராக இருக்கலாம். போர்க்கப்பல் தனது தடையை தளர்த்தி விலகியது. ஆனால் அங்கிருந்து செல்லவில்லை.

ஆனால் புரோகிரஸ் லைட் ஸ்ரீலங்கா கடற்பரப்புக்குள் நுழைய முயற்சிக்கிறது என்பது தெளிவானதும் போர்க்கப்பல் விரைவாக முன்னுக்கு வந்தது. எச்சரிக்கை தெரிவிக்கும் விதத்தில் துப்பாக்கி சூடு நடத்தி கப்பலை உடனடியாக நிறுத்தும்படி கேட்டுக்கொண்டது.

புரோகிரஸ் லைட் தனது வேகத்தை குறைப்பதற்கு எந்த முயற்சியும் செய்யாததால் யுத்தக் கப்பல் புரோகிரஸ் லைட் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. அது வேகமாக உடைந்து மூழ்கத் தொடங்கியது…. பணயக் கைதிகள், கடத்தல்காரர்கள், மற்றும் கப்பல் பணியாளர்கள் ஆகிய அனைவரும் இந்திய கடற்படை கப்பல் மூலம் கரைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

மாலைதீவு ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சி இந்தியாவின் தலையீட்டினால் முறியடிக்கப்பட்டது.

1989ல் புளொட் தலைவர் உமா மகேஸ்வரன் கொழும்பில் தனது இயக்க சகாக்கலாலேயே கொலை செய்யப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து புளொட் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.சித்தார்த்தன், ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்த புளொட் அங்கத்தவர்களின் விடுதலைக்காக வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை பின்னர் விடுவித்தார்.
Tamilforum.

திங்கள், 16 அக்டோபர், 2017

இன்று... உலக உணவு தினம்


தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்...! உணவு உற்பத்தியில் வேண்டும் மாற்றம்.
ஐ.நா.,வின், உணவு மற்றும் விவசாய அமைப்பு, அக்., 16ம் தேதியை, உலக உணவு நாள் என அறிவித்துள்ளது. 

இத்தினத்தின், நடப்பாண்டு மையக்கருத்து, 'காலநிலை மாறுகிறது; உணவு மற்றும் விவசாயத்திலும் கட்டாயம் மாற்றம் வர வேண்டும்' என்பது தான்.ஐ.நா., சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ள சில விஷயங்கள்:காலநிலை மாற்றத்தால், உணவு பாதுகாப்பு என்பது, மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. 

மக்கள் தொகை, 2050ல், 960 கோடியாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உணவுத் தேவையை பூர்த்தி செய்ய, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப, விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

திட்டமிடல் அவசியம்

இயற்கை வளங்களை வைத்து, விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். உணவு பதார்த்தங்களை வீணடிக்காமல், சிக்கனத்தை கையாள வேண்டும். விவசாயப் பொருட்களை அறுவடை செய்வது, அவற்றை சேமிப்பது, 'பேக்கிங்' செய்வது, வாகனம் மூலம் கொண்டு செல்வது, உட்கட்டமைப்பு மற்றும் சந்தை வசதி போன்றவற்றில் சரியான திட்டமிடலை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டமைப்பின் அமைப்பாளர் கூறுகையில், ''சிறு, குறு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச தொழில் பாதுகாப்பு இருந்தாலே, அவர்கள், விவசாயத்தை விட்டு விலக மாட்டார்கள். பழமை மாறாமல் உள்ள விவசாயிகளை, அறிவியல் அறிவு நிறைந்த விவசாயிகளாக மாற்றவும், அதன் மூலம், விவசாயத்தில் இயந்திரமயமாக்கலை புகுத்தவும் முயற்சி எடுக்க வேண்டும்,'' என்றார்.

2030ல் பசி தீருமா?

வரும், 2030க்குள் பசியில்லா நிலையை (ஜீரோ ஹங்கர்) உருவாக்க, இந்தியா, பிரான்ஸ், சீனா, அமெரிக்கா, அர்ஜென்டினா உட்பட, 193 நாடுகள் உறுதி பூண்டுள்ளன. இந்நிலையை எட்ட, விவசாய முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். 

இந்நிலையில், காலநிலை மாற்றம் குறித்து, உலக நாடுகள் பங்கேற்கும் கருத்தரங்கு, மொராக்கோவில், நவ., 7 முதல் 18 வரை நடக்கிறது. இதில், காலநிலை மாற்றம், பசியில்லா நிலையை எய்துவது தொடர்பாக, முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 11 அக்டோபர், 2017

உலகமயமாக்கலின் உண்மை முகம்.

உலகமயமாக்கல் என்றால் என்ன? உலகமயமாக்கலின் உண்மை முகம்.


"ஊருக்கு போறேன்! 32 இன்ஞ் சோனி LED டிவி வாங்கலாம் என்று இருக்கிறேன்" என்று நண்பர் சொன்னபோது அருகிலிருந்த இன்னொரு நண்பர்  "அட ஒலகமயமாக்கல் வந்ததிலிருந்து இப்ப எல்லாமே ஊர்லேயே கெடைக்கிது. இங்கே இருந்து எதுக்கு சுமந்துக்கிட்டு போற?? ஊருலேயே வாங்கிவிடலாம். ஒலகமயம் வந்தது எவ்வளவு வசதியாக இருக்கு?" என்றார்.


நண்பரை பொறுத்தவரை உலகமயமாக்கல் என்பது பயணச்சுமையை குறைத்து ஊரிலேயே அனைத்து பன்னாட்டு கம்பெனிகளின் தரமான(!?) பொருட்களை வாரி வாரி வழங்கக்கூடிய அமிர்த சுரபி. நண்பர் சொல்வது போல உலகமயமாக்கல் என்பது அவ்வளவு நல்ல விடயமா?


உலகமயமாக்கல் என்றால் என்ன?


தகவல் தொழில்நுட்ப புரட்சியும் இணைய புரட்சியும் போட்டி போடும் யுகம் இது. அமெரிக்க அதிபர் தேர்தலை ஆண்டிப்பட்டியில் அமர்ந்து கொண்டு அலச  முடிகின்ற அசாத்திய யுகம். உலகில் எந்தவோரு மூலையில் நடக்கின்ற எந்தவோரு முக்கிய நிகழ்வும் விரல் சொடுக்கில் காட்டுத்தீயாக உலகமெங்கும் பரவிவிடுவதை அன்றாடம் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.


உலகமயமாக்கலின் இந்தப் பரிமாணம், தகவல் தொழில்நுட்பப் புரட்சியோடு தொடர்புடையதாகும். ஆனால் அரசியலையும், சர்வதேச விவகாரங்களையும் உலகமயமாக்குவதென்பது முற்றிலும் மாறுபட்ட பொருளையும் பரிமாணத்தையும் கொண்டதாகும்.


அதென்ன அரசியலையும் சர்வதேச விவகாரங்களையும் உலகமயமாக்குவது?



பொருளதாரம், வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டு உறவுகள், தேசப் பாதுகாப்பு ஆகிய நான்கு துறைகளை உலகமயமாக்குவது தான் உலகமயமாக்கலின் உண்மையான இலக்காகும். இந்த நான்கும் மக்கள் நல அரசின் ஆளுகைக்குக் கீழ் வருகின்ற மிக மிக முக்கியமான துறைகளாகும்.

உலகமயமாக்கல் என்கிற போர்வையில் மேற்கத்திய, அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகள் இந்த நான்கு முக்கியமான துறைகளை மூன்றாம் நாடுகளின் அரசாங்களிடமிருந்து பிடுங்கி, அவற்றைத் தம்முடைய ஆளுகையின் கீழ் கொண்டு வரத் திட்டமிட்டு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றன.

1. பொருளாதாரம்


முதலாவதாக, பொருளாதாரத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு நாட்டின் பொருளாதாரத்தைத் தங்களின் கிடுக்குப் பிடியில் கொண்டு வருவதற்காக இவர்கள் என்ன செய்கின்றார்கள்? எந்தெந்த விதங்களில் வேடந் தரித்து வருகின்றார்கள்/ இந்தச் செப்பிடு வித்தையை இவர்கள் செய்வதெப்படி? இதற்காக இவர்கள் போடுகின்ற ஆட்டங்கள் என்னென்ன?

முதலில் உதவித் தொகைகளைத் தருகின்றோம் என்று தொடங்குவார்கள். பாலங்கள் கட்டுவோம், அணைக்கட்டு கட்டித் தருகின்றோம், விமானத்தளம் அமைத்துத் தருகின்றோம் என பல வடிவங்களில் ஆசை காட்டுவார்கள். குறைந்த வட்டியில் கடன் தருகின்றோம் அல்லது சேவைக் கட்டணத்தை மட்டும் கொடுத்தால் போதும் என்று தாமாக முன் வந்து கடன் கொடுத்து கடன் பொறியில் மூன்றாம் உலக நாடுகளைச் சிக்க வைப்பார்கள். பிறகு அதிக வட்டியில் குறுகிய காலக் கடன் என வலையை இறுக்கிக் கட்டுவார்கள்.

இவையெலலாமே கமுக்கமாக நடந்தேறும்.வெளிப்படையான நிர்வாகம், ஜனநாயகம், விடுதலை, சுதந்திரம் என்று மூச்சுக்கு முப்பது தடவை சொல்பவர்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தோடும் எதிர்கால வளத்தோடும் தொடர்புடைய இந்த விவகாரங்களை குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதம் நடத்துவதை விரும்ப மாட்டார்கள்.

ஏற்றுமதி- இறக்குமதி வல்லுநர்கள், வெளிநாட்டு ஆலோசகர்கள், உள்நாட்டு அரசு அதிகாரிகள் என எல்லாரும் சேர்ந்து கைகோர்த்துக் கொண்டுச் செயல்படுவார்கள். நாட்டின் இறையாண்மை, மக்கள் நலன், எதிர்காலம் குறித்தெல்லாம் கிஞ்சிற்றும் கவலையின்றி இவர்கள் எல்லாரும் புகுந்து விளையாடுவார்கள்.

அரசு அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் என்கிற வடிவில் அற்பமான உலக லாபங்களுக்காக நாட்டு நலன்களையும் எதிர்காலத்தையும் வெளிநாட்டு பண முதலைகளுக்கு அடகு வைக்கத் துணிந்து விடுகின்ற, மனச்சாட்சியற்ற கைக்கூலிகள் இவர்களுக்கு எல்லா நாடுகளிலும் கிடைத்து விடுவது தான் வேதனையான முரண்பாடு ஆகும்.

இவ்வறாக, நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு சிறுக சிறுக மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளின் பிடியில், குறிப்பாக அமெரிக்காவின் கிடுக்குப் பிடியில் முழுமையாகச் சிக்கிவிடும். உடைத்தெறிய முடியாத சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட அடிமைகளின் நிலைக்கு நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு ஆளாகிவிடும்.

அடுத்த கட்டமாக அந்த ஏழை நாட்டின் கரன்ஸி நாணயம் மீது கை வைக்கப்படும்.



நாணயத்தின் மதிப்பைக் குறைத்துவிடு; இல்லையேனில் புதிய கடன் பொருளாதார ஒப்பந்தங்கள் கிடையாது என எச்சரிக்கை விடப்படும். நாணயத்தின் மதிப்பைத் திரும்பத் திரும்பக் குறைக்கும் போது உலக அரங்கில் அந்த நாணயத்துக்கு மதிப்பில்லாமல் போகும். அதற்கு நேர்மாறாக, அதனோடு ஒப்பிடும்போது அமெரிக்க டாலர், பவுண்டு, ஸ்டெர்லிங், ஃபிராங், யென் போன்றவற்றின் மதிப்பு எகிறிக் கொண்டே போகும்.

உலக வங்கி,ஐ.எம்.எஃப் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்கள் ஆடிய ஆட்டத்தால் இன்று உலக அரங்கில் அமெரிக்க டாலர் கொடி கட்டிப் பறக்கின்றது. அதனோடு எந்தவொரு மூன்றாம் உலக நாட்டின் நாணயத்தையும் ஒப்பிட முடியாத அளவுக்கு அதன் ஆதிக்கம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச அரங்கில் எந்தவொரு நாட்டின் கரன்ஸியின் மதிப்பைப் பொறுத்தே அந்த நாட்டின் செல்வாக்கும் கணிக்கப்படும். கரன்ஸி வீழ்ந்தால் அந்த நாட்டின் செல்வாக்கும் சரிந்து விடும்.


2.வெளிநாட்டு வணிகம்

இரண்டாவதாக வெளிநாட்டு வணிகத்தை எடுத்துக் கொள்ளுவோம்.எந்த நாட்டுடன் எப்படிப்பட்ட வணிகத்தை வளர்த்துக் கொள்வது? உள்நாட்டு வணிக நலன்கள் பாதிப்படையாத வகையில் ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்துக்கான கொள்கையை வகுப்பதெப்படி? போன்றவற்றைக் குறித்தெல்லாம் சுயமாக நிர்மணம் செய்கின்ற உரிமை ஒரு நாட்டுக்கு உண்டு.

ஒரு நாட்டுக்கு இருக்கின்ற இந்த சுய நிர்ணய உரிமையைப் பறிக்கின்ற நோக்கத்துடன் மேற்கத்திய, அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளால் அமைக்கப்பட்ட நிறுவனம் தான் உலக வர்த்தக அமைப்பு (WTO)


வெளிநாட்டு வணிகத்தில் ஒரு நாட்டுக்கு இருக்கின்ற சுதந்திரத்தையும் உரிமையையும் முற்றாகப் பறிக்கின்ற வலுவான ஆயுதமாக இது இருக்கின்றது. இதனோடு சுதந்திர சந்தை, சந்தை பொருளதாரம் போன்ற சர்வதேச ஒப்பந்தங்கள் மூலகமாகவும் வெளிநாட்டு வணிகத்தில் மூன்றாம் உலக நாடுகளுக்கு இருக்கின்ற சுதந்திரமும் உரிமையும் திட்டமிட்ட முறையில் பறிக்கப்படுகின்றது. இதன் சமீபத்திய எடுத்துக்காட்டாக ஈரான் -இந்திய எண்ணெய்க்குழாய் அமைக்கின்ற திட்டம் முடக்கப்பட்டதைச் சொல்லலாம். இவற்றுக்குப் பின்னால் அமெரிக்க, யூத சூழ்ச்சிகளும் சதித் திட்டங்களும் இயங்குகின்றன என்பது வெளிப்படை.

சுதந்திர சந்தை, சந்தை பொருளாதாரம்,ஏற்றுமதி-இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட வணிகவசதி, சில குறிபிட்ட நாடுகளை மட்டும் அதிகமாக சலுகை காட்டப்பட வேண்டிய நேசநாடுகளை(Most Favoured Countries) அறிவிக்குமாறு அமெரிக்கா செய்கின்ற நிர்பந்தம்- இவையெல்லாமே எதற்காக என நினைத்தீர்கள்?

யாருக்குத் துணை நிற்கின்ற ஏற்பாடுகள் இவை என நினைத்தீர்கள்?

இவற்றால் மூன்றாம் உலக நாடுகளுக்கு எந்தவிதமான பயனும் இல்லை. அதற்கு மாறாக மூன்றாம் உலக நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்களும் அமெரிக்க நிறுவனங்களும் காலூன்றுவதற்குத் தான் இவையனைத்தும் துணை நிற்கின்றன.இதுதான் மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மை.

இன்னும் வெளிநாட்டு உறவுகள்,பாதுகாப்பு இவை பற்றியும் உலகமயமாக்கல் தொடர்பில் எழுத வேண்டியிருப்பதால். தொடரும்....!!!

உலகமயமாக்கலில் பிறக்கும் மகத்தான வருங்காலக்குழந்தை... நீ வருக நீ வருக...! நாம் கொடுப்பதை அனைத்தையும் பெறுக நாம் வறுக......!