சனி, 12 பிப்ரவரி, 2011

இரும்புச்சீமாட்டியின் இறுக்கமானபிடியும் போக்லண்ட் யுத்தமும்.(falklands war)

இரும்புச்சீமாட்டியின் இறுக்கமானபிடியும் போக்லண்ட் யுத்தமும்.(falklands War)
பூமிப்பந்தின் தென் பகுதியின் தென் அட்லாண்டிக் ஆழியில் மிதக்கும் முத்துக்கள்போல ஆர்ஜென்ரீனாவுக்கு கிழக்காக உள்ள, இரு பெரியதீவுகளையும், பல சிறு தீவுக்கூட்டங்களையும் கொண்ட தீவுகளே போக்லண்ட் தீவுக்கூட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.

சொரசொரப்பான மெதுமையான மண்ணியல் தன்மைகளையும், பெரிய இலைகளைக்கொண்ட, இளம்பச்சை தாவரங்களையும், வர்ரஜ் என்ற நரியினம், ஸ்ராரா, ரிட்டரா போன்ற பறவை இனங்களை தன்னகத்தே தனித்துவமாக கொண்டுள்ள தீவுக்கூட்டங்கள் இவை. வெதுவெதுப்பான காலநிலை, குளிர்க்காலநிலை என இரு பெரும் காலநிலைகளின் தாக்கங்கள் இந்த தீவுக்கூட்டங்களில் உண்டு.

1880களில் இந்த தீவுக்கூட்டங்கள் பிரித்தானிய ஆளுகைக்குள் முழுமையாக உள்வாங்கப்படுகின்றன. இதனைத்தொடர்ந்து தென் பிராந்திய யுத்தங்களின்போது பிரித்தானிய “ரோயல்” கடற்படையினரின் முக்கிமான ஒரு வலையத்தளமாக இந்த போக்லண்ட் தீவுகள் பயன்படுத்தப்பட தொடங்கின.
குறிப்பாக ஸ்கொடிஸ் இன மக்கள் இந்த தீவுகளில் குடியேறி பிரித்தானிய முடியாட்சியின்கீழ் வாழ்ந்துவரத்தொடங்கினார்கள்.
ஆனால் ஆர்ஜென்ரீனாவின் எண்ணங்கள், தமது சுதேச நில ஆளுகைகளை எண்ணி விம்மலுடனேயே இருந்து வந்தன. பல சந்தர்ப்பங்களில் இந்த நிலத்திற்கு உரிமை கோரும் வெளிப்பாடுகளை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிகளிலேயே ஆர்ஜென்ரீனா வெளிப்படுத்த தொடங்கிவிட்டது.

இரண்டு உலக யுத்தங்களும் முடிவடைந்து, பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட நாடுகள் சுதேசிகளிடமே கையளிக்கப்பட்டு, உலகம் தொழிநுட்பம், விஞ்ஞானம் என்பவற்றில் அதிஉச்சமாக பயணித்துக்கொண்டிருந்த 1980களின் ஆரம்பங்கள்.
உலகம் முழுவதுமே, அதிநுட்ப இலத்திரனியலில் இலகித்துக்கொண்டிருந்த காலங்கள். நாடுகாண் பயணங்களை முடித்துக்கொண்ட மனிதஇனம், கிரகம்காண் பயணங்களை ஆர்வத்துடன் எதிர்பார்த்துகொண்டிருந்த காலங்கள்.
1982 மார்ச் மாதம் 19ஆம் திகதியில் இருந்து ஆர்ஜென்ரீன கடற்படையினரின் கடல்ரோந்துகள், இந்த தீவு பகுதிகளில் அதிகரிக்கத்தொடங்கின. அந்த ரோந்துகள் மெல்மெல்ல சவுத் ஜோர்ஜியா தீவுகளை தரைதட்டி கப்பல்களை நிறுத்தும் அளவுக்கு சென்றன.

எப்போதுமே நிதானமாக அமைதியாக இருப்பதாக காட்டிக்கொண்டு கண்ணுக்குள் எண்ணை விட்டு கவனித்துகொண்டிருக்கும் வெள்ளைக்காரப்புத்தி இதை கவனிக்காமல் இருக்கவில்லை. மிக நிதானமாக கவனித்துகொண்டுதான் இருந்தது.
மறுபக்கம் 1982ஆம் ஆண்டு, ஏப்ரல் 02ஆம் நாள் ஆர்ஜென்ரீனா மேற்படி போக்லண்ட் தீவுகளை கைப்பற்றும் நடவடிக்கைகளை முழுமையாக அரங்கேற்றியது.
தீவுகள் தொடர்பான அதிகார உரிமம் தொடர்பான நூற்றாண்டு சர்ச்சைகளின் உச்சமாக இந்த நடவடிக்கைகள் அமைந்தன. ஆர்ஜென்ரீனா திடீர் என எடுத்த இந்த கைப்பெற்றல் நடவடிக்கையினால் போக்லண்ட், சவுத் ஜோர்ஜியா ஆகிய தீவுகள் ஆர்ஜென்ரீனாவின் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டன.
இதை தொடர்ந்து ஆர்ஜென்ரீன வான்படை, மற்றும் கப்பல் படைகளை மேற்படி பிரதேசங்களில் எதிர்த்து முதல் நடவடிக்கையாக பிரிட்டன் பெரும் வான்தாக்குதலை தொடங்கியது.

அப்போது உலகம் இரண்டு வல்லரசுகளின் கைகளில் இருந்தது என்பது அறிந்ததே. இந்த விதத்தில் இந்த நடவடிக்கைகளை விட்டுவிட்டு ஆர்ஜென்ரீனா இதை இராஜதந்திர ரீதியில் அணுகமுன்வரவேண்டும் என்றும், யுத்தம் சரியான முடிவாக இருக்கமுடியாது. இதில் பாதிக்கப்படபோவது ஆர்ஜென்ரீனாவே எனவும், அமெரிக்கா அழுத்தமாக கூறி, ஆர்ஜென்ரீனாவை சமரை நிறுத்திவிட்டு பேச்சுக்களுக்கு வரவேண்டும் என அமெரிக்கா வலியுறத்தியது. ஆனால் ஆர்ஜென்ரீனா அதை மறுத்துவிட்டது.
தமக்கே உரிமையான தமது நிலத்தின்மேல் உள்ள பிரித்தானிய ஆளுகைக்கு எதிரான போர் இது என உலகத்திற்கு ஆர்ஜென்ரீனா அவசரமாக வியாக்கியானம் செய்தது.
மறு கரையில் சோவியத் யூனியன் ஆர்ஜென்ரீனாவின் இந்த நடவடிக்கைகளை மறுத்துவிட்டது. இராஜதந்திர ரீதியிலேயே இதை அணுகப்படவேண்டும் என சோவியத் யூனியனும் உறுதியாகச் சொல்லிவிட்டது.

ஏப்ரல் 05ஆம் நாள் “ரோயல்” கப்பற்படை என்பது எத்தனை எல்லமையானது என்பதை கண்டு ஆர்ஜென்ரீனா மட்டும் அல்ல முழு உலகமும் திடுக்கிட்டது. அட்லாலாண்டிக் சமுத்திரத்தை கிழித்துகொண்டு, பிரிட்டன் ரோயல் கடற்படையினரின் கப்பல்கள், விமானம்தாங்கி கப்பல்கள், ஏவுகணை, நாகசாகி கப்பல்கள் என வந்த கடற்படைகள், தென் சமுத்திரம் தொடங்கும் இடத்தில் இரு பிரிவாக பிரிந்து போக்லண்ட் தீவுகளையும், சவுத்ஜோர்ஜியாத் தீவுகளையும், ஆளுகைக்குட்படுத்திய ஆர்ஜென்ரீன படைகள் மீது தாக்குதல்களை நடத்தியவாறே துரப்புக்களை மள மளவென தரையிறக்கம் செய்தன. அதேவேளை பி.எம்கே, மிராஜ் 3, சொனிக், போன்ற அதிநவீன ரோயல் யுத்த விமானங்கள் இந்த நடவடிக்கைகளுக்கு பெரும் உதவியை கொடுத்துகொண்டிருந்தன.

1880களின் பின்னர் பிரிட்டன் ஒரு நாட்டின்மீது தனித்து நின்று யுத்தம் செய்த ஒரு வரலாறாக இது பொறிக்கப்பட்டது. அடிக்கு உடனடியாக பெரும் பதிலடி கொடுத்து தான் இரும்புச்சீமாட்டிதான் என்பதை நிரூபித்துக்காட்டினார் அப்போதைய பிரிட்டன் பிரதமர் மார்க்கிரேட் தட்ஷர்.
இந்த யுத்தம் பற்றி இரு நாடகளுமே எந்தவிதமான முன்னறிவிப்பையும் விடவில்லை என்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது. அடுத்ததாக முக்கிமான விடயம் இது எந்த நிலத்திற்காக யுத்தமோ அந்த நிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டது. அதை தவிர நாடுகளின் குரோதங்களை இரு நாடுகளுமே இரு நாடுகளின் வேறு பகுதிகளை தாக்கி காட்டவில்லை என்பதும் கவனிக்கப்படவேண்டியதே.

ஒரு கட்டம் வரை எதிர்த்த ஆர்ஜென்ரீனாவால் பிரிட்டனின் தொடர்ந்த ஓயாத அதிரடி நடவடிக்கைகளை தாங்கமுடியவில்லை. அத்தோடு பெருமளவிலான ஆர்ஜென்ரீன படையினர் பிரிட்டனின் முற்றுகைக்குள் கொண்டுவரப்பட்டனர்.
ஆர்ஜென்ரீன படைகள் சரணடைவதாக அறிவித்த உடன் யுத்தம் முடிவுக்கு வந்தது. பெருமளவிலான ஆர்ஜென்ரீன முப்படையினரும் பிரிட்டன் படைகளிடம் சரண்புகுந்தன.
1982 ஜூன் மாதம் 17ஆம் நாள் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
74 நாள் யுத்தம் என வர்ணிக்கப்படும் இந்த யுதத்தத்தில் 257 பிரித்தானிய முப்படையினரும், 647 ஆர்ஜென்ரீன முப்படையினரும், மூன்று சிவிலியன்களும் இறந்தனர். ஆனால் இங்கு இடம்பெற்ற யுத்தத்தின் தன்மைகள், யுத்தத்தின் மூர்க்கம் என்பவற்றுடன் ஒப்பிடுகையில் இறந்தவர்கள்தொகை குறைவானதே.

மீண்டும் போக்லண்ட் தீவுகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பிரிட்டன் இப்போ நீங்கள் இதை படிக்கும்வரை அதை தனது நிர்வாகத்தின்கீழேயே வைத்திருக்கின்றது. போக்லண்ட் தீவுகளில் வசிப்பவர்கள், பிரிட்டன் பிரஜைகளாகவே கருதுப்பட்டுவருகின்றார்கள். அதேவேளை அவர்கள் ஆர்ஜென்ரீன குடியுரிமைக்கும் விண்ணப்பிக்கும் தகுதியும் உள்ளவர்கள்.
போக்லண்ட் யுத்தத்தின் பின்னர் இரு நாட்டு கலாச்சாரத்திலும் பெரிய மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின. முக்கியமாக ஆர்ஜென்ரீன நாட்டு மக்களின் கலாச்சாரம் பெரும் மாற்றத்தை அடைந்தது. அந்த யுத்தத்தின் தாக்கம் பெரிதும் மக்களால் உணரப்பட்டது. இந்த யுத்தம் தொடர்பான திரைப்படங்கள், பாடல்கள், விபரணங்கள் என்பன பெரிதும் வெளிவரத்தொடங்கின.
இன்றும் போக்லண்ட் தீவுகளில் வாழும் மக்களிடையே இந்த யுத்தம் பற்றிய பேச்சு உண்டு.

இந்த யுத்தின் பின்னர் இதுவரை ஆர்ஜென்ரீன இந்த நிலத்தின் உரிமம் தொடர்பான அறிவுப்புக்களை கொண்டுவரவில்லை. ஆனால் இந்த யுத்த வெற்றிமூலம் அதிக அரசியல் லாபம் மட்டும் அடைந்தவராக அன்றி, பிரித்தானிய மக்களால் போற்றப்பட்டார் பிரதமர் மார்க்கிரேட் தட்ஷர். 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் வெற்றிக்கு அவருக்கு இந்த போக்லண்ட் யுத்தம் பெருமளவில் கைகொடுத்தது.
ஆனால் மறுகரையில் பிரித்தானிய – ஆர்ஜென்ரீன நாடுகளின் இராஜதந்திர உறவில் கரும்புள்ளி விழுந்தது. இருந்தாலும் 1989ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மீண்டும் சீர்அமைக்கப்பட்டன.
ஒரு குடையின் கீழான மாநாடு என்ற தொணியில் முக்கியமான மாநாடு ஒன்றும் இடம்பெற்றது.

இன்று போக்லண்ட் தீவுகள், பெருமளவில் அபிவிருத்தி கண்டு, பிரபலமான உல்லாசவிடுதிகள், உல்லாச மையங்களை கொண்டுள்ளன. உல்லாசப்பிரயாணம், மற்றும் நவீன மீன்பிடி என்பன இந்தப்பிரதேசத்தில் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன. இன்று இந்த பிரதேசத்துடன் ஆர்ஜென்ரீனா மிகவும் சினேகிதமாகவே உள்ளது என்பதும் இந்த கட்டுரையை முடிக்க ஒரு சுபமாக உள்ளது.- janavin

புதன், 9 பிப்ரவரி, 2011

வைரத்தின் வரலாறு - 2

சாலிடேர்(Solitaire) என்றால் என்ன ?

சாலிடேர் என்பது ஒற்றை வைரத்தைக் குறிக்கும் ஆங்கில வார்த்தை, 33 சென்ட் மற்றும் அதற்கு அதிகமான எடையுள்ள வைரங்களைத்தான் சாலிடேர் என்று குறிப்பிடுவார்கள்.

விவிஎஸ் வைரங்கள் என்றால் என்ன ?

விவிஎஸ் (VVS) என்றால் very very small inclusions என்கிற ஆங்கில வார்த்தையின் சுருக்கம். அதாவது மிகச் சிறிய, சாதாரணமாகக் கண்ணுக்குத் தெரியாத, லென்ஸை வைத்துப் பார்த்தால் மட்டுமே தெரியக்கூடிய வைரத்தின் உள்ளேயே இணைந்து வளர்ந்துள்ள கனிம, அல்லது வேதிப் பொருளின் (மிகச்சிறிய) துகள்களோ, துணுக்குகளோ ஆகும். இதனால் வைரத்தின் ஜொலிப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. இது தவிர இன்னும் பெரிய துகள்களை VS1, VS2 என்பார்கள்.

அதன் உள்ளே உள்ள துகள்களின் அளவை பொறுத்து குறியீடுகளும் மாறிக் கொண்டே போகும்.

பூமியில் இருந்து எடுக்கப்படும் எல்லா வைரங்களும் நகை செய்யப் பயன்படுமா?

இல்லை. 40-50 சதவீதம் வைரங்கள் மட்டுமே நகை செய்யப்பயன்படும். அவை 4Cs என்கிற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் தரம் குறைந்த மற்ற வைரங்கள் தொழிற்சாலை உபயோகத்திற்கு பயன்படும். இவை Industrial Diamonds எனப்படும்.

Industrial Diamonds – என்றால் என்ன ?

நகை செய்யப் பயன்படாத வைரங்கள் பலவித தொழிற்சாலை உபகரணங்களுக்கு பயன்படும். ஏனென்றால் அந்த வைரத்தின் தன்மை என்றுமே மாறாது. அவை சாணைக்கல்லில் அடைப்புகளை நீக்கும் கருவிகள் (Dressing Tools), கண்ணாடிகள் வெட்டும் கைக்கருவிகள் (Glass Cutter), லேத்மெஷினில் ஸ்டீல் பாகங்களை வெட்டும் கருவிகள் (Cutting Tools), அறுவை சிகிச்சை செய்யும் கைக்கருவிகள் (Operation Instruments), இன்னும் பலவற்றில் உபயோகிக்கப்படுகிறது. இதன் துகள்களை சாணைக்கல்லில் பதித்து வைரத்தை பட்டை தீட்ட பயன்படுத்தலாம். இப்படி பலவற்றில் பயன் படுத்தலாம்.

4Cs என்றால் என்ன?

பல நாடுகளில் வைரங்களின் தரத்தைக் குறிப்பிட வெவ்வேறுவிதமான வார்த்தைகளை குறிப்பிட்டு வந்தார்கள். உலகளவில் ஒரே தர நிர்ணயம் செய்வதற்காக (நிமிகி) ஜெம்மாலஜிகல் இன்ஸ்டிடிட் ஆப் அமெரிக்கா 4சி என்கிற முறையை அறிமுகப்படுத்தியது. அது பின்வருமாறு.

1.CLARITY, 2. COLOUR, 3. CAROT, CUT

1.CLARITY (தெளிவு)

வைரத்தை மேலிருந்து உள்ளே பரிசோதித்து பார்க்கும் போது ஏதேனும் வேதிப் பொருள்களோ கனிமப் பொருள்களோ உள்ளடங்கி இருக்கிறதா என்பதை பொறுத்து அதன் விலை நிர்ணயிக்கப்படும். அது எந்தவிதத்திலாவது அதன் ஜொலிப்பை பாதித்தால் வைரத்தின் விலை குறையும்.

2. COLOUR (நிறம்)

வைரம் சுத்த வெள்ளையாக அதாவது நிறமற்றதாக (தெளிந்த நீரோடை போல்) இருந்தால் நல்ல தரமானது. நிறம் சற்றே மாறுபட்டு கொஞ்சம் பழுப்பு நிறம் அல்லது மஞ்சள் நிறம் கொண்டதாக இருந்தால் தரம் குறைவாகும். தெளிவான கற்களே சிறந்தவை.

3. CAROT (எடை)

100 சென்ட் = 1 கேரட் இது வைரத்தின் எடையை குறிக்கிறது. வைரக் கல்லின் எடையை பொறுத்து அதன் விலை நிர்ண யிக்கப்படும்.

4. CUT (பட்டை தீட்டப்பட்டுள்ள முறை)

வைரக்கல் எந்த முறையில் பட்டை தீட்டப்பட்டுள்ளதோ அதை பொறுத்து விலை நிர்ணயிக்கப் படும். பட்டை சரியாக தீட்டப் படாமல் இருந்தால் வைரத்தின் விலை குறைந்து விடும்.

இந்த நான்கு C க்கள் (4 Cs ) வைரம் தேர்வு செய்வதற்கான அடிப்படையாகும்.

தங்கக் கேரட் வைரக் கேரட் இரண்டும் ஒன்றுதானா ?

வைரத்தில் கேரட் (CAROT) என்கிற வார்த்தை அதன் எடையைக் குறிக்கும். தங்கத்தில் கேரட்(Karatage) என்கிற வார்த்தை தங்கத்தின் தரத்தைக் குறிக்கும்.

உ.ம் 24 கேரட் என்றால் 100$ சுத்தத் தங்கம் அதே 24 கேரட் வைரம் என்பது அதன் எடையைக் குறிக்கும் இரண்டும் வேறு வேறு பொருள் (Meaning) கொண்டவை.

வைரத்தில் `ரத்தப்பந்து` என்றால் என்ன?

வைரம் வளரும் போது ஆயிரத்தில் ஏதாவது ஒரு கல்லில் அதனோடு சேர்ந்து சிவப்பு நிறத்தில் (மாதுளம் பழத்தின் முத்து நிறத்தில்) கார்னெட் (Garnet) என்கிற ஒருவகை ரத்தின கல்லும் சேர்ந்தே வளரும். வைரத்தை பட்டை தீட்டிய பிறகு இந்த சிவப்பு நிறம் நன்றாக தெரியும். இதை நம் ஊர் வியாபாரிகள் `ரத்தப்பந்து` என்பார்கள்.

டீபியர்ஸ் (De Beers) வைரங்கள் என்றால் என்ன?

1876ம் ஆண்டு ஜோஹன்னாஸ் டீபியர்ஸ் மற்றும் ஆர்ணால்டஸ் டீபியர்ஸ் சகோதரர்களுக்கு சொந்தமான பண்ணை நிலத்தில் ஏராளமான வைரங்கள் கிடைத்தன. ஆப்பிரிக்காவில் இந்த இடத்தை ஸெஸில் ரோட்ஸ் (Cecil Rhodes) என்பவர் வாங்கி வைரங்களை தோண்டி எடுத்து பெரும் செல்வந்தர் ஆனார்.அந்த நிறுவனத்துக்கு டீபியர்ஸ் மைனிங் கம்பெனி என்று பெயரிட்டார். இது 1880 ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி துவங்கப்பட்டது.

இன்று உலக வைர வியாபாரத்தில் 75சதவீதத்திற்கும் மேலாக இந்த நிறுவனம் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதில் ஆச்சரியமான தகவல் என்னவென்றால் De Beers சகோதரர்கள் இங்கிருந்து வைரங்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே இந்த நிலத்தை சுமார் 500 டாலருக்கு விற்றுவிட்டு வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்கள்.

ஹார்ட்ஸ் ஆரோஸ் வைரம் (Hearts and Arrows Diamonds) என்றால் என்ன?

சிறந்த பொறியியல் நுணுக்கத்துடன் ஒவ்வொரு பட்டையையும் குறிப்பிட்ட விகிதத்தில் சிறப்பாக தீட்டப்பட்ட வைரத்தை டைமண்ட் ஸ்கோப் என்ற கருவியின் மூலமாக பார்த்தால், அதனுள்ளே இருதயம் போலவும், அம்பு போலவும் துல்லியமாகத் தெரியும். இந்த வைரங்கள் அதிக ஜொலிப்புடன் விளங்கும் அதைத்தான் மேற் கண்டவாறு குறிப்பிடுக்கிறோம்.

ஆப்பிரிக்காவில் வைரங்கள் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது?

தென் ஆப்பிரிக்காவில் 1866ல் எராஸ்மஸ் ஜேக்கப் என்ற சிறுவனும் அவன் தங்கையும் ஆரஞ்சு நதியின் கரையில் விளையாடும் போது ஒரு பளபளப்பான கல்லைப் பார்த்து, அதை வீட்டுக்கு விளையாட எடுத்துச் சென்றனர். அப்போது பக்கத்து வீட்டில் இருந்த போயர் என்ற ஆங்கிலேயர் அவர்களது தாயாரிடம் அந்த கல்லை விலைக்குத் தருவீர்களா? என்று கேட்க, அவளோ பணமெல்லாம் வேண்டாம் என்று இலவசமாகவே கொடுத்துவிட்டாள். பிற்பாடு அதை (Boer)பரிசோதித்ததில் அது மிக அருமையான வைரம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. பட்டைத் தீட்டாத கல்லின் எடை 21.23 காரட் இருந்தது. பட்டை தீட்டியபின் 10.73 காரட்டில் அருமையான வைரமாய் ஜொலித்தது. இதற்கு “யுரேகா” என்று பெயரிட்டனர். (அதாவது புதிய கண்டுபிடிப்பு என்று பொருள்). இது தான் ஆப்பிரிக்காவின் வைரக் கண்டுபிடிப்புக்கு ஆரம்பம் இந்த வைரம் தென்னாப்பிரிக்காவின் கிம்பர்லி மிசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

விலைஉயர்ந்த வைரங்கள் வாங்கும் போது தரத்தை எப்படி அறிந்து கொள்வது?

இதற்கென்றே சில சட்ட திட்டங்கள், தரக்கட்டுப்பாடு முதலியவற்றை வகுத்து. அதை தர உறுதி செய்து சர்டிபிக்கேட் கொடுக்கிறார்கள். குறிப்பிட்ட கல்லும் முழுவதும் சீல் செய்யப்பட்டிருக்கும். அதில் கல்லுடைய எடை, நிறம், பட்டையின் விகிதம் முதலிய எல்லாமே குறிப்பிடப்பட்டிருக்கும். இதற்காக பல அமைப்புகள் உலக முழுவதுமுள்ளன. சான்றிதழ் பெற்ற கல்லை நகையில் வைத்து பதித்த பிறகு, அது அதே கல்தானா, என்று எப்படி அறிவது?

இதற்கும் ஒரு முறை உள்ளது. அந்தக் கல்லின் பட்டையின் மேல் பகுதியும், கீழ்பகுதியும் சந்திக்கும் இடத்தை கர்டில் (GIRDLE)என்று குறிப்பிடுவோம். அந்த இடத்தில் லேசர் கதிரின் (LASER) மூலமாக ஒரு அடையாள நம்பரை எழுதி விடுவார்கள். அதை அழிக்கவே முடியாது. லென்ஸ் வைத்து பார்த்தால் தெரியும்.

தேடல் சாதனங்களில் இது அரசன்

ஆங்கில இணைய தளங்களுக்கு இணையாக, அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகம், தமிழில் தேடுதளம் ஒன்றினையும், தமிழ் இணைய தகவல் கோட்டையினையும் உருவாக்கித் தந்துள்ளது. இதனை அண்ணா பல்கலைக் கழகத்தில் இயங்கும் இணைய வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கி யுள்ளது. இந்த தளத்தின் பெயர் சர்ச்கோ (Searchko). இதனை www.searchko.in என்ற முகவரியில் பெறலாம்.
இதுவரை ஆங்கில மொழியில் உள்ள தேடுதல் இணைய தளங்களையே நம்மில் பெரும்பாலோர் பயன்படுத்தி வருகிறோம். கூகுள் தளத்தில் தமிழ் உட்பட மற்ற மொழிகளிலும் தேடிப் பெறும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இப்போது தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழில் ஒரு தேடல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி, ஒலியியல் அமைப்பில் கீகளை அழுத்தி, தேடலுக்கான சொற்களை உருவாக்கித் தேடலாம். அல்லது இதில் தரப்பட்டுள்ள விசைப்பலகையை கிளிக் செய்து, அதன் மூலம் சொற்களை டைப் செய்தும் தேடலாம். (கீ போர்டு வழக்கமான கீ போர்டாக இல்லாமல் சற்று மாற்றாக உள்ளது. பழகிவிட்டால் சரியாகிவிடும்)
தேடல், மருத்துவம், இலக்கியம் எனப் பெரிய பிரிவுகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் தேவையானததைத் தேர்ந்தெடுத்து நாம் தேடும் தகவல்களைப் பெறலாம். தினமலர் உள்பட மூன்று தமிழ் தினசரி செய்தித் தாள்களுக்கான டேப்கள் தரப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து செய்திகள் கிடைக்கின்றன.
இந்த தளத் தேடலில், இயற்கை மொழி ஆய்வில் பயன்படுத்தப்படும் பல தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இணைய வெளியில் ஏறத்தாழ ஒரு கோடி தமிழ் ஆவணங்கள் உள்ளன. இவற்றை ஒருமுகப்படுத்தி, தேடலுக்கு உட்படுத்தி, தேடல் தேவைகளை நிறைவேற்றுவதே இந்த தளத்தின் நோக்கம் என இதில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் ÷ஷாபா கூறினார்.
ஆங்கிலம்–தமிழ் மற்றும் தமிழ்–ஆங்கிலம் அகராதிகள் தரப்பட்டுள்ளன. இந்த அகராதிகளில் ஏறத்தாழ 1.5 லட்சம் வேர்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்திச் சொற்களுக்குப் பொருள் தேடிப் பெறலாம்.
இலக்கியப் பிரிவில் தமிழ் இலக்கியங்கள் உள்ள தளங்களின் பட்டியலைப் பெற்று அவற்றைப் பயன்படுத்தலாம். இந்த தேடுதல் தளம் இன்னும் சோதனைப் பதிப்பு நிலையில் தான் உள்ளது. பிழை திருத்தி போன்றவை விரைவில் சரி செய்யப்பட்டு மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.
சரி, அது என்ன “சர்ச் கோ’ என்ற ஐயம் உங்களுக்கு வரலாம். இங்கு “”கோ” என்பது தமிழ்ச் சொல். அரசன் என்ற பொருளைத் தரும். தேடல் சாதனங்களில் இது ஒரு அரசனாக இயங்கும் என்று பொருள் தரும் வகையில் பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் கொண்டு வந்துள்ள இந்த முயற்சியை வரவேற்போம். Thank - (Searchko)

திங்கள், 7 பிப்ரவரி, 2011

உலக கிண்ண கிரிக்கெட் : ஹாட்ரிக் சாதனையாளர்கள்


1975-ல் தொடங்கி 2007 வரையிலான 9 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5 வீரர்கள் ஹாட்ரிக் விக்கெட் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

இந்தியாவின் சேத்தன் சர்மா, பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக், இலங்கையின் சமிந்தா வாஸ், அவுஸ்திரேலியாவின் பிரட் லீ, இலங்கையின் லசித் மலிங்கா ஆகியோரே அந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள். அதிலும் உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை நிகழ்த்தியவர் என்ற பெருமை இந்தியாவின் சேத்தன் சர்மாவையேச் சாரும்.

1987-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் நாகபுரியில் நடந்த லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது.

நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்திருந்த போது, சேத்தன் சர்மாவை பந்துவீச அழைத்தார் கபில்தேவ். அப்போது பேட்டிங் செய்த ரூதர் போர்டை கிளீன் போல்டு ஆக்கி வெளியேற்றினார் சர்மா.
அதன் பிறகு வந்த இயன் ஸ்மித்தை கிளீன் போல்டு ஆக்கவே, சேத்தன் ஹாட்ரிக் வாய்ப்பை நெருங்கினார். அடுத்த பந்திலும் விக்கெட் வீழ்த்தி சர்மா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்துவாரா என்று எதிர்பார்ப்பில் இந்திய ரசிர்கள் உறைந்துபோயிருந்தனர். அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

அடுத்து வந்த இவென் ஷட்பீல்டையும் கிளீன் போல்டு ஆக்கி ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார் சர்மா. இதன்மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் ஹாட்ரிக் சாதனையைப் படைத்து இந்தியாவுக்கு அவர் பெருமை சேர்த்தார். மூன்று விக்கெட்டுகளையும் போல்டு முறையில் ஆட்டமிழக்கச் செய்த ஒரே வீரர் சேத்தன் சர்மா மட்டுமே.

சக்லைன் முஷ்டாக்: 1999-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். இதன்மூலம் உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

40-வது ஓவரை வீசிய சக்லைன் முஷ்டாக், அந்த ஓவரின் முதல் பந்தில் ஹென்றி ஓலங்காவையும், இரண்டாவது பந்தில் ஹக்கிளையும், மூன்றாவது பந்தில் பங்வாவையும் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார். இதில் ஓலங்கா, ஹக்கிள் ஆகியோர் அப்போதைய பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர் மொயின்கானால் ஸ்டம்ப்டு முறையில் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டனர். பங்வா எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

சனி, 22 ஜனவரி, 2011

உலக தொழுநோய் ஒழிப்பு நாள்

உலக தொழுநோய் ஒழிப்பு நாள் - தொழுநோய் ஒழிப்பு நடவடிக்கைகள் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் மத்தியில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும், இந்நோயால் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுவோர் இடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதும் இந்த நாள் கடைபிடிக்கப்படுவதன் முக்கிய நோக்கமாகும்.

தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் சமுதாயத்தில் மரியாதையுடன் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தவும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு தொழுநோய் ஒழிப்பு தினத்திலும், இந்நோயால் பாதிக்கப்பட்டோரிடையே ஒருங்கிணைப்புக்கு புனிதமான அணுகுமுறையை உறுதி செய்யவும் வலியுறுத்தப்படும்.

தொழுநோய் ஏற்பட்டவர்களுக்கு முகம் பாதிப்புக்குள்ளாவதுடன் தோல், நரம்புகளும் பாதிக்கப்படுவதால் அகோரமான தோற்றம் ஏற்படுகிறது.

சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவரை கண்கள், கைகளும் பாதிக்கப்படுகின்றன. தொழுநோய் என்பது ஒரு தொற்று நோயாகும். மூக்கு, வாய் மூலம் இந்நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. இந்நோய் தொற்றுநோய் என்பதால், தொழுநோயாளிகளை சமுதாயத்தில் இருந்து புறக்கணிக்கும் நிலை உள்ளது. எனவே தொழுநோய் என்பது அறியப்பட்டவுடன் உடனடி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்.

இந்நோய் ஏற்பட்டவர்கள் சிறப்பு உடைகளை அணிவதுடன் பொதுமக்கள் புழங்கக்கூடிய சந்தை, கோயில்கள் போன்ற இடங்களில் அனுமதிக்கப்படுவதில்லை.

உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரையின்படி மல்டி டிரக் தெரபி எனப்படும் சிகிச்சை தற்போது தொழுநோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையின் மூலம் தொழுநோய் பரவுதல் தடுக்கப்படுகிறது.

துவக்க நிலையிலேயே கண்டறிந்தால், இந்நோயை குணப்படுத்த முடியும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் கை, கால்கள் ஊனம் அடைவதில் இருந்து தடுக்கலாம்.

உலக அளவில் தொழுநோய் பரவு விகிதம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 4 விழுக்காடு குறைந்துள்ளது. பல்வேறு நாடுகளில் தொழுநோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.

தொழுநோய் ஒழிப்பு நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழுநோய் குறித்து மக்கள் உடனடியாக தெரிவிப்பதுடன், இந்நோயை விழிப்புணர்வுடன் இருந்தால் குணப்படுத்தலாம் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.

தொழுநோயைக் கட்டுப்படுத்துவதில் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், அரசும் பல தடுப்பு மற்றும் குணப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தொழுநோய் ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் நோய் குறித்த பிரசாரம் செய்வதுடன் நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இந்நோய்க்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள முன்வருவதற்கும் விழிப்புணர்வு அவசியமாகிறது.

தொழுநோயை ஒழிக்க நடவடிக்கைகள்:

தொழுநோய் என்பது ஒரு பொது சுகாதார பிரச்சினையாக உள்ள ஊரகப் பகுதிகளில் அரசின் ஆதரவுடன் இந்நோயை ஒழிக்க வேண்டியது அவசியம்.

ஒவ்வொரு தொழுநோயாளிக்கும் சிகிச்சை கிடைப்பதற்கு முழு அளவிலான ஒருங்கிணைப்பு தேவை. இதன்மூலம் இந்நோயை முற்றிலுமாக ஒழித்து விட முடியும்.

தொழுநோயை முற்றிலுமாக போக்குவதற்கு, ஆதரவு குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து தங்களின் ஒத்துழைப்பை நல்க வேண்டியது அவசியம்.

தொழுநோய் இருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து தெரிவிப்பதோடு, விரைவான சிகிச்சை எடுத்துக் கொள்தல் வேண்டும். தொழுநோய் குறித்த கருத்து உலக அளவில் மட்டுமல்லாது, உள்ளூர் நிலையிலும் மாற வேண்டும்.

தொழுநோயை அறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதற்குரிய புதிய சூழ்நிலை நோயாளிகளுக்கு ஏற்பட வேண்டியதும் அவசியம்.

மல்டி டிரக் தெரபி சேவைகள் அனைத்து தொழுநோயாளிகளுக்கும் தடையற்ற வகையில் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். எளிதான, நட்புரீதியான மருந்து டெலிவரியும் அவசியமாகிறது.

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

இனிய நத்தார் வாழ்த்துக்கள்



ஆதரவு அற்றோருக்கு அடைக்கலமாய் அகிலம் முழுவதுக்கும் அன்புத் தெய்வமாய் பாரம் சுமப்போருக்கு சுமைதாங்கியாய் வந்துதித்த பாலன் யேசு பிறந்த இனிய நத்தார் வாழ்த்துக்களை எமது உறவுகள் அனைவருக்கும் தெரியப்படுத்தி சாந்தியும் சமாதானமும் மிக்க தேசமொன்றில் வளமும் நிறைவும் கொண்ட நல்வாழ்விற்காய் இறையாசி வேண்டி பிரார்த்திக்கும் நண்பன்

அமைதியின் இரவில்
அமலன் பிறந்தார்
அன்னை மரியின்
மடியினில் தவழ்ந்தார்

வாருங்கள் அனைவரும்
வணங்கிடுவோமே
வள்ளல் யேசுவை
தொழுதிடுவோமே

உலகுக்கு ஒளியானவர்
உயிருக்கு வழியானவர்
உனக்கும் எனக்கும் பலியானவர்
உண்மை வடிவானவர்

வாழ்வில் ஜீவன் ஆனவர்
வள்ளல் யேசு வடிவானவர்
வழியாய் என்றும் இருப்பவர்
வருத்தம் நீக்கி காப்பவர்

ஏழை எழிய மக்களையே
என்றும் அவரே அழைக்கிறார்
எங்கே நீயும் என்று தான்
ஏங்கி கொண்டே இருக்கிறார்

திங்கள், 22 நவம்பர், 2010

செயற்கை பூகம்பம் - வல்லரசுகளின் விபரீத விளையாட்டு

செயற்கை பூகம்பம் - வல்லரசுகளின் விபரீத விளையாட்டு

லட்சக்கணக்கான உயிர்கள் பலியான ஹெய்ட்டி பூகம்பம், அமெரிக்க கடற்படையின் நவீன ஆயுதம் ஒன்றை பரீட்சித்ததால் விளைந்த பேரழிவு!" ரஷ்யாவின் வட-துருவ கடற்படையின் உறுதிப்படுத்தாத அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ரஷ்ய அரசு உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளாத அறிக்கையை மேற்கோள் காட்டி, வெனிசுவேலா தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

மார்ச், 2002 ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் பதிவான 7.2 magnitude நிலநடுக்கத்திற்கு அமெரிக்க ஆயுதமே காரணம் என ரஷ்யா குற்றம் சுமத்தியிருந்தது. செயற்கையாக பூகம்பத்தை தோற்றுவிக்கும் ஆயுதம் அமெரிக்காவிடம் மட்டுமல்லாது, ரஷ்யாவிடமும் இருக்கின்றது. 2002 ம் ஆண்டு, ஜோர்ஜியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு ரஷ்ய நாசகார ஆயுதமே காரணம் என, ஜோர்ஜிய பசுமைக் கட்சி குற்றஞ்சாட்டி இருந்தது.

வெனிசுவேலா ViVe தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் சாவேஸ், "அமெரிக்கா பரிசோதனை செய்த நவீன நிலநடுக்க ஆயுதம் ஹெய்ட்டியில் பயங்கரமான விளைவை ஏற்படுத்தியது. இந்த ஆயுதத்தை ஈரானில் பிரயோகித்து செயற்கையாக நிலநடுக்கம் ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான ஒத்திகையாகவே பரிசோதனை அமைந்திருந்ததாக" குற்றஞ்சாட்டினார். (இது குறித்து ரஷ்ய டுடே ஒளிபரப்பிய செய்தியறிக்கை.)

ரஷ்ய அறிக்கையை மேற்கோள் காட்டிய ViVe தொலைக்காட்சி: "அமெரிக்கா இதற்கு முன்னரும் கலிபோர்னியா அருகில் பசுபிக் சமுத்திரத்தில் ஆயுதப் பரிசோதனை நடத்தியதாகவும்,6.5 magnitude நிலநடுக்கம் பதிவாகியதாகவும்..." தெரிவித்தது. கலிபோர்னிய நிலா நடுக்கத்தில் உயிரிழப்புகள் ஏற்படா விட்டாலும், சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. வெனிசுவேலா செய்தியறிக்கையின் பிரகாரம் "ஹெய்ட்டி நிலநடுக்கத்தால் வரப்போகும் விளைவுகளை அமெரிக்க அரசு முன்கூட்டியே எதிர்பார்த்திருக்கும். அமெரிக்க தென் பகுதி கட்டளைத் தளபதி ஜெனரல் கீன் ஏற்கனவே (நிவாரண வேலைகளை பொறுப்பேற்க) ஹெய்ட்டி அனுப்பபட்டிருந்தார்."



இயற்கை அனர்த்தங்களான நிலநடுக்கம், வெள்ளம், போன்றவற்றை செயற்கையாக உருவாக்க கூடிய ஆராய்ச்சி மையம், High Frequency Active Auroral Research Program (HAARP) ஏற்கனவே அமெரிக்காவில் இயங்கி வருகின்றது. இந்த ஆராய்ச்சி மையம் செயற்கையாக காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதாக ஊர்ஜிதப்படுத்தப் படாத குற்றச்சாட்டு உள்ளது. 1997 ம் ஆண்டு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் வில்லியம் கோகன் தெரிவித்த கூற்று ஒன்றும் இங்கே நினைவு கூறத் தக்கது. "தொலைதூர மின்காந்த அலைகளை ஏவி செயற்கையாக பருவநிலை மாற்றம், நிலநடுக்கம் போன்றவற்றை தோற்றுவிக்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள்" குறித்து கவலை அடைவதாக தெரிவித்திருந்தார்.

திங்கள், 1 நவம்பர், 2010

தீபாவளி வாழ்த்துக்கள்.


தீபங்களின் ஒளியில்
இருள் ஒழியும்;
தீபாவளித் திருநாள்
தீமை வெல்லப்பட்டதின்
ஒரு அடையாளம்;
ஒருவருக்கு ஒருவர்
வாழ்த்துக்கள் சொல்லி,
இன்பங்களை பகிர்ந்து,
நன்மையின் வெற்றியை
கொண்டாடி மகிழ்வோம்;
பட்டாடை உடுத்தி,
பட்டாசுகள் கொளுத்தாமல்
அப்பணத்தை துன்புற்றவர்களுக்கு
கொடுத்து பலகாரங்கள் உண்டு,
எங்கும் மகிழ்ச்சியாய்
நன்மையை வரவேற்போம்.
எல்லோரும் எல்லா
வளமும் பெற்று
ஏழைகளின் இல்லங்களில்
ஏற்றம் மிகுந்து,
என்றும் இனிமை மிகுந்து
எங்கும் ஒளிமயமாய் வாழ,
தீபாவளி நன்னாள்
வழி காணட்டும்;
கதிரவன் உதயத்தில்
வெளிச்சம் பெருகுவது போல்
தீபாவளித் திருநாளில்
நன்மைகளும் சந்தோசங்களும்
வெள்ளமென பெருகி
எங்கும் பரவட்டும்.