செவ்வாய், 13 நவம்பர், 2018

யார் அந்த ஏழு பேர் ? நடிகர்களின் சமூக அறிவையும் பொது அறிவையும் நினைத்தால் குலை நடுங்குகிறது.

ஜாதிப் பின்புலத்தால் கிடைக்கப் பெறும் அதிகார அனுகூலங்களோடு பிறந்தவள் அல்ல எனது தங்கை…பொருளாதார பின்புலத்தால் வாய்க்கப் பெற்ற வசதிகளோடு பிறந்தவளும் அல்ல….ஆனால் அவள் தமிழினத்தின் தியாகியாய் வரலாற்றில் நிலைபெற்றிருக்கிறாள்…அது 300 கோடியில் எடுக்கப்படும் மிக பிரம்மாண்ட படத்தால் உருவாகும் வரலாறு அல்ல.. இவளிடம் கேள் யார் அவர்கள் என்று சொல்வாள்...!

மனிதத்தின் எல்லையை
ஒடுக்கப்பட்டோரின் அரசியல் வலிமையை
எளியவர்களின் அரசியல் புரிதலை
“தீ மூட்டிக் கொண்டு சொன்ன வரலாறு”

அடுத்தவர்க்காய் கண்ணீர் சிந்துதல் அறம்
அடுத்தவர்க்காய் உயிர் மாய்த்தல் ..பேரறம்…

அவள் வாழ்ந்திருக்க வேண்டும்…
ஆனால் தேதி குறிக்கப்பட்ட ஏழு தமிழரின் சாவு தடுக்க வழியறியாதவளாய்…
அப்பாவி தமிழர்களின் தாயாக மாறி
அவர்களுக்காய் தீ மூட்டிக் கொண்டாள்..

இருபது வயதில் செங்கொடி அம்பேத்கரைப் படித்திருந்தாள்
பெரியாரைப் படித்திருந்தாள்
மார்க்ஸை படித்திருந்தாள்
சே வை படித்திருந்தாள்
பிரபாகரனை படித்திருந்தாள்

அவள் அரசியல் படுத்தப்பட்டிருந்தாள்…எந்த ஏழு பேர் என்று கேட்ட உனது கேள்வி..
அவளின் தியாகத்தை கொச்சைப்படுத்தவில்லை.. உனது அரசியல் போதாமையை
அரைவேக்காட்டுத் தனத்தை அம்பலப்படுத்தி விட்டது… நேரமிருந்தால் காஞ்சிபுரம் மக்கள் மன்றத்திற்கு வந்து விட்டு போ ரஜினி..உன்னை விட பல மடங்கு அரசியல் தெளிவும் முதிர்ச்சியும் பெற்ற எனது தங்கை அங்கே உறங்கிக் கொண்டிருக்கிறாள்..

வா அவளின் நினைவிடம் வந்து நின்று விட்டு போ…தெளிவு பெறுவாய்…..


தமிழர்களின் வாழ்வும், உணர்வும், விடுதலையும் தெரியாத உங்களை தமிழர்கள் நாங்கள்; “யார் நீ” என்றே மீண்டும் மீண்டும் கேட்போம்.

தமிழகத்தை ரட்சிக்க வந்த நடிகர்களின் சமூக அறிவையும் பொது அறிவையும் நினைத்தால் குலை நடுங்குகிறது.

ஏழு பேரின் விடுதலை பற்றிக்கேட்டால் ”எந்த ஏழு பேர்?’’ என்று கேட்கிறார் ரஜினி காந்த். அதில் இருக்கும் அலட்சியமும் அறியாமையும் மலிவானது. பரிதாபத்திற்குரியது. இந்த அறியாமைமிக்க அகம்பாவம்தான் தூத்துக்குடி துப்பாகிச் சூடு பற்றிய பேச்சிலும் இருந்தது இப்படிக் கேட்பதில் ரஜினிக்கு எந்தக் கூச்சமும் இல்லை. 25 வருடங்களாக இடையறாது ஒட்டு மொத்த தமிழகமும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு பிரச்சினையை என்ன பிரச்சினை என வேற்றுக்கிரக வாசிபோல ரஜினி கேட்கிறார்.

ரஜினியின் முதலமைச்சர் போட்டியாளரான கமல் போன வருடம் நீட் பிரச்சினையில் தமிழகம் பற்றி எரிந்தபோது “ பள்ளிப் படிப்பை முடிக்காத தனக்கு நீட்”டின் கொடுமை புரியவில்லை’’ என்று கூலாக கூறினார்.

இவர்களுக்கெல்லாம் முன்னோடி விஜய காந்த். 2014-ல் எதிர்கட்சித் தலைவராக இருந்த விஜய காந்த் வெளிநாட்டிற்குச் சென்று திரும்பியபோது “தமிழக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பீர்களா… என்னமாதிரியான பிரச்சினைகளை பேசுவீர்கள்?’’ என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் சொன்ன விஜயகாந்த், ’’நான் இப்போதுதான் சென்னைக்கு வந்து இறங்கியிருக்கிறேன்… இங்கே என்ன பிரச்சினை நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. கடந்த ஒருமாத காலமாக நான் தமிழ் பேப்பர் படிக்கவில்லை. தமிழ் டிவி சேனல்களும் பார்க்கவில்லை. வீட்டிற்கு போய் டிவி பார்த்துவிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன் ’’ என்றார்.

இவர்களுக்கெல்லாம் மூத்த நடிகரான அரசியல் தலைவர் ஒருவர் இருந்தார். எம்.ஜி.ஆர். அவரது அரசியல் உரைகளை யாராவது தேடி எடுத்து படித்துப்பாருங்கள். தலை சுற்றும். அவரது அண்ணாயிஸத்தை கட்டுடைக்க முடியாமல் தமிழ்கூறும் நல்லுலகே திகைத்து நின்றது. நல்லவேளை அப்போது சமூக வலைத்தளங்கள் இல்லை.. இருந்தால் முதன்மையான மீம்ஸ் கதாநாயகனாக எம்.ஜி.ஆரே இருந்திருப்பார்

இந்த அலைவரிசையில்தான் விஜய்யின் சர்காரில் வெளிப்பட்ட இலவசங்களுக்கு எதிரான பேத்தல்கள். நடிகர்கள் நாடாள வந்தால், வர விரும்பினால் என்ன நடக்கும் என்பதற்கு இதெல்லாம் ரத்தம் கக்கவைக்கும் உதாரணங்கள்.

தூக்குமர நிழலில் நின்றவர்களை மீட்டு சிறையில் நிழலில் நிற்க வைத்தது வரை ஒரு சமூகத்தின் பயணம் இதில் இருக்கிறது.

அற்புதம்மாள் என்ற பெண்ணின் உழைப்பும் அலைச்சலுமே, இந்தியாவில் மரண தண்டனை தொடர்பான விவாதத்தை கூர்மையாக்கியது. சதா நேரமும் தண்டனைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் ஒரு தண்டனையின் தீவரத்தை, வன்மத்தை, அதன் மர்ம முடிச்சுகளை ஒவ்வொன்றாக குலைத்துப் போட்டவர் அற்புதம்மாள்.

அது இந்தியாவில் பல நூறு மரணதண்டனை கைதிகளின் விடுதலைக்கு வழி வகுத்தது. எங்கள் சூப்பர் ஸ்டார் அற்புதம்மாள்தான். காரணம் கோடிகளில் பணம் பெறாமல் தனியொரு மனுஷியாக தமிழ் சமூகத்தில் நின்று சாதித்துக் காட்டியவர் அவர்.

உங்களுக்கு தெரியாமல் போனதில் வியப்பேதும் இல்லை ரஜினி. இதே குணத்தோடு இப்போதேனும் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் அவ்வளவே!
————-