வெள்ளி, 24 மார்ச், 2017

காடுகளும் நாமும்

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.
–  வள்ளுவர்
காட்டின் உருவாக்கத்திலும் அதன் உயிர்ப்பிலும் விலங்குகளின் பங்கு மகத்தானது, அவை உருவாக்கும் காட்டை மனிதர்களால் உருவாக்க முடியாது; ஆனால் காப்பாற்ற முடியும்.
காடுகள் இல்லையேல் மனித குலம் இல்லை. காட்டுயிர்களைக் காத்தால் தான் காடுகளை காப்பாற்ற வேண்டும். அதன் மூலம் தான் நமது வாழ்க்கையும் காப்பாற்றப்படும்.
பொதுவாக, காட்டுயிர்கள் மனித தலையீடு இன்றியே வாழ்ந்து பழகியவை. காட்டுயிர்களின் வாழ்வியலை மனிதர்களின் தலையீடு மற்றும் வாகனங்களின் ஓய்வற்ற ஹாரன் சத்தங்கள் கடினமாக பாதிக்கின்றன. கட்டுபாடற்ற வாகனப் போக்குவரத்துகளால் வெளியேறும் புகையும் அதீதக்காற்று மாசுப்பாட்டையும் ஏற்படுத்துகிறது.
காடுகளில் வாழும் விலங்குகள் உணவிற்காகவும் தண்ணீருக்காகவும் நாள்தோறும் வெகுதூரம் அலைகின்றன. பல லட்சம் ஆண்டுகளாக அவைகளுக்கு சொந்தமாக இருந்த காடுகளில் அண்மைக்காலமாக மனிதர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. நமது செயற்பாடுகள் அனைத்தையும் வளர்ச்சிப்பணிகளும்  காட்டுயிர்களை பாதிக்கின்றன. அதிலும் குறிப்பாக சாலைகளும், ரயில்பாதைகளும் ஏற்படுத்தும் பாதிப்பு வன்மம் நிறைந்தது. சாலைகள் கானகத்தை ரெண்டாக பிரித்துவிடுகின்றன. இடைவிடாத வாகன ஓட்டத்தில் துண்டிக்கப்படுகிறது. உணவிற்கும் தண்ணீருக்கும் சாலையைக் கடக்கும் விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு பரிதாபமாக செத்துபோகும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சாலையை கடக்க யானைகள் படும் அலைகழிப்பை நாள்தோறும் பார்க்கலாம். அவைகளை துன்பப்படுத்துகிறோம் என்கிற உணர்வு இல்லாமல் அவற்றைப்பார்த்து குதூகலமடைகின்றனர் சுற்றுலா செல்வோர். வாகனங்களை நிறுத்தி கூச்சலிடுவது, மதுபாட்டில்களை வீசுவது, புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களை எவ்வித குற்ற உணர்வில்லாமல் செய்கிறோம். ஏதாவது ஒரு யானை எரிச்சலடைந்து தாக்கிவிட்டால் யானைகள் அட்டகாசம் செய்வதாய் செய்தியை பரப்பிவிடுகிறோம்.
கோடைக்காலம் இன்னும் கொடுமையானது. தாகமுற்ற விலங்குகள் காட்டின் ஒரு சில இடங்களில் மட்டுமே இருக்குமா தண்ணீரைத் தேடிப் போகும். நீர்நிலைகளுக்கு செல்லும் பாதையில் குறுக்கிடும் சாலைகளில் தொடரும் இடைவிடாத வாகன ஓட்டம் அந்த விலங்குகளைத் தவிக்கவைக்கிறது. தாக மிகுதியாள் ஓடும் விலங்குகள் தண்ணீர் குடிக்க முடியாமல் பரிதாபமாய் திரும்பிவிடுகின்றன.
இப்புவியில் படைக்கப்பட்ட அனைத்தும் சங்கிலி போன்ற ஒன்றை ஒன்று சார்ந்தே படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள காடுகள் வெவ்வேறு தகவமைப்பில் உள்ளது. புலி வாழக்கூடிய காடுகளில் யானை இருக்கும். யானைக்கு அதிக உணவு தேவை. ஒரு நாளைக்கு 250 கிலோ தாவரங்களும், நல்ல குடிநீர் வசதியும் தேவை. அப்படி என்றால் அந்த காட்டில் எவ்வளவு தாவரங்கள், நீர்நிலைகள் இருக்க வேண்டும். குறிப்பாக, மூங்கில், முட்செடிகளில் வளரும் காய்கள், புற்கள் என்பவை மிக முக்கியம் யானைகளுக்கு. மேலும் இத்தகைய தாவர வளம் உள்ள காடுகளில் தான் மான் வாழும். காரணம் புல் என்ற மிக முக்கிய உணவும் தண்ணீரும் தான். யானைகள் இவ்வகை காடுகளில் உட்புகுந்து உண்ணும் போது காட்டில் சிறு சிறு இடைவெளி உருவாகும். அந்த இடைவெளிகள் மானுக்கு மேயும் இடமாகவும் இறை தேட வசதியாகவும் இருக்கும். இக்காடுகளில் புலியும் வசிக்கும். காரணம், இரை. இவ்வகையில் புலி, யானை, மான், தாவரங்கள், நீர்நிலைகள் நெருங்கிய சங்கிலியால் பினைக்கப்படுள்ளன.
எனவே, காடுகளையும், காட்டுயிர்களையும் காக்க வேண்டியது நம் கடமை. ஏனெனில், காடுகள் என்பது மரங்கள் மட்டுமல்ல. நுண்ணுயிரிலிருந்து யானை வரையிலான பல்வேறு தாவர, விலங்குகளால் பின்னி பிணைந்த உயிர்ச்சூழல் தொகுப்பு.
விலங்குகள் மீது இரக்கப்பட்டு ஜீவகாருண்யம் கருதி இக்கோரிக்கை எழவில்லை. இந்தியாவின் இயற்கை வரலாற்று ஆய்வின் முன்னோடியும் பறவையியல் நிபுணருமான டாக்டர் சலீம் அலி கூறியவாறு “நாம் இல்லாத உலகத்தில் பறவைகளும் விலங்குகளும் உயிர் வாழும். ஆனால், பறவைகளும் விலங்குகளும் இல்லாத உலகத்தில் நாம் ஒருபோதும் வாழ இயலாது” என்ற பேருண்மையை உணர்ந்தால்தான் இப்பிரச்சனையை புரிந்து கொள்ள முடியும்.
மரங்களை நம்மால் வளர்த்தெடுக்க முடியும். ஆனால் காடுகளை உருவாக்க முடியாது; காப்பாற்ற மட்டுமே முடியும். பொழுதுபோக்கிற்காக உயிரினங்களை கொன்று மகிழும் கொடியப்பழக்கம் இன்று இல்லை. ஆனால், இன்று நம் வாழ்வில் இயந்திரங்களும் வணிக நோக்கங்களும் வந்தபிறகு, பாரம்பரியம் தரும் பாடங்களை மறந்துவிட்டோம். நம் வாழ்க்கை முறை மூலம் சுற்றுசூழலை சீரழிப்பதில் போட்டியிடுகிறோம். இந்நிலை மாற இயற்கைச் சூழலைப் போற்றும் வாழ்க்கை முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்