திங்கள், 28 நவம்பர், 2016

வனங்கள் மறைந்தால் மனிதனும் மறைவான்


வானத்தை மரங்களன்றோ தாங்கிப் பிடிக்கின்றன.  வனங்கள் மறைந்தால்
உலகத்தின் கூரை, வானம் இடிந்து வீழும் அப்போது
இயற்கையும் மனிதனும் இணைந்தே வீழ்வர்.     
ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கும், சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கும் வனங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. வனங்கள் மனிதனின் சீரான முன்னேற்றத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது. இத்தகைய வனங்கள் மனிதனுக்கு உணவு, நீர், எரிபொருள் மற்றும் மருத்துவ குணங்கள் மூலம் நேரடியாகவும் சுற்றுச் சூழலை பாதுகாத்து மறைமுகமாகவும் உதவுகின்றன. 
முந்தைய காலங்களில் மக்கள் தங்களுடைய தேவைகளையும் இருப்பிடங்களையும் காடுகள் மூலமாக நிறைவேற்றிக் கொண்டனர். இதனால் காடுகளை பாதுகாக்க மரங்களை தெய்வங்களாக வழிபடவும் செய்தனர். இயற்கையோடு இணைந்த வாழ்வில் பல்லுயிர் பெருக்கமும் அதிகளவில் இருந்தது. ஆனால் நாகரீகம் வளர வளர, காடுகளின் பரப்பளவு குறைந்து கொண்டே வந்தது. இதனால் இயற்கை சமன்பாடு சரியத் துவங்கியது. 
அதுமட்டுமின்றி இரு உலகப் போர்களும் காடுகளில் மிக அதிகளவு சேதாரத்தை ஏற்படுத்தியது. இதனால் காடுகள் அழிக்கப்பட்டு அதனை நம்பி இருந்த மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழக்க துவங்கினர். உலக வனக் கொள்கையின் படி ஒரு நாடு 33 சதவீதம் வனங்கள் கொண்டதாக இருக்க வேண்டும்.
காடுகள் அழிப்பால் அதனை நம்பி வாழும் வன உயிரினங்களின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றன. அதன் எண்ணிக்கைக்கு ஏற்ப காடுகளின் பரப்பும் இல்லை. இருப்பதில் போதிய உணவும் இல்லை. உதாரணமாக ஒரு காட்டு யானை உயிர் வாழ 200 கிலோ உணவாவது ஒரு நாளைக்கு உண்டாக வேண்டும். 450 லிட்டர் தண்ணீரும் பருகியாக வேண்டும். இதற்கு காட்டுக்குள் தட்டுப்பாடு ஏற்படும் போது அவை கூட்டம் கூட்டமாக காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுவதை தடுக்க இயலாது.
அழிக்கப்பட்ட காடுகளின் பரப்பை மீண்டும் உருவாக்குவது என்பது மிக மிக கடினமான செயல். இருக்கும் வனச் செல்வத்தையாவது பாதுகாக்க தவறினால் நகரின் முக்கிய வீதிகளில் கூட யானைகள், சிறுத்தைகள், புலி, கரடி என வன விலங்குகள் ஊருக்குள் உலா வருவது தவிர்க்க இயலாதது. இந்நிலை தொடர்ந்தால் சுத்தமான காற்றைக் கூட விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உருவாகும் என்பதே வனத்துறை ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கை.
மக்களில் பெரும்பாலோரிடத்தில் வனங்களைப் பற்றி மேற்கண்ட அடிப்படையில்லாத கற்பனைகளும் நம்பிக்கைகளும் ஏற்பட்டதிற்கு வனங்களின் அறிமுகம் அவர்களுக்கு கிடைக்காமையே முதன்மைக் காரணமாகும். வனங்கள் என்றில்லாமல் இயற்கையைப் பற்றிய சரியான அறிமுகத்தை பள்ளிப் பாடங்களும் வழங்கவில்லை. இந்த நிலையில் மக்கள் தாமாகவே கற்பித்துக்கொண்ட நம்பிக்கைகளை மனத்தில் பதிவு செய்துகொள்கிறார்கள். அதனால் இயற்கையை அவர்கள் மதிப்பதில்லை. இயற்கையினின்றும் ஒதுங்கி, முடிந்தால் கூடியமட்டும் மாறுபட்டு வாழும் வாழ்க்கையைக் கடைப்பிடிக்கிறார்கள். இந்தப் போக்கு மனித குலத்திற்கே மிகவும் ஆபத்தானது என்ற உண்மையை மக்களுக்கு எவரும் உணர்த்தவும் இல்லை, உணர்த்தும் காரியத்தைச் செய்ய நல்ல நிறுவனங்களும் இல்லை..
நமது முன்னோர்கள் வனத்தினுடைய இன்றியமையாமையை அறிந்திருந்தனர். அதனால்தான் வனங்களுக்கு ஓர் உயரிய ஆன்மீக மதிப்பைக் கொடுத்திருந்தனர். உண்மையில், ஒவ்வொருவரும் தனது வாழ்நாளின் பிற்பகுதியை வனத்தில் செலவிடவேண்டும் என்றும் அப்போதுதான் இயற்கையுடன் நெருங்கவும் அவற்றின் படைப்புகளான பூவினங்களையும் மாவினங்களையும் கண்டு போற்றவும், வியக்கவும் இயலும் என்று அவர்கள் ஆலோசனை வழங்கினர். 
இலங்கை எனும் இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்ட நம்நாட்டில் வளங்களை நாம் காப்போம். வன உயிரினங்களை வசிப்பிடங்களை ஆக்கிரமிக்காமல் இருப்போம். வியாபாரத்துக்காகவும் சுயநலத்துக்காகவும் வருடக்கணக்கில் வளர்ந்து செழிக்கும் மரங்களை அழியாமல் பாதுகாப்போம். இயற்கையின் சமநிலையை நாம் சிறுசிறுக மாற்றம் செய்வோம் எனில் பெரும் இயற்கை அழிவை நாம் சந்திப்பதில் இருந்து தப்ப முடியாது…!!
“The clearest way into the Universe is through a forest wilderness.” 
― John Muir