வியாழன், 6 அக்டோபர், 2016

ஒருகாலம் பட்டி தொட்டியெல்லாம் விரவிக்கிடந்த ஒரு மாபெரும் கலை கூத்துக்கலை.

பேராசிரியர் சி.மௌனகுரு - இராவனேசா - அரங்க ஆய்வுகூடமும் மாணவர்களும் - சமகால பார்வையாளனாக நான்!

 ஒருகாலம் பட்டி தொட்டியெல்லாம் விரவிக்கிடந்த ஒரு மாபெரும் கலை கூத்துக்கலை. நவீனத்துவத்தின் பாதிப்பு கவர்ச்சிகரமான விடயங்களுக்குள் மாத்திரம் நாடிச்செல்லும் நிலையில் ஊடகங்களும் மிகப்பெரும்பாலும் பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் அல்லது நம்நாடு சாரா பாரம்பரிய கலைகளென்று ஏற்கனவே உள்ள பழைய விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றதே தவிர, இன்றும் உயிர்ப்புடன் நடக்கும் விடயங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு தயாராக இல்லை. திரைப்படங்களும், தொலைக்காட்சியும் இந்த மண்ணோடு இணைந்த கலைகள் பலவற்றை மறக்கடித்துவிட்டன.


இந்த நிலையில் ஜரோப்பிய பயணம் ஒன்றுக்கான ஏற்பாடு எனக்கு பயண அனுபவங்களை கொடுத்ததோ இல்லையோ ஈழத்தின் மாபெரும் ஒரு ஆளுமையுடன் அனுபவம்வாய்ந்த நபர் ஒருவரின் ஆத்மார்த்தமான நட்பை ஏற்படுத்தியது, பல விடயங்கள் "கற்றுக்கொள்ள நினைத்தது. சிந்திக்க தூண்டியது". உயிர்ப்பற்ற குறுந்திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என்று தொழிநுட்பக்கருவிகளின் உதவிகளுடன் புதிய சந்ததிகள் மூழ்கிக்கிடக்கும் நேரத்தில் பாரம்பரிய கூத்து மீளுருவாக்கச் செயற்பாடுகளில் தன்னை மும்முரமாக ஈடுப்படுத்தி வரும் மேடையேற்றிவரும் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களும் அவரது அரங்கஆய்வுகூடம் சார்ந்த இளைஞர்யுவதிகளில் செயற்பாடுகள் என்னை ஆச்சரியப்பட வைத்தது..!

பல மேடைகளை கண்ட இராவனேசா என்ற பெரும்காவியத்தை மீண்டும் புதிய தலைமுறையினரை கொண்டு மேடையேற்றுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ள போது பேராசிரியரின் அன்பான அழைப்பை ஏற்று சந்திக்க சென்றிருந்தேன். இரண்டு நாட்களில் படைத்துறை பயிற்சி பெற்ற வில்லேந்திய வீரர்களையும் வீராங்கணைகளையும் சங்குகள், மேளங்கள் முழங்க பயிற்சியின் ஒன்றரை மணிநேரச் செயற்பாடுகள், ஒரு சமகால பார்வையாளனாய் என்னை உணர்ச்சி மேலிடவைத்தது...! இசை, பாடல், நடிப்பு, நாட்டியம் அரங்கஅமைப்பு, வசனங்கள், காட்சியமைப்பு, ஆட்டவேகமும் என அனைத்தும் மிகச்சிறப்பு. கூத்து முடிந்ததும் ஏதோ நேரடியான போர் ஓய்ந்தது போல் உணர்வு, மெய்சிலிர்ப்பு!!!

பேரா.மௌனகுரு ஐயா அவர்களை அரங்க மாணவர்களை வாழ்த்துவதற்கு வயதுமில்லை அனுபவமுமில்லை. ஆனால் அழிந்து வரும் பல நாட்டுப்புறக் கலைகளை அடையாளப்படுத்தி தேசிய, சர்வதேச அளவிலான உங்கள் செயற்பாடுகளுக்கு இறைவனும் தமிழ்தாயும் துணைநிற்பாள். பாரம்பரியத்திற்கூடான உங்கள் நவீனத்துவமான செயற்பாடுகள் மீண்டும் எமக்கான தனித்துவமான கலை கலாச்சார இயக்கங்களை தோற்றுவிக்கும் என்பது நிதர்சனம்.

**நன்றி***
அன்புடன் அ. எல்றோய்
(25/09/2016)